எழுத்து

இடமாற்றம்

காஸ்மிக் தூசி 

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,

தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.

மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்

நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.

ருத்ரதாரி

எஸ். சுரேஷ் 

Image credit: craiyon.com

அவன் கையை மேலேயும் கீழேயும் ஆட்டி காரை நிறுத்துமாறு சைகை செய்தான். கார் நின்றது. பிறகு வர்ஷா உட்கார்ந்திருந்த பக்கம் வந்து, “என் பெயர் தரம். டூரிஸ்ட் கைடு. உங்களை ருத்ரதாரி அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான்.

வர்ஷா டிரைவரை பார்த்து, “கைட் வேண்டுமா?” என்று கேட்டாள். “அருவி காட்டுக்குள் இருக்கிறது மேடம். கைடு இருந்தால் நல்லது,” என்றான்.

“எவ்வளவு?” என்று வர்ஷா கேட்டாள்

“ஐநூறு ரூபாய் மேடம்”

“நானூறு கொடுக்கறேன்”

தரம் தலையை சொறிந்தான். “நானூறுக்கு  ஒப்புக்கொள்,” என்றான் டிரைவர்.

“சரி”.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு குடிசை, அதில் ஒரு டீக்கடை இருந்தது. நாலாபுரமும் ஹிமாலய மலைத்தொடர் அவர்களை சூழ்ந்திருந்தது. வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. சூரிய ஒளியில் பச்சை பசேல் என்று இருந்த மலைகள் இப்பொழுது கரும்பச்சை நிறமாக தோற்றமளித்தன. சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்த கோமதி நதியின் சலசலப்பு கேட்டது. இருள் சூழ்ந்திருந்த அந்த பிரதேசம் ஒரு கனவு உலகு போல் தோற்றமளித்தது. உடலை ஊடுருவி பனிக்காற்று வீசியது.

வர்ஷா தன் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்துவரை இழுத்தாள். உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் குளிருக்கு அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. சில்லென்று இருந்த கைகளால் தன் முகத்தை தடவிக் கொடுத்தாள். குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டு மேகங்களை பார்த்தாள். ஒரு முறை எல்லா மலைகளையும் நோட்டமிட்டாள். இது போன்ற அழகு ஹிமாலயா பகுதியில்தான் கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கருமேகங்களை பார்த்தபடி, “மழை வரும் போல் இருக்கிறதே,” என்றாள்.

“இல்லை மேடம். மழை வராது. இரவு பனி பெய்யலாம் ஆனால் இப்பொழுது மழை வராது,” என்றான்.

“அவ்வளவு உறுதியாக உன்னால் எப்படி சொல்ல முடியும்?”

அவன் சிரித்துக் கொண்டே, “நான் பல ஆண்டுகளாக இங்கு கைடாக இருக்கிறேன். மேகங்களைப் பார்த்தால் மழை வருமா வராதா என்பது தெரிந்து விடும்”

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முதலில் பாதை மேலே ஏறியது. “ரொம்ப அப்ஹில்லா இருக்குமா?” என்று வர்ஷா கேட்க, “கடைசியில் கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும். இப்போது கிட்டதட்ட சமதரைதான்” என்றான் தரம்.

மேலே ஏறியவர்கள், கீழ் நோக்கி  ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அங்கு கோமதி நதி ஒரு பெரிய ஓடை போல் இருந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் ஓடியது. நதிக்கரையில் பெரிய கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு குளிர் இன்னும் அதிகமாக இருப்பது போல் வர்ஷாவுக்கு தோன்றியது. கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கிப் போர்த்துக் கொண்டாள்.

தரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இன்று குளிர் அதிகம் இல்லை. சலேங்கே தோ டண்ட் நகின் லகேகா. நடந்தால் குளிர் தெரியாது”

வர்ஷா கரையில் நின்றுகொண்டு நதியில் கை வைத்தாள். கையில் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தாள். சட்டென்று தண்ணீரிலிருந்து கையை எடுத்துவிட்டு தரமைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவன், “தண்ணீரில்  நடந்து நதியைக் கடப்போமா?” என்றான். “ஒ நோ. இந்த குளிர் எனக்கு தாங்காது,” என்றாள் வர்ஷா. நதியின் நடுவில் இருந்த கற்களின் மேலே நடந்து நதியை கடந்தார்கள்.

உயர்ந்த மரங்கள். காட்டுக்குள் நுழைந்தார்கள். காட்டில் இருட்டு அதிகமாக இருந்தது. “நிச்சயமாக மழை வராதா?” என்று வர்ஷா கேட்க, “நிச்சயம் வராது. என்னை நம்புங்கள்” என்றான் தரம்.

சற்று தொலைவு நடந்த பிறகு ஒரு சிறு ஓடை வந்தது. அதை ஒரு மரக்கிளை ஏறிக் கடக்க வேண்டும். முதலில் சென்ற தரம், தான் கிளையை விட்டு விழுந்து விடுவதுபோல் நடித்தான். இரண்டு கைகளையும் நீட்டி, ஒரு காலில் ஏதோ நர்த்தனம் செய்வது போல் செய்தான். தன் முன் சேட்டை செய்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞனின் வெகுளித்தனத்தை கண்டு வர்ஷாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் இந்த இயற்கை போல் கல்மிஷம் இல்லாதவனாக தென்பட்டான். நடந்து நடந்து அவனுடைய உடல் சிக்கென்று இருந்தது. அவன் வெகு சுலபமாக நடந்து கொண்டிருந்தான்.

“நீங்க கௌசானிக்கு வருவது இதுதான் முதல் முறையா?”

“ஆமாம். உத்தராகண்டுக்கே இது தான் முதல் முறை. நீ எவ்வளவு நாட்களாக கைடு வேலை செய்கிறாய்?”

“ஐந்து. நீங்க ஏன் தனியாக  வந்திருக்கிறீர்கள்? உங்கள் கணவர் வரவில்லையா?”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை”

“உங்க போல அழகான பெண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை. நம்ப முடியலை”

எல்லோரும் அடிக்கடி கல்யாணப் பேச்சு எடுப்பதால், அவளுக்கு இதைப் பற்றி பேசினாலே எரிச்சலாக இருந்தது. ஆனால் இப்பொழுது தரம் இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்டதால், அவள் பதில் கூறினாள். “எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை. கல்யாணம் செய்து கொண்டால் அது நடக்காது. நான் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

தரம் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது அவர்கள் காட்டைக் கடந்துவிட்டு, புல்வெளி நிறைத்த இடத்துக்கு வந்திருந்தார்கள். காட்டை விட்டு வெளியே வந்ததும் குளிர் அதிகமானது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்றிருந்த வெளியை பார்த்து, “ஆஹா இந்த இடம் அற்புதமாக இருக்கிறது” என்றாள் வர்ஷா.

“காலையில் நன்றாக இருக்கும். இருட்டிவிட்டால் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கும். எப்பொழுதாவது கரடியும் வரும்” என்றான் தரம்.

வர்ஷா இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தாள். “இப்பொழுது கண்ணில் படுமா?”

