கமல தேவி

‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்

கமல தேவி

சாரதியிடம் அதே கேள்விகளுடன்

யுகங்கள்தோறும் கேள்விகள் மாறவில்லையென
கேட்க நினைக்கும் கணம் தோன்றுகிறது…
அதனாலென்ன…
பதில்கள் மாறலாமில்லையா?
“வருவேன்” எனச் சொன்னவன்
அதிகாலை நீலத்திலிருந்து திரண்டு வந்தான்
புன்னகைத்தான்…
மரியாதை கருதி புன்னகைத்துவிட்டு,
ஆக வேண்டியதைப் பார்த்தேன்…சொல் திரண்டது,
“அவமானம், வஞ்சகம், துரோகம்
இவற்றின் முன் என்ன செய்வேன்?”
புன்னகைத்தவனைக் கண்டு “மாயம் வேண்டாமென”
குரலுயர்த்த நினைக்கையில்,
அவன் சுட்டு விரல் நீண்ட திசை பார்த்தேன்,
தன்னியல்பில் இலையுதிர்க்கும் மரம்,
புன்னகைத்துத் திரும்புகையில்
வானத்தின் நீலம் வெளிறி
ஆதவன் கரங்கள் நீட்டத் தொடங்கியிருந்தான்.

oOo

இருப்பு

விளக்குகள் அணைந்த நேரத்தில்
பயணத்திற்கான முதலடியை வைத்தேன்.
திரும்புவது எளிதுதான்,
திரும்பாததைப்பற்றி என்ன சொல்ல
திரும்பவில்லை என்பதைத் தவிர.
மெல்ல அடுத்த அடி.
ஔியின்மையில்
காலமும் இல்லாமலாகுமா?
எடுத்து வைத்த அதே அடியில்
நிற்பதாய் பதட்டப்பட்டு கொண்டேயிருந்தேன்.
காலமற்ற காலத்தில்
தூரம் அர்த்தப்படாத பாதையில்
மிக மெல்லிய ஔிக்கீற்று
முதலில் புள்ளியென்று இருந்தது.
பின் ஔிப்பூவென..!
மலர்தலின் கணத்தை அறிந்த ஒன்றே
காத்திருக்கிறது மலர்தலுக்காக எனில்
சொல்ல என்ன உள்ளது!
அதன் பின்னால்
அனைத்தும் காத்திருப்பதாய் தோன்றியது.

நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை

கமல தேவி

இளம்காலை

விடுதியின் வாயிலில் நின்ற என் தோளில் சங்கரிதான் கை வைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான, சற்று தண்மையான கைகளின் தொடுதலுக்கு நெக்கியது உடல். தொடக்கத்தில் சங்கரியின் தொடுகை, நண்பர்களிடம் தயக்கத்தை, சிறு பதட்டத்தை ஏற்படுத்தியது. பின் அதுவே இயல்பானது.

பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு நிமிர்ந்த சங்கரியிடம் நான், “மலரக்கா வரலயா?” என்றேன்.

”அவங்க வரல சாந்தினி,” என்ற சங்கரி, வாயிலவரிடம், “அண்ணா… ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேன்,” என்றபடி படியிறங்கினாள். நாங்கள் நடந்து சென்ற சிமெண்ட் பரப்பில் வெயில் ஔியாய் விரிந்திருந்தது.

“சாப்பிட்டியாம்மா?” என்ற அவரின் குரல் கேட்டு சங்கரி திரும்பி புன்னகைத்து தலையாட்டினாள்.

வடக்காக சாலையைக் கடந்து பேருந்து நிலையத்தின் காந்தி சிலையருகே நடந்து கொண்டிருக்கையில், நேர்க்கோட்டில் தொலைவில் கண்களில் பட்ட  பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தைக் கண்டதும், “மழை வராப்ல இருக்கு, சீக்கிரம் வேலைய முடிக்கனும். வழியில் எதாச்சும் கோயிலுக்கு போயிட்டு போலாம்,” என்றேன். மனதில், இந்த அவசரத்தில் எதுக்கு போகனும், என்று தோன்றியது.  பாலாம்பிகை கோயிலிலிருந்து வெளியேறுகையில் சாலையில் காலைக் கூட்டம் கலைந்திருந்தது.

பாரதி சாலையில் மரத்திலிருந்து உதிர்ந்த அடர்சிவப்பு காகிதப்பூக்களை தரையெங்கும் துரத்திக் கொண்டிருந்தது ஆடிக்காற்று. தரையெங்கும் ஔி ஊடுருவும் கண்ணாடி இதழ்கள் அடர்சிவப்பு சிறகுகளாக பறக்க எழுவது போலிருந்தன.

சங்கரி, “லீவில இன்னிக்காவது சுடிதார்ல வந்திருக்கலாம். புடவையில வான்னு கண்டிப்பா சொல்லிட்ட,” என்றாள்.

“இன்னக்கி வேலை அப்படிடா,” என்றேன்.

“நேத்து காலேஜ் முடிஞ்சி வரும்போது என்னோடவும், மதியக்காகிட்டவும் பேசின. அப்ப கேட்டா… கடிச்சு குதறுவன்னு விட்டுட்டேன். என்ன அவசரம்?”

“ஒரு வாரமா பேசிதான் பிரியலான்ற முடிவுக்கு வந்தோம். ராஜ்க்கு டைம் தேவைப்படுது. அவன் எதுவுமே கடைசி முடிவில்லன்னு சொல்ற டைப். நான்தான் இன்னக்கி ஹாஸ்டலுக்கு போலான்னு முடிவெடுத்தேன். இன்னக்கிவரை அவனோட பைசாவிலதான் எல்லாம். நான் வெளிய போறதுதான் சரியாயிருக்கும்,” என்றேன்.

முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி நடந்து, அபி மெஸ்ஸில் தேநீர் குடித்துவிட்டு நகைக்கடைக்குள் சென்றோம். பழைய நகை வாங்குமிடத்தில் கூட்டமில்லை. அமர்ந்து பையிலிருந்து சங்கிலியை எடுத்துக் கொடுத்தேன். அப்பாவின் சிறு சேமிப்பு கணக்கு முடிந்ததும் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கையில் வாங்கித் தந்தது. இதே போல ஒரு கடையில், விரித்த பாயில் அமர்ந்து தேர்வு செய்து கழுத்தில் விழுந்த முதல் சங்கிலி.

கடைக்காரர், “மூணு பவுனுக்கான காசும்மா… பாத்து எடுத்துட்டுப் போங்க,” என்றார்.

வங்கிக்கு சென்று என் கணக்கில் பணத்தை சேமிப்பில் வைத்துவிட்டு, மீதிப்பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கரியிடம், “இன்னைக்கு செலவுக்கு, இந்த மாசத்துக்கான கைச்செலவுக்கு போதுமாடா,” என்று நான் கேட்டேன். அவள் தலையாட்டினாள். இருவரும் வங்கியிலிருந்து சாலைக்கு இறங்கினோம். வியர்வையை மறுமுறை துடைக்கையில் பதட்டமாக இருப்பதை உணர்ந்து மூச்சை இழுத்துவிட்டேன்.

