சிறுகதை

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.

வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது..

தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால் சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்.. உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.

சித்ராவின் கோபத்துக்கு பின்னிருக்கும் நியாயம் காடாக அடர்ந்து பரந்திருந்தது. அதன் பெரிய உடலுக்கு.. அதன் பழக்கவழக்கங்களுக்கு.. அதன் சுதந்திரப் போக்குக்கு.. அதன் தனிமை விருப்பத்துக்கு.. ஏற்ற தாரளமான பரப்பு. உயிரியல் பூங்காவின் மொத்த பரப்பும் சித்ராவுக்கே போதாது. மலையடுக்குகள் பனித்திரைக்குள் வரையப்பட்ட கோட்டோவியங்களாய் தெரிந்தன. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. நான் நிற்கும் இந்த இடம் கூட அவை போன்றதொரு சிகரமாகதான் இருக்க வேண்டும். அங்கு பொசிய பொசிய அண்டிக் கிடக்கும் பசுமை இங்கேயும் இருந்திருக்கும். பின்புறமாக திரும்பிக் குடிலைப் பார்த்தேன். ஐந்து நட்சத்திர விடுதி போல அத்தனை பெரியது.. அத்தனை நவீனமானது.. இத்தனை நவீனங்களையும் இங்கு சேர்க்க எத்தனை இயற்கை செலவாகியிருக்கும்..? நான் பணியில் சேர்ந்த போதுதான் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தாள். பார்த்தபார்வைக்கே அவளை பிடித்திருந்தது. ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய என்னுடைய சூழல் சித்ராவின் சூழலை ஒத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

காட்டைப் போல சித்ராவின் மூர்க்கமும் சமாளிக்க இயலாத பெருவெளிதான்.. பார்வையாளர்கள் சிலரை ரத்தக்காயப்படுத்தியிருக்கிறாள். இவள் மரணத்துக்கு சிபாரிசு செய்த கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருந்தேன்.. செய்தாக வேண்டிய நெருக்கடி. நான் திரும்பவதற்குள் சித்ரா இல்லாமல் போகலாம். குடிலுக்குள் வர மறுத்து திறந்தவெளியில் தலையை திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்த அந்த கம்பீரமான தோற்றம்தான் இறுதியானதாக இருக்கலாம். இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மரண தண்டனைக்கு நாள் குறித்தாகி விட்டது. தேவைப்பட்டால் ஆட்களை வரவழைத்துக் கொள்வதாக சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டேன்.

அதேசமயம் இங்கு வர வேண்டிய தேவையும் இருந்தது. இல்லையெனில் அத்தனை சுலபமாக அனுமதி கிடைத்து விடாது. நாளை காலையிலிருந்து வேலை துவங்க வேண்டும். வேலை என்ன வேலை.. புலியை கண்டுப்பிடிக்கும் வேலைதான். இந்த காட்டில் புலியின் தடம் தென்படுகிறதாம்.. நாட்டில் மனிதத்தடம் தென்படுகிறாம் என்று புலிகளெல்லாம் இப்படி ரூம் போட்டு யோசிக்குமோ..? அது கிடக்கட்டும்.. செயற்கைக் கோள் காமிராவைக் கூட ஏமாற்ற முடியுமா..? ஏமாற்றியிருக்கிறது ஒரு ஒற்றைப் புலி.. அப்படிதான் சொல்கிறார்கள்.. புலியின் தடத்தை கண்டதாக சொன்னவர்கள். அவர்கள் சுரங்கக்கூலிகள். வெறும் கூலிகள் மட்டுமல்ல.. இங்கிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகள் என்பதால் நிச்சயம் நம்பிதான் ஆக வேண்டும். நம்பியதால்தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.

”சார்.. சாப்பாடு எடுத்து வச்சிறவா…?” பின்னால் திரும்பினேன். குடிலின் பணியாள். உயர்த்தி பொருத்திய தொப்பி.. நேர்த்தியான உடைகள்.. கையுறை.. ஷு அணிந்த கால்கள் என சுத்தபத்தமான மனிதராக தெரிந்தார்.

”பத்து நிமிஷம் கழிச்சு வர்றேனே..” என்றேன்.

சித்ராவுக்கு பிறந்த மூன்று குட்டிகளில் சீத்தாவும் பன்னீரும் துறுதுறுப்பானவை. மாயா பிறந்த ஒரு மாதத்தில் இறந்துப் போனாள். வளர வளர பன்னீரை விட சீத்தாவிடம் துறுதுறுப்பும் துடிப்பும் அதிகம் தெரிந்தது.என் மடியிலும் தொடையிலும் நிமிண்டி விளையாடும்போது அவற்றின் உடல்பலத்தை என்னால் உணர முடிந்தது. சீத்தாவும் பன்னீரும் உணவுரீதியாக தாயை அண்டவிடாமல் பழக்கப்படுத்தப்பட்டது கூட இந்த மரண தண்டனையின் தொடக்கமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டேன். டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை அங்கிருந்த ஒருவர் சிநேகமாக நீட்ட.. தயக்கமாக வாங்கிக் கொண்டேன். அறிமுகத்தொனியில் சிரித்தார். மேற்கொண்டு நகரவியலாத என் மௌனம் அவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேலும் அவரை சங்கடப்படுத்தாமல் என்னை விடுவித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். தனிமைதான்.. படுக்கையறை உட்பட எல்லா இடங்களுமே தனிமைதான். விரும்பி அமைத்துக் கொண்டேனா.. அல்லது அதுவாக அமைந்து விட்டதா.. ஏதோ ஒன்று.. தனிமையும் மௌனமும் எனக்கு பிடித்துப் போனது.. மலையடுக்குகளில் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். சித்ராவால் என்னை உணர முடிவது போல. அவள் உணர்வதை என்னாலும் உணர முடியும். அவளுக்கு என் அன்பு தெரியும்… சித்ரா.. என்ற அழைப்புக்கு ஸ்ஸ்ஸ்.. என ஒலிக் கொடுப்பாள். என் அதட்டல் தெரியும்.. என் கடிந்துக் கொள்ளல் தெரியும்.. அடைப்பட்டிருக்கும் கம்பியில் முட்டி என் கவனத்தை கலைக்கும் அவள் கோபம் எனக்கும் புரியும். மெல்ல மெல்ல தணிந்து தெளியும்போது நான் செல்லக் கோபத்தில் நகர்ந்துக் கொள்ள மூச்சுக்காற்றின் சீறலை எச்சிலாக தெறித்து என்னை சமாதானப்படுத்துவாள். எனக்குதான் தெரியவில்லை.. இனி சித்ரா இல்லாத நாட்களை எப்படி கடத்துவது என.

”என்ன சார்.. மனுஷன்ட்ட பேசற மாதிரி புலிக்கிட்ட பேசுறீங்க.. அதுக்கென்ன தமிழா தெரியப் போவுது..?” என்றார் உயிரியல் பூங்கா ஊழியர்.

”ஏன் தெரியாது.. நல்லா தெரியும்..” என்றேன்.

இன்டர்காம் ஒலியில் கலைந்து எழுந்தேன். ”லிக்கர் எதும் வேணுமா சார்..”

”ம்ம்..” யோசித்தேன்.. “இல்ல.. வேணாம்..“

நிச்சயம் உறக்கம் வரப் போவதில்லை. எழுந்து வெளியே வந்தேன். செயற்கை குளிரூட்டியை விட இயற்கை அதிகமாக குளிர்ந்து கிடந்தது. கம்பளியை போர்த்திக் கொண்டேன். இந்த இடத்தில் முன்பு யானைகள் கூட்டமாக வலசை வந்திருக்கலாம். காட்டுப்பன்றிகளும்.. கரடிகளும் மான்களும்.. அவற்றோடு இணக்கமாக பழங்குடிகளும் வாழ்ந்திருக்கலாம். ஏன்.. சித்ராவும் அவள் குடும்பமும் கூட இங்கு உலவியிருக்கலாம். காட்டின் வேட்கை தணியாத நேரங்களில் அறைக்குள் நுழைய பிடிவாதம் காட்டுவாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் மூர்க்கத்தை விட குழப்பமே மிகுந்து தெரியும். ஏதிலி வாழ்க்கை ஏற்படுத்தியக் குழப்பம். அந்தக் குழப்பத்தில்தான் இரண்டு மனித உயிரை காவு வாங்கியிருந்தாள். அதற்காக விதிக்கப்பட்டதுதான் இந்த மரண தண்டனை.

காட்டையும் விலங்குகளையும் தவிர்த்து மனிதர்கள் உறங்கத்தில் கிறங்கியிருந்தனர். லான், சிறு விளக்கு ஒளியில் வெகு சுத்தமாக தெரிந்தது. தடித்த கண்ணாடி சன்னல்களின் வேலைப்பாடுகள் வெளிப்புறக்காட்சியை முற்றிலும் மறைத்திருந்தன. கதவை திறக்க முயல, காவலாளி விழித்துக் கொண்ட பிறகு திடுக்கிட்டுப் போனார். அவரிடம் சமாதானமாக சிரித்தேன்.

”சார்.. நைட்ல வெளிய போறது பாதுகாப்பில்லைங்க..” என்றார் நன்றாக விழித்துக் கொண்டு.

”இத்தன தடுப்ப மீறி என்ன நொழஞ்சுடும்..? ஸ்வெட்டரை வேன்ல வச்சிட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றபடி நடந்தேன்.

வேனிலிருந்து கீழே இறங்கியபோது தான் காவலாளி எனக்கு காவலாக நிற்பதை கவனித்தேன்.

”ஸ்வெட்டருங்க..” என்றார் ஞாபகம் படுத்தும்தொனியில்.

அதை சட்டை செய்யாதவனாக ”அய்யோ.. சாரி.. நீங்க நிக்கறத கவனிக்கல..” என்றேன்.

என் எண்ணத்தை புரிந்தவர் போல ”சில பேரு இப்டிதான் ராத்திரி நேரத்து காட்டை பாக்க விரும்புவாங்க.. வியூ பாயிண்ட்க்கு போலாமா சார்..” என்றார்.

உடனே சம்மதித்தேன். அருகிலிருந்த கூம்ப வடிவ சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார். உட்புறமாக அமைக்கப்பட்ட சுழலும் படிகளின் வழியே மேலேறினோம். உயரம் கூட கூட அகலம் குறுகிக் கொண்டே வந்து வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானத்திற்குள் எங்களை சேர்த்தது. இரண்டு ஆள் நிற்பதற்கேற்ப அகலத்தில் கட்டுமானம் வெளிப்பகுதியில் விரிந்து, சற்றே நெருக்கமான இரும்புக் கம்பிக்குள் அடைப்பட்டிருந்தது.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றக்குமான கண்ணாடிக் கதவு. காலடியில் சிறுஒளியை எழுப்பிய மின் விளக்கு என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடில்.