தரம் சிரித்துவிட்டு, தன் இரு கைகளையும் உயர்த்தி, புலி போல் கர்ஜித்தான். “இந்த மிருகத்தைதான் நீங்கள் இங்கே பார்க்க முடியும்” என்றான். கள்ளம் கபடம் இல்லாத அந்த இளைஞனைப் பார்த்து வர்ஷா மறுபடியும் சிரித்தாள்.

அவர்கள் அந்த நடையின் கடைசி கட்டத்தை அடைந்து விட்டார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்த ஒரு மலையை ஏற வேண்டும். தரம் சுலபமாக ஏறிக் கொண்டிருந்தான். வர்ஷாவுக்கு மூச்சிறைத்தது. நடந்து வந்ததால் உடல் சூடேறியிருந்தது. ஜாக்கெட்டின் ஜிப்பை கீழிறக்கினாள். குளிர் காற்று அவள் நெஞ்சில் அடித்தது.

இருவரும் அருவிக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரதாரி அருவி உயரத்திலிருந்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அருவி விழும் இடத்தில் ஒரு குளம் உண்டாகியிருந்தது. தண்ணீரின் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அப்புறத்தில் ஒரு கோவில்.

தரம் குளத்தை காட்டி, “இதில் குளிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

வர்ஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. அதைக் கண்டு தரம் சிரித்தான். “பல பேர் குளித்திருக்கிறார்கள்”.

“அவர்கள் குளித்து விட்டுப் போகட்டும். நான் தண்ணீரில்  இறங்குவதாக இல்லை ”

பாலத்தைக் கடந்து கோவில் அருகில் வந்தார்கள். ஷூவை கழட்டி காலை கீழே வைத்த வர்ஷாவுக்கு மறுபடியும் ஷாக் அடித்தது போல் இருந்தது. “தரை எவ்வளவு சில்லென்று இருக்கிறது!” என்றாள்

ஒரே ஒரு அறை கொண்ட சிறிய கோவில். அறையில் ஒரு விக்ரஹமும், சுவற்றில் சில சாமி படங்களும் இருந்தன. ஒரு மூலையில் பாயும் கம்பளியும் பார்த்த வர்ஷா, “இங்கு யாராவது இருப்பார்களா?” என்று கேட்டாள்

“ஒரு ஸ்வாமிஜி இருப்பார். இப்பொழுது ரிஷிகேஷ் சென்றிருக்கிறார்”

“தனியாகவா இருப்பார்?”

“ஆமாம்”

“அவருக்கு குளிராதா? இரவில் காட்டுக்குள் இருப்பது அவருக்கு அச்சம்  தராதா?”

தரம் சிரித்தான். “அவர் இங்கே இருபது வருடங்களாக இருக்கிறார்”

கோவிலுக்கு வெளியே வந்து வர்ஷா ஒரு பாறை மேல் அமர்ந்தாள். நதி கீழே தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சத்தம் அருவியின் இரைச்சலை மீறி கேட்டது. மெல்லிய குளிர்க் காற்று வீசியது. வர்ஷாவையும் தரமையும் தவிர அங்கு எவரும் இல்லை. அந்த ஏகாந்தமான வேளையில் என்றும் காணாத அமைதியை வர்ஷா அடைந்தாள். இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் தரம் இப்பொழுது வர்ஷாவின் மனதை அறிந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்த வர்ஷா, வேண்டா வெறுப்பாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். தரம் அவள் பின்னால் வந்தான். கீழே இறங்கி புல்வெளியை அடைந்தார்கள்.

“நீங்க எந்த ஊரு?” என்று தரம் கேட்டான்

“சென்னை”

“சென்னை?”

“மெட்ராஸ்”

“ஆ. மத்ராஸ்”

“ஆனால் நான் இப்போ தில்லியில் வேலை செய்கிறேன்”

அவர்கள் நதியை அடைந்தபோது, நதிக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஓர் இளைஞன் உட்கார்ந்திருப்பதை வர்ஷா பார்த்தாள். அவன் தரமை பார்த்து சிரித்தான். நதியைக் கடக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.

“இது என் நண்பன், ரோஹித். அவனும் ஒரு கைடு.”

“இன்று நீ யாரையும் கைடு செய்யவில்லையா” என்று வர்ஷா அவனைப்  பார்த்து கேட்டாள்.

“இல்லை மேடம். இது டூரிஸ்ட் சீஸன் இல்லை. ஒருவரோ இருவரோதான் வருவார்கள்”

நதியை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைக்கு பக்கத்தில் வழவழப்பான ஒரு பெரிய பாறை இருந்தது. தரம் அதைக் காட்டி கேட்டான், “உங்களால் இந்த பாறை மேலஏற முடியுமா?”

“இது மேல் எப்படி ஏற முடியும். இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது”

“நாங்கள் ஏறுவோம் பாருங்கள்,” என்று கூறிவிட்டு தரமும் ரோஹித்தும் வீதியில் நடப்பது அந்த பாறை மேல் ஏறினார்கள். தரம் வர்ஷாவைப் பார்த்து சிரித்தான். “இன்னும் பெரிய பெரிய பாறைகள் எல்லாம் ஏறுவோம்” என்றான்.

“உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீங்கள்  எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்”

அவர்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். “மேடம் ஒரு டீ குடிப்போம்,” என்றான் தரம். அந்த குளிருக்கு டீ இதமாக இருந்தது. தரமும் வர்ஷாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ரோஹித் நின்றுகொண்டே டீ குடித்தான்.

அப்பொழுது வானம் சற்று வெளுத்திருந்தது. கிளம்பியபொழுது அப்பிக் கொண்டிருந்த இருள் இப்பொழுது இல்லை. தூரத்து மலைகள் இப்பொழுது தெளிவாக தெரிந்தன. விவரிக்க முடியாத வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.

வர்ஷா தரமை பார்த்து, “இப்போ மேகங்கள் அதிகம் இல்லை பார்,” என்றாள்

“மனிதர்களை போல் இயற்கையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்,” என்றான் தரம்.

“ஆனால் இயற்கை தன் சமநிலையை குலைத்துக் கொள்வதில்லை,” என்று ரோஹித் முடித்தான்.

பேசியது நானூறு ரூபாய் தான் என்றாலும் வர்ஷா தரமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். “நீ நன்றாக வழி காட்டினாய். ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்”

“மேடம். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆசை. நாங்கள்  தில்லிக்கு வந்து வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று தரம் கேட்டான்.

“இந்த அழகான இடத்தை விட்டுவிட்டு எதற்கு  தில்லி வர நினைக்கிறீர்கள்? நல்ல காற்று, சுத்தமான தண்ணீரை விட்டுவிட்டு எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கின்ற தில்லிக்கு எதற்கு  போகவேண்டும்?”

