கட்டுரை

அரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்

  1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான வாசிப்புக்குள் திசைத்திருப்பப்பட்டேன். முதலில் ரஷ்ய இலக்கியங்களும் பிறகு, தமிழின் நவீன இலக்கியமும் பரிச்சயம் ஆனது. தொடர்ந்து கிடைத்த நண்பர்களே இலக்கிய வழிக்காட்டிகளாக உள்ளனர். அதில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப, அரசியலுக்கேற்பப் படைப்புகளைப் பரிந்துரைப்பார்கள். அதிலிருந்து எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பின் ஆரம்பத்திலேயே எழுத வேண்டும் என்ற ஊந்துதல் வந்துவிட்டது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் போதே சில சிறுகதைகளும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் புதுச்சேரியிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த புதுவைப்பாமரன் மற்றும் புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதை தொடர முடியவில்லை. பிறகு வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகே மீண்டும் எழுத ஆரம்பத்தேன். மலைகள், பதாகை, சொல்வனம், உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய இனைய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தது. இதில் பதாகை பாஸ்கர் அவர்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமானது.

  1. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

வாசிக்கும் போது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. படைப்பை அனுபவிக்கவே விரும்புகிறேன். அவ்வாறு அனுபவத்தை தராத படைப்புகளிடமிருந்து விலகிவிடுகிறேன். ஆனால், தற்போது வாசிக்கும் பழக்கத்தில் சிறிது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் மொழியை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்கிறேன். நுட்பமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்வது என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

  1. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது முதல் தொகுப்பை வெளியிடும் போது இருந்த மனநிலை, அந்தத் தொகுப்பு வெளியான சிறிது காலத்திற்குள்ளாகவே மாறத்தொடங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அத்தொகுப்பின் என்னுரையில் நான் எதார்த்தவாத்ததின் தேவையைப் பற்றியும் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தின் பற்றியும் கூறியிருப்பேன். ஆனால், அதன் பின் என் சிந்தனை முழுக்க கோட்பாடுகள், மாய எதார்த்தம் என மாறத்தொடங்கியது. கதைச் சொல்லலில் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பில் நான் மேற்கொண்ட சில மாற்றங்களைச் சொல்லலாம். அதன் பிறகே என் புனைவுலக மனிதர்கள் நிறம் மாறத்துவங்கினார்கள். என் முதல் தொகுப்பிற்கு பிறகு வந்த கதைகளில் இதைக் காணலாம். வடிவத்தில் சில மாற்றங்களை நான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் என் கதைகளில் எளிய அடித்தட்டு மனிதர்களைப் பற்றியே தொடர்ந்துப் பேசி வருகிறேன். மேலும், நான் இருக்கும் ஐ.டி. மற்றும் பிபிஓ துறைப் பற்றியும் அவ்வபோதுக் கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், எனது சொந்த ஊரானப் புதுச்சேரியைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

  1. உங்கள் வாசிப்பில் அயல் இலக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நமது இலக்கியத்துக்கும் அயல் இலக்கியத்துக்கும் இருக்கும் வேறுபாடு எப்படியிருக்கிறது?

முக்கியமாக இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்கு சமகாலத்தைப் பற்றிய உணர்வு இல்லையோ என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் கதைகளை நினைவுகளில் இருந்தே படைக்கிறார்கள். அவ்வாறு படைக்கப்படும் கதை பத்திலிருந்து இருவது வருடங்கள் பிந்தையதாகவே இருக்கிறது. ஆனால், அயல் இலக்கியங்களில் தற்காலத்தைப் பற்றி அதிகம் கவனம் கொள்ளபடுவதாகத் தோன்றுகிறது. தலைமுறைகளின் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள் என அதிகம் அங்கேப் பதிவுச் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டக் கலாச்சார மாற்றங்களை நாம் இன்னும் சரியாக பதிவு செய்ய ஆரம்பிக்கவில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகான குடும்பங்களின் அமைப்பு எவ்வாறு சிதைந்திருக்கிறது, ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், மேலும் பெண்களின் உலகம் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என எதைப் பற்றியும் நாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை.

  1. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் எதனை பற்றி எழுதுவீங்க?

நிச்சயம் இருக்கிறது. வரலாற்றின் மீது எனக்கு அளவில்லாத ஆர்வமுண்டு. சொல்லப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் சொல்லப்படாமலேயே, ஆராயப்படாமலேயே இருக்கின்றது என்ற வருத்தம் எனக்கு உண்டு. நிச்சயம் வரலாற்றுத் தொடர்பான அப்புனைவுகளை எழுதுவேன்.

  1. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

எனக்கு முன்னோடிகள் நிலையானவர்களாக இல்லை. முதலில் ராஜேந்திர சோழன் இருந்தார். பிறகு அசோகமித்ரன், பிறகு பஷீர் என காலத்திற்கும் வாசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது வாசிப்பின் வழி என்னை மேம்படித்திக்கொள்வதாகவே கருதுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கூறு பிடித்துள்ளது. எதையும் புறந்தள்ள முடியவில்லை.

  1. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

எனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. டிஜிட்டல் பெயிண்டிங், போட்டோ மேனுபிசோஷனிலும் அதிகம் ஆர்வம் உண்டு. கதைகளில் விவரிப்பத்தை விட இதில் என்னால் கூடுதலாக காட்சிப்படுத்த முடிகிறது. இதுவே தான் வேலையாகவும் இருப்பதால் கூடுதலான நேரம் ஒதுக்க வேண்டும் என்ற சிரமும் இல்லை.

  1. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதர்க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

நான் எழுதியதை நானே வாசிப்பது தான் மிகவும் சவாலானது. பிறர் எழுதியதை வாசிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஆச்சரியங்கள் எதுவும் நம் சொந்தப் படைப்பை வாசிக்கும் போது இருக்காது. அதனால் பலருடையப் படைப்புகளில், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது” என்றக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது எளிதானதல்ல.

  1. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

நான் அதிகம் பயணம் செய்யக்கூடியவன் அல்ல. அடுத்த நாவலுக்கு அவ்வாறு ஒருப் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

  1. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே முதல் தொகுப்பு வெளிவந்தது. எனக்குத் தெரிந்தப் பலரின் கருத்து நான் அவரசப்பட்டுவிட்டேன் என்பதாகவே இருந்தது. ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நான் எந்த ஒரு மோசமானக் கதையையும் எழுதவில்லை. இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு. ஆனால் அப்போது எனக்கு உதவ இலக்கிய நண்பர்கள் யாருமில்லை. அக்கதைகள் தவறான கைகளுக்கு எடிட் செய்ய சென்றுவிட்டது. ஆனாலும் அக்கதைகள் எனக்கு ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தகுதியற்றவர்கள் எடிட் செய்யும் போது நல்லக் கதைகளும் காணாமல்தான் போகும்.

  1. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

பலக் கதைகளில் அதை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக “மெளனம் களையட்டும்” கதை.

  1. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

பெரிதாக ஒன்றும் இதுவரை வரவில்லை. என்னை யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் இங்கிருக்கும் குழு மனப்பான்மை. என்னை திட்டுவதாலும், பாராட்டுவதாலும் விமர்சிப்பதாலும் யாருக்கும் எந்த நல்லதும் நடந்துவிட போவதில்லை. என்னால் யாரும் கவனத்திற்குள்ளாவப் போவதுமில்லை. அனைத்தும் தேவையைப் பொருத்தே நடப்பதால், நான் இன்னும் எவருடையத் தேவைப் பட்டியளுக்குள்ளும் வரவில்லை.

