குளத்தின் மீது பிரதிபலிக்கும் மரத்தின் மீது கல்லெறிகிறாள். கல்லேதும் விழாமலே கல் விழுந்ததைப் போல குளம் சலனமடைகிறது. மரமோ அசைவற்ற குளம் போல நிற்கிறது, கிளைவிரித்து. வந்தமர்ந்த காக்கைகள் வெயில் உலர்த்திக்கொண்டு வழக்கம்போல பழங்களை கொத்திச் சென்றன. குளத்திலிருந்து இலைகள் சில உதிர்ந்து மரத்தின் மீது மிதந்தன. அப்போது கூட அவளெறிந்த கல் திரும்பவில்லை.
கவிதை
வலிமையான போராட்டம்
அலாதியாய் வெடிக்கும் காற்று
அசைவற்ற
என் தனிமையையும்
என் மௌனத்தையும்
இசைக்கத் தொடங்குகிறது.
ஆர்ப்பரித்த
என் ஆழி
கனா தந்த என் யாக்கை
எல்லாம் வாசனையற்றும்
உயிரற்றும்
இவ்வுலகில் வீழ்ந்து கிடக்கின்றன
வலிமையான போராட்டம்
தொடங்கியிருக்கிறேன்.
நேரிடையான சம்பவங்களின்
நிழல்களுக்குள்
ஆழமாய் வீழ்த்தப்பட்ட
பால்யம் என்கிற
துரோகத்தின் துன்பியம்
நிலமெங்கும் வழியத்தொடங்கியதன்
கோத்திரம் புரியவில்லை
அன்பின் மூதாதையத்தை
அளவீடு செய்யத் தெரியாத
நபராகவே நான் வாழ்ந்திருக்கிறேன்
என்கிற பின்னணி நாகரீகத்தை
பின்னரே அறிந்தேன்.
உயர்ந்த அன்பின்
மதுக் கோப்பை எங்கும்
நுரை தள்ளியபடி
தனிமை முளைத்து நின்ற கதை
நேற்று அறைக்குள் புகுந்த
சர்ப்பமொன்றின் விஷத்துளியிலிருந்து
நான் கவனிக்கத் தொடங்குகிறேன்.
தடதடக்கிறது
ஒரு பின்னிரவில்
தாழிட்ட என் வீட்டுக் கதவுகளை
தடதடக்கிறது இரு கைகள்
தாழ் நீக்க மனமில்லை எனக்கு
அக்கைகள் எழுப்பும் ஓசை
மிகப் பரிச்சயம் என்பதனாலும்
அக்கைகள் கொணர்ந்துச் செல்ல
ஏதுமில்லை என்பதனாலும்
கருணையின் கைகள்
தனித்தலையும் காடென உணர்கிறேன்
இப்பயண வழி கொடியது
இது கனவுகள் நீண்ட சாலை
தீராக் கனவுகளும் தீர்ந்து போகும் இரவுகளும்
இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது எனக்கு
இந்த கண்ணாடியையும் இந்த முக மூடியைும்
நீ பத்திரப்படுத்திக்கொள்
ஏனென்ற கேள்வி
இங்கு தடை செய்யப்பட்டுள்ளது
ரகசியங்களை தேடி
நீ நெடுந்தூரம் பயணிக்கப் போகிறாயா?
எல்லா ரகசியங்களுக்கு பின்னாலும்
சிதைக்கப்பட்ட ஜீவிதத்தில் நான்
பூச்சியமாக்கப்பட்ட துயர் செய்தி மட்டுமே
உன்னை வந்தடையும் ஒரு நாளி்ல்
அந்த நாளில்
கருணையின் கைகள் நீளாதா
நீ விட்டுச்சென்ற இடத்தில்
பிறந்த நாள்
காலத்தின் மர்மக்கரங்கள் வாழ்வின்
முடிவை நோக்கி
என்னை நகர்த்திச் செல்கின்றன
மனதுக்கினிய வாழ்த்துரைகளாலும்
பரிசில்களாலும்
கண்ணுக்குத் தெரியாத
மாபெரும் இழப்பொன்றை
மறந்திருக்க முனைகிறேன்
அல்லது மறைக்க விரும்புகிறேன்
வாழ்தலின் மீது
போலியான நம்பிக்கைகளை
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
மனிதர்களின் புன்னகை
மனமெங்கும் தூவி விட்டுச் செல்கிறது
வாழ்த்து அட்டைகளின்
அலங்காரமும்
குழந்தைகளின் முத்தமும்
எனது பிறப்பின் அர்த்தத்தை
நான் தேடுவதிலிருந்தும்
என்னைத் தடுத்து விடுகின்றன
ஒவ்வொரு பிறத்த தினத்திலும்
புதிதாகப் பிறப்பது போன்று
உணர்கிறேன்
மேலும்
பிறத்தல் இறத்தலின் தொடக்கம்
என்றும் உணர்கிறேன்