கமல தேவி

அலைவு – கமலதேவி சிறுகதை

நிலாவெளிச்சத்தில் மாரியம்மன் கோவிலின் பெரிய வேப்பமரத்தை கண்டதும் கண்களை கசக்கிக்கொண்டு கண்ணன் எழுந்து நின்றான்.முந்தின நிறுத்தத்தில் இறங்கியிருக்க வேண்டும்.

வலதுபுறம் சென்ற வயல்பாதையில் நடந்தான்.இன்னும் மேற்கே நடக்க வேண்டும்.வியர்வையில் கசகசத்த முரட்டுசட்டைக்குள் காற்று புகுந்து எளிதாக்கியது.வரிசையாக நுணா, புங்கை,பனை,ஈச்சம் மரங்கள்.மேட்டுக்காடு. சற்று தொலைவில் களத்தில் மின்விளக்கின் ஔி தெரிந்தது.

வெளிச்சம் அருகில் வரவர அவன் கால்கள் தயங்கின.எதிரே காற்றுபுகுந்த சோளக்காடு பேயாட்டமிட்டது.இங்கே பாதையில் படுத்துக்கொள்ளலாம் அல்லது வந்தபாதையில் திரும்பலாம்.ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தாவது கிடைக்கும்.

ஊரில் மட்டும் என்ன இருக்கிறது.வீட்டில் தங்கை குடும்பம் இருக்கிறது.ஒருநாளைக்கு சலிக்காமல் சோறு போடுவாள்.எதற்காக திரும்ப திரும்ப இங்கு வர வேண்டும்.ஒருநாள் விடுமுறையில் கடைவிடுதியிலேயே தூங்கியிருக்கலாம்.ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றால் எட்டிஉதைக்கப்பட்டு இந்த களத்தில் வந்து விழவேண்டும் என்று கணக்கில் எழுதியதை யாரால் மாற்றமுடியும்.

களத்தின் ஓரத்திலிருந்த முருங்கைமரத்தில் சாய்ந்து நின்றான். வாசல்களத்தில் கட்டிலில் சந்திராஅத்தை அமர்ந்திருக்கிறாள்.கொண்டையிலிருந்து பிரிந்த முடிகள் காற்றில் அசைகின்றன.அந்த முகம்,இந்தக்களம்,இந்தப்பாதையை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பார்த்துவிட வேண்டும்.இல்லையென்றால் தூக்கத்தில் துரத்தும்.

அத்தையிடம் சொன்னால் நம்பமாட்டாள்.அவளிடம் இரண்டுவார்த்தைகள் பேசவேண்டும்.என்ன திட்டினாலும் இதையெல்லாம் வெட்டிவிட முடியவில்லை.சிறுபிள்ளையில் மனதில் விழுந்து விட்டவை.இன்று இல்லையென்றால் நாளை வருகிறவன்தான்.

தட்டை அறுப்பதற்காக வந்து தங்கியிருந்த ஆட்கள் மாங்காய்களை போட்டு குழம்பு வைத்திருந்த வாசம் களத்தை சூழ்ந்திருந்தது.அவர்கள் கூட்டமாக சாப்பிட அமர்ந்தார்கள்.அந்த சிறியபையன் அவர்களை சுற்றிவந்து அவர்களிடம் ஆளுக்கொரு வாய் சோற்றை வாங்கித் தின்றபடி குதித்து குதித்து ஓடினான்.

அவன் சோற்றிலிருந்து திசைமாறி களத்தை சுற்றிவரத் தொடங்கினான். அவன்உயரமிருந்த உருண்டைக்கல்லில் அமர்ந்திருந்த ராயப்பட்டிக்காரர், “தம்புடு வாடா…லட்சணகுஞ்சய்யால்ல..ஒருவாய் சோறு வாங்கிக்க… கத சொல்றேன்..”என்று அவனை அழைத்தார்.கண்ணனுக்கு சிரிப்பு வந்தது.

“கத சொல்லுறியா பாட்டா…கத சொல்லுறியா பாட்டா…”என்றபடி ஓடிவந்து வாயைத்திறந்தான்.அவர் தன்நீண்டுஅகன்ற கையால் சோற்றை எடுத்து வாயில் வைத்தார்.

இருபுறமும் உப்பியக்கன்னங்களுடன், “என்ன கத பாட்டா..”என்றபடி கைகால்களை ஆட்டிக்குதித்தான்.கருத்தப்பயலுக்கு மணியான கண்கள்.உளுந்துக்கு எண்ணெய் தடவி போட்டது மாதிரி வியர்வைக்கு துணியில்லா மேனியுடன் அலைந்தான்.உணவை முடித்தவர்கள் எழுந்து பாத்திரங்களை கழுவி கவிழ்த்தார்கள்.

சோலை அடுப்பின்பக்கம் வந்து அமர்ந்தான். தேர்ந்து எடுத்த சோளக்கருதுகளை கங்கிலிட்டு திருப்பித்திருப்பி பதம் பார்த்தான்.பெண்கள் கிழக்குப்பக்கமாக படுதாவை விரித்து கொண்டிருந்தார்கள்.ஆம்பிளையாட்கள் களத்தில் அங்கங்கே சாய்ந்தார்கள்.

கண்ணன் செருப்புகள் ஓசையெழுப்ப நடந்தான். அத்தை திரும்பிப் பார்த்தாள்.அவன் பாதையிலிருந்து களத்தில் ஏறினான்.சந்திராவிற்கு மனதில் சட்டென்று எதுக்கு இங்க வர்றான் என்று முதலில் தோன்றியது.பின் அதற்காக சங்கடப்பட்டுக்கொண்டு , “இந்நேரத்துல என்ன கண்ணா?”என்றாள்.

“பஸ்ஸீல தூங்கிட்டேன்..இங்க கோயில்கிட்ட எறக்கிட்டு போயிட்டான்..”என்றபடி வாசல் படிகளில் அமர்ந்தான். அவன் மீது வீசிய நெடியை உணர்ந்ததும் சந்திராவிற்கு எரிச்சலாக வந்தது.முகத்தை சுருக்கிக்கொண்டாள்.

“உனக்கு எத்தனவாட்டி சொல்றது? இந்த நெலமையில இங்க வறாதன்னு,”

அவன் ஒன்றும் பேசவில்லை.

“ பெறந்த எடத்துலருந்து இப்பிடியா வருவாங்க,”

“கோவிச்சுகாத அத்த…காலையில வெள்ளனயே எந்திருச்சிருச்சு போயிருவேன்..மாமா இருக்காரா,”

“காத்துக்கு மாடியில் படுத்திருக்காரு….”என்று உள்ளே சென்று தட்டில் சோற்றையும், தண்ணீர் செம்பையும் எடுத்துவந்தாள். அவனுக்கு எவ்வளவு சோறு, குழம்பு ,உப்பு ருசிக்கும் என்று அத்தை கைகளுக்கு தெரியும்.வாழைக்காய் போட்டு காரமான தேங்காய் குழம்பு.இரவில் மீதமிருந்ததை வீணாகக்கூடாது என்று புடையடுப்பில் போட்டு வைத்திருக்கிறாள்.ருசியேறிக்கிடக்கிறது. எத்தனை நாளாச்சு என்று குனிந்து கொண்டே தின்றான்.

