அகாலத்தில் கரைந்த நிழல் – ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மாமா, இளைய சாச்சாவின் புதிய லுமாலா சைக்கிளையும், பெட்ரோல்மாக்ஸ் லைட்டையும் எடுத்துக் கொண்டு இருள் விலகியிராத அதிகாலை ஒன்றில் மாமியைக் கைவிட்டு விட்டு ஓடிப்போய் ஒரு வாரம் கழிந்து விட்டிருந்தது. மாமா ஓடிப்போன சம்பவம் வீட்டில் மாமியைத் தவிர வேறு யாரையும் பெரிதாக உலுக்கியதாகத் தெரியவில்லை. வாப்படம்மா கொஞ்சம் கடமைக்கு கவலைப்பட்டது போல் தெரிந்தது. இதுதான் நடக்கும் என்று அவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் இருந்தது. வாப்படப்பா வழக்கம் போன்று தனது சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தபடி குர்ஆன் ஓதுவதில் மூழ்கி இருந்தார்.

ஒரு வாரத்துக்குள்ளேயே மாமா ஓடிப்போன சோகம் மெல்ல மெல்ல உருமாறி சாச்சாவின் சைக்கிள் மீதும் பெட்ரோல் மாக்ஸ் மீதும் மய்யங் கொண்டது. அவர் அதையெல்லாம் எடுக்காமல் ஓடிப் போயிருந்தால் பரவாயில்லை என்பதைப் போல் வீட்டின் சூழல் வேகமாக மாறிக்கொண்டு வந்தது. மாமா யாருக்கும் தெரியாமல் ஓடிப்போன நாளிலிருந்து மாமியின் முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்ததைப் பார்த்தேன். தனக்குள்ளேயும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்கு வெளியேயும் அழுது தீர்த்தாள். வீட்டின் உள்ளேயோ அல்லது மலசலகூடத்துக்குள்ளிருந்தோ கதவைப் பூட்டிக்கொண்டு அவள் அழும் சத்தம் வீட்டின் இரைச்சலிலும் என் கூர்மையான காதுகளில் பட்டுத்தெறித்துச் செல்லும். அப்போது அழுகையும் புகை போன்றதுதான் என நினைத்துக் கொள்வேன். உள்ளே இருந்து கொண்டு எப்படி கதவைச் சாத்தினாலும் அது வெளியே கேட்டுவிடும். புகையும் அப்படித்தான். நான் மலசலகூடத்தின் உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு திருட்டுத்தனமாக பீடி அடித்த போது புகை திரள் திரளாக வெளியேறி என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. மாமிதான் எனக்கு அடி கிடைக்காமல் காப்பாற்றிவிட்டாள். வீட்டில் யாரும் அவள் அழுகையை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஓடிப்போன மாமாவை தேடிச் செல்லவும் யாரும் முனையவில்லை. ஒரு நசிபட்ட பித்தளைச் செம்பு காணாமல் போனது போல வீட்டில் மாமியைத் தவிர வேறு யாருக்கும் நோகாத இழப்பாக அது இருந்தது.

பெரியம்மா மாமியைப் பற்றி வாப்படம்மாவிடம் திட்டிக்கொண்டிருந்தாள். வாப்படம்மாவின் மூத்த மருமகள் என்பதால் பெரியம்மா எப்போதும் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடுவாள். அதிலும் மாமியை குற்றம் பிடிப்பதென்றால் அவளுக்குத் தனி விருப்பம் இருந்தது. பெரியம்மா நீண்ட காலமாகவே மாமியை உள்ளூர வெறுத்து வந்தாள். இந்த சம்பவம் மாமியைத் திட்ட அவளுக்கு வாய்ப்பாக ஆகிவிட்டது.

மாமிக்கு இப்படி நடந்தது இது மூன்றாவது முறை. இவரைக் கட்டுவதற்கு முதல் மாமி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தாள். ஆனால் அவளது முதல் திருமணத்தில் மட்டுமே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் இரண்டு வயதில் காய்ச்சல் வந்து இறந்து போனது. மாமியின் முதல் திருமணத்தின் போது நான் குழந்தையாக இருந்தேனாம். அதனால் அந்த திருமணம் என் நினைவில் இல்லை.

எனக்கு எட்டு வயதாக இருந்தபோது மாமி இரண்டாவது முறையாக அவளை விடவும் 15 வருடங்கள் மூத்த கிழத்தோற்றத்திலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அவர் நெட்டைப் பனை மரம் போல் நெடுத்த ஒல்லியான உருவம். எப்போதும் முறிந்து விழலாம் என்ற தோற்றம். நரைத்த ஐதான முடி. முகத்தில் ஆங்காங்கே தாடி மயிர்கள் மலிக்கப்படாமல் இருந்தது. அது அவர் முகத்தை மேலும் அலங்கோலப்படுத்திக் காட்டியது. அவருக்கு 50வயது என்று இளைய சாச்சா கணக்குப் பார்த்துச் சொன்னார். மாமிக்கு அப்போது 35 வயதுதான் ஆகி இருந்தது.

