குறுங்கதை

ஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை

இஸ்ஸத்

கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட ஓட்டையும், அதன் அச்சிடப்பட்ட திகதி 1995.11.16 என்பதுவும், அதன் ஓரங்களில் ஆட்டினுடையதோ அல்லது கோழியினதோ குருதி தோய்ந்து இருந்ததையும் தூக்கத்திலெழுப்பி கேட்டாலும் விபரமாக சொல்லுமளவு அந்த நோட்டோடு அவ்வளவு ஐக்கியமாயிருந்தான். அவன் அதை செலவு செய்யாமல் இருப்பதற்கு காரணம்: தன்னிடமும் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மாத்திரமே.

பல நாட்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது பணக்கார தோரணை கருதி அதனைக் கொண்டு தனது பசியை போக்கிக் கொள்ளாமலேயே இருந்தவனுக்கு இன்று யாரோ ஒரு புண்ணியவானினால் புரியாணி பார்சல் கிடைத்துவிட்டது. அதனை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை கட்டுக்கு சென்று குளித்துவிட்டு தனது பையினுள் இருந்த ஆடைகளுள் எது நல்ல ஆடையோ அதை மாற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே தனது உணவு பொட்டலத்தை ஆசையாக பிரித்து வயிறு முட்ட உண்டு முடித்தான். என்னதான் புரியாணியாக இருந்தாலும் அதை உண்ட பிற்பாடு பீடா ஒன்று போட்டால்தான் அது இராஜ விருந்தாகும் என்றபடி தனது 20 ரூபாயை செலவழிக்க முடிவெடுத்தவனாய் தனது தோல் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து காற் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சற்று தொலைவிலிருந்த பீடா கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்ச் சேர்ந்தான்.

பீடா கடை முன்பாக நின்று கொண்டு வயிறு முட்ட சாப்பிட்டதனால் வந்த ஏப்பத்தை விட்டபடியே பணத்தை எடுப்பதற்காக வேண்டி தனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டவனுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் அப்போதிருந்த அவனது இரு நண்பர்களுடன் ஹோட்டலில் ரீ குடித்துவிட்டு ஹோட்டலின் முன்பாக சாய்ந்து கிடந்த ஆலை மரத்தின் தடித்த தண்டின் மீது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவனது தொடையில் தற்காலிக தஞ்சமடைந்ததினால் ஏற்பட்ட வடுவை வருடும் பாக்கியம் மாத்திரமே கிடைத்தது.

அவன் தனது பைக்கற்றுக்குள் கையை விட்டு துலாவியபடியே தனது பணம் எங்கோ விழுந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டே கையை பைக்கற்றின் அடி ஆழம் வரை விட்டு ஓட்டையான காற்சட்டை பைக்கற்றை புரட்டி வெளியே எடுத்து அதன் இடுக்குகளில் இருந்த மண்ணையும், தூசிகளையும் துப்பரவு செய்தபடி எதுவித சலனமுமின்றி தனது ஏமாற்றத்தை சிறு புன்னகையால் தவிர்த்தவனாய் நடக்கலானான்.

அவனின் புன்னகையிலும், தொய்வற்ற நடையிலும், தான் இன்னும் எவ்வளவு இழப்பையும் தாங்குவேன் என்றும், இன்னுமொரு புதிய அல்லது பழைய பதிப்பையுடைய 20 ரூபாய் நோட்டு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையும் வலிகளும் பல ஏமாற்றங்களும் கண்ட முதிர்ச்சியும் இல்லாமலில்லை.

 

தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி – நரோபா குறுங்கதை

நரோபா

பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  உடலற்றவர்கள். அல்லது உடலை புதைத்து வைத்துக்கொண்டு தங்கள் நிழலை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியவர்கள்.

நிழல்களுக்கு குரல் உண்டு. ‘உன் தந்தையைக் கொல்’, ரகசிய கிசுகிசுப்பாய் காதருகே முணுமுணுத்தவன் உடல் மெலிந்தவனாக இருக்க வேண்டும். ரகசியங்களை மறுப்பது அத்தனை எளிதில்லை. அதற்கு நாம் வேறோர் ரகசியத்தை அறிந்திருக்க வேண்டும். ‘தந்தையைக் கொல்ல ஆர்வமில்லை’ என்று முணுமுணுத்தேன்.

