அமீர்பெட் போக எதுக்கு ட்ரைன்?”
“அமீர்பெட் இல்லப்பா. நாம ஹைதராபாத் போறோம்”
“என்ன பைத்தியம் மாதிரி பேசற ! நாம இருக்கறது ஹைதராபாத்.”
“இல்லப்பா. நாம இப்போ மெட்ராஸ்ல இருக்கோம். பெரியப்பா பேரன் கல்யாணத்துக்கு திருச்சி போனோம். இன்னிக்கி கார்த்தால மெட்ராஸ் வந்தோம். இப்போ ஹைதராபாத் போறோம்”
அவர் குழப்பமாக அவளைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, “இது பேகம்பேட் ஸ்டேஷன் இல்லையோ?”
“இல்லப்பா, இது மெட்ராஸ் சென்ட்ரல்”
“ஓஹோ”
மறுபடியும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். பிறகு அவர் எதிரில் இருக்கும் என்னைப் பார்த்து, “சேஷாத்ரி வந்தானா?” என்று கேட்டார். “நேத்திக்கே வரேன்னு சொன்னான். இன்னும் ஆளக் காணோம். முன்ன மாதிரி யாரும் வேலை செய்ய மாட்டேங்கறா. நாளைக்கு சீப் இன்ஜினியர் இன்ஸ்பெக்ஷனுக்கு வரார். அதுக்குள்ள எல்லாம் சரி பண்ணி வைக்கணும். நீங்க அந்த டாம் இன்ஸ்பெக்ட் செஞ்சீங்களா?”
நான் விழித்தேன்.
“சாரி சார்” என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு, “அப்பா, அவர் உங்க கலீக் இல்ல,” என்றாள். அவர் அதற்குள் வேறு ஒரு உலகத்திற்குச் சென்றுவிட்டார்.
நான் வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் அவர் எங்கு மறுபடியும் எதாவது பேசிவிடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
சற்று நேரம் கழித்து, “பாத்ரூம் போகணும்”
“இப்போதானே பாத்ரூம் போயிட்டு வந்த, மறுபடியும் எதுக்கு?”
“இல்ல. எனக்கு பாத்ரூம் வருது” என்று கூறிக்கொண்டே எழுந்து கடகடவென்று நடக்க ஆரம்பித்தார். மகள் அவர் பின்னால் ஓடினாள்.
“என்ன சார் அவருக்கு?” என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் கேட்டார்.
“மெண்டல் ஹோகயா ஷாயத்” என்றார் சைடு பர்த்தில் உட்கார்ந்திருந்தவர்.
“இல்லை, இது அல்ஜீமர் அல்லது டிமென்ஷியாவாக இருக்கும்” என்றேன் நான்.
“அல்ஷீமர் போலேதோ?” சைடு பெர்த் கேட்டார்.
அவருக்கு விரிவாக விளக்கினேன். இது போல் ஒரு வியாதி இருப்பதே இதுவரை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
“இஸ்கி மாகி. இஸ்லியே ஜல்தி ஹார்ட் அட்டாக் மே மர்ஜானா,” என்று எல்லோரும் சொல்வதையே சொன்னார்.
பெரியவரும் மகளும் வந்துவிட வியாதியைப் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
ரயில் கிளம்பியது. வெகு நேரம் வரை பெரியவர் எதாவது பேசிக்கொண்டே இருந்தார். அவர் மகளும் சளைக்காமல் அவருக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாள். சாப்பிடச் சொன்னபொழுது, “இப்பதானே சாப்பிட்டேன், மறுபடியும் எதுக்கு?” என்றார். சாப்பிட்ட கால் மணி நேரம் கழித்து, “எனக்கு ஏன் டின்னர் குடுக்க மாட்டேங்கற? ஒரே பசியா இருக்கு” என்றார்.
அந்த பெண்ணை பார்த்தால் எல்லோருக்கும் பாவமாக இருந்தது. ஆனால் அவள் நடந்துக்கொண்ட விதத்தை பார்த்தால் அவள் பச்சாதாபத்தை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. அதனால் யாரும் அவளை எதுவும் கேட்கவில்லை.
பெரியவருக்கு தூக்கம் வரும் போல் இருந்தது. அவர் மகள் என் அருகிலிருந்தவரைப் பார்த்து, “சார், நீங்க என் மிடில் பர்த் எடுத்துக்கறீங்களா? நான் அங்க படுத்தா அப்பாவ பார்த்துண்டே இருக்க முடியும்,” என்றாள்.