“மறா அவரும் வாழ்றலியா” பெரியம்மா சாச்சாவை முறைத்துக் கொண்டு, இரகசியம் சொல்வது போல் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னாள். மாமி அவரைத் திருமண நாளன்றுதான் முதன் முதலாகப் பார்த்தாள். மாமாவைக் கண்டதும் மாமியின் முகத்தில் ஓர் ஏமாற்றச் சுழிப்பு படர்ந்து மறைந்தது. மாமியின் வெண்மையான முகம் ஆழ்ந்த சோகத்தில் இருண்டு போனது. எனக்கு அவளைப் பார்க்கையில் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்தது. மாமா தன் காவிப் பற்களைக் காட்டி மாமியைப் பார்த்துச் சிரித்தார். அவர் வாய்க்குள் பற்கள் கூட முழுமையாக இல்லை என்பது தெரிந்தது. மாமி அவர் முகத்தைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா அதன் பிறகு சிரித்ததை நான் காணவில்லை. அவரிடமிருந்து சுருட்டு வாடை வந்து கொண்டிருந்தது. அந்த நெடி அவரது பிறப்பிலிருந்தே அவரிலிருந்து வந்து கொண்டிருப்பது போன்ற ஆதிப் பிணைப்போடு வரும் கனத்த வீச்சாக இருந்தது.

“புறக்கும் போதே இவரு சுருட்டோடுதான் புறந்திருப்பார்” என்று சின்னச் சாச்சா மாமாவின் காதில் விழாதளவு தொனியைத் தாழ்த்திக் கொண்டு குறும்பாகச் சொல்லிச் சிரித்தார். பெரியம்மா சாச்சாவை மீண்டும் கடுப்பாகப் பார்த்தாள். மாமி கன்னிகை இல்லைதான் இருந்தாலும் பல்லே இல்லாத கிழவனுக்கு கட்டி வைக்கப்பட வேண்டியவளில்லை என வாப்படம்மாவிடம் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். வாப்படம்மா அவளது கதையை கவனத்தில் எடுக்காமல் வேறு கதைக்கு வேகமாகத் தாவினார். அந்தப் பெண்ணும் அதைப் புரிந்துகொண்டவள் போல் தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துக் கொண்டு இருந்தாள்.

நான் மீண்டும் மாமியையும் மாமாவையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்றொரு வெறி மாமி மீதான பச்சாதாபத்தால் எனக்குள் தோன்றி மறைந்தது. அப்போது மாமி என்னை அழைத்து அவள் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விரல்களில் மருதோன்றி சிவந்து கருத்திருந்தது. தங்கக் காப்புகள் அவளது சிவந்த கைகளின் அழகை மெருகூட்டிக் குலுங்கின. வெளிநாட்டு வாசனை அவள் உடலின் முழுப்பாகத்திலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமா சேர்ட்டின் இரண்டு மேல் பொத்தான்களைத் திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு ஏங்கினார். சேர்ட் காலருக்குள் நீல நிற கைக்குட்டை ஒன்றை மடித்து வைத்திருந்தார். அவருக்கு காற்று வீசும்படி பெரியம்மா என்னிடம் விசிறி ஒன்றைத் தந்து விட்டுப் போனார். நான் சடசடவென்று வீசத் தொடங்கினேன். அந்தக் காற்று அவரிடமிருந்து வந்த சுருட்டு நெடியை வேறு திசை நோக்கி மாற்றிக் கொண்டு சென்றது. பெரியம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு கிழவனை மாமி திருமணம் முடிக்கப் போவதையிட்டு பெரியம்மாவின் முகத்தில் எந்தக் கவலையும் தெரியவில்லை. மாறாக அன்றைய நாள் மிக மகிழ்ச்சியான நாள் என்பதைப் போல அவளது முகமும் உடலும் பூரித்திருந்தன.

மாமி வெளிநாடு சென்றுதான் அவள் வாழப் போகும் அந்த வீட்டைக் கட்டினாள். அதுவும் அரையும் குறையுமாகத்தான் இருந்தது. அவள் அனுப்பிய பணம் முழுமையாக அவளது வீட்டைக் கட்ட செலவு செய்யப்படவில்லை என்ற குறை அவளிடம் இருந்தது. அவள் கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்கள் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்தாள்.  அவளது சகோதரர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கும் அவளது பணம் கரைக்கப்பட்டது. எஞ்சிய பணத்தில்தான் அரைகுறையில் அவளுக்கொரு வீடு.

இந்த இரண்டாம் கலியாணம் முடிந்த மறுநாள் மாமி எல்லாவற்றையும் வாப்படம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். வாப்படம்மா அவளை ஏசுவது போலவும், சமாதானம் செய்வது போலவும் மாறி மாறி பாவனை செய்து கொண்டிருந்தாள். மாமி கேவிக் கேவி அழுத போது அவளது வெண்மையான முகம் சிவந்து வீங்கிக் கொண்டு வந்தது. என்னையறியாமல் நானும் அழுது கொண்டு நின்றிருந்தது வாப்படம்மா என்னை அதட்டிய போது தான் எனக்குப் புரிய வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து மாமி அந்த சுருட்டுக் கிழவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்றாள்.

