சிறுகதை

கனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் பிளிரும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் பிளிறல், அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

 

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

நீர் நின்றன்ன – வெ சுரேஷ் சிறுகதை

“அப்பா கேபிள்ல நிறைய சானல்கள் வர்றதேயில்லை. நீங்க போய் அந்த கேபிள் ஆபிஸ்ல கேக்கறேன் கேக்கறேன்னுட்டு கேக்கவே இல்ல. இன்னிக்காவது கொஞ்சம் போய் கேட்டுட்டு வாங்கப்பா,” என்று பாதி கோரிக்கையாகவும் பாதி குற்றச்சாட்டாகவும் என் மகள் சொன்னபோது அந்த நாள் எனக்கு மிகவும் சங்கடமான நாளாக இருக்கப் போவதை நான் அறியவில்லை. “நாங்க போன் பண்ணிச் சொன்னா சரி சரிங்கறாங்க, ஆனா, அதே மாதிரிதான் இருக்கு’”.
“ஆமாம்மா மறந்து மறந்து போயிடறது, இன்னிக்கு ஒரு ஒன் டே மேட்ச் வேற இருக்கே… இரு, அந்த சானலாவது வருதா பாக்கறேன்,” என்று சொல்லிக் கொண்டே, அவசர அவசரமாக டிவியை ஆன் பண்ணி சோனி ஈஎஸ்பிஎன் சானலுக்குப் போனால், ஏதோ சப்ஸ்க்ரிப்ஷன் கட்டவில்லை, அதனால் வரவில்லை, என்று ஸ்க்ரால் ஓடிக் கொண்டிருந்தது. சரி, வேற வழியில்லை, இன்னிக்கு கேபிள் டிவி ஆபிசுக்கு நேரா போய்தான் பாக்கணும்.

டிபன் முடித்துவிட்டு, கேபிள் டி வி ஆபிசுக்குப் போய் மாடி ஏறும்போது வழியில் ஒரு முதியவர் தயங்கித் தயங்கி இறங்கி வந்து கொண்டே, “சார், இந்த கேபிள் டிவி ஆபிஸ்…” என்று இழுத்தார்.

”ஆமா சார், நானும் அதுக்குத்தான் வந்தேன்,” என்று சொல்லவும், அவர் முகத்தில் ஏமாற்றம். “ஓ, நீங்க கேபிள்காரர் இல்லையா…” என்று முனகினார். “என்னமோ தெரியல, நிறையச் சானல்கள் வரல, புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.”

“சரி மேல யாரும் இல்லையா?”

அவர் மெதுவான குரலில்,”யாருமே இல்லையே சார்,” என்று மீண்டும் முனகினார்.

யோசனையாக கீழே இறங்கினேன். மாடிப்படிக்கு பக்கத்திலேயே இன்னொரு ஹாலில் நாராயணன், கேபிள் பணம் வசூலிக்க வருபவர், இருந்தார். கொஞ்சம் நிம்மதியாக உள்ளே நுழைந்து, “பணம் கட்டின நிறைய சேனல் வரவேயில்ல நாராயணன், என்னனு பாக்கலாம்னு வந்தேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரும் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து அதையே சொன்னார்..

இரண்டு பேருக்கும் படிவங்களைக் கொடுத்து, “எதெது வரல்லன்னு டிக் பண்ணிக் குடுத்திடுறாங்க சார்,” என்றார் நாராயணன்.

கடகடவென்று டிக் பண்ணிக் கொடுத்து விட்டு, “எப்ப வரும்,” என்று கேட்டேன். “நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள சார்,” என்றார் நாராயணன். அடப்பாவி டெக்னாலஜி அவ்வளவு தூரம் வளர்ந்துச்சான்னு நினைத்துக் கொண்டே, சரி பாதி மேட்ச் ஆனும் பாத்துடலாம் என்று திரும்ப எத்தனித்தேன்.

பின்னாலிருந்து தீனமாக, சார், என்று ஒரு குரல். அந்த முதியவர்தான். “சார் எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு, எழுத்தும் ரொம்பப் பொடிப் பொடியா இருக்கு கண்ணுக்கே தெரியல, கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா?”

“ம்ம்… உங்களுக்கு என்ன சானல்ல்லாம் வேணுமோ அதைச் சொல்லுங்க சார்,” அவரிடமிருந்த படிவத்தை வாங்கினேன்.

“எனக்கு பழைய அந்த 100 ரூவா ஸ்கீமோட, சன், விஜய், இருந்தா போதும் சார், அது வர்ற மாதிரி பில் அப் பண்ணிக் குடுக்கறேளா அப்புறம் பணமும் கட்டணும்”

அதற்குண்டான பெட்டிகளை டிக் பண்ணினேன். நடுங்கும் விரல்களால் அவர் கையெழுத்திட்டவுடன் அவரிடமிருந்து பணத்தை வாங்கி நானே கட்டிவிட்டு, வெளியே வந்தேன். கூடவே அவரும் வந்தார். மேலும், தயங்கின ஒரு குரலில், “ஏன் சார் இந்த கிரிக்கெட் மேட்செல்லாம் இதுல வருமோ”

“இந்த விஜய் பேக்கேஜுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வருங்கறாங்க சார். உறுதியா தெரியல,” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து அவரைப் பார்த்தபோதுதான் எங்கேயோ பார்த்து பரிச்சயமான முகம் என்று தோன்றியது. நல்ல சிவந்த, படர்ந்த முகம், இந்த வயசுக்கு அடர்த்தியாக, ஆனால் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் தலைமுடி, நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப் பொட்டு. ரெண்டு நாள் தாடி, கண்ணைப் பெரிதாகக் காட்டும் தடித்த கண்ணாடி. அதற்குப் பின்னாலிருந்த கண்களில் குழப்பமும் தயக்கமும். காவியேறின வேட்டி, கொஞ்சம் அழுக்கான வெள்ளை அரைக்கை சட்டை. இதே கோலத்தில், பாவனையில் இவரை எங்கயோ பாத்திருக்கமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘சார், உங்கள நான் எங்கயோ பாத்திருக்கேன்,” என்ற அவர் குரல் சிந்தனையைக் கலைத்தது.

“எனக்கும் அப்படிதான் தோணுது சார், நீங்க…?”

“என் பேரு ராமரத்னம்… இதோ இந்த ரோட்ட கிராஸ் பண்ணினா எதுக்க இருக்கே அதான் வீடு,” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

“ம்ம்… நான் இங்கதான் கோவாப்பரேட்டிவ் காலனில இருக்கேன்,” என்றேன்.

“ஓ, அப்படியா சார், நான் அங்க வந்ததில்லை. நாங்க மொதல்ல டவுன்லதான் இருந்தோம். இப்பதான் ரெண்டு வருஷமா இங்கே குடியிருக்கோம்.. ஆனா உங்கள எங்கயோ பாத்திருக்கேன் முகம் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு…” என்று மீண்டும் என் முகத்திலேயே தன் பார்வையை நிறுத்தினார். எனக்கும் குழப்பம். இந்தக் குரல், இந்த தயங்கித் தயங்கிப் பேசும் விதம், முகத்தில் இருக்கும் ஒரு பரிதாபக் களை, எங்கே பார்த்திருக்கிறேன்?

அதற்குள் நாராயணன் அவரை கூப்பிட, “சார், இதோ ஒரு நிமிஷம், வந்துடறேன், இங்கயே இருங்க,” என்று சொல்லிக்கொண்டே திரும்பி உள்ளே நடந்தார். அந்த நடையில் சட்டென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தாற்போல நினைவுக்கு வந்துவிட்டது அவர் யாரென்று. ஒரு கணத்தில் அப்படியே சட்டென்று வியர்த்துப் போய் ஸ்தம்பித்து நின்றேன். ஆமாம், அவரேதான், அதே முகம், அதே குழப்பமும், தயக்கமும் நிறைந்த கண்கள், இறைஞ்சும் குரல். அவை இவரின் நிரந்தர முகபாவமா, இல்லை, நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் வந்து அவருடன் ஒட்டிக் கொண்டதா?

ஐயோ… என்னவொரு சந்தர்ப்பம், அசந்தர்ப்பம் என்று சொல்ல வேண்டும். ஆம், 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டு இறுதியில் நாங்கள் சந்தித்திருக்கிறோம். இந்த பதினோரு ஆண்டுகளில் மேலும் தளர்ந்து போயிருக்கிறார். கண்களின் அந்தத் குழப்பமும் தயக்கமும் மேலும் அதிகரித்திருக்கிறது. அப்போதே 70க்கும் மேல் இருக்கும். இப்போது 80க்கும் மேல், அன்று நடந்ததற்குப் பின் இவர் உயிரோடு இருப்பதே பெரிது. இவர் இன்னும் அதிக நாள் தாங்க மாட்டார் என்றே அப்போது நினைத்தேன். இன்னுமா இருக்கிறார் என்று திகைப்புடன் அவர் போவதைப் பார்க்கும்போதே அந்த நடை, அவரை முதன் முதலாக பொள்ளாச்சி விருந்தினர் மாளிகைக்குள் அழைத்துப்போனதை நினைவுபடுத்தியது.

“ரமேஷ், சங்கரோட அப்பா, அம்மா, அக்கா, அவங்க ஹஸ்பண்ட், நாலு பேரும் இப்பதான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு கிட்ட வந்திருக்காங்கன்னு போன் வந்திருக்கு, நீயும் மூர்த்தியும் உடனே போய் அவங்கள பாத்து பொள்ளாச்சி ஐபிக்குக் கூட்டிட்டு வந்துருங்க, சிவப்பு கலர் ஆல்டோ கார். நாங்க இப்பதான் சுல்தான்பேட்டையை நெருங்கிட்டிருக்கோம். இன்னும் சங்கரோட பாடி கிடைக்கல. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னும் தெரியல. அவங்கள அங்கேயே தங்கவும் வெக்க ஏற்பாடு பண்ணிருங்க… அதுல பிரச்னையிருக்காது, எஸ்ஈகிட்ட ஏற்கனவே ரூம்ஸுக்கு சொல்லியாச்சு என்ன ஓகேவா?“ மறுத்துப் பேச முடியாத கண்டிப்பில் நண்பர் பாண்டியனின் குரல் கட்டளையாக ஒலித்தது. நான் மூர்த்தியைப் பார்த்தேன். பாண்டியன் என்ன சொன்னார் என்று அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். ம்ம் சரி, என்று முனகிவிட்டு போனை கட் செய்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினோம்.