“வாழ்க்கைக்கு காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது இல்லையா மேடம். எங்களுக்கு வருவாய் மிகவும் குறைவு. டூரிஸ்ட் சீஸன்போது ஏதோ கொஞ்சம் பணம் வரும். இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் வராது. எங்கள் தோட்டத்தில் சில காய்கறிகள் விளையும். மற்றபடி இந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தில்லிக்கு வந்தால் மாதா மாதம் சம்பளம் கிடைக்கும். இங்க கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையை ஒரு அளவுக்கு நல்லபடியாக ஓட்டலாம்”

“இவ்வளவு நாள் ஏன் முயற்சி செய்யவில்லை?”

“ஆறு மாதம் முன்னாடிதான் கலியாணம் ஆனது மேடம். மனைவி வந்த பிறகு பொறுப்பு அதிகரித்து விட்டது. உங்களால் உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.”

“சரி. உங்க நம்பர் கொடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்.”

வர்ஷா தில்லிக்கு திரும்பிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, தரமுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “தரம், இங்க புதுசா ஆரம்பிக்கற ஒரு கம்பெனிக்கு அட்மின் அசிஸ்டண்ட்கள் வேண்டுமாம். நீயும் ரோஹித்தும் கிளம்பி வாருங்கள்.”

 

ர்ஷாவின் சிபாரிசு பேரில் இருவரும் டில்லியில் வேலைக்கு சேர்ந்தார்கள். முதல் மாத சம்பளம் வந்தவுடன் இருவரும் இனிப்பு வகைகளை வாங்கிக்கொண்டு வந்து வர்ஷாவுக்கு கொடுத்தார்கள். ஆறு மாதம் கழித்து வர்ஷா வேலை மாறி பெங்களூருக்கு வந்தாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு அவள் தரமிடம் தொடர்பில் இல்லை.

டிசம்பர் மாதத்தில் மறுபடியும் கௌசானிக்குச் செல்ல வர்ஷா முடிவெடுத்தாள். அவள் அங்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. டில்லிக்கு சென்று, அங்கிருந்த சதாப்தி பிடித்து காத்கோடாம் வந்தடைந்து, காரில் நைனிதால் சென்று, அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, அடுத்த நாள் ஜோகேஷ்வரில் கோவில்களை பார்த்த பின்பு, அல்மோரா வழியாக கௌசானி வந்து சேர்ந்தாள். அன்று மாலை பனிமலைத் தொடர்களை மறையும் சூரியனின் சிவப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. நந்தா தேவி, திரிஷுல், நந்தா கோட் மலைகள் தெளிவாக தெரிந்தன. தூரத்தில் பஞ்சசூலி மாலையும் தெரிந்தது. பத்து நிமிடங்களுக்கு வர்ஷா அவற்றை வாய் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகையும் குளிரையும் காமிராவில் கொண்டுவர முடியாது என்று அவளுக்கு நன்றாகவே  தெரிந்திருந்தும் தன் காமிராவில் படங்களை எடுத்துத் தள்ளினாள்.

காலை சிற்றுண்டி ரிசார்டில் திறந்த வெளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேகமூட்டமாக இருந்ததால் தூரத்து மலைகள் தெரியவில்லை. டிசம்பர் மாத குளிர் உடம்புக்குள் ஊடுருவி சென்றது. இருந்தாலும் திறந்த வெளியிலேயே சாப்பிடுகிறேன் என்று வர்ஷா சொன்னதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் அழைகை ரசித்துக்கொண்டே, ஆலூ பரோட்டாவை ருசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் பெண் வர்ஷாவைத் தேடி வந்தாள்.

அவள் நீல நிற சுடிதார் மேல் சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வர்ஷாவைப் போல் அவள் தலையில் குரங்கு குல்லா அணிந்திருக்கவில்லை. அந்த ஊர் மக்கள் போல் அவளும் சிவப்பாக இருந்தாள். அழகான தோற்றமுடைய அவள், “நீங்கள்தான் வர்ஷா மேடமா?” என்று கேட்டாள்.

“ஆம்”

“உங்களுக்கு ரோஹித் ஞாபகம் இருக்கா?”

வர்ஷா யோசித்தாள்.

“தரமின் நண்பன். அவர்கள் இருவருக்கும் நீங்கள்தான் டில்லியில் வேலை வாங்கி கொடுத்தீர்கள்”

“ஓஹோ. ரோஹித். ஞாபகம் இருக்கிறது. நீங்கள்?”

“நான் ரோஹித்தின் மனைவி.”

“ரோஹித் எப்படி இருக்கிறான்?”

“இப்போது அவர் டில்லியில் இல்லை. திரும்பி கௌசானிக்கே வந்துவிட்டார்”

“ஏன்?”

“அதைப் பற்றிதான் பேசவேண்டும்”

சாப்பிட்டு முடித்த வர்ஷா, கையை துடைத்துக்கொண்டு, கிளொஸை மாட்டிக் கொண்டாள்.

“உங்க பேர் சொல்லவில்லையே?”

“என் பேர் ரேணு”

சூரியன் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான். மெல்லிய ஒளி புல்தரையின் மேல் பரவியது.

“ரோஹித் ஏன் தில்லியை விட்டு வந்தான்?”

“போகும்போது மகிழ்ச்சியாகதான் போனான். ஒரு ஆறு மாதத்தில் என்னை டில்லிக்கு அழைத்துக் கொள்கிறேன்  என்று சொல்விலிட்டுப் போனான். ஆனால் ஆறு மாதத்தில் அவனே திரும்பி வந்துவிட்டான். நான் எதற்கு  இப்படி செய்கிறாய் என்று  கேட்டேன். நகரம் மனிதனை மிகவம் மாற்றி விடுகிறது. எனக்கு இந்த கைடு வேலையே போதும் என்று சொன்னான். நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் மறுபடியும் டில்லிக்கு போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஆனா அவன் இனி போவான் என்று எனக்கு தோன்றவில்லை.”

“மனிதர்கள் எப்படி மாறுகிறார்களாம்?”

“ரோஹித்தும் தரமும் ஒரே கம்பெனியில்தான் இருந்தார்கள். தரம் ஏதோ லஞ்சம் வாங்குகிறான் என்று சொன்னார்கள். ரோஹித் லஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தான். ஆனா அவன் மேலதிகாரிக்கு அது பிடிக்கவில்லை. அந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குபவர். அவனும் உத்தராகண்ட் ஆள்தான். அவன் ரோஹித்தை அவமானப்படுத்த ஆரம்பித்தான். ரோஹித் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். வர்ஷா முகம் சில்லென்றாவதை உணர்ந்தாள்.

ரேணு தொடர்ந்தாள், “இப்போ தரமை பாருங்கள். அவன் தன் வீட்டுக்கு மேல் மாடி கட்டிவிட்டான். புதிய நிலம் வாங்கியிருக்கிறான். மனைவியையும் மகனையும் டில்லிக்கு அழைத்துக் கொண்டு  போய் விட்டான். அவன் குழந்தை நல்ல பள்ளிக்கூடத்தில் படிப்பான். அவன் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு போவான். என்  பையன் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்து  ஏதோ டிரைவராகவோ கைடாகவோ போவான். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நான் பார்க்கிறேன். ரோஹித் என் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அவனோடு பேசுங்கள். இது பற்றியெல்லாம் புரிய வையுங்கள். நீங்கள்  சொன்னால் அவன் கேட்பான்.”