அத்தையோடு எதாவது பேச வேண்டும் என்று நினைத்து அருகில் அமர்ந்தான்.அவள் எழுந்து பக்கத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள்.பத்துஆண்டுகளுக்கு முன்புவரை வீட்டிற்கு வந்துவிட்டால் கண்ணா…கண்ணா.. என்று அழைத்து கொண்டேயிருப்பாள்.வளர்ந்தபிள்ளையை மடியில கட்டிக்கிட்டே அலைவியா சந்திரா? என்று சிரிப்பார்கள்.

“அத்த..ஆளுகளோட படுத்துக்கறேன்..”என்று நகர்ந்தான்.கங்கிலிருந்து சோளத்தை எடுத்து அடுப்புக்கல்லில் வைத்துக்கொண்டிருந்த சோலையிடம் , “பக்குவமாயிட்டத…மறுபடி சூட்ல போடறயே,”என்றபடி கால்களை நீட்டி அமர்ந்தான். அவனிடம் சோலை ஒரு சோளக்கொண்டையை நீட்டினான்.

“எங்கருந்து வாரண்ணே,”

“திருச்சியில துணிக்கடையில வேல பாக்கறேன்..எங்க அத்தவூடுதான்..”என்றான்.

சோலை அவனை கொஞ்சநேரம் உற்றுபார்த்துவிட்டு புன்னகைத்தான்.வரண்டு அடர்ந்த தலைமயிர்.கருத்த இதழ்கள்.உள்ளங்கை கால்களில் இரும்படிப்பவனை போன்று கருமை படர்ந்திருந்தது.மெலிந்த உடல்.

“அடிவாங்கின பொழப்பு போலய,”என்ற சோலை பக்கத்திலிருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து உள்ளங்கையில் ஊற்றினான்.கைகால்களில் உள்ள கீறல்களை பார்த்தான்.

“சோளக்காட்டு கிழிசல எண்ணமுடியுமா..மொத்தமா தேய்ச்சு வழிச்சுவிடு,”

சோலை கை கால்களில் எண்ணெய் நீவி கீறல்களின் எரிச்சல் முகத்தில் தெரிய ஒரு சோளக்கருதை எடுத்து தட்டினான்.

“இவ்வளவு சொகுசு ஆவாது..குப்பமேனிய கசக்கி தேய்ச்சுவிட்டின்னா..எரியற எரிச்சல்ல வலி மறந்து போவும்..காயமும் பட்டுப்போவும்,”

“அதுவும் சரிதான்..”என்று புன்னகைத்தான்.

எண்ணெய் தடவி முடித்தவர்கள் சோளக்கருதிற்காக கங்கை சுற்றி அமர்ந்தார்கள்.சோலை எடுத்துக்கொடுத்தான்.பயல் மீண்டும் மீண்டும் கதை கதை என்று பாடிக்கொண்டிருந்தான்.

தாத்தா, “பொறுடா… தின்னதும் உடம்புக்கு என்னாவோன்னு வருது..”என்று கைக்கு முட்டுக்கொடுத்து களத்தில் சாய்ந்தார்.அவன் அழத்தொடங்கினான்.

கண்ணன்,“நான் சொல்லட்டா,”என்றான்.

“வேணாம்…பாட்டா தான் கத சொல்றேனுச்சு…”

கண்ணன் வாய்விட்டு சிரித்தான்.சந்திரா அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.இந்தக்களத்தில் எத்தனை கூத்துகளை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.

“கர்ணன் கத சொல்லட்டா?” என்றான்.

“அம்மா தம்பிபாப்பாவ மூங்கிகூடையில வச்சு ஆத்துல விட்டாளாம்.பாட்டா…இத்தன தரம் சொல்லிட்டாரு,”என்று கைகளை விரித்தான்.உடனே அவன் கண்கள் அம்மாவைத் தேடின.அவள் படுத்துக்கொண்டு இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.உடனே பயல் , “ம்மா..” என்று சிரித்தான்.

கண்ணன்,“சரி…அபிமன்யூ கத சொல்றேன்…”என்று எழுந்தான்.சந்திரா எழுந்து குரல் கேட்கும் தொலைவில் தொட்டிமீது அமர்ந்தாள்.சரியாக அவன் நிற்கும் இடத்தில் பெரியஅண்ணன் நிற்பார்.பொன்னர்,கர்ணன்,ராவணன் என அவர் மாறிமாறி நிற்கும் தோற்றம் சந்திராவின் மனதில் எழுந்தது.

கண்ணன் கைகால்களை குறுக்கி தலையை குனித்து கருவறை குழந்தை என நின்று,”இந்தவயசில் நான் கதை கேட்டன் கதைகேட்டேன்..என்ன கதை கேட்டேன்?அம்பா பாயும் கதைகேட்டன்..”என்ற அவன் உடலசைவுகளை கண்டு பயல் கைத்தட்டி சிரித்தான்.பாட்டா எழுந்து அமர்ந்தார்.

சந்திரா தன் இருஅண்ணன்களை நினைத்துக்கொண்டாள்.விவசாய வேலைகள் இல்லாத கோடைகாலத்தில் இப்படிதான் எங்காவது கூத்து,நாடகம் என்று கிளம்பிவிடுவார்கள்.அவர்கள் பின்னால் சென்றவன் இவன்.கோலிகுண்டு கண்களால் எப்படி பார்ப்பான்.அத்தை என்று அழைத்து முடிக்கும் முன்பே உடல் ஒருஅடி எடுத்து வைத்துவிடும்.

கண்ணனின் மாமா,“நாங்க கூப்பிட்டா பத்துதரத்து ஒரு தரம் என்னாம்ப..வெட்டிப்பயலுக்கு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு ஓடுறவ..இந்த பொம்பிளைகள என்னன்னு சொல்றது,”என்பார்.

கோலிகுண்டு கண்கள் முரட்டுக்கண்களாக கிறக்கத்தில் அலைபாய்வதை பார்த்திலிருந்து குறையாத ஆற்றாமையுடன் இருக்கிறாள்.நாட்கள் செல்ல செல்ல அவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லாதவளானாள்.

எத்தனையோ முறை கண்ணனின்மாமா, “எந்தப்பயக்கிட்ட இந்தப்பழக்கம் இல்லன்னு விரல்விட்டு எண்ணிறலாம்.இதென்ன இத்தனை கோரோசனம்.அறுத்துபோடறாப்ல.அவனிட்ட கொஞ்சம் சகஜமா இருக்கக்கூடாதா..ச்சை.. என்ன புத்தியிது,” என்பார்.

