அலைவு – கமலதேவி சிறுகதை

நிலாவெளிச்சத்தில் மாரியம்மன் கோவிலின் பெரிய வேப்பமரத்தை கண்டதும் கண்களை கசக்கிக்கொண்டு கண்ணன் எழுந்து நின்றான்.முந்தின நிறுத்தத்தில் இறங்கியிருக்க வேண்டும்.

வலதுபுறம் சென்ற வயல்பாதையில் நடந்தான்.இன்னும் மேற்கே நடக்க வேண்டும்.வியர்வையில் கசகசத்த முரட்டுசட்டைக்குள் காற்று புகுந்து எளிதாக்கியது.வரிசையாக நுணா, புங்கை,பனை,ஈச்சம் மரங்கள்.மேட்டுக்காடு. சற்று தொலைவில் களத்தில் மின்விளக்கின் ஔி தெரிந்தது.

வெளிச்சம் அருகில் வரவர அவன் கால்கள் தயங்கின.எதிரே காற்றுபுகுந்த சோளக்காடு பேயாட்டமிட்டது.இங்கே பாதையில் படுத்துக்கொள்ளலாம் அல்லது வந்தபாதையில் திரும்பலாம்.ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தாவது கிடைக்கும்.

ஊரில் மட்டும் என்ன இருக்கிறது.வீட்டில் தங்கை குடும்பம் இருக்கிறது.ஒருநாளைக்கு சலிக்காமல் சோறு போடுவாள்.எதற்காக திரும்ப திரும்ப இங்கு வர வேண்டும்.ஒருநாள் விடுமுறையில் கடைவிடுதியிலேயே தூங்கியிருக்கலாம்.ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றால் எட்டிஉதைக்கப்பட்டு இந்த களத்தில் வந்து விழவேண்டும் என்று கணக்கில் எழுதியதை யாரால் மாற்றமுடியும்.

களத்தின் ஓரத்திலிருந்த முருங்கைமரத்தில் சாய்ந்து நின்றான். வாசல்களத்தில் கட்டிலில் சந்திராஅத்தை அமர்ந்திருக்கிறாள்.கொண்டையிலிருந்து பிரிந்த முடிகள் காற்றில் அசைகின்றன.அந்த முகம்,இந்தக்களம்,இந்தப்பாதையை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பார்த்துவிட வேண்டும்.இல்லையென்றால் தூக்கத்தில் துரத்தும்.

அத்தையிடம் சொன்னால் நம்பமாட்டாள்.அவளிடம் இரண்டுவார்த்தைகள் பேசவேண்டும்.என்ன திட்டினாலும் இதையெல்லாம் வெட்டிவிட முடியவில்லை.சிறுபிள்ளையில் மனதில் விழுந்து விட்டவை.இன்று இல்லையென்றால் நாளை வருகிறவன்தான்.

தட்டை அறுப்பதற்காக வந்து தங்கியிருந்த ஆட்கள் மாங்காய்களை போட்டு குழம்பு வைத்திருந்த வாசம் களத்தை சூழ்ந்திருந்தது.அவர்கள் கூட்டமாக சாப்பிட அமர்ந்தார்கள்.அந்த சிறியபையன் அவர்களை சுற்றிவந்து அவர்களிடம் ஆளுக்கொரு வாய் சோற்றை வாங்கித் தின்றபடி குதித்து குதித்து ஓடினான்.

அவன் சோற்றிலிருந்து திசைமாறி களத்தை சுற்றிவரத் தொடங்கினான். அவன்உயரமிருந்த உருண்டைக்கல்லில் அமர்ந்திருந்த ராயப்பட்டிக்காரர், “தம்புடு வாடா…லட்சணகுஞ்சய்யால்ல..ஒருவாய் சோறு வாங்கிக்க… கத சொல்றேன்..”என்று அவனை அழைத்தார்.கண்ணனுக்கு சிரிப்பு வந்தது.

“கத சொல்லுறியா பாட்டா…கத சொல்லுறியா பாட்டா…”என்றபடி ஓடிவந்து வாயைத்திறந்தான்.அவர் தன்நீண்டுஅகன்ற கையால் சோற்றை எடுத்து வாயில் வைத்தார்.