மலைக்காற்று கடும் குளிராக தோன்றியது. பகலில் தெரிந்த காட்சிகள் இரவில் புதிது போலிருந்தன. வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காணுமிடங்கெங்கும் பரவியிருந்த இருள் கண்களுக்கு பழகத் தொடங்க, வனம் புலப்படத் தொடங்கியது. நகரத்து இருளைப் போல வனத்தின் இருள் அமைதியானதல்ல. அது குகையின் அந்தகாரத்தை போல ஆழமானது. மனிதனின் ஆசையை போல முடிவற்றது. சித்ராக்களை கீழிறக்கும் ஆசை.. சட்.. சித்ராவை மறக்க வேண்டும். சீவிடுகளின் ஒலி மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.. காற்றின் வீச்சுக்கும் நீரோடையின் சலசலப்புக்கும் பக்கவாத்தியம் போல அது ஒலித்தது சீவிடுகளின் ஒலி.. அது மௌனத்தின் ஒலி. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பான வனத்தின் இருள்.. விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் ஒளி.. அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி பரவ.. கண்களை நிறைந்துக் கொண்டே வந்த ஒரு தருணத்தில்.. ஒரு சரிவில்.. ஒளி வெள்ளமென வீச.. திடுக்கிட்டுப் போனோன்.

”அந்த பக்கம் பூரா மைன்ஸ்தான் சார்..” என்றார் காவலாளி என் பார்வையை உணர்ந்து.

அந்த ஒளியில் காடு நகர்ந்து விட, அதன் வழியே செயற்கை வழித்தடங்கள் புலப்பட.. இருளை ஒளி வென்று விட்டது. இந்த ஒளியின் சுவடுகள் தனிமையின் சுகத்தை கலைத்துப் போட்டு விடும். அங்கிருந்த விலங்குகள்.. தாவரங்கள்.. பூச்சிகளின் வாழ்வை குலைத்துப் போட்டு விடும். கனிமவளம் மனிதவளத்தை மேம்படுத்தியதில் வெளிச்சத்தில் இருளை தொலைத்த அவலம்.

சித்ராவை மயக்க ஊசி செலுத்தி வலியில்லாமல் சுட்டுக் கொல்வார்களாம். எதிர்க்கவோ.. பேசவோ எங்களுக்கே உரிமையில்லாத போது காட்டின் குரலை ஓயாமல் கர்ஜித்துக் காட்டும் சித்ராவுக்கு வாழும் தகுதியற்றுப் போவதொன்றும் ஆச்சர்யமல்ல.. அவள் தலைப்புச் செய்தியான நாளுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதே காரணம்தான் முன்பு பழங்குடிகளுக்கும் சொல்லப்பட்டதாக ஞாபகம். பழங்குடிகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று. பிறகு புலிகளும் பூங்காக்களுக்கு இறக்கி விடப்பட்டன. கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்போது சொல்வதற்கு காரணங்கள் நிறையவே இருந்தன. புலிகள் அடிக்கடி சமவெளிக்கு வந்து விடுகின்றன என்றார்கள். மொட்டைத்தலையிலிருந்து வழிந்தோடுதல் இயல்புதானே.. சரி.. ஏதோ ஒன்று.. புலி-மனித மோதலால் புலிகள் கொல்லப்பட்டு விடுகின்றன என்றார்கள். பழங்குடிகள் இறக்கிவிடப்பட்ட பிறகு தனித்திருந்த புலிகளுக்கு காட்டின் நடப்பைச் சொல்ல ஆங்கிலம் தெரியாமல் போனது சுரங்க அதிபர்களுக்கு வசதிதான்.

அறைக்கு வந்ததோ உறங்கியதோ அனிச்சையாக நடந்திருக்கலாம். துாங்கியது எப்போதென்றே தெரியவில்லை.. விழிப்பு வரும்போதுதான் துாங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். திரைசீலைக்கப்பால் வெளிப்புறக்காட்சிகள் பளிச்சென்றிருந்தன. தேநீரை ஏந்திக் கொண்டு வந்தவரிடம் கட்டஞ்சாயா கிடைக்குமா என்றேன். உடனே கொண்டு வந்தார். சுடுநீர் குடிப்பது போல ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு முறை ஊற்றிக் குடித்தேன். மனம் சற்றே நிதானப்பட, அறையை காலி செய்து சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

இளங்காலை பயணம் உள்ளப்படியே உவகையை ஏற்படுத்த, வாயைக் குவித்து ஒலியுண்டாக்கினேன். கூடவே ஒலித்தது பறவையின் குரலொன்று. வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினேன். அடர்வற்ற காடு மனித சஞ்சாரத்தை வெளிப்படுத்தியது. இடையே குறுக்கிட்ட சுரங்கத்திற்கான பாதை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல தோதாக அகலமாகவும் அதிகாரிகளை அழைத்துச் செல்ல வசதியாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் இடுப்பளவு கான்கிரீட் தடுப்பு. அதுவுமே அகலம் கூடியதாக இருந்தது.

முன்பெல்லாம் வனத்துறைக்கு செல்வாக்கு அதிகம்.. பழங்குடி மக்களிடம் அவர்களுக்கு அதிகாரமும் அதிகமாகதான் இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறானோ இல்லையோ மயிலையும் மானையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வனத்துறை ஆட்களுக்கு பஞ்சமிருக்காது.. வனத்துறை நண்பரொருவர் மயில் கறியை பிரியமாக உண்பதை பார்த்திருக்கிறேன். நமக்கென்ன..? வனத்துறையினர் பாடு.. அறநிலையத்துறையினர் பாடு.. என்று நினைத்துக் கொள்வேன். இப்போது வனத்துறை ப்ளுகிராஸ் போல ஆகி விட்டது. சினிமாவில் எந்த விலங்குகளையும் வதைக்கவில்லை என்ற கிளியரன்ஸ் சான்றிதழுக்கு நிறைய தொகை வாங்குவதாக கேள்வி. மேல் வரும்படி குறைந்து விட்டதால் இப்படியெல்லாம் இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள் போல.

வனம் ஏறி இறங்கி அடர்வுக்குள் செல்ல பாதை ஒழுங்கற்று.. நேர்த்தியற்று நெளிந்துக் கிடந்தது. தொடப்படாத காடுகள் தாவரங்களால் வழிந்துக் கிடந்தன. கனிம வேலை தொடங்கும் வரை அதற்கு அனுமதியுண்டு. ஆங்காங்கே ரெட் அலர்ட் போடப்பட்டிருந்த பாதையில் திரும்பினேன். இவை முன்னாள் பதிகளாக இருக்கலாம். நகரில் வாழ்ந்துக் கெட்ட வீடுகள் கான்கிரீட் பாழ்களாக கிடப்பது போல பதிகளின் குடியிருப்புகள் வீடாக உருவம் தாங்கி நிற்கவில்லை என்றாலும் மறைந்து போன வாழ்விடத்தின் வாசம் முற்றிலுமாக அகலவில்லை.

”ஏன் சார்.. சாவுதான் தீர்வா..? கூண்டுக்குள்ளயே அடச்சு போட்டுடுலாம்ல..” கையெழுத்து இடும் முன் ஈனஸ்வரத்தில் கேட்டேன். எனக்கு தெரியும்.. அவர்களின் பயம் சித்ராவின் மீதல்ல.. சித்ராவுக்குள் பொதிந்திருந்த காட்டின் மீதான பயம்.. சித்ராவை நீடிக்க விட்டாலோ.. குட்டிகளுடன் நெருங்கி பழக அனுமதித்தாலோ உள்ளிருக்கும் காட்டை வெளியே எடுத்து விடலாம் என்ற பயம். அதிலும் சீத்தாவுக்கு தாயைப் போன்று மூர்க்கமும் பிடிவாதமும் அதிகம். இத்தனை பெரிய வனத்தில் ஒற்றைப் புலிக் கூட இருக்கக் கூடாது என்ற முடிவின் பின்னிருப்பதும் பயம்தான். பூண்டோடு அழிக்க சொல்லும் வன்மம். புலியை பூனையாக்க வேண்டும். கோவில் யானை போல பூங்காப் புலி.

கானகம் அடர்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தது. பாதை அருகிக் கொண்டே வந்தது. அவர்கள் குறிப்பிட்ட பகுதி இதுதான் என உறுதி செய்துக் கொண்டேன். தோதான இடம் பார்த்து வண்டியை நிறுத்தி இன்ஜினை அணைத்தேன். பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டேன். இன்னும் சிதையாத காடு. மலைச்சரிவுக்கும் பள்ளத்தாக்குக்குமிடையே நீரோடை ஒன்று வளைந்து நெளிந்து ஓடியது. உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. சரிகையை அவிழ்த்து விட்டது போல் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவியிருந்தன. ஏற ஏற மலையின் உயரம் குறைந்துக் கொண்டே வருவதை போல மேகங்களும் கரைந்து உருமாறிக் கொண்டே இருந்தன. பாதையின் ஓரமாக பெரிய மரமொன்று வேரோடு விழுந்து கிடந்தது. நீர்வீழ்ச்சி நுரைத்து வழிந்தது. மரங்களில் ஆங்காங்கே பைகளை கட்டித் தொங்க விட்டது போல தேன்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கீழே இறங்குவது என்பது முட்டாள்தனமான துணிச்சல் என்பது எனக்கும் தெரியும். ஒற்றைப்புலி மிகுந்த ஆக்ரோஷம் கொண்டிருக்கலாம். தனக்கான உணவு உறுதியான பின்.. நட்பைத் தேடிக் களைத்திருக்கும். பகை கூட அகப்படாத தனிமை குழப்பத்தை உண்டுப் பண்ணியிருக்கும். அதுவே மூர்க்கத்தை முட்டிக் கிளப்பி விடும். புகைப்படத்தில் காட்டப்பட்ட அதன் தடத்திலிருந்த ஆவேசம் அதைதான் சொன்னது. நவீனங்களின் துணையோடு அதை பிடித்து விடுவது சுலபம்தான். பிறகு.. பிறகென்ன பிறகு.. உயிரியில் பூங்காவில் புலியின் நீள அகலங்களில் மற்றுமொரு பூனை உலாவித் திரியும். ஒற்றைப்புலியின் உடனடித் தேவை துணை.. துணை மட்டுமே. உணவோ.. இணையோ.. அடுத்தக் கட்டம்தான். இனத்தோடு இனம் துணையாகும்போதுதான் தன்னுள்ளிருந்து தான் மீள இயலும்.

வாகனத்தின் பின்கதவை திறந்தேன். பாதிக்குமேல் தெளிந்திருந்த மயக்கத்தின் ஊடே என்னை விழித்துப் பார்த்தது அது. விரிந்த அதன் கண்களின் ஒளி ஒரு கணம் சித்ராவை ஞாபகப்படுத்த சிலிர்த்து அடங்கினேன். அதன் வலது பாதத்தில் லேசாக தட்டினேன். தட்டினால் எழுந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தில் முடிந்தவரை விசும்பி எழுந்தது. என் மேலுடலை முன் தள்ளி கைகளை காற்றில் அசைத்தேன். புரிந்துக் கொண்டது. திறந்திருந்த கதவின் வழியே வெளியே பாய்ந்தது.

அதன் கால்களை பஞ்சுப்பொதிகள் போல வனம் தாங்கிக் கொள்ள இடுப்பை அசைத்து அசைத்து நகர்ந்து நகர்ந்து.. என்னை விட்டு விலகி விலகி..

“சீத்தா..“ கதவை மூடிக் கொண்டு வெடித்து அழுதேன்.

இரு குறுங்கதைகள் – பித்தன் பாரதி

பித்தன் பாரதி

1

அற்ப உலகம் 

 இரவு நேரங்களில் உலகம் சுழல்வது எனக்கு விநோதத்திலும் விநோதம். காற்று இழைந்துக் கொண்டிருக்கிறது வெளியே. கன்னி வயதை காற்று எட்டிவிட்டதா! இடையைச் சுழற்ற வைக்கும் தசை தரும் வலி! உள்ளபடியே பச்சையாக சொல்லி விட முடியுமா?