  1. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

ஒன்றே ஒன்று தான். இச்சமூகத்தைப் புரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகம் எப்படி இவ்வாறு ஒற்றுமையாக இயங்குகிறது. அதற்கு ஆதாரப்புள்ளி என்ன என்பதைக் கண்டடையவேத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறேன்.

  1. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா?

தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

நிச்சயம் முக்கியமானது தான். என்னைப் பொருத்தவரைத் தொடர்ந்து கவனத்துடன் வாசிப்பதும், திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதும் தான் மேம்படுத்த சிறந்த வழி. நான் அதைத்தான் செய்கிறேன்.

  1. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

அனைத்தையும் எனக்குப் பிடித்தே எழுதினேன். ஆனால் பதிலடி என்றக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. அது, இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று என்னும் போதுத் தவறான ஒரு விஷயத்தை இச்சமூகத்திற்குச் சொல்லிவிட்டோமோ என்றுத் தோன்றுகிறது. அக்கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்தது துரதிஷ்டமானது.

  1. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

நிறைய உண்டு. உதாரணமாக சமீபத்தில் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜப்பானிய நாவலை வாசித்தேன். அதை முன்பே வாசித்திருந்தால் பாரிஸை இன்னும் வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்க முடியும் என்றுத் தோன்றியது.

  1. உங்கள் படைப்புலத்தின் ஆதார மனநிலை என்ன?

இயலாமை. இச்சமூகத்தில் பெருங்கூட்டம் ஒன்று இம்மனநிலையிலேயே இயங்குகிறது. நடுத்தர மக்களின் ஆதார மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. தங்களின் இயலாமையை மறைக்கவே தான் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களின் இயலாமையை தான் பன்னாட்டு நிறுவனங்கள் காசாக்குகிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டாக்குகிறார்கள். எதையும் எதிர்த்து கேட்கவிடாமல் ஒடுக்கப்படுகிறார்கள். சுரண்டுபவன் தைரியமாக சுரண்டுகிறான்.

  1. பெரும்பாலான கதைகளில் சிறுவர்கள் கதைமாந்தராகவும் அல்லது சிறு வயதில் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது இன்னும் பால்யத்தை விட்டு வெளியேறாமல் இருக்கிறதா உங்கள் படைப்பு மனம்?

இருக்கலாம். இவை அனைத்தும் என் ஆரம்ப கதைகள் தான். அதனால் ஒருவேளை அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதல் தொகுப்பிற்கு பிறகு வெளியான எந்தக் கதையும் அப்படியானதல்ல.

  1. பெண் கதைமாந்தாரின் கதைகளை(விடிவிப்பு, நகரிசொல்லும் போதும் பெண்களின் நுட்ப உணர்வுதளங்களை எழுத முடியாமல் போவதற்கு என்ன காரணமென்று உங்களால் யூகிக்க முடிகிறதா

தெரியவில்லை.

  1. நிழல் தேடும் பறவைகள் சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் பெண்ணாக மாறிப்போன தனது அப்பாவை கூடவே இருக்கச் சொல்லும் காட்சியை நினைவூட்டுகிறது, அதை போல உங்கள் படைப்பை ஒருபகுதியை பிற கலைவடிவிலோ அல்லது பிறர் படைப்பிலோ கண்டிருக்கின்றீர்களா? அப்படி கண்டறியும் போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?

இதே கேள்வி பலமுறை கேட்கபட்டுவிட்டது. நிழல் தேடும் பறவைகள் கதையை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதினேன். அது புதுவைப் பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. அப்பொது அதை ஒரு குறுங்கதையாக மாற்றம் என்றத் தலைப்பில் எழுதியிருந்தேன். மீண்டும் அதை விரிவாக இந்த தலைப்பில் எழுதினேன். அக்கதைக்கூட படம் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதாகையில் வெளிவந்தது. திரைப்படங்களில் இவ்வாறு எடுத்தால்வது இப்போது சகஜமான ஒன்று தான். சர்வசாதாரணமாக அவர்கள் அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனது அமிலம் என்ற சிறுகதை வாசகசாலை இனைய இதழில் வெளிவந்தது. அதை ஒரு நண்பர் நாளைய இயக்குனருக்காக என்னுடம் அனுமதி பெற்று குறும்படமாக்கினார். ஆனால் அதை அப்படியே ஒரு பிரபல படத்தில் ஒரு காட்சியாக்கிவிட்டனர்.

  1. சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அவளது திருமண வாழ்வை பாதிக்கும் என்ற பல்வேறு ஆய்வுகளும் அதை மையம் கொண்ட புனைவுகளும் வந்திருக்கும் நிலையில் உங்களது மௌனம் கலையட்டும் ஒரு சிறுவனுக்கு நடக்கும் வன்கொடுமையை பதிவு செய்கிறது. அவனது உளசிக்கல்களை பேசுகிறது, இந்த கதையின் கருவை நீங்கள் புனைவாக்கும் போது உங்களுக்கிருந்த சவால்கள் என்னென்ன?

உண்மையில் இது எனக்கு நடந்த ஒரு விஷயம் தான். இதை பகிரங்கமாக வெளிபடுத்த தயங்கவில்லை. நிச்சயம் இது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றே இதைக் கதையாக்கினேன். ஆனால் ஒவ்வொன்றையுன் நினைவுக்கூர்ந்து எழுதுவது தான் மிகக் கடினமானதாக இருந்தது. மீண்டு வந்த ஒரு கிணற்றுக்குள் மறுபடியும் குதிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் குதித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

  1. பிணந்தின்னிகள், பதிலடி போன்ற கதைகளில் நீங்கள் பூடகமாக பதிய விரும்புவது சாதிய ஏற்றத்தாழ்வுகளையா

நிச்சயமாக. சாதிய கொடுமைகளால் தலித் மக்கள் மட்டுமே பாதிக்கபடுவதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை என்றாலும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் உள்ளவர்களார் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். பிணந்தின்னிகளில், பொருளாதார ரீதியில் எவ்வித உதவியும் செய்ய முன்வராத சொந்த சாதியினர், அடுத்தவர்களின் திருமண விஷயத்தில் தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும், மற்ற சாதியினரைக் கொல்லத்துணிவதும் எவ்வகையில் நியாயம் என்று இதுவரை தெரியவில்லை.

  1. மைதானம் இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது நகரமயத்தின் சீரழிவையா அல்லது பருவமாற்றம், வெப்பமாதல் போன்ற பயங்கரத்தையா அல்லது அது மாபெரும் ஏரி புனைவு மட்டுமா?

அரசியலற்ற படைப்பை எப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதாவது ஒருவகையில் சிறு அரசியலையாவதுத் தொட்டுவிடவே எப்போதும் முயல்வேன். சில சமயம் வித்தியாசமான கதைகள் அமையும் போது அதை சமரசம் செய்து கொள்வேன். மைதானம் கதை உலகமையமாக்களால், பன்னாட்டு நிருவனங்களால் கிராமங்களின் நீர் வளம் எவ்வாறு இல்லாமல் போய்விட்டது என்பதையே சொல்ல விரும்பினேன்.

