ஜிஃப்ரி ஹாசன்

கலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும் தொகுப்பிலுள்ள கதை.

கதைகூறலில் ஒரு திட்டவட்டமான முறையென உண்ணியிடம் பிடிவாதங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என ஒரு கலவையான கதைகூறல் முறை அவரிடம் உள்ளது. அவரது பாங்கு ஒரு பெண்ணின் வித்தியாசமான ஆசையைச் சுற்றி நகரும் கதை.

 ஒரு கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தீபா, ஜோதி, சமீனா, ரசியா என்கிற நான்கு மாணவிகளும் தங்களது கல்லூரி வாழ்க்கை நிறைவுக்கு வரும் தருணம் தங்களது நீண்ட கால அல்லது கல்லூரி வாழ்க்கையில் முளைத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். இதில் தீபா, ஜோதி, சமீனா ஆகிய மூவரும் தங்களது ஆசைகளை சொல்லிவிட்டனர். கல்லூரி ஹெட்டோட கையை முத்தமிடுவது தீபாவின் ஆசை. ஆங்கிலம் படிக்கும் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது ஜோதியின் ஆசை. அஸ்ரப் என்கிற நண்பனோடு உட்கார்ந்து சினிமா பார்ப்பது சமீனாவின் ஆசை. மூவரது ஆசைகளும் சராசரியான பெண்களின் ஆசைகளாக கதைக்குள் வருகின்றன.

இந்த மூவரது ஆசைகளும் எந்த புதுமையுமற்ற சராசரி வாழ்விலிருந்தும், வாழ்வின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்தும் வருவதாகும். வாழ்வின் உயர்ந்த லட்சியத்திலிருந்தோ, ஆழ்ந்த கனவுகளிலிலிருந்தோ அந்த ஆசைகள் எழுந்து வருவதில்லை. ஆனால் ரசியா என்கிற மாணவி மௌனமாக இருக்கும் போதே அவளது கடைசிக் கனவு என்ன என்பதை அறிவதற்கு வாசக மனம் பரபரக்கிறது. அவள் ஒரு விசித்திரமான ஆசையை வெளிப்படுத்தப் போகிறாள் என யூகிக்கவும் முடிகிறது. என்ன அந்த ஆசை? எது அந்தக் கனவு? அந்த ஆசையை எல்லோரையும் போல் தன் நண்பிகளிடம் அவளால் இலகுவில் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது. தடுமாற்றங்களால் அவள் நிலைகுலைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஒரு மாதிரி அழும்பு வேல காட்டாத. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு முன்னால நாம் ஆசைப்படுவது என்னவோ அதை செய்திடனும் என்று கோபமாக சொன்னாள் தீபா.  சொல்லித்தொலை என அடுத்தடுத்து தோழிகளின் குரல்கள் தடித்து எழுந்தன.

ரசியா தலையில் இருந்து நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டே எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா அது நடக்குமா என்றாள். அவளது தோழிகள் மிகச்சராசரியாகவும், உற்சாகமாகவும் என்னோட குமரே, உனக்கு பிரின்சிபால கட்டிப் பிடிக்கணுமா? இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா? அதுவுமில்ல, யார்கூடயாவது படுத்துக்கணுமா?”   அவர்களது ஆசைகளை ஒத்த கனவுகள் எல்லாம் சொல்லி அவளை அவசரமூட்டுகிறார்கள். ஆனால் ரசியாவின் ஆசையோ சின்னத்தனங்களிலிருந்தும், உடல்சார்ந்த ஆசைகளிலிருந்தும் வேறுபட்டதாக அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்தது. அவள் தன் வழக்கமான சிரிப்புடன் சொன்னாள் எனக்கு ஒரு தடவை பாங்கு சொல்லனும் சட்டென்று தோழிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது. ஒரு பெரிய அதிர்ச்சி அந்தக் கணத்தை நிறைத்தது. யாரும் எதுவும் பேசாமல் சில கணங்கள் கரைந்தன. கடைசியில் தோழிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். “நீ என்ன கிறுக்குத்தனமாகப் பேசறே, வேற யாரும் கேட்டுடப் போறாங்க.” சமீனா கோபமாகச் சொல்கிறாள். சரக்கு அடிப்பது, யார் கூடவாவது படுத்துக்கிறது, ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது போன்ற எளிய ஆசைகள் சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் போது கலாசார மரபு மீதான மீறலைக் கோரும் ஒரு பெண்ணின் குரல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டு விடும் அபத்தமான துயரமே கதையின் மையமான இடமாகிறது. 

ரசியா, தங்களது கல்லூரி வாழ்வின் கடைசி ஆசையைக் நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது என்ற முடிவை ஞாபகமூட்டுகிறாள். இதற்கெல்லாம் கூட இருக்க முடியாது. மதம் கடவுள் எல்லாம் தொட்டா சுடுகிற சங்கதி

என்று அவர்கள் நழுவி செல்கின்றனர். இப்போது கலாசாரத்தின் விளிம்பில் தனித்துவிடப்பட்ட ஒருத்தியாக ரசியா நிற்பதை வாசக மனம் பரப்புடன் எதிர்கொள்கிறது.

ரசியாவுக்கு இந்த ஆசை அவளது சின்ன வயதில் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவளது அப்பாவும் அம்மாவும் அவளை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே கூண்டில் இருந்த ஒரு மிருகத்தை பார்த்து அதை திறந்து விடும்படி கூறி அழத் தொடங்கினாள். எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோபத்தில் அங்கிருந்து அவளை வெளியே கூட்டி வந்து விட்டனர். ஜும்மாவுக்கு நேரமானதால் அவளுடைய தந்தை இவர்களை அருகில் இருந்த கடைகட்டில் உட்கார வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டார். அப்போது கேட்ட பாங்கு எப்போதுமே கலையாமல் ஒரு ஆபரணம் போல ரசியாவின் காதுகளில் ஒட்டிக்கொண்டு விட்டது. அப்போதிருந்தே அந்த ஆசை அவளுடன் கூட வந்தது.

தோழிகளிடம் சொன்ன அந்த ஆசையை அம்மாவிடமும் வீட்டுக்கு வந்து சொன்னாள். அவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவள் படைத்தவனிடம் கேட்டாள். நான் ஆசைப்படுவது தப்பா?”

 அவர்களது கல்லூரி வாழ்வின் இறுதி நாட்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ரசியாவின் தோழிகள் அவர்களது ஆசைகளை ஒவ்வொருவராக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் ரசியாவின் ஆசை மட்டும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது.

கடைசி நாளும் நெருங்கிவிட்டது நண்பிகள் வேறு ஆசை ஒன்றை சொல்லும்படி அடம் பிடித்தார்கள். கலாசாரத்தோடு மோதுவதையும், மீறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ரசியா தனது ஆசையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாள். சின்ன வயதில் இருந்தே அவளுக்கு கூட இருக்கும் ஆசை அது.

ஜோதி என்ற தோழி அவளுக்கு உதவ முன்வருகிறாள். சரி நீ எப்போ பாங்கு சொல்லனும்?”

“வெள்ளிக் கிழமை” என்கிறாள். ஜோதி சொன்னதைப் போன்றே கல்லூரியிலிருந்து 10-15 கி.மீ. தொலைவிலுள்ள மனுசங்க யாரும் இல்லாத காட்டுக்குள் ரசியாவை தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தாள்.

