கவிதை

விளையாட்டுக் கனவுகள் – ஹூஸ்டன் சிவா கவிதை

ஹூஸ்டன் சிவா

குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பரப்பி வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு குழந்தையின் கனவு இன்னொரு
குழந்தையினுடையதைப் போல் இல்லை
தன்னிடம் இல்லாத கனவு இன்னொரு குழந்தையிடம்
இருப்பதைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்
அக்கனவைத் திருடும் எண்ணமில்லை குழந்தைகளிடம்
அக்கனவை பலவேறாக மாற்றி விஸ்தீரித்து
அதன் உரிமையாளரிடமே கொடுத்து விடுகிறார்கள்
தன் கனவு பிரம்மாண்டமாகி பெருகி நிற்பதை
பெரும் பரவசத்துடன் பார்க்கிறது அக்குழந்தை
வளர்ந்தவர்களே அக்கனவுகளைத் திருடுகிறார்கள்
திருடிய கனவுக்கு மாற்றாக எதையுமே வைப்பதில்லை
சில சமயம் குழந்தைகளின் கனவுகளை
எடுத்து நுகர்ந்து பின் அதே இடத்தில்
வைத்து விடுகிறார்கள் வளர்ந்தவர்கள்
நுகரப்பட்ட கனவுகளை புறந்தள்ளி விடுகின்றன குழந்தைகள்
மேஜைக்கு கீழே கிடக்கின்றன அக்கனவுகள்
[மேஜைக்கு கீழே கிடக்கும் அக்கனவுகள்
குழந்தைகள் வளர்வதற்காக காத்திருக்கின்றன]
அவற்றுக்கு இணையாக வேறு கனவுகளை
குழந்தைகளால் தோற்றுவிக்க முடியவில்லை
கனவில்லா வெற்றிடங்களைச் சுற்றி
புதிய கனவுகளைப் பரப்புகிறார்கள்

நதியைப் பாடுதல் – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

நதிகளை கடந்து
மலைகளின் நடுவே குதிக்க
நீண்ட கால பயிற்சி எமக்கு
தேவையாகவில்லை.
நானும் தோழிகளுமாக
குதித்து விளையாடுவதில்
ஆசை கொண்டிருந்தோம்.
வெகு சீக்கிரமாக நீர்வீழ்ச்சியென
அழைக்கப்பட மலைகளே காரணம்.
எங்களை ரசிக்கவும்
எங்களை ஆராதிக்கவும்
நாங்கள் கட்டுப்பாடு விதித்ததில்லை.
எம்மீது நீந்தி திளைக்கும் சருகுகளை
பரிசளிக்கின்ற மரங்களுடன்
நீண்ட உறவை வைக்க தவறவுமில்லை.
மீன்களை அழச் சொல்லி கேட்பதும்
பறவைகளை பாடச் சொல்லிக் கேட்பதுமே
எமது பௌர்ணமி விழாக்கள்.
நதிகள் நதிகளாக இருக்கும் வரையே
இநத விளையாட்டுக்களென
கடல் எப்போதும் திமிருவது.
கர்வத்தில் என்று சொல்லிடவும் முடியாது.
சொல்லி விட்டால்
கடல் கோபிப்பதில் நியாயமுமில்லையென
தங்கை தனது கதையை எழுதி
முடித்திருந்தாள்.
..

பவுன்சர், கூரெனும் யுக்தி – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

 