வர்ஷாவுக்கு வேறொருவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ரேணு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தாள். “இன்றைக்கு அவன் எங்கே இருப்பான்?”

“நீங்கள் காலையில் ருத்ரதாரி அருவிக்கு போகிற இடத்தில்தான் இருப்பான்”

“சரி. நான் பேசுகிறேன்”

“ரொம்ப நன்றி மேடம்.”

“டீ குடித்துவிட்டுப் போ”

இருவரும் டீ அருந்திய பின், ரேணு விடைபெற்றுக் கொண்டாள்.

வர்ஷா இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அட்மின், பர்சேஸ் போன்ற பிரிவுகளில் லஞ்சம் வாங்குவது சகஜம் என்று அவளுக்கு தெரியும். ரோஹித்துக்கு இது போன்ற ஒரு பிரிவில்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ரோஹித்தை நிர்பந்தப்படுத்துவது சரியில்லை என்று வர்ஷா நினைத்தாள். அதே சமயம் ரேணுவின் கோரிக்கை தவறில்லை என்றும் அவளுக்கு பட்டது. சரி, ரோஹித்துடன் பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ருத்ரதாரி அருவியை நோக்கி சென்றாள்.

ரோஹித் டீக்கடையில் கடைக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “ஹாய் ரோஹித்” என்ற சொன்ன வர்ஷாவை திரும்பிப் பார்த்த அவன், ஒரு வினாடி இது யார் என்று தெரியாமல் முழித்தான். பிறகு, “அரே மேடம். நமஸ்தே” என்றான். “எங்கே? ருத்ரதாரிக்கா?”

“இல்லை. உன்னுடன் பேச வந்தேன்”

ரோஹித், “ஒரு டீ சொல்லுங்கள், பேசலாம்”

வர்ஷா டீ கோப்பையை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அறிவுரை சொல்லி பழக்கமில்லை. எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.

சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தான். மலைகள் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தன. வெகு தொலைவில் உள்ள மலைகளும் தெளிவாக தெரிந்தன. வானத்தின் ஒரு பகுதியில் கருமேகங்கள் இருந்தாலும் இன்னொரு பகுதி மேகங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு மலையில் சன்னமான அருவி உருவாகிக் கொண்டிருப்பதை வர்ஷா பார்த்தாள். தூரத்தில் காரொன்று வளைத்து நெளியும் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மனையிலிருந்து வெள்ளைப் புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தன் கண்கள் வழியாக வர்ஷா மனதினுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக காட்சி மாறியது. கருமேகங்கள் சூரியனை சூழ்ந்துகொண்டன. வெளிச்சம் மறைய தொடங்கியது. மலைகளில் நிறம் மெதுவாக கரும்பச்சையாக மாறியது. தூரத்திலிருந்த மலைகள் மறைந்தன. மெல்லிய சாரல் அடிக்க ஆரம்பித்தது. காட்சி முழுவதும் மாறிவிட்டிருந்ததை பார்த்த வர்ஷா ரோஹித்திடம், “இயற்கை எப்படி மாறுகிறது பார். மாறுவதுதான் இயற்கையின் நியதி போல்” என்றாள். ரோஹித் பதில் ஏதும் சொல்லாமல் டீ அருந்திக்கொண்டிருந்தான்.

வர்ஷா பேசி முடித்த சில வினாடிகளிலேயே காட்சி மறுபடியும் மாறியது. கரு மேகங்களை காற்று செலுத்திச் செல்ல, மறுபடியும் சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது. மழைச்சாரல் நின்றது. எல்லா மலைகளும் மறுபடியும் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லாம் பழைய  நிலைக்கே திரும்பியிருந்தன.

ரோஹித் வர்ஷாவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாக டீ அருந்த ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி- ஒரு குறிப்பு

போதி மரம் இல்லாத ஊரில்- காஸ்மிக் தூசி

1. இது ஒரு காட்சி, அதை விவரிப்பதற்கு அப்பால் உயர்ந்த லட்சியங்கள் இல்லை.

2. கவிதை யாருக்கும் எந்த செய்தியும் சொல்வதில்லை, சமூக அக்கறை என்று எதுவும் இதில் வெளிப்பட்டவில்லை. தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.

3. இது யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று கேட்டால் சொல்ல முடியாது. உரக்க வாசிக்க உகந்த கவிதை அல்ல, காகிதத்தில் எழுதிக் கொடுத்து அதை வேறொருத்தர் மௌனமாக படித்து தனக்குள் புரிந்து கொள்ள எழுதப்பட்டது. அந்தரங்க அகக்குரல் என்று சொல்லப்படும் விஷயம்.

4. கருத்து எளிமையான ஒன்று, அதே சமயம் சொல்லப்பட்ட எதுவும் மீண்டும் சொல்லப்படுவதில்லை, சொன்ன விஷயத்துக்கும் அலங்காரம் ஏதும் இல்லை: கருத்தில் மட்டுமல்ல, மொழியிலும் எளிமை.

5. ‘போதி மரம் இல்லாத ஊரில்’ என்ற இந்தக் கவிதையில் ஓக், மேபிள் மரங்கள் வருகின்றன – காஸ்மிக் தூசி வெளிநாட்டில் வசிப்பவர், அவரது தனிப்பட்ட வாழ்வனுபவங்கள் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகளில் பதிவு செய்யப்படுகின்றன. இது தமிழுக்கு புதிது என்பதால் வேப்ப, புளிய மரங்களால் கிடைக்காத இடம் ஓக் மற்றும் மேபிள் மரங்களால் கிடைக்கிறது.- புதுமை.

இதுபோல், இன்னும் பல சொல்லலாம், ஆனால் உரத்த குரல், உயர்ந்த லட்சியங்கள், சமூக அறைகூவல் மற்றும் அறிவுரை, விழிப்புணர்வு புகட்டல், அலங்காரம் மற்றும் மிகைகள், பழகிய விஷயங்கள் இந்தக் கவிதையில் இல்லை.

எளிய கவிதைதான். ஆனால் இதில் நாம் ஒரு தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் அடையாளங்களை காணலாம்.

காஸ்மிக் தூசி கவிதைகள் பதாகையில் தொடர்ந்து வருகின்றன. அவற்றை வாசிப்பவர்கள், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருப்பதை கவனிக்கலாம், அது தீவிரத்தன்மை, அசட்டை, முக்கியம், முக்கியமின்மை என்று வெளிப்படுகிறது. உண்மையாகவே போதி மர நாட்டம் உண்டா, அல்லது போதி மர பாவனையின் ஆழமின்மையை உணர்ந்த காரணத்தால் அது குறித்த விளையாட்டுத்தனத்தை கைகொள்கிறாரா என்பவை விமரிசன நோக்கில் பேசப்பட வேண்டியவை.

