சரவணன் அபி

நிச்சலனம்

சரவணன் அபி

அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்

இருவருட நோய்மையின்
இறுதியில்
ஈன்றவள்

என்னையே நான்
பார்ப்பது போல்
என்னை அவள்
நோக்குகிறாள்

வலியினூடான பயணம்
வரைந்த
நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்

பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று நழுவித்தொலைவது
போல்

வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று

கடந்து போகும்
அளக்கவியலா
ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி
என்னுள் கூடும்
அமைதியின்மை

துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர் சலனம்
கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிச்சலனம் நிறைத்து

மூத்த குடி

சரவணன் அபி

ஆநிரை கவர்தலில்லை
களவு மணமுமில்லை

உடன்போகிய
பழங்குடித் தலைவனின்
பழங்குடி மகள்
கொண்டவனைக் கொன்ற
இயலும் துறையும்
அறியா
பண்டை மொழி
பண்பட்ட நிலம்

தன் புண்ணரிந்து
தான் நிலையழிவது
போலும்
மகளை எரிப்பதும் கரு
மகவை அறுப்பதும்

மூத்த பழங்குடி
முந்தைய மரபின்
ஏதோவோர்
எச்சம் இதுவெனில்
திருத்தமும்
அத்தன்மையதாய் தானே
இருத்தல் கூடும்

‘அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது’ – சரவணன் அபி

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்- துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும்- ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன் வெளியுரு

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது.

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது, இறுதியில் இதுதான் பொருந்துகிறது

யாரும் இறங்கா நிலையம் – சரவணன் அபி

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

“எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ?” – சரவணன் அபி

காலமருள் குறித்து சரவணன் அபி-

அன்றாட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் மகிழ்வதும் வருந்துவதும் வழமையாகிப் போன ஒரு நாளில் ஒரு நிலைகுலைவின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது தோன்றியது, இயற்கையின் எந்தவொரு நிகழ்வும் மற்றொன்றின் மேல் ஒரு நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; புலரியும், அந்தியும் போலவே புயலும், வெள்ளமும் கடந்து போகின்றன.

அது போலவே ரசனையில் திளைக்கும் சில வேளைகளில் தோன்றும்- எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ? அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும்? இந்தத் தருணத்து ரசனையை இழிவின் கணத்தில் நினைவு கூர முடியுமா?

முடியக்கூடும் சமநிலை வாய்த்து விடும்போது, வாழ்வின் சமன்பாடு பிடிபட்டுவிடும் எனத் தோன்றியது.

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, அனைத்திலும் ஒரு மேன்மையை காண முடியும் எனவும் பட்டது.

ஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் குஷ்டரோகி ஒருவன் பிச்சையெடுத்த உணவை உண்டுவிட்டு குறைபட்ட கையால் பீடி பிடித்துக் கொண்டு தனக்குத்தானே அனைத்தையும் ரசித்துக் கொள்வது போல் வரும். காற்றைச் சுகிப்பான்; நிலவை ரசிப்பான்; எச்சில் கலந்த பிச்சைச் சோற்றையும் பாராட்டிக் கொள்வான்.

சரவணன் அபியின் கவிதை இங்கு – காலமருள்