வெந்தய நிறச் சேலையில் என் தோள் உரசி, பின் நகர்ந்து நடக்கும் இவள் ஏன் நான் அழைத்ததும் வர வேண்டும்? சங்கரியுடன் அப்படி ஒன்றும் நீண்டகால நட்பில்லை. ஒரு ஆண்டாகத்தான். ராஜ்க்கும் எனக்குமான பொதுவான தோழி என்பதாலா? அதையே காரணமாக்கி இவள் தப்பித்திருக்கலாமே, என்று நினைத்தபடி நடந்தேன்.

“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”  என்றேன்.

“கேளுப்பா”

“தொட்டுப் பேசறது என்ன பழக்கம்? ஏன் அப்படி?” என்று கேட்டேன்.

உதட்டைக் கடித்தபடி சிறிய யோசனைக்குப் பிறகு அவளுக்குரிய இனிய முகத்தோடு, “சின்னதில இருந்து சரியா யாருட்டயும் பேச மாட்டேன்… பேச ஆரம்பிச்ச பிறகு சரியாயிடும். நான் சரியா பேசலன்னாலும், தொட்டு பேசறப்ப அது சரியாகிடும்,” என்றாள்.

“நம்ம பசங்க முதல்ல மிரண்டுட்டாங்க தெரியுமா?”

“அவங்க முகத்திலயே தெரியும்… நான் எல்லாருட்டயும் கைய நீட்டறதில்லயே,” என்று சிரித்தாள்.

“இந்த மனுசங்க அன்புக்கு பயப்படற கூட்டம்ன்னு காந்திக்கு, புத்தருக்கு, யேசுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு,” என்றேன்.

“வந்த காரியத்த பாப்போம். நாளைக்கு உக்காந்து பேசலாம்,” என்றாள்.

“அப்படில்லாம் திட்டம் போட்டு பேச முடியுமா? தோணும்போது பேசலேன்னா… அப்படியே போயிடும்,” என்று நான் முடித்த பிறகு இருவரும் அமைதியாக நடந்தோம். நான் இத்தனை இயல்பாக இந்த நாளை எதிர்கொள்வது உள்ளுக்குள் மனக்கலக்கமாக  இருக்கிறது. உண்மையிலேயே எனக்கு கல்மனதுதானா? இருக்கும். இவனுக்காக அப்பா, அம்மாவை உதற முடிந்தால்,எனக்காக இவனை உதறுவது இயல்பானதுதானே. ஒன்றை உதறிய பிறகு இன்னொன்று எளிது போல. பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் ஒலி என்னைக் கலைத்தது.

அன்னை விடுதியிருந்த சங்கு ரோட்டுக்கு நாங்கள் திரும்புகையில் வெயில் ஏறியிருந்தது. வெயிலில் கண்கள் கூச மண்டையில் வலிய தொடுகையாய் சூடு அழுத்தியது. அதை வெல்ல இருவரும் தலையை குலுக்கிக் கொண்டோம். முந்தானையின் மெல்லிய பறத்தல் தொந்தரவு செய்ய சங்கரி நுனியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

நான் நினைப்பதைப் போல முந்தானையை இடையில் சொருகுவதை நாகரீகக் குறைவாக அவள் நினைப்பதில்லை. இதுவும் அழகுதான் என்று நினைத்து பார்வையை திருப்பினேன். மனம் அந்த தெப்பக்குளத்தின் ஒரு பள்ளத்தில் நிற்கும் நீரென அசையாமலிருக்கிறது. ஆனால் அந்த நீர் எந்தக் கண்களுக்கும் தெரியாமல் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

பின்காலை

சாந்தினிக்கு எதையும் உணர்த்தாத முகபாவம். வெயிலில் காய்ந்து உதடுகளை முன்பற்களால் அழுத்தி மடித்திருந்தாள். சாலையை வெற்றுக்கண்களால் பார்த்தபடி நடக்கிறாள். நிதானமாகத்தான் எல்லாம் செய்கிறாள். ஆனால் கோட்டுக்கு வெளியே, இல்லையில்லை கோட்டுக்கு வெளியே என்று நான் எப்படி சொல்ல முடியும்? இந்த சூழலில் நானாக இருந்தால்…? அப்படி நினைக்கவே வழியில்லை. எந்த வகையிலும் நானல்ல அவள்.

விடுதிக்குள் நுழைகையில் நிழல் வந்து தழுவிக் கொண்டது. இருவரும் வாயால் காற்றை ஒருமுறை வேகமாக ஊதிக் கொண்டோம். எங்கள் தெருவிலிருக்கும், எண்பதுகளில் கட்டப்பட்ட வீடுகளின் சாயல் தெரியும் கட்டிடம். நிறம்கூட வெண்மை கலந்த பச்சை. ஆனால் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருந்தது.

விடுதி காப்பாளர், “காலேஜ் ஜ.டி. கேட்டிருந்தேனில்ல,” என்றவுடன் சாந்தினி கொடுத்தாள்.மேலும் பல விவரங்களைக் கேட்டுவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து வாங்கினார். சன்னலின் வழி ஔிப்பட்டைகள் சரிய மிக மெல்லிய இருளில் இருந்தது அந்த அறை.

“சாயுங்காலம் லக்கேஜ் எடுத்துட்டு வந்து தங்கிக்கறேன் மேடம்,” என்ற சாந்தினியிடம் விடுதி காப்பாளர், “இப்ப எங்க இருக்கு?”என்றார். விடுதி காப்பாளர்களுக்கு என்று ஒரு பார்வை வந்துவிடும் போல. கிட்டத்தட்ட எதிர்வீட்டு பாட்டியின் பார்வை போல ஒருவித பார்வை.

“காலேஜ் ஹாஸ்டலுக்கு முதல்ல வந்ததால அங்க வச்சிட்டு வந்திருக்கேன். கோர்ஸ் முடியற சமயங்கறதால இடமில்லனுட்டாங்க,” என்றாள்.

அவர் புன்னகையுடன் தலையாட்டியது நிம்மதியாக இருந்தது. மீண்டும் இந்த சிறுநகரத்தின் குடியிருப்பு சாலைகளில் நடந்து, கார்டன் சாலையினுள் நுழைந்தோம். ஐந்தாம் சந்தில் இத்தனை சஞ்சலத்துடன் நுழைவது இதுதான் முதல் முறை. வானம் அடைத்துக் கொண்டிருந்தது .மழைக்கு முன்னான புழுக்கம் எரிச்சலை உண்டாக்கியது.

முதல் வீட்டின் ஜிம்மி ஆளைக் கண்டுகொண்ட உவகையில் கேட்டிற்கு பின்புறமிருந்து எம்பி வாலையாட்டி நெளிந்து சத்தமெழுப்பியதைக் கண்டு புன்னகைத்துச்செல்லமாக, “ச்சூ..ச்சூ,” என்றேன். எட்டாம் வீட்டின் மேல் தளத்து இல்லத்தில் ராஜ் தட்டில் கைகழுவியபடி, “வா சங்கரி,” என்றார். சாந்தினி எடுத்து வைத்திருந்த பைகளை வெளியில் கொண்டு வந்து வைக்கத் தொடங்கினாள்.

ராஜ் என்னிடம், “ரசம் மட்டும் இருக்கு. சாப்பிடு சங்கரி,” என்றபடி நீண்ட உணவு மேசையின் வலதுபுறமிருந்த கையடக்க கணினி முன் அமர்ந்தார்.