‘சங்கரோட பாடி’ அந்த வார்த்தை இப்போது மிகக் கடுமையாக ஒலித்தது. நேற்று பின்னிரவு வரை கூட நாங்கள் அப்படி சொல்லத் துணியவில்லை, ஆனால் இப்போது நண்பர்கள் எல்லோருக்குமே வேறு எப்படியும் சொல்ல முடியாமல் போய்விட்டது. நண்பர்கள் என்றால் இங்கே என்னுடன் இருக்கும் மூர்த்தியையும் பாண்டியனோடு போயிருக்கும் ப்ரகாஷையும் தவிர மற்றவர்கள், சென்னையிலிருந்து வந்தவர்கள்- சங்கர், பாண்டியன், கதிர், சந்துரு, மற்றும் பிரசாத் ஆகியோர்.

முந்தா நாள் சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கிளம்பி நேற்று அதிகாலை திருப்பூரில் இறங்கி வேன் வைத்துக் கொண்டு உடுமலைப்பேட்டையில் இருக்கும் கதிரின் வீட்டுக்குப் போய் விட்டு முற்பகலில் கிளம்பி டாப்ஸ்லிப், அதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் என்று போவதாக ஒரு திட்டம். இரவுத் தங்கலுக்கு பரம்பிக்குளத்தில் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடாகியிருந்தது போல. கதிரின் வீட்டுக்குச் சென்று சேருவது வரை எந்தப் பிசகும் நேரவில்லை. தவறு நேர்ந்தது உடுமலை போகும் வழியில், கெடிமேடு வாய்க்காலைப் பார்த்ததில்தான். பரம்பிக்குளம் ஆழியாறு ப்ராஜெக்ட்டின் பிரதான கால்வாய் அது. பிஎம்சி என்பார்கள். இவர்கள் கிளம்புவதற்கு முந்தைய நாள்தான் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். கால்வாய் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. கால்வாயைப் பார்த்தவுடன், கதிர் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு டாப்ஸ்லிப் கிளம்ப இருந்த திட்டத்தைச் சற்றே மாற்றி கதிர் வீட்டிலிருந்து கால்வாய்க்கு வந்து அங்கே குளித்து விட்டு மீண்டும் கதிர் வீட்டுக்கே சென்று டிபன் சாப்பிட்ட பின்னர் கிளம்புவதாக மாற்றியிருக்கிறார்கள். கதிரின் அம்மா, “இப்பதான் டேம் திறந்து விட்ருக்காங்கப்பா, புதுக் தண்ணி உடம்புக்கு ஆகாது. மழை வேற வர மாதிரி இருக்கு, வூட்டிலயே வெந்நீர் போட்டுத் தரேன். குளிச்சி டிப்பன் சாப்டுட்டு கெளம்பிருங்க,” என்று சொல்லியும் கேட்காமல் கால்வாய்க்கு குளிக்க வந்திருக்கிறார்கள்.

கெடிமேடு- உடுமலை ரோட்டில் கால்வாய் குறுக்கிடும் இடத்துக்கு அருகில் எப்போதும் லாரிகளும் வேறு வாகனங்களும் கழுவிக் கொண்டிருப்பார்கள். எனவே கால்வாய் ஓரமாகவே சற்று தெற்கே உள்ளே போய் ஒரு தென்னந்தோப்புக்கு அருகில் குளிப்பது என்று தீர்மானித்துப் போயிருக்கிறார்கள். எல்லோருமே நீச்சல் தெரிந்தவர்கள்தான். கால்வாயின் தண்ணீர் வேகத்தையும் ஓரளவுக்கு ஊகித்து, கால்வாயின் இரண்டு கரைகளுக்குமாக கம்பத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் இறங்கி குளிக்க இறங்கியிருக்கிறார்கள். கதிர், சந்துரு, பாண்டியன், பிரசாத் எல்லாம் ஒரு புறம் குளித்துக் கொண்டிருக்க, இருப்பதிலேயே இளையவனும் அபாரமான வாலிபால் விளையாட்டு வீரனுமான சங்கர் மட்டும் ஒருமுறை கால்வாயில் குதித்துக் குறுக்காக நீந்தி மறுகரையில் ஏறி அங்கிருந்து ஒரு தாவு தாவி உள்ளே குதித்து இவர்கள் பக்கம் வந்திருக்கிறான்.

இந்த இடத்தில் தான் என்ன நடந்தது என்று இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உள்ளே குதித்த சங்கரிடம் தண்ணீரைத் தொட்ட சில கணங்களுக்குப் பின் ஏதோ தடுமாற்றமும் நீந்துவதற்கு சற்றே திணறலுமிருந்ததை பாண்டியன் கவனித்திருக்கிறான். சங்கர் மல்லாந்து நீந்த முயல்கிறானா அல்லது கால்வாயின் நீரோடு மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றானா என்ற குழப்பத்துடன் அவனுக்கு எதிரே சென்று கைகளை விரித்து தடுக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவன் கைகளில் பட்டு கைகளின் அடியே வழுக்கிக் கொண்டு போய்விட்டான் சங்கர். இவர்கள் அங்கே போயிருந்த அந்த 9-9.30 மணிக்கு இவர்களின் கூக்குரலை கேட்க தோப்பின் அருகில் யாருமே இருக்கவுமில்லை. கத்திக்கொண்டே கெடிமேடு உடுமலை சாலை சந்திப்பு வரை ஓடியிருக்கிறார்கள். ஆனால், அதன் பின் சங்கரை அவர்கள் பார்க்கவேயில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின் பொள்ளாச்சி பொதுப்பணித் துறையிலிருந்த நண்பர் பிரகாஷுக்கு விஷயத்தைச் சொல்ல, அவர் அங்கே இருக்கும் பொறியாளர்களிடமும் லஸ்கர் எனப்படும் களப்பணியாளர்களுக்கும் சொல்ல, தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது. மதியமே பிரகாஷ், மூர்த்திக்கும் எனக்கும் செய்தி வரவும் நாங்கள் ஈரோட்டிலிருந்தும் கோவையிலிருந்தும் மாலைக்குள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.

சங்கர், சங்கர்ராமன் கோவையைச் சேர்ந்தவன்தான் என்றாலும் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே நான் தலைமையகத்தில் இருந்ததைவிட வெளியே அயல்பணியில் இருந்ததே அதிகம். இவன் அங்கே சேர்ந்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகியிருக்கும். இரண்டு மூன்று முறை நான் அங்கே போனபோது இந்த நண்பர்களோடு பார்த்திருக்கிறேன். அவனது உயரத்துக்கும் ஆகிருதிக்கும் சம்பந்தமில்லாமல் ரொம்ப அடக்கமாக இருப்பான். மிக மென்மையாகவே பேசுவான். பெரும்பாலும் பேசவே மாட்டான். எனக்கும் கோவை என்பதால் ஒரு சந்திப்பில் சற்று இணக்கம் கூடி குடும்ப விவரங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறான். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில்தான் பூர்வீக வீடு. ஆனால், சென்னையில் வேலைக்கு வந்தபின் வயதான பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனது ஒரே அக்காவின் குடும்பம் ஏற்கனவே சென்னையில்தான். இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியும். வயதும் 27, 28தான் இருக்கும்.

நேரம் ஆக ஆக எல்லோருடைய நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. இருட்டில் இனியும் தேடுவது முடியாது என்ற நிலையில் நாங்கள் அனைவரும் பொள்ளாச்சி ஆய்வு மாளிகைக்கு வந்து சோர்ந்து உட்கார்ந்திருதோம். ஆனால் மாலை 5.30 மணிக்கே அங்கிருந்த களப்பணியாளர்கள், “சார் இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியலன்னா இனி சுல்தான்பேட்டை சைப்பன்லதான் பாடி கிடைக்க சான்சு,” என்றார்கள். ‘பாடி’ என்ற சொல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. ஆனால், அவர்கள் இம்மாதிரி எத்தனையோ பார்த்தவர்கள். என்ன நடக்கும் என்று அறிந்தவர்கள். “வேற வழியில்லை சார், காலைல செய்தி வரும் பாருங்க,” என்று சொல்லிவிட்டு சுல்தான்பேட்டையிலிருந்த ஆட்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் போய்விட்டனர். பொறியாளர்கள் அனைவருமே அவர்கள் சொன்ன மாதிரிதான் நடக்கும், வேறு வாய்ப்பில்லை என்றார்கள்.

இதற்கிடையே, ஊருக்குப் போன மகன் போன் பண்ணவில்லை என்று சங்கரின் அப்பா பாண்டியனின் செல்லுக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டார். அங்கே இருந்தவர்களில் பாண்டியன்தான் சங்கருக்கு மிகவும் நெருக்கம். அவரால் என்ன பதில் சொல்வது என்றே தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால், களப்பணியாளர்களும், பொறியாளர்களும் இப்படி சொன்னதற்குப் பின் மாலை 7 மணியளவில், சங்கரின் அக்கா கணவரை அழைத்து, இங்கே சங்கரை கொஞ்ச நேரமாக காணவில்லை, தேடிட்டிருக்கோம், முடிஞ்சா நீங்க மட்டும் கொஞ்சம் இப்பவே கிளம்பி பொள்ளாச்சி வந்துருங்க, என்று சொன்னார். பின் திரும்பி எங்களிடம், “இவருக்கே கொஞ்சம் பத்தாது, ஆனால் சங்கருக்கு அண்ணன் தம்பி யாரும் இல்ல, அப்பாகிட்டயும் சொல்லவே முடியாது, வேற வழியில்லாமதான் இவருகிட்ட சொன்னேன், என்ன பண்ணப் போறாரோ,” என்று பரிதாபமாகச் சொன்னார்.

ஒன்றும் செய்வதற்கில்லை. இனி விடியற்காலையில்தான் தேடுதலைத் தொடங்கவும் முடியும். சென்னையிலிருந்து வந்தவர்களும் நாங்கள் உள்ளூர்க்காரர்களும், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி அரற்றியபடியே இரவைக் கழித்தோம். மறுநாள் காலை 7 மணிக்கே, பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பில் ஏறி அவரும் கதிரும் பாண்டியனும் சுல்தான்பேட்டைக்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவருக்கு சங்கரின் அக்கா கணவரிடமிருந்து போன் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து என்னிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

பாண்டியன் பயந்தபடியே சங்கரின் அக்கா கணவர் சொதப்பிவிட்டார். சங்கரின் அம்மா அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் அழைத்து வந்து விட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கலக்கம் கூடியது. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே காரில் இருந்த சங்கரின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடன் அந்தக் கலக்கம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த முகங்களில் இருந்த பேதைமையும் நம்பிக்கையும் எங்களை வாயடைக்க வைத்தது. ஒன்றும் பேசாமல் ஐ.பிக்கு கூட்டிச் சென்றோம். சங்கர் அங்க இருக்கானா, என்ற முதியவரின் கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஐ.பிக்குச் சென்று அறைகளுக்குள் அனுப்பி, ரெப்ரெஷ் செஞ்சுட்டு வாங்க சார், காபி டிபன் சாப்பிடலாம், என்று சொல்லிவிட்டு வெளியே உட்கார்ந்து கொண்டோம். சங்கரின் அம்மாவையம் அக்காவையும் பார்க்கவே துணிவில்லை.