பவுன்சர்

பந்தே நீ அவன் தலையைக் குறி பார்த்துச் சென்றுகொண்டிருக்கிறாய்
என்ன காரியம் செய்கிறாய்
அது ஒரு பிசகு அதைப் போய் உண்மையென நீ நம்ப
எவ்வளவு பெரிய விபரீதம் நேரப் போகிறது பார்
என்ன பந்தே நான் சொல்வது கேட்கவில்லையா
இனி ஒன்றும் செய்ய முடியாது
விர்ரென காற்றைச் சீறிப் பாயும் உன் பயணத்தில்
இன்னும் சற்றைக்கு அவன் தலை உனக்குத் தட்டுப் பட்டுவிடும்
சத்தமில்லாமல் என் பெயரைக் கூறிவிட்டு நீ ஒதுங்கிக் கொள்
இல்லையென்றாலும் என்னை யாரென்று தெரியாமலா போகப் போகிறது
குற்ற உணர்ச்சியில் என்னைச் சாவடி அடிக்கப் போகிறார்கள்
பந்தைப் போடும்போது வேகமெடுப்பதற்காக
நடந்து கொண்டே போவார்களே அப்படிப் போன ஒரு சமயத்தில்
பந்தைப் போடுவதற்குத் தயாராய் அவனை நோக்கித் திரும்பியதும்
உன்னை வெளியே அனுப்புவதற்காக இப்படியும் ஒரு வழியிருக்கிறதென
அமுக்குணியாக உள்ளுக்குள் ச்சும்மா சிரித்துக் கொண்ட கணமது
அதைப் போய் உண்மையென நம்பிக் கொண்டு
ஆட்டிக் கொண்டு இந்தப் பந்து இப்படிக் கிளம்பிவிட்டது என்ன செய்ய
மேலும் அது பாதி தூரம் சென்ற பிறகு அதற்கு காது கேட்காதது
எனக்கு தெரியாதெனக் கூறினாலும்
இவ்வுலகம் என்னை நம்பவா போகிறது
பந்தோடு ஒட்டி உறவாடினேனல்லவா என்னைச் சொல்ல வேண்டும்
இப்பொழுது பந்து சீற்றத்தோடு தலைக்கு மிக அருகில் போய்விட்டது
எப்படியோ தடுத்துவிடலாமென
மட்டையை வைத்து அவனும் தடுக்கப் பார்க்கிறான்
அவனால் அது முடியாது போனதால்
அவனை உரசுவதற்கு முந்தைய மிக துல்லியமான அந்த தருணம் பார்த்து
போய்த் தொலையென லேசாக அவன் குனிந்து கொண்டதும்
நல்லவேளையாக பந்து பின்னாலிருப்பவனிடம் போய் தஞ்சமானது
எல்லாம் சுமுகமாக முடிந்தது
நண்ப என்னை மன்னித்து விடு
இனி விளையாடுவதற்கு பந்து அல்லாத ஒரு வழியை நாம் தேடவேண்டும்
பந்தேயில்லாமல் ஓடி வந்து போடுகிறது மாதிரி போடுகிறேன்
நீ அடிக்கிறது மாதிரி அடி
அவனுக்குப் போட்டேன் பாருங்கள் ஒரு பவுன்சர்

oOo

கூரெனும் யுக்தி

கூரான கத்தி என்ன செய்யுமென
நமக்குத் தெரிந்தபோதும் நம்மையது விட்டபாடில்லை
இப்படிச் செய்வேன் அப்படிச் செய்வேனென
தினமும் ஒரு புதிய பாடத்தை நடத்த வந்திடுகிறது
கத்தி இங்கு கழுத்து அங்கு என்றாலுமே
அதெல்லாம் அதற்கு ஒரு பிரச்சினையேயில்லை
கத்தியை நோக்கி கழுத்தே தேடி வருகிறது
அதுவும் புதிய புதிய கழுத்து
கத்தியை உறைக்குள் செருக மறந்த ஒருநாளில்
விறைப்பின் சுரு சுரு தாங்காது
நம்மை யார் என்ன செய்து விட முடியுமென
கொலைக்கு முன்பாக ஒரு தடவை
போலியாக அதைச் செய்து பார்ப்பார்களே அங்கு புகுந்தது
யாருமில்லாது கத்தியை மட்டும் கண்டதில்
அவர்கள் குழம்பிப் போனார்கள்
மாதிரி கொலையை அப்படி அப்படியே போட்டபடி
பாதியாக இடிந்திருந்த அம்மண்டபத்தில்
கிடைக்கிற இடங்களில் போய் ஒளிந்து கொண்டனர்
பீடு நடை போட்டுக் கொண்டிருந்தது கத்தி
சுருட்டி வைக்கப்பட்ட ஓலைப்பாய்க்குள் ஒருவன் ஒளிந்திருந்தான்
அவனிடம் இன்னொருவன்
ஓலைப் பாயில் ஒளிந்திருப்பது மாதிரி வேவு பார்க்கிறேன்
நீ பயந்தா இங்கு ஒளிந்துள்ளாய் என்றதும்
கத்தியின் காதிற்கு ஓலைப் பாய் இருந்த திசையிலிருந்து
சரக் புரக் சரக் புரக்கென்ற ஒலி வந்துகொண்டேயிருந்தது
கத்தி அங்கிருந்தவாறு தன் மண்டையைத் திருப்புவதற்குள்
நடிப்பதாகக் கூறியவன் ஓலைப் பாயிலிருந்து வெளிவந்து
கூரான கத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்
தனது கொலைக்கு இக்கத்தி பயன்படுமா என்று
கத்தியை நோக்கி ஒருவன் நடந்து திடீரென பின்வாங்கிக் கொண்டதும்
கத்திக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது
மண்டபம் பாதுகாப்பு குறைவெனக் கருதிய ஒருவன்
கத்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தால் தேவலையென்று
அதன் பின்னால் ஒளிய ஒளியப் பார்க்க
அந்தக் கத்தி முதன்முதலாக ஒருவனை பார்த்து ஓடியது
கூரென்ற அந்த ஒரு யுக்தியை
காலிசெய்துவிட்டதாக நினைக்க வேண்டாம்
அடர்ந்த மயிரை மழித்துக் கொள்ளுங்களென்றோ
இல்லை வேறெப்படியோயேனும் ஒருவன் கைக்குள் அது புகுந்து விடும்
இருப்பதென்னவோ ஒரேயொரு யுக்திதான்
கட்டக் கடைசியில் வைத்திருப்பவன் கழுத்தை
வைத்திருப்பவனை வைத்தே அறுக்க வைக்கும் ராஜ யுக்தி அதுவும்

