கவிதை

உலர்ந்துருகும் வேனில்

சோழகக்கொண்டல்

இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்குகியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.

ஏதுமற்று

சரவணன் அபி

மத்திய ஜாவாவின்
யோக்யகர்த்தா நகரில்
விரைந்து சாயும்
மழை அந்திகளின்
முன்மாலைப் பொழுது

தொலைவில் எரிந்தடங்கும்
ஒளியின் முன்
விண்ணைத் தீண்டக் கிளம்பும்
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்
பிரம்பனான் கோவிற் சிகரங்களை
நோக்கி
மது அருந்திக் கொண்டிருக்கிறேன்

கருமையும் அடர்த்தியும்
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே
தெருவின் இரைச்சலைப் பின்விட்டு
விடுதியின் சாளரத்தில்
தனித்து அமர்ந்திருக்கும்
என்னெதிரில் அமர்கிறாள் அவள்

சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்
உதிர்க்கும் பறவைபோல்
நீவிக்கொள்கிறாள்

இந்தியனா என்கிறாள்
எனக்குத் தெரியும்
இதையும் இதற்கடுத்த
எந்த இரு கேள்விகளையும்
நான் எதிர்பார்க்கலாமென

ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு
பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா
என்று வினவுகிறாள்

மழையின் ஓசை
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது

பதிலாக அவள் அருந்த
என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்

காதல்

மஜீஸ்

மழை நாளின் கொடுங் காற்று போல
நெடிய மௌனமொன்றை
விடுவித்த
முதற் சொல் போல
இடைவெளிகள் ஆக்கிரமித்த
நெருக்கத்தின் ஞாபகங்கள் போல
இதில்
எது போலவும் அல்ல
அது

தொன்நூறு நாட்கள் தாண்டியும்
குளிக்காமலும்
இடது காலில் மட்டும்
வலக்கால் செருப்போடும்
சட்டைக்கு மேல் சட்டை போட்டு
எங்கள் சந்தையில் அலையும்
ஒரே நாளில் பைத்தியங்களான
இரண்டு பைத்தியக்காரர்கள் போலவே
அது

கனா ஒன்று

ஸ்ரீதர் நாராயணன்

fluffy_cat
மென்மயிர் சுருள் தோலென
ஓரத்தில் பூனையெனக் கிடக்கிறது.

வாஞ்சையுடன் எடுத்து
கதகதப்பு கொடுத்தபடி
தடவிக் கொஞ்சுகிறேன்..

மின்கண்கள் சுடர்விட
ஒற்றைக் காதை
தூக்கி உற்றுப் பார்க்கிறது.

வருடிக் கொடுக்க கொடுக்க
வளர்ந்து பெருகி
கைகளை நிறைக்கிறது.

பரிணாமப் பாய்ச்சலுக்கான
தழலை தலையில் தாங்கியபடி
செருக்குடன் நடந்து செல்கிறது
புலி ஒன்று.

மூங்கில் கூத்து மேதாவி

ஸ்ரீதர் நாராயணன் 

bamboo-genius

முச்சந்தியில் நட்டு வைத்த
மூங்கில்கள் இடையே
கயிற்றில் நடந்து
வித்தைக் காட்டுகிறா(ள்)(ன்).

மூளையை கூராக்கி
கொம்பெனக் கொண்ட
அறிவுச்சிகரம் மேதாவி.

கயிற்றின் மேலே
கரணம் அடிக்கிறா(ள்)(ன்).
கைதட்டுபவரை குஷிப்படுத்தும்
சரணம் பாடுகிறா(ள்)(ன்).

அவையோர் முகம் கோணினால்
சுற்றி சுற்றி வந்து
சலாம் போடுகிறா(ள்)(ன்)..
வசமாக யாரும் சிக்கினால்
வாகாக ஏறி மிதிக்கிறா(ள்)(ன்).
காணிக்கை தாராளமாக கிடைக்குமென்றால்
கேளிக்கையை குறைப்பானேன்.

நிமிர்ந்து நிற்கும் மூளையை கண்டு
நெருங்கி வர அருவெறுக்கும்
கோமாளிக் கூட்டத்திற்கென
தலைகுப்புற நின்று கொண்டு
வாலாக ஆக்கிய மூளையை
காலால் ஆட்டிக் காண்பிக்கிறா(ள்)(ன்).

இதுதான் ஒரிஜினல் கூத்தென
அள்ளிக் கொண்டு போகிறது
அப்ளாஸ் ஆடியன்ஸிடம்.

இன்னும் கொஞ்சம்
மூளை நீண்டாலும்
வாலாட்டுவது சிரமமென
விசனப்படுகிறா(ள்)(ன்).
அறிவுச்சிகரம் மேதாவி.