சங்கரின் அப்பா எதையோ ஊகித்திருக்க வேண்டும். உள்ளே போனவர் மெதுவாக வெளியே வந்து, “சார் நான் சங்கர்கிட்ட இந்த ட்ரிப்பே போக வேணாம்னேன். கல்யாணத்துக்கு ஜாதகம் எடுக்கலாம்னு ஜோசியர்ட்ட இவன் ஜாதகத்தை கொண்டு போனப்ப அவரென்னவோ அத ரொம்ப நேரம் பாத்துட்டு, நீங்க இந்த ஜாதகத்தை அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிக்கு அப்பறம் கொண்டு வாங்க அப்ப பாத்துக்கலாம். இப்ப வேணாம்னு சொல்லிட்டார். அதுலேருந்து ஏனோ எனக்கும் மனசே சரியில்லே. இந்த வெளியூர்ப் பயணம்லாம் வேண்டாம்டான்னேன். என்னவோ அப்பறம் ஏதோ ஆபிஸ் எக்ஸ்சாம்லாம் வருது. படிக்க உக்காந்துட்டா எங்கயும் போக முடியாது, இந்த ஒரு தடவை ரெண்டுநாள்தானே போயிட்டு வந்துடறேன்னான். இவரு, பாண்டியனும் நாங்க பாத்துக்கறோம் சார், அனுப்புங்கன்னார். கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அனுப்பிச்சு வெச்சோம். ஒன்னும் பிரச்னையில்லயே,” என்று மென்று முழுங்கிக் கேட்டார். எதையோ சொல்லி சமாளித்து மீண்டும் உள்ளே அனுப்பி வைத்தோம்.

அவர்கள் வெளியே வருவதற்குள் பாண்டியனின் அழைப்பு வந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே இவர்கள் போவதற்கும் சங்கரின் உடல் சுல்தான்பேட்டை சைப்பனில் கிடைப்பதற்கும் சரியாக இருந்திருக்கிறது. பாண்டியன் போனிலேயே கதறி விட்டார். என்னால் அவருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவருக்கு.அவரே சற்றுத் தேற்றிக் கொண்டு, “பொள்ளாச்சி மருத்துவமனைக்குத்தான் கொண்டு வந்தாக வேண்டும், போஸ்ட் மார்ட்டம் பண்ணாம முடியாது, கூடுமான வரைக்கும் பாடிய ரொம்ப சேதப்படுத்தாம பாத்துக்கலாம்னு நம்ம இன்ஜினீர்செல்லாம் சொல்லிருக்காங்க, நீங்க இப்போதைக்கு அவங்ககிட்ட எதையும் சொல்ல வேண்டாம், அப்புறம் பாத்துக்கலாம்,” என்று சொல்லி போனை வைத்தார்.

பொள்ளாச்சி மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்படும் முன்னர் சங்கரின் உடலைச் சில கணங்கள் மட்டுமே பார்த்தேன். நல்ல ஆஜானுபாகுவான உடல், ஒரு விளையாட்டு வீரனின் உடல், நீருக்குள் இருந்ததால் உப்பிப் பெருத்து இன்னும் பெரியதாக இருந்தது. கண்கள் இருந்த இடததில் பள்ளங்கள். மீன்கள் கடித்துத் தின்றிருக்கும் என்றார்கள் அங்கிருந்தவர்கள். அதற்கு மேல் பார்க்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன். அதற்குப்பின் நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது. எப்படி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னோம், எப்படி சங்கரின் உடலை தகனம் செய்தோம், .எப்படி அவர்களை ஊருக்கு அனுப்பினோம் என்று இப்போதும் என்னால் முழுமையாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

சங்கரின் அப்பா, “சார், நாங்க முன்னாடி போறோம் நீங்க சங்கரைக் கூட்டிண்டு வந்துருங்கோ,” என்று எங்கள் ஒவ்வொருவரிடமும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். சங்கரின் அம்மா விஷயத்தைச் சொன்ன மறுகணம் மயங்கி விழுந்தவர், பின் அதிலிருந்து மீண்டு ஊர் திரும்பும் வரை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், அவர் எங்களை அனைவரையும் பார்த்த பார்வையில் இருந்தது என்ன என்றுதான் இனம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அது குற்றச்சாட்டா இறைஞ்சலா என்று ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் பதினொரு ஆண்டுகள் என்பது நீண்ட காலம்தான் போல. இவரையா, சங்கரின் அப்பாவையா நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை, என்று மனம் நொந்து கொண்டது. அந்தச் சம்பவங்களின்போது மனதில் தோன்றிய இனம்புரியாத குற்றவுணர்வு மீண்டும் குடையத் தொடங்கியது. சங்கரின் அம்மாவின் பார்வை மீண்டும் மனதில் எழுந்தது. கூடவே இவருக்கு என்னை அடையாளம் தெரியாதது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

இந்த எண்ணவோட்டங்களை, ‘சார் உங்களுக்கு சிரமமா இல்லேன்னா என்னைக் கொஞ்சம் இந்த ரோட்ட கிராஸ் பண்ணி எதிர்க்க ஆத்துல விட்டுர்றேளா,” என்ற அவரின் குரல் அறுத்தது. வேறு வழியில்லை. இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி என்று மெதுவாக அவரை அழைத்துக் கொண்டு ரோட்டைக் கடந்து வீட்டு வாசலில் விட்டேன். திரும்பலாம் என்று நினைக்கும்போதே, “சார் உள்ள வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டு போங்க சார்,” என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து, “இதே வேலையாப் போச்சு உங்களுக்கு, சொல்லிட்டுப் போனாத்தான் என்ன, எங்கயாவது விழுந்து வெச்சா உங்க மகளுக்கு நான்தானே பதில் சொல்லணும்?” என்று காட்டமாக ஒரு பெண் குரல் ஒலித்தது.

அதற்குள் அவர் பின்னால் நான் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்திருந்தேன். உள்ளே ஏதோ ஒரு ஒவ்வாத வாடை அடித்தது. என்னவென்று பார்க்கும்போதே பக்கவாட்டு அறையில், கட்டிலில் ஒரு முதிய பெண்ணுருவம் படுத்திருந்தது தெரிந்தது. அவர் கத்தியிருக்க முடியாதே என்று நினைக்கும்போதே உள்ளறையிலிருந்து எளிய தோற்றத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னைப் பார்த்ததும் அவரது முகபாவம் மாறியது.

“இதுதான் லட்சுமி, எங்கள பாத்துக்கறா, எம் பொண்ணு இங்கிருந்து நாலு மைல் தள்ளி இருக்கா, ரெண்டு நாளைக்கொரு தரம் பாக்க வருவா,” என்றார் பெரியவர்.

அதற்குள் அந்த லட்சுமி, “தெரிஞ்சவாளா சார், கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ! இப்படி சொல்லாம கொள்ளாம வெளில போயிடறார், ஏதாவது ஆச்சுன்னா நான் அவர் மகளுக்கு என்ன பதில் சொல்லறது? நான் படுத்துருக்கற அந்த மாமியோட பீ மூத்தரம் அள்ளுவனா, சமயலப் பாப்பனா, மத்த வீட்டு வேலைய கவனிப்பனா? இல்ல, இவரையே பாத்துண்டிருப்பனா? என்னதான் கைய நீட்டிக் காசை வாங்கினாலும் இவ்வளவு வேலையை ஒண்டிமா எப்படி சார் செய்யறது. சொல்லுங்கோ,” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

பெரியவர் முகத்தில் இப்போது ஒரு அசட்டுக் களை வந்திருந்தது. வாயே திறக்கவில்லை. என் பார்வை அந்தத் ரூம் பக்கம் போவதைப் பார்த்து மெல்லச் சொன்னார், “என் வைஃப்தான் சார், இப்ப ஒரு நாலு வருஷமா படுத்த படுக்கையாயிட்டா, எல்லாம் பெட்லதான். பாவம், இந்த லட்சுமிதான் எல்லாம் செய்யறா. நல்லவா சார். என்ன, அப்பப்ப என்னைக் கொஞ்சம் திட்டுவா,” என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார்.

என் கவனம் உள்ளே படுக்கையிலிருந்த பெண்மணியின் மேலே இருந்தது. இப்போது அவர் சற்றே திரும்பி ஒருக்களித்து எங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

பெரியவர், “லட்சுமி, சாருக்கு ஒரு தம்பளர் காபி போடு, அப்படியே எனக்கு அரை தம்பளர் குடு,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். லட்சுமி முணுமுணுப்புடன் உள்ளே போக, நான் அவசர அவசரமாக, “இல்ல சார், நான் காபி டீ குடிக்க மாட்டேன். அப்பறம் ஒரு வேலையிருக்கு உடனே போகணும்,” என்றேன்.

வாய் இதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், கண்கள் அந்த அறையில் படுத்திருந்த சங்கரின் அம்மாவையேதான் பார்த்துக் கொண்டிருந்தன.. அப்போது சட்டென்று அவரும் என்னை பார்த்தார். ஒரு கணம் என் கண்களை சந்தித்தது அவரின் கண்கள். என்னவோ சொல்ல எத்தனிக்க, வாய் கோணத் தொடங்கியது, கொஞ்சம் இனம் புரியாத சத்தங்கள் வந்தன. பெரியவர், “சார், அவ உங்களப் பாத்துதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றா,” என்றார்.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முதிய கண்கள் அப்போது பெற்ற கூர்மை என் வயிற்றிலிருந்து ஒரு சங்கடத்தைக் கிளப்பி நெஞ்சை லேசாக அடைத்தது. அர்த்தமற்ற ஒலிகள் இப்போது சற்றே தெளிவடையத் தொடங்கின. என்னை மிகக் கூர்மையாக பார்த்தபடி, மிகத் தெளிவாக அவர் சொன்ன, “பொள்ளாச்சி, பொள்ளாச்சி,” என்ற சொற்கள் என் காதைக் கிழித்தன. அடுத்த கணம் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ஒரு கணத்தில் ரோட்டைக் கிராஸ் செய்து வண்டியை அடைந்து உதைத்துக் கிளம்பினேன்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் போனபோது அந்த வீட்டில் ஏதோ விசேஷம் போல ஒரு சிலர் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். எனக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. வெளியே வந்த ஒருவரின் பின்னால் தொடர்ந்து சென்று மெதுவாக, “சார், அந்தத் வீட்ல என்ன சார்?” என்று தயங்கியபடியே கேட்டேன். உனக்கென்ன அதில், என்ற தொனியில் எற இறங்கப் பார்த்தாலும், “ஒரு டெத்து சார், காரியம்லாம் முடிஞ்சு இன்னிக்கு 13ம் நாள் கிரேக்கியம்,” என்றார்.

