எழுத்து

உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: பொம்மைக்காரி தொகுப்பை முன்வைத்து

சிவகுமார்

bommaikari

பாவண்ணனின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதிதான்பொம்மைக்காரி”.  2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.  இந்தக் கதைகளை இதழ்களில் வெளியானபோதே வாசித்திருக்கிறேன்.  அந்த வாசிப்பு அனுபவத்துக்கும் படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. தொகுப்பாக வாசிக்கும் போது கதைகளுக்கு இடையிலான ஒரு கதையாடல் வாசிப்பில் உருவாகின்றது.  ஒப்பீடு செய்தல் வாசக நடவடிக்கையாக மாறிவிடுகின்றது.  கதைக்கரு, கதைமாந்தர்கள், சம்பவங்கள் என இவ்வாறு பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நேரிட்டு விடுகிறது.  எனவே சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பது ஏதோ ஒரு வகையில் மதிப்பீட்டுச் செயலாகவே அமைந்து விடுகின்றது.  அதனுடன் தொகுத்துப் பார்த்தலும் நிகழ்கின்றது.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அதிலும் ஆண்களுடனான பெண்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆழமாக முன்வைக்கப்படுகின்றன.  சாத்தியமாகக்கூடிய அனைத்து பெண்ஆண் உறவுகளும் இக்கதைகளில் பேசப்படுகின்றன.  பாலியல் சார்ந்த பெண்ஆண் உறவு குறித்த கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன.  இந்தப் பாலியல் உறவில் வன்முறையும் வஞ்சகமும் இணைந்து இருப்பது நுட்பமாக வெளிப்படுகிறது. ஓரிரண்டு கதைகளைத் தவிர பிற கதைகள் அனைத்திலும் பெண் பாத்திரமானது மையமாகவும் அப்பெண்ணின் உறவு கதையாடலின் முடிச்சாகவும் உள்ளது.

தொகுப்புக்குப் பெயராக உள்ளபொம்மைக்காரிகதையில் வள்ளிமாரி இருவரும் ஏழெட்டு வருஷமாக தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.  இருவரும் பொம்மை வியாபாரம் செய்பவர்கள்.  அவனிடம் அடிபட்டு அடிபட்டு அவள் பொம்மையாகவே மாறிவிட்டாள்.  தலைப்புக்கு இப்போது பல அர்த்தங்கள் விரிகின்றன.  பொம்மை விற்பவள், பொம்மை போன்று உருமாறி விட்டவள், விரலசைவில் ஆடும் பொம்மை என அர்த்தங்கள் அடுக்குகளாக மாறும்போது கதைக்கு வேறு பரிமாணம் கிடைக்கிறது.  வள்ளிமாரி உறவு என்பது வன்முறையானதாகவே உள்ளது.  உடலுறவு என்பது வள்ளிக்கு மற்றொரு உடல்ரீதியான தண்டனையாகும்.  சகித்துக் கொள்ளுதல்மூலம் அவள் உறவைத் தொடரச் செய்து வருகின்றாள்.  இருவரும் பொம்மை விற்க சந்தைத் தோப்புக்குப் போகின்றார்கள்.  பதினேழு பாளையத்துக்காரர்கள் சேர்ந்து நடத்தும் பெரிய சந்தை இது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டும் வள்ளியை வார்த்தைகளால் சிதைப்பதுதான் மாரியின் வழக்கம்.  பொம்மை வாங்குவதாக பாவனை செய்து கொண்டு நாலைந்து இளைஞர்கள் வள்ளிக்குப் பாலியல் தொந்தரவு தருகின்றனர். மாரியின் எதிர்ப்பால் கலவரம் மூள்கின்றது. மாரி தாக்கப்படுகிறான்.  வள்ளியைப் பலவந்தப்படுத்த முனைகின்றனர்.  மாரியும் வள்ளியும் தப்பித்து ஓடுகின்றனர்.  இளைஞர்கள் துரத்துகின்றனர்.  அடிப்பட்டிருந்த மாரி புதர் மறைவில் தண்ணீருக்காகத் தவிக்கின்றான்.  தண்ணீர் தேடி செல்லும் வள்ளியை இளைஞர்களில் ஒருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் மிரட்டுகின்றான். செயலற்று அவள் கிடக்க அவன் வன்புணர்ச்சி கொள்கின்றான்.  மாரியும் வள்ளியும் உயிராபத்தில் இருந்து தப்பித்து இருப்பிடம் சேர்கின்றனர்.  மாரி உடல் தேறி வருகின்றான்.  நடந்த சம்பவத்தைவிட கோரமாக மாரி கேள்விகளால் வள்ளியை மேலும் சின்னாபின்னமாக்குகிறான்.

எளவட்டப்பசங்களுக்கு ஒன் மேல கண்ணுடி.  வளச்சிடலாம்னு  பார்த்தாங்க.  அதான்”.

ஏழு வருஷமா ஒன்ன எல்லா இடங்களுக்கும் இழுத்து அலஞ்சி சோறு போடறதெல்லாம் கண்டவன்கிட்ட கூட்டிக் குடுத்துட்டு வேடிக்கை பாக்கறதுக்கா?”

சொல்லுடி நாயே, என்னை உட்டுட்டு ஓடிரலாம்னு என்னைக்காவது தோணுமா?”

இந்தக் கேள்விகளே, சொற்களே மாரியின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தி விடுகின்றன.  மனைவியைத் தக்க வைத்துக் கொள்ளுதல்தான் கணவனுக்கான கம்பீரமாக/கடமையாக உள்ளது.  மனைவியைப் பிறர் கவர்தல் என்பது கணவனின் கையாலாகத்தனமாகி விடுகின்றது.  எனவே அச்சுறுத்தல் மூலமாகவே மனைவியை கணவன் தனக்குக் கீழ் அடிபணிய வைத்து உறவைத் தொடர்கின்றான்.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் கருத்தியல் இப்படியான ஆண், பெண்ணை உருவாக்கி உறவை கட்டமைத்துத் தக்கவைத்து வருகின்றது.

மாரியின் கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டு இருக்க வள்ளி குளிப்பதற்காக குளத்துக்குச் செல்கின்றாள். திடீரென்று தன்னை வல்லுறவு கொண்டவனின் முகமும் முத்தமும் அவளின் ஞாபகத்துக்கு வருகின்றது. அடிபட்டபோது வலிக்காத அடி அக்கணத்தில் வலிக்கிறது.  அவளுக்குள் குழப்பம்.  வல்லுறவின் விளைவுகளைக் குறித்து கவலை.  தற்கொலை செய்துகொள்ள குளத்தின் மையத்தை நோக்கி நகர்கிறாள்.  கழுத்தளவு சூழ்ந்த தண்ணீர் அவள் கன்னத்தில் மோத அது முத்தமாக அவளுக்குத் தோன்றுகிறது.  இந்தத் தண்ணீரின் முத்தம் அவளின் வேதனையை அழுத்தித் துடைப்பது போன்று உணர்கின்றாள்.  திரும்பி கரை ஏறி விடுகின்றாள்.  கதை முடிகிறது.