2

சென்ற கிழமை ஓடிச்சென்ற மாமா மூன்று மாதங்கள்தான் மாமியோடு வாழ்ந்திருப்பார். அவரது சொந்த ஊர் குருணாகலை என்று மாமி சொன்ன ஞாபகம். எங்கள் ஊரில் பக்கோடா கலிலின் மலிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைசெய்து கொண்டிருந்தார். கடைக்கார முதலாளியின் சிபாரிசின் பேரில் மாமிக்கு அவர் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். மாமி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்திருந்ததால் மாமாவைப் பற்றி பெரிதாக யாரும் விசாரிக்கவில்லை. அவர் அவரது ஊரில் திருமணம் முடித்திருந்தாரா இல்லையா விவாகரத்துப் பெற்றவரா என்றெல்லாம் விசாரித்துப் பார்க்காமலே மாமி அவரது கழுத்தில் கட்டப்பட்டாள். திருமண நாளன்றும் வாப்படப்பா வழக்கம் போன்று அவரது சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

ஓடிச் சென்ற மாமா அநேகமாக இப்போது தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம். அல்லது தலைநகரில் வழக்கம் போல் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நகரத்தின் சந்தடிமிக்க பிஸியான வர்த்தகத்தில் மூழ்கி ஒரே நாளில் மாமியை நிரந்தரமாக மறந்தும் போயிருக்கலாம். அல்லது ஊரில் அவருக்கு என்னைப் போல் பிள்ளைகள் இருக்கலாம். மீண்டும் ஒரு தந்தையாக அவர்களை அவர் சென்றடைந்திருக்கலாம்.

இனி மாமியை என்ன செய்வது என்ற தீர்மானம் எடுக்கும் கூட்டம்தான் வாப்படம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடந்து கொண்டிருந்தது. வாப்படம்மாவும் வாப்படப்பாவும் இப்போது தங்கி இருக்கும் வீடு மாமியின் தங்கையான என் சின்ன மாமியின் வீடு. அவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக இருப்பதால் அவரது வீட்டில்தான் அவர்கள் தங்கி இருப்பார்கள். அதனால் மாமியின் அரைகுறை வீட்டில் மாமியைத் தனியே வைக்க முடியாது. அதனால் மாமியைத் திரும்பவும் வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான் சரி என பெரியம்மா பிடிவாதமாக இருந்தாள். மாமி நீர்கோர்த்த கண்களோடும், அழுது புடைத்த முகத்தோடும் மௌனமாக இருந்தாள். ஆனாலும் பெரியம்மாவின் தீர்மானத்தை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவள் முகத்தில் சூசகமாகத் தெரிந்தது.

“இனி இவளுக்கு கலியாணமே தேவல்ல. புடிச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்க. திரும்பயும் போய் வரட்டும்”

குடும்பம் முழுமையாக பெரியம்மாவை ஆமோதிப்பது போல் அவளின் முரட்டுத் தனமான குரலில் திரண்டு எழுந்த பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மாமியின் விருப்பு வெறுப்புகள் கூட கவனத்திற்கொள்ளப்படாத ஓர் இறுக்கமான சூழல் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. மாமியே கூட எதுவும் பேசாமல் சிறிது நேரம் ஆழமான மெளனத்தில் உறைந்து போயிருந்தாள்.

“தனிய இருந்து என்ன செய்யப் போறாய்? வெளிநாட்டுக்குப் போனா கொஞ்சங் காசச் சம்பாதிச்சிட்டு வரலாம்.” பெரியம்மா திரும்பத் திரும்ப அதே பல்லவியையே பாடினாள்.

“இல்ல, நான் இனி வெளிநாட்டுக்குப் போமாட்டன். இவ்வளவு காலமும் நான் கஷ்டப்பட்டு அனுப்புன காசிக்கு என்ன நடந்திருக்கு. நான் இனிப் போரல்ல..”

விம்மலுடன் மாமியின் வாய் திறந்தது.

பெரியம்மா விடாமல் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தாள். மாமி என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென்று வெறிகொண்டவள் போல் கத்தினாள். பெரியம்மா சில நொடிகள் மிரண்டு எழுந்துவிட்டாள்.

பின்னர் ஒவ்வொருவராக மௌனமாகக் கலைந்தனர். வாப்படப்பா சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆனில் மூழ்கி இருந்தார். அவருக்கு சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் நிஜ உலகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர் போல் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். மாமி அவரை சில நொடிகள் வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் கலைந்துவிட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் மாமியின் காதருகே சென்று மெல்லக் கேட்டேன்

”மாமி நாம ரெண்டு பேரும் மாமாவத் தேடிப் போவமா?” அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. திடீரென்று உடைந்து அழத்தொடங்கினாள். முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டு சுவரோடு ஒட்டித் தரையில் குந்திக் கொண்டு. நான் அதனை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதால் யாரும் காணு முன்னமே அங்கிருந்து தலைதெறிக்க ஓடினேன்.