கண்ணன் நிமிர்ந்து நின்றான்.தலைமுடியை முன்னால் இழுத்துவிட்டு இதழ்களை குவித்து கண்களை சிமிட்டியபடி, “இந்தவயசில அம்புவிட்டேன்…மாமனோட சேந்து அம்புவிட்டேன்.குதிரையில் பாய்ஞ்சேன்..எதுக்கு பாஞ்சேன்..”

உடனே பாட்டா, “ ராசகுமாரனா பெறந்திட்டு கேக்றான் பாரு கேள்வி,” என்றதும் சிரிப்பொலி எழுந்தது.

அபிமன்யூவின் கைகள் வேகமாக பாயும்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்தன.பயல் தானும் கைகளை அவ்வாறு வைத்துக்குதித்தான்.

“அதா தெரியுதே பச்சமலை கூட்டம். அதுல ஒத்த மலையில பிறந்தேன்.மலையிலருந்து காத்துல தாவி ஏற ஆசப்பட்டேன். மரத்தையெல்லாம் தாவித்தாவி காட்டை அளந்தேன்… ஆமா காட்டை அளந்தேன்..”

பாட்டா கண்களை இடுக்கியபடி அவனைப்பார்த்தார்.

“காட்டுக்குள்ள ஓயாத குருவி சத்தம்.பாத்தா என்னஒத்த பயலுக அம்புவிடுறானுங்க.ஒழிஞ்சிருந்து பாத்து..பாத்து…நானும் அம்பு விட்டேனாக்கும்,”என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.பயல் கைத்தட்டி குதித்தான்.

“பேரரசன் நான்..ஆமா பேரரசன் நான்…பத்து உடன்பிறந்தவர்களுடன் படையாளும் பேரரசன் நானே..”என்று இடையில் கைவைத்து நிலவொளியில் நிமிர்ந்து நடந்தான்.

“குடியுண்டு..தளராத படையுண்டு..பெண்டுண்டு..பிள்ளையுண்டு..நீருண்டு நிலமுண்டு…அவள் வரும் வரை என்னிடம் எல்லாமும் உண்டு..”என்று ஆர்ப்பரித்தான்.கை கால்களை மாற்றி மாற்றி அவன் ஒருவரிலிருந்து மற்றவருக்கும், ஒருகதையிலிருந்து மற்றொரு கதைக்கும் தாவிக்கொண்டிருந்தான்.

பாட்டா குரலை செறுமிக்கொண்டு கதையில வாழ்றவன்..கதையில ஜெயிக்கறான்..கதையில தோக்கறான்,” என்று பெருமூச்சுவிட்டார்.

அங்கங்கே கிடந்தவர்கள் உறங்கிப் போனார்கள்.கண்ணன் மல்லாந்துப் படுத்தபடி வானத்தைப் பார்த்தான்.பக்கத்தில் சோலை உடல்வலியால் அனத்திக் கொண்டிருந்தான்.பாட்டா மெதுவாக எழுந்து கண்ணன் பக்கத்தில் படுத்தார்.அவன் திரும்பி அவரைப் பார்த்தான்.

“என்ன பெருசு தூக்கம் வரலயா..”

அவர் தலையாட்டினார்.

“இந்தவயசுல சோளக்காட்டு வேலைக்கு ஒடம்பு தாங்குமா? எந்தூரு?”

“ராயப்பட்டி.வீட்ல சும்மா இருக்கமுடியல.படிச்சபயலா …வயக்காரவுகளுக்கு ஒறவா?”

“ஆமா.மோட்டார் ரிப்பேர் வேலைக்கு படிச்சேன்,”

“ஒடம்புக்கு என்ன?”

“ஒன்னுமில்ல.படிக்கற வயசுல பழகின பழக்கந்தான்.விடமுடியல,”

காற்றால் திசையழிந்து ஆடிய சோளக்காட்டின் சத்தம் விலங்கின் ஓலம் என கேட்டது.

“என்னா வேகம் பாரு.இப்ப சருகு ஒன்னொன்னும் சவரகத்தியாகும்,”

“அறுக்கறது தெரியாம அறுத்திரும்,”என்று புன்னகைத்தான்.

பின் அவனாகவே, “அப்பா தொரத்தி தொரத்தி அடிச்சாரு..கெஞ்சினாரு.நான் வீட்டவிட்டு ஓடினேன்.பிறவு வீட்ல நிக்கல.வரதும்..போறதுமா தான்,”

“ம்..பெத்தவ,”

“இல்ல.வெளியில போய் எங்கயும் நெலச்சு நிக்க முடியல பெருசு,”

அவர் உதட்டை பிதுக்கியபடி வானம் பார்த்தார்.

“இப்ப துணிக்கடை..”

“ம்…எல்லா ஒடம்பும் ஒன்னுல்ல தம்புடு.சிலது தாங்கும்..சிலது சீரளியும்.நானும் நாலு ஆம்பிளப்பிள்ளைகள பெத்தவனாக்கும்,”

கண்ணன் திரும்பி அவர் முகம்பார்த்துப் படுத்தான்.

“மூத்தப்பிள்ளைக்கு போதை ஆகாது…சின்னவன் ஒடம்பு இரும்பாக்கும்.இதெல்லாம் சின்னதுலருந்து தொட்டு தூக்கி அணச்சு வளக்குறப்பவே நுணுக்கமான தகப்பனுக்கு வெளிச்சமாயிரும்.இவனுகளுக்கு பொண்ணு பாக்கறப்ப எங்கவூட்டு ஆயா என்னயதான் கேக்கும்.இவனோட நுவத்தடிக்கு இந்தப்பிள்ள ஈடுவைக்குமான்னு,”

கண்ணன் சிரித்தபடி, “ஈடா கெடைக்கனுமானா யாருக்கும் கல்யாணம் கைகூடாது..”என்றான்.

“ச்..ஈடுன்னா அப்படியில்லடே.நடுவுலவன் கோவத்தை தூக்கி தலையில வச்சு நடக்கிறவன்.அவனுக்கு தணிஞ்ச பொண்ணு வந்தா நல்லது.அடுத்தவன் பதட்டக்காரன் அதுக்கு தைரியமான பொண்ணு கொண்டுவந்தோம்.அந்தப்பிள்ள பேசினான்னா என்னாலயே மறுத்துசொல்ல முடியாது..”

கண்ணன் தலையாட்டினான்.

“அன்னைக்கி அவனுங்க எஞ்சொல் கேட்டுக்கிட்டானுங்க தம்புடு..இன்னிக்கி நெலம வேற,”

கண்ணன் ஒன்றும் பேசவில்லை.