மது அருந்துவதற்காக காட்டுக்குள் ஒதுங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் ரசியாவும் அந்த மாணவனும் காட்டுக்குள் நுழைவதைப் கண்டனர். அந்த இருவரும் அவர்களை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர்.

சின்னப் பொண்ணு என்றான் ஒருவன். பையனும் பொடியன்தான் என்றான் மற்றவன். அவனுங்களையும் கூட்டிட்டு வா என்றதும் ஒருவன் காட்டுக்கு வெளியே ஓடினான்.

ரசியா நண்பனிடம் மேற்குத் திசையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.

 அந்த இளைஞர்கள் காட்டுக்குள் இவர்களை நோக்கி நகர்கின்றனர். மரக்கிளைகளையும், பற்றைகளையும் ஒதுக்கிக் கொண்டு நூதனமாக அவளை நெருங்குகின்றனர். அப்போது காட்டைக் கிழித்துக்கொண்டு, “அல்லாஹ் அக்பர்“ என பெண் குரலில் பறிந்தது பாங்கு!  

பச்சையின் இருளில் நூற்றாண்டுகளின் அலைகள் தழுவித் தூய்மையாக்கிய அந்த நாதம் ஆகாயத்தின் பரப்பையும் மண்ணின் ஆழங்களில் ஊன்றிய வேரையும் தொட்டது என்கிறார் உண்ணி. ஆர். ஆனால் அந்த பாங்கின் நாதம் அவளை நெருங்கிய அந்த இளைஞர்களின் இதயங்களையும் தொட்டிருக்க வேண்டும். காட்டை விலக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் அங்கேயே அசையாது நின்றனர்.

ரசியா தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் காட்டை விட்டும் வெளியேறிச் சென்று கொண்டிருந்தாள். பெண் பாங்கு காட்டையே மென்மையாக்கிவிட்டதாக வாசக மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த பாங்கு பள்ளிகளிலும் ஒலிக்குமா? என்பதே கதை எழுப்ப விரும்பும் கேள்வி என நினைக்கிறேன். இந்தக் கேள்வி ஒரு கலாசார உரையாடலுக்கான மகத்தான தொடக்கம் என்றும் நினைக்கிறேன்.

 

கடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

கடவுளைப் போல்
எங்கிலும் எல்லா
இரகசியங்களையும்
உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன
கமெராக்கள்.
கடவுளின் கண்களே
கமெராவாக உருமாறிவிட்டதாக
மனிதன் பதட்டமுறுகிறான்

குற்றங்களை பரகசியப்படுத்தும்
கருவியை கடவுள் நாகரீகம் கருதித்தான்
படைக்காமல் விட்டிருக்க வேண்டும்,
சிரமத்தைப் பாராமல் அவர் தன்
வெற்றுக் கண்களால்
இமைப்பொழுதும் சோராமல்
அசிங்கம் பிடித்த மனிதனை
பரிதாபத்தோடு மிக நிதானமாக
அவதானித்தபடி இருக்கிறார்
ஏனெனில், மனித குலத்துக்கான
மேன்முறையீடுகளற்ற
கடைசித் தீர்ப்பை
அவர்தான் வழங்க இருக்கிறார்

இனி,
நன்மை தீமைகளைப் பதிவுசெய்யும்
வானதூதர்கள்
தோள்களில் உட்காரந்து கொண்டு
கைவலிக்க எழுத வேண்டியதில்லை
கருமப் பதிவேடுகளை முறையாகப்
பேணத் தேவையுமில்லை.
இறுதி விசாரணையின் போது
இனி கை செய்ததை கை பேச வேண்டியதில்லை
கால் செய்ததை கால் பேச வேண்டியதில்லை
கண் பார்த்ததை கண் பேச வேண்டியதில்லை
காதுகள் கேட்டதை காதுகள் பேச வேண்டியதில்லை
ஒரு கமெராவுக்குள் அடங்கி இருக்கிறது
மனிதனின் வாழ்வும் விதியும்.

அது மனிதனை மிக நெருங்கி
அவனது எல்லா அந்தரங்கங்களையும்
பரகசியங்களையும்
பதிவுசெய்யும் கடவுளின் கண்.

போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி – தீரன் ஆர்.எம். நௌஸாத்

ஜிஃப்ரி ஹாஸனின் ஒரு சில புனைவுகளை முக்கியமாக கவிதைகளை நான் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் ‘பாலைநகர் ஜிப்ரி” என்ற ஆளடையாளத்துடன் வாசித்திருந்த போதும் அவர் பற்றிய ஒரு ‘நிரந்தர பிம்பம்’ என் மனத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. அவரது “விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்” கவிதை தொகுப்பையும் நான் வாசித்திருக்கவில்லை. ஆயின் இரண்டொரு சிறுகதைகளை எதுவரை,மற்றும் பெருவெளி சஞ்சிகைகளில் வாசித்தபோதுதான் ஜிஃப்ரி ஹாஸன் என்ற அவரது இலக்கியப் பிம்பத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஜிஃப்ரி ஹாஸன் ஒரு சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் போர்த்தாக்கமுற்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர். ஏற்கனவே அவரது ‘அரசியல் பௌத்தம்’ என்ற இலங்கையின் போருக்குப் பின்னரான அரசியலைப் பற்றிப் பேசும் நூல் வெளிவந்துள்ளது. இதுவரை அவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சில சஞ்சிகைகளும் வெளியிட்டுள்ளார். அவரது சமூகவியல் கற்கை நெறி அவரது எழுத்துகளில் வியாபகமாகச் சூழ்ந்து கொடுள்ளது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இத் தொகுதியில் ஒட்டு மொத்தமாக அவரது சில நிர்மானிப்புகளை “வேணும்விளையும்” என்று வாசித்த போதுதான் அவரது பிம்பம் பற்றிய என் புரிதல்கள் சில கலைந்து மேலும் சில சேர்ந்து பெறுமதிமிக்க ஒரு புது வடிவம் கிடைப்பதாயிற்று.

02

போர்க்குணம் கொண்ட ஆடுகள் என்ற இம் மேய்ச்சல் வெளியில் நண்பர் ஜிப்ரி ஹாசன் பத்து போர்க்குணம் கொண்ட ஆடுகளை ஓட்டி வந்திருக்கிறார். இவை கொம்புகள் முட்டித் தள்ளுவதையும் இரண்டு கால்களால் உயர்ந்து பாய்வதையும் பற்றிப் பேசவும் எழுதவும் இரசிக்கவும் ஏராளமான சங்கதிகள் உள்ளன.

