எஸ். சுரேஷ்

Image credit: craiyon.com
அவன் கையை மேலேயும் கீழேயும் ஆட்டி காரை நிறுத்துமாறு சைகை செய்தான். கார் நின்றது. பிறகு வர்ஷா உட்கார்ந்திருந்த பக்கம் வந்து, “என் பெயர் தரம். டூரிஸ்ட் கைடு. உங்களை ருத்ரதாரி அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான்.
வர்ஷா டிரைவரை பார்த்து, “கைட் வேண்டுமா?” என்று கேட்டாள். “அருவி காட்டுக்குள் இருக்கிறது மேடம். கைடு இருந்தால் நல்லது,” என்றான்.
“எவ்வளவு?” என்று வர்ஷா கேட்டாள்
“ஐநூறு ரூபாய் மேடம்”
“நானூறு கொடுக்கறேன்”
தரம் தலையை சொறிந்தான். “நானூறுக்கு ஒப்புக்கொள்,” என்றான் டிரைவர்.
“சரி”.
அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு குடிசை, அதில் ஒரு டீக்கடை இருந்தது. நாலாபுரமும் ஹிமாலய மலைத்தொடர் அவர்களை சூழ்ந்திருந்தது. வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. சூரிய ஒளியில் பச்சை பசேல் என்று இருந்த மலைகள் இப்பொழுது கரும்பச்சை நிறமாக தோற்றமளித்தன. சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்த கோமதி நதியின் சலசலப்பு கேட்டது. இருள் சூழ்ந்திருந்த அந்த பிரதேசம் ஒரு கனவு உலகு போல் தோற்றமளித்தது. உடலை ஊடுருவி பனிக்காற்று வீசியது.
வர்ஷா தன் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்துவரை இழுத்தாள். உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் குளிருக்கு அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. சில்லென்று இருந்த கைகளால் தன் முகத்தை தடவிக் கொடுத்தாள். குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டு மேகங்களை பார்த்தாள். ஒரு முறை எல்லா மலைகளையும் நோட்டமிட்டாள். இது போன்ற அழகு ஹிமாலயா பகுதியில்தான் கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கருமேகங்களை பார்த்தபடி, “மழை வரும் போல் இருக்கிறதே,” என்றாள்.
“இல்லை மேடம். மழை வராது. இரவு பனி பெய்யலாம் ஆனால் இப்பொழுது மழை வராது,” என்றான்.
“அவ்வளவு உறுதியாக உன்னால் எப்படி சொல்ல முடியும்?”
அவன் சிரித்துக் கொண்டே, “நான் பல ஆண்டுகளாக இங்கு கைடாக இருக்கிறேன். மேகங்களைப் பார்த்தால் மழை வருமா வராதா என்பது தெரிந்து விடும்”
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முதலில் பாதை மேலே ஏறியது. “ரொம்ப அப்ஹில்லா இருக்குமா?” என்று வர்ஷா கேட்க, “கடைசியில் கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும். இப்போது கிட்டதட்ட சமதரைதான்” என்றான் தரம்.
மேலே ஏறியவர்கள், கீழ் நோக்கி ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அங்கு கோமதி நதி ஒரு பெரிய ஓடை போல் இருந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் ஓடியது. நதிக்கரையில் பெரிய கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு குளிர் இன்னும் அதிகமாக இருப்பது போல் வர்ஷாவுக்கு தோன்றியது. கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கிப் போர்த்துக் கொண்டாள்.
தரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இன்று குளிர் அதிகம் இல்லை. சலேங்கே தோ டண்ட் நகின் லகேகா. நடந்தால் குளிர் தெரியாது”
வர்ஷா கரையில் நின்றுகொண்டு நதியில் கை வைத்தாள். கையில் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தாள். சட்டென்று தண்ணீரிலிருந்து கையை எடுத்துவிட்டு தரமைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவன், “தண்ணீரில் நடந்து நதியைக் கடப்போமா?” என்றான். “ஒ நோ. இந்த குளிர் எனக்கு தாங்காது,” என்றாள் வர்ஷா. நதியின் நடுவில் இருந்த கற்களின் மேலே நடந்து நதியை கடந்தார்கள்.