“கெட்டவன் கெட்டான்னா ஒன்னுல்ல.நல்லவன் வீட்ல ஒருத்தன் கெட்டான்னா ஊர்க்கண்ணுல நிக்கறது பீஷ்மரு களத்துல கெடக்கது போலயாக்கும்…”

பின் யாருக்கோ சொல்வதைப்போல,“ஊருக்குள்ள நல்லபழக்கவழக்கத்தில பேர்வாங்கின மனுசனுக்கு மகனா பெறக்கறது கெட்டவிதி தெரியுமா?” என்றான்.பாட்டா பெருமூச்சுவிட்டபடி வானத்தைப்பார்த்தார்.விண்மீன்கள் அடர்ந்திருந்தன.இரவு கடந்து கொண்டிருந்தது.

அரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி

அரபிக்கடற்கரையில் உள்ள கோடி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் ,மண்ணின் கதை.அரபிக்கடற்கரையும் அதன்கழிமுகப்பகுதிகளும், அதையொட்டிய தென்னை மற்றும் புன்னை தோப்புகளும், மணற்மேடுகளும், ஏரியும், ஆங்காங்கு தள்ளி அமைந்த வீடுகளும், கோடிகிராமத்தை சுற்றியுள்ள ஐரோடி, மங்களூர், மந்தர்த்தி, ஹெங்காரகட்டே,படுமுன்னூர், உடுப்பி, குந்தாபுரம், மங்களூர்,பெங்களூரு,பம்பாய் மற்றும் மதராஸ் என்று கதைக்களம் விரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கதை துவங்குகிறது.பார்வதி மற்றும் ராமஐதாளர் திருமணம் பெருமழைகாலத்தில் நடப்பதிலிருந்து கதை துவங்குகிறது.ஐதாளரின் விதவைதங்கை சரஸ்வதி.பார்வதி சரஸ்வதி இருவரின் உறவானது அன்பும், உழைப்பும்,புரிதலும் இணைந்த தோழமைஉணர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

மழை ,பனி, கோடை காலங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தேவையானவைகளை உழைத்து ஈட்டிக்கொள்ளும் எளிமையான வாழ்வு அவர்களுடையது.அவர்களுக்கு விவசாயத்தில் உதவும் செம்படவர்களுடனான அவர்களின் உறவு கடைசி வரை பிரிக்கமுடியாததாக உள்ளது.கடும் உழைப்பக்கோரும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.

ராமஐதாளர் பக்கத்துஊர்களுக்கு நடந்து சென்று புரோகித வேலைகளை செய்கிறார்.போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் என்பதால் மக்கள் எங்கும் நடந்தோ படகிலோ செல்கிறார்கள்.நடக்கும் தூரம் வரை உள்ள இடங்களே அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறது.

ஆண்டிற்கு ஒருமுறை வரும் கோடியின் கோடீஸ்வரர் திருவிழாவிற்கு செல்வது அவர்களுடைய எதிர்பார்ப்பு மிகுந்த நிகழ்வாக இருக்கிறது.சொல்லப்போனால் நிதானமான வாழ்க்கை.நெல், உருளைக்கிழங்கு, கீரைகள், தேங்காய், உளுந்து போன்றவை அவர்களின் முக்கியமான உற்பத்தி பொருட்கள்.

இந்த நாவலில் மூன்றுதிருமணங்கள் விரிவாக சொல்லப்படுகின்றன.வீட்டு முற்றத்தை சீராக்கி, கடலோரத்தில் குறைந்தது ஆயிரம்ஆட்களாவது கலந்து கொள்ளும் திருமணங்கள்.அந்தப்பகுதியின் உணவுப்பழக்கங்கள்,சடங்குகள்,பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் நாவலில் அவர்கள் வாழ்வுடன் பிணைந்து வருகின்றன.

குழந்தை பிறக்காததால் ராமஐதாளர் சத்தியபாமையை இரண்டாம் திருமணம் செய்கிறார்.அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்கிற லச்சு,சுப்பம்மாள் என இரு குழந்தைகள்.ஐதாளரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் சீனமய்யரின் வீடு இருக்கிறது.இருநண்பர்களும் கடனால் பிரிகிறார்கள்.காலம் முழுதும் இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சொத்துக்களை வாங்குகிறார்கள்.

பெங்களூரில் சீனமய்யரின் பிள்ளைகள் சாப்பாட்டுக்கடை நடத்தி மிகுந்த வருமானம் ஈட்டுகிறார்கள்.ஐதாளர் தன் பிள்ளையை ஆங்கிலவழிகல்விக்கு அனுப்புகிறார்.ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி பணத்தை விரயமாக்குகிறான்.வீட்டிலும் யாருடனும் ஒட்டுதலின்றி இருக்கிறான்.

நீலவேணியை திருமணம் செய்த பிறகும் அவன் மாறுவதாக இல்லை.தீயசகவாசங்கள் வழி அவனுக்கு ஏற்படும் நோயால் நம்பிக்கை இழக்கும் ஐதாளர் மருமகளுக்கு தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறார்.பார்வதியும் ஐதாளரும் மறைகிறார்கள்.இது முதல் தலைமுறை.

இரண்டாம் தலைமுறையில் லச்சன் மனைவியை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி அழிக்கிறான்.அவன் மனைவியான நாகவேணிக்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தை மட்டும் நிலைக்கிறது.அதற்கு ராமஐதாளரின் பெயரை இடுகிறார்கள்.குடும்பத்தை வறுமை சூழ்கிறது.இரண்டாம் தலைமுறை பெரியவர்களும் காலம் முடிகிறது.

தன் தந்தை வீட்டிலிருந்து நாகவேணி மகனை வளர்க்கிறார்.மீண்டும் பதினைந்து ஆண்டுகள் சென்று கோடிக்கு வருகிறார்.இடையில் வயலின் இசை கற்பது அவருக்கு மனநிம்மதியை தருகிறது.

ராமன் மதராஸில் பி.ஏ படிக்க வருகிறான்.சுதந்திரபோராட்டதில் ஈடுபட்டு பலமாதங்கள் சிறை செல்கிறான்.மீண்டும் ஒருஆண்டு கோடியில் இருந்தபடி சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுகிறான்.பின்னர் மீண்டும் படிப்பை தொடர்கிறான்.வீட்டில் வயிற்றுக்கும்,துணிக்கும் இல்லாத வறுமை தாண்டவமாடுகிறது.

படித்தப்பின் வேலை கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.ராமன் இயந்திரத்தனமான வேலையின் மீது பிடிப்பில்லாமல் இருக்கிறான். அதை எதிர்கொண்டு வாழ்வில் தன்குடும்பம் இழந்த சொத்துக்களை, மரியாதையை திரும்பப்பெறுகிறானா என்பது மூன்றாம் தலைமுறைக்கதை.