இருபுறமும் உப்பியக்கன்னங்களுடன், “என்ன கத பாட்டா..”என்றபடி கைகால்களை ஆட்டிக்குதித்தான்.கருத்தப்பயலுக்கு மணியான கண்கள்.உளுந்துக்கு எண்ணெய் தடவி போட்டது மாதிரி வியர்வைக்கு துணியில்லா மேனியுடன் அலைந்தான்.உணவை முடித்தவர்கள் எழுந்து பாத்திரங்களை கழுவி கவிழ்த்தார்கள்.

சோலை அடுப்பின்பக்கம் வந்து அமர்ந்தான். தேர்ந்து எடுத்த சோளக்கருதுகளை கங்கிலிட்டு திருப்பித்திருப்பி பதம் பார்த்தான்.பெண்கள் கிழக்குப்பக்கமாக படுதாவை விரித்து கொண்டிருந்தார்கள்.ஆம்பிளையாட்கள் களத்தில் அங்கங்கே சாய்ந்தார்கள்.

கண்ணன் செருப்புகள் ஓசையெழுப்ப நடந்தான். அத்தை திரும்பிப் பார்த்தாள்.அவன் பாதையிலிருந்து களத்தில் ஏறினான்.சந்திராவிற்கு மனதில் சட்டென்று எதுக்கு இங்க வர்றான் என்று முதலில் தோன்றியது.பின் அதற்காக சங்கடப்பட்டுக்கொண்டு , “இந்நேரத்துல என்ன கண்ணா?”என்றாள்.

“பஸ்ஸீல தூங்கிட்டேன்..இங்க கோயில்கிட்ட எறக்கிட்டு போயிட்டான்..”என்றபடி வாசல் படிகளில் அமர்ந்தான். அவன் மீது வீசிய நெடியை உணர்ந்ததும் சந்திராவிற்கு எரிச்சலாக வந்தது.முகத்தை சுருக்கிக்கொண்டாள்.

“உனக்கு எத்தனவாட்டி சொல்றது? இந்த நெலமையில இங்க வறாதன்னு,”

அவன் ஒன்றும் பேசவில்லை.

“ பெறந்த எடத்துலருந்து இப்பிடியா வருவாங்க,”

“கோவிச்சுகாத அத்த…காலையில வெள்ளனயே எந்திருச்சிருச்சு போயிருவேன்..மாமா இருக்காரா,”

“காத்துக்கு மாடியில் படுத்திருக்காரு….”என்று உள்ளே சென்று தட்டில் சோற்றையும், தண்ணீர் செம்பையும் எடுத்துவந்தாள். அவனுக்கு எவ்வளவு சோறு, குழம்பு ,உப்பு ருசிக்கும் என்று அத்தை கைகளுக்கு தெரியும்.வாழைக்காய் போட்டு காரமான தேங்காய் குழம்பு.இரவில் மீதமிருந்ததை வீணாகக்கூடாது என்று புடையடுப்பில் போட்டு வைத்திருக்கிறாள்.ருசியேறிக்கிடக்கிறது. எத்தனை நாளாச்சு என்று குனிந்து கொண்டே தின்றான்.

அத்தையோடு எதாவது பேச வேண்டும் என்று நினைத்து அருகில் அமர்ந்தான்.அவள் எழுந்து பக்கத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள்.பத்துஆண்டுகளுக்கு முன்புவரை வீட்டிற்கு வந்துவிட்டால் கண்ணா…கண்ணா.. என்று அழைத்து கொண்டேயிருப்பாள்.வளர்ந்தபிள்ளையை மடியில கட்டிக்கிட்டே அலைவியா சந்திரா? என்று சிரிப்பார்கள்.

“அத்த..ஆளுகளோட படுத்துக்கறேன்..”என்று நகர்ந்தான்.கங்கிலிருந்து சோளத்தை எடுத்து அடுப்புக்கல்லில் வைத்துக்கொண்டிருந்த சோலையிடம் , “பக்குவமாயிட்டத…மறுபடி சூட்ல போடறயே,”என்றபடி கால்களை நீட்டி அமர்ந்தான். அவனிடம் சோலை ஒரு சோளக்கொண்டையை நீட்டினான்.

“எங்கருந்து வாரண்ணே,”

“திருச்சியில துணிக்கடையில வேல பாக்கறேன்..எங்க அத்தவூடுதான்..”என்றான்.