இக்கதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.  பெண்ஆண் உறவின் கபடமும் வன்முறையும் வெளிப்படுகின்றது.  அடக்குவதிலும் அன்பு இல்லை.  அடங்கிப் போவதிலும் அன்பு இல்லை.  உறவை தக்கவைத்து நீட்டுவதுதான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.  கணவனான மாரியின் வன்புணர்வும் இளைஞனின் வன்புணர்வும் ஒன்றுபடும் தருணத்தை மனதில் உணரும் போது அதிர்ச்சி ஏற்படுகின்றது.  கரை ஏறும் வள்ளி மீண்டும் மாரியிடம் சொல்லடியும் உடலடியும் படுவாளா? அல்லது வேறு ஏதாவது முடிவு அவளிடம் இருக்கிறதா? யாருக்குத் தெரியும்.  வாழ்க்கை அதன் போக்கில் போகத்தான் செய்கிறது.

இந்தக் கதைக்கு எதிர்நிலையில் செயல்படும் கதைவைராக்கியம்”.  கதைசொல்லியான பெண் ஒருஅம்மாவைச் சந்தித்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள செல்கின்றாள்.  அந்த அம்மாவின் கதை தினமும் செத்துப் பிழைத்த கதைதான்.  தினமும் அவளைச் சாகடிப்பது கணவன்தான்.  அடி, உதை, திட்டு.  அதனோடு விருப்பமில்லாத வன்புணர்ச்சி!. இருபது. இருபத்தைந்து வருடம் வாழ்க்கை ஓடிவிட்டது.  ஒரு நாள் நான்கு பெண் பிள்ளைகள் விழித்திருக்க அடி உதையுடன் மறுக்க மறுக்க வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள் அம்மா.  அடுத்த நாள் இரவு மழை. மிருகமாக அவன் அவளைப் புணர்கிறான்.  பித்து பிடித்தாற் போன்று அவள் ஆகிறாள்.  கூரைமேல் கீற்றுகளை தடுத்து வைப்பதற்காக வைத்திருந்த பெரிய கல் ஏற்கனவே சரிந்து விழுந்து இருக்கிறது.  அந்தக் கல்லைத் தூக்கி அம்மா ஒரே போடாக கணவன் தலைமீது போட்டு விடுகிறாள்.  ஆவென்ற சத்தத்துடன் அவன் உயிரை விடுகிறான்.  விடிந்த பிறகு கூச்சல் போட்டு அம்மா, ”கூரை கல்லு உருண்டு விழுந்து விட்டதுஎனக் கூறுகிறாள்.  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்து விடுகிறார்கள்.  மாமியார்காரி இது கொலை என செலவு செய்து நிரூபித்து அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறாள்.  மாமனார்தான் ஒரு வருஷம் சென்று ஜாமீனில் எடுக்கிறார்.  அவர்தான் முதலிலேயே கூரைமேல் இருந்து கல்தான் விழுந்தது என ஆரம்பத்தில் இருந்தே சாட்சி சொல்லி வருபவர்.     

பெரிய மகள் தேர்வு எழுதி மேல்படிப்புக்கு சிங்கப்பூர் சென்று பிறகு வேலையில் சேர்ந்து மூன்று தங்கைகளையும் அங்கேயே அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறாள்.  கூடவே அம்மாவும் செல்ல ஏற்பாடு.  ஏழெட்டு வருடம் கேஸ் இழுத்து கொலை நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடியாகி விடுகிறது.  இவ்வளவு காலமாக தான் செய்த கொலை அவளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது.  சிங்கப்பூர் கிளம்பும் நாளில் மாமனாரிடம் அம்மா தான் செய்த கொலையைச் சொல்லி விடுகின்றார்.  மாமனார்தான் சொன்னதே இந்த உலகத்துக்கு உண்மையாக இருக்கட்டும்” (கூரை கல் விழுந்து மரணம்) எனச் சொல்லிவிடுகின்றார்.

இந்தக் கதையும் பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டுள்ள கதைதான்.  போகிற போக்கில் சில சொற்கள் மூலம் ஆழமான அர்த்தங்கள் வெளிப்படுகின்றன.  கணவனைக் கல்லைப் போட்டு கொன்றதைச் சொன்ன பிறகு அம்மா இவ்வாறு கூறுகிறார்: ”அந்த நேரம் என் மனசுல நிம்மதியே தவிர வேற எதுவுமே இல்லை.  கால்ல ஒட்டியிருந்தத கழுவி தொடச்ச மாதிரி”.  கொலையின் மூலம் கணவன் இருப்பை இன்மையாக்குவது மலத்தை கழுவி விடுவது போலத்தான் என்கிறார் அம்மா.  அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாசிப்பைத் தொடரும்போது மேலும் பல அர்த்தங்கள் விரிகின்றன.  காலில் ஒட்டும் மலத்தை உடனடியாகத் தண்ணீர் தேடி கழுவி விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.  ஆனால் மலமாகிய கணவனை கழுவ இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  இத்தனை ஆண்டுகள் மலம் ஒட்டிய காலைக் கழுவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆனால் கழுவ முடியாத இயலாமையுடன் அம்மா இருக்கிறார்.  பொம்மைக்காரி கதையின் வள்ளியும் இந்தக் கதையின்அம்மாவும் ஒன்றுதான் கொடுமைக்கும் கணவனின் வன்புணர்வுக்கும் ஆளாகின்றார்கள்.  ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள்.  அம்மாவுக்கு செய்த கொலை மனதை அரிக்கின்றது; வள்ளிக்கு இளைஞனின் வன்புணர்ச்சி மனதை அலைக்கழிக்கின்றது.  முடிவுகள் வேறுபட்டவை.

இத்தக் கதையில் கதைசொல்லியான பெண் இன்றைய காலகட்டத்தின் பிரதிநிதி; அம்மா முந்தைய தலைமுறையின் பிரதிநிதி.  கதைசொல்லிப் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவள்.  அதாவது சட்டம் மூலம் கணவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  அம்மா கணவனைக் கொலை செய்து அவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  கதையாடல் முழுவதும் இந்த இரு பெண்களும் சமமாகப் பாவிக்கப்படுகின்றார்கள். ”புருஷன் தொணதான் மனுஷத்தொணையாக இருக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லையேஎன அத்தையைக் கேட்கலாம் என எழுந்த வார்த்தைகளை எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன்,” எனக் கதை முடிகின்றது.  சொல்லின் அர்த்தங்களைவிட சொல்லாத அர்த்தங்கள் புலப்படுகின்றன.  இந்தக் கதையில்அம்மாவுக்குப் பெயரில்லை.  இவள் காளியும் யசோதையும் கலந்த பிறப்பு.