நாவலில் நிறைய மனிதர்கள் வருகிறார்கள்.லட்சுவின் நண்பரான ஒரட்டய்யர்.இருவரும் தந்தையர் சொத்துக்களை தீயவழிகளில் அழிக்கப்பிறந்தவர்கள்.நாகவேணியின் சிறியதந்தை,செம்படவர்களான சூரன்,அவர் மகன் காளன் அவர் மனைவி சுப்பி,சுப்பராய உபாத்தியாயர்,நரசிம்மய்யர்,நாகவேணியின் குடும்பத்தார்,மதராஸ்குடும்பம்,ராமன் பம்பாயில் ஓவியம் கற்கும் நோவா என்று நாவல் முழுக்க மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் நிரம்பி இருக்கிறது.

கதை நேர்க்கோட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அறுநூற்று ஐம்பது பக்கங்கள் உள்ள இந்தநாவல் எந்த இடத்திலும் சோர்வு தட்டுவதில்லை.மனித வாழ்வின், செல்வத்தின் நிலையாமையை நாவல் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.

நாவலில் வரும் காலநிலை,இட விவரணைகள் மனிதர்களின் வாழ்வுடன் இணைந்துள்ளது.முக்கியமாக கோடியின் ஆளரவம் அற்ற கடற்கரை.தாழை புதர்களும் ,பனைமரங்களும், புன்னைமரங்களும் வளர்ந்திருக்கும் மணல்வெளி.மணல்மேடுகள் ,கடலின் பின் மறையும் சூரியன் போன்றவை நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன.

விடுமுறையில் ராமனும் அம்மா நீலவேணியும் இரவெல்லாம் மணற்குன்றுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வயலின் இசைக்கிறார்கள்.அத்தனை வறுமையான வாழ்வில் இயற்கையுடனான இந்த பந்தம் அவர்களுக்கு மாபெரும் ஆசுவாசத்தை அளிக்கும் இடங்கள் அலாதியானவை.நிலவொளியில் கடற்கரை மணல்குன்றில் தாயும் மகனும் அமர்ந்திருக்கும் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

மழைகாலத்திலும், காற்றுகாலத்திலும் மணல்மேடிடும் இடங்களை தொடர்ந்து சீர்செய்து விவசாயம் செய்கிறார்கள்.காய்கறி கீரை என்று தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.மேலும் பால்வற்றிய கறவைகளுக்கு கடைசிவரை உணவும், நீரும், இடமும், அன்பும் அளித்துக்காக்கிறார்கள்.

ஒருநீண்ட வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை இந்தநாவலை வாசிப்பதனூடாக அடையலாம்.வாழ்வை அதன் போக்கில் சொல்லும் நாவல்.மனிதர்கள் பிறந்து வாழ்ந்து மறைகிறார்கள்.ராமனுடைய வாழ்வில் இவற்றுக்கப்பால் அவனுடைய ஒவியமும் இசையும் எஞ்சுகிறது.

ஒருநாள் அவன் கடல் கொந்தளிப்பான காற்றுகாலத்தில் அரபிக்கடலை வரைகிறான்.அதே கொந்தளிப்பை பம்பாயில் தன் நண்பர்கள் முன் இசையில் கொண்டு வர அவனால் முடிகிறது.அதே கொந்தளிப்பை நாட்டு விடுதலைக்காக பேசும் கூட்டங்களில் தன் பேச்சில் கொண்டுவர முடிகிறது.

அதே சமயம் ராமனிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு அவனையும் சுற்றியுள்ளவர்களையும் சிறிது நேரம் வாழ்க்கைப்பாடுகளில் இருந்து விடுவிக்கிறது.ஏழ்மையான வாழ்விலிருந்து எழும் வைராக்கியம், நேர்மை, தீவிரம் கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான்.ராமஐதாளரும் சரஸ்வதியும் கூட உழைப்பில் அவ்வாறு இருந்தவர்கள்.எதோஒரு தீவிரம் இல்லாத வாழ்வு லச்சனுடைய வாழ்வைப் போல வெறும் அலைகழிப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது.

ராமன் தாயிடம் வளர்ந்த பிள்ளையாதலால் பெண்கள்மேல் வாஞ்சையுடையவனாக, அவர்களுக்கான இன்முகம் கொண்டவனாக ,அவர்கள் பேசுவதற்கு காது கொடுப்பவனாக இருக்கிறான்.அம்மா,அத்தை,சுப்பி,பாட்டி,சித்தி என்று அவனுடனிருக்கும் பெண்கள் மேல் அதிகாரம் செலுத்தாதவனாக இருக்கிறான்.

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு இயல்புண்டு மனிதர்களுக்கும் அவ்வாறே.காலநிலைக்கேற்ப மண் மாற்றம் பெறுகிறது.மனிதர்களும் கூட அவ்வாறே.மாறாத நிலம் பாலை.தனிமனிதனோ மானுடமோ கூட அவ்வாறுதானே.

மண்ணின் இயல்பை மனிதர்கள் பெறுகிறார்கள் என்ற வாக்கியத்தை சிறுவயதில் கேட்கும் பொழுது புரியாது.ஆனால் வளர வளர தெரியும்.வளமான மண்ணில் பிறந்தவர்களில் முக்கால்வாசி ஆட்கள் சுகவாசிகளாக, சாதுவாக இருப்பார்கள்.வளமில்லாத மண்ணில் பிறந்தவர்கள் போராட்டகுணமும்,வலிய உடலும் உள்ளவர்களாக இருப்பார்கள்.மண்ணுடன் கொண்ட உறவால் விளையும் பண்புகள் எனக்கொள்ளலாம்.

ராமஐதாளரின் விவசாய வாழ்க்கை காலகட்டதிலிருந்து ராமனின் தொழில்மையமான காலகட்டம் வரையான அந்தமக்களின் வாழ்வை ,அலைகழிப்பை, கொண்டாட்டங்களை, வறுமையை,இழப்புகளை, கேள்விகளை, பொருளாதாரத்தை, மக்களுக்கிடையேயான உறவைப் பற்றி விரிவான வாழ்பனுபவத்தை இந்த நாவல் நமக்கு தருகிறது.

இந்த வாழ்வும் கலைகளும் எப்பொழுதுமே மண்ணிற்கும் மனிதர்களுக்குமானது தானே.அதை மீண்டும் உணரும் அனுபவமாக ‘மண்ணும் மனிதரும்’ நாவல் வாசிப்பனுபவம் உள்ளது.

நாவல்:மண்ணும் மனிதரும்

ஆசிரியர்:சிவராமகாரந்த்

மொழிபெயர்ப்பு:தி.ப.சித்தலிங்கையா

என்னதான் வேண்டும்! – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி

பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.

கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு சர்வமாணிய அக்ரஹாரம்.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம்.பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது,பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை.அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது.பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு.இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார்.காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்

பச்சைக்குளம்

ஓரமாய் ஒதுங்குகிறது
கலைகிறது
மிதந்து திசையில்லாமல் நகர்கிறது
நீர் மேல் பாசி.
அத்தனை அலைகழிப்புகளையும்
சமன் செய்து அசைத்தபடி மிதக்கிறது.
பின்னொரு அதிகாலையில்
குளத்தை தன்னடியில் ஔித்தபடி
அசைவற்று நிற்கிறது
அன்றைய முதல் தொடுதலுக்காக.