சோலை அவனை கொஞ்சநேரம் உற்றுபார்த்துவிட்டு புன்னகைத்தான்.வரண்டு அடர்ந்த தலைமயிர்.கருத்த இதழ்கள்.உள்ளங்கை கால்களில் இரும்படிப்பவனை போன்று கருமை படர்ந்திருந்தது.மெலிந்த உடல்.

“அடிவாங்கின பொழப்பு போலய,”என்ற சோலை பக்கத்திலிருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து உள்ளங்கையில் ஊற்றினான்.கைகால்களில் உள்ள கீறல்களை பார்த்தான்.

“சோளக்காட்டு கிழிசல எண்ணமுடியுமா..மொத்தமா தேய்ச்சு வழிச்சுவிடு,”

சோலை கை கால்களில் எண்ணெய் நீவி கீறல்களின் எரிச்சல் முகத்தில் தெரிய ஒரு சோளக்கருதை எடுத்து தட்டினான்.

“இவ்வளவு சொகுசு ஆவாது..குப்பமேனிய கசக்கி தேய்ச்சுவிட்டின்னா..எரியற எரிச்சல்ல வலி மறந்து போவும்..காயமும் பட்டுப்போவும்,”

“அதுவும் சரிதான்..”என்று புன்னகைத்தான்.

எண்ணெய் தடவி முடித்தவர்கள் சோளக்கருதிற்காக கங்கை சுற்றி அமர்ந்தார்கள்.சோலை எடுத்துக்கொடுத்தான்.பயல் மீண்டும் மீண்டும் கதை கதை என்று பாடிக்கொண்டிருந்தான்.

தாத்தா, “பொறுடா… தின்னதும் உடம்புக்கு என்னாவோன்னு வருது..”என்று கைக்கு முட்டுக்கொடுத்து களத்தில் சாய்ந்தார்.அவன் அழத்தொடங்கினான்.

கண்ணன்,“நான் சொல்லட்டா,”என்றான்.

“வேணாம்…பாட்டா தான் கத சொல்றேனுச்சு…”

கண்ணன் வாய்விட்டு சிரித்தான்.சந்திரா அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.இந்தக்களத்தில் எத்தனை கூத்துகளை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.

“கர்ணன் கத சொல்லட்டா?” என்றான்.

“அம்மா தம்பிபாப்பாவ மூங்கிகூடையில வச்சு ஆத்துல விட்டாளாம்.பாட்டா…இத்தன தரம் சொல்லிட்டாரு,”என்று கைகளை விரித்தான்.உடனே அவன் கண்கள் அம்மாவைத் தேடின.அவள் படுத்துக்கொண்டு இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.உடனே பயல் , “ம்மா..” என்று சிரித்தான்.

கண்ணன்,“சரி…அபிமன்யூ கத சொல்றேன்…”என்று எழுந்தான்.சந்திரா எழுந்து குரல் கேட்கும் தொலைவில் தொட்டிமீது அமர்ந்தாள்.சரியாக அவன் நிற்கும் இடத்தில் பெரியஅண்ணன் நிற்பார்.பொன்னர்,கர்ணன்,ராவணன் என அவர் மாறிமாறி நிற்கும் தோற்றம் சந்திராவின் மனதில் எழுந்தது.

கண்ணன் கைகால்களை குறுக்கி தலையை குனித்து கருவறை குழந்தை என நின்று,”இந்தவயசில் நான் கதை கேட்டன் கதைகேட்டேன்..என்ன கதை கேட்டேன்?அம்பா பாயும் கதைகேட்டன்..”என்ற அவன் உடலசைவுகளை கண்டு பயல் கைத்தட்டி சிரித்தான்.பாட்டா எழுந்து அமர்ந்தார்.

சந்திரா தன் இருஅண்ணன்களை நினைத்துக்கொண்டாள்.விவசாய வேலைகள் இல்லாத கோடைகாலத்தில் இப்படிதான் எங்காவது கூத்து,நாடகம் என்று கிளம்பிவிடுவார்கள்.அவர்கள் பின்னால் சென்றவன் இவன்.கோலிகுண்டு கண்களால் எப்படி பார்ப்பான்.அத்தை என்று அழைத்து முடிக்கும் முன்பே உடல் ஒருஅடி எடுத்து வைத்துவிடும்.