  1. குப்பைகள் போன்ற சில கதைகளில் கதை வடிவத்தில் புதுமையை முயற்சி செய்திருக்கின்றீர்கள் நீங்கள் கதைக்காக வடிவத்தை தேர்தெடுப்பீர்களா அல்லது இந்த வடிவில் எழுத வேண்டுமென்று முடிவு செய்து விட்டு கதை களத்தை, கருவை யோசிப்பீர்களா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இரண்டுமே நடக்கிறது. குப்பைகள் கதையைப் பொருத்தவரை முதலில் கதை தான் உருவானது. அதை நேர்க்கோட்டில் தான் எழுதினேன். அது எனக்கு திருப்தி தராததால் இரண்டு முறை மாற்றி எழுதினேன். பிறகே இவ்வடிவம் உருவானது. வடிவத்தை முதலில் தீர்மானித்தும் கதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவை எதுவும் பதிலடி தொகுப்பில் இடம்பெறவில்லை. அடுத்தத் தொகுப்பில் வாரும்.

  1. மாயப்படகு இது நீங்கள் பனிரெண்டாம் வகுப்பில் எழுதியது என்று உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது அதை மறு ஆக்கம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தத்தற்கு உங்களால் அந்த பதின்வயதுக்கு திரும்பி சென்று எழுத முடியாதென்று நினைத்தது காரணமா

கண்டிப்பாக. என்னால் மீண்டும் அந்த வயதுக்குரிய மனநிலைக்குச் செல்ல முடியாது. வேலையினால் ஏற்படும் மன அழுத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். சராசரியான ஒரு மனிதனுக்குரிய மனநிலையே இல்லாத போதுப் பதின்பருவ மனநிலைக்குச் செல்வது நிச்சயமாக இயலாதக் காரியம். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

  1. பாரீஸ் குறுநாவலில் பிரெஞ்ச் குடியுரிமைக்காக பெண்ணுக்கு பணம் கொடுத்து மணந்து கொண்டு பாரீஸ் போகின்றார்கள் என்பது கதைகளம் அந்த மனபோக்கு இப்போதும் இருக்கிறதா? பாரீஸ் குடியுரிமை கொண்ட பெண்ணை மணப்பதன் மூலம் பாரீஸுக்கு குடியேறி அங்கேயே தங்கிவிடும் பழக்கம் நிஜத்தில் இருக்கிறதா ? அதே போல அதில் குடியுரிமையுள்ள ஆண்களை மணந்து குடியுரிமை பெற பெண்கள் பெரிதாக விரும்பதில்லை என்பதில் ஏதேனும் உளவியல் காரணங்கள் உண்டா?

பாரிஸுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இருபாலரிலும் இருக்கிறாகள். ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டால், பெண்கள் இரண்டாம் தாரமாக செல்ல தயங்குவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்துள்ளது. அதற்குக் காரணம், கட்டாயமாக பிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும், பிரான்ஸ் அரசின் பொருளாதார நிலை, அவர்கள் புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் எனப் பிரான்ஸ்க்குச் செல்வது தற்போது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் இன்றும் அவ்வாறு நடக்கத்தான் செய்கிறது.

  1. பாரீஸ் நாவலிலும், சில சிறுகதைகளிலும் கதை களமான பாண்டிச்சேரியும் அதன் போதை வஸ்துகளும் நாவலில், சிறுகதையில் உபயோகபடுத்தியிருக்கும் கதைமாந்தர் சிலரின் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பதற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா?

இந்த கேள்வி சற்று வருத்தமளிக்கிறது. மனிதர்கள் பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மிக மேல்தட்டு நிலை முதல் மிக மிக கீழ் தட்டு நிலைவரை வாழும் மனிதர்களின் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் மிக அதிக அளவில் வித்தியாசம் இருக்கும். நீங்கள் கேட்டும் கேள்வி கீழ்தட்டு மக்கள் அதிக அளவில் கெட்ட வார்த்தகள் பேசுவது போலவும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் அதிக போதை மற்றும் குடிக்கு அடிமையானர்கள் போலவும் சொல்ல வருகறீர்கள் என்றுத் தோன்றுகிறது. உண்மையில் பாண்டிச்சேரிக்கு அதிகமாக குடிக்க வெளி மாநிலத்திலிருந்து தான் வருகிறார்கள். உழைப்பால் ஏற்படும் உடல் வலி மற்றும் மன அழுத்ததிற்காக குடிக்கும் கீழ்தட்டு மக்களை விட வெறும் போதைக்காக குடிக்கு மேல் தட்டு மக்கள் அதிகம். பப்களில் பயன்படுத்தப்படும் போதை வஸ்துகளை கீழ்தட்டு மக்கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். ஃபக் எனும் ஆங்கில வார்த்தை எந்த வகையில் காதுக்கு இனிமையான வார்த்தை என தெரியவில்லை.

அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்

அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.

மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.

பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின்  தனிச்சிறப்பு

புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம்  பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.

வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.  

தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறதுகதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது

விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.

நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்

புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிதுஇதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.

குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணிஎன்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.

இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.

கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.

 

காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.

கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.

படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.

இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்

இமையம் அவர்கள் எழுதியுள்ள ‘வாழ்க வாழ்க’ ஒரு பொதுக் கூட்டத்தை சுற்றிப் பின்னப்பட்ட சமகால அரசியல் சூழ்நிலையின் கோட்டுச் சித்திரம். இமையம் அவர்களின் திமுக பின்புலம் பற்றி வாசகன் அறிந்துள்ளதால், தவிர்க்க இயலாத வண்ணம் வாசிக்கையில் இமையம் அவர்களின் சார்புத்தன்மை குறித்தக் கேள்வி மனதில் எழுகிறது,  சராசரி வாசகன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால் இது, இதைக் கடந்து நாவலின் அழகியல் குறித்து மேலும் அறிய முற்படுதலே நல்ல வாசிப்பின் அடையாளமாக இருக்கும். இமையம் அவர்களின் படைப்புகளில் பெரும்பான்மையானவற்றில் பெண் கதாப்பாத்திரங்களை முன்னிலைப்படுத்தியே நாவலின் போக்கு அமைந்திருக்கும், இந்தக் குறுநாவலும் ஆண்டாள் என்னும் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி அமைக்கப் பட்டிருக்கிறது.