அழுகிய பழங்களும், பொறியில் சிக்கி  மரித்த எலியும், தூமைத் துணிகளும், இன்னும் பல நூற்றாண்டு கால குப்பைகளும் குமையும், வெள்ளியாக இருளில் மினுங்கிய, நகராட்சியின் தகர குப்பைத் தொட்டிக்கு என்னை இட்டுச் சென்றார்கள்.

உள்ளிருந்து கிளறிக் குடைந்து தந்தையின் வயிற்றில் சொருகி குடலைச் சரிக்க எனக்கொரு  பனிக்கத்தியை உதிரம் காய்ந்து பழுப்பேறிய துணியில் பொதித்துக் கொடுத்தான், ஊமையன் ஒருவன்.

எரியாத மின்விளக்கு கம்பத்தின் பாதி உயரத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவன் நெடியவனாக இருக்க வேண்டும். “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடான கோடி தந்தைகளின் குருதி குடித்த கத்தி’, என்றவனின் குரலில் உறுதி தொனித்தது.

உறுதியான குரல்கள் ஐயமற்றவை. அல்லது ஐயத்தை மறைக்கக் கற்றவை. ஆகவே ஆபத்தானவை. நாம் அவை முன் சென்று மண்டியிட்டு எமை வழி நடத்துக, எனக் கோரத் தகுந்த குரல்கள். எண்ணெய் பிசுக்காக அக்குரல் மனதை மூடி பரவிப் படியச் செய்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பழக்கம். கீழ்படிந்துவிட வேண்டியதுதான். ஏதோ ஒன்று பரப்பைக் கீறிக் கிழித்து வெளிவந்தது. உறுதியான குரலில் அவனிடம், “எப்படியும் தந்தைதான் இறந்து விடுவாரே” என்றேன்

முழங்காலுக்குக் கீழேயொரு நகைப்பொலி- ஏறத்தாழ கழுதைப்புலியின் கனைப்பை ஒத்தது. “ஆம். ஆனாலும் அது நம் கையால்தான் நிகழ வேண்டும்,” என்று சொல்லிச் சிரித்தான் சித்திரக் குள்ளன்.

பகடி கல்லறையில் அறையப்படும் கடைசி ஆணி. நாம் தனித்திருக்கையில் மட்டும் வெளிப்படும் நச்சுப்பல். பகடி நம்மை அச்சுறுத்துவது. தனிமைப்படுத்துவது. பகைக்கு பணியாதவரும் பகடிக்கு பணிவார். வியர்த்திருந்தது. லேசாகச் சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னேன்.

‘மேலும்… நாளை நானுமொரு தந்தையாவேனே’

சொல்லி முடித்த நொடியில் மூக்கை உரசியபடி ஆக்ரோஷமாகக் கத்தினான் ஒரு தடியன், “ஆம். அப்போது உன் குடலும் சரிக்கப்படும்”

“கண்ணே, உன் தந்தையை நீ கொல்லத்தான் வேண்டும், எனக்காகவேணும், நான் பட்ட துயரங்களை நீ அறிவாய்” எனக் கெஞ்சியது ஒரு பெண் குரல். உடல் விதிர்த்தது. அது அன்னையின் குரல். ஒருவேளை உரக்க ஆணையிட்டிருந்தால் அதையே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்தக் குரல் இரைந்து கேட்கிறது. அறுக்க முடியாத பிணைப்பு மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ள செய்கிறது. கண்களில் பெருகிய நீர் கன்னத்தில் உருண்டு நிலத்தை அடைந்தது. கத்தியை இறுகப் பற்றினேன். விம்மியுடைந்த குரலில், “உன் வஞ்சத்தை நான் சுமக்கிறேன். ஆனாலும் எதன் பொருட்டும் என்னால் அவரைக் கொல்ல இயலாது”, என்றேன்.

என் கையில் கனத்து குளிர்ந்த பனிக்கத்தியை மீண்டும் வாய் பிளந்து கிடக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன். பெருமூச்சுகளும், உச்சு கொட்டல்களும், முனகல்களும் எழுந்தன. நீள் கையன் தொட்டியில் துழாவிக் கொண்டிருந்தான். அதற்குள் அது எங்கோ ஆழத்தில் சென்று மறைந்திருக்க வேண்டும்.

“அட…முட்டாளே” வாய்விட்டுக் கூவினாள் அந்தப் பெண்..

சிற்றகலாக மஞ்சள் ஒளியுமிழும் ஒற்றை குண்டுவிளக்கை சூடிய என் அறையை கனவு கண்டபடி அங்கிருந்து விலகினேன்.

