கவிதை

அங்கு ஒரு கப்பல்

அனுகிரஹா


சூரிய ராட்டினங்களும்
குட்டி குதிரைகளும்
கட்டிய பலூன்களும்
பறக்க,
இரவில்
ஒளிப்பந்தலென
சலசலக்கும் கடற்கரை.

விளக்கணைந்த வீட்டின்
ரகசிய கதவுகளுடன்
உறங்கும் கடலின்
பெருமூச்சுகளின் மீது
மிதந்து செல்கிறது
அங்கு ஒரு கப்பல்.

ஒளிப்பட உதவி – Adriana Parsons

பூசாரியின் மகன்

காஸ்மிக் தூசி

 IMG_8608

இந்த ஐந்து மலைகள்தான்
கந்தோபா கொன்ற
ஐந்து பூதங்கள்

என்கிறான் பூசாரியின் மகன்
பள்ளிவிடுமுறை நாட்களில்
வழிகாட்டியாக வரும்
சிறுவன்

அந்த கதையை
நீ உண்மையிலேயே
நம்புகிறாயா என்றால்

அவன்
பதில் சொல்வதில்லை
தோள்களை குலுக்கியபடி
சங்கடத்துடன்
வெறுமனே பார்க்கிறான்
வேறெங்கோ

ஒழுங்கற்று வளர்ந்து
வெயிலில் வறண்ட
கற்றைப்புல்லின் மேல்

அசைவின்
ஒரு கண்சிமிட்டலை
காண முடிகிறது
அவனால்

அங்கே பாருங்கள்
பட்டாம்பூச்சி
என்கிறான்.

00

அருண் கொலாட்கரின் The Priest’s Son  என்ற கவிதை தமிழாக்கம்

..

ஒளிப்பட உதவி – i Share

கொள்ளேன் எனில்

அரிஷ்டநேமி

யாரும் அற்ற ஒரு புனித கணத்தில்
அது அவன் ஆனது.
அவன் ஆன காலம் முதல்
பசி அவனைத் தின்னத் தொடங்கியது.
அன்று முதல் அவன் யாசிக்க
ஆரம்பித்தான்.
விளையாட்டு பொம்மைகளை,
நடை வண்டிகளை,
சப்பர வண்டிகளை,
கோலிக் குண்டு விளையாட்டுகளை
கிட்டிபுல் விளையாட்டுகளை
காவிரியின் ஓட்டங்களை,
தீப்பெட்டி அட்டைகளை,
கனவுகளை கொண்டாடும் கவிதைகளை,
உறவுகளை,
வாழ்த்துக்களை.
யாசித்தலில் பட்டியல் நிறைவற்று நீண்டது.
கனவுகளின் பட்டியலில் நீண்டதில்
தேக மாற்றம் கொண்டது.
மாற்றம் கொண்டபின்
தானம் வாங்க விரும்பி அவனிடம் பலர்
பிறிதொரு நாளில்
தடையங்கள் ஏதும் இன்றி
நெருப்பும் அவனிடம் தானம் பெற்றது.
அன்று முதல் அவன் அதுவானான்.

மலைகள்

காஸ்மிக் தூசி

800px-Apache_head_in_rocks,_Ebihens,_France-615

 

 

மலைகள், பூதங்கள் –
மாக்கல் பட்டையில்
மணலடித்த தோள்கள்

பூதங்கள், மலைகள் –
பாறையின் விலாக்களில்
கிழித்தெழும்பும் கற்றாழை

மலைகள், பூதங்கள் –
கண்ணாடிக்கல் மூட்டு
சுண்ணாம்புக்கல் கவடு

மலைகள், பூதங்கள் –
வானத்தின் சதை கிழிக்கும்
கற்றாழையின்
கோரைப்பற்கள்

மலைகள், பூதங்கள் –
படியாலான
முதுகெலும்பு

மலைகள், பூதங்கள் –
வெயில் வருடிய
மணற்பாறையின்
தொடைகள்

மலைகள், பூதங்கள் –
கருங்கல் இடுப்பாய்
தளர்ந்த விதானம்

பூதங்கள்.

குடும்ப ஃபோட்டோ

சிக்கந்தர்வாசி

அப்பாவுக்கு அப்பொழுது இளவயதாக இருந்தாலும்
கசங்கிய புகைப்படத்தினால் நெற்றியில் சுருக்கங்கள்
எதிர்காலத்தை பிரதிபலிப்பதுபோல்

பாவாடை தாவணியில் இருக்கும் அக்கா
எதிரியைப் பார்ப்பது போல் காமெராவை முறைக்கிறாள்
இரட்டை ஜடையில் ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருக்கிறது

நாற்காலியில் சாய்ந்தபடி அரை நிஜாரில்
படியப்படிய வாரிய தலையுடன் நான்
கடைக்கண்ணால் காமெராவைப் பார்க்கிறேன்

எங்களுக்கு பின்னால் ஆணி அடித்து மாட்டிய
டெய்லி காலண்டரில் இருக்கும் கடவுள் யார் என்று
சரியாகத் தெரியவில்லை
(முருகராக இருக்கலாம்)

சீராக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை
உறைய வைக்கப் பார்க்கும் காமெராவைப் பார்த்து
நாங்கள் எல்லோரும் உறைந்து நிற்கிறோம்

ஒளிரும் அம்மாவின் கண்கள் மட்டும்
இந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு
வண்ணம் சேர்க்கின்றன

..

ஒளிப்பட உதவி- imgkid.com