பயணம்

எஸ் சுரேஷ் 

ஞாயிறு மாலை நேரம். சென்ட்ரல் ஸ்டேஷன் ரொம்பி வழிந்தது. சரண் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான். “பல வருடங்களுக்கு முன், இந்த கூட்டத்தில் தொலைந்து போய் விடுவேனோ என்று அப்பா என் கையை பிடித்துக்கொண்டு நடந்தார். இப்பொழுது அவர் தொலைந்து போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் அவர் கையை பிடித்துக்கொண்டு நடக்கிறேன். காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ”

சரணின் அப்பாவிற்கு டிமென்ஷியா. இப்பொழுது வியாதி முற்றிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் அவருக்கு சுயநினைவு இருக்கும். சில சமயங்களில் அவருக்கு எந்த நினைவும் இருக்காது. ஒரு முறை வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. வீட்டில் எல்லோரும் பதட்டப்பட்டார்கள். அவர் செல்லும் எல்லா இடங்களும் தேடினார்கள். இரண்டு மணி நேரம் கழித்து, அமீர்பெட் காவல் நிலயத்திலிருந்து அழைத்தார்கள். அவர் சிக்கட்பல்லியிலிருந்து அமீர்பெட்டுக்கு எப்படி சென்றார் என்று யாருக்கும் புரியவில்லை. அன்றிலிருந்து அவர் சட்டைப்  பையில் எப்பொழுதும் வீட்டு விலாசத்துடன் ஒரு காகிதம் இருக்கும்படி சரண் பார்த்துக் கொண்டான்.

அப்பா வேகமாக நடந்தார். அவர் உடல் உறுதியாக இருந்தது. “இது நம்ம கம்பார்ட்மெண்ட்.” என்று சொல்லி இரண்டாம் வகுப்பு பெட்டியில் அப்பாவுடன் சரண் ஏறினான். உட்கார்ந்த ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சித்தப்பா வந்தார். “எப்படி இருக்கார்?” என்று கேட்டார். “பரவாயில்லை சித்தப்பா” என்றான். அவர் அப்பாவுடன் பேசினார், ஆனால் அப்பாவிற்கு அவர் யாரென்று புரியவில்லை. “பத்திரமா கூட்டிண்டு போ,” என்றார்.

வண்டி கிளம்பியதும் சித்தப்பா கையை ஆட்டினார். கூட்டத்தில் அவர் மறையும் வரை சரண் கையை ஆடினான். அவனுக்கும் சித்தி வீட்டில் சில நாட்கள் இருத்தவிட்டு வரவேண்டும் என்று ஆசை. ஆனால் அலுவலகத்தில் வேலைபளு அதிகம் இருந்ததால் உடனே வரவேண்டிய கட்டாயம் இருந்தது.

அப்பாவை ஜன்னல் ஓரமாக உட்காரவைத்துவிட்டு அவர் பக்கத்தில் சரண் அமர்ந்தான். ஒரு காலத்தில் ரயில் ஏறியவுடன் அவன் ஜன்னலோர இருக்கையில் உட்கார முடியாவிட்டால் அழுதது நினவில் வந்தது. எவ்வளவு முறை இதே சார்மினர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றிருப்பான். அப்பா அவனுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன் பெயராக சொல்லுவார். “மெட்ராஸ் எப்போ வரும் பா?” “நாளைக்கு வரும்.” அப்பா தண்ணி பிடிக்க இறங்கும்பொழுது அவன் மனது துடிக்கும். ரயில் கிளம்பும் முன் அப்பா ஏறிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அவர் ஏற முடியவில்லை என்றால்? எப்பொழுதும் அப்பா ரயில் கிளம்புவதற்கு முன் ஏறிவிடுவார். இருந்தாலும் சரண் மனதில் பயம் இருக்கத்தான் செய்தது. இப்பொழுதும் அவனுக்கு அதே பயம் இருந்தது. தான் இல்லாதபொழுது அப்பா ரயிலை விட்டு இறங்கிவிடுவாரோ என்ற பயம். இந்த முறை இறங்கினால் அவர் மறுபடியும் ரயில் ஏறமாட்டார் என்று அவனுக்கு தெரியும்.