நாவலின் உச்சமாக இறுதியில் நிகழும் ரசவாதக் காட்சி நாவலின் தளத்தை விரித்து உரைக்கிறது, ஒரு எளிய ,புற விவரிப்புக் கொண்ட அரசியல் சமூக எழுத்தாக மட்டும் முடிந்திருக்க வேண்டிய நாவல் அதன் எல்லையை உணரும் இடம் அது. நாவல் தனது அரசியல் யதார்த்த புரிதலின் எல்லையை ஒப்புக்கொள்கிறது. அத்தனை நேரம் வருவாரா மாட்டாரா என்று புலம்பித் தீர்க்கும் ஜனங்கள் தலைவர் ப்ரசன்னமாகவும் நொடியில் தன்வசம் இழந்து கைகளைக் கூப்புவது எதற்காக என்ற கேள்வி வாசகன் மனதில் எழுகிறது ? , வானூர்தியின் வருகையா? கூட்டத்தின் ஆரவாரத்தில் தன்னை இழந்த பிரக்ஞையா?அவ்வாறு கைகளைக் குவித்து கும்பிட வெறும் பழக்கம் மட்டும் தான் காரணமா ? வாங்கிய ஐநூறு ருபாய் காரணமா ? அழைத்து வந்த வெங்கடேச பெருமாள் பார்த்து விடப் போகிறான் என்ற தன்னுணர்ச்சியில் கும்பிடுவதுப் போல் செய்த பாவனையா ?, இவ்வாறு யதார்த்தம் மீறிய ஒரு தளத்தில் நாவல் பயணிக்க முற்படுகிறது. ஆயினும் விரைந்து யதார்த்த தொனியினை இழக்க விரும்பாது அடுத்த நிகழ்வுகள் வழி வாசகனை மீண்டும் யதார்த்தம் நோக்கித் தள்ளுகிறது , இந்த அழகியல் தேர்வு வழி ஒரு சமூக நாவல் என்பதையும் தாண்டி இறைவனுக்கும் பக்தனுக்குமான உரையாடலாக (?) இந்தக் குறு நாவலை வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இறைவன் குறித்துக் கூறியப் பிறகு பூசாரி இல்லாமல் எப்படி ? கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வெங்கடேச பெருமாள் என்னும் உள்ளூர் அரசியல்வாதியின் கதையும் இந்நாவலில் உள்ளது, எந்த வித கொள்கைக் குழப்பங்களும் இன்றி வலம் வரும் பெரிய மனிதன் வெங்கடேச பெருமாள். மக்களின் பணத்தை காக்கைக்கடி கடித்து அதிலும் கொஞ்சத்தை எடுத்து மீண்டும் வேறு காரணத்திற்காக மக்களிடமே திரும்பக் கொடுக்கும் பெரிய மனிதன், வாங்கும் மக்களிடமும் பெரிதாக சலனம் இருப்பதாக நாவலில் பதிவு இல்லை, தங்கள் பொருளாதார நிலை குறித்த அங்கலாய்ப்பு தவிர மக்களுக்கு தார்மீகக் கோபம் எதுவும் இருப்பதுப் போல் இல்லை , இப்படிப் பரஸ்பரம் நாம் சமூகமாக வந்தடைந்திருக்கும் கீழ்மை குறித்தே நாவல் உட்பிரதியாய் பேச விரும்புகிறது.

பொதுக்கூட்டம் நடக்கும் பொட்டல் ஒரு குறியீடாக தகிக்கிறது, விளை நிலங்கள் அழிக்கப்பட்டு உருவான பொட்டலின் மேடையில் நடக்கும் அவலங்களின் தொடர்ச்சி எந்த நாகரீக சமூகத்திலும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். லாரிகளிலும் வேன்களிலும் காசுக்காக வந்திறங்கிய மக்கள் உச்சி சூரியனில் தங்கள் நிலையிழந்து அமர்ந்திருக்கும் இந்தப் பொதுக்கூட்ட பொட்டல் ஒரு தகிக்கும் குறியீடு.

நாவல் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இது பலம் பலவீனம் என்பது தாண்டி பெண்களின் உரையாடல்களில் எப்போதும் இடம் பெறும் நீண்ட நீண்ட பதில் பேச்சுகள் இந்த நாவலின் எடிட் கட்டமைப்பால் சட்டென முடியும் உரையாடல்களாக மாறி விட்டன. பஸ் இருக்கைக்காக இரு பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இமையம் அவர்களின் சிறுகதை  நினைவிற்கு வந்தது.அந்தச் சிறுகதையில் இருந்தக் கட்டற்ற உரையாடல் போக்கு வாசிப்பின் லகரிகளில் ஒன்று. இந்நாவலில் அத்தகையப் பகுதிகள் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. அவை பதவி சண்டை, சாதி சண்டை, பெண் விடுதலை எனக் குறியீட்டு ரீதியான உரையாடல்களாக மாற்றப்பட்டு விட்டன, நவீன நாவலின் போக்குப் படி இது ஆசிரியரின் அழகியல்த் தேர்வு என்று ஒப்புக்கொண்டாலும் அந்தக் கட்டற்ற பகுதிகளே மனதிற்கு உகந்தவையாக இருக்கின்றன.

குடும்பச் சிக்கலில் தொடங்கி இன்னவென்று விவரிக்க முடியாத நிலையில் ஆண்டாள் இருக்கையில் நாவல் முடிகிறது, அத்தனை குடும்ப பாரத்தையும் சுமக்கும்  ஆண்டாள் கதாப்பாத்திரம் வலுவாக மனதில் பதிகிறது, “எதுக்கு வெயில் நேரத்தில் அழுவுற வுடு” என்று கண்ணகி ஆண்டாளை தேற்றுகையில் சகப் பெண்ணின் பரிவும் அதே நேரத்தில் அனைத்தும் அறிந்த ஒரு உலகத்தின் கீற்றை நாம் காண்கிறோம். உணர்ச்சிப் பிழம்பாக நாம் பெண்களைப் புரிந்து வைத்திருக்கையில் அழுகையைக் கூட திட்டமிட்டபடி செய்ய வல்ல, அனைத்தும் அறிந்த பெண்கள் உலகினைப் புரிந்துக் கொள்ள இந்த ஒற்றை வரி உதவுகிறது.

திருவிழாவைக் காணவந்த உற்சாகத்தில் இருந்த ஆண்டாளும், தெரு மக்களும் நேரம் செல்ல செல்ல வெளியேறமுடியாத ஒரு நெருக்கடியான விளையாட்டில் இருப்பதை உணர்கின்றனர்,வெளியேறும் வழி உடைமைக்கும் உயிருக்கும் பாதகம் விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. சேலைக்கும் ஐநூறு பணத்திற்கும் ஆசைப்பட்டு வந்தவர்கள் தானே நாம் என்ற சுயபச்சாதாபம் முன் அவர் குடும்பங்களின் பொருளாதார சூழல் குறித்து வாசகன் எண்ணிப் பார்க்க நாவலின் துவக்கத்திற்குச் செல்ல வேண்டும். தனிப்பட்ட தார்மீகச் சிக்கல் சுமை என்றாக , கோடிகள் செலவாகும் பொதுக்கூட்டத்தின் முன் கோடி மக்களின் வறுமைச் சூழல் குறித்த தார்மீகக் கேள்வியே “வாழ்க வாழ்க” என்ற புதினமாக மாறியிருக்கிறது.

பதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”

​​எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)​​
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990 or

Gpay 9841643380

ஆன்லைனில் பெற  ​​https://be4books.com/product/7462/

நூல் & அட்டை வடிவமைப்பு : Gopu Rasuvel
எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் Jeeva Nanthan

இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

தக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை

எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் பிள்ளை. வாங்கிய ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாமல் சொல்லித் தந்தனர் என மொழிவதைக் காட்டிலும் வாங்கிய ஊதியத்துக்கு மூன்று மடங்கு பாடம் நடத்தினர் என்பது பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால் அறுபதாண்டுகள் கடந்தும் அவர்களின் பெயரினைச் சொல்வேனா? அகப்பையில் கோரக்கோர வருவதற்கு அவர்கள் பானையிலும் தாராளமாக இருந்தது. அல்லாது நாம் மாப்புலவர் குடும்பத்து, மூப்புத் தமிழறிஞர் குடும்பத்துக் குலக்கொழுந்து அல்லவே!

ஏழாவது வகுப்பில் வாசிக்கும்போது எமக்கு அறிமுகமான திருக்குறளின் ஒரு சொல்லே ஈண்டு கட்டுரையில் முயலப்படுவது! வேறு என் செய? திக்கற்றவனுக்குத் திருக்குறளே துணை. திருக்குறளின் அறத்துப்பாலின் நடுவுநிலை அதிகாரத்துக் குறள் அது.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

என்பதந்தக் குறள். வயக்காட்டிலிருந்து நேரே வகுப்புக்கு வரும் எங்களுக்கு அர்த்தமாகும்படிப் பாடம் நடத்துவார்.