யாத்ரீகன்

ப. மதியழகன்

1

மாலையில் வாடிவிடும் மலர்
அதற்குள் இயற்கையை அனுபவிக்கத் துடிக்கிறது
மண்ணுக்குள் புதைந்திருக்கும் விதை
ஒரு சொட்டு தண்ணீக்காக தவம் கிடக்கிறது
ஆயிரம் கிளைகளைக் கைகளாகக் கொண்ட
மரம் வான்மழையை அணைக்கத் துடிக்கிறது
இருத்தலில் மறைந்திருக்கும் கடவுளைப் போல
மரங்கள் பூத்துக் குலுங்க வேர்கள்
தன்னலத்தை தியாகம் செய்கிறது
உதிர்ந்த சருகுகளை பச்சிலைகள்
விடை கொடுத்து அனுப்புகின்றன
தாய்ப் பறவை வந்து பார்க்குமேயென்று
கூடு சிதைந்திடா வண்ணம்
மரம் காவந்து பண்ணுகிறது
மனிதர்களுக்கு மண்ணை அளித்த இறைவன்
சுதந்திரமாக பறக்க பறவைகளுக்கு
விசாலமான வானை அளித்திருக்கிறான்
மனிதர்கள் தான் சொல்வதை திருப்பிச்
சொல்லும கிளியாய் இருப்பதையே இந்தச்
சமூகம் விரும்புகிறது
மனிதர்களே சுமையை இறக்கி வையுங்கள்
கோபுரம் தாங்கி சிலைகளா கோபுரத்தைத்
தாங்குகிறது
இரவில் உயிர்கள் அமைதியடையும் போது
இயற்கை மனிதர்களுக்கு உறக்கத்தை பரிசளித்து
அடுத்த நாளுக்காக ஆயத்தம் செய்கிறது
சட்டவிதிகளே மனித விலங்கினை
கைவிலங்கு பூட்டி வைத்திருக்கிறது
உண்மையின் வழி சென்றவர்கள்
மரணத்தை வென்று தங்கள் பெயரை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்
உலகில் பரிபூரணமாக வாழ்ந்த ஒருவன்
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையை
இறைவனிடம் வேண்டி நிற்க மாட்டான்
சத்தியத்தை அவதாரம் தான் பிறப்பெடுத்து
நிலைநிறுத்த வேண்டுமென்பதில்லை
சத்தியத்தின் அலைகள் உனது
உள் மையத்திலிருந்து புறப்பட வேண்டும்
எல்லோரும் செல்ல வேண்டியவர்கள்தான்
சகமனிதனிடம் அன்பை விதைத்தவர்கள்
இந்த உலகில் விருட்சமாக வளர்ந்து
கொண்டிருக்கிறார்கள்
மன்னிக்க முடியாத செயல்களைச் செய்யும்
உனக்கு இறைவன் பாவமன்னிப்பு வழங்குவார்
என நம்புகிறாயா?
வானமண்டலத்தில் சிறுதூசியான பூமிப்பந்தில்
இருந்து கொண்டு உன்னைக் கடவுள் என
எண்ணிக் கொண்டிருக்கின்றாயா
உன் செயலுக்காக நியாயந்தீர்க்கும்
கடவுளை நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய் அல்லவா
பூமியில் உனக்கு சுவர்க்கக் கனவு தேவையாய்
இருக்கிறது ஆனால் அதனை சிருஷ்டித்த கடவுளின்
சட்டத்திற்கு நீ ஏன் அடிபணிய மறுக்கிறாய்?