சரணுக்கு எதிர்ப்புறம் ஒரு குடும்பம் உட்கார்ந்து இருந்தது. அவனுக்கு பக்கத்தில் நடுவயது ஆண் உட்கார்ந்திருந்தார். ரயில் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. சரணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அப்பாவின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். அப்பாவை விட்டு நகர அவனுக்கு பயமாக இருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற இம்சை அதிகமாகி கொண்டே இருந்தது. திடீரென்று அப்பா இருக்கையை விட்டு எழுந்தார். “எங்க போகணும்?’ “எனக்கு ஒண்ணுக்கு வருது’. அப்பாவை அழைத்துக்கொண்டு கழிப்பறைக்கு சென்றான். அப்பாவை தாழ்ப்பாள் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கதவுக்கு வெளியில் நின்றிருந்தான். கழிப்பறையை பார்த்த அவனுக்கு சிறுநீர் உபாதை அதிகமாகியது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அப்பாவுடன் தங்கள் இருக்கைக்கு சென்றான்.

அப்பாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவர் அப்பாவுடன் பேச்சு கொடுத்தார். அப்பா பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேள்வி கேட்பவருக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியதை சரண் கவனித்தான். “அவருக்கு டிமென்ஷெயா. எல்லாத்தையும் மறந்து போறார்” “ஓ’ என்ற எதிர் இருக்கை ஆள், ஏதோ கொடிய மிருகத்தை பார்தது போல் பயந்து மௌனமாகிவிட்டார்.

ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பியது. டீ விற்றுக் கொண்டிருந்தவனிடம் இரண்டு கோப்பை டீ வாங்கி, ஒன்றை அப்பாவுக்கு கொடுத்தான். சிறுநீர் கழித்தால் தவிர தன்னால் டீ குடிக்க முடியாது என்று தீர்மானித்த சரண், பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம், “அப்பாவ ரெண்டு நிமிஷம் பாத்துக்கோங்க. நான் டாய்லெட் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கழிப்பறைக்கு சென்றான்.

சரண் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டிருந்ததால் அவன் சற்று நேரம் இருக்கவேண்டி வந்தது. ஒவ்வொரு நிமிடமும் அவனுடைய பயம் கூடிக் கொண்டிருந்தது. வேலையை முடித்த பிறகு இருக்கைக்கு விரைந்தான். அப்பா ஜன்னல் ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருந்தார்.. பக்கத்து இருக்கை ஆள் சரணை பார்த்து, “ஹி இஸ் ஓகே’ என்றார்.

கல்யாணச் சத்திரத்தில் கட்டி கொடுத்த உணவை அவனும் அப்பாவும் தின்ற பின்பு, அப்பாவை கை அலம்ப அழைத்துச் சென்றான். அவர் சிறுநீர் கழித்த பிறகு இருக்கைக்கு வந்து, நடு இருக்கையை மேலே தூக்கிவிட்டு, ஏர் பில்லோவை ஊதி, அப்பாவின் தலையடியில் வைத்து, அவருக்கு போர்வை போர்த்திவிட்டான். பிறகு அவன் நடு இருக்கையின் மேல் ஏறி  அமர்ந்தான். தான் தூங்கிவிட கூடாது என்பதற்காக உட்கார்ந்தே இருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு அவனுக்கு கழுத்தும் முதுகும் வலிக்க ஆரம்பித்தன. இனி உட்கார்ந்திருக்க முடியாது என்று நினைத்து இருக்கையில் படுத்துக் கொண்டு, அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று எட்டிப் பார்த்தான். அவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். சரண் ராதிகாவை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்கு முன் அவளை பெண் பார்க்க சென்றிருந்தான். அவளை பார்த்தவுடன் அவன் பிடித்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டான். வெளியில் சந்தித்தால் சர்ச்சை ஆகிவிடும் என்பதால் அவர்கள் தொலைபேசி வாயிலாக தினமும் பேசிக்கொண்டார்கள். காலை பத்து மணிக்கு ராதிகா அவளுடைய அலுவலகத்திலிருந்து இவனை அழைப்பாள். மாலை ஐந்து மணி அளவில் இவன் அவளை அழைப்பான். அலுவலகத்திலிருந்து பேசுவதால் அதிகம் பேச முடியாது. இருந்தாலும் தினமும் பேசிய சில நிமிடங்களை மனதில் அசை போட்டுக்கொண்டு சரண் மகிழ்ச்சியடைவான். அவள் நினைப்பு அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றது. ராதிகா நினைவில் மூழ்கியிருந்த சரண், ரயில் நின்றிருப்பதை உணர்த்து திடுக்கிட்டான். உடனே கீழே எட்டிப் பார்த்தான். அப்பா அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்.