ஒருவர் தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா அல்லது புன்மகனா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்பார் திருவள்ளுவர். பறவைகள் கழிக்கும் மலத்தை யாம் எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். வாசம் அல்லது துர்நாற்றம்.

சமூகமே நற்சான்று உரைக்கும், “நல்ல மனுசன் பா!” என்று அபிப்பிராயம் வரும். “மனுசனா அவன்?” என்ற பழிச்சொல்லும் வரும். அதாவது ஒருவன் செய்த நல்லவையோ, அல்லவையோ அவனது எச்சம் எனப்படும். அதுவே அவனைத் தக்காரா அல்லது தகவிலரா என்பதைத் தீர்மானிக்கும்.

தக்கார் என்பது இன்று நமக்கோர் பதவியின் பெயர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற அமைப்பால் நியமிக்கப்படுவதல்ல. ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கான பதவி. இந்து அறநிலையத்துறை ஆலயங்களை நிர்வகிக்க அரசு நியமிக்கும் அறங்காவலரே தக்கார் எனப்படுபவர். TNPSC–க்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக்கேட்டால், முன்னதற்குப் போட்டித் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலும் அஃதோர் சடங்கு அல்லது சம்பிரதாயம். பணம் பாதாளம் வரை பாயும். தக்கார் என்போரில் பெரும்பான்மையோர் ஆற்றும் அரும்பெரும் இறைப்பணி, சமூக நற்பணி, எவை என நாமிங்கு பேசாதிருப்பதே பெருமை. இந்துக் கோயில்களின் தக்கார் இறை மறுப்பாளராக இருக்கலாம், மாற்று மதத்தவராயும் இருக்கலாம் என்பது சமூக நீதியின் விதி.

அதற்காகத் தக்காருக்கு உண்டியலில் பங்கு, சொத்துக்களை வேண்டியவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுதல், சிலைகளை ஆபரணங்களை காணாமல் போக்குதல், தம்மைப் பதவியில் அமர்த்திய அரசியல் கட்சித் தலைவருக்கு அத்தக்கூலியாகப் பணிசெய்தல் என்பவை தொழில் என்று நீங்கள் வீணாகக் கற்பனை செய்து கொள்ளலாகாது! இதெல்லாம் செய்வதாயின் அவர் எங்ஙனம் தக்கார்?

எச்சம் எனும் சொல் பற்றியும் நாம் பேசல் வேண்டும். ஒருவன் செய்த தான தருமங்கள், கல்விக்காக மருத்துவத்துக்காக செய்த சேவைகள், தான் சம்பாத்தியத்தையும் மூதாதையர் சொத்தையும் தன் பிள்ளைகளுக்குப் போக மிஞ்சியதை அறக்கட்டளை நிறுவி சமூகத்துக்கு ஆற்றிய பணிகள், மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்த ஆய்வுகள், கலை இலக்கியம் இசைக்கு என ஆற்றிய ஊழியங்கள், எழுதிய நூல்கள், செய்த திருப்பணிகள், உடுக்கை இழந்தவன் கையெனப் பிறர்க்குச் செய்த உதவிகள் எனும் எண்ணற்ற காரியங்கள் ஒருவனின் எச்சம்.

தமிழாசிரியர் சொல்வார், “பெத்த பிள்ளைகளும் எச்சம்தான்டா!” என்று. பெரியவர்கள் இலகுவாக அறிவுறுத்துவார்கள், “எலே! அப்பன் பேரைக் காப்பாத்தணும் கேட்டயா?” என்று. “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கான்” என்பார்கள் பாராட்டாகவும் வசவாகவும்.

இன்றோ அறக்கட்டளைகள் என்பன பெரும்பாலும் வருமானவரி விலக்குக்கும், மறைமுகமான வெளிநாட்டுப் பணங்கள் பெறவும், செலவுக்கணக்கு எழுதவும் என்றே ஆகிப்போயின.

ஒருவனுடைய நல்ல காரியங்கள் யாவுமே அவனுடைய நல்ல எச்சங்கள். தக்கார் என்பது அவரது எச்சத்தால் காணப்படும். தகவிலர் என்பதுவும் அவரது எச்சத்தினாலேயே அறியப்படும். எவரும் அரசுப் பணியை உதிர்ந்த மயிர் என வீசிவிட்டுத் தம் இன மக்களுக்குப் போராட அரசியல் களமாட வரலாம். போற்றுதலுக்குரிய செயல். ஆனால் களமாட எனும் சொல் எழுத்துப் பிழையாகக் களவாட என்று மாறி இருபது ஆண்டுகளில் எழுநூறு கோடி சம்பாத்தியம், ஆயிரத்து இருநூறு கோடி சம்பாத்தியம் என்றால் எச்சத்தால் அவர் தக்காரா, தகவிலரா?

தகவிலர் என்றால் உண்மையற்றவர், நேர்மை அற்றவர், ஒழுக்கம் கெட்டவர், அறத்துக்கே கூற்றானவர், அரசியல் பிழைத்தவர், கூட்டிக் கொடுத்தவர், காட்டிக் கொடுப்பவர், வஞ்சகர், எத்துவாளி, ஏய்ப்பன், பொறுக்கி… என்ற குருவாயூரப்பா!

“நல்லோரு மனுசன்… பொட்டுனு போயிட்டான்” என்று சமூகம் வருந்துமானால் அவர் தக்கார். “பேப்பய… நீசப் பாவி… இப்பமாவது செத்தானே!” என்று சமுகம் ஆசுவாசப் பெருமூச்சு விடுமானால், அவர் தகவிலர். நெஞ்சில் ஈரம் கொண்டு, நியாயமாகப் பொருள் சேர்த்து, தன் சந்ததியாருக்கும் பொருள் ஈட்டி, ஏழை எளிய மக்களுக்கும் கொடுத்துச் சாகிறவன் தக்கார். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் பேரன், தன் சின்ன வீடு, வைப்பாட்டி, கூத்தியார், தன் கொழுந்தியாள், மைத்துனர், தன் சகோதர சகோதரிகள் அவர் எல்லோரது மக்கள், மருமக்கள் என்று நாட்டைக் கொள்ளையடித்துப் புன்மையான செல்வம் சேர்த்தவர் தகவிலர். இது நம் வசவல்ல, சாபமல்ல, வள்ளுவன் வாய்மொழி.

முன்பே சொன்னேன், எங்கள் தமிழாசிரியர் கற்பித்தார் என. எச்சம் என்பதற்குப் பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் என. அடாவடியாகத் திரியும் சிலரைப் பார்த்து ஊரில் பெரியவர் சொல்வார், “அப்பன் பேரைக் கெடுக்கதுக்குன்னே வந்து வாச்சிருக்கான், கழுதைக்கு மத்தது வாச்சது மாதிரி” என்று. “எப்படியாப்பட்ட மனுசனுக்கு இப்படியாப்பட்ட பிள்ளை!” என்பார்கள். எனவே நன்மக்கட்பேறு வாய்த்தவர் தக்காரும் வாய்க்காதவர் தகவிலருமா? சரி, மக்கட்பேறு இல்லாமற் போனவர்? திருமணமே செய்து கொள்ளாதவர்? எனவே எச்சம் எனும் சொல்லுக்கு மக்களையும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, மக்கள் மட்டுமே என்று பொருள் கொளல் பொருந்தாது.