உயர்ந்த மரங்கள். காட்டுக்குள் நுழைந்தார்கள். காட்டில் இருட்டு அதிகமாக இருந்தது. “நிச்சயமாக மழை வராதா?” என்று வர்ஷா கேட்க, “நிச்சயம் வராது. என்னை நம்புங்கள்” என்றான் தரம்.
சற்று தொலைவு நடந்த பிறகு ஒரு சிறு ஓடை வந்தது. அதை ஒரு மரக்கிளை ஏறிக் கடக்க வேண்டும். முதலில் சென்ற தரம், தான் கிளையை விட்டு விழுந்து விடுவதுபோல் நடித்தான். இரண்டு கைகளையும் நீட்டி, ஒரு காலில் ஏதோ நர்த்தனம் செய்வது போல் செய்தான். தன் முன் சேட்டை செய்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞனின் வெகுளித்தனத்தை கண்டு வர்ஷாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் இந்த இயற்கை போல் கல்மிஷம் இல்லாதவனாக தென்பட்டான். நடந்து நடந்து அவனுடைய உடல் சிக்கென்று இருந்தது. அவன் வெகு சுலபமாக நடந்து கொண்டிருந்தான்.
“நீங்க கௌசானிக்கு வருவது இதுதான் முதல் முறையா?”
“ஆமாம். உத்தராகண்டுக்கே இது தான் முதல் முறை. நீ எவ்வளவு நாட்களாக கைடு வேலை செய்கிறாய்?”
“ஐந்து. நீங்க ஏன் தனியாக வந்திருக்கிறீர்கள்? உங்கள் கணவர் வரவில்லையா?”
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை”
“உங்க போல அழகான பெண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை. நம்ப முடியலை”
எல்லோரும் அடிக்கடி கல்யாணப் பேச்சு எடுப்பதால், அவளுக்கு இதைப் பற்றி பேசினாலே எரிச்சலாக இருந்தது. ஆனால் இப்பொழுது தரம் இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்டதால், அவள் பதில் கூறினாள். “எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை. கல்யாணம் செய்து கொண்டால் அது நடக்காது. நான் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”
தரம் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது அவர்கள் காட்டைக் கடந்துவிட்டு, புல்வெளி நிறைத்த இடத்துக்கு வந்திருந்தார்கள். காட்டை விட்டு வெளியே வந்ததும் குளிர் அதிகமானது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்றிருந்த வெளியை பார்த்து, “ஆஹா இந்த இடம் அற்புதமாக இருக்கிறது” என்றாள் வர்ஷா.
“காலையில் நன்றாக இருக்கும். இருட்டிவிட்டால் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கும். எப்பொழுதாவது கரடியும் வரும்” என்றான் தரம்.
வர்ஷா இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தாள். “இப்பொழுது கண்ணில் படுமா?”
தரம் சிரித்துவிட்டு, தன் இரு கைகளையும் உயர்த்தி, புலி போல் கர்ஜித்தான். “இந்த மிருகத்தைதான் நீங்கள் இங்கே பார்க்க முடியும்” என்றான். கள்ளம் கபடம் இல்லாத அந்த இளைஞனைப் பார்த்து வர்ஷா மறுபடியும் சிரித்தாள்.
அவர்கள் அந்த நடையின் கடைசி கட்டத்தை அடைந்து விட்டார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்த ஒரு மலையை ஏற வேண்டும். தரம் சுலபமாக ஏறிக் கொண்டிருந்தான். வர்ஷாவுக்கு மூச்சிறைத்தது. நடந்து வந்ததால் உடல் சூடேறியிருந்தது. ஜாக்கெட்டின் ஜிப்பை கீழிறக்கினாள். குளிர் காற்று அவள் நெஞ்சில் அடித்தது.
இருவரும் அருவிக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரதாரி அருவி உயரத்திலிருந்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அருவி விழும் இடத்தில் ஒரு குளம் உண்டாகியிருந்தது. தண்ணீரின் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அப்புறத்தில் ஒரு கோவில்.
தரம் குளத்தை காட்டி, “இதில் குளிக்கிறீர்களா?” என்று கேட்டான்.