நான் நிமிர்ந்து சாந்தினியை பார்த்தேன். யாரையும் கவனிக்காமல் வீட்டில் மறந்த ஒன்றை தேடியபடி இருந்தவள்,“சாப்பிடு சங்கரி,”என்றாள்.

“வேண்டாண்ணா,”என்று ராஜ்ஜிடம் சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்றேன். வெளியில் வரும்பொழுது அவர்கள் இருவரும் வெளியே நிற்கவும் நான் உள்ளே உணவு மேசை முன் அமர்ந்தேன்.

சாந்தினி, “ராஜ்.. ஹாஸ்டலுக்கு போறேன்… அடுத்தது என்ன பண்ணலாம்?” என்றாள்.

“கொஞ்ச நாள் கழிச்சு யோசிக்கலாம். அவசரமில்ல”

சிறிது நேர அமைதிக்குப்பின் சாந்தினி, “எதாவது சொல்லனுமா?” என்றாள்.

“ஒன்னுமில்ல. உனக்கு?”

“இது இந்த வீட்டோட இன்னொரு சாவி. இன்னும் ஒரு மாசத்தில பரிட்சை முடிஞ்சிடும்.வேலைக்கு போனதும் படிக்கறதுக்காக நீ செலவு பண்ணின பைசாவை திருப்பித்தர முயற்சி பண்றேன்,” என்று ராஜிடம் சாவியைத் தந்துவிட்டு உள்ளே வந்தாள். அவள் உள்ளே சென்றதும் நான் ராஜின் அருகில் வந்து நின்றேன்.

“வேகமா வேல நடக்குது போல,” என்றார்.

“நாளக்கி காலேஜ் போகனும்… அதான்”

“எதுவுமே கேக்க மாட்டியா?”

“சரி… என்ன?”

“என்ன… என்னன்னா?”

“நீங்களா முடிவெடுத்த பின்னாடி என்ன சொல்ல?”

“அவ எடுத்தா… நானில்ல”

ராஜ்,“யாராயிருந்தாலும் மெல்லியகோடு ஒன்னு இடையில இருக்கனுமாம்,” என்றார். மெல்லிய சலிப்பும், கசப்பும் அவர் குரலில் தெரிந்தது.

ராஜ்ஜின் சலிப்பான குரல் என்னுள் குத்திக் குமிழியிட, “ம். நீங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அவ எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லியாகனுமா? உங்ககிட்ட  எவ்வளவு ஜென்டிலா நடந்துக்கறா. எடுத்த வேலைக்கும், சொல்லுக்கும் பிடிச்சு பிச்சுத் திங்கனும். அதுக்கு பேர்தான் அன்னியோன்யம். இவ ஒரு மாடர்ன் லூசு. உங்கம்மா மாதிரி இவ தேவதையா இல்லேன்னீங்களாமே? சரி… உங்கப்பா அவர் அவரோட பிரதாபங்களோட இருப்பாரு. அவங்க என்னன்னாலும் தேவதையா இருந்திருப்பாங்க. நீங்க உங்கப்பா மாதிரிதான் இருப்பீங்கன்னா இவள எதுக்கு லவ் பண்ணீங்க? பின்னாடியே டீன் ஏஜ்ல இருந்து சுத்தினீங்களாமே?” சற்று தணிந்து “அவ பாட்டுக்கு அவ உண்டு, அவ புத்தகங்களுண்டுன்னு இருந்திருப்பா” என்றேன்.

ராஜ் குரலை உயர்த்தி, “தங்ககம்பிகளா… அது ஏதோ ஒரு பேச்சுவாக்கில சொன்னது. கொஞ்சம் புரியலதான். முன்னபின்ன அம்மா, அக்கா, தங்கய வச்சிதானே பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியும்? ரெண்டுவருஷமா இவ… காணாதத கண்டது மாதிரி நல்ல ப்ரண்டுன்னு நீ ஒருத்தி”

இருவரும் சிறிதுநேரம் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“சங்கரி… அந்த முடக்கில வீட்டு நிழல் பக்கம் ஆட்டோ நிக்குது பாரு,”என்றபோது ராஜ்ஜின் குரல் ஆழத்திலிருந்தது.

நண்பகல்

குடியிருப்புச் சாலை ஓரத்து மர நிழல்களில் நடந்து செல்லும் சங்கரியின் வயிற்றுப்புண்ணை, பசி தைப்பதை என்னால் உணர முடிந்தது. பசி தாங்க முடியாதவள் .சாந்தினியும் காலையில் சாப்பிட்டாளா என்னவோ? ஏனோ அதிகம் சாந்தினியிடம் பேசாமலிருப்பது ஆறுதலாக இருப்பதை நினைத்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவிலிருந்து சங்கரி இறங்கி வந்தாள். அவள் பேசுகையில் முகம் தீட்டப்பட்ட கற்களாக மாறி மாறி தெரிந்தது மனதில் வந்து போகிறது. ஒருத்தியே இத்தனையாக ஒரு பேச்சில் மாற முடியுமா? அதான் முடிகிறதே என்று நினைத்தபடி கீழே பார்த்தேன்.

பைகளை பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி எதையோ தேடிக் கொண்டிருப்பவள் போல இருந்தாள். உள்ளே சென்றுவிடலாம் என்று இந்த அரைமணியில் எத்தனையோ முறை நினைத்தும் நான் செல்லவில்லை. ஆறு மாதமாக பிரிவது பற்றி நினைத்திருந்திருக்கிறாள். அப்படி என்ன காயப்படுத்திவிட்டேன்? அவளும் பொறுமையாக சிந்திப்பவள்தான். என்ன நாடகம் இது? உண்மையில் செல்கிறாளா? அவள் செல்லமாட்டாள் என்று உள்ளே ஆணித்தனமாக ஒன்று சொல்லிக்கொண்டிருந்த துணிச்சலில் கொஞ்சம் பெரும்போக்காக இருந்தேன்… அவளும் சில நாட்களாக அதையே செய்கிறாள். எதுவுமே பெரிய விஷயமில்லை என்பதைப் போல. எப்போதும் கையை பிடித்துக் கொண்டே இருப்பவள் எப்போது அதை நிறுத்தினாள்? “போறேன்,” என்று அவளும், “போனா போ,” என்று நானும். இது சாத்தியமா? இடையில இந்த சங்கரியும் இந்தக் கிறுக்கில தல சுத்தி தடுமாறி போறா .விளையாட்டாக சங்கரி,“உங்களோட சங்காத்தத்தை விட சைக்காலஜி தேவலாம்,” என்பாள்.இன்னக்கி அவ சொல்வது சரியாயிடும் போல.

சாந்தினி, “சங்கரி… ஆட்டோல கொண்டு வை,” என்று பையை நீட்டிவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றாள். இருவரும் ஒருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார்கள்.

