வானைச் சிலந்திகள் மொய்க்கின்றன.
நீயோ அவை ஒளியின் வலையில்
தொங்கவிடப்பட்டிருக்கும் பனைகள் என்கிறாய்.
மறைத்து வைக்கப்பட்ட சுருள்களையும் பொறிகளையும்
பற்றிச் சிந்தித்தபடி
விமானத்தை விட்டுப் பைய இறங்குகிறேன்
தரையிறக்கத்தின் போதே உயர்தலை எதிர்பார்த்து.
மாலைகள் சிரச்சேதம் செய்கின்றன.
அனைவரும் வெள்ளை அணிந்திருக்கிறோம்.
யாருடைய ஆவிகள் நாம்?
நீ. நீ. நீ.
கைகுலுக்குகிறோம். நீயும் கூட.
சில்லிட்ட கைகள். சில்லிட்ட பாதங்கள்.
கழுத்தை நனைப்பதற்கு ஏதாக இங்கு
வெயில் இன்னமும் கீழிறங்கியிருக்குமென
நான் நினைத்தேன்.
சந்திப்பு. ஏற்கனவே நிறுவப்பட்ட கம்பிகளின் மீது
மணிகளின் மொழியில் பேசுகிறோம்.
மணிகள் நழுவிச் செல்கின்றன, திறந்து கொள்கின்றன,
ஒன்றையொன்று பட்சிக்கின்றன.
சிலர் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.
தொடுவானத்தைப் போல் ஆழத்துடன் உயிரற்று
நிற்பது அவனா ?
நீரைப் போல் சலனமுற்று
முக்குளித்தேன் பிரியமான எனது மரத்தை நோக்கி.
இப்போது அது அங்கில்லையென்றாலும்
அதன் வேர்களை விட்டு வைத்திருந்தார்கள்.
வறண்ட மண்கட்டிகள்
அழ முயற்சிக்கையில் தங்கள் சிறிய முகங்களை
இறுக்கிக் கொள்கின்றன. அங்கே,
என் பிறப்பிடத்தில், இனியேனும்
என் ஜனநத்தை நானே காணக்கூடும்.
Nine Poems on Arrival, Adil Jussawala – தமிழாக்கம், நம்பி கிருஷ்ணன்
ஒளிப்பட உதவி- Draw as a Maniac