துளியென உருப்பெற்று
வெள்ளமென பெருக்கெடுத்து
சுழற்றி உட்கொள்ள பாய்ந்தோடுகிறது
உயிர் ஏகிய சாவின் நிழல்
எம்மிப் பறந்தபின் தவித்தாடுகிறது
பறவையை ஏந்திய மரத்தின் கிளை
மண்ணின் அணைப்பை விழைந்து
காற்றில் மிதந்து தணியும் ஓரிலையில்
முன்னோக்கி செல்லும் அகாலப்பெருவெளி
தணியாத இரவொன்றின் விசனம்
விழித்து முறைக்கும்
வனத்தின் விழி கொண்டு
நிழல் தாண்டிய பயணத்தில்
எக்கணமும் நிகழக்கூடும்
மண்ணோடு கரையும் பேறு
பாசக்கயிற்றின் அழுத்தம் பழகி
சிரிக்க முடிந்தால் போதும்
இங்கு வாழ்ந்ததன் பொருள் கிட்டும்
கவிதை
ஞாயிற்றுப் பொழுதுகள்
காலத்துகள்
காலை
மாட்டின் கால்களுக்கிடையில்
கன்றைப் போல் எம்பி எம்பி
அக்கிகளைத் தேடும் காகம்
களியாடலில் இரு அணில்கள்,
மலர்களில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சிகள்,
தன்னைச் சுத்தம் செய்து கொள்ளும் பூனை,
சோம்பல் முறிக்கும் நாய்
பின் பனிக்காலத்தின் எச்சமென வீசும் மென் தென்றலில்
பறவைகளின் இனிய அழைப்புக்கள்
இன்னும் துயில் நீங்கா வீடுகளுக்கு வெளியே
மனிதர் யாருமற்ற ஞாயிறு காலை
தெருவில் உலகம்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மாலை
முதல் பேருந்தைப் பிடிக்க தயாராகிறார்கள்
வெளியூரில் வேலை பார்ப்பவர்கள்
கடற்கரையில், திரையரங்குகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
மகிழ்ந்திருப்பவர்கள்
அடுத்த நாள் காத்திருக்கும் அலுவல் குறித்த நினைவு இடையிட
திடுக்கிடுகிறார்கள்
காலையிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகள் அமைதியாகின்றன
சனி மாலை தந்த உற்சாகம் மறைய,
யாரும் கவனிப்பாரற்று கடந்து செல்லப்படுகிறது
மற்றுமொரு அழகிய ஞாயிறு மாலைப் பொழுது
மக்கள் கூடுமிடம்/ Public Spaces – கவிதை மொழியாக்கம்
Translated by Sivasakthi Saravanan
மக்கள் கூடுமிடும் களமாகும் குடும்பத்தோடு தெருவோரம் வித்தை காட்டும் கழைக்கூத்தாடி விரிப்பில் விழுந்தவற்றை எண்ணிப் பார்க்காமலே மூட்டை கட்டுகிறான் மேளக்காரன் அந்தரத்தில் தூக்கிப்போட்டு பிடிக்கப்பட்ட சவலைச் சிறுமி தூங்கிப் போய்விட்டாள் நடைபாதையில் வேறொரு ஆட்டத்திற்கு கலைவுறும் பார்வையர் நெம்பிப் பெயர்த்த கம்பத்தின் பதிவாக குழிபறித்துக் கிடக்கிறது தெரு
- (வி. அமலன் ஸ்டேன்லி “படகினடியில் கொஞ்சம் வெப்பம்” தொகுப்பில் உள்ள கவிதை)
Public spaces
become the fields of play
The street performer
stages his tricks
with his family
The drummer packs up,
makes a bundle of the alms-cloth
and all within,
not caring to count
The puny girl
Tossed high and caught
has fallen asleep
on the footpath
Spectators disperse
for another show
Marking the memory
of the wrenched out post
is the street
with its dug up hole.
பின்தொடரும் ஏதோ ஒன்றின் நிழல்
நாளை முடிக்கப்பட வேண்டிய வேலை ஒன்று என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது அது உண்மையில் இருப்பதாகவோ அல்லது எனது கற்பனையாகவோ இருக்கலாம் நாளைக்குள் அது முடிக்கப்பட்டாக வேண்டும் என்ற அவசரம் என்னை பரபரப்பாக்கிறது அந்த வேலை எப்படிப்பட்டது? சித்திரம் போல் மனதுக்கு இதமூட்டக் கூடியதா தீ போல் சுட்டெரிக்கக் கூடியதா தொடர்ச்சியாய் ஒரே இருப்பில் செய்யக் கூடியதா அல்லது இடைநடுவில் ஓய்வு எடுக்க வேண்டி வருமா? அது ஒரு அலுவலகப் பணி போல் கண்காணிக்கப்படக் கூடியதா அல்லது சுதந்திரமானதா அது இயற்கையானதா அல்லது செயற்கையானதா நாளை முடிக்கப்பட வேண்டிய இன்னதென்று தெரியாத ஒரு பணி என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது அடையாளம் தெரியாத நாளை முடிக்கப்பட வேண்டிய உள்ளத்தை உறுத்தும் அந்தப் பணியின் அவஸ்தையால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கணமும் சிதைகிறான்
அவள் வாழ்ந்த வீடு
அப்போது விடிந்து
கொண்டிருந்தது
நீண்ட இரவானதால் வரும் பகலை
வெகுவாக ஏங்கினாள்
அஞ்சி நடுங்க வேண்டியதில்லை இனி
கழிவறைக்குள் மௌனமாக கதறியழ இருக்காது
போலிப் பாவனைகளை
விரும்பி அணியும் அசிங்கமில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு பயங்கரமாகும்
விபத்தை தவிர்த்துவிடலாம்
சொற்களின் வெக்கையில் வாடி
துவண்டு போகும் கொடுங்கணங்கள்
வரவே வராது
இளங்காலைகளை விரும்பிய வண்ணம்
போர்வைக்குள் களிக்கலாம்
வரும் பகல்களை பதற்றமின்றி
கைகுலுக்கி அனுப்பிவைக்கலாம்
வீடடைந்தவளை வரவேற்றது
இருள் உறைந்த அம்மாவின் முகம்