நான் மாடிப்படிகளின் இடையே நின்றேன். செவ்வரிகளோடிய இந்தக் கண்கள் சொல்லிய அனைத்திற்கும் தலையாட்டிய நான் பழக்கதோஷத்தில் இதற்கும் ஆட்டிவிட்டேனா? உள்ளிருக்கும் மூளையும் அவள் பேச்சில் சமாதானமாகிவிட்டது. இது எப்பவுமே இப்படித்தான். அழகு ஒருபுறமும், அறிவு மறுபுறமும் என்னை அலைகழித்து நிற்க வைத்திருக்கிறது.  யாருக்கோ நடக்கறத பாக்கறாப்ல எனக்கு நடக்கறத தள்ளி நின்னு யோசிக்கறேன். ஏதாவது அவக்கிட்ட சொல்லுடா என்ற மனதின் சொல்லுக்கு முன்போல தடுமாறி நிற்கவில்லை நான். அவளை, அவளே சொல்வதைப் போல ஒரு வாரமாக பிரித்து நினைப்பது புதிதாக இருக்கிறது. காதலியோ,மனைவியாகவோ ஆவதற்கு முந்தைய சாந்தினி!… வசீகரி! மறுபடியும் ஒரு சுற்று வர வேண்டியிருக்குமோ?

ஓங்கி ஒரு அறை விட்டு இழுத்து வர ஆத்திரம் வந்தது. அவ்வளவுதான், “சேவனிஸ்ட்,” என்று அனைத்திற்கும் தலைமுழுகிவிடுவாள். முந்தாநாள் பேசிக் கொண்டிருக்கையிலேயே என்னை தோளைப் பிடித்து தள்ளிவிட்டுப் போனாள். இதை யாரிடம் சொல்வது? ஏதோ ஒன்றை தவறவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதை கண்டடைய வேண்டும். என் முன்னவர்கள் பெண்களின் ஆழம்பற்றி உணராத ஒன்று. பயல்கள் அந்த வயதிலேயே சாந்தினியிடம் கண்ட ஒன்று. என் மனம் உணர தவிர்த்த ஒன்று.

அவர்கள் ஆட்டோ ஏறும் வரை என்ன செய்வது என்று ஆடிக்கொண்டிருந்த மனதின் துலா நின்றது. தெருவைப் பார்த்தேன். முடக்குத் திருப்பத்தை ஆட்டோ கடந்தது.

சாயுங்காலம்

சாலையெங்கும் வெயில் சுமந்து வதங்கிய மஞ்சள் பூக்கள் அசைவற்றுக் கிடந்தன. ஆட்டோவின் சத்தமின்றி எதுவும் இல்லை என்று நினைத்த வேளையில் நகரின் மைய சாலைகளில் இறங்கிய ஆட்டோவின் சத்தம் சந்தடிகளில் கலந்தது. பிற்பகலை கடந்த நேரத்தில் விடுதியிலிருந்தார்கள்.

முதல் தளத்திலிருந்த கடைசிஅறையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கையில் சங்கரி, “எல்லாம் சரி. இப்படியே இருக்க முடியுமா?” என்றாள். சிறிய அலமாரிகள். சன்னல், கதவு என்று அனைத்தும் சிறியவை. லக்கேஜ் பேக், சூட்கேஸ் மாடல்களுக்கு பொருந்தாத அறை. ஆனால் இந்த அறையில் ஏதோ ஒன்று ஈர்க்கிறது.

சாந்தினி, “தெரியலடா… இப்பக்கி கோர்ஸை முடிக்கனும். முடிச்சதும் பக்கத்தில கண்டிப்பா வேலை கிடைச்சுடும். ஊருக்கு எப்படிடா போறது. கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு.ராஜ்க்கு பிரச்சனையில்ல…”என்று எங்கோ ஆழ்ந்தாள்.

“ஆனா நீ இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். எனக்கு நீங்க ரெண்டு பேருமே நல்ல கணவன் மனைவிதான் இப்ப வரை”

சாந்தினி பேசவில்லை. சங்கரி,“நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, நீங்களா பிரியறீங்க. ஆனா இது இப்படி இவ்வளவு சிம்பிளான விஷயமா என்ன?” என்றாள்.

“தெரியலடா. ஆனா எங்கயோ பாதையில்லாத எடத்தில முட்டிக்கிட்ட மாதிரி ரொம்ப தடுமற்றமா இருந்துச்சி”

“ம்”

“உங்கிட்ட முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப கோவிச்சுகிட்டோம்”

சங்கரி, “நம்ம அப்பா அம்மால்லாம் அப்படித்தானே. இதுல என்ன இருக்கு,” என்றாள்.

“அம்மாவுக்கு தனியா ஒரு இடம் தேவைப்படல. இல்லன்னா அவங்க அத வெளிக்காட்டிக்கல. எனக்கு சின்னதா என்னோட ஸ்பேஸ் வேணும். அது ராஜ்க்கு புரியல”

“நம்ம இன்னும் அந்தளவுக்கு வளரலயே. விட்டு கொடுத்தா என்ன?”

சாந்தினி,“எதுக்காக?” என்றாள்.

“உன்னோட நல்லதுக்காக… சும்மா இதெல்லாம் இளமையோட அகங்காரன்னு தெரியலயா? தனியா இருக்கிற பெண்களுக்கு சமூகம் காட்ற முகம் வேறமாதிரி இருக்கும்”

“ம். சரிதான். ஒன்னுக்கு பயந்துக்கிட்டு இன்னொன்னுக்கு அடிபணிய சொல்றியா?”

“அப்படி இல்ல?”

சங்கரி, “பின்ன எப்படி?” என்றாள். சாந்தினி சிறுது நேரம் அமைதியாக இருந்தாள். உள்ளபடி தன்னை திறக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள்.

“எல்லாரும் வாழத்தான் பிறந்தோம் சங்கரி. பெரும்பான்மை மனுசங்க சொல்றதுதான் சரிங்கறது சரியா?”

“பெரும்பான்மை சரின்னு சொல்ல முடியாது. ஆனா நம்ம உருவாக்கி வச்சிருக்கற வாழ்க்கை அது சார்ந்தது தானே?”

“ரொம்ப சரி. ஆனா நான் வலியவள்ன்னு வச்சுக்க. உன்னப்போல பயந்துக்கிட்டே இருக்க முடியாது. இப்பத் திருத்தின மாதிரி, தவறுகள் நடந்தா திருத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன். இதுதான் வாழ்க்கை, இதுதான் மகிழ்ச்சின்னு மத்தவங்க சொல்லக்கூடாது. நாம சொல்லனும். அறிவிருக்கு அதுக்கு மேல மனசிருக்குல்ல அத பயன்படுத்தனும். உன்ன மாதிரி சேஃபர் ஸைடு வாழ்க்கை எனக்கு ஆகாது. உன்னக் கேட்டா புராணம் வாசிப்ப… அந்த புராணங்களிலும் வாழ்ந்தவங்களவிட தன் மனம் சொன்னத செஞ்சி வீழ்ந்தவங்களுக்குதான் அதிக இடமிருக்கும்”

“ராஜ் அப்படி என்ன தப்பு செஞ்சார்?” என்று அலமாரி பக்கமிருந்து திரும்பிய சங்கரி இரும்பு கட்டிலில் அமர்கையில் அந்த ஈர்ப்பு அவளுக்கு புலப்பட்டது.