மற்றுமோர் கேள்வியும் உண்டு. தலைவன் ஒருவனுக்கு அவனது தளபதிகள், உப தளபதிகள், சிறு தளபதிகள், குறுந்தளபதிகள் என்போர் எச்சங்களா? காந்தியின், அம்பேத்காரின், மார்க்சின், செகுவேராவின், மாவோவின், பெரியாரின், காமராசரின் வழிவந்தவர் என்று தம்மை அறிவித்துக் கொண்டு கொலையும், கொள்ளையும் வஞ்சகமும் சூதும் தரகும் சுரண்டலும் அரசியல் வாணிபமும் செய்பவரைக் கணக்கில் கொண்டு அவர்களது தலைவர்களைத் தகவிலர் எனக் கொள்ளல் தகுமா? அந்தக் கணக்கில் பார்த்தால் கொண்டாடப்படும் மத குருக்களில் எவரை இன்று தக்கார் எனலாம்? எனவே எச்சங்களைக் கணிக்கும்போது தொண்டர்களையும் விலக்கி நிறுத்துவது தலைவருக்குப் பெருமை.

என்றாலும் தகவிலர் என்று வள்ளுவர் பேசும் குப்பைமேடுகளை, மலக்கிடங்குகளை, கழிவுநீர்க் கால்வாய்களை எத்தகு பட்டங்கள் சூட்டி, எங்கெங்கு சிலை நாட்டி, எப்படி ஆரவார அந்திமங்கள் செய்திருக்கிறோம் என்பதை சிந்தை தெளிவுள்ளோர் ஓர்மைப்படுத்திப் பார்க்கலாம்.

தகவு வேறு தகவல் வேறு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தகவல் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்களைத் தாழே தருகிறேன்.

தகவல் : 1. Information, Intimation, செய்தி.

‘ஒரு தகவலும் வரவில்லை எனக்கு’ என்று தினமும் புழங்குகிறோம். அரசாங்கமும் ஆளுங்கட்சியும் சொல்ல விரும்புவதை மாத்திரமே பேசுகிற ‘தகவல் தொடர்புத் துறை’ உண்டு. ஊடகங்களும் தமது முதலாளிகள் கட்டளையிடும் தகவல்களை மட்டுமே அரித்துத் திரித்துச் சாயமேற்றி வெளியிடும்.

2. திருட்டாந்தம். திருஷ்டாந்தம் எனும் சமற்கிருதப் பிறப்பு. Citation, Illustration, Example.

3. Appropriate Answer. நேருத்திரம். அதாவது நேர்+உத்திரம். உத்திரம் என்றால் பதில். மலையாளத்தில் உத்திரம் எனும் சொல் புழக்கத்தில் உண்டு. நேர்விடை எனலாம் தமிழில்.

தகவல் எனும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் என்றால், தகவு எனும் சொல்லுக்கு பதினோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில், நிகண்டுகளில். பதிவுகள் கீழ் வருமாறு.

தகவு : 1. Suitability, Fitness, Worthiness. தகுதி.

தகுதி எனும் சொல் திருக்குறளில் உண்டு. நடுவுநிலைமை அதிகாரத்தின் முதற்குறள் –

‘தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்’

என்று பேசும். அனைத்துப் பகுதி மக்களிடமும் முறை தவறாமல் நடந்துகொள்ளும் நேர்மை போற்றுதற்கு உரியது என்பது பொருள். மணிமேகலை சக்கரவாளம் உரைத்த காதையில் “தகவிலை கொல்லோ?” என்கிறது. தகுதி என்ற பொருளில்.

2. Similitude, Resemblance, Comparison, உவமை.

3. Quality, State, Condition, Manner, குணம்.

4. Emminence, Greatness, பெருமை.

திருவாசகத்தில் யாத்திரைப் பத்து பகுதியில் மாணிக்கவாசகர் ‘தகவே உடையான் தனைச் சாரத் தளராதிருப்பார்’ என்பார். பெருமை உடையவன் தன்னைச் சார்ந்தவர் என்றும் தளர்வடைய மாட்டார் என்பது பொருள்.

5. Mercy, Kindness, அருள்.

தகவுக்கு அருள் எனப் பொருளுரைப்பது சூடாமணி நிகண்டு.

6. தெலுங்கில் தகவு எனும் சொல்லுண்டு. பொருள் Justice, Equity, நடுவு நிலைமை.

7. Strength, Ability, வலிமை.

கம்ப ராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்தில் கம்பன் பேசுவான் –

“நீலன் முதல்பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர்,
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை”

என்று. ‘நீலன், அங்கதன், சாம்பன் முதலாய போரில் சொல்லுவதற்கு அரிய ஆற்றல் காட்டும் கொற்ற நெடுவீரர் உறுதியாக உரைத்தனர், தமக்குக் கடல் கடக்கும் வலிமை இல்லை என’ என்பது பொருள்.

8. Knowledge, Wisdom, அறிவு.

தகவு எனும் சொல்லுக்கு அறிவு என்ற பொருள் தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு. கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில் வசிட்ட மாமுனிவன் தயரதனிடம் கூறும் பாடல், “தக்கதே உரைத்தனை; – தகவோய்!” என்பது. ‘தகுந்ததையே உரைத்தாய் அறிவுடையவனே’ என்று பொருள் எழுதினார்கள்.

9. Clarity, தெளிவு.

தெளிவு என்ற பொருளைத் தகவுக்கு தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு.

10. Chastity, கற்பு.

பரிபாடலில் வைகையைப் பாடும் நல்லந்துவனார்,

‘தகவுடை மங்கையர்’ என்கிறார். கற்புடைய மங்கையர் என்று பொருள் சொன்னார்கள்.

11. Good Behaviour, Morality, Virtue, நல்லொழுக்கம்.

இந்தப் பொருளைத் தருவது யாழ்ப்பாண அகராதி.

ஆக தகவு எனும் சொல்லுக்கு நாமறியும் பொருள்கள் – தகுதி, உவமை, குணம், பெருமை, அருள், நடுவு நிலைமை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம் எனப் பதினொன்று. இவற்றுள் உவமை, கற்பு எனும் இரு பொருள்கள் நீங்கலாகப் பிற ஒன்பதுமே திருவள்ளுவர் பேசும்

‘தக்கார் தகவிலர் என்பது அவர்தம்
எச்சத்தால் காணப் படும்’

எனும் குறளுக்குச் சிறப்பாகப் பொருந்துகின்றன. வியப்பாக இருக்கிறது! திருவள்ளுவர் எப்படியாகப்பட்ட சொல்லைக் கையாள்கிறார் பாருங்கள்! அவரே சொல்வன்மை அதிகாரத்தில் கூறுகிறார் –

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’

என்று. ஐந்து ‘சொல்’ கையாள்கிறார் இந்தக் குறளில். ஆமாம்! தகவிலர் எனும் சொல்லை வெல்லும் சொல் எது?