இந்தக் கதைகளைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.  இக்கேள்விகளுக்குப் பதில்கள் கதைகளில் இல்லை.  வாழ்வில் தேடிப் பார்க்கலாம்.  ஆனால் இதுதான் விடை என்று உறுதியாகச் சொல்ல முடியாத கேள்விகள் இவை.  அதனாலேயே இவை முக்கியமானதாகின்றன.  குப்புஎன்ற கதையில் குப்பு என்ற பெண் ஏழுமலை ஓட்டுநரைக் காதலிக்கிறாள்.  காதல் பழக்கத்தால் அவள் கர்ப்பமாகின்றாள்.  முதலில் இயல்பாக கர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஏழுமலை பிறகு அவளை பிள்ளை பெற்று தொலைத்துவிட்டு வருமாறு கூறுகிறான்.  அப்படி வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான்.  இந்தக் கொழந்த போனா என்ன, இன்னொரு கொழந்தய பெத்துக்க முடியாதா? என்கிறான்.  குப்புவும் குழந்தையை பெற்றெடுத்து பிறகு பதினைந்தாம் நாள் அக்குழந்தையை திட்டமிட்டு தொலைத்துவிட்டு ஏழுமலையிடம் வருகின்றாள்.  கன்னிப் பெண்ணாக வா, கல்யாண விஷயம் பேசலாம்னு சொன்ன, வந்திருக்கிறேன் என்கிறாள்.  ஆனால் ஏழுமலையோ மாமா பெண்ணை பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு விட்டான்.  அதிர்ச்சி அடைகிறாள் குப்பு.  இத்துடன் கதை நின்றுவிடுகிறது.  குப்பு இனி என்ன செய்வாள் என்பது சிந்தனையின் அடுத்த கட்டம்.  ஆனால் கதைக்குள்ளேயே எழும் கேள்வி: ”எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குப்பு குழந்தையைத் தொலைத்துவிட்டு அவனிடம் வருகின்றாள்?” என்பதுதான்.

இதேபோன்றுஅட்டைகதையில் கோபாலு என்ற திருமணமாகாத இளைஞன் திருமணமான நீலா டீச்சர் மேல் காதல் கொள்கின்றான்.  இந்தக் காதலுக்கு அடிப்படை என்ன? ஏன் கோபாலு நீலாவைக் காதலிக்கிறான்? “அழைப்புஎன்ற கதையில் தனது மனைவி சியாமளாவை மீறிதான் சேர்த்துக் கொண்ட துணைவி ராதாவைப் போய் சொக்கலிங்கத்தால் ஏன் பார்க்க முடியாமல் போகின்றது.  ”வழிகதையில் பாலியல் தொழிலாளியான அஞ்சலையை திருமணம் செய்து கொண்ட ரங்கசாமி பிறகு அவளே அறுத்துவிடச் சொன்ன போதும் முடியாமல் ஏன் தவிக்கிறான்? “அடைக்கலம்கதையில் இடிந்த கோட்டையில் வந்து விடப்படும் முதியவர்களுக்கு அந்த இளைஞன் ஏன் தொடர்ந்து உதவி செய்கின்றான்?“ “பிரயாணம்கதையில் பிரெஞ்சு அதிகாரி பெஞ்சமின் முசே மட்டும் ஏன் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்?  இப்படியான கேள்விகள் வாசிக்கும் போது மனதில் எழுவதுதான் இக்கதைகளின் வெற்றியாகத் தோன்றுகின்றது.

துணைஎன்ற கதை மட்டும் பிரச்சனைக்குரிய கதையாக இருக்கிறது.  பிற கதைகளில் பெண் பாத்திரங்கள் மீதான கரிசனமும் கவனமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.  மீறவோ மீளவோ முடியாத பெண்களாயினும் அவர்களின் இருப்பு கதையாடலில் கவனத்துக்குள்ளானது.  ஆனால்துணைகதையில் இது முற்றிலும் எதிரானதாக உள்ளது.  கணபதி என்ற திருமணமாகாத 42 வயது ஆணுக்கு திருமண ஏற்பாடு.  முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு ஓடிப்போய் விட்டாள்.  மணப்பெண்ணின் தங்கையை அடுத்த மணப்பெண்ணாக்கி திருமணமும் முடிகின்றது.  பெண்ணின் வீட்டுக்கு அன்றே கணபதி மறுவீடு விசேஷத்துக்குச் செல்கின்றான்.  சிறிது நேரத்திலேயே தாலிகட்டிய மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுகிறாள்.  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கணபதிக்கு.  அவனுடைய மனவேதனையும் அவனது குடும்பத்தாரின் எதிர்வினையும் ப்ரீத்தி நாயின் செயலும்தான் கதை.  இப்படி அடிபட்ட. அவமானப்பட்ட ஒரு ஆணின் துயரத்தைப் பேசலாம்தான்.  ஆனால் சொல்லும் முறையில், கதையாடலில் இவனின் துயரத்திற்குக் காரணமான அந்த இரண்டு பெண்களும் குற்றவாளிகள் போல ஆக்கப்படுவது என்ன நியாயம்? பல பாத்திரங்களின் ஊடாக உருவாகும் இரண்டு மணப்பெண்களின் சித்திரமும் வில்லிகள் போல உருப்பெறுவது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.  குடும்பம்என்பதே வன்முறையைப் பயிலும் களமாக நிற்கின்றது.  கருணைக் கொலை, முதியவர் தனித்து விடப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை/ வன்புணர்ச்சி, குடிப்பழக்கம் முதலான சமூகக் கொடுமைகளை இக்கதைகள் பேசுகின்றன.  ஆனால் எந்தக் கதையிலும் இந்தக் கருத்துக்கள் பிரச்சாரமாக மாறவில்லை.  கதையின் போக்கில், கதையாடலில் இந்தக் கருத்துக்கள் வாசகரைச் சிந்திக்க வைக்கின்றன.  ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன.  பாத்திரங்களும் பலவகை மாதிரிகளைச் சேர்ந்தவர்கள்.  பேசுபொருள்களும் கதைக்கு கதை வித்தியாசப்படுகின்றன.  ஆனால் சொல்கின்ற முறையும் நடையும் மொழியும் எல்லாக் கதைகளுக்கும் ஒன்று போலவே தோன்றுகின்றன.  இந்தப் பதினாறு கதைகளும் ஒரு நாவலின் பதினாறு அத்தியாயங்கள் என்ற உணர்வு ஏற்படுகின்றது.