முடிந்த வரை ஒப்பனைகள் நீக்கிய, மிகையுணர்ச்சி தவிர்த்த, படிமங்கள் அற்ற எழுத்து, ஜிப்ரிஹாசனுடையது. இதனால், பாத்திரங்களின் குனாதிசயக் கலவையை விஸ்தாரமாக விபரிக்க முடியாத ஒரு இடர்பாடு இந்த இடத்தில் ஒரு கதை சொல்லிக்கு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. பாத்திரமே உரையாடல்களில் ஈடுபடும்போது குணாதிசயம் வெளிப்படச் செய்தல் இலகுவான ஒரு மறை உத்தியாகும். மொழியைச் சிதைத்து., கதைகளைச் சிதைத்து., மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவது என்னும் புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைக்க முயற்சிக்கும் ஒரு ‘ரண சிகிச்சையை’ ஜிப்ரிஹாசன் செய்து பார்த்திருக்கிறார். இது மீபுனைவுகளின் வெளியை இன்னும் அகலமாகத் திறந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

கதைசொல்லியையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதக்கூடிய உத்தி இத்தொகுதியிலுள்ள புனைவுகளிலும் ‘தூக்கலாக’ உள்ளன. ஜிப்ரிஹாசன் என்ற கதைசொல்லி புனைவுகளில் ஒரு ‘மறைவார்ப்பாளாராக’ வடிவமைக்கப்பட்டுள்ளார். இது பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறைக்கு சார்பானது. இந்த முறையை பிடிவாதமாக பேணிக் கொள்ளல் என்பதே அவரது எழுத்தின் ஒரு அசைக்க முடியாத அடையாளமாக உள்ளது. யாருடைய தயவும் இல்லாமல் தன் எழுத்தை மட்டுமே நம்பி நெடுகிலும் தானே கதையைச் சொல்லியும், தானே வாசகனாக இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரிய சிரமமான விடயம். மாயப்பொடி தூவும் நடையினருக்கே இது சாத்தியம்.. ஆயினும் அதை இவர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறையில் கச்சிதமாகச் செய்துள்ளார் என்பேன்.

ஜிப்ரிஹாசனின் இந்த உத்தியானது ‘’உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள்’’ என்ற வாதத்துக்கு வலுச் சேர்த்தாலும்., இது வாசகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், கதைசொல்லியும் உள்ளிருந்தே தன் உணர்வை வாசகனுக்கு ‘’தந்திர ஊசி’’ கொண்டு ஏற்றிவிடுவதை காணமுடிகிறதுமுந்திய நிலையை மறுதலிப்பதாகவும் உள்ளது

…………………தமிழ்ச் சிறுகதைகளில் 98 வீதமானவை அரிஸ்டோடிலிய நியம முறையிலான கதை கூறும் முறையில் அமைந்தவையே. அத்தகைய கதைகள் “தொடக்கம்”, “உச்சம்”, “முடிவு” என அரிஸ்டோடிலிய மூன்று நியம விதிகளையும் கொண்டிருக்கும். கதைகூறும் முறையில் உலகளவில் ஏற்பட்டுள்ள சமகால மாற்றங்கள் மிகக்குறைந்த அளவிலேயே தமிழ்ச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் உள்வாங்கப்பட்டுள்ளன…..” என்று கூறுகிற ஜிப்ரிஹாசன் தன் பல நிர்மானிப்புகளில் இந்த அதி நவீன எடுத்துரைப்பு முறையினைப் பிடிவாதமாகக் கையாண்டுள்ளார்.

எம். ஜி. சுரேஷ் சொல்வது போல “,,,,,,,,,,,,,,,,,நவீனச் சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக் கரு என்ற ஒன்று உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் இல்லைஇது ஒரு பிரதியை அதன் ஒற்றைத்தன்மையிலிருந்து விடுவிக்கிறது. கலையை அதன் சட்டகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக அலைந்து திரிய அனுமதிக்கிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விரித்துப் போடுகிறது. . “ இக்கூற்று ஜிப்ரிஹாசனின் சில சிறுகதைகளுக்கு நெருக்கமாக வருகிறது

ஜிப்ரி ஹாசனின் எழுத்துகளில் மகா ஆடம்பரங்கள் இல்லை. அதிக இழிந்த மொழி களும் இல்லை தனது கதை, விளக்கம் மற்றும் பல குறிப்பு விபரங்களை முக்கிய பாத்திரங்களின் இயல்புகளை அவற்றின் நடத்தைகள் மூலமே வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். அதில் பல இடங்களில் வெற்றியும் கண்டுள்ளார். நேரடியாக சொல்லப்படும் சில நிர்மானிப்புகளில் தானும் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவது அவருக்கு சுலபமாக இருந்துள்ளது.

வெறுமனே கற்பனாவாத வெளிப்படுத்துதல்களில் அவருக்கு சம்மதமில்லை என்பதும் ஒரு புழுவுக்கு சிங்காரமான இறக்கைகள் வைத்துப் பார்ப்பதில் அவர் சமரசம் கொள்ளவில்லை என்பதும் புரிகிறது. மற்றது அவர் தன் கதைகளைத் தேடி விண்வெளிக்குச் செல்லவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மேய்ச்சல் வெளியிலேயே வேண்டியளவு மேய்ந்துவிட்டு ஆறுதலாக உட்கார்ந்து அசை போட்டிருக்கிறார்.

ஜிப்ரிஹாசனின் கதைப் பிரதிகளை படைப்பு அல்லது புனைவு என்னும் சட்டகத்துள் அடக்கலாமா என்பதிலும் எனக்கு தயக்கம் உண்டு, சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேவையானவிடத்து பாவித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனாலேயே இவற்றை நிர்மாணிப்புகள் என குறிப்பிட்டேன்.

இனி நண்பர் ஜிப்ரிஹாசன் இத்தொகுதியில் மேய்ச்சலுக்குக் கூட்டி வந்திருக்கும் சில போர்க்குணம் கொண்ட ஆடுகளின் கொம்புகளை கொஞ்சம் சீவிப் பார்க்கலாம்.

03

மண்வாசகம் என்ற புனைவில் ஜிப்ரிஹாசனை நிச்சயமாக நாம் தரிசிக்க முடிகிறது பாலைவனத்துக்குச் செல்லவுள்ள மனிதர்களின் உள்ளார்ந்த இழிநிலை நோக்கு இங்கு பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. கானல் நீரும் காணாத கபோதிகள் நிறைவேற்றும் தீர்மானம் சும்மா இருந்த நம்மையும் அடிப்படைவாதிகளாக்குகின்றன

மே புதுன்கே தேசயஎன்ற கதை ஒரு அற்புதமான புனைவு ஆகும். வெறுமனே புனைவு என்று இதனை சொல்ல முடியுமாசம்பவங்கள் என்று சொல்லலாம் சம்பவங்களாக கதையை நகர்த்திச் சென்ற உத்தி இங்கு வெற்றியளித்துள்ளது இடையிடையே தூவியுள்ள மொழி விகடங்கள் புன்முறுவலோடும்மொழிஅவஸ்தைகள் கோபத்தோடும் உட்பாய்ச்சல் செய்துள்ளன உண்மையில் மம்மலி என்ற பாத்திரத்தை நம் தேசத்தின் தமிழ்மொழியில் பணிபுரியும் அரச ஊழியரின் ஒட்டுமொத்தமான ஒரு குறியீடாகவே காண்கிறேன். விகாராதிபதியால் பதிலளிக்க முடியா கேள்விகளுக்கு ஜிப்ரிஹாசனே பதிலளித்து விடுகிறார். ஆத்திரமூட்டும் இந்தப் பதிலை நம்மில் இலகுவாகத் தொற்ற வைக்க ஜிப்ரிஹாசன் எடுத்துக் கொண்ட சொற்கள் மூன்றேமூன்றுதான்இது பௌத்தரின் தேசம் என்றுஆயின் இதற்கு மிகச் சரியான பதில் மே சிங்ஹலே தேஷய என்பதுதான்.