Recommendation என்ற ஆங்கிலச் சொல் நமக்கு அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகள் ஆயின. சமூகத்தில் செல்வாக்கு உடையவர்கள் கல்விக்கும் வேலைக்கும் பணி உயர்வுக்கும் ஒப்பந்தங்களுக்கும் நீதிக்கும் இதனைச் செய்து தகவுடைய எளியவர் வறியவர் வயிற்றில் அடித்தனர். பின்னர் Recommendation உடன் இலஞ்சமும் தாலிகட்டிக் கொண்டது. கல்வித்தகுதி எல்லாம் இருந்தாலும் நன்கொடை என்னும் புனைபெயர் பூண்ட இலஞ்சம் என்னை நந்திபோல் வழிமறித்து நின்றது. கோரப்பட்ட இருபத்தைந்தாயிரம் கொடுக்க வக்கில்லை 1970-களில். கல்லூரியில் கணித விரிவுரையாளர் வேலை மறுக்கப்பட்டது. வேலை கிடைத்திருந்தால் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். புல்கானின் என்பதுபோல் மறைபெயர் ஒன்று தரித்து முற்போக்குப் புரட்சிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பேன்.

Recommendation என்ற சொல்லை சிபாரிசு என்று தமிழாக்கினர். ‘பெரிய சிவாரிசு இல்லாட்டா கெடைக்காது லே! நமக்கெல்லாம் எங்க? நரி சிவலோகம் போன கதைதான்!’ என்றார் அப்பா. Recommendation என்ற சிபாரிசு ஊழலின் முதல் காலடி. “பையன் நம்ம அக்காளுக்கு மகனாக்கும்… பாத்துச் செய்யுங்கோ!” போன்ற சொற்களே ஊழலின் வாசற்படிதான். இன்று ஊழல், லஞ்சம் எனப் பெருங்கூச்சல் இடுபவர்கள் அதனை மறத்தல் ஆகாது.

இன்று அமைச்சர்களாக, ஆளுநர்களாக, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாக ‘மக்கள் பணி’ ஆற்றுபவரில் பெரும்பான்மையோரும் கட்சித் தலைமகனுக்கு வந்த சிபாரிசுகள் இல்லாமல் சாத்தியமா? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சிபாரிசு எனும் சொல்லின் அர்த்தம் அறியாதவர்களா? பேரூராட்சி தேர்தலுக்கு உறுப்பினர் பதவிக்கு நிற்பவர் ஐம்பது லட்சம் பணம் செலவு செய்கிறாராம். எந்த சிபாரிசுக்கும் செவிமடுக்காமல், அதைப்போல் நூறுபங்குப் பணம் எங்ஙனம் ஈட்டுவார்?

சிபாரிசு என்பது சமற்கிருதச் சொல் என்பதால் அதனைப் பரிந்துரை என்று தமிழ்ப்படுத்தினார்கள். சிறப்புரை, கருத்துரை, தகுதியுரை, அணிந்துரை, முன்னுரை, தலைமையுரை, வாழ்த்துரை, பணிந்துரை, அருளுரை, பரப்புரை போலப் பரிந்துரை. பரிந்து+உரை = பரிந்துரை. அற்புதமான சொல். ஆனால் சிபாரிசு, பரிந்துரை என எச்சொல் பயன்படுத்தினாலும் அது அநீதியின் அடுத்துள்ள சொல்தானே!

ஊழலுக்கான பாதையில் பல படிகள் கடந்து பரிந்துரை எனும் சொல்லில் வந்து தாவளம் போட்டுள்ளோம். Night Soil என்றாலும், சண்டாஸ் என்றாலும், கழிவு என்றாலும், மலம் என்றாலும், உண்மையில் அது பீ தானே நாயன்மாரே!

‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும் என்றுஎழிற் கனிவாய் திறந்தார் நம் அருள்வள்ளல்’

என்பது இரட்சணிய யாத்திரீகத்தில் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய பாடல். இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் காட்சியில். அங்கு பேசப்படும் சொல், பரிந்து.

பரிந்து எனும் சொல்லின் பிறப்பே பரிந்துரை. ஆனால் இன்று பரிந்துரை எனும் சொல் வந்து சேர்ந்திருக்கும் இடம் பரிதாபத்துக்குரியது. பரிந்துரையும் பணமும் இருந்தால்தான் இன்று கல்வி, வேலை, பணி உயர்வு, பதவி, ஒப்பந்தங்கள் and what not? நாம் தக்காரா தகவிலரா?

பேரகராதி தகவுரை என்றொரு சொல் தருகிறது. தகவு+உரை. தகவுரை என்பதன் பொருள் Recommendation, சிபாரிசு என்கிறது பேரகராதி. தொகுக்கப்பட்ட காலத்தில் பரிந்துரை எனும் சொல் பிறந்திருக்காது போலும். ஆனால் தகவுரை எனும் சொல் பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சொல்.

வைணவ இலக்கிய நூல்களில் அஷ்டப் பிரபந்தம் என்று ஒன்று. அஷ்டம் என்றால் அட்டம், எட்டு. அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியது. இத்தொகை நூலுக்கு, நூலாசிரியர் அஷ்டப் பிரபந்தம் என்று பெயரிடவும் இல்லை, இவற்றில் அடங்கிய எட்டுப் பிரபந்த நூல்களைச் சேர்த்தும் எழுதவில்லை. பின்னர் தொகுத்தவரோ, பதிப்பித்தவரோ இந்தப் பெயரைச் சூட்டி இருக்கலாம். சோழ நாட்டில் திருமங்கை என்னும் திருத்தலத்தில், அந்தண குலம் என்னும் யாவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் குலத்தில், வைணவ சமயத்தில் பிறந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்மனார் புலவ!

அஷ்டப் பிரபந்தம் என்றறியப்படுகிற இந்நூற்றொகையின் உறுப்புக்களான பிரபந்தங்கள் அதாவது சிற்றிலக்கியங்கள் எட்டு. திருவரங்கக் கலம்பகம் திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல். ஆக ஒரு கலம்பகம், இரண்டு மாலை, நான்கு அந்தாதி, ஒரு ஊசல். கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல் முதலாய சிற்றிலக்கியங்கள் பற்றி அறிய விரும்புபவர் எனது, ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலைப் பார்க்கலாம். தமிழினி வெளியீடு, 2013.

அஷ்டப் பிரபந்தத்தில் ஏழாவது நூலான நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் நூலில், திருப்பாடகம் எனும் திருத்தலம் பற்றிய பாடல் :

‘தவம் புரிந்த சேதநரை, சந்திரன், ஆதித்தன்,
சிவன், பிரமன், இந்திரனைச் செய்கை – உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே’

என்பதாகும். முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் உரை – ‘திருவுள்ளத்தில் மகிழ்ந்து திருப்பாடகம் என்னும் திருத்தலத்தில் நித்திய வாசம் செய்கின்ற சிவந்த கண்களை உடைய திருமால், தவம் செய்த ஆத்மாக்களை சந்திரனும், சூரியனும், சிவபிரானும், பிரமதேவனும், தேவேந்திரனும் ஆகச் செய்வது, தனது வலத் திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது தகவுரையாலே ஆகும்!’ பாடலில் இருக்கும் தத்துவச் செய்திகளினுள் போக விரும்பாமல் எனதுள்ளம் நிலை கொள்வது, ‘தன் மார்பில் இருப்பாள் தகவுரையாலே’ என்னும் தொடரில்.

தகவுரை எனும் சொல்லின் பொருளாக நாம் சிபாரிசு, பரிந்துரை எனும் சொற்களையே நாடவேண்டியது இருக்கிறது. தகவுரை எனும் சொல் இன்னும் தூய்மையாக இருக்கிறது. சிபாரிசு, பரிந்துரை போல் ஆபாசப்படவில்லை. தக்கார் தகவிலர் என்பது அவரவர் தகவுரையாலும் காணப்படும். பரிந்துரைக்கு மாற்றாக, சகல தகுதிகளுடனும் தகவுரை எனும் சொல்லை அறிமுகம் செய்வதில் எமக்கு கர்வம் உண்டு.