“நான் ஒரு தனி மனுசின்னு அவரால நினைக்க முடியல. ஒருநாள் காலேஜ் முடிஞ்சி தெப்பக்குளத்துப்படியில நேரம் காலம் தெரியாம உட்காந்துட்டேன். இவன் தேடி இருக்கான். எனக்கே ஏன் அவ்வளவு நேரம் அங்க இருந்தேன்னு தெரியல.ம னசு சில நேரம் நின்னு போயிடும். அது அப்பா அம்மாக்கு நல்லா தெரியும். என்னய எதும் கேக்க மாட்டாங்க. இவன் வீட்டுக்கு வந்ததும் என்ன ஏதுன்னு துளச்சி எடுத்துட்டான். அங்க ஆரம்பிச்சது எல்லாம்….”

“அன்பானவர்”

சாந்தினி,“ரொம்ப… அது மட்டும் போதுமா?” என்றாள்.

சங்கரி புன்னகைத்தபடி, “நான் கிளம்பட்டுமா? மழ வராப்ல இருக்கு. இருட்டிகிட்டு வருது,”என்றாள்.

“நானும் வர்றேன்”

“கொஞ்சம் முன்னாடி பேசின சாந்தினியா இது?”

“அதுக்குன்னு? சங்குமுடக்குக்கு அஞ்சுக ன்னு ஆத்மை சொல்றா .கேட்டுக்கணும். பின்ன நீ கொஞ்சம் ஓடுற நாய்…”

சங்கரி, “ம். எனக்கு வேணும். காலையில இருந்து பசியோட இருந்தா… ஓடித்தானே ஆகணும்,” என்று சிரித்தாள்.

சாந்தினி, “ராஜ் சாப்பிட சொன்னப்ப சாப்பிட்டுறக்கலால்ல. ரசம் நல்லா வைப்பான்,” என்றாள்.

சங்கரி, “என்ன ஜோடி நீங்க?… புரியல,” என்றபடி செருப்பை மாட்டினாள். மீண்டும் மேலே வெள்ளை, இடையில் சிவப்புப்பட்டை, கீழே வெண்பச்சை நிறங்கள் பூசப்பட்ட அந்த அறையை சுற்றி நோக்கினாள். நிறங்கள் மங்கியிருந்தன.

சாந்தினி, “காதல் கல்யாணம் பண்ணிப் பாரு,” என்றாள்.

“வேணாம் சாமி… உங்க காதல்ல்ல் .நான் ரிஸ்க் எடுக்க விரும்பல”

“நீயும் ஒருஆளுன்னு… வாழ்க்கய வாழ்ந்து கடந்து போகணும்… உனக்கு பசங்க ப்ரண்ட்ஸ் நிறைய உண்டுல்ல?”

“ஆமா. மனுசங்க முக்கியம்மா”

“ம்… ஆண்டாள் மாதிரி அச்சுதா, மணிவண்ணா வாடான்னு கெஞ்சப் போற பாரு”

“சாபம் குடுத்திட்டா உடனே விமோசன காரியமும் சொல்லிடணும்,” என்று சங்கரி சிரிக்க பேசிக்கொண்டே விடுதியிலிருந்து இறங்கி நடந்தார்கள்.

“ம்ம்… காதல்ங்கறது உயர்வுநவிற்சி அல்லது கற்பனைன்னு உணர்வாயாக,” என்று சாந்தினி சொல்லிக் கொண்டிருக்கையில் வானம் மெல்ல முழங்கியது. நடையை துரிதப்படுத்தினார்கள்.

இரவு

ராம் தியேட்டர் வந்ததும் காற்று மண்ணை வாரியிறைத்தது. அருகிலிருந்த மூடிய கடையின் கீழ் ஒதுங்கினார்கள். சாந்தினி பழக்கப் பார்வையாக எதிரேயிருந்த வளாகத்தைப் பார்த்தாள். ராஜ் நின்றிருந்தான். இவர்களை கவனித்திருப்பான். தியேட்டரும், ராஜுமாக சாந்தினி மனதிற்குள் ஒரு ரசவாதம்.

சட்டென்று அடித்துப்பெய்யத் துவங்கியது மழை. காற்றோடு இணைந்த கடும் மழை. கிழக்கு நோக்கிய மழை. அவன் முழுதாக நனைந்திருக்கக்கூடும் என சாந்தினி நினைத்தாள்.

நனைந்தக் குரலுடன் சங்கரி, “மழை வருன்னு நினைக்கல இல்ல,” என்றாள்.

“ஆடிமழை இயற்கைதானே சங்கரி”

“பேசிக்கிட்டே குடைய மறந்துட்டோம்”

“குடைக்கு அடங்காத காத்து மழை. எந்த திசையில் நின்னாலும் நனைக்கற மழை இது,” என்றாள் சாந்தினி. மழை “ சர்…சர்” என்று திசை மாற்றி மாற்றி சத்தமாக பெய்து கொண்டிருந்தது. இருளின் தனிமையில் தெரு விளக்கின் ஔியில் மழைத் தாரைகள் மினுமினுத்து ஒழுகின. மினுமினுத்து கரிய தார்ப்பரப்பில் வழிந்தன. விளக்குகள் அணைந்து கும்மிருட்டு சூழ்ந்தது. மின்னல் வெளிச்சத்தில் இடப்பக்க கழிவுநீர் கால்வாயில் அதே மினுமினுப்புடன் கரியநீர் சலசலத்தது.

“என்ன சங்கரி? ரோடு,மேடு, பள்ளம்ன்னு ஒன்னும் தெரியலயே? எப்பிடி இறங்கி நடக்கறது?”

“இரு சாந்தினி… வெளிச்சம் வரட்டும்,” என்றாள் சங்கரி.

மழை நின்று குளிர்க் காற்றடிக்கத் தொடங்கியது. காற்று குளிரை அதிகப்படுத்தியது. இருவரும் கைகட்டியபடி ஈரத்தில் படிந்த புடவையோடு வெளிச்சம் எதிர்நோக்கி நின்றிருந்தனர். ஒருமின்வெட்டில்  அவனும் அவ்வாறே எதிர்ப்பக்கத்தில் நின்றிருப்பது புலப்பட்டது. கோடாகி கிளை விரித்து மேலும் வளர்ந்து பெருவிருட்சமென வானில் ஔியாலான கிளைகளை வரைந்து நொடியில் அழிந்த கோபத்தில் உறுமியது. இருவருக்கும் திடுக்கிடலில் அடிவயிறு நடுக்கம் கண்டது. இருண்ட வானில் மீண்டும் மீண்டும் ஔி ஓவியங்களுக்கான போராட்டங்களும், சீற்றங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. சாந்தினி, “பெரிய போர் நடக்கற மாதிரி இருக்கு,” என்றபடி பின்வாங்கி நின்றாள்.

சங்கரி, “ அப்படி மட்டும் சொல்ல முடியாது…ஆடிப் பட்டம் பயிர் பச்சைக்கான பருவன்னு பெரியவங்க சொல்வாங்க,” என்றாள்.

இவர்களை நோக்கி வந்த ராஜ் இவர்களின் முகத்தைப் பார்த்து, “ஆடி மழ தொடங்குதில்ல… அதான் இவ்வளவு வேகமும். கொஞ்சம் பொறுங்க. போகலாம்,” என்றபடி அவர்களருகே நின்றான்.

சங்கரி, “இடி மின்னல் பயமாருக்குண்ணா,” என்றாள்.