ஆதர்சங்கள், லட்சியங்கள், புனிதத்தன்மை போன்ற உச்ச மதிப்பீடுகள் தனி மனித குறைகளால் வெறுமையாகிப் போயின, சமூக அமைப்பால் பொய்த்து விட்டன என்ற காரணங்களால் ஒருவர் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மறுப்பது, நகையுணர்வு, irony, frivolousness, கமிட் செய்து கொள்ளத் தயங்குவது, தன்னைத் தானே பகடி செய்து கொள்வது போன்ற நவீன பாவனைகளை மேற்கொள்கிறார் என்றால் அது ஒரு விஷயம். அதில் நாம் நாட்டம் விலகல் என்ற இரு எதிர்நிலைகளையும் காணலாம். ஆனால் அது போன்ற ஒரு பாவனை, அந்த  பாவனைக்கு எதிரான பாவனை, ஆழமில்லாத விளையாட்டுத்தனம், சலிப்பு தட்டக்கூடியது. ஆனால் இதை எல்லாம் பேச இந்த ஒரு கவிதை போதாது, நாம் இவரது இது போன்ற பிற கவிதைகளையும் பார்க்க வேண்டும்.

விசை, திசை இரண்டும் இருந்தால்தான் தொடர்ந்து எழுதும்போது ஒரு அலை என உயர்ந்து எழ முடியும். திசை இல்லாமல் விசை மட்டும் இருக்கிறது என்றால் எத்தனை எழுதினாலும் ஒரு கொந்தளிப்பு மட்டுமே இருக்கும், ஒரு oeuvreக்கு உரிய ஒருமை கூடாது. தனிப்பார்வை, தனிக்குரல், தனி அனுபவத்தின் வெளிப்பாடு வேண்டும் என்று சொல்லும்போது திசை என்று சொல்லக்கூடிய நகர்வை விழைகிறோம்.  இது ஒரு கவிதை, கதையில் கிடைக்கும் விஷயம் அல்ல. தொடந்து எழுத வேண்டும், அதனூடே ஓர்மை கூட வேண்டும்.

கவிதையின் துவக்கம் அழகாக, கற்பனைச் செறிவோடு, கவித்துவ மொழியில் அமைந்திருக்கிறது- “வெயில் வெண்மையை/ நிறங்களாக/ பிரிக்க ஆரம்பித்திருக்கும்/ இலைகள்”. நிறப்பிரிகை தெரியும், அது வெண்மையை வானவில் வண்ணங்களில் பிரிக்கிறது. இதே கோடையின் வெண்மை இலைகளில் பல வண்ணங்களில் பழுக்கின்றது, பருவ மாற்றத்தின் போது. இலைகளில் ஏற்படும் நிற மாற்றத்தைச் சுட்டி நேரடியாக இல்லாமல் பருவ மாற்றத்தை உணர்த்துகிறது கவிதை. அதற்கு அடுத்த வரிகளில் இந்தக் கற்பனை மறைந்து உரையாடல் தமிழ் வந்து விடுகிறது, “குளிர் கால உறக்கத்துக்கு/ தயாராகி விட்ட/ சற்று குண்டான/ அந்த அணிற் குஞ்சு,” என்ற இறுதி வரிகள் துவக்கத்திலிருந்து எங்கோ வந்து விட்டன. போதி மரத்துக்கும் மேபிள் மரத்துக்கும் உள்ள சம்பந்தம்தான் துவக்கத்துக்கும் முடிவுக்கும். கவிதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணித்து விட்டது, மொழியில் மட்டுமே கூட. சொல்ல வந்த விஷயத்துக்கு தகுந்த வடிவத்தை இந்தக் கவிதையில் பார்க்கலாம்.

பதாகையில் இது போன்ற கவிதைகளை பதிப்பிக்க விரும்புவது இவை சிறந்தவை என்பதால் அல்ல, இவை பிடிக்கும் என்பதால். இதற்கும் தர மதிப்பீடுகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

போதி மரம் இல்லாத ஊரில்

காஸ்மிக் தூசி 

வெயில் வெண்மையை
நிறங்களாக
பிரிக்க ஆரம்பித்திருக்கும்
இலைகள்

ஓக் மரத்தடியின்
பழைய மரப்பெஞ்சில்
ஒரு பழைய புத்தகம்
வாசித்திருக்கையில்

மேலிருந்து
இறங்கி
நெருங்கி வந்து,
இது என்னுடைய இடம்
இங்கே என்ன செய்கிறாய்?
எனும் கேள்வி.

போதி மரம்
இல்லாத ஊரில்
போதி மரத்துக்கு
வேறு என்னதான் செய்வதாம்?
என்கிறேன்.

எழுந்து
இரு கைகள் உயர்த்தி
அதோ
அந்த மேப்பிள் மரத்தை
பார்த்தாயா
போதியை
போலத்தானே இருக்கிறது
அங்கே போயேன்,
என்று கூச்சலிடுகிறது

குளிர்கால உறக்கத்துக்கு
தயாராகிவிட்ட
சற்று குண்டான
அந்த
அணிற்குஞ்சு.

பயணம்

எஸ் சுரேஷ் 

ஞாயிறு மாலை நேரம். சென்ட்ரல் ஸ்டேஷன் ரொம்பி வழிந்தது. சரண் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான். “பல வருடங்களுக்கு முன், இந்த கூட்டத்தில் தொலைந்து போய் விடுவேனோ என்று அப்பா என் கையை பிடித்துக்கொண்டு நடந்தார். இப்பொழுது அவர் தொலைந்து போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் அவர் கையை பிடித்துக்கொண்டு நடக்கிறேன். காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ”

சரணின் அப்பாவிற்கு டிமென்ஷியா. இப்பொழுது வியாதி முற்றிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் அவருக்கு சுயநினைவு இருக்கும். சில சமயங்களில் அவருக்கு எந்த நினைவும் இருக்காது. ஒரு முறை வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. வீட்டில் எல்லோரும் பதட்டப்பட்டார்கள். அவர் செல்லும் எல்லா இடங்களும் தேடினார்கள். இரண்டு மணி நேரம் கழித்து, அமீர்பெட் காவல் நிலயத்திலிருந்து அழைத்தார்கள். அவர் சிக்கட்பல்லியிலிருந்து அமீர்பெட்டுக்கு எப்படி சென்றார் என்று யாருக்கும் புரியவில்லை. அன்றிலிருந்து அவர் சட்டைப்  பையில் எப்பொழுதும் வீட்டு விலாசத்துடன் ஒரு காகிதம் இருக்கும்படி சரண் பார்த்துக் கொண்டான்.

அப்பா வேகமாக நடந்தார். அவர் உடல் உறுதியாக இருந்தது. “இது நம்ம கம்பார்ட்மெண்ட்.” என்று சொல்லி இரண்டாம் வகுப்பு பெட்டியில் அப்பாவுடன் சரண் ஏறினான். உட்கார்ந்த ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சித்தப்பா வந்தார். “எப்படி இருக்கார்?” என்று கேட்டார். “பரவாயில்லை சித்தப்பா” என்றான். அவர் அப்பாவுடன் பேசினார், ஆனால் அப்பாவிற்கு அவர் யாரென்று புரியவில்லை. “பத்திரமா கூட்டிண்டு போ,” என்றார்.