3

மாமி சில நாட்களாக யாருடனும் எதுவும் பேசாமல் மௌனமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு வரிகளைக்கூட இப்போது அவளிடமிருந்து கேட்க முடியவில்லை. எனினும் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடாமலும் வாழ்வதற்கான உத்திகளை மனதுக்குள் வரைந்துகொண்டும் முன்செல்லும் முடிவை நோக்கி அவள் சுயமாக நகர்ந்து கொண்டிருந்தாள். அந்த முடிவு ஓர் ஆத்ம விசையுடன் அவளைத் தாக்கியது. சுவரில் சாய்ந்து கொண்டு தரையில் குந்தியிருந்தவள் திடீரென்று தீர்மானத்துக்கு வந்தவள் போல் உடலை நிமிர்த்தி எழுந்தாள். பெரிய அலையொன்று முறுகித் திமிறி உயர்ந்து எழுவதைப் போல அவள் எழுந்தாள். அப்போது அவள் கண்களில் உலக மனிதர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் திரண்டிருந்ததைப் பார்த்தேன்.

யாரும் நுழைய முடியாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஒரு வெட்டவெளி இருப்பதைப் போல வாழ்வதற்கான ஒருவெளியை அவள் கண்டடைந்தாள். அந்த வெளியில் ஒரு பயணி தங்கிச் செல்வது போல் தன்னை சுதாரித்துக் கொண்டு வாழ்க்கையை வடிவமைத்தாள். மாமா அவள் மனதிலிருந்தும் தேய்ந்து அழிந்து அரூபமாகக் கரைந்து விட்டிருந்தார். இருளில் கலந்து விட்ட நிழல் போல் அவர் உருவம் அவளிடமிருந்து அடையாளம் காண முடியாத மனத் தொலைவுக்குச் சென்றுவிட்டது.

“நான் வீட்ட போகப் போறன். தனியா வாழப் போறன். இனி எனக்கு கலியாணமெல்லாம் வாணா.” அவள் வாப்படம்மாவிடம் உறுதியாகச் சொன்னாள்.

“தனியா ஒரு பொம்புள நீ எப்புடி இருப்பாய்? உண்ட வீடும் அறுக்கல்லாம அரையும் குறையுமாக் கிடக்கு” வாப்படம்மா சந்தேகமாகக் கேட்டாள்.

“ராவெய்ல காவலுக்கு இவன் வருவான் எனடா?” என என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள். என்னை முதன் முதலாக ஒரு ஆண் மகனாக அவள் ஏற்றுக் கொண்டதில் எனக்குள் பிரளயமொன்று பீறிட்டது. இனம் புரியாத ஒரு சக்தி என் உடலெங்கும் பரவியது போல் உணர்ந்தேன். ஓர் ஆணுக்கான தகுதியை நான் அடைந்துவிட்டதாக அவள் நினைத்துவிட்டாள். அநிச்சையாக என் தலை அசைந்தது.

மாமா ஓடிச் சென்ற அந்த நாளுக்குப்பின் மீண்டும் மாமி தன் அரைகுறை வீட்டுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு சென்றாள். மாமி தன் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு தன் சொந்தக் கால்களையும், கைகளையும் மட்டுமே நம்பி இறங்கினாள்.  சிறுவர்கள், பெண்களுக்கான ஆடை வியாபாரம் ஒன்றைத் தொடங்கினாள். வீடு வீடாகச் சென்று விற்பது என்றொரு புதிய வியாபார முறையாக அது இருந்தது. ஊரில் அந்த வியாபார முறையை தொடக்கி வைத்த முன்னோடிகளுள் ஒருத்தியாக அவள் இருந்தாள்.

சனியும், ஞாயிறும்தான் நான் மாமியின் வியாபார உதவியாளனாக இருந்தேன். மற்ற நாட்கள் பள்ளிக்கூடம் போய் விடுவேன். ஆனாலும் எனக்கு பள்ளிக்கூடம் போவதை விடவும் மாமியின் வியாபார உதவியாளனாக இருப்பதே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் மாமி அதை விரும்பமாட்டாள். பள்ளிக்குப் போ என்று துரத்தி விடுவாள். எனினும் அவளால் ஒருபோதுமே புரிந்துகொள்ளப்படாமல், வெற்றிகொள்ளப்படாமல் போன ஆண்களின் உலகம் அவளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது.

ஒவ்வொரு நாளும் மாமி தெருக்களில் வைத்து சீண்டப்பட்டாள். அசிங்கமான வார்த்தைகளால் ஆழமான மனக்காயங்களால் அவளது வாழ்வு புன்னாகியது. முடிந்தளவு அவள் அங்கேயே வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் எதிர்வினையாற்றிக் கொண்டே வருவாள். ஒரு முள்ளுத் துண்டைக் கவ்வுவதற்காக காத்துக்கிடக்கும் நாய்கள் போல் வெளியில் மனிதர்கள் அவளுக்காக காத்துக் கிடந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான ஒரு சாதாரண விளையாட்டுப் போல் எனக்கு அது தெரிந்தது. உண்மையில் அது பெண்ணின் மீதான இளக்காரமான பார்வையிலிருந்தும் ஆண்களின் காமத்திலிருந்தும் முளைத்த முரண்பாட்டின் விளைவாக அது இருந்தது. அவளது அன்றாட அனுபவங்கள் அழிக்க முடியாத தழும்புகளாக மனதில் பதிந்து அவளை கீறிக் கிழித்தன.