ரயில் மறுபடியும் கிளம்பியது. சரண் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. சரணுக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் போல் இருந்தது. அப்பாவை பார்த்துக்கொள்ளும்படி யாருக்கும் சொல்ல முடியாது. அதே சமயம் அடுத்த ஸ்டேஷன் சீக்கிரம் வராது என்று நினைத்துக்கொண்டு சரண் கழிப்பறைக்கு விரைந்தான். சீக்கிரம் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்கையை நோக்கி வரும்பொழுது இருக்கைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அப்பாவின் கால்களை காணவில்லை. இதயம் படபடக்க இருக்கையை நோக்கி ஓடினான். அப்பா கால்களை மடித்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நடு இருக்கையின் மேல் ஏறிய பிறகும் அவன் இதயம் வேகவாக அடித்துக் கொண்டிருத்தது. இரண்டு மூன்று தரம் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்டான். வெளியிலிருந்து சில்லென்ற காற்று வீசியது. அப்பா நன்றாக போர்த்திக் கொண்டிருக்கிறாரா என்று பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. மறுபடியும் மெதுவாக படுத்தான். ராதிகாவை பற்றியும், அலுவலக வேலையை பற்றியும் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். .

நடு இரவு தாண்டிய பிறகு ‘கட கட கட கட’ என்ற ஓசையுடன் கிருஷ்ணா நதி பாலத்தை வண்டி கடந்தது. சற்று நேரம் கழித்து விஜயவாடா ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ரயில் இங்கு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும். சரண் இருக்கையிலிருந்து காலை கீழே நீட்டி உட்கார்ந்த கொண்டான். அடிக்கடி அப்பாவை எட்டிப்பார்த்தான். ரயில் நின்று பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ரயில் கிளம்பப் போகிறது என்ற தகவலை ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதை கேட்ட சரண், மறுபடியும் படுத்துக்கொண்டான். முதல் நாள் கல்யாண வேலைகள் இருந்ததால் வெகு நேரம் அவன் தூங்கவில்லை. அதிகாலை முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்துவிட்டான். செப்டெம்பர் மாதமாக இருந்தாலும் மெட்ராசில் வெயில் கொளுத்தியது. எல்லாம் சேர்ந்து அவனுக்கு அளவுகடந்த சோர்வை அளித்தன. இவ்வளவு நேரம் முழித்துக் கொண்டிருந்த அவன் இப்பொழுது தூங்கிவிட்டான்.

கனவில் ராதிகா அவனிடன் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். சிரித்துக் கொண்டே கண்முழித்தான். கரைந்து போகும் அழகிய கனவை மறுபடியும் கையில் பிடிக்க கண் மூடினான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் கனவை மறுபடியும் கைப்பற்ற முடியவில்லை. வேண்டா வெறுப்பாக கண்களை திறந்தான். எதிர் பக்கம் உட்கார்ந்திருந்தவர் தன் நடு இருக்கையை கீழே இறக்கி கொண்டிருந்தார். சட்டென்று சரணுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்து, கீழே எட்டிப்பார்த்தான். அப்பாவை காணவில்லை.