“அடடா முடியாம படுத்திருந்தாங்களே அந்த அம்மாவா?”

”அந்தக் கொடுமையை ஏன் சார் கேக்கறீங்க? அப்படியாவது நடந்திருக்கலாம். அவங்க ஆத்துக்காரர், எனக்கு சித்தப்பா முறை, அவர் போயிட்டாரு சார், திடீர்னு,” என்றார். நான் எதுவும் பதில் சொல்வதற்கு முன், “சார் அதோ பஸ்ஸு வந்துடுத்து,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தேனே தவிர எவ்வளவு நேரமான பின்னும் என்னால் உள்ளே போக முடியவில்லை.

அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்

அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.

மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.

பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின்  தனிச்சிறப்பு

புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம்  பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.

வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.  

தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறதுகதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது

விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.

நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்

புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிதுஇதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.

குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணிஎன்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.

இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.

கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.

 

காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.

கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.

படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.

விரிசல் – கா.சிவா சிறுகதை

சங்கரின் அம்மாவும் அப்பாவும் காமாட்சி மெஸ்ஸுக்கு இரண்டு நாள் விடுமுறை விட்டுவிட்டு உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். இந்த மெஸ்ஸில், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் மதியமும் இரவும் உணவுண்டு, கணக்கை குறித்து வைத்துக்கொண்டு மாதம் முடிந்து சம்பளம் பெற்றவுடன் கணக்கை முடிப்பார்கள். ஓய்வென்பதால் காலையில் சாவகாசமாக எழுந்து,  டீ குடித்தபடி தினத்தந்தியை புரட்டி, திரைப்பட விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருந் சுப்பு
” அண்ணே தீபாவளிக்கு குணாவும் தளபதியும் ஒன்னா ரிலீசாகுது” என்றான்  உற்சாகமாக.

ஆனந்த விகடனில் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்”  வாசித்துக் கொண்டிருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான்.
சுப்பு புதுக்கோட்டைக்காரன். மெஸ்ஸில்  சமையலுக்கு மட்டுமில்லாமல் எல்லா வேலைக்கும் உதவியாளாக இருக்கிறான். சங்கர் ஏதாவது டிகிரி படிக்கவேன்டுமென ஆங்கிலம் இல்லாத பி.ஏ. தமிழ் படித்துவிட்டு அப்பா அம்மா நடத்திவரும் மெஸ்ஸிலேயே சமைத்துக் கொண்டிருக்கிறான்.

” ராயல்ல குணாதான் போடுவான். நான் அதத்தான் பாக்கப்போறேன் . வர்றதுன்னா நீயும் வா” என்றான் சங்கர்.

   “வேண்டாம்.  நாதமுனில தளபதி போடுவான். நான் அங்கதான் போவேன்” என்று சற்று வளர்ந்திருந்த தன் தலைமுடியை வலக்கையால் மேல் நோக்கி தள்ளியபடி கூறினான்  சுப்பு.

அப்போது, திறந்திருந்த கதவின் வழியாக பரவியிருந்த வெளிச்சம் தடைபட்டதைக் கண்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க இருவர் தயங்கியபடி நின்றார்கள். முன்னால் நின்றவர் மாநிறத்தில் புன்னகைக்க வைக்கும் முகத்துடன், வேட்டி சட்டையில் இருந்தார். பின்னால்,  பேன்ட் சட்டை அணிந்து நின்றவர்  சிவந்த நிறத்தில் இருந்தாலும் பார்த்தவுடனேயே பார்ப்பவர்  மனதில் ஒருவித கசப்பை உருவாக்கும் முகவாகுடன் இருந்தார்.

” சார், இன்னைக்கு மெஸ் லீவு ” என்றான் சங்கர்.

  “அப்படியா, இன்னிக்கு காலையில நாலு மணிக்கு என் தாத்தா காலமாயிட்டார். எண்பத்தஞ்சு வயது. வர்றவங்களுக்கு  மதியச் சாப்பாடு வேணும். பக்கத்து வீட்டுக்காரர்தான் இங்க நல்லாயிருக்கும்னு சொன்னாரு. அதான் வந்தோம்” என்றார் முன்னால் நின்றவர்.

சங்கர் யோசிப்பதைக் கண்டு சுப்பு மெல்லிய குரலில் ” கொண்டு போய் குடுக்கிறதுதானே.  ஒத்துக்குங்கண்ணே. தீபாவளிச் செலவுக்கு ஆகும் ” என்றான்

சங்கர் சற்று யோசித்தபின்,  அவர் பக்கம் திரும்பி  “உள்ளே வாங்க சார்” என்றபடி எழுந்து வழிவிட, இருவரும் உள்ளே வந்து பெஞ்சில் அமர்ந்தார்கள்.  இரண்டாவதாக வந்தவர் கல்லா டேபிளையும்  மாட்டியிருந்த விலைப் பட்டியலையும் நோக்கினார். புன்னகை முகத்தவரைப் பார்த்து
” எத்தனை பேருக்கு சார்” என்று கேட்டான் சங்கர்.

” ஒரு எம்பது பேர்க்கிட்ட எதிர்பாக்கறோம். அதிகப்பட்சமா நூறத் தாண்டாது”

“எழுபத்தஞ்சு சாப்பாடு தர்றேன். சின்னப் பசங்க, பெண்கள்லாம் கலந்து சாப்பிட்டா நூறு பேரு சாப்பிடலாம் சார்”

” ஒரு சாப்பாடு எவ்வளவு. கொண்டு வந்து கொடுத்துடுவீங்களா. தெற்கு ஜெகனாத தெருதான்”

“ஒரு சாப்பாடு பதினஞ்சு ரூபா சார். மீன் பாடி வண்டியில ஏத்திக்கிட்டு வந்துருவோம். வண்டிக்கி நீங்கதான் கொடுக்கனும். முப்பது ரூபா கேப்பாங்க”

” சாப்பாடு நல்லா இருக்கனும் தம்பி. பணத்தை இப்பவே முழுசாக் கொடுக்கனுமா”

” வேண்டாம் சார். அட்வான்சா முன்னூரு ரூபா மட்டும் கொடுத்திடுங்க. மிச்சத்த சாப்பிட்டுட்டு திருப்தியா இருந்தா மட்டும் கொடுங்க. உங்க பேரு அட்ரச எழுதிக் கொடுங்க” என்று சுப்பு நீட்டிய டைரியை வாங்கி அவரிடம் கொடுத்தான்.

