அத்தியாயம் 2 : விதி வலியது
கிறிஸ்டோ காட்டின் யாரும் புகுந்து வெளிவராத பகுதிக்குள் சென்று ஒரு அனகோண்டா துணையுடன் வெளியே வந்தான் eஎன்ற செய்தி காடு முழுவதும் தீ போல் பரவியது. அந்தப் பிரதேசத்தில் உள்ள குழுக்களுடன் போர் செய்து வந்த பிற குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இந்த அதிசய மனிதனைக் காண வந்தார்கள். இவ்வாறாக, கிறிஸ்டோவிற்கு ராஜ மரியாதை கிடைத்த செய்தி ஜெப்ரி ஹைன்ஸ் காதுக்கு எட்டியது.
காட்டின் வேறொரு பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த ஜெப்ரி, கிறிஸ்டோ இருக்கும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முகாம் அமைத்து தன்னுடைய உதவியாளராகிய ஜிம் பார்சனை அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வரச்சொன்னார். ஜிம் அங்கு சென்று நாம் முந்தைய அத்தியாயத்தில் படித்த விஷயங்களை அறிந்து கொண்டு அவற்றை ஜெப்ரியிடம் கூறினான். இதை கேட்டு அவர் பொரிந்து தள்ளினார்.
“இவர்கள் காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். மனிதனாக பிறந்துவிட்டால் கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்க வேண்டும். இவர்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா? இந்த கட்டுக் கதையெல்லாம் உண்மையென்று நம்புகிறார்கள்? நம்மவர்கள் எப்படி இவர்களை முட்டாள்கள் ஆக்க வேண்டும் என்பதை நன்றாக கற்றுக்கொண்டிருகிறார்கள். இந்த சின்ன வயதிலேயே இவன் எப்படி ஏமாற்றி இருக்கிறான் பார் இந்த கிறிஸ்டோ” என்றார்.
இதற்கு ஜிம், “இல்லை சார். அவனை அனகோண்டா கொண்டு போட்டதை அவர்கள் நிஜமாகவே பார்த்திருக்கிறார்கள். அவன்…”
ஜிம்மை முடிக்கவிடாமல் ஜெப்ரி வெடித்தார், “உனக்கும் அறிவு இல்லையா? உன் அப்பாவிடம் உன்னை ஒரு ஆண்மகன் ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்திருக்கிறேன். நீயோ இப்படி முட்டாள்தனமாக பேசுகிறாய். எனக்கு இப்பொழுது எழுபது வயது ஆகிறது. நான் ஐம்பது வருடங்களாக திரியாத காடு இல்லை. எந்த மனிதனும் கால் வைக்காத காட்டுக்குள் சென்றிருக்கிறேன். ஏன், சில இடங்களில் மிருகங்களே செல்ல அஞ்சும் காட்டுக்குள் சென்றிருக்கிறேன். நான் கண்டுபிடித்த நாடுகள், காடுகள் உலக வரைபடத்தை மறுபடியும் திருத்தி வரையும்படி செய்திருக்கின்றன. அப்படி இருக்கும் எனக்கே காது குத்துகிறார்களா?”
“அதில்லை சார்..”
“நீ வாயை மூடு” வீராவேசமாக கத்தினார் ஜெப்ரி. “அமேசான் காட்டுக்குள் ஏது புலி? எங்கிருந்து வந்தது சிங்கம்? அறிவு கெட்ட ஜென்மங்கள். புலியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்தியா செல்ல வேண்டும். சிங்கம் வேண்டும் என்றால் இந்தியாவோ, ஆப்பிரிக்காவோ செல்ல வேண்டும். இந்த அமேசான் காட்டுக்குள் பெரிய மிருகங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. விட்டால் இங்கு கரடியும் யானையும்கூட இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளுக்கு புலி என்றால் என்ன, சிங்கம் என்றால் என்ன என்று எதுவும் தெரியாது. அவர்கள் அவற்றைப் பார்த்திருந்தால்தானே! அவன் என்ன சொன்னானோ, இவர்கள் என்ன கேட்டார்களோ? மொத்தத்தில் அவர்களை கிறிஸ்டோ நன்றாக ஏமாற்றிவிட்டான்”
ஜெப்ரி சொல்வதில் உண்மையிருப்பதை உணர்ந்த ஜிம் ஒன்றும் பேசாமல் இருந்தான். இன்னும் பேசினால் பெரியவருக்கு கோபம் அதிகமாகும். ஆனால் மனதுக்குள் அவன் கிறிஸ்டோ ஒரு அதிசய பிறவி என்றே நம்பினான்.
“இப்பொழுது என்ன செய்யலாம் சார்?”
“அதை நான் சொல்கிறேன்” என்று டென்ட் பிளாப்பை நகர்த்திவிட்டு டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளே வந்தான். அவன் ஜெப்ரிக்கு நேர் எதிராக இருந்தான். ஜெப்ரி அமேசான் காடுகளில் இருந்தாலும் வெள்ளை த்ரீ-பீஸ் சூட் அணிந்திருந்தார். வெள்ளை தொப்பி, வெள்ளை தோல், வெள்ளை முடி, வெள்ளை மீசை, வெள்ளை தாடி என்று எல்லாம் வெள்ளையாக இருந்தார். டேவிட்டின் சதை இப்பொழுது காப்பி நிறத்தில் இருந்தது. காக்கி சபாரி சட்டை அணிந்திருந்தான். தடிமனான கருப்பு பெல்ட். காக்கி ஷார்ட்ஸ், பிரவுன் பூட்ஸ் மற்றும் வேட்டையாடுபவர்கள் அணியும் தடிமனான காக்கி நிற தொப்பி அணிந்திருந்தான். ஜெப்ரியை பார்த்தால் எல்லோரும் அவரை ஒரு வயதான பிரிட்டிஷ் தாத்தா என்று தான் சொல்வார்கள். டேவிட்டை பார்த்தவுடன் அவனை ஒரு சாகசக்காரன் என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் ஜெப்ரி அவனுக்கு குரு. அவருடன் பல எக்ஸ்பெடிஷன்கள் சென்றுதான் அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.