எனை எப்போதும் காக்கும் அவர்கள் அறியாத ரகசியம் ஒன்றுண்டு.  தந்தையைக் குத்திக் கிழிக்கும் ஆவேசம் புகும் ஒவ்வொரு முறையும், தந்தையின் ஆசி இவ்வாழ்வு என்றெண்ணிக் கொள்வேன். அப்போது நீலச் சுவற்றில் ஆடும் மரச்சட்டத்தின் வெற்றுக் கண்ணாடியில் தந்தையின் உருவத்திற்கு மேலும் ஒரு பிக்சல்  கூடித் துலங்குகிறது

 

 

 

அருமருந்து – நரோபா குறுங்கதை

நரோபா

பழுவேட்டையர் வங்கி வாசலில் தோளில் உலகைச் சுமக்கும் தகடு பொறித்த தனது பழைய ஹெர்குலஸ் மிதிவண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கிடாரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார். சைக்கிள் ஸ்டாண்ட் தமிழ் எழுத்தாளனைப் போல் லொடுக்கென்று இருப்பதாக அவருக்கு தோன்றியது. லேசாக காற்றடித்தாலோ தாவணி தீண்டினாலோகூட விழுந்துவிடும். எப்போதும் விழத் தயாராக இருக்கும் சைக்கிளுக்கு காவலாக, தாங்கிப் பிடிக்க ஏதுவாக பழுவேட்டையர் அதன் அருகே நின்று  கொண்டிருந்தார்.

கிடாரம் கொண்டான் ‘குறடு’ இணைய இதழிலிருந்து கட்டுரையை அச்செடுத்து வர காத்திருக்க சொல்லியிருந்தான். அண்மையில் புத்தக கண்காட்சியை ஒட்டி பழுவேட்டையர் எழுதிய “சித்த பிரமை” நாவலைப் பற்றி மு. சுந்தரவதனன்  ‘குறடில்’ ஒரு விமர்சனம் எழுதி இருக்கிறாராம். ‘அண்ணே நாமலே ஷை ஆவுற அளவுக்கு எழுதி இருக்காருண்ணே’ என்றான் கிடாரம். ‘டே… நெசமாவா?’ பழுவேட்டையரால் நம்ப முடியவில்லை. ‘அட ஆமாண்ணே… ஏகாத்திபத்திய, பெருமுதலாளித்துவ, முற்றதிகார, பிற்போக்கு, பார்ப்பனிய, இந்துத்துவ,  ஆணாதிக்க, மனுவாத எதிர்ப்புப் பிரதி. எல்லா தீமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் சமூக நோய்மை மீதான சாட்டையடி கதையாடல்,’ன்னு எழுதி இருக்காருண்ணே, அவார்டு வாங்கத் தேவையான அம்புட்டு லட்சணமும் இருக்குண்ணே… இதப் படிச்சு நாப்பது பேரு நாவல வாங்கிட்டு போயிருக்காங்கன்ன பாத்துக்க,’ என்றான். இப்போது பழுவேட்டையருக்கு வேறு மாதிரியான சந்தேகம் வந்தது. உண்மையிலேயே தான் எழுதிய நாவலைத்தான் வாசித்து சுந்தரவதனன் இதை எழுதி இருக்கிறாரா? தன்னை நாடி வரும் பீடிக்கப்பட்டவர்களின் பேய்களை கிராமத்து சாமியாடி ஓட்டும் கதையைத்தானே எழுதி இருந்தோம், என குழம்பினார். கட்டுரையை வாசித்து தெளிந்து கொள்ள வேண்டும் என ஆறுதல் சொல்லிக்கொண்டார்.

அப்போது அதே வரிசையில், சாலையோரத்து புழுதி படிந்து பச்சை இழந்த புங்கை மரத்து குடைநிழலில், அதுவரை பார்த்திராத, அல்லது தனித்து பிரித்தறிய முடியாத, எல்லா குருட்டுக் கிழவர்களை போலவும் இருக்கும் ஒருவர் கால் மடித்து அமர்ந்து கொண்டிருந்ததை கவனித்தார். கருப்பு கண்ணாடியும், காவி தலைப்பாகையும், வெற்று மார்பில் வழியும் வெண்ணிற தாடியும் பித்துக்குளி முருகதாசை நினைவுறுத்தியது, ஆனால் நல்ல அடர் கருப்பு.