” என் பேரு சிவராமன். இவரு சரவணன். என் தங்கையோட  வீட்டுக்காரர். நான் அங்க வேலையா இருப்பேன். பாத்திரங்கள எடுக்கிறப்ப இவருக்கிட்ட மிச்சப் பணத்த வாங்கிக்கிங்க” என்று அருகில்  இருந்தவரைக் கைகாட்டினார். தனக்குள் ஏதோ கணக்குப் போடுவது போன்ற முக பாவனையோடிருந்த  சரவணனை சங்கர் ஒரு கணம் நோக்கினான். எழுதி முடித்த சிவராமன்   டைரியுடன் முன்னூறு ரூபாயையும் நீட்டினார். சங்கர் வாங்கிக் கொண்டான்.
.  ****
சுப்புவிடம், இருக்கும்  வெங்காயத்தை உரித்து வெட்டச் சொல்லிவிட்டு, பெரிய கேரியர் பொருத்தப்பட்ட மிதிவண்டியில்  ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த காய்கறிச் சந்தைக்குச்  சென்றான்.  பொறியலுக்கு வாழைக்காயும் கூட்டிற்கு பெங்களூர் கத்திரிக்காய் எனச் சொல்லப்படும் சவ்சவ்வும் வாங்கிக் கொண்டான். சாம்பாருக்கு கத்தரியும் முருங்கையும் வாங்கிக் கொண்டு கூடவே கொத்தமல்லி,  கருவேப்பிலையோடு ஒரு பெட்டி நாட்டுத் தக்காளியும் வாங்கிக் கொண்டான்.
சுப்பு வெங்காயத்தை வெட்டி முடித்துவிட்டு கண்ணாடியில் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான்.  தக்காளியை அலசி வெட்டச் சொல்லிவிட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தான் சங்கர். நல்லெண்ணையை கையில் தடவிக் கொண்டு வாழைக்காயின் தோலை சீவ ஆரம்பித்தான். சீவிய காய்களை  தண்ணீருள்ள சிறிய பாத்திரத்தில் போட்டான்.
வாழைக்காயை வெட்டியவுடன் மீண்டும் கைகளில் எண்ணை தேய்த்துக் கொண்டான். சவ்சவ் சீவும்போது சுரக்கும் நீர் கையில் பசைபோல படிந்துவிடாமல் இருப்பதற்காக. சவ்சவ்வை பொடிப்பொடியாக  வெட்டியவுடன் சாம்பார் காய்களையும் வெட்டி சிறிய பாத்திரத்தில் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி வைத்தான். பச்சை மிளகாய் கீறிக்கொண்டான். கறிவேப்பிலை உறுவிக் கொண்டு,  கொத்தமல்லியை நைசாக வெட்டி நீருள்ள சிறிய கிண்ணத்தில் அள்ளிக் கொண்டான்.
சுப்பு தக்காளியை வெட்டிவிட்டு,  புளிக் கரைசலில்  வெட்டிய  தக்காளியில் கொஞ்சம் அள்ளிப்போட்டு,  கீறிய பச்சை மிளகாய் ஒரு கைப்பிடி போட்டு கையால் நன்றாகக் கசக்கிக்  கரைத்தான். கையில் மிஞ்சிய தக்காளித் தோலை குப்பையில் போட்டுவிட்டு உரித்த பூண்டை வெத்தலை இடிக்கும் சிறிய உரலில் போட்டு, ஒன்றிரண்டாக  இடித்து தனியாக எடுத்து வைத்தான்.
அடுப்படியில், மூன்று அடுப்புகள்,  இடுப்பளவு உயரத்திற்கு மண்ணைக் குழைத்து அமைக்கப்பட்டிருந்தன. இரண்டடி நீளத்திற்கு அறுக்கப்பட்ட  சவுக்குக் கட்டைகளை எடுத்துவந்து அடுப்புகளின் அருகே போட்ட சுப்பு ,  மூன்று கொட்டாங்குச்சிகளில் அடுப்பிலிருந்த சாம்பலை அள்ளி,  கேனில் இருந்த மண்ணெண்ணையை , அதில்  நிரம்புமளவு ஊற்றினான். மூன்று  அடுப்புகளிலும் ஒவ்வொன்றை வைத்துவிட்டு அவற்றின் மேல் சவுக்குக் கட்டைகளின் நுனி இருக்குமாறு வைத்தான்.
பக்கத்துத் தெருவிலிருந்த நாயர் கடையில் வாங்கி வைத்திருந்த ஆப்பம் வடைகறியை தின்று விட்டு வந்த சங்கர்,  சாமியை கும்பிட்டபடி தீக்குச்சியை பற்றவைத்து மண்ணெண்ணெயில் நனைந்திருந்த சாம்பல் மேல் வைத்தான். தீ  மெதுவாகப் படர்ந்து எரிய ஆரம்பித்தது. முதல் அடுப்பில் உலைப்பானையை கொஞ்சம் நீரூற்றி வைத்தான். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பினான் சுப்பு. அடுத்த அடுப்பில் சட்டியை வைத்து நீரூற்றி வாழைக் காய்களை கொட்டினான். இரண்டு கைப்பிடி பச்சைப் பருப்பை தூவினான். பொடியாக வெட்டிய இஞ்சியை   வெந்து கொண்டிருந்த காயின் மேல் போட்டான். காய் வெந்து மலரத் தொடங்கும் கணத்தில் சட்டியை இறக்கி, நீர் வடிவதற்கான இடைவெளிகளுடன் பின்னப்பட்ட மூங்கில் கூடையில் கொட்டி கவிழ்த்தான். மறு அடுப்பில் கூட்டுக்கு பச்சைப் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்த்து   வேகவைத்த பிறகு  சாம்பாருக்கு தனியாக துவரம் பருப்பை வேகவைத்தான். இடுப்பில் கட்டியிருந்த ஊதா நிறத் துண்டை அவிழ்த்து முகம், கழுத்து மற்றும் கைகளைத் துடைத்துவிட்டு மீண்டும் இடுப்பில் கட்டினான்.
பெரிய இரும்புக் கடாயை அடுப்பில் வைத்தான். அதில் இருந்த ஈரம் முழுக்க ஆவியானபின் புகை எழுந்தபோது இரண்டு குண்டுக் கரண்டி கடலை எண்ணெயை சுற்றி ஊற்றினான். தாளிதச் சாமான்கள் இருக்குமிடத்திலிருந்த டப்பாக்களிலிருந்து , முதலில் கடுகை எடுத்து கடாய்க்குள் தூவுவது போல போட்டான். அடுத்து சோம்பு கொஞ்சம் தூவினான். கடுகு வெடித்து முடித்தவுடன் வரமிளகாய்களை இரண்டாக பிய்த்துப் போட்டு கருவேப்பிலையையும் போட்டான். சாய்த்து வைத்திருந்த அவனின்  இடுப்பு உயரமிருந்த இரும்புக் கரண்டியை எடுத்து கடாய்க்குள் கிளறினான். கருவேப்பிலை முறுகி வாசம் எழுந்தபோது இரண்டு கைப்பிடி வெங்காயத்தைப் போட்டான். வெங்காயம் வதங்கி எண்ணெயோடு இயைந்து  இளம்பொன்னிறத்தில்   மிளிரத் தொடங்கியபோது, சுப்பு கொடுத்த திருகி வெட்டப்பட்ட தேங்காய்ப் பூவை போட்டு பிரட்டினான். சுப்புவைத் திரும்பிப் பார்த்தான். பார்வையை உணர்ந்த சுப்பு தண்ணீர் வடிந்திருந்த கூடையை தூக்கிவந்து வாழைக்காயை   கடாய்க்குள் கொட்டினான்.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான். தூள் உப்பை  கொஞ்சம் கையில் எடுத்து காயின்மேல்  தூவிய பிறகு கரண்டியை உள்ளுக்குள் கொடுத்து நன்றாகப்  பிரட்டினான். அடியிலிருந்த தாளிதங்கள் முழுக்கப் பரவின. எழுந்து பரவிய வாசணையால் சுப்புவின் முகம் மலர்ந்தது. நன்றாகக் கிளறியபின் மீண்டும் ஒரு துண்டை வாயிலிட்டு சுவைத்தான். சங்கர் முகத்தில் திருப்தி தெரிந்தது. வெட்டியிருந்த கொத்தமல்லியை தூவிவிட்டு சுப்பு எடுத்துக் கொடுத்த எவர்சில்வர் சட்டியில் அள்ளினான். பச்சைப்பருப்பின் மஞ்சள் நிறத்தோடு கொத்தமல்லியின் பசுமை கலந்து வெள்ளை வாழைக்காய், இலையும் பூவும் பழமுமாய் பொலியும் வேம்பின் கிளையினை காண்பதான கிளர்ச்சியை மனதில் உண்டாக்கியது. சங்கர்,  சமைக்கும் போது ஒரு கணமும்  நிற்காமல் மூன்று பந்துகளை தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தைக்காரனைப் போல் இயங்கினான்.
சமையல் மேடையிலிருந்த கைப்பிடி துணியால்,  கடாயை இறக்கி கால்படாத ஓரமாக வைத்துவிட்டு கால்சட்டி தண்ணீருடன் அலுமினியச் சட்டியை அடுப்பிலேற்றினான். சவ்சவ்வைக் கொட்டி வேகவைத்து கூட்டு வைக்கத் தயாரானான். கூட்டு , சாம்பார் முடித்தபின் ரசத்தை பொங்க தொடங்கும்போது இடித்த பூண்டைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினான்.  அப்போது , முதல்  அடுப்பில் சாதம் , வடிக்கத் தயாரான பதத்தில் கொதித்தது.

சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தபோது பின் பக்க கதவின் வழியே பீறிட்டு வந்த காற்று உடலில் பட்டவுடன் சங்கரின் முகம் இயல்பானது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சங்கரை,  சுப்பு சற்று அச்சத்துடன்தான் பார்ப்பான். உள்ளே செல்லும்போதிருக்கும்   சங்கர் அல்ல ,  சமைப்பவன். சமைக்கும் போது வேறொரு தனியுலகில் இருப்பவன்,  மீள்வது வெளியே வரும்போதுதான். உள்ளேயிருப்பவன் அருள் வந்த குல தெய்வக் கோயில் பூசாரி போல. இயல்பாக பேசி சிரித்துக் கொண்டிருப்பவர் எந்தக் கணத்தில் மாறினார் எனத் தெரியாமல் நம்மை யாரென்றே உணராத வேறொருவராக அருளோடு இருப்பாரே அது போல. சமையல் செய்யும் போது எதுவும் பேசுவதோ சிரிப்பதோயில்லை. தீவிரமாகவே இருக்கும் முகம் சுவை பார்க்கும்போது மட்டும் சற்று இளகும். நன்றாக இருந்துவிட்டால் கனிந்துவிடும். இன்று நன்றாக கனிந்திருந்தது.

வெளியே மணியடிக்கும் சத்தம் கேட்டு சங்கர் போய் பார்த்தான். காலையில் சந்தைக்குச்  சென்றபோது சொன்னதற்கு, சரியான நேரத்திற்கு,  இடுப்பில்  லுங்கிகட்டி , கழுத்தில் துண்டைச் சுற்றியவாறு  கந்தய்யா தன் மீன்பாடி வண்டியுடன் வந்திருந்தார். சுப்புவும் கந்தய்யாவும் சேர்ந்து எல்லாவற்றையும் தூக்கி வண்டியில் வைத்தனர். சாம்பார் மற்றும் ரசப் பாத்திரத்தில் வாழையிலைகளை பரப்பியபின் தட்டால் மூடினான் சுப்பு.  கந்தய்யா வண்டியில் சுருட்டிக் கட்டி வைத்திருந்த கயிறைப் பிரித்து பாத்திரங்கள் அதிகமாக ஆடாமல் இருக்குமாறு குறுக்கும் நெடுக்குமாக கட்டினார். முகவரியை அவரிடம் கூறி அவரை அனுப்பினார்கள். மிதிவண்டியை  சங்கர் மிதிக்க சுப்பு பின்னால் அமர,  பின் தொடர்ந்தார்கள். வழியில் இருந்த வாழையிலைக் கிருஷ்ணன் கடையில் நூறு தலையிலைகளை வாங்கி சப்பு கையில் பிடித்துக் கொண்டான்.

தேட வேண்டிய அவசியமில்லாமல் தெருவில் நுழைந்ததும்,  துணிப் பந்தலை வைத்து,   உடனேயே வீட்டை அடையாளம் கண்டுகொண்டார்கள். எடுத்து அரைமணி நேரம் ஆகியிருக்குமென சங்கர் எண்ணினான். திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடு. கழுவிய திண்ணையின் தரையெல்லாம் பாதி காய்ந்துவிட்டது. ஓரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர டேபிளில், ஈரம் பாதி காய்ந்திருந்தது.. படர்ந்து விரிந்த கிளைகளுடன் தாட்டியான காவல்காரரைப் போல  தோற்றமளித்த வேப்ப மரத்தின் பாதுகாப்பில் அந்த வீடு இருப்பதாகப் பட்டது. ஓட்டின் மேல்   பழுத்த இலைகளும் மஞ்சள் தோலும்  உதிர்ந்து கிடந்தன.

மிதிவண்டியை ஓரமாக நிறுத்திய சங்கர் திண்ணையைக் கடந்து வாசலருகே சென்றான். உள்ளே  பெண்கள், பிள்ளைகளுடன் சில வயதான ஆண்களும் கலைந்து  அமர்ந்திருந்தார்கள். அவர்களை சுற்றி நோக்கியவன்,  ஒரு நடுத்தர வயது பெண்ணை தேர்ந்து,  அழைத்தான். ஏன் அவரை அழைக்கத் தோன்றியது என மனதிற்குள் துழாவியபடியே,  சாப்பாடு கொண்டு வந்ததாகக் கூறி எங்கே இறக்க வேண்டுமெனக் கேட்டான். இப்போதுதான் குளித்திருந்ததால்,  அவர் முகத்தில், அழுத சுவடு மறைந்து துலக்கம் தெரிந்தது. காலையில் வந்தவரின் தங்கையாக இருக்குமென சங்கருக்குத் தோன்றியிருக்கிறது. அவர் கூறியபடி எல்லாவற்றையும் வீட்டிற்குள் சென்று வராந்தாவில் வைத்தார்கள். பாத்திரங்களின் விவரத்தையும் பாக்கி எவ்வளவு என்பதையும் எழுதிய தாளை அந்தப் பெண்ணிடம் கொடுத்து
” இதை சரவணன் சார்கிட்ட கொடுத்திடுங்கம்மா. காலையில எட்டு மணிக்கு வந்து பாத்திரத்தை எடுத்துக்கிட்டு மிச்ச பணத்தை வாங்கிக்கிறோம்” என்றான் சங்கர்.