நினைவின் மரணம் என்ற கதையில் திடீரென பெண்ணாக மாறிய ஜிப்ரிஹாசனை விநோதமாகப் பார்க்கிறோம். ஒரு ஆண் படைப்பாளி பெண் என்ற நிலையில் இருந்து கதை சொல்வது ஒரு ‘முரண்அணுகல்’ ஆகும். இதில் பல கதைசொல்லிகள் தோல்வியே அடைந்துள்ளனர;. வாஸந்தி ஆணாக இருந்து கதை சொன்னதை இரசித்த வாசக உலகம் பாலகுமாரன் பெண்ணாக மாறி கதை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லைஇதே நிலை ஜிப்ரிஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. சில பெண்ணிய நுண்ணுணர்வுகள் ஆண் தன்மை கொண்டு தன்னை அறியாமலே வெளிப்படுதலே இதற்கு காரணம்இக்கதைக்கு எடுத்துக் கொண்ட கரு கூட மிகச் சாதாரணமானதே.

சலீம்மச்சிஎன்ற கதை இன்னொரு சிறப்பான உருவாக்கம் இதில் ஜிப்ரிஹாசன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார். மூன்றாம் பாலினமான சலீம்மச்சி போன்ற பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் ஓரிருவரையாவது நம் வாழ்வில் சந்தித்தே இருப்போம். தமிழ் சினிமாக்களில் இத்தகையோரை ஒரு இழிந்த நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்வர். ஆயின் அவர்களின் மனவேதனை எவ்வளவு ஆழமானது.. சமூகத்தில் அவர்கள் மீது புரியப்படும் உள வன்முறை எத்துனை கொடுமையானது. சலீம்மச்சியின் பரிதாபகரமான முடிவு கண்டு நாம் அனுதாபப்பட்டாலும் கொடூர உலகிலிருந்து சீக்கிரம் அவன் விடைபெற்றது பற்றி ஒரு நிம்மதி அடைகிறோம் ஜிப்ரிஹாசன் மிக இலாவகமான வகையில் இக்கதையினை நகர்த்திச் சென்ற வகையிலும் அவர் பூசியுள்ள மிகையற்ற ஒப்பனையிலும் கதை உச்சம் பெற்றுவிடுகிறது.

மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்.. என்பது ஜிப்ரிஹாசனின் இன்னொரு மயிலிறகு. எல்லா பல்கலைக்கழக வாழ்விலும் இப்படி ஒரு மயிறகு கிடைப்பதுண்டு. அது குட்டி போடாமலே கருகுவதுமுண்டு. இப்படி பல கதைகள் படித்தும் கேட்டுமிருந்த போதிலும் ஜிப்ரிஹாசனின் இந்த குண்டூசி அனுபவம் ஒரு இன மாறுபாட்டு காதல்பிரிவாக சுருக்கென்று குத்தும் வலியுடன் உணர முடிகிறது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த சொற்சுருக்க நடை பெரிதும் கைகொடுக்கின்றது … ‘’……….இப்படியே போனால் ஒருநாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதிவிடுவாள்…’’ என்று ஜிப்ரிஹாசன் கொஞ்சம் மிகை நினைப்பில் நம்மை பயப்படுத்தினாலும், ‘’…………அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. ……….’’ என்று நம்மை அனுதாபம் கொள்ள வைத்துவிடுகிறார். ஒரு குண்டூசியால் கீறி ஒரு மயிலிறகால் வருடிவிடும் உத்தி இங்கு நம்மை ஈர்க்கவைக்கிறது.

கம்யுனிஸ்ட் என்ற கதை ஜிப்ரிஹாசனின் சிங்களதமிழ் மையல்விசைக் கதையாகும்வளாக வாழ்வில் புகுந்த யாழினியின் வார்ப்புஅவள் மீதான ஒரு ஈர்ப்பை நமக்கு ஏற்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கதை நகர்ந்து செல்கையில் திடீரென அவளுக்கும் சுமனதாச சேருக்கும் இடையில் பொத்துக் கொண்டு எழுந்த காதல் யாழினியின் மீதான வார்ப்பில் ஒரு இடறலை தருகிறது தவிரவும் யாழினி சுமனதாச சேரின் வயதை விசாரித்த போது

‘’……….‘ஒருமுப்பத்தஞ்சி’…‘எனக்கு இருபத்திமூணு’ என்றுவிட்டுசிரித்தாள்…..அந்தச்சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒருகனவுஇருந்தது. ஒருவெட்கம் தெரிந்தது………………’’

என்று ஜிப்ரிஹாசன் எழுதும் இந்த இடத்திலேயே கதை முடியப் போகும் தரிப்பிடம் தெரிந்து விட்டது.. போர்க்குணம் கொண்ட பெண் ஒரு பூக்குணம் கொண்டவளாய் மாறியதை அறிந்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் இதுதான் நிஜத்தில் அங்கு நடந்துள்ளது.

இரண்டு கரைகள் ஜிப்ரிஹாசனின் ஒரு இளமைக் கால நட்சத்திரக் கதையாகும். போர்க்காலப் பள்ளிக்கூட நாட்களை அதற்கே உரிய திகிலுடன் கூடிய ஒரு வசீகரத்துடன் சொல்லியிருக்கிறார். தன்னையே இதில் காண்பிப்பதால் அனுபவ நடை கைகொடுக்கின்றது. போர்க்கால இயக்கப் பொறுப்பாளர்களின் நடத்தைகளில் சில விமர்சனங்கள் இருந்த போதிலும் பல நல்ல செயற்பாடுகளும் சினிமாத் தனமான சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்தன. சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை ஆகியதும் தமிழ் முஸ்லிம் கலவன் பாடசாலை முஸ்லிம் பாடசாலை ஆகியதும் அக்கிராமத்தின் போராதிக்கத்தின் விளைவுகளாகும்.

‘’…………..ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சந்தரப்பங்களிலிருந்து நாங்கள் தூரமாகிவிட்டிருந்தோம். இப்படியே பலநாட்கள் கழிந்ததில் எங்கள் முகங்கள் ஒருவருக்கொருவர் மறந்துபோயிற்று. பள்ளிக்கூடத்தினுள்ளேயே எங்கள் உறவுகள் மடிந்துவிட்டன. அதற்குள்ளேயே எங்கள் கனவுகளும் மடிந்தன. எங்கள் வாழ்வும் அதன் இயல்பை இழந்து போனது……………….’’ என்று ஜிப்ரிஹாசனோடு சேர்ந்து நாமும் ஆதங்கப்படுகிறோம்

04

….நான் புத்தகங்களின் காட்டில் மூளையை அடகு வைத்தவன்—“ என்று ஜிப்ரிஹாசன் தன்னிலை விளக்கம் தரும் போதும் “………. ஈழப்படைப்பாளிகள் பரந்த வாசிப்பாளர்களாகவும் மனித வாழ்வை நுணுக்கமாக அணுகுபவர்களாகவும் மானுடத்தை முழுதளாவிய அணுகுமுறைக்குட்படுத்துபவர்களாகவும் மாறாதவரை இந்த நிலைமையை மாற்ற முடியாது………..” என்று அவர் விசனிக்கும் போதும் ஒரு எழுத்துப் போராளியாக போர்க்குணம் கொண்ட ஆடாக அவர் உருமாறி வருவது நமக்குப் புரிகிறது.