ராஜ், “எனக்கும் திடுக்குன்னுதான் இருக்கு. அதான் மூணுபேர் இருக்கமில்ல. ஆளோட ஆளா இருக்கையில என்ன பயம்? பசியோட இருந்தா இன்னும் நடுங்கும், இன்னும் பயமா இருக்கும்,” என்று கைகளை தேய்த்துக் கொண்டான். அவன் புன்னகை அவன் குரலில் தெரிந்தது.

  நெடுஞ்சாலைப் பறவை – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மே வெயிலின் தாக்கம் காலையிலேயே தொடுகையென உறைத்தது. மெத்தையிலிருந்து எழுந்து சேலையை சரிசெய்து விடுதியின் முதல்தளத்தின் நடைபாதையில் வந்து நின்றேன். தொடுதிரையில் மாறும் நிறமென வானம் சட்டென்று ஔிக்கு மாறியது.

கிழக்கே பள்ளி மைதானத்தில் நாலைந்து ஆட்கள்  பந்தலைப் பிரித்து பின்னிய தென்னங்கீற்றுகளை ஒன்றின் மேலொன்றாக அடுக்கிக்  கொண்டிருந்தார்கள். தன்வசமில்லாத வேகத்தில் ஒருபயல் ஔியிலிருந்து ஏறுபவன் போல ஒரு தூணில் ஏறினான். கீழே ஔி ஒரு குளமென நின்றது. கையிலிருந்த கண்ணாடியை சேலைத் தலைப்பால் துடைத்து கண்ணில் மாட்டிக் கொண்டேன். பயலுக்கு கரிய மின்னும் முகம். அடர்ந்து படியாமல் தலைமுடி தலையைவிட தனியாகத் தெரிகிறது.

எனக்கான விழாவிற்கான பந்தல். இது போலொரு பந்தலை என் இருபத்தைந்து வயதில் வீட்டில் எனக்காக போட அப்பா ஆசைப்பட்டார். அறுபதை நெருங்கும் இந்தத் தருணத்தில் அன்று அறுபதிலிருந்த அப்பாவைப் புரிகிறது. இன்னேரம் எங்கோ சேலையை வரிந்து கொண்டு என் பேரப்பிள்ளைகளுக்காக அலைந்து கொண்டிருக்கலாம். எங்கு? என்று நினைத்ததும் அப்பா பார்த்த வரன்கள் சில பெயர்களாக நினைவிற்கு வந்தன.

கல்லூரிக்கு கிளம்புகையில் பெல் குடியிருப்பின் வெளித்தாழ்வாரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி அடிக்கடி மாமா சொல்வார், “இந்த வயசில  பசங்க யாரையாவது பிடிக்கலாம் ஜென்ஸி… அவனை ஏன் பிடிக்குதுன்னு யோசிக்கனும்?”

“இல்ல மாமா,” என்று சொல்லிவிட்டு திரும்பி சிறிய சுவர் கண்ணாடியில், முகத்தில் பவுடர் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன்.

“ கோபம் வருதில்ல? அதோட என்னோட கேள்வி புரியலதானே?”

“ஆமாம் மாமா.புரியல… என் மேல நம்பிக்கயில்லைன்னு எரிச்சலா வருது”

“எரிச்சல் வந்தா பரவாயில்ல. ஒன்ன நெனச்சுப் பாரு… ஒன்னோட ஒடன்பிறந்த ஐஞ்சு பேருக்கு கிடைக்காத படிப்பு உனக்கு வாச்சிருக்கு. அத வச்சி எதாவது செய்யனுன்னு தோணனும்,” வடிவான நாசியை தேய்த்தபடி ஆறடியில் குனிந்து அமர்ந்திருப்பார்.

“வேலைக்கு போறேன் மாமா”

“நான் சொல்றது அதில்ல ஜென்ஸி. நேரமாச்சு கெளம்பு,” என்பார். காலை வேளைகளில் வெளியில் செல்கையில்தான் இப்படியான பேச்சுகளைத் தொடங்குவார்.

வீட்டுக்கு வருகிறவர்கள் போகிறவர்கள் அந்தக் கண்ணாடியை பார்க்காமல் செல்வதில்லை. அத்தை, “யாரு வீட்லவாவது செருப்புகழட்ற எடத்துல கண்ணாடி உண்டா?,” என்று சலித்துக் கொண்டால் மாமா, “வீட்டுக்குள்ள நிழலாடுது… இல்லன்னா லைட்டு பளீர்ங்குது… இங்க பாத்தா நம்ம முகம் சரியா தெரியுதில்ல,”என்பார்.

ஞாயிறு கோவிலுக்கு போகையில் வருகையில் அத்தை, “ஜென்ஸிக்கு கிளாரா பையனை பாக்கலாமா?” என்று ஒவ்வொரு தடவையும் கேட்கையில் மாமா முகத்தைச் சுருக்கி, “படிக்கட்டும்…” என்பார்.

“படிச்ச பின்னதான்… நம்ம பக்கத்திலயே வச்சிக்கலாமில்ல?” என்று அத்தை திரும்பி மாமாவின் முகத்தைப் பார்த்து வாயை மூடிக் கொள்வார்.

படித்து முடித்து வேலைக்கு இங்கு வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வீட்டிலிருந்து திருமண பேச்செழுகையில் நான், “வேணாம்…” என்றதும் “ஒன்னூ கன்னியாஸ்திரியா போனும்… இல்ல கல்யாணம்,” என்ற வாதம் வருகையில், “நான் எதையும் துறக்க முடியாது. தள்ளி வைக்கதான் முடியும்,”என்று சொல்லுகையில் மாமா புன்னகைத்தார்.

அப்படியே ஆண்டுகள் உடன்பிறந்தாரின் திருமணத்தோடு ஓடிக் கடந்தன. கடைசி படுக்கையில் மாமா, “கிளாரா பையனை வேணான்னு மறைமுகமா சொன்னது எதுக்குன்னா… அவன் உன் ஒசரத்துக்கு, பாந்தத்துக்கு நிக்க மாட்டான்னுதான்… யாரோ உண்டுல்ல?”

“அதுக்கு இப்ப என்ன மாமா?”

“நீ என்னம்மா நெனச்சுக்கிட்டிருக்க?”

“சரியா தெரியல மாமா… நீங்கதானே சொன்னீங்க? ஏதாவது செய்யனுன்னு…”

“அதனால…”

“முழுசா செய்யனுன்னா தனியாதான் இருக்கனும்”

“யாரு அப்படி சொன்னாம்மா?”

“மனசு சொல்லுது மாமா”

“குடும்பத்துல சுயநலவாதின்னு பேர் வாங்கப்போற”

“பரவாயில்ல. என்னை உணர்த்தின நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்,” என்றதும் மாமா மேலே எதுவும் பேசவில்லை. தலையில் கை வைத்து, “எந்த வயசிலயும் இந்த முடிவு துயரம் தராததா இருக்க கர்த்தர் கூட இருக்கட்டும்,” என்றார்.