அன்று பக்கத்து ஊருக்குச் சென்று விற்பனைக்காக ஆடைகள் வாங்கி வருவதற்காக பஸ்ஹோல்ட்டில் நின்று கொண்டிருந்தோம். வேறு யாரும் இல்லை. மாமியின் கையில் அவளது வழமையான சற்று ஊதிப் பெருத்த பயணப்பை இருந்தது. அந்தப் பைக்குள் அவள் அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்தையும் அடக்கி விடுவாள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் மிதிசைக்கிளில் வந்து கொண்டிருந்தான். மாமியின் அருகே வந்ததும் மிகத் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்ட மாமிக்கு மட்டுமே கேட்கக்கூடிய அடக்கமான தொனியில்,

“யாரக் காத்துக்கிட்டு நிற்காய்..? என்னோட வாரியா..” என்றான் மிக அலட்சியமாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

மாமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகம் தணலாக சிவந்து வந்தது. செருப்பைக் கழற்றுவது போல் குனிந்து கொண்டே அவன் மீது வசவுகளை உமிழ்ந்தாள். சைக்கிளை நிறுத்தாமலே அவன் தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருந்தான். எந்தக் குற்றவுணர்ச்சியும் அவன் முகத்தில் இல்லை. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி விட்டோம் என்ற பெருமிதம்தான் அவன் முகத்தில் பொங்கியது போல் தெரிந்தது. அவன் எதுவும் நடக்காதது போல் அநாயாசமாக சைக்கிளை மிதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். யாரும் மாமியிடம் எதுவும் கேட்கவில்லை. அவனையும் யாரும் எதுவும் செய்யவுமில்லை. சுரணையற்ற மனிதர்களைப் போல் பலரும் அலட்சியமாக எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். நான் இதை எல்லாம் பார்த்து இரசிக்கும் ஒரு பருவத்திலேயே இருந்தேன்.

மாமி ஆண்களின் காமச்சேட்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு புதிய உத்திகளைக் கைக்கொள்ளத் தொடங்கினாள். அவள் தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டாள். மாமியின் உடலில் முதுமையின் சுவடுகள் எதுவும் இல்லை. ஆனாலும் முதுமையின் சாயலைத் திட்டமிட்டே தன் உடலில் படியவிட்டாள்.  அவளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத மட்கிப் பொலிவிழந்த நிறத்தில் மிகப் பழைய சேலையும் பர்தாவும் அணியத் தொடங்கினாள். ஒரே ஆடையை குறைந்தது மூன்று நாட்களுக்காவது அணிந்துகொள்வாள். கோழியின் சடையிலிருந்து வரும் ஒருவித நெடி ஆடையிலிருந்து வந்தது. முன்பு அவளிடமிருந்து வரும் வெளிநாட்டு வாசனையை முகர்வதற்காக அவள் பக்கத்தில் நான் மூக்கை கூர்மையாக்கிக் கொண்டு குந்தி இருப்பேன். அவள் முகத்திலிருந்த இலட்சணத்தை சிரமப்பட்டு மறைத்தாள். புன்னகையை இழந்தாள். மகிழ்ச்சியான மிகவும் இனிமையான நளிமனமிக்க அவளது உடல் முறுகி இறுகியது.  காற்றில் கரைந்த நிழல் போல் அவள் தன் உருவைக் கரைத்துக் கொண்டு வந்தாள்.

அவள் தன்னோடு எப்போதும் தூக்கிச் செல்லும் பையின் அளவும் மாறியது. சற்றுப் பெரிதாக ஊதிப் பெருத்தது. அவளது மட்கிப் போன ஆடைகளுக்குள்ளும், ஊதிப் பெருத்த பைக்குள்ளும் வேண்டுமென்றே அவளது அழகு அவளால் மறைக்கப்பட்டது. மேகங்கள் நிலவை மூடிக் கொண்டதைப் போல. ஆனால் அதன் உள்ளே இருக்கும் அழகை நான் அறிவேன். மேகம் விலகியதும் பூரண சந்திரன் ஜொலிப்பதைப் போல வியாபாரம் முடித்து வீடு திரும்பியதும் அவள் தன் வேஷத்தைக் கலைத்துச் சிரிப்பாள். அவள் அழகு ததும்பி வழிந்து கொண்டிருக்கும். அவளது சிவந்த உடல் அயன் பண்ணப்பட்ட ஆடை போல் நேர்த்தியாய் மிளிரும்.

அவளது உத்தி அவளுக்கு கொஞ்சம் வெற்றியளித்தது. வீதியில் அவளுக்குத் தொல்லைகள் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வந்தன. ஆனாலும் அவளது துரதிஸ்டம் மொத்தமும் ஒரு ஆணாக மாறி வீடு தேடி வரத்தொடங்கியது.