எழுந்த வேகத்தில் அவன் தலை அப்பர் பெர்த்தில் முட்டியது. தலையை தடவிக்கொண்டே கீழே இறங்கினான். எதிர் இருக்கையில் இருப்பவரை பார்த்து, “அப்பாவை பாத்தீங்களா?” என்று கேட்டான். “நான் இப்போ தான் எழுந்திரிச்சேன். அவரை பாக்கல. டாய்லெட் போயிருப்பரோ என்னவோ” என்றார்.

சரண் கழிப்பறையிடம் சென்றான். இரண்டு கழிப்பறைகளும் மூடி இருந்தன. நிலைக்கொள்ள முடியாமல் சரண் அங்கு நின்றிருந்தான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கதவு திறந்தது. இன்னும் சற்று நேரம் கழித்து இன்னொரு கதவு திறந்தது. இரண்டிலும் அப்பா இல்லை. மறுபக்கம் உள்ள கழிப்பறைக்கு விரைந்தான். அங்கும் அப்பா இல்லை.

ரயில் போங்கீர் தாண்டிவிட்டிருந்தது. கட்கேஷர் தாண்டிவிட்டால் சிகந்திரபாத் ஸ்டேஷன் வந்து விடும். சரண் ஒவ்வொரு பெட்டியாக தேடிக்கொண்டே சென்றான். எதிலும் அப்பா இல்லை. மறுபடியும் இருக்கைக்கு வந்தவனை எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். “அவருக்கு எவ்வளவு நாளாக மறதி இருக்கிறது?”, “அவருக்கு தன் பெயர் தெரியுமா?” “தன்னுடைய ஊர் எது என்று அவருக்கு தெரியுமா?” “நீ தனியாக அவரை ஏன் கூட்டிக்கொண்டு வந்தாய்? கூட யாராவது வந்திருக்கலாமே?” சரணுக்கு இருப்பு கொள்ளவில்லை ஆனால் அவனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும். “சிகந்திரபாத் ஸ்டேஷன்ல இறங்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடு” என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

ரயில் நிற்பதற்கு முன்பே இரண்டு பைகளை தோளில் சுமந்துக்கொண்டு சரண் வெளியே குதித்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓடினான். அவன் சொன்னதை பொறுமையாக கேட்ட போலீஸ் அதிகாரி, “இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருந்திருக்கக் கூடாதா? உன்ன நம்பிதானே அனுப்பினாங்க? இப்படி அப்பாவா தொலைச்சிட்டு வந்து இருக்கியே.” சரணுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. “எப்படியாவது அவர கண்டுபிடிச்சி குடுங்க சார்” என்று கெஞ்சினான். “சரி சரி. நான் என்னால முடிஞ்சத செய்யறேன். இதோ பார். நீ அவர விஜயவாடா ஸ்டேஷன் வரைக்கும் கண்காணிச்சிருக்க. அதுக்கு பிறகு கம்மம், காஜிபேட், வாராங்கல் ஸ்டேஷன்லாம் இருக்கு. இப்போ எல்லா இடமும் தேடனும். நீ உங்க வீட்டு ஃபோன் நம்பர் குடுத்துட்டு போ. ஏதாவது தகவல் இருந்தா நான் ஃபோன் பண்றேன்”

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான். வீட்டில் தாத்தா பாட்டிக்கும், கல்யாணமாகாத மாமாவுக்கும் என்ன சொல்வது? அம்மாவுக்கு என்ன சொல்வது? எல்லாவற்றிக்கும் மேல், ராதிகாவுக்கு என்ன சொல்வது? தான் அப்பாவை தொலைத்துவிட்டதை பற்றி அவள் என்ன நினைப்பாள்? அம்மா இந்த செய்தியை கேட்டு அழுவாளா? அலுவலகத்தில் இதைப் பற்றி சொல்லலாமா? இங்கிருந்து வீட்டுக்கு பஸ் பிடித்துக்கொண்டு போகலாமா, இல்லை ஆட்டோவில் போகலாமா? அவன் மனது இங்கும் அங்குமாக தாவிக் கொண்டிருந்தது. தான் நிதானத்திற்கு வரவேண்டும் என்று உணர்த்து, பஸ்ஸில் செல்ல முடிவு செய்தான். ஒண்ணாம் நம்பர் பஸ் போய்குடா, முஷீராபாத், சார்மினார் சௌரஸ்தா தாண்டி சிக்கட்பல்லியில் நின்றதும் சரண் இறங்கிக்கொண்டு மாமாவுக்கு எப்படி சொல்வது என்ற சிந்தனையில் வீட்டை நோக்கி நடந்தான்.