“நீ வேணும்னா லோவர் பர்த் எடுத்துக்கோ. நான் மிடில் பர்த் எடுத்துக்கறேன்” என்றேன் நான்.
“பரவாயில்லையா அங்கிள்?”
“பரவாயில்லை”
“தேங்க்ஸ் அங்கிள்”
“அப்பா ராத்திரில எழுந்துப்பாரா?”
“சொல்ல முடியாது அங்கிள். ரெண்டு நாளா தூக்க மாத்திரை குடுத்தேன். இன்னிக்கி முழுங்க மாட்டேன்னு சொல்லிட்டார். அதுனாலதான் நான் அவர இங்க படுத்துண்டு பாத்துக்கலாம்னு இருக்கேன்”
“அவர் பைல அட்ரஸ் எதாவது இருக்கா? பர்ஸ்ல இருக்கா?”
“எங்க அண்ணா விசிடிங் கார்ட் அவர் பைல கொஞ்சம் நேரம் கழிச்சு வைக்கறேன்”
நான் பெரியவருக்கு மேலிருந்த மிடில் பர்த்தில் ஏறினேன். எனக்கு வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. அந்த பெண்ணும் தூங்காமல் தந்தையைப் பார்த்தபடியே படுத்திருந்தாள். விஜயவாடா வருவதற்கு முன் எனக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும். கிருஷ்ணா நதி பிரிட்ஜ் மேல் ட்ரைன் போகும் சப்தத்தை கேட்டுக்கொண்டே தூங்கிப்போனேன்.
பல குரல்கள் ஒன்றாக ஒலிக்கும் ஓசையை கேட்டு கண்விழித்தேன். விடிந்துவிட்டிருந்தது.
“விஜயவாடா மே தேக்கா. ஸோரா தா” என்று சைடு பர்த் சொல்லிக் கொண்டிருந்தார்
“என்ன ஆச்சு?” என்று மிடில் பர்த் ஆளிடம் கேட்டேன்.
“பெரியவர காணோம்” என்றார்
என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் அவர் மகள் வந்தாள். “எல்லா கோச்சும் பார்த்துட்டேன். எங்கயும் காணோம்”, அவள் கண்களில் நீர் தேங்கியிருந்தது. அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள்.
நான் கீழே இறங்கினேன். அதற்குள் சைடு பர்த் ஆசாமி டிடியை கூட அழைத்து வந்துவிட்டான்.
“என்ன நடந்தது?”
“நான் விஜயவாடா வரையிலும் முழித்துக்கொண்டுதான் இருந்தேன். எப்போ தூங்கினேன்னு தெரியல. எழுந்து பார்த்தா…” அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
“அவர் பைல ஏதாவது ஐடெண்டிபிகேஷன் இருக்கா. அட்ரஸ் இருக்கா?”
அவள் என்னைப் பாவமாக பார்த்தாள். “நான் அண்ணாவோட விசிட்டிங் கார்ட் வெக்கணும்ன்னு நெனைச்சேன் ஆனா மறந்துட்டேன்”
“என்னம்மா இது. நீ பத்திரமா பாத்துபேன்னுதான் உங்க வீட்ல அவரை உன்னோட அனுப்பியிருப்பா. நீ இப்படி பண்ணிட்டியே?”
டிடி தமிழ் ஆள். எனக்கு அவரை ஒரு அரை கொடுக்கவேண்டும் போல் இருந்தது.
அந்தப் பெண் தலையைக் குனிந்து கொண்டு துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு அழுதாள்.
சம்பவம் நடந்தது 1990 தொடக்கத்தில். மொபைல் கிடையாது.
“சரி சரி. இப்போ அழுது என்ன லாபம்? உங்க வீட்ல புருஷா யாரவது தொணைக்கு வந்திருக்கணும். உன்னைத் தனியா விட்ட அவாளச் சொல்லணும்”
“அண்ணாக்கு ஆபிஸ் வேல” என்று அழுகைக்கு நடுவில் சொன்னாள்.
“அப்பாவை விட ஆபிஸ் முக்கியமா?”
“சார் அது அப்புறம் பேசலாமே. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. அவரை எப்படியாவது கண்டுபிடிக்கணும்” என்றேன் நான்
“நீங்க?”