நான்கு திசைகளிலும் விதவிதமான மனிதர்களின் ஒலிகள். அவர்களின் கண் எது, காலெது? ஒலிகள் மட்டும் செவிகளுக்குள் ஓயாமல் விழுந்துக்  கொண்டிருக்கின்றன. கூடவே நாய்களும் கூடிக்கொண்டன. நாய்களும் மனிதர்களும் கலந்த காற்றின் ஒலி.

அறையில் விளக்கை  எரியவிட்டுக்கொண்டு இந்த ஜீவராசி. அருகே அரைலிட்டர் தண்ணீர். சம்மணமிட்டு மடித்து உட்கார்ந்துகொண்டு கூரையை தாண்டி எண்ணங்களை உலவவிட்ட படி தனக்குள்ளே பிதற்றிக்கொண்டிருக்கிறது.

வாழ்வது எப்படி? தனக்கு ஒரு நியதி, இயற்கைக்கு ஒரு நியதியா? பூனை  அல்ல, குழந்தை வீரிட்டழும் ஒலி!  நாயும் சேர்ந்து கொண்டது. இயற்கையின் அற்புத சக்தி மனிதர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறதா! வருகிறோம் மடிகிறோம்.

நட்சத்திரங்களை சிமெண்ட் தளக்கூரையின் ஊடாக பார்த்துவிட முடியுமா? எந்த ஐந்து பூதங்கள் வாழவைத்து பார்க்கின்றனவோ! அவையே கட்டுப்படுத்துகின்றன. ஏன்? இரவு  என்னை மட்டும்  விட்டுவைத்துவிடுமா? நகரம் மட்டும் இருட்டாகி விட்டதா! உலகத்தின் ஒரு பாதியே இருட்டாகியிருக்கும். இரவின் நியதியா இயற்கையின் நியதியா என குழம்பிக் கொண்டிருக்கிறது.

கையூன்றி எழுந்து தாளிட்டுக் கிடக்கும் கதவினை திறக்கச் செல்லுகிறது இந்த ரெண்டு கால் விலங்கு. கண்களுக்கே புலப்படாத சிறு துாசு மாதிரி  பூமி கவலையற்று என்னைத் தாங்கி சுழன்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் அந்த பழையவொலிகள்.

கோபம் கொண்டு கட்டிவைத்து அடித்து விட வேண்டும், முடியுமா? செல்போனின் அலறல் ஒலி… அத்தனை கடலையும் சுழற்றி ஒரு நீர்த்துளியாக ஆள்காட்டி விரலின் மீது வைத்து சுழற்றி விட முடியுமா? அவ்வளவு  தோள் வலிமை கொண்ட ஜீவனும் உள்ளதா? ஆசைக் கனவு, மனதின் லட்சியம், எல்லாம் ”உரு”வாக வந்த காதலி.

நட்சத்திரங்கள் மட்டுமா! அறையின் மூலையில் குப்பையும் சுழன்று கொண்டிருக்கிறது. அறை சூழ்ந்த அமைதி. வெளியும் அப்படி இருந்து விடுமா? காலை மடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டது.

உயிருக்கு உயிரான காதலியே. உலக பந்த வலையில் சிக்குண்டு என்னை விட்டோர் நக்ர்வு உனக்கு ஏனோ! நாய் குரைக்கிறது. வீரிட்ட குழந்தை இப்பொழுது கும்மாளமடிக்கிறது. இரயில் நிலையத்தில் இந்நேரம் காத்துக் கொண்டிருப்பாள். பறக்க முடியாத மனித தேகம், அலைந்து திரியும் எண்ணங்கள். எனக்கொரு நியதி, உனக்கொரு நியதியா? சொல்லடி ராவெனும் முண்டையே! எனக்கொன்று உனக்கொன்றா? கூத்தியா சண்டை மாதிரி இந்த மனித ஜீவனும் அந்த ஐந்து  பூதங்களும் மல்லுக்கட்டிக்கொண்டால் என்ன நடந்து விடும்.

காலம் கடந்து கொண்டிருக்க இரயிலின் சக்கரம் எங்கு உருண்டு கொண்டிருக்கும் இந்நேரம்? எத்தனை மனிதர்களோ எத்தனை வாழ்வோ!  வெந்நீர் போட்டு வைக்காம போய்ட்டா, இந்த இரவில் அவசியம் வரணுமா, காலைல வந்தா என்ன?

இரயில் கூவும் சத்தம் நாய் குரைத்தலில் தனித்தறிய முடியவில்லை. அலறிக்கொண்டு ஒரு பெண் தண்டவாளத்திற்கு தலையை கொடுக்கிறாள். ஓலத்தோடு தலை நசுங்குகிறது.

இரயில் சத்தமிட்டு சக்கரத்தை சுழற்றுகிறது.

oOo

2

மாடிப்படிகள்

மழையோ, குளிரோ, வானிலையின் முடிவு எங்கே, தொடர்ச்சி எங்கே? ஒரு இருபது படிகள்தான் என் வாழ்வில் நான் கடக்க நிச்சயமாக விரும்புவது. கேவலம் இருபது படிகளா!. எத்தனை கால நேரங்கள்! துல்லியமாக இவ்வளவு நேரத்தில் நான் வருவேன் என்று கூறிவிட்டால் இந்தப் படிகள்தான் சுணக்கம் கொண்டுவிடுமா! கதிரவன் வருகிறது, தட்டி எழுப்பப்படுகிறேன். எட்டா துாரத்தில் கதிரவன். நேரம் ஆகிவிட்டது, அடடா, வெகுநேரம் ஆகிவிட்டது.

படிகள் மௌனமாக மடிந்து கிடக்கின்றன. இதோ நான் சென்று கொண்டிருக்கிறேன். காலை சென்றேன் மாலை சென்றேன். சற்று முன்பு இரவு உணவு வாங்கி வந்து இப்பொழுதுதான் அமர்ந்திருக்கிறேன்.

மாடிப்படி இருளுக்குள் ஐக்கியமாகி விட்டது. வெளியே குளிர். அதற்கான  போர்வை இருந்தால் நிச்சயமாக இந்த நாற்காலியை விட்டு எழுந்தோடி போர்த்து விடுவேன்.

என்னடா இது மடத்தனம் எவனாவது மாடிப்படியை போர்த்தி விடுவானா? ஒரு குரல். யாரா? இப்படிச் சொல்வது நான்தான், நானேதான்.

என்னைக் காலையில் அவை தாங்கும் என்பதால் இப்பொழுது அதனுடன் உறவாடுகின்றேனா! அல்லது இருபது படிகளைக் கெஞ்சுகிறேனா?

அது எப்படி கிடந்தால் என்ன?

எட்டிப் பார்க்கிறேன். படுக்கை விரிப்பு கசங்கி, எறும்புகள் ஊர்ந்தோடி, சுருண்டுக் கிடக்கிறது. இந்தப் படி, மாடிப்படி.

அது என்னவாக இருக்கிறது? மாடிப்படியாகவே இருக்கிறது.

உறங்கி எழுந்து நாளைக் காலை அதனை மிதித்துச் சென்றுவிடுவேனா! சந்தேகம்தான். இப்படி தோன்றினால் எப்படி? அய்யோ, மாடிப்படி, அய்யோ! அவள் துாங்கியிருப்பாள்.

நான் என்ன செய்வது? மாடிப்படியா குரைக்கிறது? தொலைதுார நாய், அந்த நாய்க்கு என்னவோ! வானம் இரவாகிப் போய் வெகு நேரமாக.

முதுகு மெத்தையோடு உறவாடச் செல்கிறது. நினைவில் மாடிப்படி உறங்கி விட்டது. மேல் மூச்சு, கீழ் மூச்சு, வானம் வெளுத்துவிட்டது. வெகு நேரம் ஆகிவிட்டது! கதிரவன் வானில் கரகோசத்தோடு வெறிபிடித்து வெப்பத்தைக் கக்குகிறது.

இலவச பிண ஊர்தியின் அலறல்? சாலையில் விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  காய்ந்து போன தேக்கு இலைகளோடு மாடிப்படியினை  மிதித்துக் கொண்டு காலை உணவிற்கு சாலையோர கடைத்தெருவிற்கு விரைகிறான், தொண்டைமான்.

 

 

 

    தும்பி – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

திரையில் அது மின்னல் எனத் தோன்றியது. அறுபது நேனோ வினாடிகள் நீடித்த அது பொன்னொளி கொண்டிருந்தது. படம் எடுக்கும் தொலைநோக்கி கருவியுடன் இணைந்த ரோபோ தன் கோணத்தையும், ’ரெசல்யுஷனை’யும் சரி செய்து கொள்வதற்குள் அது இல்லாமல் போய்விட்டது.

தரையிலிருந்து வானக் கட்டுப்பாட்டகம் அது என்னவென்று ஆராய முடியுமா அல்லது வேறு சாதனங்கள் தேவையா என்று கேட்டுக் கொண்டிருக்கையிலே சிறு கீற்று மின்னல் போல் பளீரிட்டது. இம்முறை அது எழுபது நேனோ வினாடிகள் நீடித்தது. ரோபோ அதை படம் எடுத்துவிட்டது. அதை அறிய விண்வெளியில் அமைந்துள்ள ‘இன்டெர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில்’ஸ்காட் கெல்லி, ரம்யா மற்றும் லியோ ஜாய் செயலில் இறங்கினர்.

“இன்று என் அம்மாவின் பிறந்த தினம். நான் ஒரே பையன். என் வொய்ப்பும், மகளும் போய் கொண்டாடுவார்கள். நான் ஃபோட்டோ அனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்றான் கெல்லி.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் உன் அம்மாவிற்கு. ஷாம்பெய்ன் இருந்தால் எப்படி இருக்கும் இப்பொழுது?” என்று சப்புக் கொட்டினான் ஜாய்.

“ரொம்ப வருத்தப்படாதே. சோம பானமே உனக்கு கிடைச்சாலும் கிடைக்கும்” என்று சிரித்தாள் ரம்யா. ’நம் மூவர் ஃபோட்டோவையும் அம்மாவுக்கு அனுப்பு கெல்லி எங்கள் வாழ்த்துக்களுடன்.”

விண்வெளி ஆய்வுக்கூடம். அறிவியலின் திறத்தால்  ஆறு ‘லைட் இயெர்ஸ் தொலைவில் காணப்படும் பூமியைப் போன்ற அந்தப் பதினோரு கோள்களில் எதிலாவது உயிரினம் இருக்குமா என ஆராய அவர்கள் வந்துள்ளார்கள். புவியில் காணப்படுவது போன்றே பாறைப் படிமங்களும், ஆக்ஸிஜன், மீதேன் போன்ற வாயுக்களும் வேற்று கிரக வாசிகளை தேடும் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

இளமை ததும்பும் வயது; பார்ப்பது, வியப்பது, ஆராய்வது எல்லாமே சிறுவர்களைப் போல. விண்வெளி ஆய்வுக்கூட லிகொவில் வெற்றிடம் உருவாக்குவதுண்டு.  எவர்சில்வர் குழாய்களிலிருந்து ஹைட்ரஜனை நீக்கி வெற்றிடம் உருவாக்கி அதிர்வுகளை தவிர்க்கிறார்கள். இது துல்லியத்திற்காக செய்யப்படுகிறது. கெல்லி இதை நிர்வகிப்பதில் வல்லவன். .ரம்யா துல்லியமான கணிதத்தில் நிபுணி. விண்வெளிக் கற்கள், அவைகளின் சுழல் வேகத்தினை கணினியின் உதவியுடன் கணக்கிட்டு அவற்றுடனான மோதலைத் தவிர்த்து விண்வெளி ஓடத்தின் பாதையை ஆணைகளிட்டு கட்டுப்படுத்தும் திறனுடையவள். ஜாய் விண்ணில் அரிதாகக் கேட்கும் விந்தை மிகு ஒலிகளை ஆராய்ச்சி செய்பவன். அவை வேற்று கிரக உயிரிகள் எழுப்பும் ஒலியா அல்லது வேறு ஏதாவதா என்று நுட்பமாகப் பதிவான். பின்னர் அதை ‘டிஜிடைஸ்’ செய்து ‘அலை நீள’ வாரியாகப் பகுத்துத் தொகுப்பான்.