2

மனிதர்களே எங்கிருந்து நீங்கள்
அனுப்பப்பட்டு இருக்கின்றீர்கள் என்று
தெரியுமா உங்களுக்கு
வானமண்டலத்தின் பிரம்மாண்டத்தைப்
பொறுத்தவரை இந்த பூமி மிகச்சிறிய
துகள் தானே
இயற்கையின் சட்டதிட்டங்கள்
கடவுளின் சட்டதிட்டங்களைவிடக்
கடுமையானவை என்று உங்களுக்குத் தெரியுமா?
அடைக்கலம் கொடுத்த இயற்கையை
நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்கள் அல்லவா
உங்கள் உள்ளுக்குள் செல்லும் காற்று
இயற்கையிடம் சென்று சொல்லிவிடுமல்லவா
நீங்கள் எப்பேர்பட்டவரென்று
இயற்கை நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும்
ஒரே சூரியனைத் தான் அளித்திருக்கும்
அந்த வெளிச்சத்தில் நீங்கள் காட்டு
விலங்கினைப் போல் வேட்டையாடத்தானே
அலைகின்றீர்கள்
உங்கள் உள்ளுக்குள் எரியும்
காமநெருப்பு இறுதியில் உங்களை
சாம்பலாக்கத்தானே செய்யும்
மதம் என்ற கிணற்றுக்குள்ளிலிருந்து வாருங்கள்
நீங்கள் பறக்க விசாலமான
வானம் இருக்கின்றதைப் பாருங்கள்
உங்களது எண்ணஅலைகளின் வக்கிரங்கள் தான்
கடலிலிருந்து ஆழிப்பேரலையாய் எழும்புகிறது
இயற்கை கரியை வைரமாக்குகிறது
நீங்கள் பூமியை பைத்தியக்காரவிடுதியாக்கி
வைத்திருக்கின்றீர்கள்
இயற்கை படைக்கும் போது பிரம்மனாகிறது
அழிக்கும் போது சிவனாகிறது
காக்கும் போது விஷ்ணுவாகிறது
இயற்கையிடம் மனிதன் தப்பமுடியாது
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம்
சாட்சியாக நிலா மேலே இருக்கிறது
இயற்கை கண்ணாமூச்சியாடுகிறது
பூமிக்குள் இன்னொரு உலகம்
உங்களால் கண்டுபிடிக்க முடியாது
இயற்கையின் மரணச்சட்டம்
மனிதர்கள் எல்லோரையும் சமனாக்கி வைத்திருக்கிறது
சக்கரவர்த்திகள் எல்லாம் ஒருபிடி
மண்ணைக்கூட கொண்டு செல்லாமல் தான்
மயானத்தில் எரிந்தார்கள்
பூமியில் படைப்பு இருக்கவேண்டுமா என
இயற்கை நிர்ணயிக்கும் காலம்
வரப்போகிறது
மனிதனின் அரக்கத்தனத்தால்
இயற்கை விஸ்வரூபம் கொண்டு
பூமியை கபளீகரம் செய்துவிடும்
அந்த நாளில் மனிதஇனத்தை கடவுள்
நியாயந்தீர்த்து விடுவார்.

சாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்

வே. நி. சூரியா

தார்ச்சாலையை கடக்க
இயலவில்லை
கால்மணி நேரமாக தலையில்
எச்சம் வழியும் சிலையென நிற்கிறேன்
நான் வீட்டிற்கு போகவேண்டாமா
சாலையில் வாகனங்கள் டைனோசர்கள் என
வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றன

0

என் கூட வந்தவர்கள்
மர்மமான முறையில்
சாலையின் அந்த பக்கத்தில்
நடந்துகொண்டிருந்தனர்
ஒன்றும் விளங்கவில்லை
சுற்றும்முற்றும் பார்த்தேன்
ஒரு சப்வே இருந்தது
அதன் படிக்கட்டுகளில் இறங்கி
வெளியே வந்தபோது
எல்லா அந்த பக்கத்திற்கும்
அந்த பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன்
நான் போகவேண்டியது ஒரேயொரு அந்த பக்கத்திற்கு

0