பாவண்ணன் இதுவரை எழுதியுள்ள சிறுகதைகளில் இருந்து ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

பொம்மைக்காரி“, பாவண்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83, 2011 

இயந்திரம் [சிறுகதை]

பாலகுமார் விஜயராமன்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு, குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க

சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு

அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ  அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாதுஇன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்கவேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க

இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க

எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க

ம்ம்ம்நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்சும்மா டென்ஷனைக் கிளப்பாதே  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா, நிச்சயம் பையன் தான்என்று வாதிடுவாள்

பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதேஎன்று அவளை வம்பிழுப்பாள்

அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான், பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க

நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம்மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான். அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தாஉன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான். அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு, உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.

பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள்

ஶ்ரீதர் நாராயணன்

paavannan

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.

வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்று மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.

paaimarakappal01

காந்தியின் தாக்கத்தை பாவண்ணனின் எழுத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ‘பாய்மரக் கப்பலில்’ முத்துசாமி கவுண்டனின் அண்ணன் மகன் காந்தியவாதியாக உருவெடுக்கிறார். இத்தனைக்கும் அதே முத்துசாமிக் கவுண்டனின் சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் உற்றாரைக் கொன்று போட்டு ஜெயிலுக்கு போவதாகவும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கும். இரண்டு முனைகளுக்கும் இடையேதான் இந்த நிலத்தின் காதைகள் பலதும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கோர சம்பவத்தில் மனைவி வனமயிலை இழந்ததும் நாவாம்ப்பாளை ‘நடுவீட்டுத்தாலி’யுடன் மறுமணம் கொள்கிறார் முத்துசாமி. புரோகிதன் கவுண்டன் வந்து திருமணம் நடத்தி வைக்கும் புதுச்சேரி கவுண்டர் சமூக வழக்குகளை ஆங்காங்கே தெரிந்து கொள்ள வாய்க்கிறது. பிரான்சின் காலனியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு ஃப்ரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பாரிஸுக்குப் போகும் முனுசாமியும், இந்த ஊரிலேயே ஆன்மிகத்தில் தொலைந்ந்து போகும் ரங்கசாமியும் புதுச்சேரி நிலத்தின் வரலாற்றை சற்று கோடிட்டு காட்டுகின்றார்கள்.

கதையின் தொடக்கத்தில், கோர்க்காட்டு அமாசைக் கிழவரும், முத்துசாமிக் கிழவரும் கடந்த காலத்தை பற்றி மிகவும் ஆதுரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். கதை முடியும்போது கிழவர் தத்துப்பேரனான பிச்சாண்டியுடன் சேர்ந்து நிலத்தின் மீதான தன் நம்பிக்கயை மீட்டெடுக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு இடையேயான சமூக வரலாற்றை முன்-பின்னாக சொல்லிச் செல்கிறது. ஒரு புராண காலத்து வீரனாக வாழ்ந்து, நாடி ஒடுங்கி விழுந்துவிட்ட முத்துசாமிக்கு அந்த நிலத்தின் மீதான நேசம்தான் உயிரை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறது. முதலில் ரெட்டிகளால் நிலம் பிடுங்கப்படும்போதும், பிறகு பார்த்தசாரதி ஐயரிடம் குத்தகைக்காக கிடந்து தவிக்கும்போதும் அதே நிலத்தின் மீதான் காதல்தான் முத்துசாமியை நிலை நிறுத்துகிறது. திருக்குறளில் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறள் வரும். கடலோடும் நாவாயும், நிலத்தில் ஓடும் நெடுந்தேர்ப் பற்றியும் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் அது. முத்துசாமி நிலம் மீதான பயணம், பாய்மரக்கப்பல் போல மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்று அலைக்கழிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது அந்தக் குறள்தான் நினைவிற்கு வந்தது. இடமறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் வள்ளுவ கூற்றை சற்று மாற்றி, இடம் மாற்றி செயலாற்றுவதன் மூலம்தான் ஒருவன் வரலாற்றில் நிலைப்பெற முடியும் எனக்கூறும் நாவல் பாய்மரக்கப்பல்.

தொடர் இயக்கம் வழியே மட்டும் ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்க முடியும். அது சாமானியப்பட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பரீட்சிக்கப்படும் எழுத்தை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் புறவுலகின் பாதிப்புகளுக்கு தன்னைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான், அதை அழகுணர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் மீட்டெடுத்து நமக்கு அளிக்க முடியும். பாவண்ணனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ‘கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் மரப்பாச்சி பொம்மைகள் போல நினைவுகள் அவருள்ளே ஊறிக் கொண்டேயிருக்கின்றன’.

வளவனூரில் இருக்கும் ஏரிப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக பதிகிறார். தென்பெண்ணை ஆறு நிரம்பியதும் வளவனூர் ஏரிக்கு நீர் வரத்தொடங்கி விடுகிறது. ஒருமுறை நிரம்பினால் ஆறு மாதஙளுக்கு நீர் ததும்பியபடி இருக்கும். சிறுவர்களின் கணக்கில் காலாண்டு தேர்வுக்கு நிரம்பத் தொடங்கும் ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயம் வரை நிரம்பியபடித்தான் இருக்கும். ஏரியில் புரளும் புதுவெள்ளத்தோடு போட்டிப் போடும் சிறுவர்கள் பற்றிய விவரணைகள் நம்மை அக்காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. மதுரை பசுமலைக் கண்மாயில் நண்பர்களுடன் நான் போட்ட குதியாட்டங்களூம், கலைநகர் பக்கம் பட்டிமேட்டில் விவசாயக் கிணற்றில் குதித்தோடிய அனுபவங்களையும் ஒப்புநோக்கி பார்த்து மகிழ்ந்த வண்ணம் வாசித்துக் கொண்டு வந்தேன். நடுவே அவருடைய பள்ளித்தோழி சரஸ்வதி ‘நீ குளிக்கப் போகலியா? உனக்கு நீச்சல் தெரியாதா? உனக்கு நான் நீச்சல் கத்துக் கொடுக்கவா?’ என்றெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவருக்கு விருப்பம் இல்லாததால், ஏமாற்றத்தால் சுணங்கிப் போய், திரும்பிப் போய்விடும் சரஸ்வதியுடன் இவருடைய நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் போய்விடுகிறது. சரஸ்வதியிடம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தால் பாவண்ணனிடமிருந்து இன்னொரு நாவல் கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவருடைய நண்பன் பழநியின் தம்பி சேகர் அந்த ஏரியில் மூழ்கிப் இறந்து போய்விட அந்த ஏரியின் அமைதி அமானுஷ்யமாக மாறுகிறது.