………புனைபிரதிகளில் புரட்சிகரமான மாற்றங்கள் உள்வாங்கப்படுவதை நான் விரும்புகிறேன். கதைசொல்லிகள் பழைய பல்லவிப் பயணத்தையே நீட்டிக்கொண்டிருக்க வேண்டுமா அல்லது புதிய பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதா என்பது கதைசொல்லிகளின் சுதந்திரத்தின் பாற்பட்டது.,,’’, என்று தன்பக்க வாதத்தை முழக்கும் ஜிப்ரிஹாசன் சிறுகதைகள் என்ற பெயரால் சொற்சிலம்பாட்டம் ஆடாமல் அளந்தெடுத்த எழுத்துத் துப்பாக்கியால் ‘பட்பட்’டென்று சுட்டு விடுகிற அவரது எழுத்துச் சண்டித்தனத்தை இரசிக்கலாம்.

ஈழத்து சிறுகதை தளம் மீது நண்பர் ஜிப்ரிஹாசன் செய்கிற இந்த எழுத்துப் போர்ப்பிரகடனம் புதிய மேய்ச்சல் வெளிகளை நமக்குத் தரும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.. நண்பர் ஜிப்ரிஹாசனுக்கு நமது வாழ்த்துக்கள்.

ஜிஃப்ரி ஹாஸன் – மாயை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

விரலிடுக்கில்
எரிந்து கொண்டிருக்கிறது சிகரெட்.
இடையிடையே
உதடுகளுக்கு மாறுவதும்
பின் விரல்களுக்குத் தாவுவதுமாய்
அது மரணத்தைச் சுகிக்கிறது.
நீலப் புகை சுருள் சுருளாய்
காற்றில் கரைந்து மறைகிறது
நான் நெருப்பின்றியும் புகையின்றியும்
அணையாது எரிந்து கொண்டிருக்கிறேன்.
புகை போல் வாழ்க்கையும் கரைந்து மறையும்
கணத்தில் என் தேகம்
எரியூட்டப்பட்ட சிகரெட் துண்டுகளுக்குள்
சாம்பல் துணிக்கையாய் உருமாறி
காற்றில் கரைந்து மறையும்.

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

ஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன், தீபச்செல்வன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் ஒரே அரசியலை, வாழ்க்கையை, நிலக்காட்சியை, அனுபவங்களைப் பேசுபவை. அவர்களுக்கிடையிலான வித்தியாசம் என்பது கவிதையின் அகம் சார்ந்து நிகழாது புறம் சார்ந்து மட்டுமே நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக கவிதையின் மொழி மற்றும் ஓசை சார்ந்ததாக  மட்டுமே அந்த வித்தியாசங்களை கண்டடைய முடியுமாக உள்ளது. அவர்களின் கவிதைகளில் வேறு தளங்களில் முகிழ்க்கும் வித்தியாசங்கள் மிக நுண்ணிய அளவில்தான் (அதுவும் ஒருசில கவிஞர்களால்) நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன் போன்றோரின் கவிதை மொழி கிளர்த்தும் உணர்வுகளும், அது வெளிப்படுத்தும் ஒருவகை உக்கிரத் தன்மையும் இந்த மூவரையும் ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய புள்ளிகளாகும். ஆயினும் அவர்கள் ஏனையவர்களோடு ஒப்பிடும்போது அதிகம் எழுதவில்லை. இப்பொதுக் கவிதைப் போக்கின் (common trend) முன்னோடி கவிஞர்களுள் ஒருவராக சேரனைக் குறிப்பிட முடியும். இந்தக் கவிதை இயக்கத்துக்கான பாதையை வடிவமைத்ததில் அவருக்கு ஒரு தனியான பங்கு இருக்கிறது.

இவர்களின் புற வாழ்வும், அகவாழ்வும் ஒன்றிப்போயிருக்கின்றன. ஒரே கனவின் வெவ்வேறு கிளைகளாக விரிந்து நிற்பவர்கள் இவர்கள். கவிதையில் வெளிப்படும் உணர்வு சார்ந்தும் இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பவர்கள்தான். அவர்களின் வாழ்வும், அது கொடுத்த அனுபவங்களும் ஒரே நிலத்திலிருந்து, ஒரே அரசியலிலிருந்து, ஒரே கனவிலிருந்து உருக்கொண்டவை என்பதால்தான் இந்தப் பொதுமைப்பாடு. ஆம், இவர்களில் யாரும் அரசியல் எனும் பரப்பைத் தாண்டி விரிவுபட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் இணைந்திருந்த ஒரே புள்ளி அரசியல் களமே ஆகும். காதல், காமம் போன்ற விசயங்களை இவர்கள் தொட்டிருந்தாலும் அதற்குள்ளும் ஓர் அரசியல் தளம் உள்ளோடி இருக்கும்.

ஆக, இவர்களின் வேர் ஒன்றுதான். மரத்தின் இலைகளுக்கிடையிலான வித்தியாசங்களைப் போன்றுதான் நாம் இவர்களுக்கிடையிலான வித்தியாசங்களைத் தரிசிக்க முடியும். இதனால் தான் ஈழத்துக் கவிதைகள் என்று சொல்வதை விடவும் ஈழத்துக் கவிதை இயக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழப்போராட்டம் தொடங்கிய பின் அங்கு உருவான கவிஞர்களின் கனவு ஒன்றாகத்தானிருந்தது. அந்தக் கனவுகளைக் கண்ட கண்கள் மட்டுமே வேறாக இருந்தன. புலக்காட்சிகள் ஒன்றாகத்தானிருந்தன. உணர்வுகள், வெளிப்பாடுகள் ஒன்றாக இருந்தன என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

அது தவிர வேறொரு காரணமும் இருக்கிறது. 1980களில் ஈழத்தில் அறிமுகமான பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்களது கவிதைகளுக்கான உள்ளீட்டை, மொழியை அவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொண்டார்கள். பலஸ்தீனக் கவிதைகளை மட்டுமே தம் முக்கிய உசாத்துணையாக அவர்கள் வரித்துக் கொண்டார்கள். அதன் தாக்கத்திலிருந்து அவர்கள் எழுதிய கடைசி கவிதை வரைக்கும் அவர்களால் விடுபட முடியவே இல்லை. அது அவர்களின் மாறாத வாழ்வையும், மனநிலையையுமே முதலில் வெளிக்காட்டுகிறது. ஈழத்தில் பலஸ்தீனக் கவிதைகளுக்கு ஏற்பட்ட மதிப்பளவுக்கு வேறெங்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அத்தகையதொரு அரசியல் சூழல் இல்லாததனால் போதிய கவனத்தை அங்கு அது பெறவில்லை. அங்கு எந்தவித தாக்கத்தையும் அக்கவிதைகள் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஈழத்தில் நிலமை தலைகீழாக இருந்தது. பலஸ்தீனக் கவிதைகளை வாசிக்காமல் யாரும் கவிதை எழுத முடியாது என்பது இங்கு ஒரு எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது.