வர்ஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. அதைக் கண்டு தரம் சிரித்தான். “பல பேர் குளித்திருக்கிறார்கள்”.
“அவர்கள் குளித்து விட்டுப் போகட்டும். நான் தண்ணீரில் இறங்குவதாக இல்லை ”
பாலத்தைக் கடந்து கோவில் அருகில் வந்தார்கள். ஷூவை கழட்டி காலை கீழே வைத்த வர்ஷாவுக்கு மறுபடியும் ஷாக் அடித்தது போல் இருந்தது. “தரை எவ்வளவு சில்லென்று இருக்கிறது!” என்றாள்
ஒரே ஒரு அறை கொண்ட சிறிய கோவில். அறையில் ஒரு விக்ரஹமும், சுவற்றில் சில சாமி படங்களும் இருந்தன. ஒரு மூலையில் பாயும் கம்பளியும் பார்த்த வர்ஷா, “இங்கு யாராவது இருப்பார்களா?” என்று கேட்டாள்
“ஒரு ஸ்வாமிஜி இருப்பார். இப்பொழுது ரிஷிகேஷ் சென்றிருக்கிறார்”
“தனியாகவா இருப்பார்?”
“ஆமாம்”
“அவருக்கு குளிராதா? இரவில் காட்டுக்குள் இருப்பது அவருக்கு அச்சம் தராதா?”
தரம் சிரித்தான். “அவர் இங்கே இருபது வருடங்களாக இருக்கிறார்”
கோவிலுக்கு வெளியே வந்து வர்ஷா ஒரு பாறை மேல் அமர்ந்தாள். நதி கீழே தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சத்தம் அருவியின் இரைச்சலை மீறி கேட்டது. மெல்லிய குளிர்க் காற்று வீசியது. வர்ஷாவையும் தரமையும் தவிர அங்கு எவரும் இல்லை. அந்த ஏகாந்தமான வேளையில் என்றும் காணாத அமைதியை வர்ஷா அடைந்தாள். இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் தரம் இப்பொழுது வர்ஷாவின் மனதை அறிந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.
பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்த வர்ஷா, வேண்டா வெறுப்பாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். தரம் அவள் பின்னால் வந்தான். கீழே இறங்கி புல்வெளியை அடைந்தார்கள்.
“நீங்க எந்த ஊரு?” என்று தரம் கேட்டான்
“சென்னை”
“சென்னை?”
“மெட்ராஸ்”
“ஆ. மத்ராஸ்”
“ஆனால் நான் இப்போ தில்லியில் வேலை செய்கிறேன்”
அவர்கள் நதியை அடைந்தபோது, நதிக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஓர் இளைஞன் உட்கார்ந்திருப்பதை வர்ஷா பார்த்தாள். அவன் தரமை பார்த்து சிரித்தான். நதியைக் கடக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.
“இது என் நண்பன், ரோஹித். அவனும் ஒரு கைடு.”
“இன்று நீ யாரையும் கைடு செய்யவில்லையா” என்று வர்ஷா அவனைப் பார்த்து கேட்டாள்.
“இல்லை மேடம். இது டூரிஸ்ட் சீஸன் இல்லை. ஒருவரோ இருவரோதான் வருவார்கள்”
நதியை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைக்கு பக்கத்தில் வழவழப்பான ஒரு பெரிய பாறை இருந்தது. தரம் அதைக் காட்டி கேட்டான், “உங்களால் இந்த பாறை மேலஏற முடியுமா?”
“இது மேல் எப்படி ஏற முடியும். இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது”
“நாங்கள் ஏறுவோம் பாருங்கள்,” என்று கூறிவிட்டு தரமும் ரோஹித்தும் வீதியில் நடப்பது அந்த பாறை மேல் ஏறினார்கள். தரம் வர்ஷாவைப் பார்த்து சிரித்தான். “இன்னும் பெரிய பெரிய பாறைகள் எல்லாம் ஏறுவோம்” என்றான்.
“உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்”
அவர்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். “மேடம் ஒரு டீ குடிப்போம்,” என்றான் தரம். அந்த குளிருக்கு டீ இதமாக இருந்தது. தரமும் வர்ஷாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ரோஹித் நின்றுகொண்டே டீ குடித்தான்.
