பவுன்சர்
பந்தே நீ அவன் தலையைக் குறி பார்த்துச் சென்றுகொண்டிருக்கிறாய்
என்ன காரியம் செய்கிறாய்
அது ஒரு பிசகு அதைப் போய் உண்மையென நீ நம்ப
எவ்வளவு பெரிய விபரீதம் நேரப் போகிறது பார்
என்ன பந்தே நான் சொல்வது கேட்கவில்லையா
இனி ஒன்றும் செய்ய முடியாது
விர்ரென காற்றைச் சீறிப் பாயும் உன் பயணத்தில்
இன்னும் சற்றைக்கு அவன் தலை உனக்குத் தட்டுப் பட்டுவிடும்
சத்தமில்லாமல் என் பெயரைக் கூறிவிட்டு நீ ஒதுங்கிக் கொள்
இல்லையென்றாலும் என்னை யாரென்று தெரியாமலா போகப் போகிறது
குற்ற உணர்ச்சியில் என்னைச் சாவடி அடிக்கப் போகிறார்கள்
பந்தைப் போடும்போது வேகமெடுப்பதற்காக
நடந்து கொண்டே போவார்களே அப்படிப் போன ஒரு சமயத்தில்
பந்தைப் போடுவதற்குத் தயாராய் அவனை நோக்கித் திரும்பியதும்
உன்னை வெளியே அனுப்புவதற்காக இப்படியும் ஒரு வழியிருக்கிறதென
அமுக்குணியாக உள்ளுக்குள் ச்சும்மா சிரித்துக் கொண்ட கணமது
அதைப் போய் உண்மையென நம்பிக் கொண்டு
ஆட்டிக் கொண்டு இந்தப் பந்து இப்படிக் கிளம்பிவிட்டது என்ன செய்ய
மேலும் அது பாதி தூரம் சென்ற பிறகு அதற்கு காது கேட்காதது
எனக்கு தெரியாதெனக் கூறினாலும்
இவ்வுலகம் என்னை நம்பவா போகிறது
பந்தோடு ஒட்டி உறவாடினேனல்லவா என்னைச் சொல்ல வேண்டும்
இப்பொழுது பந்து சீற்றத்தோடு தலைக்கு மிக அருகில் போய்விட்டது
எப்படியோ தடுத்துவிடலாமென
மட்டையை வைத்து அவனும் தடுக்கப் பார்க்கிறான்
அவனால் அது முடியாது போனதால்
அவனை உரசுவதற்கு முந்தைய மிக துல்லியமான அந்த தருணம் பார்த்து
போய்த் தொலையென லேசாக அவன் குனிந்து கொண்டதும்
நல்லவேளையாக பந்து பின்னாலிருப்பவனிடம் போய் தஞ்சமானது
எல்லாம் சுமுகமாக முடிந்தது
நண்ப என்னை மன்னித்து விடு
இனி விளையாடுவதற்கு பந்து அல்லாத ஒரு வழியை நாம் தேடவேண்டும்
பந்தேயில்லாமல் ஓடி வந்து போடுகிறது மாதிரி போடுகிறேன்
நீ அடிக்கிறது மாதிரி அடி
அவனுக்குப் போட்டேன் பாருங்கள் ஒரு பவுன்சர்
oOo
கூரெனும் யுக்தி
கூரான கத்தி என்ன செய்யுமென
நமக்குத் தெரிந்தபோதும் நம்மையது விட்டபாடில்லை
இப்படிச் செய்வேன் அப்படிச் செய்வேனென
தினமும் ஒரு புதிய பாடத்தை நடத்த வந்திடுகிறது
கத்தி இங்கு கழுத்து அங்கு என்றாலுமே
அதெல்லாம் அதற்கு ஒரு பிரச்சினையேயில்லை
கத்தியை நோக்கி கழுத்தே தேடி வருகிறது
அதுவும் புதிய புதிய கழுத்து
கத்தியை உறைக்குள் செருக மறந்த ஒருநாளில்
விறைப்பின் சுரு சுரு தாங்காது
நம்மை யார் என்ன செய்து விட முடியுமென
கொலைக்கு முன்பாக ஒரு தடவை
போலியாக அதைச் செய்து பார்ப்பார்களே அங்கு புகுந்தது
யாருமில்லாது கத்தியை மட்டும் கண்டதில்
அவர்கள் குழம்பிப் போனார்கள்
மாதிரி கொலையை அப்படி அப்படியே போட்டபடி
பாதியாக இடிந்திருந்த அம்மண்டபத்தில்
கிடைக்கிற இடங்களில் போய் ஒளிந்து கொண்டனர்
பீடு நடை போட்டுக் கொண்டிருந்தது கத்தி
சுருட்டி வைக்கப்பட்ட ஓலைப்பாய்க்குள் ஒருவன் ஒளிந்திருந்தான்
அவனிடம் இன்னொருவன்
ஓலைப் பாயில் ஒளிந்திருப்பது மாதிரி வேவு பார்க்கிறேன்
நீ பயந்தா இங்கு ஒளிந்துள்ளாய் என்றதும்
கத்தியின் காதிற்கு ஓலைப் பாய் இருந்த திசையிலிருந்து
சரக் புரக் சரக் புரக்கென்ற ஒலி வந்துகொண்டேயிருந்தது
கத்தி அங்கிருந்தவாறு தன் மண்டையைத் திருப்புவதற்குள்
நடிப்பதாகக் கூறியவன் ஓலைப் பாயிலிருந்து வெளிவந்து
கூரான கத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்
தனது கொலைக்கு இக்கத்தி பயன்படுமா என்று
கத்தியை நோக்கி ஒருவன் நடந்து திடீரென பின்வாங்கிக் கொண்டதும்
கத்திக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது
மண்டபம் பாதுகாப்பு குறைவெனக் கருதிய ஒருவன்
கத்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தால் தேவலையென்று
அதன் பின்னால் ஒளிய ஒளியப் பார்க்க
அந்தக் கத்தி முதன்முதலாக ஒருவனை பார்த்து ஓடியது
கூரென்ற அந்த ஒரு யுக்தியை
காலிசெய்துவிட்டதாக நினைக்க வேண்டாம்
அடர்ந்த மயிரை மழித்துக் கொள்ளுங்களென்றோ
இல்லை வேறெப்படியோயேனும் ஒருவன் கைக்குள் அது புகுந்து விடும்
இருப்பதென்னவோ ஒரேயொரு யுக்திதான்
கட்டக் கடைசியில் வைத்திருப்பவன் கழுத்தை
வைத்திருப்பவனை வைத்தே அறுக்க வைக்கும் ராஜ யுக்தி அதுவும்