அழைப்பு மணி கேட்டு மாமா கதவைத் திறந்தார். “வாடா” என்று சரணை வரவேற்றவர் வெளியே எட்டிப் பார்த்தார். “அப்பா அம்மா எங்க?” என்றார். “அம்மா சித்தியோட தங்கிட்டா. ஒரு வாரம் கழிச்சி வருவா” “அப்படியா. அப்பா எங்க?” “மாமா, தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லாத. அப்பாவ காணோம். எங்கேயோ டிரைன்னை விட்டு இறங்கிட்டாரு” என்று கிசுகிசுத்தான். “என்னடா சொல்ற. அய்யய்யோ. இப்படி அப்பாவ தொலைச்சிட்டு வந்து நிக்குற. உங்க அம்மாவுக்கு என்னடா சொல்றது?”

படுக்கையில் படுத்திருந்த பாட்டி “யார்டா அது, சரணா? அப்பா அம்மா எங்கடா?” “ஒரு வாரம் கழிச்சி வராங்களாம். நம்ம காமாட்சி ஒரு வாரம் அங்க தங்க சொல்லியிருக்கா” என்று மாமா பதில் கூறினார். பிறகு சரணை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். சரண் போலீஸ் ஸ்டேஷன் சென்றதை பற்றி சொன்னான். “இந்த மனுஷன் எங்க இறங்கினாரோ? இது எப்படிடா டீல் பண்றது?” இருவரும் மௌனமாக இருந்தார்கள். “நீ ஒண்ணு பண்ணு. எதுவும் நடக்காதது போல இரு. ஆஃபிஸ் கிளம்ப் போ. நான் இவங்கள பார்த்துகிறேன். ஆஃபிஸ்ல யாராவ்து ஹெல்ப் பண்ணுவாங்களா பாரு.”

அவன் ஆபீஸ் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. ஆபீஸில் நுழைந்தவுடன், சுனிதா சிரித்துக்கொண்டே, “யாரோ ராதிகாவாமே. உனக்குன்னு ஃபோன் பண்ணா. நீ இல்லைனு சொன்னதும் அவள் குரலே மாறிப்போச்சு. அவ அழுத்துவிடுவாளோன்னு பயந்தேன்” என்றாள். அவள் குறும்பாக பேசியதை எப்பொழுதும் ரசிக்கும் சரண் இன்று ரசிக்கவில்லை. அவன் முகம் ஏதோ போல் இருந்தது. “என்ன சரண். என்ன ப்ராப்ளம்?” சற்று நேரம் மௌனமாக இருந்தவன், “நேத்து எங்க அப்பாகூட ரயில்ல வந்தேன். அவர் ஏதோ ஒரு ஸ்டேஷன்ல இறங்கி இருக்கார். காலைல எழுந்து பார்த்த அவர காணோம்” இதை கேட்டுக்கொண்டிருந்த ராகவ், “என்னடா இப்படி செஞ்சிட்ட. உங்க அப்பாவ கவனிக்காம விட்டிட்டையே” என்றான். இதை பலரிடமிருந்து கேட்ட சரணுக்கு கோபம் வந்தது, “ஏன்டா எங்கப்பாவ நானே வேணும்னு தொலைப்பேனா? நானும் எவ்வளவோ நேரம் தூங்காமதான் இருந்தேன். நானுன் மனுஷன் தானே. என் பாட் லக் நான் தூங்கும்போது அவர் எங்கேயோ இறங்கி இருக்கார். இதெல்லாம் வேணும்னா செய்வேன்?” அவன் குரலில் இருந்த கோபத்தை தணிக்க, “சாரி. சாரி, தெரியாம கேட்டுட்டேன். உங்க அப்பாவ நாம் ரெண்டு பெரும் சேர்ந்து கண்டுபிடிப்போம்” என்றான்.