வண்டி கிளம்பியதும் சித்தப்பா கையை ஆட்டினார். கூட்டத்தில் அவர் மறையும் வரை சரண் கையை ஆடினான். அவனுக்கும் சித்தி வீட்டில் சில நாட்கள் இருத்தவிட்டு வரவேண்டும் என்று ஆசை. ஆனால் அலுவலகத்தில் வேலைபளு அதிகம் இருந்ததால் உடனே வரவேண்டிய கட்டாயம் இருந்தது.

அப்பாவை ஜன்னல் ஓரமாக உட்காரவைத்துவிட்டு அவர் பக்கத்தில் சரண் அமர்ந்தான். ஒரு காலத்தில் ரயில் ஏறியவுடன் அவன் ஜன்னலோர இருக்கையில் உட்கார முடியாவிட்டால் அழுதது நினவில் வந்தது. எவ்வளவு முறை இதே சார்மினர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றிருப்பான். அப்பா அவனுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன் பெயராக சொல்லுவார். “மெட்ராஸ் எப்போ வரும் பா?” “நாளைக்கு வரும்.” அப்பா தண்ணி பிடிக்க இறங்கும்பொழுது அவன் மனது துடிக்கும். ரயில் கிளம்பும் முன் அப்பா ஏறிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அவர் ஏற முடியவில்லை என்றால்? எப்பொழுதும் அப்பா ரயில் கிளம்புவதற்கு முன் ஏறிவிடுவார். இருந்தாலும் சரண் மனதில் பயம் இருக்கத்தான் செய்தது. இப்பொழுதும் அவனுக்கு அதே பயம் இருந்தது. தான் இல்லாதபொழுது அப்பா ரயிலை விட்டு இறங்கிவிடுவாரோ என்ற பயம். இந்த முறை இறங்கினால் அவர் மறுபடியும் ரயில் ஏறமாட்டார் என்று அவனுக்கு தெரியும்.

சரணுக்கு எதிர்ப்புறம் ஒரு குடும்பம் உட்கார்ந்து இருந்தது. அவனுக்கு பக்கத்தில் நடுவயது ஆண் உட்கார்ந்திருந்தார். ரயில் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. சரணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அப்பாவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். அப்பாவை விட்டு நகர அவனுக்கு பயமாக இருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற இம்சை அதிகமாகி கொண்டே இருந்தது. திடீரென்று அப்பா இருக்கையை விட்டு எழுந்தார். “எங்க போகணும்?’ “எனக்கு ஒண்ணுக்கு வருது’. அப்பாவை அழைத்துக்கொண்டு கழிப்பறைக்கு சென்றான். அப்பாவை தாழ்ப்பாள் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கதவுக்கு வெளியில் நின்றிருந்தான். கழிப்பறையை பார்த்த அவனுக்கு சிறுநீர் உபாதை அதிகமாகியது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அப்பாவுடன் தங்கள் இருக்கைக்கு சென்றான்.

அப்பாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவர் அப்பாவுடன் பேச்சு கொடுத்தார். அப்பா பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேள்வி கேட்பவருக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியதை சரண் கவனித்தான். “அவருக்கு டிமென்ஷெயா. எல்லாத்தையும் மறந்து போறார்” “ஓ’ என்ற எதிர் இருக்கை ஆள், ஏதோ கொடிய மிருகத்தை பார்தது போல் பயந்து மௌனமாகிவிட்டார்.

ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பியது. டீ விற்றுக் கொண்டிருந்தவனிடம் இரண்டு கோப்பை டீ வாங்கி, ஒன்றை அப்பாவுக்கு கொடுத்தான். சிறுநீர் கழித்தால் தவிர தன்னால் டீ குடிக்க முடியாது என்று தீர்மானித்த சரண், பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம், “அப்பாவ ரெண்டு நிமிஷம் பாத்துக்கோங்க. நான் டாய்லெட் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கழிப்பறைக்கு சென்றான்.

சரண் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டிருந்ததால் அவன் சற்று நேரம் இருக்கவேண்டி வந்தது. ஒவ்வொரு நிமிடமும் அவனுடைய பயம் கூடிக் கொண்டிருந்தது. வேலையை முடித்த பிறகு இருக்கைக்கு விரைந்தான். அப்பா ஜன்னல் ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருந்தார்.. பக்கத்து இருக்கை ஆள் சரணை பார்த்து, “ஹி இஸ் ஓகே’ என்றார்.

கல்யாணச் சத்திரத்தில் கட்டி கொடுத்த உணவை அவனும் அப்பாவும் தின்ற பின்பு, அப்பாவை கை அலம்ப அழைத்துச் சென்றான். அவர் சிறுநீர் கழித்த பிறகு இருக்கைக்கு வந்து, நடு இருக்கையை மேலே தூக்கிவிட்டு, ஏர் பில்லோவை ஊதி, அப்பாவின் தலையடியில் வைத்து, அவருக்கு போர்வை போர்த்திவிட்டான். பிறகு அவன் நடு இருக்கையின் மேல் ஏறி  அமர்ந்தான். தான் தூங்கிவிட கூடாது என்பதற்காக உட்கார்ந்தே இருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு அவனுக்கு கழுத்தும் முதுகும் வலிக்க ஆரம்பித்தன. இனி உட்கார்ந்திருக்க முடியாது என்று நினைத்து இருக்கையில் படுத்துக் கொண்டு, அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று எட்டிப் பார்த்தான். அவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். சரண் ராதிகாவை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்கு முன் அவளை பெண் பார்க்க சென்றிருந்தான். அவளை பார்த்தவுடன் அவன் பிடித்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டான். வெளியில் சந்தித்தால் சர்ச்சை ஆகிவிடும் என்பதால் அவர்கள் தொலைபேசி வாயிலாக தினமும் பேசிக்கொண்டார்கள். காலை பத்து மணிக்கு ராதிகா அவளுடைய அலுவலகத்திலிருந்து இவனை அழைப்பாள். மாலை ஐந்து மணி அளவில் இவன் அவளை அழைப்பான். அலுவலகத்திலிருந்து பேசுவதால் அதிகம் பேச முடியாது. இருந்தாலும் தினமும் பேசிய சில நிமிடங்களை மனதில் அசை போட்டுக்கொண்டு சரண் மகிழ்ச்சியடைவான். அவள் நினைப்பு அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றது. ராதிகா நினைவில் மூழ்கியிருந்த சரண், ரயில் நின்றிருப்பதை உணர்த்து திடுக்கிட்டான். உடனே கீழே எட்டிப் பார்த்தான். அப்பா அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்.