“என்ன நீ இங்கே?” என்று ஆச்சரியமாக கேட்டார் ஜெப்ரி.
“நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். கூடவே நீங்க எதற்கு இங்கே வந்தீங்கன்னும் கேள்விப்பட்டேன். அதனால்தான் நீங்கள் இந்த காட்டுக்குள் செல்வதாக இருந்தால் உங்களுடன் கூட வரலாம் என்று வந்தேன்”
இதைக் கேட்ட ஜெப்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. ஜிம்மைப் பார்த்து, “பார். இவனைப் போல் இருக்க வேண்டும். அதனால்தான் அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் எனக்கு ஈடாக பரவியிருக்கிறது. நீயும் இருக்கிறாயே, எதற்கும் உபயோகப்படாமல்!” என்று திட்டிவிட்டு டேவிட் பக்கம் திரும்பி, “எப்போ கிளம்பலாம்?” என்று கேட்டார்.
“நான் சென்று ஒரு முறை அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வருகிறேன். அந்தக் காட்டுவாசிகள் எனக்கு பழக்கம். அவர்களிடமும் விசாரித்துவிட்டு வருகிறேன். நீங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினான் டேவிட்.
இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தபொழுது அவன் நடையில் வேகம் இல்லை. அவன் முகத்தில் குடிகொண்டிருந்த நம்பிக்கை இப்பொழுது காணாமல் போய்விட்டது. மெதுவாக டெண்ட்டுக்குள் நுழைந்து ஜெப்ரியை பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு டெண்ட்டை விட்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து ஜெப்ரியும் வெளியே வந்தார், ஆனால் சிந்தனையில் ஆழ்ந்திருந்த டேவிட்டைப் பின்தொடராமல் டென்ட்டுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
டேவிட் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு ஓரிடத்தில் நின்று தன் பாக்கெட்டில்லிருந்து சிகரெட் எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனைச் சுற்றி உயரமான மரங்கள். பட்சிகள் கத்தும் சப்தம். மரங்களை ஊடுருவி வந்த சூரியன் திட்டு திட்டாக புல்வெளியில் படிந்திருந்தான். ஆனால் டேவிட் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழு கவனமும் சிகரெட் புகையை உறிஞ்சுவதிலேயே செலுத்தினான். புகையை வெளியே விட்டபின் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். மறுபடியும் நின்றான். மறுபடியும் புகை இழுத்து விட்டான். சட்டென்று கோபமாக சிகரெட்டை கீழே விட்டெறிந்து காலால் கசக்கினான். பிறகு சட்டென்று திரும்பி ஜெப்ரியிடம் வந்தான்.
“ஜெப்ரி. வேண்டாம். நாம் போக வேண்டாம்” என்றான்
“நீயும் ஜிம் போல் உளறுகிறாய்”
“உளறவில்லை ஜெப்ரி. நான் அங்கு சென்று பார்த்தேன். அந்த காட்டுப் பகுதி அமானுஷ்யமான ஒரு பகுதியாக எனக்கு தோன்றுகிறது. அங்குள்ள காட்டுவாசிகளுடனும் பேசினேன். என் உள்ளுணர்வு அங்கு போக வேண்டாம் என்று சொல்கிறது ஜெப்ரி”
“டேவிட் லிவிங்ஸ்டன்தான் பேசுகிறானா? ஜெப்ரி ஹைன்ஸ் மற்றும் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்பவர்கள் இப்பொழுது ஐரோப்பா முழுக்க ஹீரோக்களாக பார்க்கப்படுபவர்கள். நாம் செல்லாத காடு இல்லை, வெல்லாத நாடு இல்லை. அந்த ஜெர்மானியர்கள், ஸ்பானியர்டுகள், பிரெஞ்சு கோழைகள் நம்மை வழிபடுகிறார்கள். அப்படி இருக்க நாம் இருவரும் ஒரு சின்னப் பையன் சென்ற இடத்திற்குச் செல்ல பயப்பட்டோம் என்று தெரிய வந்தால் இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? நமக்கு என்ன மரியாதை இருக்கும்? பாட புத்தகங்களில் நம் வாழ்க்கை வரலாறு வருவதற்கு பதில் ஏதோ ஒரு வார இதழில் நம்மை பற்றி கார்ட்டுன் வரும். நாம் செய்த சாதனையெல்லாம் ஏமாற்று வேலை என்று எழுதுவார்கள். இவ்வளவு செய்த பிறகு எல்லோர் கண்ணிலும் ஒரு ஜோக்கர் ஆக விருப்பமில்லை. நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. நான் அங்கு செல்வது உறுதி”
ஒரு கணம் யோசித்த டேவிட், “இந்தியாவில் சொல்வார்கள் ‘விதி வலியது’ என்று. அது யாரையும் விடாது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். நானும் வருகிறேன்”
“அதே இந்தியாவில் ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்றும் சொல்வார்கள் என்று தெரியாதா? நாளை காலையில் நாம் கிளம்புகிறோம்” என்று உறுதியாக கூறினார் ஜெப்ரி.
“இது மதியை மீறிய விஷயம் ஜெப்ரி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் டேவிட்.
விதி வலியதா மதி வலியதா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
ஒளிப்பட உதவி – nolano.net