இப்பொழுது  பூவுலகின் அனைத்து நாடுகளும் ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி ஒற்றுமையாகச் செயல்படுகின்றன.

“இந்தப் பொன்னொளி எதாயிருக்கும்? வேறு கோளங்கள்ல பூமியைப் போல மழை பெய்கிறதோ? மின்னல் அதனால் காணப்படுகிறதோ? நாம பாக்கற மாரி வலுவானதா? இது நிகழக்கூடும் என்றால், ஏன் இடியின் ஒலி கேட்கவில்லை?” இது ரம்யா

‘ட்ரேப்பிஸ்ட்’ கிட்டத்தட்ட நம் சூரியன்தான். எடை குறைந்தும், ஒளி மிகுந்தும் இருக்கு. அந்த சுழல் கிரகங்கள் நான்கில் பகலும், இரவும் மாறி மாறி வருது.’ என்றான் கெல்லி.

‘உண்மதான். ஒருக்கால் கடவுளின் இடமோ? இல்ல, தேவர்கள்.. தப்பு தப்பு.. அசுரர்கள்? நம்மள  அப்டக்ட் செய்வார்கள் எனத் தோன்றுகிறது’ என்றான் ஜாய்.

‘உன்ன சாப்ட அசுரன் வரப்போறான்’  என்றாள் ரம்யா.

இந்த உரையாடல்களுக்கு இடையே ரம்யா கணினியில் அனைத்து விவரங்களையும் சரி பார்த்தாள் ம்….ஹூம்.. கணினி திணறியது. அந்தக் காட்சி மீண்டும் வரவில்லை. அண்ட சராசரத்தின் ஏதோ ஒரு நிகழ்வு என அவர்கள் முடிவு செய்தனர்.

இரு நாட்களுக்குப் பிறகு ரம்யா தன் இருக்கையுடன் மிதந்து வந்தாள். மிக அரிதாகத்தான் உணர்ச்சிவசப் படுவாள்.”எக்சைடிங்க் யார்’ட்ரேப்பிஸ்ட்’ நட்சத்திரம் தன் சுழல் வேகத்தை மிதப்படுத்தியிருக்குமோன்னு ஒரு அனுமானத்திற்கு வழி புலப்படுகிறது. இது ஒரு அற்புதம், ஒரு பொன்னான வாய்ப்பு. நம் விண் ஓடத்தின் வேகத்தை அதிகப்படுத்தினா, நாம் அருகே  நெருங்க முடியும்.” என்றாள். .

“எப்படிச் சொல்றே?” என்றான் கெல்லி.

“கணினியிடம்  சிமிலாரிடீஸ் கேட்டேன். வாயேஜர் 1 பதிஞ்ச சூரிய சுழற்சியப் பத்தி  சொல்லியது”என்றாள் அவள்.

“அப்படின்னா?” இது கெல்லி

‘எனக்கும் முதல்ல இது புரியல; பின்னர் யோசிச்சேன். காஸ்மிக் கதிர்களின் ஃப்ளக்ஸ் எதிர்பாராத விதமா அதிகரிச்சு, சோலார் காற்றின் துகள்கள் கொறஞ்சுதுன்னா  சூரியனின் சுழற்சி 2 லேந்து நாலு மடங்கு அதிகரிக்கும். அது போல இது ட்ரேப்பிஸ்ட்டின் செயல் எனத் தோணிச்சு. இதை உறுதிப்படுத்த ஜாய் உதவணும்”என்றாள் ரம்யா.

“ஓ,பேபி, மார்வலஸ்.நான் என்ன செய்யணும்?’’ என்றான் ஜாய்.

“முதல்ல பேபின்னு கூப்பிடுவதை நிறுத்து. நாம பூமில பாப்பமே மின்னலும், இடியுமென; அதைப் போல, அல்ல, அப்படியே அல்ல ,ஆனால் மிக மெல்லிய ஓசையும் வருகிறது.அதை வைத்து மின்னல் மோகினி யார்னு கண்டு பிடிக்கப்  பார்”

கெல்லி தன் கருவிகளை எடுத்துக் கொண்டான். ”’ஸ்பேஸ் வாக்’ போய் வருகிறேன். ஏதாவதுதெளிவாகிறதான்னு பாக்கலாமே?.”

“அது ரிஸ்க், கெல்லி . அவ்வளவு கிட்டக்க அது ஏற்பட்டிருந்தா, நம் கணினிகள் கதறியிருக்கும். வெயிட் செய்யலாம். அதற்குமுன் அந்த ஒலிகளைப் பாத்து எதனுடனும் ‘மேட்ச்’ ஆகிறதா எனச் சொல்றேனே”என்றான் ஜாய்.

“டோன்ட் வொரி. இதை சூட்டோடு சூடாச் செய்யணும் .நான் ‘வேக்குவம் பாட்டை’யும் எடுத்துக்கொண்டு போறேன். ரம்யா, நீ என் ‘வாக்கை’ பதிவு செய்து கொண்டே வா. வெற்றிடத்தில்  என்னால் முடிந்தவரை நிலைப்பேன். அப்பொழுது ஏதேனும் நடக்கலாம். இது ஒரு அனுமானம் தான். அப்படி ஏதும்  நடக்காவிட்டால் உடனே திரும்பிவிடுவேன். என் உயிர் உன் கைகளில். ஏதேனும் ஆபத்து எனத் தோன்றினால் ‘ஸ்பேஸ் சூட்டை’த் திறந்து என்னை உள்ளே இழுத்துவிடு”

“இவ்ளோ ரிஸ்க் எதுக்கு கெல்லி, பாத்துக்கலாமே” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் போய்விட்டான்.பரபரப்புடன் அவள் இருக்கையை கணினிமுன் வடிவமைத்து அமர்ந்து கொண்டாள்.

“முன்னாடி விண்வெளியில் இந்த ஒலிகளை நான் கேட்டதில்ல. ஆனா கீழே கேட்டிருக்கேன்” என்றான் ஜாய்.

மூவரும் அவர்களின் உணவை அச்சமயம் உண்டு கொண்டிருந்தார்கள். ”கீழேன்னா எங்கடா?”

“பூமிலதான்”

“என்னது,பூமியின் ஒலி இங்க டைரக்டா கேட்குமா?”

“கூல், கூல் பேபி. பூமியின் ஒலி இல்ல இது; ஆனா, பறவைகளின் குரல்களின், சிறகுகளின் ஒலி. எங்கள் பண்ணை வீட்டில், தாத்தாவுடன் கேட்ட ஒலியைப் போல் இருக்கு” என்றான் அவன்.

கெல்லி பூமிக்கு செய்தி அனுப்பி  பண்ணை வீட்டில் அங்கு வரும் பறவைகளின் ஓசையை சேகரித்து அனுப்பச் சொன்னான்.

ஒரு வாரம் அமைதியாக ஓடிற்று. அவர்களின் ஸ்பேஸ் ஸ்டேஷன் காலம் முடியப் போகிறது. ஒரு நிகழ்வு, அதன் ஈர்ப்பு, அதன் விடை புரியாத தன்மை அவர்கள் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள். பூமியிலிருந்து வந்த பறவை ஒலிகள் குரலொலிகளாகவே இருந்தன. சிறகோசைக்கும், குரலோசைக்கும் …

.நான் சிறகோசைகளை பெரிதுபடுத்தி கேட்டுப் பார்க்கிறேன். ஏதேனும் பிடிபடலாம்”

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் கணிணித் திரையில் பொன் வண்ண மின்னல் பளீரிட்டது. கெல்லி “மேக்னிஃபையிங்க்” கமாண்டும் ரம்யா “ஆம்ப்லிஃபையிங்க்” கமாண்டும் ஜாய் ”சவுண்ட் ஒன்லி’ கமாண்டும் கொடுக்க திரையில் பார்த்த காட்சி மூவரையும் பேச்சிழக்கச் செய்துவிட்டது. பொன் உடலோடு மிகப் பெரிதான ஒரு தும்பி, தங்கமும், வெள்ளியும் கலந்து இழையோடும் பல்லடுக்குச் சிறகுகள், முகத்தில் பல்லாயிரக் கணக்கான கண்கள் அவைகளும் பொன்னிறத்தில் ஒளிர்ந்தன. அது ‘ட்ரேப்பிஸ்டின்’ ‘டி’ கோளிலிருந்து வெளிப்பட்டு, தன் சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு நீள் வட்டப் பாதையில் பயணித்து இவர்களின் ஸ்டேஷனை நோக்கி வருவது தெரிந்தது. அதன் வேகம் அளப்பரியதாக இருந்தது. சிறகுகள் அடுக்கடுக்காக மிக மெல்லியதாக, அதன் பட பட அடிப்பில் உந்து சக்தி உற்பத்தி செய்வதாக, அதன் மூலம் பறக்க இயல்வதாக அமைந்திருந்தன.

கீழே புவி பரபரப்பானது. ”நோ ஸ்பேஸ் வாக்ஸ் .நோ ஸ்பேஸ் ஷிப் நவ். ஸ்டேஷனிலேயே இருங்கள். இன்னும் பத்து  நிமிடங்களில், பூமியின் கணக்குப்படி உங்கள் ஷிப் உங்களை ஏற்றிக்கொண்டு பூமிக்குத் திரும்பத் தொடங்கும். ஆல் த பெஸ்ட்”என்று மெசேஜ் வந்தது.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து செய்வது என்ன என்று புரியாமல் தவித்தனர். அவர்களை பொன்னொளி சூழ்ந்தது. கெல்லி வெகு வேகமாக பொதுவில் பொருந்தக்கூடிய சங்கேத மொழியில் அதற்கு செய்தி அனுப்பினான். ’நாங்கள் பூமியிலிருந்து வந்திருக்கிறோம். நீங்கள் யார்?’

‘மகிழ்ச்சி. விரைவில் அறிவீர்கள்’ என பதில் வந்தது.

‘உங்கள் கோள் எது? ஏன் எங்களை நோக்கி வருகிறீர்கள்?’

‘நான் உங்களுக்கு தீமை செய்ய மாட்டேன்’

‘நல்லது.ஆனால் எப்படி நம்புவது?’

‘வேறு வழியில்லை உங்களுக்கு.’

‘அப்படியல்ல. நேர் பதில்கள் இல்லையெனில் உங்களை  அழிக்க நேரிடலாம்’

‘உயிரைத் தேடி வந்துட்டு உயிரை அழிப்பாயா என்ன?’

மூவரும் விக்கித்தார்கள்.இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்துதான் இது வந்திருக்கிறது.