ரயில் மறுபடியும் கிளம்பியது. சரண் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. சரணுக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் போல் இருந்தது. அப்பாவை பார்த்துக்கொள்ளும்படி யாருக்கும் சொல்ல முடியாது. அதே சமயம் அடுத்த ஸ்டேஷன் சீக்கிரம் வராது என்று நினைத்துக்கொண்டு சரண் கழிப்பறைக்கு விரைந்தான். சீக்கிரம் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்கையை நோக்கி வரும்பொழுது இருக்கைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அப்பாவின் கால்களை காணவில்லை. இதயம் படபடக்க இருக்கையை நோக்கி ஓடினான். அப்பா கால்களை மடித்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நடு இருக்கையின் மேல் ஏறிய பிறகும் அவன் இதயம் வேகவாக அடித்துக் கொண்டிருத்தது. இரண்டு மூன்று தரம் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்டான். வெளியிலிருந்து சில்லென்ற காற்று வீசியது. அப்பா நன்றாக போர்த்திக் கொண்டிருக்கிறாரா என்று பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. மறுபடியும் மெதுவாக படுத்தான். ராதிகாவை பற்றியும், அலுவலக வேலையை பற்றியும் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். .

நடு இரவு தாண்டிய பிறகு ‘கட கட கட கட’ என்ற ஓசையுடன் கிருஷ்ணா நதி பாலத்தை வண்டி கடந்தது. சற்று நேரம் கழித்து விஜயவாடா ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ரயில் இங்கு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும். சரண் இருக்கையிலிருந்து காலை கீழே நீட்டி உட்கார்ந்த கொண்டான். அடிக்கடி அப்பாவை எட்டிப்பார்த்தான். ரயில் நின்று பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ரயில் கிளம்பப் போகிறது என்ற தகவலை ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதை கேட்ட சரண், மறுபடியும் படுத்துக்கொண்டான். முதல் நாள் கல்யாண வேலைகள் இருந்ததால் வெகு நேரம் அவன் தூங்கவில்லை. அதிகாலை முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்துவிட்டான். செப்டெம்பர் மாதமாக இருந்தாலும் மெட்ராசில் வெயில் கொளுத்தியது. எல்லாம் சேர்ந்து அவனுக்கு அளவுகடந்த சோர்வை அளித்தன. இவ்வளவு நேரம் முழித்துக் கொண்டிருந்த அவன் இப்பொழுது தூங்கிவிட்டான்.

கனவில் ராதிகா அவனிடன் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். சிரித்துக் கொண்டே கண்முழித்தான். கரைந்து போகும் அழகிய கனவை மறுபடியும் கையில் பிடிக்க கண் மூடினான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் கனவை மறுபடியும் கைப்பற்ற முடியவில்லை. வேண்டா வெறுப்பாக கண்களை திறந்தான். எதிர் பக்கம் உட்கார்ந்திருந்தவர் தன் நடு இருக்கையை கீழே இறக்கி கொண்டிருந்தார். சட்டென்று சரணுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்து, கீழே எட்டிப்பார்த்தான். அப்பாவை காணவில்லை.

எழுந்த வேகத்தில் அவன் தலை அப்பர் பெர்த்தில் முட்டியது. தலையை தடவிக்கொண்டே கீழே இறங்கினான். எதிர் இருக்கையில் இருப்பவரை பார்த்து, “அப்பாவை பாத்தீங்களா?” என்று கேட்டான். “நான் இப்போ தான் எழுந்திரிச்சேன். அவரை பாக்கல. டாய்லெட் போயிருப்பரோ என்னவோ” என்றார்.

சரண் கழிப்பறையிடம் சென்றான். இரண்டு கழிப்பறைகளும் மூடி இருந்தன. நிலைக்கொள்ள முடியாமல் சரண் அங்கு நின்றிருந்தான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கதவு திறந்தது. இன்னும் சற்று நேரம் கழித்து இன்னொரு கதவு திறந்தது. இரண்டிலும் அப்பா இல்லை. மறுபக்கம் உள்ள கழிப்பறைக்கு விரைந்தான். அங்கும் அப்பா இல்லை.

ரயில் போங்கீர் தாண்டிவிட்டிருந்தது. கட்கேஷர் தாண்டிவிட்டால் சிகந்திரபாத் ஸ்டேஷன் வந்து விடும். சரண் ஒவ்வொரு பெட்டியாக தேடிக்கொண்டே சென்றான். எதிலும் அப்பா இல்லை. மறுபடியும் இருக்கைக்கு வந்தவனை எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். “அவருக்கு எவ்வளவு நாளாக மறதி இருக்கிறது?”, “அவருக்கு தன் பெயர் தெரியுமா?” “தன்னுடைய ஊர் எது என்று அவருக்கு தெரியுமா?” “நீ தனியாக அவரை ஏன் கூட்டிக்கொண்டு வந்தாய்? கூட யாராவது வந்திருக்கலாமே?” சரணுக்கு இருப்பு கொள்ளவில்லை ஆனால் அவனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும். “சிகந்திரபாத் ஸ்டேஷன்ல இறங்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடு” என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

ரயில் நிற்பதற்கு முன்பே இரண்டு பைகளை தோளில் சுமந்துக்கொண்டு சரண் வெளியே குதித்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓடினான். அவன் சொன்னதை பொறுமையாக கேட்ட போலீஸ் அதிகாரி, “இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருந்திருக்கக் கூடாதா? உன்ன நம்பிதானே அனுப்பினாங்க? இப்படி அப்பாவா தொலைச்சிட்டு வந்து இருக்கியே.” சரணுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. “எப்படியாவது அவர கண்டுபிடிச்சி குடுங்க சார்” என்று கெஞ்சினான். “சரி சரி. நான் என்னால முடிஞ்சத செய்யறேன். இதோ பார். நீ அவர விஜயவாடா ஸ்டேஷன் வரைக்கும் கண்காணிச்சிருக்க. அதுக்கு பிறகு கம்மம், காஜிபேட், வாராங்கல் ஸ்டேஷன்லாம் இருக்கு. இப்போ எல்லா இடமும் தேடனும். நீ உங்க வீட்டு ஃபோன் நம்பர் குடுத்துட்டு போ. ஏதாவது தகவல் இருந்தா நான் ஃபோன் பண்றேன்”

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான். வீட்டில் தாத்தா பாட்டிக்கும், கல்யாணமாகாத மாமாவுக்கும் என்ன சொல்வது? அம்மாவுக்கு என்ன சொல்வது? எல்லாவற்றிக்கும் மேல், ராதிகாவுக்கு என்ன சொல்வது? தான் அப்பாவை தொலைத்துவிட்டதை பற்றி அவள் என்ன நினைப்பாள்? அம்மா இந்த செய்தியை கேட்டு அழுவாளா? அலுவலகத்தில் இதைப் பற்றி சொல்லலாமா? இங்கிருந்து வீட்டுக்கு பஸ் பிடித்துக்கொண்டு போகலாமா, இல்லை ஆட்டோவில் போகலாமா? அவன் மனது இங்கும் அங்குமாக தாவிக் கொண்டிருந்தது. தான் நிதானத்திற்கு வரவேண்டும் என்று உணர்த்து, பஸ்ஸில் செல்ல முடிவு செய்தான். ஒண்ணாம் நம்பர் பஸ் போய்குடா, முஷீராபாத், சார்மினார் சௌரஸ்தா தாண்டி சிக்கட்பல்லியில் நின்றதும் சரண் இறங்கிக்கொண்டு மாமாவுக்கு எப்படி சொல்வது என்ற சிந்தனையில் வீட்டை நோக்கி நடந்தான்.