4

மெலிதாக இருள் கவியத் தொடங்கும் போதே அவர் வந்துவிடுவார். மாமி அவரை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டு கதவருகில் அசையாது நின்றிருப்பாள். ஆனால் அவர் வரும் ஒவ்வொரு முறையும் அவரது முகத்தில் பெரிய மகிழ்ச்சி வழிந்தோடிக்கொண்டிருக்கும். அந்தத் தருணம் மாமியின் முகம் அடையும் உக்கிரத்துக்கு முற்றிலும் மாற்றானது அவர் முகம். நான் முற்றத்தில் நிற்கும் ஜே மரத்தின் கீழ் பாய் போட்டு படித்துக் கொண்டிருப்பேன். நன்றாக இருள் கவிழ்ந்து புத்தகத்திலுள்ள எழுத்துகள் உருத் தெரியாமல் மறையும் வரை நான் படித்துக் கொண்டிருப்பேன்.

சில நாட்களாக அவர் தொடர்ந்து வரத் தொடங்கி இருந்தார். அவர் இருள் செறிவாகும் நேரத்தில்தான் வருவது வழக்கம். அப்போது கூட என் சிறிய மண்டைக்கு அவர் பற்றி வேறுவிதமான சித்திரம் உருவாகவில்லை. அவர் வருகையை பற்றி எனக்குள் எந்த சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. நாளடைவில் மாமி அவர் வருகையை விரும்பவில்லை என்பதை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் அப்போதுதான் சைக்கிள் செலுத்தக் கற்றுக் கொண்ட புதுப் பழக்கம். அதனால் சைக்கிள் ஓடும் ஆசை உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் வந்ததும் சிலநாட்களில் எனக்கு அவரது புதிய லுமாலா சைக்கிளை ஓட்டிப் பார்க்கத் தந்துவிடுவார். நான் ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு வரை சென்று விடுவேன். அதுவரை அவர் மாமியோடு பேசிக்கொண்டிருப்பார்.

அவர் எங்களுக்கு தூரத்து உறவினராக இருந்தார். ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். இராணுவத்தில் லான்ஸ் கோப்ரலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். தலைமுடியை ஒருபக்கமாகச் சரித்து மண்டையோடு ஒட்டி வைத்ததைப் போல் நேர்த்தியாகச் சீவி இருப்பார். அவர் தலைகூட எப்போதும் ஒரு பக்கம் கெளிந்தே இருக்கும். அவர் நடக்கும் போது தலை மேலும் முன்னோக்கி சரிந்து விழுந்து விடுபரைப் போலவே நடப்பார். அது இராணுவப் பயிற்சியிலோ அல்லது யுத்தத்திலோ அவர் உடலில் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என அப்போது எண்ணிக் கொள்வேன். ஆனால் அவரது கெளிந்த தலையும் கெளிந்த நடையும் என்னை வசீகரித்திருந்தன. கையிலோ முகத்திலோ ரோமங்கள் எதுவும் இல்லை. எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பு எப்போதும் அவர் உடலில் இருந்துகொண்டே இருக்கும். மணிக்கட்டு வரை வழுகிக் கிடக்கும் தளர்வான கோல்ட் நிற வொட்ச் ஒன்றை கட்டியிருப்பார். அதன் மீதும் ஒரு அசட்டுக் கவர்ச்சி எனக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக அதே நிறத்திலேயே அரைக் கைச் சட்டை ஒன்றை அணிந்திருப்பார். கருப்புக் கால்சட்டையைத் தவிர அவர் வேறு நிற கால்சட்டைகள் அணிந்து வந்ததைக் காணவில்லை. அவரது உடலைப் போன்றே ஒரு கண்ணும் மிகப் பளபளப்பாக இருந்தது. பிறகு நன்றாக உற்றுப் பார்த்த போதுதான் அது பொய்க்கண் எனத் தெரிய வந்தது. போர் அவரில் ஏற்படுத்திய தழும்பு அது.

அவராகவே வீட்டுக்குள் வந்து நாட்காலியில் உட்கார்ந்து கொண்டு மணித்தியாலக் கணக்கில் மாமியுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். மாமி சுவரில் சாய்ந்து தரையில் குந்திக் கொண்டு அலட்சியமாக அவரது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பாள். “ம்..ஆ..” என்பதைத் தவிர வேறு எதிர்வினைகள் அவளிடமிருந்து வருவதில்லை. அதுவும் சுரத்தையில்லாமல் ஆழத்திலிருந்து வரும் குரல்போல மங்கியே கேட்கும்.