“கெல்லி காம்பேட் பாட்டை செயல்படுத்து. அதை தடுமாறச் செய்ய முடியுமா எனப் பார்.எங்கள் கணக்குப்படி உங்களுக்கு ஐந்து நிமிடங்களே உள்ளன. அசட்டுத் துணிச்சல் அபாயகரமானது.” என்று பூமியிலிருந்து கட்டளை வந்தது.

மூவருக்கும் இப்பொழுது தெளிவு வந்துவிட்டது. ஸ்பேஸ் ஸ்டேஷனின் கதவு திறந்து, பொன்மின்னல் தன்னை சிறிதாக்கிக் கொண்டு உள்ளே வந்தது. ‘நேரமில்லை. உங்கள் கோளில் விரைவில் வாழ்வில்லை. எங்கள் கோளில் மனிதரில்லை. என்னுடன் வந்தால் நீங்கள் சரித்திர நாயகர்கள். இல்லையெனில் உங்கள்  விருப்பம். வெற்றிடத்தில் நிலைக்கும் உங்கள் ஆற்றலைப் பார்த்ததுமே நீங்கள் தான் எங்களது விருந்தினர்கள் என்று முடிவு செய்து நான் வந்தேன் என்றது

‘ஃப்யர்’ என்ற ஆணை கட்டுப்பாட்டகத்திலிருந்து வருவதற்குள் விண் ஓடம் பிரிந்தது.

வெற்று பக்கம் – சுசித்ரா மொழியாக்கத்தில் ஐசக் டினேசன்

சுசித்ரா 
(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page)

புராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள்.

அவள் சொன்னாள்:

“கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா? என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி மொட்டுகளின் கதைகளையும் பட்டிழையென பின்னிப்பிணைந்த நான்கு கொடிய விஷசர்ப்பங்களின் கதைகளையும் சொல்ல இளைஞர்களை நான் அனுமதிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நான் கதை சொல்லி வருகிறேன். என்னுடைய அம்மையின் அம்மை – கருவிழிகள் கொண்ட நடனமங்கை, அக்காலத்தில் அடிக்கடி முயங்கப்பெற்றவள் – அவள்தான் தன் இறுதி நாட்களில் – அப்போது அவள் பனிக்காலத்து ஆப்பிள் பழத்தை போலச் சுருங்கி முக்காட்டின் கருணைக்கடியில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தாள் – அவள்தான் எனக்குக் கதையாடலின் கலையைக் கற்பிக்க முற்பட்டாள். அவளுடைய அம்மையின் அம்மை அவளுக்கு அதைக் கற்பித்திருந்தாள்; அவர்கள் இருவரும் என்னை விடப் பெரிய கதைசொல்லிகள். ஆனால் இப்போது அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது – மக்களைப் பொறுத்தவரை நானும் அவர்களும் ஒன்றாகிவிட்டோம். என் கொடுப்பினையே அதுதான் – இருநூறு வருடங்களாகக் கதை சொல்லி வருபவள் நான்.”

இத்தருணத்தில், அவளுக்குச் சேரவேண்டிய சன்மானம் வழங்கப்பட்டு, அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாளென்றால், கதையைத் தொடர்வாள்.

“என்னுடைய பாட்டியின் பயிற்சி முறை ரொம்பவும் கடுமையானது,” என்றாள். “‘கதைக்கு விசுவாசமாக இரு,’ என்று அந்தக் கிழவி என்னை எப்போதுமே அதட்டிக்கொண்டே இருப்பாள். ‘என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தவறாமல் உன் கதைக்கு மாறாப்பற்றுடன் இரு.’ ‘நான் ஏன் அப்படி இருக்கவேண்டும் பாட்டி?’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே?’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா? அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள்! – இவைதான் என் காரணங்கள். கதைசொல்லி கதைக்கு மாறாப்பற்றுடன் – எப்போதும், எந்நிலையிலும், நித்தியமான மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு, கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். கதைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்ததென்றால், அங்குக் குடிகொள்ளும் மௌனம் வெறுமையின் மௌனம் மட்டுமே. ஆனால் நாம், மாறாபற்றுடையவர்களான நாம், நம்முடைய இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரலை அங்கு கேட்போம். மூக்கொழுகும் சிறுமிகளுக்கு இதெல்லாம் புரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை.’”

“அப்போது நம் யாரையும் விட மகத்தான கதையைச் சொல்வது யார்?’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத்தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில்.”

கிழவி சிறிது நேரம் ஏதும் சொல்லாமல், அவ்வப்போது இளித்தபடியும், பற்களற்ற வாயை மென்றபடியும் இருக்கிறாள்.

“நாங்கள்,” என்று இறுதியில் முடிக்கிறாள், “கதைசொல்லும் கிழவிகளான நாங்கள், எங்களுக்கு தெரியும், வெற்று பக்கத்தின் கதை என்னவென்று. ஆனால் இக்கதையை சொல்ல நாங்கள் கொஞ்சம் தயங்குவதுண்டு. இக்கலைக்குள்ளே வராதவர்களுக்கு இக்கதையைச் சொன்னால் எங்கள் மதிப்பீடு குறையக்கூடும். இருந்தாலும், தாராள மனமுடைய இனிய, அழகான அய்யனே, அம்மையே, உங்களுக்கு, விதிவிலக்காக உங்களுக்கு மட்டும், இந்தக் கதையைச் சொல்கிறேன்.

“போர்த்துகல் நாட்டின் நீல மலைகளின் உச்சியில் கார்மலைட் பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் வசிக்கும் ஒரு பழைய கன்னிமடம் உள்ளது. எளிமையான வாழ்க்கையும் கடும் முறைமைகளும் கடைபிடிக்கும் பழம்பெருமைக்குரிய பிரிவு அது. பழங்காலத்தில் செல்வமும் செழிப்புமாக இருந்தது அம்மடம். அங்கு இருந்த கன்னியாஸ்திரீகள் அனைவரும் உயர்குடி மகளிர்; அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, உயர்குடி பெண்களுக்கு நோன்பு நோற்பதிலும் பிரார்த்தனை செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. அதுவரை மடத்தின் கருவூலத்திற்குள் வழிந்துகொண்டிருந்த ஸ்த்ரீதனங்கள் வற்றத்தொடங்கின. இடிந்து சரிந்து கொண்டிருக்கும் அம்மாபெரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏழ்மையும் எளிமையுமாகச் சில கன்னியாசகோதரிகள் இன்றும் வசித்து வருகிறார்கள். அந்தக் கட்டிடமே அது கட்டப்பட்டுள்ள சாம்பல் நிற பாறைகளோடு ஒன்றாகிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ளது போல நொருங்கிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி, அவர்கள் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட கன்னியாசகோதரிகளாக வாழ்கின்றனர். புனித ஜெபம் செய்வதில் அவர்களுக்கு பேரின்பம். அதைத்தவிர, மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் மற்றொரு செயல், பழம்பெரும்காலத்தில் அந்த மடத்துக்குத் தனித்துவமான, விசித்திரமான ஒரு சிறப்புரிமையை அளித்த செயல். அவர்கள் போர்த்துக்கல் நாட்டிலேயே ஆகச்சிறந்த சணலை விளைவித்துச் சாகுபடி செய்து, அதைக் கொண்டு அந்நாட்டின் மிக மிருதுவான லினன் துணியை உற்பத்தி செய்கிறார்கள்.

“மென்விழி ஒளிரும் பால்நிறக் காளைகள் மடத்தின் அடிவாரத்தில் உள்ள நீள்நிலத்தை உழுகின்றன. உழைப்பினால் காய்ந்து நகத்தடியில் மண்புகுந்த கன்னி விரல்கள், விதைகளைத் திறம்பட விதைக்கின்றன. சணல் பூக்கள் பூக்கும் பருவத்தில், அந்தப் பள்ளத்தாக்கே வான்-நீலமாக மாறுகிறது. பெருந்தேவதை கேப்ரியல் தன் வலுமிக்கச் சிறகுகளை அசைத்தபடி புனித ஆனின் முற்றத்தில் இறங்கினாரே, அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த அன்னை மேரி அணிந்துகொண்டிருந்த மேலங்கியின் நிறம் அது. அப்போது வானுச்சியில் ஒரு புறா, கழுத்திறகுகள் சிலிர்க்க, சிறகுகள் அதிர, சிறிய, தெளிவான, வெள்ளி நட்சத்திரத்தைப் போல் நின்றது. சணல்பூ பூக்கும் இம்மாதத்தில் மடத்தின் அடிவாரத்தைச் சுற்றி விரியும் கிராமங்களின் மக்கள் அனைவரும் தங்கள் கண்களைச் சணல் விளையும் நிலத்துக்கு தூக்கி, “இந்த மடம்தான் தேவலோகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டுவிட்டதா? அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா?” என்று கன்னத்தில் கைவைத்து வினவுவார்கள்.

“உரிய காலத்தில் சணல் இழுத்து, அடித்து, திரிக்கப்படுகிறது. அதன் பின் மெல்லிய நூலாக நூற்கப்பட்டு, லினன் நெய்யப்பட்டு, துணிகள் வெளுக்க புல்வெளிகளில் பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் நீர்ப்பாய்ச்சி விடும்போது மடத்தைச் சுற்றி பனி பொழிந்து விட்டதாகவே நம்பத் தோன்றும். அம்மடத்தின் பிரத்தியேக மந்தணப் பாடல்களும் துதிகளும் நித்தம் ஒலிக்க, இச்செயல்கள் அனைத்தும் துல்லியத்துடனும் நுட்பத்துடனும் பக்தியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. இக்காரணத்தால் அங்கு உற்பத்தியாகும் லினன், சிறிய பழுப்பு நிற கழுதைகளின் முதுகுகளில் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டு, மடத்தின் வாயிலின் வெளியே, கீழே, மேலும் கீழே என்று ஊரூராகச் செல்லும்போது, அவை என்றென்றும் தும்பைப்பூ நிறமாக, மிருதுவாக, எழில் நயத்துடன், பதினான்கு வயதில் என் கிராமத்தில் ஒரு நடனநிகழ்வுக்குச் செல்வதற்கு முன்னால் என் சிறு கால்களைச் சிற்றோடையில் கழுவியபோது என் பாதம் வெளிர்ந்ததே, அப்படியே காலமெல்லாம் வெளிர்ந்திருக்கும் என்பது ஐதீகம்.

“அய்யனே, அம்மையே, செயலூக்கம் நல்ல விஷயம் தான், மதமும் நல்ல விஷயம் தான், ஆனால் ஒரு கதையின் முதல் கருவென்பது கதைக்கு வெளியே குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு மாயமான இடத்திலிருந்து தான் வருகிறது. அதேபோல, வெல்ஹோ மடத்தின் லினன் இப்பேற்பட்ட புனிதத்தன்மையை அடைவது, அதனுடைய முதல் விதை புனித நிலத்திலிருந்து ஒரு சிலுவைப்போராளியால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான்.