அப்பொழுது வானம் சற்று வெளுத்திருந்தது. கிளம்பியபொழுது அப்பிக் கொண்டிருந்த இருள் இப்பொழுது இல்லை. தூரத்து மலைகள் இப்பொழுது தெளிவாக தெரிந்தன. விவரிக்க முடியாத வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.
வர்ஷா தரமை பார்த்து, “இப்போ மேகங்கள் அதிகம் இல்லை பார்,” என்றாள்
“மனிதர்களை போல் இயற்கையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்,” என்றான் தரம்.
“ஆனால் இயற்கை தன் சமநிலையை குலைத்துக் கொள்வதில்லை,” என்று ரோஹித் முடித்தான்.
பேசியது நானூறு ரூபாய் தான் என்றாலும் வர்ஷா தரமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். “நீ நன்றாக வழி காட்டினாய். ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்”
“மேடம். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆசை. நாங்கள் தில்லிக்கு வந்து வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று தரம் கேட்டான்.
“இந்த அழகான இடத்தை விட்டுவிட்டு எதற்கு தில்லி வர நினைக்கிறீர்கள்? நல்ல காற்று, சுத்தமான தண்ணீரை விட்டுவிட்டு எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கின்ற தில்லிக்கு எதற்கு போகவேண்டும்?”
“வாழ்க்கைக்கு காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது இல்லையா மேடம். எங்களுக்கு வருவாய் மிகவும் குறைவு. டூரிஸ்ட் சீஸன்போது ஏதோ கொஞ்சம் பணம் வரும். இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் வராது. எங்கள் தோட்டத்தில் சில காய்கறிகள் விளையும். மற்றபடி இந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தில்லிக்கு வந்தால் மாதா மாதம் சம்பளம் கிடைக்கும். இங்க கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையை ஒரு அளவுக்கு நல்லபடியாக ஓட்டலாம்”
“இவ்வளவு நாள் ஏன் முயற்சி செய்யவில்லை?”
“ஆறு மாதம் முன்னாடிதான் கலியாணம் ஆனது மேடம். மனைவி வந்த பிறகு பொறுப்பு அதிகரித்து விட்டது. உங்களால் உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.”
“சரி. உங்க நம்பர் கொடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்.”
வர்ஷா தில்லிக்கு திரும்பிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, தரமுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “தரம், இங்க புதுசா ஆரம்பிக்கற ஒரு கம்பெனிக்கு அட்மின் அசிஸ்டண்ட்கள் வேண்டுமாம். நீயும் ரோஹித்தும் கிளம்பி வாருங்கள்.”
வர்ஷாவின் சிபாரிசு பேரில் இருவரும் டில்லியில் வேலைக்கு சேர்ந்தார்கள். முதல் மாத சம்பளம் வந்தவுடன் இருவரும் இனிப்பு வகைகளை வாங்கிக்கொண்டு வந்து வர்ஷாவுக்கு கொடுத்தார்கள். ஆறு மாதம் கழித்து வர்ஷா வேலை மாறி பெங்களூருக்கு வந்தாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு அவள் தரமிடம் தொடர்பில் இல்லை.
டிசம்பர் மாதத்தில் மறுபடியும் கௌசானிக்குச் செல்ல வர்ஷா முடிவெடுத்தாள். அவள் அங்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. டில்லிக்கு சென்று, அங்கிருந்த சதாப்தி பிடித்து காத்கோடாம் வந்தடைந்து, காரில் நைனிதால் சென்று, அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, அடுத்த நாள் ஜோகேஷ்வரில் கோவில்களை பார்த்த பின்பு, அல்மோரா வழியாக கௌசானி வந்து சேர்ந்தாள். அன்று மாலை பனிமலைத் தொடர்களை மறையும் சூரியனின் சிவப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. நந்தா தேவி, திரிஷுல், நந்தா கோட் மலைகள் தெளிவாக தெரிந்தன. தூரத்தில் பஞ்சசூலி மாலையும் தெரிந்தது. பத்து நிமிடங்களுக்கு வர்ஷா அவற்றை வாய் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகையும் குளிரையும் காமிராவில் கொண்டுவர முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் தன் காமிராவில் படங்களை எடுத்துத் தள்ளினாள்.