கண்ணனின் மாமா,“நாங்க கூப்பிட்டா பத்துதரத்து ஒரு தரம் என்னாம்ப..வெட்டிப்பயலுக்கு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு ஓடுறவ..இந்த பொம்பிளைகள என்னன்னு சொல்றது,”என்பார்.

கோலிகுண்டு கண்கள் முரட்டுக்கண்களாக கிறக்கத்தில் அலைபாய்வதை பார்த்திலிருந்து குறையாத ஆற்றாமையுடன் இருக்கிறாள்.நாட்கள் செல்ல செல்ல அவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லாதவளானாள்.

எத்தனையோ முறை கண்ணனின்மாமா, “எந்தப்பயக்கிட்ட இந்தப்பழக்கம் இல்லன்னு விரல்விட்டு எண்ணிறலாம்.இதென்ன இத்தனை கோரோசனம்.அறுத்துபோடறாப்ல.அவனிட்ட கொஞ்சம் சகஜமா இருக்கக்கூடாதா..ச்சை.. என்ன புத்தியிது,” என்பார்.

கண்ணன் நிமிர்ந்து நின்றான்.தலைமுடியை முன்னால் இழுத்துவிட்டு இதழ்களை குவித்து கண்களை சிமிட்டியபடி, “இந்தவயசில அம்புவிட்டேன்…மாமனோட சேந்து அம்புவிட்டேன்.குதிரையில் பாய்ஞ்சேன்..எதுக்கு பாஞ்சேன்..”

உடனே பாட்டா, “ ராசகுமாரனா பெறந்திட்டு கேக்றான் பாரு கேள்வி,” என்றதும் சிரிப்பொலி எழுந்தது.

அபிமன்யூவின் கைகள் வேகமாக பாயும்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்தன.பயல் தானும் கைகளை அவ்வாறு வைத்துக்குதித்தான்.

“அதா தெரியுதே பச்சமலை கூட்டம். அதுல ஒத்த மலையில பிறந்தேன்.மலையிலருந்து காத்துல தாவி ஏற ஆசப்பட்டேன். மரத்தையெல்லாம் தாவித்தாவி காட்டை அளந்தேன்… ஆமா காட்டை அளந்தேன்..”

பாட்டா கண்களை இடுக்கியபடி அவனைப்பார்த்தார்.

“காட்டுக்குள்ள ஓயாத குருவி சத்தம்.பாத்தா என்னஒத்த பயலுக அம்புவிடுறானுங்க.ஒழிஞ்சிருந்து பாத்து..பாத்து…நானும் அம்பு விட்டேனாக்கும்,”என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.பயல் கைத்தட்டி குதித்தான்.

“பேரரசன் நான்..ஆமா பேரரசன் நான்…பத்து உடன்பிறந்தவர்களுடன் படையாளும் பேரரசன் நானே..”என்று இடையில் கைவைத்து நிலவொளியில் நிமிர்ந்து நடந்தான்.

“குடியுண்டு..தளராத படையுண்டு..பெண்டுண்டு..பிள்ளையுண்டு..நீருண்டு நிலமுண்டு…அவள் வரும் வரை என்னிடம் எல்லாமும் உண்டு..”என்று ஆர்ப்பரித்தான்.கை கால்களை மாற்றி மாற்றி அவன் ஒருவரிலிருந்து மற்றவருக்கும், ஒருகதையிலிருந்து மற்றொரு கதைக்கும் தாவிக்கொண்டிருந்தான்.

பாட்டா குரலை செறுமிக்கொண்டு கதையில வாழ்றவன்..கதையில ஜெயிக்கறான்..கதையில தோக்கறான்,” என்று பெருமூச்சுவிட்டார்.

அங்கங்கே கிடந்தவர்கள் உறங்கிப் போனார்கள்.கண்ணன் மல்லாந்துப் படுத்தபடி வானத்தைப் பார்த்தான்.பக்கத்தில் சோலை உடல்வலியால் அனத்திக் கொண்டிருந்தான்.பாட்டா மெதுவாக எழுந்து கண்ணன் பக்கத்தில் படுத்தார்.அவன் திரும்பி அவரைப் பார்த்தான்.

“என்ன பெருசு தூக்கம் வரலயா..”