தகவிலார் என்கிறார் திருவள்ளுவர். தகவின்மை என்றுமோர் சொல்லுண்டு. தகவு+இன்மை = தகவின்மை. அறிவு+இன்மை = அறிவின்மை, கரவு+இன்மை = கரவின்மை என்பது போல.

தகவின்மை என்றால் Unworthiness, Un suitability, தகுதி இன்மை என்பது ஒரு பொருள். Injustice, Partiality, நடுநிலை இன்மை என்பது இரண்டாவது பொருள். Trouble, Anxiety, வருத்தம் என்பது மூன்றாம் பொருள். தஞ்சைவாணன் கோவையின், ‘தணிவாய் நின் தகவின்மை’ என்ற பாடல் வரி மேற்கோள். உனது வருத்தம், பதற்றம் தணிவாயாக என்பது பொருள். முதல் இரண்டு பொருள்களுக்கும் மாற்றாக அரசியல்வாதித்தனம் என்றொரு சொல்லை உபயோகித்துவிடலாம்.

தகவோன் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. One who is eminently fitted என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். Suitability of worthy என்றும். அதாவது தகவோன் என்றால் தகுதியுடையவன். தகவிலன் என்பதற்கு எதிர்ப்பதம் தகவோன். மறுதலையாகவும் சொல்லலாம்.

நாம் முன்பே குறித்த பதினோரு பொருள்களிலும் தகவு எனும் சொல்லை ஆள்கின்றன சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு முதலானவை. சில பாடல் வரிகளை மேற்கோளாகத் தர தன்முனைப்பு ஏற்படுகிறது.

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல். பாலைத் திணையில் அமைந்தது. இயற்கைப் புணர்ச்சியில் இன்பம் தந்த தலைமகன் பிரிந்து போய் விடுவானோ எனும் அச்சத்தில் வருந்தும் தலைவியிடம் தலைவன் உரைத்தது.

‘மெய் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நின் துறந்து அமைகுவென் ஆயின் எல் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே’

என்பது பாடல். ‘மெல்லியல்புகளை உடைய அரிவைப் பருவத்துப் பெண்ணே! நீ மனதினுள் வருந்திப் புலம்பாதே! உன்னைத் துறந்து வாழ்வேன் என்றால் என்னிடம் விரும்பி வந்து பொருள் பெற்றுச் செல்லும் இரவலர் என்னை நாடி வராது தவிர்க்கும் நாட்கள் பலவாக ஆகும்படியான தகுதியைப் பெற்றேன் ஆகுக!’ இது ஓர்நேர் உழவனார் மகனார் கோயம்புத்தூரில் உறையும் நாஞ்சில் நாடனார் உரை.

நற்றிணையில் பெயரறியாப் புலவன் ஒருவனின் பாலைத்திணைப் பாடல், ‘விசும்பின் தகவே’ என்று மழைமேகம் பொழியத் தகுதியுடையதாக நிற்கும் தன்மை உரைக்கிறது.

தகவு எனும் சொல்லின் பொருள்களை வரிசைப்படுத்தும்போது பரிபாடல் வரியொன்றை மேற்கோள் காட்டினோம். புறநானூற்றில் ஒரு பாடல் ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. திணை வஞ்சி. துறை துணை வஞ்சி. வஞ்சித்திணை என்பது பகையரசர் இடத்தைக் கொள்ளக் கருதி வஞ்சிப்பூ சூடிச் செல்வது. துணை வஞ்சித்துறை என்பது பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்கும் வீரனைச் சில கூறி அமைதிப்படுத்துதல். பதின்மூன்று வரிப்பாடலின் கடைசி வரி, ‘‘நாணுத் தகவு உடைத்தே!” என்று முடியும். பொருள், ‘நாணமுறச் செய்யும் தகுதியை, தன்மையை உடையது’ என்பது. கோவூர்கிழார் புறநானூற்றில் நெடுங்கிள்ளியைப் பாடும்போது, இதே சொற்றொடர் பயன்படுத்தியுள்ளார், ‘நாணுத் தகவுடைத்து’ என்று.

புறநானூற்றிலேயே சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் குண்டுகட்பாலியாதனார் –

‘என் சிறுமையின் இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை கனவு என மருள,வல்லே, நனவின்
நல்கியோனே, நசை சால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெருமகன்’

என்று பாடுகிறார்.

‘என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து பாராது, தனது சொந்தப் பெருமையும் தகுதியும் நோக்கி, குன்றென நிமிர்ந்த களிறுகளையும், மிடுக்குடன் தலை அசைக்கும் குதிரைகளையும், மன்றம் நிறைந்து போகும்படியாக ஆநிரைகளையும், வீட்டுப் பணி செய்யவும் களப்பணி செய்யவும் ஆட்களையும், நானிது கனவோ என மயங்கும்படி உண்மையில் வழங்கினான். அவன் என்னில் விருப்பம் மிகுந்த அன்புத் தலைவன், பூழி நாட்டுத் தலைவன். அவன் கடையூழிக்காலம் வரை நீடு வாழ்க’. இது பாடலின் பொருள்.

இங்கும் நமது தேடல், தகவு எனும் சொல் குறித்தே! தகுதி என்ற பொருளில் இங்கு தகவு ஆளப்பட்டுள்ளது. ஆகவே தகவு எனும் சொல் மிகவும் ஆழமான பொருளுடைய தமிழ்ச் சொல்லென அறிகிறோம்.

எனவே தகவு எனும் தன்மை, தக்கார் எனும் சிறப்பு, கடற்கரையில் புதைக்கப்பட்டு நினைவு மண்டபங்கள் எழுப்பப்படுவதிலோ, விரல்களை நீட்டிக்கொண்டு முச்சந்தி நாற்சந்திகளில் காகங்கள் இளைப்பாறச் சிலைகளாக நிற்பதிலோ, பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைக்க இடம் கோரிப் பெறுவதிலோ, விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அரசுக் கட்டிடங்கள் எனப் பெயர் சூட்டுவதிலோ, இல்லை, இல்லை, இல்லவேயில்லை. கால் குப்பி மட்டரக மதுவுக்கும் காக்கா பிரியாணிக்கும் கூலிக் கூட்டம் ‘அம்மாடி தாயரே!’ அடிப்பதிலும், நடந்து வா, நடந்து வா என்று மேல்வலிக்காமல் கூக்குரல் இடுவதிலும், வாடகைக் கவிஞர் கூட்டம் இரங்கற்பா பாடுவதிலும், கொள்ளையின் சிதறிய எச்சில் துணுக்குகள் நக்கித் தின்றவர் கரைத் துண்டால் கண்ணீர் துடைப்பதிலும், பெத்த தகப்பன் செத்துப் போனது போல் மொட்டை அடிப்பதிலும் இல்லை.

தகவுடையவன், தக்கார் என்பவன் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

புறநானூற்றில் நரிவெரூஉத் தலையன் என்ற புலவர் பாடுகிறார் –

‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்’

என்று. நம்மால் இயலுகிற காரியம் தக்காராக இருக்கிறோமோ இல்லையோ, தகவிலராக இல்லாது இருக்க முயலுவோம்!