       திருமணமோ அல்லது வேறு விழாவாகவோ இருந்தால் இவர்களைப் பரிமாறச் சொல்வார்கள். இம்மாதிரி நிகழ்வுகளில் அவர்களே பரிமாறிக் கொள்வார்கள்.
” நீங்க சொல்றவரு என் வீட்டுக்காரர்தான். நான் அவர்க்கிட்ட கொடுத்திடுறேன். நீங்க காலையில வாங்க ” என்றார் அந்தப் பெண்.

                    ****
காலையில் மூவரும் அங்கே  சென்றார்கள். அதிகமான ஆட்கள் இல்லை. நான்கைந்து பேர் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள். துக்கம் ஏதும் தெரியாதவாறு இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் வேப்ப மரத்தடியில் பழங்களைத் தேடி காலால் அழுத்தி கொட்டையை பிதுக்கிக் கொண்டிருந்தார்கள். சங்கரைப் பார்த்தவுடன் நேற்று பேசிய பெண் எழுந்து வந்து              ” காப்பி குடிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

     “இப்பத்தாங்க குடிச்சிட்டு வர்றோம். நேரமாயிடுச்சு. பாத்திரங்கள் எங்கேயிருக்குன்னு சொன்னீங்கன்னா எடுத்துக்கிட்டு போயிடுவோம்” என்றான் சங்கர்.

         வீட்டின் பின்பக்கம் கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை பார்த்து எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறிக் கொண்டிருந்தபோதே   அருகே வந்த அவர் கணவர் சரவணன்,  மனைவியை பார்த்து    ” நீ போய் வேலையைப் பார். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மீற முடியாத அழுத்தத்துடன் சொன்னார்.
அவர் சென்றவுடன் சங்கர் பக்கம் திரும்பி ” நீ தான் சமையல் பண்ணுனியா ” என்று கேட்டார்.

    ” ஆமா சார். ரெண்டு வருசமா நாந்தான் சார் பண்றேன்” என்றான்.

    ” இதுக்குப் பேரு சமையலா. எங்க ஊர்லயெல்லாம் ரோட்டோரக் கடையிலேயே இதவிட நல்லாயிருக்கும்” லேசாக குரலை உயர்த்தினார்.

   ” எது  சார் நல்லாயில்ல” என்று வேகமாக  முன்னால் வந்து சுப்பு  கேட்டான்.

” டேய், நீ  கந்தய்யாவைக் கூட்டிட்டு போயி பாத்திரங்களை எண்ணி எடுத்துக்கிட்டு வா ” என அவனை அடக்கி அனுப்பிவிட்டு சரவணன் பக்கம் திரும்பி ” நீங்க சொல்லுங்க சார் ” என்றான்.

   “இன்னும் என்ன சொல்லனும். பொரியல் பண்ணியிருக்க சப்புன்னு. சவ்சவ்  கூட்டு வச்சிருக்க  சவச்சவன்னு. சாம்பார்ல காயவே காணாம். ரசம் ஒரே புளிப்பு. இப்படி ஒரு கை பக்குவத்த வச்சுக்கிட்டு, எப்படி தைரியமா, திருப்தியா இருந்தா மட்டும் மிச்சப் பணத்த தாங்கன்னு கேப்ப” என்றார் வாயைக் கோணியபடி,  ஆட்காட்டி விரலை நீட்டி.

சங்கர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

” சாப்பிட்டு முடிச்சிட்டா பணத்தக் கொடுத்துடுவாங்கன்னுதானே அப்படிச் சொன்ன. நான் அப்படிக் கொடுக்க மாட்டேன். பாதிப் பணம்தான் கொடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.

   சங்கர் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்து ” முடியாதுங்க. பாதிப் பணத்த நான் வாங்கிக்க மாட்டேன். நான் சொன்ன மாதிரி திருப்தி இல்லாத சாப்பாட்டுக்கு நான் பணத்த வாங்கிக்க மாட்டேன். சரியில்லாத சாப்பாட்டைக் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்கங்க” என்று கையை கூப்பிவிட்டு திகைத்துக் கூம்ப ஆரம்பித்த அவரின் முகத்தை நோக்காமல்   திரும்பி நடந்து சைக்கிளை எடுத்தான்.  ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிய  பாத்திரங்களை வண்டியில் ஓரமாக வைத்துவிட்டு அருகில் சுப்பு   அமர்ந்து கொள்ள, கந்தய்யா  மீன்பாடி வண்டியிலேறி ஓட்ட ஆரம்பித்தார்.

                *****
மாலை டீயைக் குடித்தபடி,  தினத்தந்தியை பத்தாவது தடவை புரட்டிக் கொண்டிருந்தான் சுப்பு. நேஷனல் டேப் ரெக்கார்டரில்   தளபதி படத்தின் ” சுந்தரீ… கண்ணால் ஒரு சேதி” யை  கேட்டுக்கொண்டிருந்தான் சங்கர். “தம்பீ ” என அழைக்கும் சத்தம் கேட்டு  கதவைத் திறந்தான் சுப்பு. சிவராமனும் அவர் அக்காவும் நின்று கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்த சங்கர் ” வாங்க சார், வாங்கம்மா” என்றபடி எழுந்தான். அவர்கள் உள்ளே வந்து மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்சில் இடைவெளிவிட்டு அமர்ந்தார்கள். சங்கர் நாற்காலியில் அமர்ந்து சுப்புவைப் பார்த்தான். புரிந்துகொண்ட சுப்பு டீ வாங்குவதற்கு செம்பை எடுத்தக் கொண்டு வெளியேறினான்.

” மன்னிச்சிடுங்க சார். சாப்பாடு சரியில்லாமக் கொடுத்ததுக்கு”

” தம்பீ… நீ தாம்பா எங்களை மன்னிக்கனும்”

சங்கர் நெகிழ்ந்திருந்த அவர்களின் முகத்தை நோக்கினான். தவறு செய்யாதவனுக்கு தண்டனையளித்த அறத்தோன் முகமென துடித்துத் தளும்பிக்  கொண்டிருந்தன இருவரின்  முகங்களும்.
” இந்த மாதிரி சாப்பாட்ட நான் இதுவரைக்கும் சாப்பிட்டதில்ல. வாழக்காயி எங்க வீட்ல செஞ்சா ஒன்னு ரப்பர் மாதிரி வேகாம இருக்கும். இல்லேன்னா வெந்து கொழஞ்சு போயிருக்கும். உங்க பொரியலு அருமையா வாயில வச்சி மெல்லறப்ப மிருதுவா இருந்துச்சு. இவ்வளவு பொடியா வெட்டின சவ்சவ் கூட்ட இது வரைக்கும் பார்த்ததில்ல. அடுப்புல வச்ச வெண்ண மாதிரி, அப்படியே மென்னவுடனேயே கரைஞ்சிடுச்சு. அப்புறம் ரசம். தக்காளித் தோலோ பூண்டுத் தோலோ கண்ணுலயும் படாம நாக்குலயும் தட்டுப்படாம முதத் தடவயா சாப்பிட்டேன். தாத்தா போன துக்கத்த மறந்து அப்படியே கிறங்க வைச்சிடுச்சு” என்றார் சிவராமன்.

   ” தம்பி, நீங்கவொன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க. காலையில ஒன்னுமே சரியில்லேனுட்டு இப்ப இப்படி பேசறமேன்னு. எங்க அண்ணன் நேத்தே பணத்தை என் வீட்டுக்காரர்க்கிட்ட கொடுத்திட்டாங்க.  என் வீட்டுக்காரர் மார்க்கெட்ல தண்டலுக்கு பணம் கொடுத்து வாங்கறாரு. அடுத்தவங்க பணத்த, ஒழைப்ப அடிச்சுப் புடுங்கிற    அந்தக் கொணம் எப்பவுமே போகாது.  ஏதாவது கொற சொல்லி பணத்தைக் கொறச்சு கொடுத்திட்டு அண்ணன் கொடுத்த பணத்துல கொஞ்சம் தனக்கு வச்சுக்கலாம்னு நெனச்சுத்தான் சாப்பாடு சரியில்லையினு சொல்லிட்டார் ” என்றாள் அந்தப் பெண்.

” வெளிய போயிருந்த நான்  வந்தவுடனேயே தங்கச்சி என்கிட்ட சொன்னுச்சு. அவருக்கிட்ட ஏதாவது கேட்டா வீண் மனவருத்தந்தான் வரும். அதனால அவருக்கிட்ட எதுவும் சொல்லாம நாங்க வந்தோம் ” என்றார் சிவராமன்.

சிவராமன் தன் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து சங்கரிடம் நீட்டி ”  உங்க வேலைக்கான ஊதியம் வாங்கிக்கிங்க”  என்றார் .

சங்கர் கை நீட்டாமல்  ” சார் பணத்தை உள்ளே வைங்க. நான் நேத்து சொன்னதுதான். திருப்தியில்லாம வாங்கிக்க மாட்டேன். அவருக்கு திருப்தி இல்லையில்ல”

” இல்லப்பா அவரு பணத்துக்கா சும்மா சொன்னாரு”

“எதுவாயிருந்தாலும் சொல்லிட்டாரு. இப்ப வாங்கிட்டா நான் சொன்னது சும்மாதான்னு ஆயிடும்ல”

அவர்கள் திகைத்தபடி சங்கரைப் பார்த்துக் கொண்டிருத்தார்கள். அப்போது உள்ளே வந்த சுப்பு டீயை சொம்பின்  அடியில் கொஞ்சம் வைத்துக்கொண்டு இரு தம்ளர்களில் ஊற்றிவிட்டு , அடியில் கரையாமலிருந்த சீனியை  சற்று கலக்கி மீண்டும் தம்ளர்களில் சம அளவாக ஊற்றி,   இருவருக்கும் கொடுத்தான். அவர்கள் வாங்கி அருந்த ஆரம்பித்த பின் சங்கர் பேச ஆரம்பித்தான்.