இதனால் ஈழத்துக் கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகளை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளாக தோற்றங்காட்டின. ஆனாலும் பலஸ்தீனக் கவிதைகளில் அரசியல், விடுதலை வேட்கை, காதல், பிரிவு, இயற்கை, குழந்தைமை, கனவுகள் என பலவிடயங்கள் உட்பொதிந்திருந்தன. துரதிருஸ்டம் ஈழக்கவிஞர்கள் அதற்குள்ளிருந்த வெறும் அரசியலால் மட்டுமே ஊட்டம் பெற்றனர். அதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தாண்டி அவர்களின் பேனை நகர மறுத்துவிட்டது.

பலஸ்தீனக் கவிதைகளில் என்ன உணர்வுகள், என்ன துயரங்கள் பேசப்பட்டனவோ அவையும் இங்கு அனுபவிக்கப்பட்டன. அதனை அதே தளத்தில் அதே மொழியில் ஈழத்துக் கவிஞர்களும் எழுதத் தொடங்கினர். இந்தக் காலப்பகுதியிலும் ஈழத்தில் இயற்கை இருந்தது, காதல் இருந்தது, தீண்டாமை இருந்தது, பாலுறவு சார்ந்த பிரச்சினைகள், பிணிகள், உள்மன முரண்பாடுகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் என ஒரு கவிஞனுக்கான உந்துதலைத் தரக்கூடிய அனைத்து விடயங்களும் இருந்தன. ஆனால் அவை எதுவும் போதியளவில் கவிஞர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பலஸ்தீனக் கவிதைகள் பொது அவலத்தை தனிமனித அகத்தினூடாகப் பேசியளவுக்கு ஈழத்துக்கவிதைகள் பேசவில்லை. பலஸ்தீனக் கவிதைகளின் அரசியல் தளத்தை மட்டுமே தங்கள் கவிதைகளின் முக்கிய உசாத்துணையாக கொண்டதன் விளைவு அது.

ஈழக்கவிஞர்கள் போரின் பொதுவான துயரங்களைத் தனிமனித அக நெருக்கீடுகளுக்கூடாக மிக மிகக் குறைவாகவும், சமூகத்தின் கூட்டுத் துயரமாகவும், பிரக்ஞையாகவுமே அதிகம் வெளிப்படுத்தினர். தமிழீழ போராட்டம் குறித்து இக்கவிஞர்களில் பலரிடம் எந்தவித மாற்றுப் பார்வைகளோ, சுயவிசாரணைகளோ இருக்கவில்லை. புலிகளின் செயற்பாடுகள் மீது விமர்சனங்களை முன்வைப்பது தற்கொலைக்குச் சமமானதாக இருந்தபோதும் ஒரு சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அத்தகைய மாற்றுக் குரல்களைப் பதிவு செய்திருந்தனர். அந்த மாற்றுக் குரல்கூட முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் வன்முறைகளை விமர்சிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. வேறு களங்களை நோக்கி அவை நகரவில்லை. அதுவும் ஒன்றிரண்டு கவிதைகளுடன் நின்றுவிட்டன.

வ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மாற்றுக்குரல்களும் எழுந்து வந்தன. மற்றப்படி ஏனையவர்கள் புலிகளை புனிதர்களாக மட்டுமே கருதி வழிபட்டு வந்தனர். எஸ்போஸிடம் அத்தகைய வழிபாட்டுக் குணம் இருந்ததாகத் தெரியவில்லை. கருணாகரனிடம் மாற்றுக் கருத்துகள், புரிதல் என்பன இருந்தாலும் அவர் தன் கவிதைகளில் அவற்றைப் பதிவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். புலிகள் குறித்த அச்சத்தினால் அப்படி நிகழ்ந்திருந்தால் புலிகளுக்குப் பின்னும் அவரிடமிருந்து எந்தவித மாற்றுப் பார்வைகளும் வெளிவரவில்லை. வெளிப்படையாக இதனை சொல்லும்போது இந்தக் கவிஞர்கள் என்மீது கோபப்படக்கூடும். ஆனால் ஓர் ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பின் அவர்கள் என் கருத்தைப் பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தமிழீழத்தின் மீதான வேட்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக ஈழக்கவிதைகள் அமைந்து விட்டதனால் அவற்றின் முகமே அரசியல் முகமாக மாறிப் போனது. அரசியல் அவர்களின் கவிதைகளில் ஆழமாக ஊடுறுவி அவற்றின் இலக்கியத் தரத்தை குன்றச் செய்தது. ஒரு நல்ல இலக்கியப் பாரம்பரியமும் கவித்துவ மரபும் உள்ள ஈழத்துக் கவிதைவெளி வெறுமனே அரசியல்மயமாகி சீரழிந்தது. இந்த சீரழிவைப் பல கவிஞர்கள் கூட்டாக, சாவகாசமாகச் செய்து கொண்டிருந்தனர். அது அப்போது அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாகப்பட்டது.

அத்தருணத்தில் அவர்களது கவிதைகள் குறித்து சீரியசான இலக்கிய மதிப்பீடுகள் என்று எதுவுமே வரவில்லை. வெறும் பாராட்டுகளும், புகழுரைகளும் மட்டுமே வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவை கொடுத்த உற்சாகத்தில் கவிதைகள் என்று சொல்லிக்கொண்டு வெறும் செய்திக் குறிப்புகளை மேலிருந்து கீழாக பல ஈழக்கவிஞர்கள் புதிது புதிதாகத் தோன்றி எழுதிக் குவித்துச் சென்றனர். இதனால் ஈழத்துக் கவிதைகள், “செய்யப்பட்ட” கவிதைகளாகவும், “செயற்கைத்தன்மையான” கவிதைகளாகவும் உருமாற்றம் பெற்று வந்தன. ஒரே கவிதையையே திரும்பத் திரும்ப வாசிப்பது போன்ற அருட்டுணர்வுக்கு வாசகன் ஆளானான். கவிதை இலக்கியக் கருவியாகவன்றி படிப்படியாக ஓர் அரசியல் கருவியாக அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.

2

இந்தப் பொதுப்போக்கின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு குறிப்பிடத்தக்களவு இலக்கியத் தரத்துடன் எழுதிய அரசியல் கவிஞர்களாக நான் மேலே பெயர் குறிப்பிட்டுள்ள கவிஞர்களை ஈழ இலக்கியம் உலகுக்களித்தது. சேரனின் கவிதைகளில் சமூக கூட்டுப் பிரக்ஞையைத் தாண்டி தனிமனித அகவுணர்வுகள் ஓரளவு பேசப்பட்டன. எனினும் அதற்குள்ளும் ஒருவித இழப்பும், சமூகக் கூட்டுப் பிரக்ஞையும்தான் உள்ளோடி இருந்தது.

ஆயினும் அவரது ’நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பிலுள்ள கவிதைகள் அதே அரசியலையும், விடுதலைக்கான கூட்டுப் பிரக்ஞையையும் அழகியல் மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளை அதிகம் கொண்டுள்ளன. பிற கவிஞர்களிடமிருந்து அவர் விலகிச்செல்லும் புள்ளிகளும் இந்தத் தொகுப்பு கவிதைகளில் பதிவாகி இருந்தன. அவரது கவிதைகள் அடைந்து வந்த மாற்றங்களை வாசகன் புரிந்துகொள்வதற்கான வரைபடமாக விரிந்து நிற்கும் தொகுப்பு அது.