‘துங்கபத்திரை கட்டுரைகளில்’ அதே ஏரி வறண்டு போய் கிடக்கும் அவலத்தையும் பதிவு செய்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் நிலங்களும், நீர் நிலைகளும், நதிகளும் தங்களுக்குள் ஒருபகுதியாக அவரைக் கொண்டிருக்கிறது என்பது இப்படியான தொடர் பதிவுகளில் தெரிகிறது. வற்றிப்போயிருக்கும் ஏரியைப் பற்றி குறிப்பிட்ட ‘வாழ்க்கை எனும் சுமை’ கட்டுரை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதே புள்ளியைத் தொட்டு ‘தீராநதி’ பேட்டியில் ‘சீதையின் துயரம்தானே ராமாயணம், கண்ணகியின் துயரம்தானே சிலப்பதிகாரம், குந்தி, திரோபதை, சுபத்திரை என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்’ என்று குறிப்பிடுகிறார். இந்த பரிவான பார்வையை அவருடைய படைப்பெங்கும் தொடர்ந்து காண முடிகிறது. ‘வாழ்க்கையில் ஒரு நாள்’ எனும் சிறுகதையில் சண்முகவேலன் தொடர்ந்து கொந்தளிக்கும் மனநிலையுடனே இருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் தனித்துவ குரல்வளமும், அதன் குழைவும் அதன் வனப்பும் பற்றி பலரும் சிலாகிக்க எப்படியாவது சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்றுவிட வேண்டும் எனும் தணியாத ஆர்வம். அதற்கான தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியும்போதெல்லாம் அவனுக்கு ஆற்றாமை மேலோங்குகிறது. அவனுக்கு வரமாக வாய்த்த குரல்வளமே அவனுனை கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ஆழ்த்தி விடுகின்றன. இந்த முடிவில்லாத சுழலிலிருந்து சண்முகவேலன் விடுதலை பெறும் இடம், வாசிக்கும் நம்மையும் ஆட்கொண்டு விடுதலை பெற்றுத்தருகிறது.

pavannan

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட தொடர் இயங்குதலுக்கு அப்புறமும் பாவண்ணனின் படைப்புகள் பற்றி கவனம் தந்து பேசும் தரப்புகள் அதிகமில்லை. ஆனால் அவர் அப்படி தன்னை தேங்கச் செய்துகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தபடிதான் இருக்கிறார். அவர் எழுதத் தொடங்கியபோது பிறந்தேயிராத சில புதியவர்களை அவர்களின் ஆரம்ப நிலையிலேயே கவனித்து ஊக்கப்படுத்தும் விழைவைக் கொண்டவராக இருக்கிறார். ‘திண்ணை’ இணையதளத்தில், ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியம் படிக்க வரும் புதிய வாசகனுக்கு ஒரு வாசலாக அந்த கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும் என விருப்பப்பட்டு எழுதினார். சமீபத்தில் எழுத்தாளர் ‘சார்வாகன்’ மறைந்தபோது அவரைப் பற்றிய மிகச்சில பதிவுகளில் முக்கியமானதாக பாவண்ணனின் கட்டுரைதான் அமைந்திருந்தது. புதியவர்களுக்கான அறிமுகமும், பழையவர்களுக்கான அடையாளமுமாக இந்த இலக்கிய தொடர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் பாவண்ணன்.

அரசியல் சாய்வுகள் இல்லாத சர்ச்சைகளுக்கு வழிகோலாததொரு நிச்சலனமான எழுத்து இங்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. எந்த துறைகளிலும் இப்படியானதொரு தொடர் உழைப்பு பிறரிடம் ஒரு மரியாதையாவது ஏற்படுத்தும். ஆனால் தமிழில் தொடர்ந்து எழுதுகிறவர்களின் நிலை வேறு. இன்றைய பரந்து விரிந்த சமூக வலைத்தளத்தில், சினிமா பங்களிப்பு, அரசியல் நிலைப்பாடு, செல்வாக்குத் திறன் போன்ற காரணிகளால் மட்டுமே எழுத்து எடைபோடப்படுகிறது. தீவிர வாசிப்பற்ற, இலக்கிய உலகின் போக்குகளைப் பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாத, திருகல் பார்வையுடன் ஆவலாதி கூட்டும் குழு அரசியல்களால் நிறைந்திருக்கும் சூழலில், ஓரளவுக்கு நல் வாசிப்பைப் தங்கள் உள்ளே அடைகாத்து வரும் சில நல்ல நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பல சிறப்பிதழ் முயற்சிகள் மூத்த படைப்பாளிகளையும், அவர்களை போற்றும் அடுத்த தலைமுறைக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்.

பாவண்ணனின் பாய்மரக்கப்பல், கலப்படமில்லாத படைப்பூக்கம் என்னும் காற்றை சக்தியாகக் கொண்டு, என்றென்றும் கடலோடிக் கொண்டிருக்க வாழ்த்துகள்.

பாவண்ணனின் பயணம்

எம். கோபாலகிருஷ்ணன்

காலச்சுவடு வெளியிடும் பாவண்ணன் சிறுகதை தொகுப்பின்  முன்னுரை

உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன. மனித உறவுகளின் ஒளிமிகு வடிவெங்களென தாய்மையும் காதலும் கருணையும் பிரகாசிக்கும்போது அவற்றின் மறுபக்கமாகக் கயமையும் துரோகமும் வன்மமும் அச்சுறுத்துகின்றன. பல சமயங்களில் மேன்மைகளின் முகப்பூச்சுடன் சிறுமைகளே கோலோச்சுகின்றன. மனிதனின் மனம் ஏற்கும் பாவனைகள் பலவும் முன்னுதாரணங்கள் அற்றவை. தனித்துவமானவை. அச்சத்தையும் பயங்கரத்தையும் விதைப்பவை. உறவுகளை அது அணுகும் விதம் வகுத்திட இயலாத சிக்கல்களைக் கொண்டது. மனித மனதின் இருளினூடே எப்போதும் பயணிக்கும் கலை கண்டடைய விழைவது, அந்த இருளில் எங்கேனும் புதைந்திருக்கும் ஒளியின் சிறு துகளையே. அக்கினிக் குஞ்சுபோல மீச்சிறு உரு கொண்டபோதும் அவ்வொளியே இருளைப் போக்கவல்லது. கருணை எனும் அவ்வொளியே மனிதனைப் பிற உயிர்களின்று தனித்துவப்படுத்துகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஆன்மிக ஞானம் அவ்வொளியிலிருந்து பிறந்ததே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் மெய்யியல் அதிலிருந்து தளைத்ததே.