அவர் தலையாட்டினார்.

“இந்தவயசுல சோளக்காட்டு வேலைக்கு ஒடம்பு தாங்குமா? எந்தூரு?”

“ராயப்பட்டி.வீட்ல சும்மா இருக்கமுடியல.படிச்சபயலா …வயக்காரவுகளுக்கு ஒறவா?”

“ஆமா.மோட்டார் ரிப்பேர் வேலைக்கு படிச்சேன்,”

“ஒடம்புக்கு என்ன?”

“ஒன்னுமில்ல.படிக்கற வயசுல பழகின பழக்கந்தான்.விடமுடியல,”

காற்றால் திசையழிந்து ஆடிய சோளக்காட்டின் சத்தம் விலங்கின் ஓலம் என கேட்டது.

“என்னா வேகம் பாரு.இப்ப சருகு ஒன்னொன்னும் சவரகத்தியாகும்,”

“அறுக்கறது தெரியாம அறுத்திரும்,”என்று புன்னகைத்தான்.

பின் அவனாகவே, “அப்பா தொரத்தி தொரத்தி அடிச்சாரு..கெஞ்சினாரு.நான் வீட்டவிட்டு ஓடினேன்.பிறவு வீட்ல நிக்கல.வரதும்..போறதுமா தான்,”

“ம்..பெத்தவ,”

“இல்ல.வெளியில போய் எங்கயும் நெலச்சு நிக்க முடியல பெருசு,”

அவர் உதட்டை பிதுக்கியபடி வானம் பார்த்தார்.

“இப்ப துணிக்கடை..”

“ம்…எல்லா ஒடம்பும் ஒன்னுல்ல தம்புடு.சிலது தாங்கும்..சிலது சீரளியும்.நானும் நாலு ஆம்பிளப்பிள்ளைகள பெத்தவனாக்கும்,”

கண்ணன் திரும்பி அவர் முகம்பார்த்துப் படுத்தான்.

“மூத்தப்பிள்ளைக்கு போதை ஆகாது…சின்னவன் ஒடம்பு இரும்பாக்கும்.இதெல்லாம் சின்னதுலருந்து தொட்டு தூக்கி அணச்சு வளக்குறப்பவே நுணுக்கமான தகப்பனுக்கு வெளிச்சமாயிரும்.இவனுகளுக்கு பொண்ணு பாக்கறப்ப எங்கவூட்டு ஆயா என்னயதான் கேக்கும்.இவனோட நுவத்தடிக்கு இந்தப்பிள்ள ஈடுவைக்குமான்னு,”

கண்ணன் சிரித்தபடி, “ஈடா கெடைக்கனுமானா யாருக்கும் கல்யாணம் கைகூடாது..”என்றான்.

“ச்..ஈடுன்னா அப்படியில்லடே.நடுவுலவன் கோவத்தை தூக்கி தலையில வச்சு நடக்கிறவன்.அவனுக்கு தணிஞ்ச பொண்ணு வந்தா நல்லது.அடுத்தவன் பதட்டக்காரன் அதுக்கு தைரியமான பொண்ணு கொண்டுவந்தோம்.அந்தப்பிள்ள பேசினான்னா என்னாலயே மறுத்துசொல்ல முடியாது..”

கண்ணன் தலையாட்டினான்.

“அன்னைக்கி அவனுங்க எஞ்சொல் கேட்டுக்கிட்டானுங்க தம்புடு..இன்னிக்கி நெலம வேற,”

கண்ணன் ஒன்றும் பேசவில்லை.

“கெட்டவன் கெட்டான்னா ஒன்னுல்ல.நல்லவன் வீட்ல ஒருத்தன் கெட்டான்னா ஊர்க்கண்ணுல நிக்கறது பீஷ்மரு களத்துல கெடக்கது போலயாக்கும்…”

பின் யாருக்கோ சொல்வதைப்போல,“ஊருக்குள்ள நல்லபழக்கவழக்கத்தில பேர்வாங்கின மனுசனுக்கு மகனா பெறக்கறது கெட்டவிதி தெரியுமா?” என்றான்.பாட்டா பெருமூச்சுவிட்டபடி வானத்தைப்பார்த்தார்.விண்மீன்கள் அடர்ந்திருந்தன.இரவு கடந்து கொண்டிருந்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.