கவிஞன் என்பவன் யார்? அவன் அரசியல் பிரச்சினையால் மட்டுமே தீண்டப்படுபவனா? அல்லது மக்கள் வாழும் சூழலில் அரசியல்தான் முதன்மைப் பிரச்சினையா? ஈழத்தில் ஒரு தொகை கவிஞர்கள் ஏன் அரசியலை மட்டுமே தம் கவிப்புனைவின் மையஉள்ளீடாக கொண்டார்கள்? இந்தக் கேள்விகள் ஈழத்துக் கவிதைகளை வாசித்த பின் ஒருவருக்கு சாதாரணமாக எழக்கூடியவைதான். அரசியலுக்கு அப்பால் மற்ற அனைத்தின் மீதும் ஈழக்கவிஞர்களால் நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்பு, அலட்சியம் இப்போது அவர்களுக்குள் ஓர் இலக்கியக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அந்த தளத்தில் அவர்களின் கூட்டுப் பங்களிப்பை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் குறைத்து மதிப்பிடுவதோ, இருட்டடிப்புச் செய்வதோ நமது நோக்கமல்ல. அவர்கள் காணத் தவறிய, பேசத் தவறிய பக்கங்களைப் பற்றிப் பேசுவது மட்டுமே இங்கு எனது நோக்கம். மற்றப்படி அவர்கள் பேச வேண்டியதை சிறப்பாகவே பேசி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் தங்களது காலத்து மக்களின் பொதுவான அரசியல் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்கள். அது மிக மிக அவசியமானதுங்கூட. அது மட்டுமே கவிதை என்பதில்தான் நான் முரண்பட்டு விலகி நிற்கிறேன். காலத்தின் அரசியல் நெருக்கீடுகளிலிருந்தும், சூழ்நிலைமைகளிலிருந்துமே கவிஞர்கள்  உருவாகி வரும்போது அவர்கள் காலமும், சூழலும் உருவாக்கிய கவிஞர்களாக மட்டுமே தங்களை நிறுவிக் கொள்கின்றனர். வாழ்க்கை உருவாக்கிய கவிஞர்களாக அவர்கள் தங்களை தங்களது படைப்புகளூடாக முன்வைப்பதில்லை.

சேரன் தன் கவிதை சார்ந்து இரு பரிமாணங்களாகத் தெரிபவர். அவரை காலமும், வாழ்க்கையுமாக சேர்ந்து உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்னும் ஒருசில கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். காலம் மட்டும் உருவாக்கிய கவிஞர்களால் கவிதையின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் நுழைய முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் எல்லாவிதமான சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியாததாகப் போய்விட்டது.

சேரனின் கவியுலகு போராட்ட எழுச்சி மனநிலையை முன்னிறுத்துகிறது. ஆனால் அவரது மொழி தமிழின் கவிதை மரபையும், மொழி அழகியலையும் தனக்குள் வைத்திருக்கிறது. அவரது கவிதைகள் எழுச்சிக் குரலாகவும், காதலைப் பாடுவதாகவும் ஒலிக்கின்றன. அந்த வகையில் அவர் அகத்தையும், புறத்தையும் பாடும் கவிஞராக இருக்கிறார். வாழ்வற்ற வாழ்வைப் பற்றிப் பாடும்போதும், வாழ்வு மீதான எந்தவிதப் பிடிப்புமற்ற மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பாடும்போதும் அவர் கவிதையின் ஓசை நயத்தில் (பிற்பட்ட காலத்தில் குறிப்பாக ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பு கால கவிதைகளில்) அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்.  ஆனால் அதிலும் காதலுக்குள்ளும், வாழ்வின் எல்லாவிதமான துயரங்களுக்குள்ளும் மிக மெளனமாக புரட்சியை உட்புகுத்திவிட முனையும் போக்கு அவரிடம் வெளிப்படுகிறது. சமூக அரசியல் எழுச்சியைச் சுற்றியே அவர் கவிதை மனம் அலைகிறது.

3

சேரனின் அநேகமான கவிதைகள் உயிர் வாழ்வது நிச்சயமற்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காலப்பகுதியிலும், தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தினதும் குரலாக இருப்பவை. இதனால் மக்களின் அரசியல் சார்ந்த பதட்டங்களையும், போராட்டத்துக்கான எழுச்சியையும் கோருபவையாக இருப்பது தவிர்க்க முடியாதது. அவரைப் பொறுத்தவரை உயிர் வாழ்வதே இங்கு ஒரு துடிப்பு.

ஒவ்வோரடியும் தடங்கள் பதிக்கும்

ஒரு வாழ்க்கை நிகழ்வாம்

என்று அவர் சொல்லும்போது இங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. நிச்சயமற்ற வாழ்வின் மீதான கருணையைக் கோரும் அதே கவிதையிலேயே போராட்டத்தின் மீதான நம்பிக்கைத் தொனியும் ஒலிக்கிறது.

காலமெனும் வெப்பக் கதிர்

வீசிச் சூடடிக்க எல்லாத் தடமும் உதிரும்

தனித்தபடி எஞ்சுகிற ஒன்றோ

மீண்டும் தடங்கள் பதிக்கும்

வாழ்வற்ற வாழ்வு மீதான கவனத்தை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதுமாக இரு நிலைகளில் அவரது பயணம் நிகழ்கிறது.

காதலும் காத்திருப்பும்கூட அந்த வாழ்க்கையில் இருந்ததை சேரன் பதிவு செய்கிறார். சேரன் நெருக்கடியான அரசியல் பொது வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கையின் தனியான, சில பிரத்தியேக உணர்வுகள் தனக்குள் முகிழ்த்திருந்ததை வெளிப்படுத்துகிறார். ஈழத்தின் குறிப்பாக வடபுலக் கவிஞர்கள் ஒருசிலரிடம்தான் இந்தப் பண்பைக் காணமுடியும்.

பிரிதல்’  என்ற கவிதை. இக்கவிதையை ஒரு பெண் எழுதியதாக, ஆண் குறித்த ஒரு பெண்ணின் கனவுகளைப் பேசுவதாக, அக்கவிதையின் குரல் பெண்ணுக்குரியதாக நாம் கற்பனை செய்து கொள்ளும்போதே அதன் ஆழ்ந்த உணர்வுத் தளத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. அந்தக் கவிதைக்குள் முகிழ்க்கும் ஒருவித அகத்தனிமையான உணர்வை அதன் பெண் குரலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

சேரன் அப்போதைய வடபுல இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் போர் எப்படி உருச்சிதைத்தது என்பதை அநேகமான கவிதைகளில் சொல்லிவிடுவது கிட்டத்தட்ட அவர் கவிதைகளின் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது. ‘இரு காலைகளும் ஒரு பின்னிரவும் ‘என்ற கவிதை ஒரு இளைய தலைமுறையின் கருகிப்போன வாழ்வையும் கனவுகளையும் பதிவுசெய்கிறது.