கீழே ஜெனிட்டா சிஸ்டர், “டீச்சர்… நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம். குளிச்சிட்டு சாப்பிட்டு இருங்க. நாங்க வந்திடறோம்,” என்றார்.ஜெனிட்டாவுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். காவிப் புடவை அத்தனை சரியா பொருந்துகிறது. அவரின் பழக்கமில்லாத பழுப்புக் கண்கள் யாரும் சொல்லாத எதையோ எதிர்நிற்பவரிடம் பேசுகையில் சொல்லும். சிஸ்டர் அவர்களுடன் நடந்து பள்ளி வாயிலைக் கடந்து இருபுறமும் வயல்கள் சூழ்ந்த பாதையில் நடந்து செல்வது தெரிந்தது. இன்றும் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும் இடம்.

கல்லூரி முடித்ததும் வேலை என்று இங்கு அழைத்து வந்த அன்று, ஆளில்லாக் காடு என்று இருந்தது. நீண்ட ஒற்றைக் கட்டடம். கொஞ்சம் தள்ளி தங்குவதற்கு இரண்டு சிறிய தகரம் வேய்ந்த கட்டடங்கள். பல ஆண்டுகளுக்கு எங்கோ பெரிய கங்குக்கு பக்கத்தில் இருப்பதைப் போன்றே இருந்தது.

மேற்கே தேவாலய கோபுரமும், அதன் பின்னால் கொல்லிமலையும், வீட்டின் பொருளாதாரமும் பிடித்து வைத்திருந்தன. தேவாலய மைதானத்திலிருக்கும் கெபியில் மத்தலேனாளின் எதையோ இறைஞ்சும் கரங்களும் கண்களும், பாதி மண்டியிட்டும் மீதி பின்னால் செல்லத் துடிக்கும் கால்களையும், விரிந்த கூந்தலையும் பார்த்துக் கொண்டேயிருந்த ஒரு கோடை விடுமுறை நாளில் தனித்தேயிருப்பது என்று உறுதியாக மனதிற்கு சொல்லிக் கொண்டேன். சிலையென்றாலும் மத்தலேனாலுக்கு கேட்டிருக்கக்கூடும் என்று அடிக்கடித் தோன்றும்.

முதலாண்டிலேயே படிக்க வந்த பெண்பிள்ளைகளின் திடுக்கிடும் விழிகளும், நீர்மை கொண்ட கண்களும், அவர்களின் தகப்பன்மார்களும் தாய்மார்களும், அவர்களின் சுபாவமும் மனதை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தன. பிள்ளைகள் பத்தாவது தேறி வெளியேறி ஆசிரிய பயிற்சிக்கும், சேவா வேலைக்கும், சத்துணவு பணிக்கும் செல்லத் தொடங்கியதும் எனக்கு தனிமை மறந்து, ஒட்டிக்கொண்ட  மகிழ்ச்சியும் துள்ளலும், வீட்டையும் ஊரையும் மறக்கச் செய்தது.

இத்தனை ஆண்டுகளில் துள்ளல் மாறி ஒரு அமைதி வந்திருப்பதன்றி வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை. நேற்றோடு இங்குள்ள அனைத்திற்கும் நிறைவு விழா. எங்கு சென்றும் மீண்டு வர இங்கு என்று ஒன்று இருந்தது. இங்கிருந்து எங்கு செல்ல? இங்கு வர அங்கு விட்டு வந்த எதுவும் இன்று அங்கில்லை. அங்கு நான் ஒரு விருந்தாளி மட்டுமே என்று நன்றாகத் தெரியும். நீண்ட நேரம் நின்றதால் கால்கள் நடுங்குவதை உணர்ந்ததும் மெதுவாக படிகளில் இறங்கி கழிவறைக்கு சென்றேன்.

உணவு அறைக்கு சென்றதும் அமலி, “ டீச்சர்… இன்னக்கி எழுந்திருக்க  லேட்டாயிடுச்சோ?” என்றபடி டீ கொண்டு வந்தாள். நீள் மூக்குக்கும், அவள் நிறத்திற்கும் சிறிய பொட்டு வைத்தால் மறுமுறை பார்க்க வைக்கும் அழகி. எத்தனை முறை சொன்னாலும் சரி என்பாள், வைக்க மாட்டாள். டீயைக் குடித்து விட்டு மைதானத்து எல்லையோரமாக நடக்கத் தொடங்கினேன்.

கையிலிருந்த அலைபேசியில் ஐெயராக்கினி அழைத்தாள்.

“கோயமுத்தூருக்கு எப்பக்கா வர்ற? அழச்சிட்டு போக மாமாவோட எப்ப வரட்டும்?”

“புதுசா என்ன ஜெயா? நான் வர மாட்டனா?”

“நீ எங்ககூட வந்திருக்கா… பிள்ளைங்க ஆளுக்கொரு திசையில நிக்குது. நிம்மதியில்ல…அவரும் ரிடையர்டு ஆகி வீட்ல இருக்காரு. கடைசி காலத்திலயாவது சேந்திருக்கலாம். மாமாட்ட பேசு…”

“ஜென்ஸிமா… எப்ப வரட்டும்?”

“வேணாம் மாமா. நானே வர்றேன்”. வைப்பதற்குள் தம்பிகள் அழைத்தார்கள். அவர்களும் கிட்டத்தட்ட அதையே பேசி வைத்தார்கள். அப்பா எனக்கு எழுதி வைத்த தென்னந்தோப்பை தம்பிகளுக்கு மாற்ற வேண்டும்.

காலைவெயில் உறைத்தது. முந்தானையை செருகிக்கொண்டு முடியை அவிழ்த்து கொண்டையிட்டபடி நடந்தேன். தெற்குபக்க கம்பிவேலியைப் பிடித்தபடி நின்றேன்.

தினமும் பார்க்கும் ராசுதான். என் வயதிருக்கலாம். இங்கு வந்த காலத்தில் அனைத்திற்கும் பயந்திருந்த நாட்களில் இவருக்கும் பயந்திருந்தேன். இவரின் மகள் என்னிடம் படித்தபோதுதான் எத்தனைக்கு வாஞ்சையான மனுசன் என்று தெரிந்தது. அவர் மண்வெட்டியை போட்டுவிட்டு வந்தார். தலைப்பாகட்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டார்.

“வாங்கம்மா. நேத்தோட வேலையிலருந்து விடுவிச்சுட்டாங்களாமே? ஊருக்குள்ள போஸ்டரு ஒட்டியிருந்தாங்க. பள்ளிக்கூடத்தில விருந்துன்னு சொன்னாங்க,” என்றார். வியர்வை முகத்தில் வழிய கைகள் இரண்டையும் அவர் சேர்த்து பிடித்துக் கொண்டு பேசினார்.

“ஆமாங்க,”என்ற என் இயல்பான தன்மை அவரை பேசத் தூண்டியிருக்க வேண்டும்.

“கட்டாத மயிரும், உங்க நெறமும் பாத்து மலையாளத்தாளுகன்னு நெனச்சிருந்தேனுங்க”

நான் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தபடி, “பக்கத்திலதான்,” என்றேன்.

“செத்த இருங்க…” என்று அருகிலிருந்த வேம்படியில் வைத்திருந்த சிறு பையிலிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து இரு கைகளிலும் ஏந்தி, “எடுத்துக்கங்கம்மா… இங்கன எப்பவும் வருவீங்கங்கன்னு பாத்திருந்தேன்,” என்றார். எடுத்துக் கொண்டபடி அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன்.

“பெத்தவங்க உண்டா?” என்றார்.