 

அம்மையப்பன்

கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின்  செவ்வொளி தயங்கி நின்று பரவ
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒரு உச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை.

மழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை

தொடர்ந்து விடாமல் பெருமழையாகவும் தூரலாகவும் நின்று நிதானித்து பெய்த மழையால் துறையூர் கலைத்துப்போடப்பட்டிருந்தது.ஈர அதிகாலையில் அந்தசிறுநகரில் நடைப்பயிற்சி செல்வதற்காக குடையுடன் தன்வீட்டு வாசலில் நின்ற வெங்கட்ராமன் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தார்.அடைமழைநாள் எப்படியோ தன்குளிரோடு நசநசப்போடு அவனை கொண்டுவந்துவிடுகிறது.

துன்பம் இனியில்லை..சோர்வில்லை.துன்பம் இனியில்லை சோர்வில்லை…என்ற வரிகளை மந்திரம் என மனம் அனிச்சையாய் சொன்னது.விஸ்வாவின் இறுதி நாட்களில் இந்தவரிகளை பிடித்துக்கொண்டமனம் உள்ளேயே எந்தநேரமும் நிரப்பமுடியாத ஒன்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அவன் இறப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த பத்துநாட்களில் இந்தவரிகளின்றி எதுவும் துணையிருந்திருக்க முடியாது.தயவுசெஞ்சி செத்துபோடா கண்ணா.. இவ்வளவு வலி வேண்டாம்..என்று நூறுமுறையாவது மனதால் சொல்லிய நாட்கள்.

குடையை மடக்கி கையில் பிடித்துக்கொண்டு நடந்தார்.நாய் ஒன்று அசதியில் தெருவிளக்கின் அடியில் படுத்திருந்தது.நடுவயதுடையது. செவலை நிறம்.மூச்சு ஏறிஇறங்கும் வயிற்றின் தசைகளில் இளமையின் பூரணம். சற்று நேரம் நின்றார். மணிவிழி திறந்து அவரைப்பார்த்து வாலையசைத்து கண்களை மூடிக்கொண்டது.

தெப்பக்குளத்தை சுற்றி நடந்தார்.பெரியஏரியிலிருந்து வரும் புதுநீர் நிரம்பித் தழும்பிக்கொண்டிருந்தது.நீரில் கலங்கல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.ஆனால் நாசி கண்டுகொண்டது.ஒருபுலன் இல்லாவிட்டால் ஒருபுலன் உதவுவதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.இருபுலன் சேர்ந்து ஒருபுலனாய் பரிணாமம் வளர்ந்தால்!… அழகு என்பதும் நாம் அறிந்த உயிரியல் என்பதும் என்னவாகும்? என்று மனதில் தோன்றியது.

எப்பொழுதும் நடக்கும் வழியில் சாக்கடை சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வழியெங்கும் நீர் கணுக்கால் வரை சென்றது.திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எழும் பொழுதே அதுமுடியாது என்பதை அவர்மனம் அறிந்திருந்தது.

பழையப்பாதையில் நடந்தார்.இந்தப்பாதையில் வந்து ஆண்டுகளாகின்றன.சிறுதயக்கத்துடன் வாயில்கதவைப்பிடித்து நின்று அந்தப்பள்ளிக்கட்டிடத்தைப் பார்த்தார்.இத்தனை ஆண்டுகளில் விரிந்து பரந்து உயர்ந்திருந்தது.அவர் கால்களுக்கடியில் சிறுகூச்சம் போல ஒருஉணர்வு.உயரமான இடத்தில் ஒட்டில் நிற்பதைப்போல.கால்களை மாற்றிமாற்றி தூக்கி பின்புறமாக மடித்து நீட்டினார்.

அலைபேசி ஒலித்துக்கலைத்தது.எடுத்ததும், “குட்மானிங் டாக்டர் .இன்னிக்கு நீங்க லீவான்னு கேட்டு கால் வந்துட்டேயிருக்கு.கெம்பியப்பட்டிக்காரர் நல்லாருக்கார்.வீட்டுக்கு அனுப்பலாமா டாக்டர்.இங்க எக்ஸ்ட்ரா பெட் போட்டும் சிரமமா இருக்கு டாக்டர்,”என்றது.

“நீ சர்ச்க்கு போகலையாம்மா..”

“பக்கத்திலதானே டாக்டர். போயிட்டு திரும்பிருவேன்.மது நைட் இருந்தா..”

“சரிம்மா.இந்தவாரத்துக்கு சன்டே இல்லன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..ஸார்ப்பா நைன்க்கு இருப்பேன்,”என்றப்பின் அலைபேசியை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.பள்ளிவளாகம் அமைதியாக இருந்தது.மைதானத்தில் மழைபெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்தகண்கள் என நீர் தேங்கிக்கிடந்தது.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஒருசொடுக்கலால் அவர் உடல் ஆடியது. “டாடி..”என்று விஸ்வா ஓடிவருகிறான். பள்ளியை அடுத்திருந்த நந்திகேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தபடி நடந்தார்.பள்ளிசுற்றுசுவர் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த அசோக, பன்னீர் மரங்களிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.எதிரே இருந்த மணிக்கூண்டு பிள்ளையார் கோவிலின் மணியோசைக் கேட்கிறது.தேர்நிலையில் சற்று நின்றார்.

ஆலயத்தினுள்ளிருந்து சிறுவன் அம்மாவின் கையை உதறி ஓடிவந்து சாலைஓரத்தில் தயங்கி நின்றான். கோயில் குருக்களின் மகன்தான் என கண்டுகொண்டார்.அவர் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தார்.கோரைமுடி நன்குபடிந்து திருநீற்றுக்கு மேல் நெற்றியில் ஒட்டியிருந்தது.நீளவாக்கு முகம்.வெள்ளை டீசர்ட்.அவன் எதையோ எதிர்பார்த்து வலப்புறம் ஓட அம்மாவின் கைகளில் சிக்கிக்கொண்டான்.

அம்மாவா! நாமளா முடிவுபண்ணிக்கலாமா? அம்மாதான் என்று அவர் உள்மனம் சொல்ல சாலையைப் பார்த்து நடந்தார்.இரும்புக்கடையின் முன் நிற்கும் குட்டிவேம்பை தொட்டுப்பார்த்து எப்படியோ வளரப்பிடாதுன்னு தோணிடுச்சு என்று அதன் கிளையை அசைத்துவிட்டு நடந்தார்

பாலக்கரையில் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருப்பதை பார்ப்பதற்கு சுட்டிநாய்க்குட்டி உறங்குவதைப்போல இருந்தது.விஸ்வா அந்த ஐஸ்பேக்டரி முன் நிற்கிறான்.வளையும் இளம்மூங்கில் என உயரமாக.பள்ளி சீருடையில் சற்று முதுகை குனித்துக்கொண்டு சிரிக்கிறான்.கையில் இளம்சிகப்புநிற குச்சிஐஸ்.கைகால்கள் நிலையில்லாமல் பதின்வயதிற்கே உரிய குதூகளிப்பில் அசைந்து கொண்டிருக்க எண்ணெய் மின்னும் முகத்தை திருப்புகிறான்.இவர் குடையை இறுக்கிப்பிடித்தபடி கனமான கால்களை எடுத்து வைத்து நடக்கத்தொடங்கினார்.பாதையெங்கும் ஈரம்.