அவருக்கு முன் இடை ஒசிந்த வான் நீல மங்குப் புட்டி ஒன்று இருந்தது. செங்குத்தான படிகளில் தடுமாறி இறங்கும் அந்த குருட்டுக் கிழவரைப் போல் அல்லது இரவு அருந்திய மது இன்னமும் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும்போது சோம்பலுடன் எழுந்து நடப்பவனைப் போல் கரங்களின் மெல்லிய நடுக்கத்தின் ஊடாக தடுமாறித் தயங்கி பேப்பர் கோப்பையுள் மங்கு புட்டியிலிருந்து நிறம்சூடாத திரவம் வழிந்து இறங்கியது. அந்த உச்சி வெயிலில் அவரிடமிருந்து கல்லாப்பெட்டி சிங்காரத்தின் குரல் எழுந்தது.

‘முடி வளரும், மொகர பளபளக்கும், கண்ணு தெரியும், வாய் மணக்கும், மலம் போகும், மனசு விரியும். விந்து பெருகும், வம்சம் கொழிக்கும், வாக்கு பலிக்கும், மழ கொட்டும், நாடு வளமா இருக்கும், தலைவன் நல்லா இருப்பான், அறம் கெலிக்கும்… அத்தனையும் தரும் அருமருந்து… அஞ்சு ரூபாய்க்கு ஒரு கப்பு’

யாருமற்ற அந்தர வெளியில்  சிறிய பேப்பர் கோப்பையை நீட்டிக் கொண்டிருந்தார். இதைக் குடித்தால் நன்றாக எழுத வருமா, விருது கிடைக்குமா, என்றெல்லாம் கிழவரிடம் கேட்கலாமா எனத் தயங்கிக் கொண்டிருந்தார் பழுவேட்டையர். சைக்கிளை விட்டு அகல மனமின்றி மெல்ல எட்டி கோப்பையை நோக்கினார்.

அமுதத்தில் மூழ்கி அப்போது அமரத்துவம் எய்திக் கொண்டிருந்த  ஈ ரெக்கையைப் படபடத்து மிதந்தபடி தனது முதலும் கடைசியுமான வாக்குமூலத்தை பழுவேட்டையரிடம் அளித்தது. “இதெல்லாம் பாவம் இல்லையா? இப்புடி வாய்கூசாம விக்குறீங்களேய்யா!” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கண்மூடியபோது ரெக்கையடிப்பு நின்று போனது.

சுதாரித்துப் பிடிப்பதற்குள் பழுவேட்டையரின் சைக்கிள் தடாலென மற்றுமொரு முறை விழுந்தது.

 

 

 

 

 

அரசின்மைவாதி – நரோபா

நரோபா

தம்பி நீங்க?
நா கல்டர் ஆவணும்
மூணாவது வரிசை டோக்கன் நம்பர் 39
அடுத்தாப்ல நீங்க?
நான் டாக்டர் சார்
ரெண்டாவது வரிசை டோக்கன் நம்பர் 78
நீ சொல்லுப்பா?
நான் நானாகவே இருக்க வேண்டும்
மொத வரிசை 334 ஆவது டோக்கன்
நீ என்னப்பா?
நீங்க யாரு சார் எனக்கு டோக்கன் கொடுக்க?
தம்பி வா உக்காந்து சத்த நேரம் டோக்கன் போடு டீ குடிச்சிட்டு வாரேன்

திருமிகு. பரிசுத்தம்

நரோபா

Thirumigu Parisuttam

ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது. எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்.

பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.

திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்யூஷனுக்கு விட வேண்டும் எனக் கோரிய பதின்ம வயது பெண்ணையும் அவள் தந்தையையும் கோரிக்கையின் நியாயத்தின் பொருட்டு வரிசையில் அவருக்கு முன் அமர இடமளித்தார். பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்த, சட்டைக்கு பொருந்தாத நிறத்தில் டை கட்டியிருந்தவரையும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் அவர் மனைவிக்கு வருத்தம். “இத நிறுத்தத்தானே வந்திருக்கோம்” என முணுமுணுத்தாள்.

ஆனால், நொடிக்கு மூணு முறை செருமிக்கொண்டிருந்த அந்த முதியவர் அவர்கள் இருந்த நாற்காலிக்கு அருகே வந்தபோது அவள் அத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டிய தேவையில்லை. “இவருக்கு சுகர்… மயக்கம் வந்துடும்,” என்றாள் அவரைக் காண்பித்து. முதியவர் சற்று நேரம் செருமிவிட்டு வரிசையின் கடைசிக்குச் சென்றார்.