எங்கே அவன்? என்று கேட்பார்கள்

கேட்கையில் பிழைபட்ட தமிழ்

நெஞ்சில் நெருட எழுந்து வரும்

இராணுவத்தினர் விசாரிக்கும் விதத்தில் தன் தாய்மொழி தமிழே பிழையாக வெளிப்படும் சம்பவம் ஒரு அற்புதமான கவிதை நிகழ்வாக தோன்றும் அதேநேரம் ஓர் ஆழ்ந்த துக்க உணர்வையும் ஏற்படுத்துகிறது.

4

போராட்ட காலத்தில் அது நிகழ்ந்த மண்ணிலிருந்து எழுதிய பல கவிஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருந்த அல்லது பின்னர் பார்க்கலாம் என தவணை முறையில் ஒத்திப் போடப்படடிருந்த பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் மீதும் சேரன் ஓர் அழுத்தமான பார்வையை முன்வைக்கிறார். ‘மழைக்காலமும் கூலிப்பெண்களும்’, சமாந்தரம் கொள்ளாத உலகங்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும்.

மழைக்காலமும் கூலிப்பெண்களும் கவிதையில்-

வெயிலுக்கு மேனி தந்து

வெங்காயம் கிண்ட வரும்

என் அழகுக் கிராமத்துப் பெண்களது கால்

இனிமேல் வெள்ளத்துள் ஆழும்

விரல்களுக்குச் சேறெடுக்கும்

எப்போதும் போல் இவர்கள்

நாற்று நடுகையிலே

எல்லை வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும்

மீண்டும் இவர்கள் திரும்பி வருகையிலோ

நெற்கதிர்கள் குலை தள்ளும்

நீள் வரம்பு மறைந்து விடும்

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்”.

என எழுதுகிறார்.

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்

இந்த வரிகளில்தான் இந்த கவிதையின் முழுமையும் பொதிந்திருக்கிறது. பெண் ஒடுக்குமுறை பற்றி வெறித்தனமாக முழக்கமிடும் தொனி இக்கவிதைக்குள் இல்லை. தேவைக்கதிகமான வார்த்தை விளையாட்டுகளும் இல்லை. இது கடத்த முனையும் செய்தி ஒர் அதிர்வாக கவிதையின் இறுதி வரிகளில் வந்து நிற்கிறது.

ஒரு கிராமத்துக்கு மின்சாரம் வருகிறது ‘ இலங்கைக் கிராமமொன்றின் ஒரு காலகட்டச் சித்திரத்தை வரைபடமாக காட்டும் கவிதை. புதிதாக மின்சாரம் வரும்போது அந்தக் கிராமத்தில் நிகழும் சிறு சிறு மாற்றங்களை இக்கவிதை முன்வைக்கிறது. கவிதையின் மொழியில் கிராமியம் பொங்கி வழிகிறது.

மழைநாள் காதலைப் பேசும் கவிதை. காதலின் இழப்புணர்வை, மனிதர்களின் பிரிவை ஈரமான சொற்களில் சொல்கிறது இக்கவிதை.

அருகில் நீ.

குடிலுக்குள் நசநசத்த ஈரம்

திரண்டிருந்த விசும்பு மழைக் கறுப்பில்

மின்னல் கோடாய் எழுந்து அலைந்து அழிகிறது

காதலின் பிரிவுணர்வைப் பேசும் இக்கவிதையில் மழையின் இசையும், தனிமையின் தவிப்பும், காதலின் கனத்து வழியும் துயரும் சொற்களில் பிண்ணப்பட்டிருப்பதைக் காணலாம். ஆயினும் இதுபோன்ற கவிதைகளில் கனத்து எழும் துயரம் மனதைக் கவ்வும் விதமாக எழவில்லை. கைக்குள் வந்த கவிதை நெஞ்சுக்குள் வராமல் திரும்புகிறது.

சாதிக்கெதிரான புரட்சிகர மனநிலையை உடையவர் சேரன். அந்த மனநிலை அவரை கவிதையில் கலகம் செய்யத்தூண்டுகிறது.

ஆலயக் கதவுகள்

எவருக்காவது மூடுமேயானால்

கோபுரக் கலசங்கள்

சிதறி நொறுங்குக

இந்தக் கலகக் குரலில் யாழ்ப்பாணத்தை,

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே

என விளிக்கிறார்.

உனது உலகம் மிகவும் சிறியது

என்கிறார்.

இது சமூக மாற்றத்துக்கான ஒரு கவிஞனின் அழைப்பு. சமூகத்தை மூர்க்கமாக தாக்கும் இந்த விபரணங்கள் கவிஞனின் ஏக்கங்கள்.

5

கவிதையை ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் நின்று கொண்டு ஏற்பது அல்லது மறுப்பது ஒரு வேடிக்கையான செயல்பாடாகும். நவீனத்துவ, பின்-நவீனத்துவ கோட்பாடுகளின் எல்லைக்குள் வலிந்து ஒரு கவிதையை அடக்க முடியாது. கவிதைக்குள் எல்லா கோட்பாடுகளும் அடங்கலாம். ஆனால் கோட்பாட்டுக்குள் கவிதை அடங்காது. சேரனின் கவிதைகளுக்கும் ஒரு கோட்பாட்டுத் தளம் இல்லை என்பது புரிகிறது. தமிழின் மரபான கவிதைப் பாங்கும், நவீனத்தன்மையும் கலந்த ஓசைநயத்துடன் கூடிய கவிதைகள் பல அவரால் எழுதப்பட்டுள்ளன. வித்துவச் செருக்கற்ற, கூடுதல் புதிர்த் தன்மையற்ற, தமிழின் எல்லா வாசகனுக்குமானது சேரனின் கவிதைகள். எனினும் சில கவிதைகளில் இதனை மீறவும் செய்திருக்கிறார். சாதாரண வாசகன் அறிவால் கண்டடைய முடியாத புதிர்த்தன்மையான சில வரிகள் அவரது கவிதைகளில் இருக்கின்றன. அவற்றை வாசகன் இதயத்தால் உணர்ந்து கடந்து செல்கிறான். இத்தகைய கவிதைகள் கவிதையை மிகவும் எளிமைப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்தும் போக்குக்கும், சேரனுக்குமிடையில் ஒரு இடைவெளியை பேணிக்கொண்டு வருகின்றன.

அவரது கவிதைகளின் மையம் போராட்ட கால மக்களின் வாழ்க்கைத் துயரும், போராட்ட எழுச்சி மனநிலையும்தான். ஆனாலும் வேறு சில மையமற்ற பக்கங்களும் அவரின் கவிதைகளுக்குள் உள்ளன. ஒரு காலகட்டத்தின் மையமான பிரச்சினைகளை அக்காலக் கவிதைகள் பிரதிபலிப்பது இலக்கியத்தின் பண்புதான். அந்த சூழல் மாறியதும் அந்தக் கவிதையின் முக்கியத்துவமும் குறைந்துசெல்வதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகளை மட்டும்தான் எழுதுவது என்றிருந்தால் சமகாலச் சூழல் பிரதிபலிப்புகளை கவிதையால் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே தான் வாழும் காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் பிரதிபலிக்க வேண்டியது கவிஞனின் முக்கிய பணியாக மாறுகிறது. சேரன் இந்தப் பணியைச் செய்யும் கருவியாகவே கவிதைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.