உலகெங்கிலும் உள்ள மதங்களும் மார்க்கங்களும் ஞானிகளும் ஆன்மிகவாதிகளும் மனித வாழ்வின் உய்விற்கு வழியாக உபதேசித்திருப்பது கருணையின் பல்வேறு விதமான பாதைகளையே. அத்தகைய கருணையின் ஒளிகொண்டு உருவான உறவுகளின் சித்திரங்களே பாவண்ணனின் சிறுகதை உலகம்.

***

1980களில் வேலையின்மை என்பது ஒரு சமூக அடையாளமாகவே இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரும் வேலையின்மையின் பொருட்டு இடம்பெயர நேர்ந்தது. குடும்பத்தைப் பிரிவது என்பது அதுவரையிலும் யோசித்திராத ஒன்று. ஆரம்பக்கல்வி முதலே விடுதிகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிடும் இன்றைய நாகரிகம் தொடங்கியிராத காலம் அது. பசியோடும் வறுமையோடும் போராடி, படித்து, பெரும் போராட்டத்துக்குப் பின் கிடைத்த வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கும் சந்தர்ப்பத்தில் ஆளாக்கிய அப்பாவும் அம்மாவும் அருகிலிருக்க மாட்டார்கள். மொழி அறியாத ஊரில் முகம் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அறையின் தனிமையில் மனம் திரும்பத் திரும்ப ஊரையும் உறவுகளையுமே நாடியோடும்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ் இலக்கியத்தில் சிறுபத்திரிக்கைகளின் எழுச்சியும் நிகழ்ந்தது. தீபம், கணையாழி தொடங்கி ஏராளமான சிறுபத்திரிக்கைகள் அங்கங்கே தோன்றி மறைந்தபடியே இருந்தன. இங்கே இனி, நிகழ், மீட்சி என நீண்ட பட்டியல் உண்டு. தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் புதிய பெயர்கள் பலவும் இடம்பெறத் தொடங்கியதும் இப்பத்திரிக்கைகளின் வழியாகவே. பம்பாயிலிருந்து நாஞ்சில் நாடனும் ஹைதராபாத்திலிருந்து சுப்ரபாரதிமணியனும் பெங்களூரிலிருந்து பாவண்ணனும் எழுத்தின் வழியே தொலைவையும் இழந்த மனிதர்களையும் மீட்க முனைந்தார்கள். பிறந்து வளர்ந்த ஊரும் அதன் மனிதர்களும் சூழல்களும் வாசனையோடும் நிறங்களோடும் அவர்களின் கதைகளாகின. வேறிடத்தில் வேற்று மனிதர்களின் நடுவில் இருந்து இழந்துபோன உறவுகளை நினைவுகளை எழுத்தின் வழியாக மீட்டெடுக்க முனைந்தனர். ரயில்வே ஸ்டேஷன், ஆலமரம், ஏரிக்கரை, வேலங்காடு, தென்னந்தோப்பு என கிராமத்தில் ஓடியாடிக் குதூகலித்த இடங்களும் சுக்குக்காப்பிக்காரர், ஆப்பக்காரக் கிழவி, குதிரைவண்டித் தாத்தா, தோட்டக்காரப் பெரியவர், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள், எளியவர்கள், ஏழைகள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் தாம் கண்டு, அனுபவித்த அவமானங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வறுமை, அகங்காரம், பொறாமை, விரோதம், தடுமாற்றம், தவிப்பு என உணர்வுகளும் மேலெழுந்து கதையுலகை நிறைத்திருந்தன.

***

பாவண்ணனின் முதல் சிறுகதை தீபம் இதழில்  1982ஆம் ஆண்டில் வெளியானது. எந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்படாத அக்கதையின் பிரதிகூட இப்போது கைவசம் இல்லை. 1987ஆம் ஆண்டில் முதல் சிறுகதைத் தொகுப்பு “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” காவ்யா வெளியீடாக பிரசுரம் பெற்றது. அவருடைய பதினாறாம் சிறுகதைத் தொகுப்பான ‘பாக்குத் தோட்டம்’ 2014ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. 33 ஆண்டுகால நீண்ட சிறுகதைப் பயணத்தில் பாவண்ணன் எழுதியுள்ள கதைகளின் எண்ணிக்கை 184.

மேலோட்டமாகப் பார்த்தால் இத்தொகுப்பு பாவண்ணனின் 33 ஆண்டுகால சிறுகதைப் பயணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் என்றே பொருள்கொள்ள முடியும். உண்மையில் இது ஒரு தலைமுறையின் பயணம். சிக்கல்களும் புதிர்களும் நிரம்பிய உறவுகளினூடாக நிகழ்ந்திருக்கும் கரடுமுரடான பயணம். இதன் பாதையில் தொடர்ந்து வரும்போது பாவண்ணனின் பயணத்தை மூன்று நிலைகளாக வகுத்துவிட முடியும். ஒன்று, இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு. நமது வாழ்வின் அதிமுக்கியமான மையமாகிய இந்த உறவிலிருந்து மனிதன் எத்தனை விலகி வந்திருக்கிறான் என்பதையே இன்றைய இயற்கைச் சீரழிவுகளும் புவியியல் மாற்றங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இயற்கையுடனான மனிதனின் உறவு இயல்பானது. தன்னிச்சையானது. எளிமையானதும்கூட. அன்றாடம் நாம் காணும் மரங்கள், செடிகள், பூக்கள், பறவைகள், விலங்குகள், வானத்தின் நிறங்கள், காற்றின் விதங்கள் என்று அனைத்துமே அந்த உறவின் வெளிப்பாடுகளே. இன்று நம் நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கும் மரங்களின், பறவைகளின், பூக்களின் எண்ணிக்கையை யோசித்துப் பார்த்தாலே இன்றைய வாழ்வு இயற்கையிலிருந்து எத்தனை தொலைவு விலகி வந்துள்ளது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு என்பது வாழ்வின் ஒரு அம்சமாக இருந்தது என்பதையே பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகச் சுட்டி நிற்கின்றன. அவரது கதைகளில் இடம்பெறும் நிலமாகட்டும் பறவைகளாகட்டும் தாவரங்களாகட்டும் அனைத்துமே சூழல்களை நிறுவுவதோடு நின்றுவிடாது கதாபாத்திரங்களின் மனவோட்டத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துமளவுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளன. அவரது கதைகள் பலவற்றின் தலைப்புகளுமே இதை அடையாளப்படுத்துகின்றன (ஒற்றை மரம், இரண்டு மரங்கள், நெல்லித்தோப்பு, செடி, தனிமரம்) மண்ணின் மீதான பற்றுதலும் மனிதர்களின்பாலான பந்தமும் இயற்கையுடனான மனித உறவின் நீட்சியே.