“கோ-பாசஞ்சர்”
“அவர் எந்த ஸ்டேஷன்ல எறங்கிருப்பார்னு தெரியலையே. கம்மம், காஜிபெட், வரங்கல் எங்கயாவது எறங்கி இருக்கலாம். நான் கார்டுக்கு சொல்லி அந்த ஸ்டேஷனுக்கு எல்லாம் மெசேஜ் அனுப்பச் சொல்றேன்.”
அந்தப் பெண்ணை பார்த்து, “இந்தாம்மா. ஒரு கம்ப்ளைன்ட் எழுது. அதை சிகந்திராபாத் ரயில்வே பொலிஸ்கிட்ட குடுக்கலாம். நீ சிகந்தராபாத் போறயா, நாம்பல்லியா?”
“நாம்பல்லி” என்றாள்
“சிகந்தராபாத் வந்தவுடனே நான் போயி இன்ஸ்பெக்டர் அழைச்சுண்டு வரேன். அவன் என் பிரெண்ட்தான். அவன்கிட்ட கம்ப்ளைண்ட குடு. அவனும் எல்லா ஊருக்கும் சொல்லுவான். அவர் பைல ஒரு அட்ரெஸ் வெக்க மாட்டியோ…” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
“மில் ஜாயிங்கா” என்று தைரியம் கொடுத்தான் சைடு பர்த்.
“நான் சிகந்திராபாத்தில் இறங்கி காஜிபெட்டுக்கு போய் பார்க்கவா?” என்று அவள் என்னை பார்த்து கேட்டாள். “ஆனா அம்மா நாம்பல்லில எனக்காக காத்துண்டிருப்பா” என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்த்தாள்.
சொன்னது போல் சிகந்தராபாத் ஸ்டேஷனில் ரயில் நின்ற ஐந்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டருடன் எங்கள் முன் டிடி வந்து நின்றான்.
இன்ஸ்பெக்டரிடம் மறுபடியும் நடந்ததை கூறினாள்.
“அவர் பைல இல்ல பர்ஸ்ல உங்க வீட்டு அட்ரெஸ் இருக்கா?”
இல்லை என்று தலையாட்டினாள்.
“அவர் பேரு?”
“விஸ்வநாதன்?”
“வயசு?”
“சிக்ஸ்ட்டி பை”
“அவர் போட்டோ எதாவது இருக்கா?”
“இங்க இல்ல. வீட்ல இருக்கு”
“உங்க வீடு எங்க?”
“மசாப் டான்க்”
“மசாப் டான்க். ஹ்ம்ம். சரி. நீங்க போட்டோ எடுத்துண்டு மாசப் டான்க் போலிஸ் ஸ்டேஷன் போங்க. அங்க இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா இருப்பாரு. அவருகிட்ட போட்டோவ குடுங்க. நான் அவரோட பேசறேன். கம்மம், காஜிபெட், வரங்கல் எல்லா எடத்துக்கும் மெசேஜ் அனுப்பறேன். சீக்கிரமா கண்டுபிடிக்கலாம்” என்று தைரியம் சொன்னார்.
ட்ரைன் சிகந்தராபாத் ஸ்டேஷன் விட்டு கிளம்பும்போது தைரியமாக இருந்தாள். நானும் அவளும் மட்டும்தான் அங்கு இருந்தோம். மற்றவர்கள் சிகந்திராபாதில் இறங்கி விட்டிருந்தார்கள். “பயப்படாதம்மா. ஒண்ணும் ஆகாது. அப்பா கிடைத்துவிடுவார்” என்றேன்.
“நான் தூங்கி இருக்கக்கூடாது. எனக்கே தெரியல எப்படி தூங்கினேன்னு. அப்பாவுக்கு தூக்க மாத்திரையாவது கொடுத்திருக்கணும். ச்ச…” என்று சொல்லிவிட்டு மௌனமானாள்.
ட்ரைன் நாம்பல்லியை நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் தைரியம் குறைய ஆரம்பித்தது, டென்ஷன் அதிகம் ஆவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நாம்பல்லி வந்தது. ஜன்னல் வழியாக இவளைப் பார்த்த வயதான பெண்மணி கையை ஆட்டிக்கொண்டு ட்ரைன் பின்னால் ஓடி வந்தார். “அம்மா” என்றாள்.
அவள் கம்பார்ட்மென்ட் படி இறங்கும்போது அவள் அம்மா அங்கு வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும், “அப்பா எங்கடீ?” என்று கேட்டார்.
ஒளிப்பட உதவி- Luca Berberini