காலை சிற்றுண்டி ரிசார்டில் திறந்த வெளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேகமூட்டமாக இருந்ததால் தூரத்து மலைகள் தெரியவில்லை. டிசம்பர் மாத குளிர் உடம்புக்குள் ஊடுருவி சென்றது. இருந்தாலும் திறந்த வெளியிலேயே சாப்பிடுகிறேன் என்று வர்ஷா சொன்னதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் அழைகை ரசித்துக்கொண்டே, ஆலூ பரோட்டாவை ருசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் பெண் வர்ஷாவைத் தேடி வந்தாள்.
அவள் நீல நிற சுடிதார் மேல் சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வர்ஷாவைப் போல் அவள் தலையில் குரங்கு குல்லா அணிந்திருக்கவில்லை. அந்த ஊர் மக்கள் போல் அவளும் சிவப்பாக இருந்தாள். அழகான தோற்றமுடைய அவள், “நீங்கள்தான் வர்ஷா மேடமா?” என்று கேட்டாள்.
“ஆம்”
“உங்களுக்கு ரோஹித் ஞாபகம் இருக்கா?”
வர்ஷா யோசித்தாள்.
“தரமின் நண்பன். அவர்கள் இருவருக்கும் நீங்கள்தான் டில்லியில் வேலை வாங்கி கொடுத்தீர்கள்”
“ஓஹோ. ரோஹித். ஞாபகம் இருக்கிறது. நீங்கள்?”
“நான் ரோஹித்தின் மனைவி.”
“ரோஹித் எப்படி இருக்கிறான்?”
“இப்போது அவர் டில்லியில் இல்லை. திரும்பி கௌசானிக்கே வந்துவிட்டார்”
“ஏன்?”
“அதைப் பற்றிதான் பேசவேண்டும்”
சாப்பிட்டு முடித்த வர்ஷா, கையை துடைத்துக்கொண்டு, கிளொஸை மாட்டிக் கொண்டாள்.
“உங்க பேர் சொல்லவில்லையே?”
“என் பேர் ரேணு”
சூரியன் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான். மெல்லிய ஒளி புல்தரையின் மேல் பரவியது.
“ரோஹித் ஏன் தில்லியை விட்டு வந்தான்?”
“போகும்போது மகிழ்ச்சியாகதான் போனான். ஒரு ஆறு மாதத்தில் என்னை டில்லிக்கு அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்விலிட்டுப் போனான். ஆனால் ஆறு மாதத்தில் அவனே திரும்பி வந்துவிட்டான். நான் எதற்கு இப்படி செய்கிறாய் என்று கேட்டேன். நகரம் மனிதனை மிகவம் மாற்றி விடுகிறது. எனக்கு இந்த கைடு வேலையே போதும் என்று சொன்னான். நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் மறுபடியும் டில்லிக்கு போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஆனா அவன் இனி போவான் என்று எனக்கு தோன்றவில்லை.”
“மனிதர்கள் எப்படி மாறுகிறார்களாம்?”
“ரோஹித்தும் தரமும் ஒரே கம்பெனியில்தான் இருந்தார்கள். தரம் ஏதோ லஞ்சம் வாங்குகிறான் என்று சொன்னார்கள். ரோஹித் லஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தான். ஆனா அவன் மேலதிகாரிக்கு அது பிடிக்கவில்லை. அந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குபவர். அவனும் உத்தராகண்ட் ஆள்தான். அவன் ரோஹித்தை அவமானப்படுத்த ஆரம்பித்தான். ரோஹித் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான்.”
இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். வர்ஷா முகம் சில்லென்றாவதை உணர்ந்தாள்.
ரேணு தொடர்ந்தாள், “இப்போ தரமை பாருங்கள். அவன் தன் வீட்டுக்கு மேல் மாடி கட்டிவிட்டான். புதிய நிலம் வாங்கியிருக்கிறான். மனைவியையும் மகனையும் டில்லிக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டான். அவன் குழந்தை நல்ல பள்ளிக்கூடத்தில் படிப்பான். அவன் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு போவான். என் பையன் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்து ஏதோ டிரைவராகவோ கைடாகவோ போவான். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நான் பார்க்கிறேன். ரோஹித் என் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அவனோடு பேசுங்கள். இது பற்றியெல்லாம் புரிய வையுங்கள். நீங்கள் சொன்னால் அவன் கேட்பான்.”