பாவண்ணனின் சிறுகதை உலகின் அடுத்த படிநிலை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு. கிராம அமைப்பு என்பதே ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து அல்லது அனுசரித்து வாழும் ஒரு முறையை வகுத்திருந்தது. மனிதர்களுக்கு இடையேயான உறவு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதிலிருந்தே சமூகத்தின் பல மதிப்பீடுகள் கிளைத்தன. சமூகத்தின் எளிய மனிதர்களைக் கரிசனையுடன் காணும் பார்வை இத்தகைய உறவின் ஊற்றிலிருந்தே உருவாகிறது. இயற்கையுடனான உறவிலிருந்து விலகி வந்துவிட்டது போலவே இன்று சக மனிதனுடனான உறவிலிருந்தும் நாம் மெல்லமெல்ல விலகி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டோம். ‘பசிக்குதுப்பா’ என்று உடல் வளைத்துச் கெஞ்சலுடன் யாசித்து நிற்கும் மூதாட்டியையோ சிறுமியையோ சிறிதும் பொருட்படுத்தாது சிக்னல் விளக்கில் கண்வைத்துக் காத்திருக்கும் சுரணையற்ற தன்மையை நாம் அடைந்துவிட்டோம்.

மனித உறவுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. தீராத மர்மங்களையும் திகைப்பூட்டும் சமரசங்களையும் உலகின் நிருபிக்கப்பட்ட சமன்பாடுகளுக்குள் சிக்காத விநோதங்களையும் தொடர்ந்து முன்வைத்தபடியே இருப்பவை. பாவண்ணனின் பல கதைகளும் உறவின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் உள்ளீடாகக் கொண்டவை (பலி, கையெழுத்து, வரிசை, வதை, அடுக்கு மாளிகை, உறவு, முள், கூட்டாளிகள், மரம், கழிமுகம்) விசாலமான பார்வையும் ஈரமான அணுகுமுறையுமே புறவுலகின் ஒவ்வொரு அசைவையும் அர்த்தப்படுத்துபவையாக இருக்கமுடியும். முன்முடிவுகள் இல்லாத, எவர்பொருட்டும் சாய்வற்ற பார்வையைக் கொண்டு அணுகும்போதே உறவுகளின் பரிமாணங்களை அவற்றின் எல்லா சாத்தியங்களுடனும் கண்டடைய முடியும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தம்மளவிலான நியாயங்களை முழுமையாக முன்வைப்பதன் மூலமே பூரணமான புரிதலை அடையமுடியும்.

அடுத்தவர் மீதான கரிசனத்தை வைத்தே அன்றாட பாடுகளுக்காக மனிதர்கள் ஏற்கும் பாரங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். எளிய மனிதர்கள் ஒவ்வொரு பொழுதுக்கும் வாழ்வைக் கடத்த மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாதவை. அடைக்கலம், வெளியேற்றம், வண்டி, பயணம், சாயா, வழி, நொண்டிப் பறவைகள், வதைபடும் தினங்கள், சிலுவை, மீரா, சாட்சி, கீரைக்காரி, சட்டை, முடியவில்லை, பாம்பு, நெருப்பு வளையங்கள் உள்ளிட்ட கதைகளின் வழியே அவ்வாறான சில அபூர்வமான சித்திரங்களைப் பாவண்ணன் நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வெறுமனே வேடிக்கை பார்ப்பவனின் சித்தரிப்பாக நின்றுவிடாமல் அவர்களது வலியையும் இருப்பையும் உள்ளார்ந்த அக்கறையுடன் புரிந்துகொள்ளும் முனைப்பு இக்கதைகளைச் செறிவாக்கித் தந்துள்ளன.

மூன்றாவது நிலை இயற்கையுடனான உறவிலிருந்தும் மனிதர்களுடனான உறவிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனிமனிதனாக மட்டுமே சுருக்கிக்கொண்டிருக்கும் நிலை. நம்மைச் சுற்றி நாம் காணும் பெரும்பான்மை வாழ்வு தனிமனிதனை மையப்படுத்தியதே. தன்னைச் சுற்றி நிகழும் உலகைக் கவனிக்கத் தேவையுமில்லை, பொழுதுமில்லை. மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் தொலைத்துவிட்டு சுயநலத்துடன் இன்றில் இப்பொழுதில் மட்டுமே ‘இருந்து’கொண்டிருக்கும் நவீன வாழ்வின் அவசரச் சித்திரங்களாய் அமைந்த கதைகள் அடையாளம், பாதுகாப்பு, அடைக்கலம், மீரா, காலத்தின் விளிம்பில் போன்றவை.

அடுத்தவர் மீதான அக்கறையில்லாத வாழ்வு என்பது அனைவரின் மீதும் இன்று நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்று. நவீன தொழில் நுட்ப வசதிகளும் அனைத்துத் தனி அடையாளங்களையும் பொது அடையாளங்களுக்குள் கரைத்துவிடும் உலகளாவிய போக்கும் நம்மை அப்படி வழி திருப்புகின்றன. இருப்பினும் சிலர் தனித்துவத்துடன் உலகின் அனைத்துப் போக்குகளுக்கு நடுவிலும் தமக்கான குணம் மாறாமல் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் அபூர்வமானவர்கள். பிரயாணம், கூடு, வைராக்கியம் போன்ற கதைகளில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட தனித்துவங்களுடன் உலகப் பொது நியதியிலிருந்து தம்மை விலக்கிக்கொண்ட மனிதர்கள். இப்படிப்பட்டவர்களை நம்மால் ஒருகணம் வியப்புடன் பார்க்கவும் நம்மால் இப்படியெல்லாம் இருக்க முடியாதுப்பா என்று அவசரமாய் விலகிவிடவுமே முடிகிறது.

தெருவில் கூடிவிளையாட முடியாத ஒரு தலைமுறைதான் அடுத்த வீட்டுக்காரனைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையில்லாமல் தான், தன் சுகம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. விளையாட்டும் வேடிக்கையும் துள்ளலும் மிக்க சிறுவர்களின் உலகம் மிக எளிமையானது. ஒப்பனைகளற்றது. அன்றாடங்களின் நெருக்கடிகளிலிருந்தும் அவஸ்தைகளிலிருந்தும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது சிறுவயது நினைவுகளின் நிழல்களிலேயே. உப்பு, கூண்டு, சின்னம், ராஜண்ணா, வெளியேற்றப்பட்ட குதிரை போன்ற கதைகளில் கோலி, பம்பரம், கிட்டிப்புள், சடுகுடு, தாயம், சுங்கரைக்காய், ஏழாங்காய், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற  சிறுவயது விளையாட்டுக்கள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. இன்றைய சிறுவர்களின் உலகம் இழந்துவிட்ட புறவுலகின் அழகுகளை, தோழமையின் ஆழங்களை இக்கதைகள் ஏக்கத்துடன் சுட்டி நிற்கின்றன.