பாலக்கரைக்கு இடதுபுறம் நடந்து சின்னஏரியின் பின்புறம் வந்திருந்தார்.நீர் நிரம்பி அலையடிக்க மினுமினுத்துக் கிடந்தது.கழிவுகள் சேர்ந்து நாற்றமடிக்க மூக்கைப்பொத்திக்கொண்டு வேகமாக நடந்தார்.பாதிக்கரையைக் கடந்ததும் நாற்றம் குறைந்தது.அந்த மருத்துவமனையின் பின்புறம் நின்று தலையுயர்த்திப் பார்த்தார்.அது ஐந்துதளமாக உயர்ந்திருந்தது.பல ஆண்டுகளுக்குமுன்பு இதுதான் வாழ்வின் இலக்காக இருந்தது.யாருடைய இலக்கோ யாரோலோ நிறைவேற்றப்படுகையில் அது யாருடையது? என்று நினைத்தபடி நடந்தார்.

“நம்ம ஹாஸ்பிட்டல கிருஷ்ணாக்கு குடுக்கப்போறீங்களா டாடி,”என்ற விஸ்வாவின் கம்மிய குரல் கேட்டது.அப்பொழுது அவன் சிகிச்சையிலிருந்தான்.நீண்டமுகத்தில் மென்தாடியிருந்த இடங்கள் வற்றத்தொடங்கியிருந்தன.

கல்லூரியில் மருத்துவிடுப்பெடுத்து வந்தவன் வேறொருவன்.தீவிரமான கண்கள்,நீண்டமுகத்தில் மினுமினுப்பும்,உயர்ந்த சதையில்லாத உடலும்,புன்னகையை ஔித்து வைத்திருக்கும் இதழ்களுமாக காண்பவர்களின் கண்களுக்குள் நிற்பவன்.

ஏரியைக்கடந்து முசிறி பிரிவுப்பாதையை வந்தடைந்ததும் திரும்பிவிடலாம் என்று நிமிர்ந்து பார்த்தார்.பெருமாள் மலைக்குப்பின்னாலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தான்.சற்றுநேரம் நின்றுவிட்டு நடந்தார்.

எம்.ஆர்.ஐ ஸ்கேனிலேயே நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தாலும் ஆவேசம் விடாமல் அமெரிக்கா வரை போகச்செய்தது.திரும்பி வரும்போது மகனை, மருத்துவமனையை, வீட்டை இழந்திருந்தார்.வீட்டிலேயே இருந்தார்.வீட்டை வாங்கியவர் ஒருநாள் தன் உடல்நலப்பிரச்சனையை சொல்லித்தீர்க்க வந்தார்.

அவர்,“இனிமே தனியா இங்கருக்க முடியாதுங்க டாக்டர்.பையனோடதான்.வீட்ட வாடகைக்கு விடலான்னு இருக்கேன்.கைமாறிப்போனாலும் உங்கவீடு.இருக்கனுன்னு நெனப்பிருந்தா இருந்துக்குங்க,”என்றார்.

விட்டுட்டு வந்தாச்சு இனிமேல் அந்த திண்ணைகளில் சாவகாசமாக அமரமுடியுமா? பரந்துகிடக்கும் உள்முற்றத்தில் தனியாக இரவுபடுத்தால் உறக்கம் வருமா? பின்கிணற்றின் நீர் சுவைக்குமா? என்ற எண்ணங்கள் அவரையும் துணைவியையும் வதைத்தன. வீட்டை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் அல்லாடிய மனங்களுக்கு வீட்டை மருத்துவமனையாக்கலாம் என்ற எண்ணம் இந்தஅடிவாரத்தில் வைத்துதான் தோன்றியது.

“நம்ம வீட்ட வாடகைக்கு எடுத்து ஹாஸ்பிட்டலா மாத்திண்டா என்ன?”என்றார்.

அந்த அம்மாள்,“நல்ல விஸ்தாரமான இடம்தான்..”என்றாள்.

இரண்டுநாட்கள் யோசனைக்குப்பிறகு கணேசனை, ஜான்சியை அழைத்தார்.அடுத்தப்பத்துநாட்களில் மருத்துவம் பார்த்துக்கொள்ள ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.அந்தவீட்டின் மகிமையோ என்னவோ சுற்றுவட்டார கிராமத்து ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.நின்று நிதானித்து மருத்துவம் பார்த்தார்.தொடர்ந்து வந்தவர்களின் உடலை மனதை புரிந்துகொள்ள முயலும் சாகசம் அவருக்குப் பிடித்திருந்தது.

காலையுணவை முடித்து மருத்துவமனையின்முன் காரை நிறுத்தி இறங்கியவர் பெயர்ப்பலகையை பார்த்தார்.விஸ்வநாதன் மருத்துவமனை.அந்தப்பயலை இன்னும் சிலநாட்களுக்கு மனதிலிருந்து பிடுங்கி எறியமுடியாது என்று நினைத்துக் கொண்டு படிகளில் ஏறினார்.

திண்ணையை அடைத்து போடப்பட்ட கேட்டினுள் கிடந்த பெஞ்சுகளில் ஆட்கள் எழுந்து நின்றார்கள்.அவர் புன்னகைத்துக் கடந்தார்.அந்தத்திண்ணைகளில் விஸ்வா பெம்மைகளின் பின்னால் மண்டியிட்டுத் தவழ்ந்தான்.

முன்கட்டிலிருந்த மருந்தகத்திற்கு வந்தார்.கணேசனிடம் பேசியபடி நின்றார்.அங்கு விஸ்வா புத்தகத்துடன் அமர்ந்திருந்தான். உள்ளே விஸ்தாரமான பகுதியில் கிடந்த மேசைமுன் அமர்ந்தார்.பக்கவாட்டில் திரைகளால் பிரிக்கப்பட்டு படுக்கைகள்.அவருக்கு இடப்புறம் உள்முற்றத்தில் ஜான்சி மேசையில் அமர்ந்திருந்தாள்.பக்கத்திலிருந்த சீலாவை அழைத்தார்.

கழுத்தைப்பிடித்துக்கொண்டு தன்முன் அமர்ந்திருந்த பெண்ணிடம், “அவ சொல்லிக்கொடுக்கற பயிற்சிய தினமும் காலையிலயும் சாயறச்சையும் செய்யனும்.செல்போனை கொஞ்சமாச்சும் கையிலருந்து எறக்கனும்,”என்றார்.அடுத்ததாக பெஞ்சில் காத்திருந்த சிறுமி சிரித்தாள்.