அழைப்பு மணி கேட்டு மாமா கதவைத் திறந்தார். “வாடா” என்று சரணை வரவேற்றவர் வெளியே எட்டிப் பார்த்தார். “அப்பா அம்மா எங்க?” என்றார். “அம்மா சித்தியோட தங்கிட்டா. ஒரு வாரம் கழிச்சி வருவா” “அப்படியா. அப்பா எங்க?” “மாமா, தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லாத. அப்பாவ காணோம். எங்கேயோ டிரைன்னை விட்டு இறங்கிட்டாரு” என்று கிசுகிசுத்தான். “என்னடா சொல்ற. அய்யய்யோ. இப்படி அப்பாவ தொலைச்சிட்டு வந்து நிக்குற. உங்க அம்மாவுக்கு என்னடா சொல்றது?”

படுக்கையில் படுத்திருந்த பாட்டி “யார்டா அது, சரணா? அப்பா அம்மா எங்கடா?” “ஒரு வாரம் கழிச்சி வராங்களாம். நம்ம காமாட்சி ஒரு வாரம் அங்க தங்க சொல்லியிருக்கா” என்று மாமா பதில் கூறினார். பிறகு சரணை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். சரண் போலீஸ் ஸ்டேஷன் சென்றதை பற்றி சொன்னான். “இந்த மனுஷன் எங்க இறங்கினாரோ? இது எப்படிடா டீல் பண்றது?” இருவரும் மௌனமாக இருந்தார்கள். “நீ ஒண்ணு பண்ணு. எதுவும் நடக்காதது போல இரு. ஆஃபிஸ் கிளம்ப் போ. நான் இவங்கள பார்த்துகிறேன். ஆஃபிஸ்ல யாராவ்து ஹெல்ப் பண்ணுவாங்களா பாரு.”

அவன் ஆபீஸ் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. ஆபீஸில் நுழைந்தவுடன், சுனிதா சிரித்துக்கொண்டே, “யாரோ ராதிகாவாமே. உனக்குன்னு ஃபோன் பண்ணா. நீ இல்லைனு சொன்னதும் அவள் குரலே மாறிப்போச்சு. அவ அழுத்துவிடுவாளோன்னு பயந்தேன்” என்றாள். அவள் குறும்பாக பேசியதை எப்பொழுதும் ரசிக்கும் சரண் இன்று ரசிக்கவில்லை. அவன் முகம் ஏதோ போல் இருந்தது. “என்ன சரண். என்ன ப்ராப்ளம்?” சற்று நேரம் மௌனமாக இருந்தவன், “நேத்து எங்க அப்பாகூட ரயில்ல வந்தேன். அவர் ஏதோ ஒரு ஸ்டேஷன்ல இறங்கி இருக்கார். காலைல எழுந்து பார்த்த அவர காணோம்” இதை கேட்டுக்கொண்டிருந்த ராகவ், “என்னடா இப்படி செஞ்சிட்ட. உங்க அப்பாவ கவனிக்காம விட்டிட்டையே” என்றான். இதை பலரிடமிருந்து கேட்ட சரணுக்கு கோபம் வந்தது, “ஏன்டா எங்கப்பாவ நானே வேணும்னு தொலைப்பேனா? நானும் எவ்வளவோ நேரம் தூங்காமதான் இருந்தேன். நானுன் மனுஷன் தானே. என் பாட் லக் நான் தூங்கும்போது அவர் எங்கேயோ இறங்கி இருக்கார். இதெல்லாம் வேணும்னா செய்வேன்?” அவன் குரலில் இருந்த கோபத்தை தணிக்க, “சாரி. சாரி, தெரியாம கேட்டுட்டேன். உங்க அப்பாவ நாம் ரெண்டு பெரும் சேர்ந்து கண்டுபிடிப்போம்” என்றான்.

ஆபீஸில் பணிபுரியும் பத்து நபர்களுக்கும் இந்த செய்தி தெரிந்துவிட்டது. ஒருவர் தன் நண்பரை ஃபோன் செய்து கம்மம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க சொன்னார். இன்னொருவர் தன் நண்பருக்கு ஃபோன் செய்து வாராங்கல் ரயில் நிலையத்தில் விசாரிக்க சொன்னார். இதற்கிடையில் ராதிகாவின் அழைப்பு வந்தது. அவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று சரணால் முடிவு செய்ய முடியவில்லை. உண்மையை சொன்னால் அவள் தனக்கு ஆறுதல் சொல்லுவளோ இல்லை தனக்கு பொறுப்பாக நடந்துகொள்ள தெரியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று குழம்பிய சரண், தனக்கு வேலை இருப்பதாகவும், “ஐ லவ் யு. அஞ்சு மணிக்கு ரெடியா இரு. என் கால் வரும்” என்று சொன்னான்.

மணி மதியம் இரண்டை தாண்டியது. அப்பாவை பற்றிய எந்த தகவலும் இல்லை. சரண் சோர்ந்திருந்தான். சரி இனி என்ன ஆகிறதோ ஆகட்டும். அம்மாவுக்கும் ராதிகாவுக்கும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். “ராகவ், எதுக்கும் ஒரு முறை சிகந்தரபாத் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் போயி பாத்துட்டு வந்திடலாம். அவங்க கிட்ட ஏதாவது நியூஸ் இருக்கா பார்ப்போம்,” அவர்களிடமும் எந்த செய்தியும் இல்லை. சரண் நம்பிக்கையை முழுவதும் இழந்தவனாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.

ஆபீஸில் நுழைந்தவுடன் சுனிதா, “உங்க மாமா ஃபோன் பன்னாரு. ஏதோ அர்ஜண்ட்டாம். உன்னை உடனே வர சொன்னார்,” சரணுக்கு இதயம் வேகமாக அடித்துக்கொள்வது நன்றாக கேட்டது. அவன் தன்னுள் இவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த பயம் இப்பொழுது வெளிவந்தது. அப்பா ஏதோ விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பார். ரயில் டிராக்கில் சென்றாரோ இல்லை சாலை கடக்கும்பொழுது பஸ் இடித்துவிட்டதோ? வேர்த்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அப்பா சோஃபாவில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தார். “இவர யாரோ மாறேட்பல்லில பார்த்திருக்காங்க. இவருக்கு நினைவு தெரியலேன்னு அவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இவர் பாக்கெட்ல இருந்த சீட்ல ஃபோன் நம்பர் அழிஞ்சிருக்கு. அதனால ஒருத்தர் ஆட்டோல கொண்டுவிட்டு போனார். எப்படியோ அவர் வீடு திரும்பியாச்சு. தாத்தா பாட்டிய நான் பாத்துக்கறேன். நீ வாய விடாத”

அமைதியாக உட்கார்ந்திருந்த அப்பாவை சரண் பார்த்தான். இன்னும் அவருடன் தான் செய்ய வேண்டிய பயணத்தை பற்றி நினைத்தான். அழுகை வந்தது. விம்மி விம்மி ஆழ ஆரம்பித்தான்.