” எங்க அப்பா மட்டும் மெட்றாசில சமையல்காரரா வேல பாத்துக்கிட்டு இருந்தார்.  நானும் என் அக்காவும்  எங்கம்மாவோட, ஊர்லதான் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தோம். எங்கப்பாதான் கடை வைக்கலாம்னு எங்கள இங்க கூப்பிட்டாரு. ஊர்ல என் பெரியப்பா இருந்தாரு. பிடிக்காதவங்க யாருமேயில்லாம  எல்லாருமே மதிக்கிற மாதிரி ஒரு மனுசன் வாழ முடியும்னு காட்டிக்கிட்டு வாழ்ந்தவர் அவர். அவர்கிட்ட அம்மா போய் கேட்டாங்க,  இந்த மாதிரி சாப்பாட்டுக் கடை வைக்கனும்னு அவங்க கூப்பிடறாங்களே போகட்டுமான்னு. அதுக்கு எங்க பெரியப்பா சொன்னாங்க ” சோறு போடறதுங்கிறது ஒரு தர்மம். அத்தக் காலத்திலேயெல்லாம் அன்ன சத்திரம்னு வச்சு எல்லாருக்கும் சோறு தானமாத்தான் கொடுத்தாங்க. இப்பத்தான் வியாபாரமா ஆக்கிட்டாங்க. பசிக்கு   சோறு போட்டுட்டு பணம் வாங்கறது தப்புதான். அவங்ககிட்டயிருந்து வாங்கறது பணமில்ல பாவம்.   இருந்தாலும் , வேலைக்காக குடும்பத்த விட்டு வேற எடத்துல கெடந்து உழைக்கற நெறயப் பேரு  பணம் வச்சிருந்தாலும் சாப்பிடக் கெடைக்காம அல்லாடறாங்க.  அவங்க மாதிரி ஆளுங்களுக்கு சாப்பாடு போட்டு பணம் வாங்கிக்கலாம். ஆனா சாப்பிட்டுட்டு  மனசுத் திருப்தியா கொடுத்தாத்தான் வாங்கனும்னு ” சொன்னாரு . நானும் அவர் சொன்னதைக் கேட்டேன். சரி அப்படியே செய்யறோம்னு அவரு  கால்ல விழுந்து துன்னூறு பூசிக்கிட்டு வந்தோம். அவரு சொன்ன மாதிரியே,  அப்பலேர்ந்து சாப்பிட்டு விட்டு வந்தப்பறம் தான் நாங்க காசு வாங்கறோம். இது வரைக்கும் யாருமே குறையின்னு ஒன்னும் சொன்னதில்லை” என்று பேசி நிறுத்தினான் சங்கர்.

 ” நேத்து நான் சொன்னவுடனேயே சரவணன் சார் முகத்தப் பார்த்தேன்.  அவர் இப்படிச் சொல்ல முடிவு பண்ணீட்டார்னு அப்பவே புரிஞ்சுடுச்சு”

” தெரிஞ்சுமா இது மாதிரி நல்லா சமைச்சீங்க”

  ” நான் நெனச்சேன், என் சாப்பாட்ட சாப்பிட்ட பின்னாடி குறை சொல்ல வாய் வராதுன்னு. ஆனா நான் முதல் தடவையா தோத்துட்டேன். எதுக்காக வேணும்மின்னாலும் பொய் சொல்வாங்க, உணவால நிறைஞ்ச மனசால அதையே சரியில்லேன்னு சொல்லிற மாட்டாங்கன்னு ரொம்ப நம்புனேன். ஆனா நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்திடுச்சு. மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால தர்மமும் தோக்குற காலம் வந்திடுச்சுபோல”
என்று உதடுகளை சுழித்தபடிக் கூறி  அவர்களை நோக்கி  கை கூப்பினான்.

  சங்கரின் வார்த்தையில் இருந்த உறுதியையும் முகத்தில் தெரிந்த அவன் மனதின் ஏமாற்றத்தையும் கண்டு இளகிய முகத்துடன் இருவரும் எழுந்தார்கள்.

நீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை

“இருக்கும் போது உபயோகம் இல்லைனா அதுக்கு மதிப்பு இல்லடே. அதுவே இல்லைனா, இருக்க வர அருமை தெரியலன்னு மக்கமாறும், கட்டுனவளும் அழுவா. இவ்ளோதாம்டே” மறுவார்த்தை எதுவுமின்றி எங்கோடியா பேசுவதையே எதிரில் நின்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “விசுக்கு கோயில் நடைல இறங்குகேன், ஏத்தாப்புல நிக்கான். மாமா கைநீட்டம் கொடுன்னு கேட்டான்.நா இருவதை நீட்டுகேன், அம்பது கொடு மாமா. அடுத்த விசுக்குலாம் இருக்க மாட்டேன்னு சொன்னான். பயலுக்கு அப்போவே தெரிஞ்சுட்டு. குடிச்சு குடிச்சு உடம்ப நாசம் ஆக்கிட்டான்.” மூங்கில் கம்பு, வைக்கோல் கட்டு கொஞ்சமாய் இறங்கவும், கெண்டி வரவில்லை என யாரோ சொல்ல, சைக்கிளில் சுடுகாட்டு சுடலை கோயிலுக்கு எங்கோடியா விரைந்தார்.

கையில் கெண்டியோடு அவர் வரும்முன் கூட்டம் கூடிவிட்டது. எல்லாரையும் விலக்கி, “சொன்ன ஆட்காருலாம் வந்தாச்சா. இன்னும் அரைமணிக்கூறுல நீர் மாலைக்கு போனும்”, இறந்தவனின் கால்மாட்டில் அழுதுக்கொண்டிருந்த அவன் பொண்டாட்டியை பார்த்ததும் சட்டென நின்று ஏதோ சொல்லவந்ததை விழுங்கி, தொண்டையில் இறங்கிய கனத்தோடு வெளியிறங்கினார். “சாவுற பிராயமா, பொட்டப்பிள்ளை இருக்கு. இருக்க வர சலம் தான். ஒண்ணுக்கும் உருப்படி இல்லைனாலும், துணைக்கு கிடந்தான். சவம் போய் சேந்துட்டான்” எங்கோடியா மீண்டும் கூறினார்.

“வோய் எங்கோடி, இங்க வாரும்” கீழத்தெரு சண்முகத்தின் குரல், எங்கோடியா நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி சென்றார். “இரண்டு குப்பி எடும், நேரம் கிடக்கு, கடுக்கரைல இருக்க மருமவ வர சமயம் கிடக்கு. ” என்றபடி ருபாய் நோட்டை கையில் சொருக “சரி, நீரு நாடார்ட்ட கப்பு, தண்ணி, தட ஊறுகாய் வாங்கி வைங்கோ” கூறியபடியே சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். முத்து தியேட்டர் டைம்பாஸ் நாகர்கோயில் பிரசித்திப்பெற்ற மதுக்கடை. மணி காலை பத்தரையை கடந்திருக்காது, அதற்குள் நீண்ட வரிசையில் ஒழுங்கான கூட்டம் முன்னே நகர்ந்துக்கொண்டிருந்தது. எங்கோடியா பழக்கத்தின் காரணமாய் உள்ளே பாரின் மறுவாசல் வழியே வாங்கி விர்ரென்று விரைந்தார்.

“நல்லவன், நாலு சக்கரம் உண்டு. இருந்து என்ன மயிருக்கு, சுப்ரமணியபிள்ளை சாவுக்கு நாலு பேரு வந்தான், வந்தவனுக்க பவுச பாக்கணுமே, எழவு பாடை தூக்க ஆளு சம்பளத்துக்கு. இவன் பிச்சைக்காரன், எவ்ளோ ஆளு. பழக்கம் தானே. பழக்கத்துக்கு தானே மனுஷன் வாரான்.” சண்முகம் கூறிக்கொண்டே குப்பியை திறந்து, தண்ணீரையும் நிரப்பிக்கொண்டே “மனுஷனை என்ன சொல்ல. கட்டுனவளும், மக்கமாறும் அழுது தீர்த்து அவாள் பாவத்த கரைக்கா. குடிக்கவன என்ன சொல்ல, லெட்சுமணன் வந்துட்டான். கவனிச்சீரா”, “துஷ்டி வீட்டுல அவன் இல்லாம காரியம் உண்டா. மண்ணெண்ணெ ஊத்திருப்பான். பெகலம் உண்டு, ஆனா காரியம் நடக்கும்” என்றார் எங்கோடியா. விஷேஷம் நடந்தாலும் வருவதில்லை, மாறாக துஷ்டி வீடுகளில் ஊர்குடிமகனை விஞ்சி எல்லாமே அவனால் நடக்கும்.

குப்பி காலியானதும், இருவரும் அசைந்தாடிய நடையை இறந்தவீடு வந்ததும் சரிக்கட்டினார். “மாமா, நீர் மாலைக்கு போவோம். மாவிலை கொப்பு முறிச்சு கொண்டாந்திருக்கேன்.” என்றான் லெட்சுமணன். “சரி, மகன எங்க. கெண்டி, தேங்காய், சருவம் எல்லாம் எடுத்தாச்சா”, “எல்லாம் இருக்கு, எண்ண வச்சுருவோம்” என லெட்சுமணன் கூற, உடல் வெளியே எடுத்துவரப்பட்டு பொம்பளைகள் வரிசையாக தலைக்கு எண்ணெய், வாய்க்கரிசி போட, மக்கமாரின், கட்டியவளின், உடன்பிறந்தாளின், அம்மையின் அழுகை கூடியது. பின் தயாராய் இருந்த ஆட்கள் கூட்டம் நடந்து நாலுமுக்கு சந்தியை அடைந்தது. “மக்கா, பைப்புல தண்ணி பிடிச்சு தலைல ஊத்திக்கோ, தாய்மாமன் முன்னாடி வாப்பா”, வந்ததும் கெண்டியில் தண்ணீரை நிரப்பி, அதன் நெடுச்சாணாக வைத்த தேங்காயை சரிபார்த்ததும், ஊர்குடிமகன் நூலை சுற்றி கையில் சரிபார்த்து வைத்திருந்தான். “நெத்தில பட்டை அடிச்சுக்கோ, தாய்மாமா நூல வலதுபக்கமா மாட்டி, இடது தோள்பட்டைல தொங்கவிடு” என்றான் லெட்சுமணன். “நீர்குடம் தூக்குறவங்களும் குளிச்சு பட்டை போட்டுக்க” என்றபடியே உயரமான நால்வரை அழைத்து கையில் மாங்கொப்பை கொஞ்சமாய் கொடுத்து, வேட்டியை விரித்து அதன்முனையோடு சேர்த்து, நீர்மாலை போகும் மகனோடு போகவேண்டும் என எங்கோடியா சொல்லிக்கொண்டிருந்தார்.