“இங்கவா அம்மணி..உனக்கென்ன? ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்காக இங்க வந்திருக்கியா?”என்று அவளை அழைத்தார்.அவள் அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

“என்ன?”என்று ரகசியமாகக் கேட்டார்.

“அம்மாட்ட சொல்லக்கூடாது,”என்றாள்.

“ம்,”

அவர் நெற்றியிலிட்டிருந்த நாமத்தைக்காட்டி, “பீம் இந்தமாதிரி வரஞ்சிருந்தான்,”என்று வாய்மூடி சிரித்தாள்.

கும்பல் குறையாமல் வந்துகொண்டிருந்தது.பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்.அவர்களிடம், “பாராசிட்டமால் போட்டு பாத்துட்டு வாங்கன்னு சொன்னா கேக்கறதில்ல,”என்று உரிமையோடு வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.வீடு மருந்துவமனையான இந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வலிப்பிரச்சனைகளுடன் வந்தவரிடன், “மருந்து சாப்பிடு.சீலா சொல்லிக்கொடுக்கற பயிற்சிகள செஞ்சா என்ன?அதுக்கு முன்னாடி உன்னோட மகளுக்கு வரன் பாரு.எல்லா வலியும் காணாப்போயிடும்,”என்று தோளில் தட்டினார்.

வெளியிலிருந்து, “டோக்கன் முடிஞ்சுது சார்,”என்ற குரல் கேட்டது. சாய்ந்தமர்ந்தார்.ஜான்ஸி சிற்றுண்டியுடன் வந்தாள்.படுக்கையிலிருப்பவர்களின் விவரங்களை சொன்னாள்.

“என்னாச்சு சார்..நீங்க இன்னிக்கி எங்கக்கூட சரியா பேசல,”

“அசதிம்மா..”

“டாக்டர் ஃபீஸ் இல்லன்னுதான் டக்குன்னு எதுன்னாலும் ஓடி வந்திடறாங்க.நீங்க கொஞ்சமாச்சும் சார்ஜ் பண்ணினா ரீசனபிலான கூட்டம் வரும் சார்,”

அவர் புன்னகைத்தபடி எதிரேயிருந்த விஸ்வாவின் படத்தைப் பார்த்தார்.ஜான்ஸி படுக்கையிலிருந்தவர்களிடம் சென்றாள். உண்ணாமல் எழுந்து பின்பக்கம் வந்தார்.கழிவறையிலிருந்து வெளியே வந்தவர் இவரைக்கண்டு முகம் மலர்ந்தார்.

“வீட்டம்மாவ நாளக்கி கூட்டிப்போலாம்.ரொம்ப வயக்காட்டுல போட்டு வறுக்காதய்யா,”என்றபடிநடந்து வந்து துளசி, திருநீற்றுப்பச்சை செடிகள் செழித்த மதிலருகே நின்றார்.இலைகளெல்லாம் மழைநீர் கழுவிய பசுமையிலிருந்தன.

விஸ்வா குளிக்க அடம் செய்து உள்ளாடையுடன் கிணற்றை சுற்றி ஓடிவந்து கொண்டிருந்தான்.அவன் பாட்டி பின்னால், “ஓடி விழுந்திறாத..” கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

தலையை மெதுவாக உலுக்கிக்கொண்டார்.அவருக்குத் தெரியும் இது எங்கு செல்லும் என.எத்தனையோ நாட்கள் இப்படியாகக்கிடந்து மீள்பவர்தான்.அந்த நேரங்களில் மருத்துவஅறிவு சுமையா என்ற கேள்வி தலைமேல் கனக்கும்.அந்த எண்ணம் தரும் சோர்வு மேலும் உறக்கத்தக்கெடுக்கும்.உறக்கம் கெட்ட வேளைகளில் அவன் அவரைச் சுற்றி வியாபிப்பான்.

மதிலின் சிறுவாயிலைத் திறந்தார்.சுமையேற்றிய மாட்டுவண்டி மெதுவாக நகராட்சி சந்தைக்கு நகர்ந்து கொண்டிருந்தது.வண்டியோட்டி துண்டால் மிகமெல்ல மாடுகளை தட்டிக்கொடுத்து நடத்தினான்.

“ந்தா..ந்தா..வந்திருச்சு.எடம் வந்திருச்சு,”என்று மாடுகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

திரும்பிநின்றார்.ஈரத்தரையில் பாசிபடர்ந்திருந்தது.

“டாடி..தயிர்லேந்து வெண்ண வராப்ல..மழத்தண்ணியிலந்து இந்தபாசி வந்து ஒட்டிக்குமா..

“ம்..இருக்குமாயிருக்கும்..”

“அப்ப யாருப்பா மழத்தண்ணியக்கடையறா..”

“ஜகன்மாதா…சுத்தறாலான்னோ..”

“அவளாட சேந்து நாமாளுந்தானே..”

“ஆமா..”

“எதுக்குப்பா…”

“ஜனிச்சுட்டோமோல்லிய்யோ கண்ணா..” விஸ்வா தொடர்ந்து, “அப்ப ஜனிக்காதவாள்ளாம் காத்தில இருக்களா மழபேஞ்சா வருவளா..”கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் மனம் கேள்விகள் கேட்பதை நிறுத்தியது. கண்களை மூடித்திறந்தார்.முன்னால் கொய்யா அங்கங்கே இலைமறைவில் கனிந்திருந்தது.காய்களும் பிஞ்சுகளுமாய் இலைகளுக்குப்பின்னே காத்திருந்தது.

ஜான்சி அவரை அழைத்துக்கொண்டே வருவது கேட்டது.அவர் உள்நோக்கி நடந்தார்.தயங்கியப்பின் தென்கிழக்குப்பக்கம் சென்றார்.அறை வாயிலருகே நின்றார்.

விஸ்வாவிடம் அம்மா, “நன்னா சாப்பிடு கோந்தே,”என்று தலையைத்தடவினாள்.

அதே இடத்தில் கிடந்த விஸ்வாவின் பழைய டேபிளில் தோட்டத்தை வேடிக்கைப்பார்த்தபடி சீலா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.இவரைக்கண்டதும் கண்களை விரித்தாள்.“நல்லா சாப்பிடும்மா..”என்று திரும்பினார்.

அலைபேசியின் அழைப்பு நடையை துரிதப்படுத்தியது.டாக்டர் ரவிதான்.மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்டார்.ரவி மனசுக்கு அகப்படாத கேஸா இருக்கும் என்று காரில் ஏறினார். குழந்தைகள் மருத்துவர் டாக்டர் இளங்கோவின் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.வெளியே மழைமுடிந்த வெள்ளை வெயில்.மழையை அர்த்தப்படுத்தும் வெயில்.