சரவணன் அபி

நில்லா கணத்தின் கவிதை – சரவணன் அபி

சரவணன் அபி

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

ஜகார்த்தாவின் மாஸ்யூஸ் – சரவணன் அபி

சரவணன் அபி

நறுமணத் தேநீரும்
ஜாவாவின் மெல்லிய தந்தியிசையும்
கமழும் வரவேற்பறை
உட்சென்று உடைமாற்றி
உடலைத் தளர்த்தி நீட்டிப் படுத்தால்
உள்வருகிறாள் இளம் பெண்ணொருத்தி
அழுத்தி இழுத்து
தடவி நீவி
மிதித்து முறுக்கி
ஒரு மணி நேரமும்
இரு மெல்லிய தோள்கள்
இரு மெல்லிய கரங்கள்
மிக மெல்லிய விரல்கள்
சின்னஞ்சிறு உருவம்
புன்னகைமாறா இயக்கம்
அசதி களைந்து
உறக்கம் மேவ
வெளிக்கிளம்புகையில்
கடிகாரத்தை ஏறிட்டபடி
கைகள் நீட்டி
சோம்பல் முறிக்கிறாள்
என் உடல்வலி
தான் மாற்றிக்கொண்டு
அடுத்த வாடிக்கையாளரை
எதிர்நோக்கும்
ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்.

புலன்மயக்கம் – சரவணன் அபி

சரவணன் அபி

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்

மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.

இயற்கையின் கவிதை

சரவணன் அபி

haiku1

அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்

– மட்சுவோ பாஷோ
haiku2

மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்

– யோசா புஸோன்

haiku3

என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு

– மசஓகா ஷிகி

haiku4

குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று

– நட்சுமே சோசெகி

haiku5

இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்

– மட்சுவோ பாஷோ

haiku6

இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது

– முரகாமி கிஜோ

haiku7

விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்

– நட்சுமே சோசெகி

ஏதுமற்று – சில குறிப்புகள்

ஏதுமற்று- சரவணன் அபி

‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இரண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.

இப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.

‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.

அதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.

அதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்கிறாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.

அதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.

இது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்.

oOo

வாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.

இந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).

உயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.

தொடர்புடைய பதிவு-

ஆற்றுகை – சில குறிப்புகள்