“இல்ல”

“மிச்சசொச்ச நாளுக்கு எங்கனு போகலானிருக்கீங்க? காலம் கெடக்கற கெடப்பில காச வச்சிக்கிட்டு, நோய வச்சிகிட்டு தனியா கெடக்கறது நல்லதில்ல”

“ம்..தம்பியோ, தங்கச்சியோ?”

“சரிதானுங்க… எனக்குத் தெரிஞ்சி பொறந்தவக்கூட இருந்துக்கறது நல்ல கூறு”

மெதுவாக சிந்தனையில் தலையாட்டியபடி , “போயிட்டு வரேங்க. பாத்து இருங்க,” என்றேன்.

“சரிங்கம்மா. எங்கன்னாலும் நல்லாயிருப்பீங்க… எத்தன பிள்ளைங்கள கரையேத்தி விட்டுருக்கீங்க…” அவர் மேலும் எதும் சொல்வதற்குள் தலையாட்டிவிட்டு நடந்தேன். மூச்சு வாங்குவதை உணர்ந்தவுடன் மரத்தடியில் நின்றேன். புங்கையில் பழுத்த இலைகள் தவிப்பதைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன்.

சுற்றி வந்து குழந்தை யேசு சிலையருகேயிருந்த பன்னீர் மரத்தடி பெஞ்சில் உட்காருகையில் நன்றாக வியர்த்து நனைத்திருப்பதை உணர்ந்தேன்.

“அமலி… மோட்டாரைத் தட்டி விடு,” என்று குரல் கொடுத்தேன். தண்ணீர் குழாயை குழந்தை யேசுவை வட்டமாக சுற்றி நின்றிருந்த பூச்செடிகளின் நடுவில் வைத்தேன். வந்து நின்ற அமலியிடம், “இந்த மொட்ட வெயிலிலும்  பூத்திருக்கா பாரு…” என்று கனகாம்பரத்தைக் காட்டிவிட்டு, நிமிர்ந்து மாதா கெபியை, பள்ளிக்கட்டடங்களை, நடைபாதைகளை, படிகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து குளித்துவிட்டு சந்திராவுக்கு போன் செய்து டாக்ஸி அனுப்பி வைக்கச் சொன்னேன்.

அய்யாவுவை அழைத்து மேலே நடைபாதையில் வைத்திருந்த பெட்டிகளை கீழே வைக்கச் சொல்லிவிட்டு ,காலை உணவை முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

சிஸ்டர்கள் கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் விடை சொல்லிவிட்டு காரில் ஏறுகையில் ரோசி, ”டீச்சர் மதியானம் சாப்பிட்டுக்கங்க,”என்று வாழையிலை பொட்டலத்தைக் கொடுத்தாள். இவள் கொஞ்சம் கவனமாக படித்திருந்தால் ஏதாவது ஒரு வேலைக்கு தள்ளி விட்டிருக்கலாம்.

அய்யாவு,”திருச்சியில ரயிலில் ஏத்தி விட்டுட்டுதான் வரனும்,”என்று ஓட்டுனரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நம்ம பையன்தானா! வண்டிய பாத்து ஓட்டனும். கோவில்ல பியானோவ சட்டுன்னு தூக்கறாப்பல செய்யக்கூடாது,” என்றதும்  டென்னிஸ் தலையாட்டி சிரித்தான். அய்யாவுவிடம் ஒரு போர்வை பார்சலைக் கொடுத்து, “ வச்சுங்க,” என்றபடி காரில் ஏறினேன்.

ஐெனிட்டா சிஸ்டர், “இறங்கினதும் போன் பண்ணிடுங்க. திருச்சி வரைக்கும் வரலான்னா… வேணாங்கறீங்க,” என்றார்.

“நேத்தே முடிஞ்சிருச்சில்ல சிஸ்டர். உங்க வேலய தொடங்குங்க. மறுபடியும் மனசு தளும்பும். வர்றேன்,” என்று அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். கார் கிளம்பி நின்றவர்களைக் கடந்து பன்னீர் மரத்தை, குழந்தை யேசுவை, புங்கை மரத்தை, அசோக மரத்தைக் கடந்து வாயிலில் வெளியேறிக் கொண்டிருந்தது.

அலைபேசி அழைத்ததும் எடுத்து, “கிளம்பிட்டேன். சாயங்காலம் வந்திடுவேன்,” என்றேன். மாறி மாறி பேசிய நீண்ட பேச்சில்தான் எனக்கு வழக்கம் போல புரிந்தது அவர்களுக்கு என் மொழி கொஞ்சம் விளங்கவில்லை என்று.

ஊருக்குள் தேவாலயத்தின் முன் வண்டியை நிறுத்த சொன்னேன். சந்திராவுடன் உள்ளே சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் எழுந்து வெளியே வருகையில் பெர்க்மான்ஸ் சிஸ்டர் எதிரே வந்தார்.

“கிளம்பிட்டிங்களா? கடைசியா ஒரு தரம் என்கிட்ட  செக்கப் பாத்துட்டு போலாமே”

“நல்லாயிருக்கேன் சிஸ்டர்”

“கிளம்பியே ஆகனுன்னு அவசரமில்லையே…”

“உங்க மாதிரி துறந்து வரலயே. வேலைக்காகதானே… முடிஞ்சதும் கிளம்ப வேண்டியதுதான்,” என்று சிரித்தேன்.

“ மறக்க முடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னு… எதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும். முழுமையான வேலையும் அர்ப்பணிப்புதான்னு உணராமையா இத்தன வருஷம் தனியா இங்கயே இருந்த?  கர்த்தர் உடனிருக்கட்டும்…,”என்று புன்னகைத்து அவரின் ஜெபமாலையைக் கொடுத்துவிட்டு தேவாலயப் படிகளில் ஏறினார். மேல்படியில் சந்திரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடந்த வழிகளில் மல்லிகை அடர்ந்து வெண் சிறு சங்குகளாய் பூப்பித்திருந்தது. மொட்டுகள் நீண்டு திரண்டிருந்தன. காரை நோக்கி நடந்தேன். டென்னிஸ் புன்னகையாடு காரை எடுப்பதாக சைகை காட்டி கதவைத் திறந்தான். வழியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கத்தில் வண்டி நிற்கையில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு கூடு இருந்தது. எந்தப் பறவையினுடையது? இந்த இடம் எந்த வகையில் அதற்கு பாதுகாப்பானது?  வண்டி நகரத் தொடங்கியது. கண்களில் அந்தக் கூடு மட்டுமே வியாபித்திருந்தது. மெல்லிய காற்று எதிர்த் திசையில் கடந்தது. ஔி கடந்தது. நிழல் கடந்தது. கூடு…கூடு. மத்தலேனாள் இறுதியில் மலைக் குகையில் காத்திருந்தாள் என்று கதைகள் உண்டு. கண்களை மூடித் திறந்தேன். இந்த வண்டி ஒரு குகையென தோன்றியது. நெடுஞ்சாலையில் நகரும் குகை. முன்னால் கண்ணாடி வழி என் முகம் பார்த்த டென்னிஸ், “எதாவது வேணுமா டீச்சர்?” என்றான். இல்லையென தலையாட்டினேன். பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான். கண் முன்னால் நெடுஞ்சாலை கடந்து கொண்டிருந்தது.