ஆபீஸில் பணிபுரியும் பத்து நபர்களுக்கும் இந்த செய்தி தெரிந்துவிட்டது. ஒருவர் தன் நண்பரை ஃபோன் செய்து கம்மம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க சொன்னார். இன்னொருவர் தன் நண்பருக்கு ஃபோன் செய்து வாராங்கல் ரயில் நிலையத்தில் விசாரிக்க சொன்னார். இதற்கிடையில் ராதிகாவின் அழைப்பு வந்தது. அவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று சரணால் முடிவு செய்ய முடியவில்லை. உண்மையை சொன்னால் அவள் தனக்கு ஆறுதல் சொல்லுவளோ இல்லை தனக்கு பொறுப்பாக நடந்துகொள்ள தெரியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று குழம்பிய சரண், தனக்கு வேலை இருப்பதாகவும், “ஐ லவ் யு. அஞ்சு மணிக்கு ரெடியா இரு. என் கால் வரும்” என்று சொன்னான்.

மணி மதியம் இரண்டை தாண்டியது. அப்பாவை பற்றிய எந்த தகவலும் இல்லை. சரண் சோர்ந்திருந்தான். சரி இனி என்ன ஆகிறதோ ஆகட்டும். அம்மாவுக்கும் ராதிகாவுக்கும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். “ராகவ், எதுக்கும் ஒரு முறை சிகந்தரபாத் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் போயி பாத்துட்டு வந்திடலாம். அவங்க கிட்ட ஏதாவது நியூஸ் இருக்கா பார்ப்போம்,” அவர்களிடமும் எந்த செய்தியும் இல்லை. சரண் நம்பிக்கையை முழுவதும் இழந்தவனாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.

ஆபீஸில் நுழைந்தவுடன் சுனிதா, “உங்க மாமா ஃபோன் பன்னாரு. ஏதோ அர்ஜண்ட்டாம். உன்னை உடனே வர சொன்னார்,” சரணுக்கு இதயம் வேகமாக அடித்துக்கொள்வது நன்றாக கேட்டது. அவன் தன்னுள் இவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த பயம் இப்பொழுது வெளிவந்தது. அப்பா ஏதோ விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பார். ரயில் டிராக்கில் சென்றாரோ இல்லை சாலை கடக்கும்பொழுது பஸ் இடித்துவிட்டதோ? வேர்த்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அப்பா சோஃபாவில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தார். “இவர யாரோ மாறேட்பல்லில பார்த்திருக்காங்க. இவருக்கு நினைவு தெரியலேன்னு அவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இவர் பாக்கெட்ல இருந்த சீட்ல ஃபோன் நம்பர் அழிஞ்சிருக்கு. அதனால ஒருத்தர் ஆட்டோல கொண்டுவிட்டு போனார். எப்படியோ அவர் வீடு திரும்பியாச்சு. தாத்தா பாட்டிய நான் பாத்துக்கறேன். நீ வாய விடாத”

அமைதியாக உட்கார்ந்திருந்த அப்பாவை சரண் பார்த்தான். இன்னும் அவருடன் தான் செய்ய வேண்டிய பயணத்தை பற்றி நினைத்தான். அழுகை வந்தது. விம்மி விம்மி ஆழ ஆரம்பித்தான்.

 

 

 

 

 

2 comments

  1. வாழ்க்கை நமக்கு பல யதார்த்தங்களை காலப் பொழுதில் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது.

    பார்ப்பதில் ‘இல்லை பரவசம்’

    பழகுவதில் , பழக்கப் படுவதில்,

    தம் இருப்பை, இருந்தழியலை

    உணர்ந்து எழுதப்பட்ட தருணங்கள்.

    திரும்ப படித்து, நினைவுகளை அசைபோடச் செய்தது.

  2. இருந்தழியலை ” என்பதை ” இருத்தழியல் Existentialism “என்று ” படிக்கவும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.