செந்தில் நாதன்

நிலவொளியில், தனியே மதுவருந்துகிறேன்

செந்தில் நாதன்

libai

 

மலர்களிடையே, ஒரு மதுக் குவளை.
தனியே மது அருந்துகிறேன், தோழர்கள் யாரும் இல்லை.
நிலவை அழைக்க கோப்பையை உயர்த்துகிறேன்.
நிலவும், நானும், என் நிழலும் சேர்ந்து மூவராகிறோம்.

நிலவுக்கு மது அருந்தத் தெரியாது;
நிழல் என் உடல் அசைவுகளை நகலெடுக்கிறது;
ஆனாலும் அவர்களுடன் கொண்டாடுகிறேன் –
விரைவில் வசந்தம் வந்துவிடும்.

நான் பாடுகிறேன் – நிலவு அசைந்தாடுகிறது.
நான் ஆடுகிறேன் – நிழல் அலைபாய்கிறது.
தெளிவாய் இருக்கையில், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.
கள்வெறி ஏறியபின், அவரவர் வழி செல்வோம்.

உறவுகளுக்கு அப்பால், நண்பர்களாயிருக்க உறுதி கொள்வோம்
விண்மீன் திரளின் முடிவில் மீண்டும் சந்திப்போம்.

(Drinking Alone, Li Bai)

படம் : http://en.people.cn

அடில் ஜுஸ்ஸாவாலாவின் “களிமண்”

செந்தில் நாதன்

கடவுளின் மாதிரி.
அவரது பன்முகங்கள்.
நீர்கொள்ள பாதுகாப்பான பாத்திரம்.
நெருப்பில்,
தன்னுள் அடைபட்டிருக்கும்
ஆன்மாக்களை வெளிப்படுத்தும்:
கிளி, வண்டு, நரி.

கைவிடப்பட்டால், வெற்றுப்பலகை
உயிரற்றிருந்தால், உறைவிடம்.
முழுமையானால், கலை.
மூளியானால், மனிதன்.

(Adil Jussawala, Clay)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அருண் கொலாட்கரின் கீறல் கவிதை தமிழாக்கம்

கீறல்

செந்தில் நாதன்

கடவுள் எது
கல் எது
வித்தியாசம்
என்று ஒன்றிருந்தால்
அது நூலிழை அளவு தான்
ஜெஜூரியில்
இருக்கும் கற்களில் பாதி
கடவுள் அல்லது அவரது பங்காளி

எந்த விளைச்சலுமில்லை
கடவுளைத் தவிர
கடவுளே இங்கு விளைச்சலாகிறார்
வருடம் முழுவதும்
நாள் முழுவதும்
தரிசு நிலத்தில் இருந்தும்
பாறாங்கல்லில் இருந்தும்

ஒரு படுக்கை அறை அளவு பெரிய
அந்த ராட்சதப் பாறை
கல்லாய் மாறிய காண்டோபரின் மனைவி
அதில் நீள்வெட்டாய் உள்ள பிளவு
ஒருமுறை பெருங்கோபத்தில்
அவள் மீது அவர் வாள் வீசியபோது
ஏற்பட்ட தழும்பு

ஒரு கல்லைக் கீறிப்பார்
ஒரு பழங்கதை உயிர்த்தெழும்