“படிப்பறிவு உள்ளவர்கள் பைபிளில் லோச்சா மற்றும் மரீசா என்ற சணல் வளரும் நிலங்களைப் பற்றிப் படிக்கலாம். எனக்குப் படிக்கத்தெரியாது. இவ்வளவு பேசப்படும் இந்நூலை நான் கண்ணால்கூட பார்த்ததில்லை. ஆனால் என் பாட்டியின் பாட்டி சிறுமியாக இருந்தபோது வயதான ராப்பி ஒருவருக்குச் செல்லமாக இருந்தாள். அவரிடமிருந்து அவர்கள் கற்ற கல்வி எங்கள் குலத்தில் வழிவழியாக வந்துள்ளது. காலேபின் மகள் அஃஸா தன்னுடைய கழுதையை விட்டிறங்கி தந்தையை நோக்கி, ‘எனக்கொரு வரம் தாருங்கள்! நீங்கள் எனக்கு நிலத்தைப் பரிசளித்தீர்கள், எனக்கு நீரையும் பரிசாக அளியுங்கள்’ என்று கூவிக் கேட்டதாக நீங்கள் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் நூலில் படிப்பீர்கள். அவளுக்கு அவர் மேல் உலகத்து நீரையும் கீழ் உலகத்து நீரையும் வழங்கினார். அவர்களின் சந்ததியினர்தான் லோச்சா மற்றும் மரீசா நிலங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் அங்கு உலகத்திலேயே மிகச்சிறந்த லினனை உற்பத்தி செய்தனர். தோமர் நகரைச் சேர்ந்த பெரிய லினன் நெசவாளர் குடும்பத்தில் தோன்றிய நம்முடைய போர்த்துகிய சிலுவைப் போராளி ஒருவன், அந்த நிலத்தின் வழியே குதிரையேறி சென்றபோது அங்கு வளர்ந்த சணலைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஒரு விதை மூட்டையைத் தன் சேணத்தில் கட்டிக்கொண்டு திரும்பினான்.

“இந்தச் சம்பவத்தின் பலனாகத் தோன்றியதுதான், இம்மடத்திற்கே பெரிதும் பெருமை சேர்க்கும் முதற் சடங்கு – அதாவது, அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மண இரவுக்கான படுக்கை விரிப்புகள் இங்கிருந்துதான் செல்லும்.

“அம்மையே, அய்யனே, நான் கூற விரும்புவது என்னவென்றால், போர்த்துக்கல் நாட்டின் பழங்குடும்பங்களில் ஒரு மகத்தான சடங்கு காக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறந்த மகள் ஒருத்தியின் மணம் நடந்த மறுநாள் காலை, விடியலுக்கு முன், அந்த அரண்மனையின் முக்கிய காரியஸ்தர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்கவிட்டு , ‘இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்,’ என்று கம்பீரமாக லத்தின் மொழியில் அறிவிப்பார். அந்த படுக்கைவிரிப்பு அதன் பிறகு கழுவப்படுவதும் இல்லை, பிறகு உபயோகிக்கப்படுவதும் இல்லை.

“காலத்தில் பதிந்து விட்டிருந்த இச்சடங்கு அரச குடும்பத்தில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இன்று வாழ்பவர்களின் நினைவில் நிலைக்கும் விதத்தில், மிகச்சமீபத்திய நாட்கள் வரைக்கூட அதுவே வழக்கமாக இருந்தது.

“பலநூறு ஆண்டுகளாக, அவர்கள் அளித்த அசாத்திய தரமுடைய லினனுக்குப் பாராட்டாக, மலையில் நின்ற கன்னிமடத்துக்கு இரண்டாவது பெருமையும் இருந்தது. அந்த இரவில் அரசமகள் மகிமைக்குச் சான்றாகிய பனிவெண்மையான படுக்கை விரிப்பின் நடுப்பகுதி மட்டும், அவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

“கன்னிமடத்தின் பிரதானமான, உயரமான பகுதி மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில், கருப்பு-வெள்ளை பளிங்கு தரையுடைய நீண்ட தாழ்வாரம் ஒன்றுள்ளது. அந்தத் தாழ்வாரத்தின் சுவர்களில், ஒன்றை ஒட்டி ஒன்றாக, கனமான தங்க முலாம் பூசப்பட்ட சட்டகங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அடியிலும் நல்ல பொன்னில் ஒரு தகடு பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிரீடமும், அதற்கடியில் ஒரு இளவரசியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது: டோனா கிறிஸ்டினா, டோனா இனீஸ், டோனா ஜெசிந்தா லெனோரா, டோனா மரியா. ஒவ்வொரு சட்டகமும் அரச படுக்கை விரிப்பிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சதுரத்தை தாங்கி நிற்கிறது.

“கொஞ்சம் கற்பனையும் உள்ளுணர்வும் உள்ளவர்கள் கித்தான்களில் தெரியும் மங்கிய குறிகளில் அத்தனை ராசிகளையும் கண்டு விட முடியும் – துலாம், விருச்சிகம், சிம்மம், மிதுனம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த கற்பனையுலகத்திலிருந்து சித்திரங்களைக் கண்டுகொள்ள முடியும் – ஒரு ரோஜா மலர், ஒரு இதயம், ஒரு வாள் – அல்லது வாளால் துளைக்கப்பட்ட இதயம்.

“பழங்காலத்தில், ஆடம்பரமான வண்ணங்கள் மிளிரும் நீள் ஊர்வலங்கள் கல்-நிற மலை முகடுகள் மீது மெல்ல மெல்ல ஏறி, கன்னிமாடத்தை அடையும். போர்த்துக்கல் நாட்டின் பழைய இளவரசிகள் – இப்போது அவர்கள் மற்ற நாடுகளின் அரசிகள், ராஜமாதாக்கள், அரசபதவியினரின் மனைவிகள் – தங்களுடைய மகத்தான குழுக்கள் பின்தொடர யாத்திரையாக இங்கு வந்தனர். அவர்களுடைய யாத்திரைகள் இயல்பாகவே புனிதமானவை, அதே நேரத்தில் ரகசிய பூரிப்புடையவையும்கூட. சணல் வளரும் நிலங்களிலிருந்து பாதை செங்குத்தாக மேலேறும். வண்டியிலிருந்து இறங்கி இறுதி தூரத்தை அதற்கெனப் பிரத்யேகமாகக் கன்னிமடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில்தான் அவ்வரசகுலப்பெண் கடந்தாக வேண்டும்.

“பல வருடங்கள் கழிந்து, நம்முடைய காலத்தில் நடந்தது இது. காகிதம் ஒன்று எரியும்போது மற்ற பொறிகள் பக்கத்தின் விளிம்பில் ஓடிச்சென்று அணைந்த பிறகு, சிறிய, தெளிவான ஒரு பொறி மட்டும் இறுதியாகத் தோன்றி அவர்களுக்குப் பின்னால் ஓடும். அது போல, ஒரு மூதாட்டி – அவள் உயர்குடி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த முதுகன்னி – அவள் வெல்ஹோ கன்னிமாடத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறாள். பற்பல வருடங்களுக்கு முன்னால், அவள் போர்த்துக்கல் நாட்டின் இளவரசி ஒருத்திக்கு விளையாட்டுத் தோழியாகவும் சினேகிதியாகவும் பணிப்பெண்ணாகவும் இருந்திருந்தாள். அவள் கன்னி மடம் நோக்கி மேலே ஏற ஏற தன்னைச்சுற்றி நிலப்பரப்பு விரிந்து விரிந்து செல்வதைக் கண்டாள். மடத்தின் உள்ளே ஒரு கன்னியாசகோதரி அவளைத் தாழ்வாரத்துக்குக் கூட்டிச்சென்று, அவள் பணி செய்த இளவரசியின் பெயர் தாங்கிய சட்டகத்துக்கு முன்னால் அவளை நிறுத்தி, அவள் தனியே இருக்க விருப்பப்படுவாள் என்று தெரிந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.

“மெதுவாக, மிக மெதுவாக, நினைவுகள், அந்தச் சிறிய, முதிய, கருப்பு லேஸ் முக்காடு மூடிய, ஓடு போன்ற மண்டை வழியே ஊர்வலமாகச் செல்கின்றன. அவற்றை நட்புடனும் பரிவுடனும் கண்டுகொண்டு அந்த தலை மெல்ல அசைகிறது. இளவரசிக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்தவள். அந்த இளைய மணப்பெண்ணின் உயர்ந்த மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள். மகிழ்ச்சியான நிகழ்வுகள், ஏமாற்றங்கள், முடிசூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், சதிகள், போர்கள், அரசணையில் அடுத்து அமரப்போகிறவர்களின் பிறப்புகள், இளைய தலைமுறையினரின் திருமண ஒப்பந்தங்கள், வம்சங்களின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள். அந்தக் கிழவி நினைத்துப் பார்ப்பாள், எப்படி அந்நாளில் அந்த விரிப்பில் தெரிந்த குறிகளைக்கொண்டு கணிப்புகள் குறிக்கப்பட்டன என்று. இப்போது அவளால் கணிப்பையும் நடந்ததையும், அவ்வப்போது புன்னகைத்தபடி, அவ்வப்போது நீள்மூச்சு விட்டபடி, ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அந்த அறையில் ஒவ்வொரு விரிப்பும் அதன் கிரீடம் பொருந்திய தகடும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொன்றும் கதைக்கு மாறாப்பற்றுடன் நிறுவப்பட்டுள்ளது.

“ஆனால் அந்த நீள்வரிசைக்கு நடுவே ஒரே ஒரு விரிப்பு மட்டும் வித்தியாசமானது. அதன் சட்டகத்தில் எந்த வேறுபாடும் இல்லை – மற்றதை போலவே சிறப்பானது, கனமானது. மற்ற எல்லா விரிப்புகளைப் போல அதுவும் கிரீடம் பொறிக்கப்பட்ட தங்கத்தகட்டை தாங்குகிறது. ஆனால் இந்தத் தகட்டில் பெயர் பொறிக்கப்படவில்லை. அந்தச் சட்டகத்தில் உள்ள லினன் விரிப்பு மூலைக்கு மூலை பனிவெண்மையாக, வெற்று காகிதமாக உள்ளது.

“கதை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் நிற்கும் நல்லுள்ளங்களே, உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: இந்தப் பக்கத்தைப் பாருங்கள். என்னுடைய பாட்டி முதலிய கதைசொல்லி கிழவிகள் அனைவரின் ஞானத்தை உணருங்கள்!

“என்ன ஒரு நித்தியமான, நிலையுணராத மாறாப்பற்று இருந்தால் மட்டுமே இந்த விரிப்பு இந்த வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும்! கதைசொல்லிகளே இங்கு இதற்கு முன்னால் நிற்கும்போது முக்காடை முகத்துக்கு மேல் போர்த்திக்கொண்டு சொல்லிழக்கின்றனர். ஏனென்றால் எந்த அரச குடும்பத்து அம்மாவும் அப்பாவும் இந்த விரிப்பு இங்கே மாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களோ, அவர்களுக்கு விசுவாசத்தின் மரபு குருதியோடு பிணையவில்லை என்றால், அவர்கள் இதை இங்கே மாட்டாமலேயே இருந்திருப்பார்கள்.

“அதிதூய வெண்மை ஒளிரும் இக்கித்தானின் முன்புதான் போர்த்துகல் நாட்டின் பழைய இளவரசிகள் – உலகம் அறிந்த, கடமை உணர்ந்த, துன்பத்தில் சுழன்ற அரசிகள், மனைவிகள், அன்னைகள் – மற்றும் அவர்களுடைய சிறுவயது சினேகிதிகள், மணப்பெண் தோழிகள், மூத்த பணிப்பெண்கள் – அனைவரும் அதிக நேரம் அமைதியாக நிற்பார்கள்.

“இந்த வெற்று பக்கத்துக்கு முன்னால் நிற்கும்போது, முதிய, இளைய கன்னியாஸ்திரீகள், மடத்தின் பேரன்னையும்கூட, சிந்தனையின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.”