அவள் முகத்தில் வெறுப்பும் கோபமும் படர்ந்து வரும். அவளது அழகிய சிவந்த முகத்தில் ஒரு பெரிய மருப் போல் அந்த உணர்ச்சி வெளியாகி அவள் முகம் இறுகும். கண்களின் வளைவான இடுக்குகளில் நீர் கோர்த்து மின்விளக்கொளியில் பளபளப்பது தெரியும். சற்றைக்கெல்லாம் உடைந்து விடுபவளைப் போல் தெரிந்தாலும் அந்த கொந்தளிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு “ம்ம்” என்ற ஒலியை தொடர்ந்தும் எழுப்பிக் கொண்டிருப்பாள். அவர் அதைக் கண்டு கொள்ளாமலே மாமியை எதையோ நோக்கி கதையால் அழைத்துச் செல்லும் உறுதியான தீர்மானத்தோடு இருப்பார். அப்போது அவர் தலைகுனிந்திருக்கும். கைகளை சடசடவென ஆட்டியபடி இருப்பார். அவரது ரிஸ்ட் வொட்ச் கலகலலென ஓசை எழுப்பியபடி மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். நான் மறு மூலையில் குந்தி இருந்து கொண்டு மாமியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போது மாமிக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. வீதியைச் சமாளிக்கத் தெரிந்த அவளுக்கு வீட்டைச் சமாளிப்பதும் தெரியாமலிருக்கப் போவதில்லை. கோப்ரல் தொடர்ந்தும் வரத்தொடங்கிவிட்டார். மாமிக்கு கொஞ்சமும் பிடிக்காத அருவருப்பான ஒரு மனிதனாக அவர் மாறினார்.

மாமியின் போக்கில் திடீரென்று சில மாறுதல்கள் நிகழத் தொடங்கின. திடீரென்று விசித்திரமாகப் பேசத் தொடங்கினாள். நீண்ட நேரமாகத் தொழுதாள். சில நாட்களில் நேரங்கெட்டும் தொழுதாள். நீண்ட பிரார்த்தனைகள். அது அவள் ஓதுவதைப் போலவே இல்லை. அவளது குரலிலிருந்த இனிமை மெல்ல மெல்லக் கரைந்து யாருடையதைப் போலவோ ஆனது. கரடுமுரடான ஒரு ஆணிண் குரல் போன்று அவள் சில இரவுகளில் அரற்றத் தொடங்கினாள். அவளிடமிருந்த நளினம் முழுமையாகவே இல்லாமல் போனது. சூரியன் மறைந்ததும் இருள் செறிவதைப் போல அவள் முகம் பொலிவிழந்து இருண்டது. வீதியில் பலருக்கும் அவளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அவளும் யாருடனும் பேசிக் கொள்வதையும் தவிர்த்தாள். இப்போது பெரியம்மாவால் கூட அவளை இலகுவாக அடையாளம் காண முடியாது போயிற்று. வீட்டைக்கூட்டிப் பெருக்கும் போதும் ஏதேதோ பேசினாள். முன்பென்றால் அவள் வாசல் கூட்டும் போது வீட்டு வேலைகள் செய்யும் போது யாரும் கதைத்தாலும் கதைக்க மாட்டாள். இப்போது அதன் மறுபிம்பமாகத் தெரிந்தாள்.

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது “அடிநடைக்குக் கூட்டவா, திண்ணைக்குக் கூட்டவா” என்று தும்புத் தடியை விரலிடுக்கில் வைத்து கிறுக்கிக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது கோரமான மொழியில் ஓதுகிறாள். தனியே கோரமாகச் சிரிக்கிறாள்.

நான் “மாமிக்கு என்ன?” என்றேன் தயங்கிய படி.

“எனக்கிட்ட ஜின் இருக்கு” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் கண்களில் தைரியத்தையும், முகத்தில் பெருமிதத்தையும் கண்டேன்.

“அது என்ன செய்யும்?” நான் கேட்டேன்.

“அது ஆண்களைக் கொல்லும்” அவள் சொல்லும் போது அவள் உடல் முறுகி ஏறி இறங்கியது.

“என்னையும் கொல்லுமா?” என் குரல் பயத்தில் இழுத்து இரைந்தது.

“இல்ல, அது கெட்ட ஆண்களத்தான் கொல்லும். நீ சின்னப் பையன்” என்றாள். என் முகத்தில் படர்ந்த அச்சம் அவளுக்குள் ஒரு பரவசத்தைத் தூண்டியது. என் முகத்தில் அவள் அப்போது கண்டது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஆண்களினதும் பயத்தை.

அன்று இரவும் கோப்ரல் வந்திருந்தார். நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டே இருந்தார். என்னிடம் சைக்கிளைத் தந்து வெளியே தூரத்துக்குப் போய்விட்டு வரும்படி சொன்னார். மாமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“அவன் ராவெய்ல வெளிய போமாட்டான்” என்றாள். மாமி அப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஏமாற்றம் படிந்தது. அவரது எண்ணங்களுக்கு மாமியிடம் இடம் இல்லை என்பதை புரிந்தும் புரியாதவர் போல், விட்டுக் கொடுக்க முடியாதவர் போல், அமைதியானார். இச்சையைத் தணித்துக் கொள்ளும் வேட்கையின் உந்துதலில் அவர் உடல் முறுகிக் கிறங்கியது. மாமியின் உடல் மீதான அவரது வேட்கை இரவுப் பொழுதிலும் அனல் போல் அவர் முகத்தில் தகித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு ஆற்றாமையுடன் அங்கிருந்து போனார். நான் என் அறையில் தூங்கிப் போய்விட்டேன்.