வர்ஷாவுக்கு வேறொருவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ரேணு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தாள். “இன்றைக்கு அவன் எங்கே இருப்பான்?”
“நீங்கள் காலையில் ருத்ரதாரி அருவிக்கு போகிற இடத்தில்தான் இருப்பான்”
“சரி. நான் பேசுகிறேன்”
“ரொம்ப நன்றி மேடம்.”
“டீ குடித்துவிட்டுப் போ”
இருவரும் டீ அருந்திய பின், ரேணு விடைபெற்றுக் கொண்டாள்.
வர்ஷா இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அட்மின், பர்சேஸ் போன்ற பிரிவுகளில் லஞ்சம் வாங்குவது சகஜம் என்று அவளுக்கு தெரியும். ரோஹித்துக்கு இது போன்ற ஒரு பிரிவில்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ரோஹித்தை நிர்பந்தப்படுத்துவது சரியில்லை என்று வர்ஷா நினைத்தாள். அதே சமயம் ரேணுவின் கோரிக்கை தவறில்லை என்றும் அவளுக்கு பட்டது. சரி, ரோஹித்துடன் பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ருத்ரதாரி அருவியை நோக்கி சென்றாள்.
ரோஹித் டீக்கடையில் கடைக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “ஹாய் ரோஹித்” என்ற சொன்ன வர்ஷாவை திரும்பிப் பார்த்த அவன், ஒரு வினாடி இது யார் என்று தெரியாமல் முழித்தான். பிறகு, “அரே மேடம். நமஸ்தே” என்றான். “எங்கே? ருத்ரதாரிக்கா?”
“இல்லை. உன்னுடன் பேச வந்தேன்”
ரோஹித், “ஒரு டீ சொல்லுங்கள், பேசலாம்”
வர்ஷா டீ கோப்பையை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அறிவுரை சொல்லி பழக்கமில்லை. எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.
சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தான். மலைகள் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தன. வெகு தொலைவில் உள்ள மலைகளும் தெளிவாக தெரிந்தன. வானத்தின் ஒரு பகுதியில் கருமேகங்கள் இருந்தாலும் இன்னொரு பகுதி மேகங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு மலையில் சன்னமான அருவி உருவாகிக் கொண்டிருப்பதை வர்ஷா பார்த்தாள். தூரத்தில் காரொன்று வளைத்து நெளியும் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மனையிலிருந்து வெள்ளைப் புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தன் கண்கள் வழியாக வர்ஷா மனதினுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.
மெதுவாக காட்சி மாறியது. கருமேகங்கள் சூரியனை சூழ்ந்துகொண்டன. வெளிச்சம் மறைய தொடங்கியது. மலைகளில் நிறம் மெதுவாக கரும்பச்சையாக மாறியது. தூரத்திலிருந்த மலைகள் மறைந்தன. மெல்லிய சாரல் அடிக்க ஆரம்பித்தது. காட்சி முழுவதும் மாறிவிட்டிருந்ததை பார்த்த வர்ஷா ரோஹித்திடம், “இயற்கை எப்படி மாறுகிறது பார். மாறுவதுதான் இயற்கையின் நியதி போல்” என்றாள். ரோஹித் பதில் ஏதும் சொல்லாமல் டீ அருந்திக்கொண்டிருந்தான்.
வர்ஷா பேசி முடித்த சில வினாடிகளிலேயே காட்சி மறுபடியும் மாறியது. கரு மேகங்களை காற்று செலுத்திச் செல்ல, மறுபடியும் சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது. மழைச்சாரல் நின்றது. எல்லா மலைகளும் மறுபடியும் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லாம் பழைய நிலைக்கே திரும்பியிருந்தன.
ரோஹித் வர்ஷாவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாக டீ அருந்த ஆரம்பித்தார்கள்.