கவிதை

உலகின் மறுமுனையில் வீடு

சோழகக்கொண்டல்

எனைக் கவ்விச்சூழ்ந்திருக்கும்
காலநாகத்தின்
நடுக்கண்டத்தில் நான்

தலையையும் வாலையும்
தானேயறியாத விஷநதியின்
அகால இருளுக்குள்
என்னில் எஞ்சியது எதுவுமில்லை

படுக்கை விரிப்பில்
சிறு கலைவும் இல்லை
அடைத்த கதவுகளுக்குப்பின் உறைந்த
சாளரத்திரைகளும்
விலக்கப்படுவதேயில்லை

என்குரல் எப்படி இருக்குமென்று
யாரிடமாவது கேட்கவேண்டும்
மீண்டும் உடைத்துவிட்ட
கண்ணாடியை மீட்பதற்குள்
என் முகமும் எனக்கு
மறந்துவிடக்கூடும்

யாரோ பெண்கள் சிரிக்கிறார்கள்
எம்பிக்குதிக்கின்றன பிள்ளைகள்
மெல்லிய திரைவிலகலில்
ஒரு மௌனப்படம் மட்டுமே இவை
செவியும் சிந்தையும்
விருப்ப ஓய்வில்

உருவமோ வண்ணமோ தெளிவின்றி
எஞ்சியிருக்கும் ஊரின்
ஓவியத்திலிருந்து
ஒவ்வொரு கோடுகளாய்
நகர்ந்து வெளியேறுகின்றன

உலகின் மறுமுனையில்
இருக்கும் எனது வீடு
வெறும் சொல்லாக
தேய்ந்துவிட்டது

குடியிருப்பு முகப்பின்
அஞ்சல்பெட்டியில் நிறைந்திருக்கும்
வெற்றிடத்தின் எடையோடு
தினந்தினம் அறைதிரும்புதல்
அத்தனை எளிதல்ல

மீண்டும் மீண்டும் திறந்தாலும்
வெற்றுச் சிரிப்போடு
முகம்சுளிக்கிறது மின்னஞ்சல்

காலம் எனும் ஆலகாலம்
கழுத்துவரை ஏறிவிட்டது
இன்னும் நான் இங்கிருப்பது
என் வசத்தால் இல்லை.
…

ஒளிப்பட உதவி- Zlain8 1 

.

அறையும் மழை

அனுகிரஹா

திரைகள் அடர்ந்த
அறையினுள்
காற்றின் ஊளையும்
புயல் சின்னமும்.
அசைவற்றிருந்த அறையில்
கடலலைகள் தள்ளாடின.
மூலையில்
நின்றபடி ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி
திகைத்து
மூச்சிரைத்தது.
திறக்கப்படாத கதவிற்கு
வெளியே

பெருமழை பெய்துகொண்டிருந்தது.

புகைப்படம்: யதிராஜன்

பாறைச் சாவி – அரிஷ்டநேமி

வீதியினில் நிறைந்து நிற்கும்
மழைநீரை தெத்தி செல்லும்
குழந்தையாக மண்ணை
காலால்இரைத்துச்செல்கிறேன்.
காலங்களில் தொலைந்த கல்சாவிகளில் ஒன்று
கண் எதிரே.
‘என்னை நீ அறிவாயா,
நானே பாறைச் சாவி’ என்கிறது
வியப்பில் புருவங்கள் உறைகின்றன.
‘பதினென்வயதிற்குமுன்
உள் தொலைந்த சாவி நான்’ என்கிறது
‘பிறகு எங்கனம் வெளியே வந்தாய்’
என்கிறேன்.
தேடல் உடையவர்களுக்கே
தேடிவருவேன் நித்தமும் நான்’ என்கிறது.
‘எனில் எப்படி இத்தனை
சாவிகள் என்கிறேன்’.
‘ஒவ்வொரு தொலைதலும்
ஒரு புது பிரதியினை எடுத்துச் செல்லும்’ என்கிறது.
கைகளால் எடுத்து  தொலைதூரம் வீச எத்தனிக்கிறேன்.
தொலைகிறது மற்றும் ஒரு சாவி.

பைனரி காவியம் – சோழகக்கொண்டல்

இருத்தல் இல்லாதிருத்தல் 
அல்லது
இல்லாதிருத்தல் மட்டுமே 
எஞ்சியிருத்தல் எனும்
இரட்டை நிகழ்தகவுகளை தாங்கிய 
ஒற்றை நாணயத்தால் 
அளக்கப்படும் புடவி
இயல்பில் உறையும் சுழியும் 
இயல்பு திரியும் ஒன்றும் 
அடுத்தடுத்து நிகழும் 
எந்திர மொழியில்தான் 
எழுதப்பட்டிருக்கிறது 
படைப்பின் மந்திர கவியும் 
புல்லிவட்டம்
அல்லிவடம்
பூவொரு முழுவட்டம் 
பூமறைக்கும் இல்லை நீள்வட்டம் 
இலைதாங்கி வளையும்கிளை அரைவட்டம் 
அறுபட்ட கிளை முகத்தில் ஆண்டுவட்டம்
கிளைகசியும் நீர்த்துளி கோளவட்டம்
நீருக்குள் அணுவும்
அணுவுக்குள் கருவும் 
கருவுக்குள் துகளும்
துகள் நகரும் களமும்
எல்லாம் வட்டம்
வட்டச்சுழிகள் கூடி
வலுவுள்ள கழியுமாகி
வானுக்குள் தலைநுழைத்து நின்றபடி
தன்னையே எண்ணிக்கொள்கையில்
மரம் ஒன்று
நிறைந்து முற்றிய கனி – ஒன்று
நீரின்மேல் விழுகையில் – சுழி
சன்னதம் கொண்டு எழும் நீர்க்கரம் – ஒன்று 
அது சரிந்து கலைகையில்
எஞ்சுகிறது மீண்டும் – சுழி
வெப்பத்தை அடைகாக்கும் 
விரிசதைக்குடுவை – சுழி 
விருப்பும் விசையும்கொண்டு 
விதைநீர் பாய்ச்சும் குறி – ஒன்று 
இன்மையெனும் சுழியிலிருந்து 
இருப்பெனும் பிறப்பு 
நிகழ்கையில் 
எண்ணிகையாவது கூடுகிறது 
ஒன்று.

மனோகர்

காஸ்மிக் தூசி

cow

கதவு திறந்திருக்க
மனோகர் நினைத்தான்
இன்னொரு கோயிலென

உள்ளே பார்த்தான்
எந்தச்சாமி இருக்குமோ
என்ற எதிர்பார்ப்பில்

அகன்ற கண்கள்
கொண்ட கன்று ஒன்று
திரும்பிப் பார்க்கவும்

இஃதொன்றும்
கோயில் அல்ல
மாட்டுத்தொழுவம் மட்டுமே
என்றான் மனோகர்

௦௦௦

அருண் கொலாட்கரின் Manohar என்ற கவிதை தமிழாக்கம்