நள்ளிரவு நேரம். திடீரென்று கதவைத் தட்டும் ஒலி மாமியை எழுப்பியது. வந்திருப்பது அவர்தான். மாமி கதவைத் திறக்க மறுத்தாள். அவர் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுச் சென்றிருப்பது போல் பாவனை செய்து கொண்டு உள்ளே வந்துவிட்டார். சிம்னி விளக்கிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்த மங்கல் ஒளியிலும் மாமி பிரகாசமாகத் தெரிந்தாள். களைந்திருந்த அவள் ஆடைகள் அவள் அழகை பகிரங்கமாகக் காட்டின. கோப்ரல் அவள் அருகே ஒரு கரிய மரம் போல் நின்றிருந்தார். அவளைத் தீண்டும் வேட்கை அவரை சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்திருந்தது.

“ராவெய்க்கு மட்டும் நான் இங்க தங்கிக்கிறன்” என்று அவர் சற்று அதட்டலான தொனியில் சொல்லிக் கொண்டே முன்னோக்கி வந்தார். மங்கல் வெளிச்சத்தில் காமம் வழியும் அவர் முகம் இறுக்கமாக இருந்தது. மாமியின் கையை அவர் சட்டெனப் பற்றிக் கொண்டார். மாமி வேகமாக உதறிப் பின்னகர்ந்தாள். கோப்ரல் ஒரு கணம் தடுமாறி பின் சுதாரித்து திடமானார். மாமியை மீண்டும் இறுக்கியணைக்க அவர் கைகள் மேலுயர்ந்து நீண்டன.

மாமியின் ஜின் விசுவரூபமெடுத்தது. சாந்த சொரூபியாய் இருந்தவள் திடீரென்று உக்கிர சொரூபியாய் மாறினாள். உண்மையான ஜின்னே ஒரு பெண் வடிவில் வந்துவிட்டதைப் போல் மாமியின் உருவும், குரலும் மாறின. யாரும் அவளிடமிருந்து அதுவரை கேட்டிராத தொனியில் அரற்றினாள்.

அவள் ஒரு பெண்ணே இல்லை என்பதைப் போல் தலையை விரித்துப் போட்டபடி கையில் உலோகப் புடி போட்ட டோர்ச் லைட்டை வேகமாக அசைத்துக் கொண்டு நின்றாள். அவள் உடல் ஆடிக் கொண்டிருந்தது. கோப்ரல் திணறி மேலும் மெல்ல மெல்லப் பின்வாங்கி கதவுப் பக்கமாக ஒதுங்கினார்.

குளிரில் நடுங்கும் குரங்கு போல் என் உடல் கட்டுப்பாட்டை மீறி அதிர்வதை உணர்ந்தேன். அவளைத் தொடர்ந்தும் பார்க்க முடியாது பயத்தில் மூத்திரம் போகும் உணர்வு சில்லிட்டது. அரபு மொழியில் மாமியின் ஜின் பேசியது. அதுவரை நாங்கள் கேட்டிராத கடுமையான தொனியில் அது பேசியது. அந்தக் குரலில் இருந்த கோரமும், மாமியின் உருவில் தெரிந்த குரூரமும் கோப்ரலை பின்வாங்கச் செய்தன. கோப்ரல் கதவைத் திறந்து தானாகவே வெளியேறி ஒரு திருட்டுப் பூனை பாய்ந்து ஓடுவதைப் போல் ஓடி இருளில் மறைந்தார்.

மாமிக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. “ம்ஹ்..ம்ம்ஹ்“ என இடையிடையே முணகலும் அரபும் கலந்த ஒரு பாஷையில் அவள் இடையறாது ஓதிக் கொண்டே இருந்தாள். மாமி கதவைச் சாத்தி விட்டு திண்ணையில் தொழுகைப் பாயை விரித்தாள். அதே முணகலுடன் அவள் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. தொழுகைப் பாயில் கால் மடித்து உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னுமாக அவள் உடல் அசைந்து கொண்டிருந்தது. ஓங்காரமாக ஓதத் தொடங்கினாள். மந்திரம் போல் திரும்பத் திரும்ப ஒரே வசனங்களையே ஓதினாள். கையிலிருந்த தஸ்பீஹ் மணிக் கோர்வை விரல்களுக்குள் சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. படுக்கையை விட்டும் எழாமலே மருட்சியான கண்களால் அவளைப் பாரத்துக் கொண்டு பாயில் கிடந்தேன். மாமியின் ஜின்னுக்கு ஆண்களைப் பிடிக்காது என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் அதுக்குப் பிடிக்காதவனாக ஆகிவிட்டேனோ? என்ற அச்சம் தலைதூக்கவே மறு பக்கமாக திரும்பிப்படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் மாமி ஓங்காரமாக உடைந்து அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகை அவளது சொந்தக் குரலில் அந்த அறை எங்கும் நிறைந்து கொண்டிருந்தது.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.