சிகந்தர்வாசி

ஒளியும் இருளும்

சிகந்தர்வாசி

ஆத்திரப்பட்ட தகப்பன் மனம் வருந்தி
தன மகளை அணைக்கும் மென்மையுடன்
சூரியன் மண்ணை அணைக்கும் தருணம்

பூங்காவில் எல்லோர் முகத்திலும் அன்றைய தினத்தைக்
கடந்துவிட்ட மகிழ்ச்சி, இனி இரவின் அமைதியை நோக்கி
புன்சிரிப்புடன் பயணம்

மங்கலான ஒலி எல்லா பொருட்களையும்
அழகாக மிளிரச் செய்கிறது
இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக
மனிதனை நோக்குகிறான்

இலைகளில் ஊடுருவி ஓடிவரும் கதிர்கள்
திட்டுத்திட்டாக என் கைமேல் வந்தமர்கின்றன
வாழ்க்கையைப் போல் என் உடல்
ஒளியும் இருளும் கலந்ததாகிறது

விளையாடும் குழந்தைகளின் கூச்சல்கள்
கூட்டிற்கு திரும்பிவிட்ட பறவைகளின் பேச்சு
பூங்காவிற்கு வெளியே வாகனங்கள்
ஒலிகள் சூழ்ந்திருக்கும் மாலைப் பொழுதில்தான்
ஒலிகளற்ற அமைதி கிடைக்கிறது

 

image credit: Todd McKimmey’s Website

தீபாவளி

சிகந்தர்வாசி

பால்கனியில் நின்றுகொண்டு வானம்
வண்ணமயமாவதைப் பார்க்கிறேன்
சீராக ஒளிக்கோடு போட்டுச் செல்லும் ராக்கெட்
வெடித்து பல பாதைகள் தோன்றுகின்றன
கடந்த பாதையின் தடம் அழிகிறது
வண்ணமயமான வரலாறு சில நொடிகளில்
காணாமல் போகிறது
இன்னொரு பாதை தோன்ற, இன்னொரு ராக்கெட் வெடிக்க
வானமெங்கும் சல்ஃபர் பூக்கள்

நாம் விட்டுச்சென்ற தடங்கள் இன்னும் ஒளிர்கின்றனவா?
யார் மனதில்?
விண்மீன்களை மறைத்துப் பூக்கும் இந்த பூக்கள்
நம் கனவுகளா?

இரவை இருள் ஏன் கவ்வுகிறது?
மழைக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றும் என
வெடிகள் குரல் எழுப்புகின்றன
காற்றையும் மழையையும் எதிர்த்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று புறப்படுகிறது
இருளுக்கு எதிரான புரட்சி வண்ணங்களால்

வெடித்துச் சிதறிய பிறகு மறுபடியும் இருள்
மறுபடியும் வண்ணக்கோலம்
ஆகாயப் பரப்பில் மறையும் ஓவியங்களை
பலர் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்

சீராக வண்ணகளற்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் அவ்வப்பொழுது தோன்றும்
இருளும் வெளிச்சமும்

சகுனம்

சிகந்தர்வாசி

அந்த ஒரு வாக்கியத்தில் பல கதவுகள் திறந்தன
ஒரு மாய உலகம் கண் முன் விரிய
நான் எங்கோ பறந்தேன்
அழகான மாளிகைகள், சுத்தமான சாலைகள்
விதவிதமான கார்கள், விமானங்கள்
மேகங்களை கிழித்து வானத்துக்கு ஒட்டடை அடிக்கும் கட்டிடங்கள்
முதல் எது முடிவு எது என்று தெரியாத நீர்வீழ்ச்சிகள்

“பையன் அமெரிக்கால இருக்கான்”

உடம்பு சற்று நடுங்கியது, வார்த்தைகள் வழுக்கின
பார்வையை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் தவித்தேன்
அவன் என்ன கேட்டான் நான் என்ன சொன்னேன்?
அந்த நினைவு மூளையில் பதிவாகாமல் சறுக்கி எங்கோ சென்றுவிட்டது
சிரித்தேன், மறுபடியும் நடுங்கினேன், பேசும்போதே கனவு
கண்டுகொண்டிருந்தேன்

“சகுனம் சரியில்லையாம்”

அன்று மூடிய கதவின் ஒலி இன்னும் எதிரொலிக்கிறது
நேராக என்னிடம் முடிவைச் சொல்லமுடியாத ஒரு கோழை
சுமாராக இருந்தும் அழகனாய் நினைத்துக்கொள்ளும் அற்ப ஜீவி
புகைப்படம் பார்த்தபின்தானே வந்தான்? நிராகரிக்கும் உரிமை
இருவருக்கும் உண்டு. அற்பஜீவி.  உன்னை நான் நிராகரிக்கிறேன்

“சகுனம் சரியில்லையாம்”

தடுமாறாமல் பேசியிருக்க வேண்டுமோ?
நவ நாகரீகப் பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டுமோ?
அழகு குறைச்சலோ? ஆங்கிலம் அதிகம் பேசவேண்டுமோ?
கணங்களில் ஏன் கண்ணீர்? மூடப்பட்ட கதவின் எதிரொலி.

