எழுத்து

கனி கானல்

அதிகாரநந்தி

 

உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்றார்கள்
நீ அவனைப் போலவே இருக்கிறாய் என்றார்கள்
என்னைப் பார்த்து அவனைப் பற்றிப் பேசினார்கள்
ரெண்டு பேருக்கும் ஒரே குணம் என்றார்கள்
ஒன்று போல் கோபம் என்றார்கள்
நன்றி கெட்டவர்கள் என்றார்கள்

நான் அவனில்லை என்று நம்பலாம்
நம்புவதெல்லாம் உண்மையுமில்லை
நிஜம் ஓரிரவில் வெளிப்படுவதில்லை
காலம் முன்னே போக
புன்னகைகள் வேலை செய்யாது போயின
நேர்ப்பார்வைகள் கூசின
கவலைப் பரிமாற்றங்கள் நின்று போயின
ஒருநாள்
ஒருவரில் ஒருவரைக் கண்டு கொண்டோம்.

 

ஒளிப்பட உதவி – Neal Small, 1stdibs

பருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்

பாஸ்டன் பாலா

I

ஆறு வயதில் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் ஆடிஷன் வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஒரு மினி திரைத்தாரகையாக ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன். பின்னர் இயக்குநரின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா பேசிக்கொண்டிருந்தார்கள். அதை வைத்தோ, என்னுடைய முகத்தை வைத்தோ, என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆறு வயதில் நான் எப்படி இருந்தேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயது புகைப்படம் இருக்கிறது. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. குண்டு கன்னம்; கண்ணாடி போடாமல் மலங்க மலங்க விழிக்கிறேன்; வட்ட முகம்; நிச்சயமாக நானில்லை. ஆனால், அது நான்தான். “நான் மாறிக் கொண்டேயிருந்தால், எவனாக நான் இருந்தேனோ, அது நானில்லை” – ரில்கே சொன்ன கதை இது. (Rilke, The Notebooks of Malte Laurids Brigge). நான்- எல்லாம் மாறும்போதும் எது மாறுவதில்லை? – இந்த பாரடாக்ஸை அணுக முயற்சிக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் (Richard Linklater). இதற்கு முன் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. (more…)

அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

வெ. கணேஷ்

வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்

+++++

ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……

+++++

இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்

+++++

இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

+++++

“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்

ஒளிப்பட உதவி – dolls of india

The Granta Book of the American Short Story – Richard Ford : அறிமுகம்

அஜய் ஆர்

ஒரு எழுத்தாளரின் சிறந்த கதைகள் என தொகுக்கப்படும் தொகைநூல் குறித்தே பல வேறுபட்ட பார்வைகள் இருக்கும்போது, அமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தின் சிறந்த படைப்புகள் என ரிச்சர்ட் போர்டால் (Richard Ford) தொகுக்கப்பட்டுள்ள ‘The Granta Book of the American Short Story’ இன் இரண்டாம் தொகுப்பை, முழுமையான ஒன்றாக, அதுவும் இந்தியாவிலிருந்து கொண்டு (நமக்கு படிக்கக் கிடைப்பதை வைத்து) அமெரிக்க இலக்கியச் சூழலை கவனிக்கும் நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியாது.

2007இல் வெளிவந்த இந்த இரண்டாவது தொகுப்பேகூட, 1992இல் வெளிவந்த (அதையும் தொகுத்தது போர்ட்தான்), முதல் தொகுப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. முதல் தொகுப்பில் இல்லாத எழுத்தாளர்கள், அதில் இருந்த எழுத்தாளர்கள், ஆனால் அவர்களின் வேறு கதைகள் என பல மாற்றங்கள் உள்ளன (அதற்காக மாற்றப்பட்ட கதைகள் சிறந்து அல்ல என்று கூற முடியமா, போர்டின் பார்வை அந்த 15 ஆண்டுகளில் மாறி இருந்திருக்கலாம்). (more…)

அந்திப் பொழுது

 

கீழ்வானம் சிவக்க,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் விளக்குகள் எரிய
வாகனங்களின் சப்தமும் கீச்சு கீச்சு என்ற பறவை ஒலியும்
சேர்ந்து கொள்ளும் சந்தி வேளையில்
நாங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம்
எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் அவர்
அடுத்துச் சொல்லப்போவது எனக்கு தெரியும்-

“நாகராஜன் ஹார்ட் அட்டாக்ல நேத்து போயிட்டார்”

மெளனமாய் நடக்கிறோம்

“அடுத்தது நான்தானோ?
என் வயசுக்காரா ஒவ்வொருத்தரா போயிண்டு இருக்கா,
அடுத்தது என் முறை.
பேஸ்மேக்கர் எவ்வளவு நாள்தான் என்னைக் காப்பாத்தும்?”

பெட்டிக் கடைக்காரன் எங்களை பார்த்து புன்னகைக்கிறான்
இரண்டு வருடங்களாக இதே சந்திப் பொழுதில்
இதே தெருவில் தினமும் நடக்கிறோம்.

“பட் ஐ ஹாவ் நோ ரிக்ரெட்ஸ்
எனக்கு எந்த வருத்தமும் இல்லை
வாழ்கையை நல்லா அனுபவிச்சாச்சு. வேற என்ன வேணும்?”

சூரியன் சோர்வடைய, சிவப்பு கரைய
மேற்கு திசையை இருள் கவ்வ
வீதி விளக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
வீடு திரும்பும் வாகனங்களின் ஹார்ன் காதைத் துளைக்க
பறவைகளின் கூக்குரல்கள் அடங்க
இன்னொரு நாளும் கழிந்தது.

ஒளிப்பட உதவி – Finnsticks blog