கவிதை

விழைவின் ஆதர்சம்

ஸ்ரீதர் நாராயணன் 

உக்கிரமாக எறியும் பந்தை
உருளை மட்டையால் ஓங்கியடிக்கிறார்
சிவப்பு காலுறைக்கார வீரர்.

பார்வையாளர் மாடத்தில்
தோல் கையுறையுடன்
எம்பிக் குதிக்கிறான் சிறுவன்.

முதுவழுக்கையை மறைத்து
தொப்பியணிந்த கிழவர்களுக்கும்,
கூர்முனை குதிகால் செருப்பணிந்த
இளநங்கையருக்கும்,
பியர் ஏப்பம் விட்டபடி
தொடையாட்டிக் கொண்டிருக்கும்
பெருமகனாருக்கும்
அவனொரு வேடிக்கை.

மைதானத்தின் மத்தியிலிருந்து
அத்திசைக்கு பந்து ஒன்று
பறந்து வந்தால்
பிடிக்க பாயும் பல கைகளிடையே
அவனுடைய தோல் கையுறை
காணாமல் போய்விடும்.

அதுவரை அவர்களுடைய விழைவின்
ஆதர்சமாக
எம்பிக் குதித்துக் கொண்டிருக்கிறான்
அவன்.

மாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

changes

ஷனா துவா என வாழ்த்துரைக்கும்
வங்கி காசாளரின்
வெள்ளி மணி ஒலியென
ஒத்ததிரும் குரல்
மூன்றாம் வகுப்பு நண்பனை
நினைவுப் படுத்துகிறது.

அவன் அஞ்சலில் அனுப்பிய
பொங்கல் வாழ்த்தட்டைக்கு
நன்றி சொல்லும் முன்னர்
ஊர் மாறிப் போய்விட்டோம்.

காலணிக் கயிறுகளை
முடிச்சிட்டுப் பழகும் சிறுமியின்
தலை ரிப்பனின் வண்ணம் போன்றதொரு
பச்சையில் கையெழுத்திட்டிருந்தான்.

அடுத்த அழைப்புக்கு,
பின்னாலிருந்தவரை வரிசையில்
முன்னால் அனுப்பிவிட்டு
அவள் முன்னே முழந்தாளிட்டமர்ந்து
முயல் காதுகள் கொண்டு
முடிச்சிடும் விதத்தை
பாடியபடி செய்துக் காட்டுகிறேன்.

மனம்

சிகந்தர்வாசி

சிக்னலில் கார் நின்றபொழுது
இடைவிடாமல் ஒலிகள் கேட்கின்றன
இங்கொன்று அங்கொன்று என்று புகைமண்டலம்
பஸ்ஸுக்காக ஓடும் ஜீன்ஸ் அணிந்த யுவதிகள்
தலையை கலைத்துவிட்டுக்கொண்ட யுவன்கள்
வேண்டா வெறுப்பாக நின்றுக்கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்
தெருவின் மறுபக்கத்தில்
சேலை அணிந்து தலை நிறைய மல்லிப்பூவையும்
தோளில் லாப்டாப்பும் சுமந்து ஒரு பெண்
வேகமாக ஆட்டோவை நோக்கி நடக்கிறாள்
சிக்னல் கிடைத்தவுடன் அவள் மறைந்துவிடுகிறாள்

மதியம் லஞ்ச அவரில் யாரும் இல்லா என் அறையில்
மல்லிப்பூ மணம் வீசுகிறது

அபத்தக் கவிகளும் அற்ப மதுவும் 

 
உடலை உருக்கி 
சொற்களில் 
வடிக்கும் வாதை 
கரைந்து நெளிந்து உருமாறி 
கனவுகள் 
வழியும் ரசவாதம் 
கோடியிலொருவனாய் 
கற்ற வித்தை 
 
ஆயிரமாயிரம் வருடம் 
கோடானுகோடி பாக்கள் 
கொட்டித் தேடி 
சலித்து வடித்து 
சுவை தேர்ந்து 
உயர்த்தும் சமூகம் 
அரற்றுவது ஒன்றே 
 
அற்ப மது 
தனியொருவனின் முயக்கம் 
 
பீடம் தேர்ந்த 
நீயோ 
எங்களில் கோடியிலொருவன்  
பேசாப் பொருள் 
பேசத் துணிந்தவன் 
 
பணயப் பொருளாய் 
உயிரைத் தொலைப்பவன் 
 
கூறவந்தது முடிந்ததா 
தவறற்ற மொழியின் 
தேர்வு 
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா 
திரும்பிப் பார்ப்பதற்கும் 
எதிர்நோக்குவதற்கும் 
உன் தடம் 
குழப்பமின்றி 
பதிக்கப்பட்டுவிட்டதா 
 
இல்லையெனின் 
உன் அற்ப மது
உன்னோடு 
எங்கள் ஆதங்கம் 
எங்களோடு 

பொறிக்குள் அகப்படாத எலி

மஜீஸ்

பொறிக்குள் அகப்படாத
அந்த எலி
கால் பெருவிரலில் கடித்து
வஞ்சம் தீர்த்துவிட்டு தப்பியிருந்தது
எலிக்கடிக்கு ஆஸ்பத்திரி மருந்து
விஷம் முறிக்காது
கடிபட்ட இடத்தில்
“தங்கத்தைச் சுட்டு தேய்த்தால்”
விஷம் நொடிப்பொழுதில்
முறிந்து விடுமென்று
மரபு வழி வைத்தியமொன்றை
பரிந்துரைக்கும்
பக்கத்து வீட்டு கிழவிக்கு தெரியாது
அடுத்த அறுவடைக்குப் பிறகு
மீள முடியுமென்ற நம்பிக்கையில்
உள் வீட்டு அலுமாரியில்
பத்திரப்படுத்தியிருக்கும்
அடகு சீட்டுக்கள் ஒரு போதும்
தங்கத்திற்கு ஒப்பாகாதென்று.