இந்த மூன்று நிலைகளையும் கடந்து நிற்கும்போது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் முறைமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. இந்த மதிப்பீடுகளுக்கும் அறங்களுக்கும் உதாரணமாகக் காட்டப்படும் காவிய மாந்தர்களை, சரித்திரச் சம்பவங்களைப் புதிய கோணத்தில் அணுகி விமர்சிக்கவேண்டிய தேவையும் உருவாகிறது. கடந்த காலம் மீள்பார்வைக்கு உட்படுகிறது. நாம் நன்கறிந்த புராண மாந்தர்களையும் இதிகாச நிகழ்வுகளையும் இன்றைய பார்வையில் அணுகும்போது புதிய திறப்புகளும் புரிதல்களும் சாத்தியமாகின்றன. அன்னை, கண்கள், வெள்ளம், தங்க மாலை, திரை, புதிர், ஏவாளின் இரண்டாம் முடிவு, ஏழுலட்சம் வரிகள்அல்லி, ரணம், சுழல், வாசவதத்தை, முற்றுகை ஆகிய கதைகளின் வழியாக பாவண்ணன் காட்டும் சரித்திர நிகழ்வுகள் புதிய கேள்விகளுடன் முன் நிற்கின்றன. காவியங்களும் இதிகாசங்களும் எப்போதும் புதிய வாசிப்புக்கும் பொருள்படுத்தலுக்கும் விமர்சனங்களுக்கும் விரிவான அளவில் இடம் தருபவை. காலம் தாண்டியும் தம்மளவில் அவை கொண்டிருக்கும் செறிவும் இடைவெளிகளுமே அத்தகைய பார்வையை சாத்தியப்படுத்துகின்றன.

சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்த மனிதன் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனித்தவனாக, தனக்கான உலகத்தில் தான் மட்டுமே இருக்கும்போது அவன் மீது இரண்டுவிதமான அழுத்தங்கள் உருவாகின்றன. தனது கடந்த காலம் அவனுள் உருவாக்கி வைத்துள்ள வாழ்க்கை சார்ந்த பார்வையை, மதிப்பீடுகளை அவனால் முற்றிலும் உதறிவிட முடியவில்லை. அதேசமயத்தில் இன்றைய நவீன வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கேற்ப எதையும் பொருட்படுத்தாதவனாக தன்னை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவைக்கும் ஆட்பட்டிருக்கிறான். இந்த இரண்டுக்கும் நடுவில் சரிகளும் தவறுகளும் இடம் மாறி குழப்பமான ஒருநிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த அழுத்தம் அவனை நோய்மையில் கொண்டு தள்ளுகிறது.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் இணையாக அதன் அசுரத்தனமும் நோய்களின் பெருக்கமும் பெரும் சவால் விடுத்தபடியேதான் உள்ளன. மரணத்தை வெல்லும் முனைப்பும், முடியாதபோது அதை ஒத்திப்போடும் முயற்சியுமே மருத்துவத்தின் சாத்தியம். எல்லாவற்றையும் தாண்டி விடைகாண முடியாத புதிரென மரணம் பல புதிய நோய்களின் வழியாகத் தன்னைப் புதிய வடிவில் வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது. பூனைக்குட்டி, நித்யா, அழைப்பு உள்ளிட்ட கதைகளில் காணும் நோய்மையின் விநோதங்கள் நவீன வாழ்வைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

***

பாவண்ணனின் ஆரம்பகாலக் கதைகள் பலவும் உறவுகள், சகமனிதர்கள், நண்பர்கள், அன்றாட வாழ்வின் சுமைகள் அதன் வலிகள் என்று அன்றைய காலகட்டத்தின் கறுப்பு வெள்ளைப் படங்களாக அமைந்துள்ளன. சொந்தங்களை சொந்த மண்ணை நீங்கிய மனம் அவற்றின் ஒவ்வொரு அங்கத்தையும் மன அடுக்கிலிருந்து ஒவ்வொன்றாய்த் தொட்டெடுத்து மீட்டிப் பார்க்கும் பேரனுபவமே கதைகளாகியுள்ளன. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, வெளியேற்றம், நேற்று வாழ்ந்தவர்கள் என்று தலைப்புகளே துயரம் சுமந்து நிற்கின்றன. ஆனால் காலம் மெல்ல மெல்ல இந்தப் பார்வையை முன்னகர்த்துகிறது. தொலைந்துபோன அல்லது தொலைவும் வேறிடமும் பிரித்து வைத்திருக்கும் உறவுகளை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கண்டடைய முனைகிறது மனம். உறவுகளிடம் தளையத் துடிக்கும் மனம் பற்றுகோல் தேடி அலைந்து எல்லா உறவும் எமதுறவே எனும் பேரனுபவத்தை அடைகிறது. நவீன வாழ்க்கை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை அதன் விளைவுகளைக் காட்சிப்படுத்தத் தொடங்குகிறது. உறவுகள் சார்ந்தும் மதிப்பீடுகள் சார்ந்தும் வாழ்வின் பார்வை மாற்றம் பெறுகிறது.

உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலுமாக விலகிய இயந்திரமயமான வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டே யிருக்கின்றன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை. தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்களின் மீதான அக்கறையும் இயற்கையின் மீதான கரிசனமும் கூடிய ஆன்மிகமே அது. அந்தப் பிரதேச எல்லைகளையும், மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த அந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகம் முழுக்கத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத்தகுந்ததாக அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை மனிதனுக்குள் மனிதனை மட்டுமே காணும் தூய ஆன்மிகத்தின் வழியாக பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகப் பறைசாற்றியபடியே உள்ளன.

கோவை, எம்.கோபாலகிருஷ்ணன்

10.08.2015

விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை

திருஞானசம்பந்தம்

IMG_20140727_144132

வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி  தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும்  நிரம்பியிருக்கும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே  விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து  வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே   போல்  தன் முலை சுரக்கும்.

வயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.

எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.

காலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயணிக்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.

கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை  என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.

மகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை  எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

குணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.

paruvam-06867

காவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது? இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன்  நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர்  வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.

இவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.

மெல்ல இருட்டுத் திரை விலகத்  தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு  தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.

நெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்ததுகாட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தனபறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர்  தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.

போர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் அமரர்ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது  நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.