சிறகதிர்வு – சுசித்ரா சிறுகதை

சுசித்ரா 

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.

சற்றுதூரம் நடந்து சென்ற பின்பே அதைப் பார்த்த கண்கள் என்னுள் விழித்துக்கொள்கின்றன. ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறேன். பனியில் முகம் புதைந்த ஒரு சிறிய உடல். உண்மையிலேயே பறவை தானா? திரும்பட்டுமா? எதற்கு? அவசர எண்ணை அழைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதானே?

ஒருகாலை முன்னால் எடுத்துவைக்க மறுகால் பின்னால் தானாகத் திரும்புகிறது. ஒரு நிமிடம் தத்தளிக்கிறேன். நின்ற இடத்தில் திரும்புகிறேன். சற்றுத் தொலைவில் பனிக்குள் ஒரு நீலப்புடைப்பு. சிறகதிர்வு போன்ற மெல்லிய காற்று என்னைத் தொட்டுச்செல்கிறது. இரண்டு நொடிக்குப் பிறகுதான் அது என் சுவாசக்காற்று என்பதை நான் உணர்கிறேன்.

ஓடிச்சென்று மண்டியிட்டுப் பார்க்கிறேன். சந்தேகமேயில்லை. பறவைதான். செத்துவிட்டது. என்ன பறவை இது? எனக்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா? அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது? பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா? காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது? இங்கு எப்படி வாழும்? வாழ முடியாமல்தான் செத்துப்போனதா? ஆனால் இங்கு எதுவும் சாகக்கூடாதே?

இறப்பிலும் நீலமணிக்கல்லைப் போல மின்னிக்கொண்டிருக்கிறது அதன் உடல். சற்று தலையைப் பக்கவாட்டாகத் திருப்பிப் பார்க்கிறேன். நீலத்தினுள் பாசிப்பச்சை கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சலனமற்ற நீர்நிலையைப் பார்க்கும்போது உண்டாகும் மயக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன். சற்றுநேரம் அது என்னைச் செயலிழக்கச்செய்கிறது. அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சின்னதா இருக்கு, எவ்வளவு அனாதையா இருக்கு, என்ற வியப்பை என் குனிந்த தலையில் கோர்த்துப் பெருகும் கனத்தில் நான் அறிகிறேன். அது நகரவே இல்லை.

யாருடைய வரிகள்? அம்மா அடிக்கடி சொல்வாளே? சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவள் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்பதும் உண்மை. அதெல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான். வரிவரியாக என்னவெல்லாமோ சொல்லுவாள். யார் யாரோ வாயில் பெயர் நுழையாத கவிஞர்களின் நாவிலுதித்த வரிகளெல்லாம் என் அம்மாவின் குரல்வழி என் செவிக்குள் புகுந்துவிட்டன. மூளைக்குள் அது படபடக்கும் ஓசை எப்போதாவது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சொல் மட்டும் என் உதட்டில் வரவே வராது. இப்படித்தான் யாருடைய கவிதையோ. எமிலி டிக்கின்சனா? அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்கிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது? என்ன வரி?

திடீரென்று நான் தன்னுணர்வு கொள்கிறேன். அடச்சீ, என்ன வரியா இருந்தா என்ன? பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால்? ஆய்வுக்கூடத்தில் என் கீழ் வேலை பார்ப்பவர்கள் பார்த்துவிடவே கூடாது. என்ன இது முட்டாள்தனம். நெறிமுறைப்படி நான் இப்போது அவசர எண்ணைத்தான் அழைத்ததாக வேண்டும். அவர்கள் வந்து செய்தாகவேண்டியதை செய்வார்கள். ஆனால் ஏனென்று தெரியாமல் என் கண்களில் நீர் பெருகுகிறது. என்ன வரி அது?

சட்டென்று எனக்குள் ஒரு எண்ணம் சுழற்காற்றாக ஊறத்தொடங்குகிறது. இப்பறவையைப் புதைக்க வேண்டும்.

இது என்ன அபத்தம்? காட்டுமிராண்டித்தனமாக இப்படியொரு எண்ணம்? எனக்கு ஏன் இப்போது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது? என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என்று மட்டும் உறுதியாக உணர்கிறேன். இந்தப் பறவை செத்து விட்டது. இதை யார்கண்ணிலும் படாமல் புதைத்தே ஆக வேண்டும்.

ஆனால் பறவையைப் புதைக்கக் கையில் எடுக்கப்போகும் போது என்னால் அதைத் தொடமுடியவில்லை. மீண்டும் மீண்டும் என் கைவிரல்கள் அதை நோக்கிச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் காற்றையே பற்றுகின்றன. என் கை நடுங்குவதை உணர்கிறேன். அதைத்தொடக்கூடாது என்று என் மூளை உத்தரவு போட்டிருக்க வேண்டும். உடலெல்லாம் கூசுகிறேன்.

வெறிபிடித்தாற்போல் வேகவேகமாக என் ஆய்வுக்கூடத்தை நோக்கி நடக்கிறேன். உள்ளே யாருமில்லை. முதலில் கைகளை நன்கு கழுவிக்கொள்கிறேன். ஏன் கை கழுவினேன்? தெரியவில்லை. கைகளைத் துடைத்துக்கொண்டு ஒரு ஜோடி கையுறைகளை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். மண்ணில் குழிதோண்ட ஏதாவது தென்படுகிறதா என்று ஆய்வுக்கூடம் முழுவதும் துழாவுகிறேன். உயிரின் ரகசியங்களை ஆராய நுண்கருவிகளே தேவைப்படுகின்றன. அவையே போதுமானதாக உள்ளன. மண்ணைத் தோண்டுமளவிற்குப் பெரிதான, ஆபாசமான, நுண்மையற்ற கருவியேதும் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லை.

கையுறைகளை அணிந்துகொண்டு களவாணியைப்போல் யார்கண்ணிலும் படாது பதுங்கிப்பதுங்கி வேகவேகமாகத் திரும்பிச்செல்கிறேன். இவர்கள் கண்களில் எப்படியும் செத்த பறவைகள் படாது. இவர்கள் யாரும் என்னைத்தான் பார்க்கக்கூடாது. நான் இப்போது செய்யப்போகும் காரியம் அவ்வளவு அந்தரங்கமானது, அவ்வளவு ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாதது. அத்துமீறலும் கூட, என்று என்னுள் ஒரு குரல் கிரீச்சிடுகிறது. ஆம், அத்துமீறல் தான். குறிப்பாக நான் இச்செயலைச் செய்வது மிகப்பெரிய அத்துமீறல் தான்.

அம்மாவுக்கு என் செயல்களெல்லாமே அத்துமீறலாகத்தான் பட்டிருக்கவேண்டும். ஆனால் அவள் என்றுமே ஒரு வார்த்தைக்கூடச் சொன்னதில்லை. நான் சொல்வதையெல்லாம் அப்படியா? அப்படியா? என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பாள். எனக்கு எல்லைகளே கிடையாது, நான் உலகத்தின் விதியை மாற்றிக்காட்டுகிறேன் பார், என்று பதின்பருவ வேகத்தில் சூளுரைத்தபோதும் சரி, ஒரு தேர்வு விடாமல் வென்று மருத்துவராகவும் அறிவியலாளராகவும் தேர்ந்தபின்பும் சரி, என் வாழ்க்கையில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் நான் ஆய்வில் மூழ்கியிருந்தபோதும் சரி, எங்கள் கண்டுபிடிப்புகள் முதற்கட்டமாக மனிதர்களில் சோதனை செய்யப்பட்ட போதும் சரி, ஏன், அறுபத்திரண்டாம் வயதில் நான் கண்டுபிடித்த மருந்தை நானே உட்கொள்ளப்போவதாக அம்மாவிடம் சொன்ன நாளன்றும் சரி, அம்மாவின் உதட்டில் ஒரே வார்த்தை தான். “அப்படியா?”

என் கண்டுபிடிப்பின் பலனாக நான் அப்படியொரு புகழில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் பெயரை அறியாத பள்ளிச்சிறார்களே உலகத்தில் இல்லை என்பது நிலை. பணம் பொழிந்துகொண்டிருந்தது. மனித வரலாற்றில் வேறெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியலின் வாசல்கள் திறந்து கிடந்தன. மனிதமனத்தின் சாத்தியங்கள் அனைத்துமே அறிவியல் வாயிலாக நிகழ்த்தப்பட ஆரம்பித்தன. எல்லையில்லா ஆரோக்கியம், எல்லையில்லா ஆயுள் இவற்றுக்கு மல்லுக்கட்ட எல்லையில்லா இன்பங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் நிறுவனமே கனவுத்தயாரிப்பு வியாபாரத்தில் இறங்கியது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் நல்லுறக்கத்தில் தூங்கவைக்கும் மருந்தை நாங்கள் தான் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கினோம். அதில் கொழுத்த லாபம்.

இதெல்லாம் ஐநூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நவீன வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்தையும் அம்மா தன்னுடைய கருமணி கழுகுக்கண்களால் பார்த்துக்கொண்டே வாழ்ந்தாள். கருகருவென்று சுருங்கி சிலுத்த புருவங்களுக்கடியிலிருந்து அவளுடைய கூர்பார்வை என்னை நோக்குவதை என் முதுகுத்தண்டில் எப்போதாவது உணர்வேன். ஆனால் அவளை நான் எதிர்கொண்டதே எப்போதாவதுதான். ஐந்தடிக்குக் குறைவான உயரம். கூந்தலுக்குள் சிறு முகம். பெரும்பாலும் அவள் முகம் இருக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சன்னமாகக் கேட்கும் ஒரு மெல்லிய மெட்டு – என்ன பாட்டு அது? மறந்துபோய்விட்டது – அது மட்டுமே அவள் இருப்பதன் அறிவிப்பு. சளசளவென்று அவள் வீட்டில் வளர்த்த செடிகளுக்கு நீரூற்றும் சப்தத்திலும் அவள் இருப்பாள். என்றாவது, எப்போதாவது, என் தலைமயிரை மெல்லதிரும் விரல்களைக்கொண்டு கோதுவாள். அப்போதெல்லாம் எனக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். கண்களில் கண்ணீர் முட்டும். எரிச்சலடைவேன். என் குரல் கடுகடுப்பாகும். வார்த்தைகளைக் குறைத்துக்கொள்வேன். அவளைப் பார்க்கவே மாட்டேன். “உம்”, “சரி”, “வேண்டாம்” என்று மட்டும் அவளிடம் சொல்லி ஆய்வுக்கூடத்துக்கு ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட வருடங்கள் பல. அதற்குள் அவளுடைய புருவங்களில் நரை தட்டி, அவளுக்குக் கூன் விழுந்து, பார்வை மங்கி, கிழவியாகிவிட்டாள்.

ஒரு கட்டத்தில் அவள் ஓயாமல் பேசத்தொடங்கினாள். என்னிடமில்லை. யாரிடம் என்று தெரியவில்லை. அவை ஒருவரை நோக்கிப் பேசப்படும் பேச்சாகவும் தெரியவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகள். அவளுடைய குரல் ராகம் போல ஒலிக்கும். தத்தைமொழியில் பிள்ளையைப்போலப் பாடுவாள். ஒரு நாள் காலைச்சூரியனை என் மூக்குத்திக்குள் அடைத்துவிட்டேன் பார் என்றாள். இன்னொரு நாள் தான் இவ்வுலகை தன் நாவால் உணரும் வயிறில்லா ஓசனிச்சிட்டு என்று சொன்னாள். மற்றொரு நாள் இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாகச் சொன்னாள். ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களைப்போல் அபத்தமாக அவை எனக்கு ஒலிக்கும்.