திருமிகு. பரிசுத்தம் அவர்களின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புராதன நெடி நாசியில் நுழைந்தது.  திருமிகு. பரிசுத்தம் கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி, ஹிட்லர், புஷ், ஒபாமா, செங்கிஸ்கான், ஒசாமா மற்றும் நான்கைந்து அடையாளம் தெரியாத கனவான்கள் உட்பட பலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சுவற்றை அலங்கரித்தன. பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே மாட்டப்பட்டிருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளுடை அணிந்திருந்த திருமிகு. பரிசுத்தம், தனது கண்ணாடியை மூக்கின் மீது விரலால் தள்ளிவிட்டுவிட்டு, அவரது கோப்பை ஆராய்ந்து நோக்கினார். அவரது பெயரின் பொருட்டு வேறு பலரும் குழம்பியது போல், திருமிகு. பரிசுத்தமும் குழம்பியிருக்க வேண்டும்.

“இந்துவா? முசல்மானா?’

“பவுத்தன்”

“ரொம்ப வசதி… குறைய ஒப்ஷன்ஸ் உண்டு” என்றார் தனது டைரியில் குறித்தபடி.

“கிரிக்கெட் பாப்பீகளா?”

“பாப்பேன்”

“ஆராக்கும் பிடிச்ச பிளேயர்?”

“இன்சமாமும் டிசில்வாவும்”

சற்றுநேரம் யோசித்த பின்னர் தனது கட்டை மீசையை நீவியபடி “எந்த சினிமா நடிகர பிடிக்கும்? ரஜினியா கமலா? இல்ல எம்ஜிஆர், சிவாஜி, விஜய், அஜித்… இப்புடி யார வேணாலும் சொல்லலாம்” என்றார்.

“மார்கன் ஃப்ரீமேன்”

மெல்ல டைரியிலிருந்து தலை தூக்கி கண்ணாடிக்கு மேலிருந்து நோக்கினார். அவர் மனைவியிடம் திரும்பி,

“உங்களுக்குள்ள சண்ட ஏதும் உண்டா?”

“நான் போடுவேன், ஆனா அவர் எப்போதும் போட்டதில்ல… நகந்து போயிடவும் மாட்டார்… முழுசா திட்டுறத பொறுமையா கேட்டுட்டுதான் நகர்வார்” என்றாள்.

“வயசு பருவத்துல ஏதும் காதல் தோல்வி, விரக்தி, கோபம்? ஏதுமுண்டா?”

“அப்போ நான் அனுமார் உபாசகன்”

“அப்ப இந்த கல்யாணத்த பண்ணதுக்காக அப்பன் மேல கோபமுண்டோ?”

“இல்ல. அவரு நல்லதுக்குத்தான செய்வார்”

“ஆபீஸ்ல குற ஏதும் உண்டோ? மேலதிகாரியோட தொந்தரவு… சகாக்களோட பிணக்கம் ஏதும்?”

“நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் சார்”

“பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது.

“சார் உங்க வண்டிய வேகமா இடிச்சிட்டு, இண்டிகேட்டர ஒடச்சிட்டு, இல்லன்னா கண்ணாடிய ஒடச்சிட்டு போறவங்க கிட்ட சண்ட போட்டதில்லையா?’ என்றார் சற்றே வேகமாக.

“இல்ல சார்… நான் நடந்துதான் போவேன்… நடந்துதான் வருவேன்”

“சில்லற தராம போகும்போது, பஸ்ல இடிக்கும்போதுகூட கடுப்பானதில்லையா?” அவருடைய குரல் மேலும் உயர்ந்தது. முகம் சிவந்து வியர்க்க எழுந்து நின்றார்.

“இல்லையே சார்… பாவம் அவுங்களுக்கு என்ன கஷ்டமோ”

வேகமாக எழுந்து அவரது சட்டையை உலுக்கியபடி, “எழவெடுத்தவனே, உனக்கு எது மேலையும் வெறுப்பே இல்லையா?”

அவரது மனைவியின் உடல் நடுங்க துவங்கியது.

“இல்லையே சார்” என்றார் பாவமாக.

அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே வானத்தில் பறந்து கொண்டிருந்தவளை நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தார் அவர்.