சரியாய் நாலுமுக்கு சந்தியில் வைத்திருந்த கெண்டியை, அதன் மேலோடு நீட்டமாய் வைத்திருந்த தேங்காயோடு சேர்த்து தாய்மாமன் எடுத்து மகன் தலையில் வைத்தான். கூடவே உயரமான நால்வர் வேஷ்டியை கெண்டிக்கு மேலே தூக்கி செல்ல, எதிரில் என்ன வேலையாக சென்றார்களோ! அனைவரும் வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். ஒப்பாரி சத்தம் தெருவிலே சோகமாய் ஒலிக்கும் புல்லாங்குழலின் வலியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அடுத்து பிறந்தவீடு கோடியாய் சேலைகள் கட்டியவளை மேலும் அழவைக்க, மகன் கையால் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பாட்டி, ஒவ்வொன்றாய் நடக்க, செத்தவன் இனி வரப்போவதில்லை, இதோ பாருங்கள் இவன்தான் உன்னோடு வாழ்ந்து தீர்த்தான். முடிந்துவிட்டது, மகனே, மகளே, நீ இவனை அதிகம் நேசித்தாயே, இல்லை வெறுத்தாயே. பாவம் குடிகாரன். இனி குடி, குடி என அவன் நாவு துடிக்காது. அலையாத தாகம் கொண்ட இவன் குடிவயிறு, கங்குகள் பொட்டி தெறிக்கும் குழியில் கரைய போகிறது. கடைசியில் சாம்பலே மிச்சம். அதுவும் உங்களுக்கு அல்ல.

பழையாற்றின் இடப்புறமாய் கீழிறங்கி பாடை சென்றுகொண்டிருந்தது. கோழிக்கொண்டையும், செவ்வந்தியும் சாலையை நிரப்ப, கொஞ்சம் நடப்பவரின் காலில் மிதிபட்டு கதறியது, கூடவே வண்டிகளின் சக்கரமும் பூக்களை நசுக்கியது, அலங்கோலம். எங்கோடியா முன்னால் சைக்கிளில் செல்ல, லெட்சுமணன் பாதியில் காணாமல் போனான். பாடை, குழியருகே நெருங்கவும். போனவன், செய்யது பீடியை பற்ற வைத்துக்கொண்டே “பாத்து இறக்குங்கல, அவசரத்துல பொறந்தவனுகளா. பைய பைய”, குரலிலே சாராயவாடையும் குபீரென காற்றிலே வீசியது. “மண்ணு வெட்ட ஆள் உட்டாச்சா. லேய் ஊர்குடிமகன எங்க” கூட்டத்தில் ஒருவன் உரக்க கத்த “மாமா, மிஸ்டர்.பாலு, உங்கள தான் கூப்டுகானுக” லெட்சுமணன் தன்பங்கிற்கு சொல்ல “என்னா லெட்சுமணா, நாசுவன் உனக்கா மாமாவா, தப்பா போயிரும்டே”, “லேய், மக்கா. கிடக்காதோ. அவன நோண்டாத” சிரித்தபடி சொன்னார் எங்கோடி. “எங்க அம்மைக்கு அண்ணன்லா பாலு மாமன். ” பதில் வந்தது லெட்சுமணனிடம் இருந்து.

இறந்தவனின் மகன், இதையெல்லாம் கண்டபடி சிரித்துக்கொண்டிருந்தான். அடுக்கி வைக்கப்பட்ட கதம்பத்தில் பாடையை வைத்து, வாய்கரிசியும், பாலும், கொஞ்சம் சில்லறைக்காசும் ஆம்பளைகள் போட, ஒரு சிறுவன் வலது கையால் போடப்போக “மக்கா, இடது கை” என்றார் எங்கோடி. “ஆண்டவன் எதுக்கு ரெண்டு கைய கொடுத்திருக்கான். ஒன்னு தான் நல்லதுக்குனா, எதுக்குவோய் ரெண்டு. நாம என்னன்னா அதுல நல்லது, கெட்டது பாக்குறோம். நீ எந்த கைல வேணும்னா போடு மக்கா”, எங்கோடியா சிரித்த முகத்துடன் “நீ சொன்னா, மாமனுக்கு மறுபேச்சு உண்டா” என்றார்.

பாடையை கவிழ்த்து ஆண்சவம் தலைக்குப்பிற விழுமாறும், பெண்சவம் படுத்தவாறு கிடத்துவதும், எரியும் போது முதுகெலும்பு உடைந்து மேலே எலும்பு சில்லுகள் தெறிக்குமாறு போவதை தடுக்கும். இதில் லெட்சுமணன் கூட ஒத்தாசைக்கு இருந்தால் எங்கோடியாக்கு மண்டைக்கடி கிடையாது. லாவகமாக பாடையை நவுத்தி கதம்பத்தில் இறக்குவான். இறந்தவனின் மகன், கதம்பையில் கங்கை போட, எல்லாம் சரியாக்கி மேலே வைக்கோல் நிரப்பி மண்ணால் சாந்து பூசி, மூன்று ஓட்டையும் இட்டு ஒழுங்காய் பூசினார்கள்,

இதற்கிடையே இறந்தவனின் கூட்டுக்காரன் உச்சகுடியின் போதையில், வாயில் வழியும் எச்சியோடு “என்னல சடங்கு மயிரு. எல்லாம் உங்க இஷ்டமயிருக்கு மாத்துவீலோ. தேவிடியா பயக்களா. ரூவா, மயிறுனு வாங்க, கொட்டைய அறுத்து தாரேன்”. சட்டென கன்னத்தில் பளீரென ஒரு அடி, லெட்சுமணனின் வலதுகை, அடிவாங்கியவன் சாந்து எழுப்பிய குழியின் தலைமாட்டில் விழுந்தான். “ஒப்பனஓழி, இதே குழில இறக்கிருவேன். என்னல பேச்சு. என்ன சடங்கு மயிரு ஒழுங்கா செய்யல. குடிச்சா வயிறு கிடக்காதோ. கிடக்கணும், இல்ல சங்குதான்” நாக்கை மடித்து சுடலையை போல நின்றான் லெட்சுமணன். “மக்கா நாசுவனுக்காக என்னடே நம்ம ஆள அடிக்க. உம்போக்கு சரியில்ல கேட்டியா” ஏதோ கிழவனின் குரல். எங்கோடி சட்டென சுதாகரித்து இன்னும் பிரச்சனை வேண்டாம் என்பது போல “பின்ன செத்த வீட்டுல, அதுவும் குடிகாரன் செத்தா பெகலம் இல்லாம சவம் எரியுமா. லெட்சுமணா நீ ஒதுங்கு. ஊர்குடிமகனுக்கு வாய் இல்லையா. அவன் பேசட்டும். என்ன பாலு. சடங்குல குறை இருக்கா.”, “ரூவா தர்ரதுக்கு மடி இருக்க ஆட்களுக்கு இப்புடி சண்ட பிடிச்சாதான், இத சாக்கா வச்சு கடைசில குறைக்க முடியும்” பாலுவின் குரல். “குழி நிரப்ப வேலைல வாய பாத்தியால கிழடுக்கு, மண்டைய தட்டி வேல வேங்கணும் ” கூட்டத்தில் ஒரு இளைஞனின் குரல். “ஊம்புவ, தட்டுல. நெஞ்சுல திராணி இருக்க வெள்ளாளன் ஒருத்தன் இருந்தா பாலு மாமா தலைய தட்டுல.” மீண்டும் சுடலை ஆனான் லெட்சுமணன். என்ன நடக்கிறதோ, புரியாமல் இறந்தவனின் மகன் நின்றுகொண்டிருந்தான். “இதெல்லாம் கண்டுக்காத மக்ளே, உங்க அப்பன் பண்ணாத கூத்தா, லேய் பாலு அடுத்த வேலைய பாரு. “ மொட்டை போட பாலு மகனை அழைத்துச்சென்றார்.

இதற்குள் சலசலப்பு பெருகி குடிகாரக்கூட்டம் கத்தியது. எங்கோடியா இதையெல்லாம் பார்த்து சிரித்தபடி “ஊ த எங்கடே”, “யாரு ஊத்து. “ குலுங்கி சிரித்தபடி சண்முகம் கேட்டார். “ஊர்த் தலைவரு எங்க. இவ்ளோ கூத்துக்கும் ஆள காணுமே. எங்க பேள கீள போய்ட்டாரா” எங்கோடி. “அவரு பொம்பள படித்துறை பக்கம்லா நிக்காரு மாமா” லெட்சுமணன். “எல்லாவனுக்கும் வாய் கூடி தான் நிக்குடே. சரி கணக்கு எல்லாம் ஏற்கனவே போட்ருபியே எங்கோடியா . சொல்லும் உம்பங்கு என்ன. உனக்கு வரும்படி இதானையா. என்ன சொல்லுகீறு” ஊ த வின் சொல்லுக்கும் சிரிக்க ஆள் இல்லாமல் போகுமா!.

இதற்கிடையில் மொட்டையிட்ட மகனை பாலு குளித்துவர சொல்ல, ஆட்கள் மயான சுடலையின் இடப்புறம் எழுப்பிய திண்டில் உட்கார்ந்து “சரி, பாலு. எவ்ளோ ஆச்சு. கணக்க சொல்லு. லெட்சுமணா நீ பேசக்கூடாது” என்றார் ஊ த. “யாரும் பேசல. ஆனா பாடைக்கு, குழி வெட்டுக்கு உள்ள சக்கரத்தை மட்டும் கொடும்” என்றார் எங்கோடி. “உமக்க பங்கையும் சேக்கலையா ” கூட்டத்தில் ஒருவன் சொல்ல, “லேய், சக்கரம் வாங்க மனசு உண்டு. ஆனா இருக்கப்பட்டவன்ட்ட கேப்பேன். இல்லாதவன்ட்ட என்ன கேக்க. எம்பங்கு, லெட்சுமணன் பங்கு இதுல கிடையாதுவோய். நமக்கும் நாளைக்கு இதானயா நிலமை” என்றார் எங்கோடி. “மாமனுக்கு வெள்ளாளக்குடில கிடந்தாலும் அவனுக புத்தி இன்னும் விளங்களையே. நாறபயக்க”, “லெட்சுமணா வாய் கிடக்காது” காட்டமாக கூறினார் ஊர்த்தலைவர். எங்கோடியாவும், லெட்சுமணனும் வடக்காறை நோக்கி நடக்க, லெட்சுமணன் மடியில் இருந்த அரைப்பாட்டில் ஓல்ட் மங்கை வெளியே எடுத்தான். மொட்டைத்தலை மகன் மாத்திரம் அவர்கள் போகும் வழியை பார்த்துக்கொண்டிருந்தான். கூடவே, எரியும் பிணமும்.