“சகுனம் சரியில்லையாம்”

அந்த கனவு மறுபடியும் விரியவில்லை
திருமணம், மகன், மகள், பேரன்கள் , பேத்திகள்
பல முறை அமெரிக்க பிரயாணம்
ஆனாலும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது அந்த ஒரு நாள் கனவு

மனதில் நீங்காத கேள்வியாக அது நின்றுவிட்டது
ஏன் அன்று சகுனம் சரியில்லை?

வழித்துணை

 

உறக்கம் வராமல் படுக்கையில்
புரண்டு புரண்டு படுக்கும் நேரம்
அவள் கதவைத் தட்டுகிறாள்
அறையுள் கசியும் மெல்லிய வீதிவெளிச்சம்
இரவு விரைவாகச் செல்லும் லாரியின் சப்தம்
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியின் ஓசை
யாரையோ கூப்பிடும் பல்லியின் குரல்
இடைவிடாது டிக் டிக் டிக் எனும் காலக் கணக்கு
எல்லாவற்றையும் மீறி அவள் கதவை தட்டும் சப்தம்

இல்லாத கதவை இல்லாத ஒருவள் தட்டுகிறாள்

மீண்டும் பெற முடியாது நழுவவிட்ட தருணங்கள்
சொல்லாத பல நூறு அன்புச் சொற்கள்
பாதை ஒன்றே என்று நினைத்துச் செய்த பயணம்
ஆனால் கண்ட காட்சிகள் ஒன்றா?

அவள் கதவை தட்டுகிறாள்

பாதையில் ஏதோ விட்டுவிட்ட உணர்வு
எந்த நடையும் முழுமை அடைவதில்லையோ?
சிராய்ப்புகள், பெரிய காயங்கள், மெதுவாக உருமாறி
இந்த இரவின் நிலவு போல் பளிச்சென்று தெரிகின்றன
வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது
கண்ணை மூடிக்கொண்டாலும் காதில்
அவள் கதவை தட்டும் சப்தம்

அவள் தட்டுவதனால் என் மனம் அதிர்கிறதா
இல்லை மனம் அதிர்வதால் சப்தம் கேட்கிறதா

வகுத்த பாதை நமதில்லை என்றாலும்
பாதையை மாற்றியிருக்கலாமோ?
காட்சிகள் மாறியிருக்குமோ?
பாதையில் அருவிகள் தோன்றி சாரலில் நனைந்திருப்போமோ?
இல்லை, கல்லும் முள்ளும் நிறைந்திருக்குமோ?

கேள்விகள் காற்றடிக்கப்படும் பந்து போல் பெரிதாகின்றன
பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன
கண் திறந்தாலும் மூடினாலும் அவையே தெரிகின்றன

உறக்கம் வராமல் திரும்பிப் படுக்கிறேன்
அவள் கதவை தட்டுகிறாள்

முகம் பார்த்தல்

சுற்றும் முற்றும் பார்க்கிறேன் தெரிந்த முகம் எதுவுமில்லை
கூட்டம் அதிகரிக்கிறது
உள்ளே வரும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கிறேன்
தெரிந்த முகம் இல்லை
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தனிமை அதிகரிக்கிறது
அழையாத விருந்தாளி போல் நான்

ஆனால் அழைத்திருந்தார்கள்

சரவணன் பல ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டான்
மேடையில் இருக்கும் பேத்திக்கு அவன் முகம் இல்லை

வயதானவர்கள் முகங்களைப் பார்க்கிறேன்
நடுத்தர வயது முகங்களைப் பார்க்கிறேன்
இளைஞர்களைப் பார்க்கிறேன்
யார் முகத்திலாவது தந்தை முகமோ
தாத்தா முகமோ தெரியுமா என்று
ஆனால் தெரிந்த முகம் தோன்ற மறுக்கிறது

தம்பதிகளுக்கு பின்னால் பூ அலங்காரம்
பட்டுப் புடவையில் அழகான பெண்கள்
என்னைச் சுற்றி சிரிப்பும் விசாரிப்புகளும்
தனித்து நான்

அனுமன் வால் போல் நீண்டிருக்கும் க்யூவில் நின்று
மேடை ஏறுகிறேன்
நான் சரவணனின் மனைவியைப் பார்த்து வணக்கம் சொல்ல
அவர் முகத்தில் முதலில் குழப்பம்
பிறகு ஒரு சிரிப்பு, உண்மையான சந்தோஷம்

கீழே இறங்குகிறேன், தெரிந்த முகம் எதுவுமில்லை
ஆனால் இப்பொழுது அது பெரிய விஷயமாக தெரியவில்லை