அவ்வளவு வருடங்களாக மண்டையில் அடைத்து வைத்த பாடல்களும் கவிதைகளும் எங்குச் செல்வதென்று தெரியாமல் அவளுடைய மூளைக்குள் வவ்வால்களைப்போல் முட்டி மோதி அவ்வப்போது ஏதோ ஒன்று வெளிவருவதாக எனக்குத் தோன்றும். அந்த வரிகளும், அவள் அதை அனாயசமாக, கவலையற்று, உச்சரித்துக்கொண்டே இருப்பதும், என்னைக் கடுப்படையச் செய்யும். “போதும், என்ன எப்பப்பாரு வாயோயாம எதையாவது தொணதொணன்னு. கொஞ்சம் பேசாமலிருக்கக் கூடாதா?” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம்? உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா? இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா?” அவள் வாயில் மண்ணடைத்து விடலாமா என்றெல்லாம் கூடத் தோன்றியுள்ளது. ஏன் அவ்வளவு கடுப்பு என்று சொல்லத்தெரியவில்லை.

பின் எல்லாமே அடங்கிவிட்டது. வாயே திறக்கமாட்டாள். படிப்பதும் இல்லை. கூன் முதுகுடன் இறகுதிர்ந்த பட்சியைப்போல் உடலைக் குறுக்கிக்கொண்டு பகலெல்லாம் படுத்துக் கிடப்பாள். அப்போதெல்லாம் என் எரிச்சல் மறைந்துவிட்டது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அப்படியொரு சோகம் மனதைக் கவ்விக்கொள்ளும். இனம்புரியாத பயமும். “அம்மா, அம்மா, அம்மா,” என்று நான் கெஞ்சுவேன். பெரும்பாலும் பதிலே வராது.

மருந்தை நான் உட்கொண்ட போதே அம்மாவைக் கேட்டேன். எங்கள் நிறுவனம் மூலம் மருந்து மலிவான விலையில் கிடைக்கும், உனக்கும் வாங்கி வரவா என்று. அப்போது அவள் புருவங்கள் நரைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்கடியிலிருந்து சிறுமணிக் கண்களால் என்னைப் பார்த்தபடி, “இல்லப்பா, வேண்டாம்,” என்று மெல்ல சொல்லித் தன் தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டாள்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளுடைய சிறு தோள்களைப் பிடித்து உலுக்கினேன். “ஏன்? ஏன் வேண்டாங்கற? பாட்டுப்பாடி, படம் வரஞ்சு, கவிதை வாசிச்சா? நீ அவ்வளவு பெரிய ஆளா? உனக்குச் சாவு பயம் கிடையாதா? செத்துப்போக ஆசைப்படுறியா?” வர்ணப்பலகை சாய்ந்து அவள் கழுத்திலும் கைகளிலும் மேலங்கி மீதும் வண்ணங்கள் தெறித்தன.

என் சொற்கள் என் மண்டையில் இடி போல் இறங்கின. வாயிலிருந்து தப்பிய வார்த்தைகளைக்கண்டு அதிர்ந்தேன். வார்த்தை வராமல் ஸ்தம்பித்து ஒரு நொடி அம்மாவைப் பார்த்தேன். என் கைகளை விலக்கினேன். அப்போதும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மெளனமாக என்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.

“இதக் குடிச்சா மனுஷன் சாவ நெனச்சு செத்துச் செத்து பயப்பட வேண்டாம் இல்லையா? உருப்படியா எவ்வளவோ செய்யலாமே? ஏம்மா, நா கஷ்டப்பட்டுக் கண்டுபிடுச்சது. உலகமே புகழுது. நீ வேண்டாம்னு சொன்னா எப்பிடிம்மா? அது என்ன அவமானப்படுத்துறது தானே? உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா?” என் குரல் தழுதழுத்தது.

அம்மா எம்பி என் தலை மீது கை வைத்தாள். அவள் கை ஸ்பரிசம் கதகதப்பாக இருந்தது. என்னையும் மீறி நான் அழுதேன். “கண்ணு, உம்மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு இது வேண்டாம். இன்னும் கொஞ்ச வருஷம் வாழறதுல எனக்கு ஒரு பயனும் தெரியல. உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக…”

இப்போது அம்மா படுத்துவிட்டாள். நினைவிழந்துகொண்டே வந்தாள். தன் ஆடைகளை, தன் உடலை, பின் தன் இருப்பையே ஒவ்வொன்றாக மறந்துகொண்டே வந்தாள். மனித இறப்பு என்பது எவ்வளவு ஆபாசமானது! இதை வெல்லத்தானே என் உழைப்பெல்லாம்! என் சொந்த அம்மாவுக்கு அது புரியாமல் போய்விட்டதே. என் வாழ்வில் முதல்முறையாக அலுவலக நேரத்தைக் குறைத்துக்கொண்டு அம்மா அருகில் வந்தமர்ந்தேன். எப்போதாவது கண்விழித்து நான் அருகில் இருந்தால் சிரிப்பாள். பின் என்னைக் கண்டடைவதே எப்போதாவது தான் என்ற நிலைமை வந்தது.

அவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அது நடந்தது. அவள் முன்பொரு முறை கிறுக்கி ஒதுங்கியிருந்த ஒரு தாள் அவள் தலைமாட்டிற்கு அருகே இருந்த மேசைமேல் கிடந்தது. நான் அதை எடுத்து வாசிக்க முயற்சி செய்தேன். அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவளைப் பார்த்தவாறு என் கையில் இருந்த காகிதத்தைக் கவனமில்லாமல் கைபோனபோக்கில் மடித்தேன்.

அம்மா சிணுங்கிக் கண்விழித்தாள். தலையைத் திருப்பித் தன் சிறிய, புரைதட்டிய பழுப்பு நிற விழிகளால் என்னைப் பார்த்தாள். ஆம், என்னைப் பார்த்தாள். அப்படியொரு புன்னகையை அவள் முகத்தில் எனக்கு மீசை அரும்புவதற்கு முன்னால் மட்டுமே பார்த்த நினைவு. அம்மா நான் கையில் வைத்துக்கொண்டிருந்த காகிதத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை அடுத்த நொடியில் உணர்ந்தேன். நடுங்கும் விரல்களால் அவள் அதைப் பற்றினாள். நான் மடித்த காகிதக் கொக்கு அவளுடைய விரலிடுக்கில் சென்று அமர்ந்ததது.

பூரணப் பூரிப்புடன் அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். படுக்கையில் ஊன்றி ஊன்றி என் அருகே வந்து என் தலையைத் தாழ்த்தினாள். அந்தப்பறவையை என் தலைமீது உயர்த்தி, தன் முகத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்கி, என் உச்சியில் முத்தமிட்டாள். என் கண்களைப் பார்த்து கிழட்டு மழலையில் எதையோ உணர்ச்சிகரமாக, கண் பொலிக்கச் சொன்னாள். புரியவில்லை. அவளை அமைதிப்படுத்திப் படுக்கவைத்தேன். சற்றுநேரத்தில் மீண்டும் அதே மயக்கத் தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். அவள் விரல்கள் அந்தக் காகிதக் கொக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குக் கெட்டியாகப் பிடித்திருந்தன. அவள் இறந்தபோதும் கூட எங்களால் அதை அகற்ற முடியவில்லை. அதைப் பற்றியபடியேதான் அவள் உடல் கதிரலைகளைக்கொண்டு சாம்பலாக்கப்பட்டது.

உலகத்திலேயே கடைசியாக இறந்த மனித உயிர்களில் அம்மாவும் ஒருத்தி. அதற்குள் கல்லறைகளுக்கு மேல் இன்பச்சுற்றுலாத் தளங்களும் கேளிக்கை பூங்காக்களும் எழுப்பப்பட்டுவிட்டன. உயிர்நீட்பு மருந்தை வாங்க இயலாதவர்களும், இறப்பைத் தேர்ந்தெடுத்த சொற்ப மனிதர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், வேறுவழியற்ற மிருகங்களும், இறப்புடன் எவ்வழியிலேனும் தொடர்புக்கு வருபவர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் தான் வாழ்கின்றனர். இறப்பு என்பதே எங்கள் பிரக்ஞைக்கு வெளியே, தூரத்தில் எங்கேயோ நிகழும் ஒன்று என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. இங்கு யாரும் சாவதில்லை. இந்தப் பறவையும் காட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும்.

என் கையுறைகளைத்தாண்டியும் மண்ணின் ஸ்பரிசம் தோண்டிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்குத் தெரிந்தது. யாரும் பார்க்காது வேகவேகமாகத் தோண்டினேன். இதைப் புதைக்க வேண்டும் என்ற விழைவு எங்கிருந்து வந்தது? யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது? இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று? இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா? ஒரு வேளை அது தான் சொன்னதா? திடுக்கிட்டேன். ஒற்றை மணிக்கண் என்னை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேளை அம்மா இறப்பதற்கு முன்னால் நான் மடித்த காகிதக் கொக்கின் கண்ணாக இருக்குமோ?

அன்று என் விரல்கள் ஏன் அந்தக் காகிதக் கொக்கை மடித்தன? சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே! என்ன எண்ணம் இது!

பதின்பருவத்தில் எனக்குக் காகிதம் மடிப்பதில் அபத்தம் தட்டத் தொடங்கியது. அம்மா நானும் அவளைப்போலக் கதை சொல்லி காகிதம் மடித்துக் கானம் பாடி காலத்தைத் தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது ஒன்றிற்கும் உதவாதது, பொட்டைத்தனமானது, நான் உலகை மாற்றும் விதி சமைப்பவன் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். மரணபயம் கொண்டவர்களுக்கே இலக்கியமும் தத்துவமும். என் பாதை வேறு. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையுமே நம்பி உலகத்துள் இறங்கினேன். அறிவியல் நான் தேடியவற்றையெல்லாம் கொடுத்தது. புகழும் பணமும் மட்டுமல்ல. வாழ்க்கைப்பயனும் சுயஅடையாளமும் தான். வயோதிகத்தையும் மரணத்தையும் வென்று மனித இனத்தையே ஒரு படி முன்னே சுமந்து சென்றவன் நான் என்ற திருப்தி கிடைத்தது. “காலா உன்னைப் புல்லென மிதிக்கிறேன்” என்று அம்மா உடல்சிலிர்த்துச் சொல்லுவாள். அவள் சொன்னாலும் மிதித்ததென்னவோ நான் தான்.

ஆனால் இதெல்லாம் உண்மை என்றால் நான் ஏன் இவ்வளவு அபத்தமாகப் பனிபொழிந்துக்கொண்டிருக்கும் இம்மதியவேளையில், கொண்டாடிக் களிக்கவேண்டிய என் ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்தநாள் அன்று இப்படி ஒரு செத்த பறவையைப் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருக்கிறேன்? பறவை பாவம் என்பதாலா? ஏதோ சொல்லறியா வரியின் எதிரொலிக்குரல் தரும் உந்துதலா? சர்வமும் அபத்தம். திடீரென்று ஒன்று நினைவுக்கு வருகிறது. எமிலி டிக்கின்சனின் கவிதைகளில் எப்போதும் எந்தப் பறவையும் பாவமாகச் சாவதில்லை. அவை என்றென்றும் உயிரோட்டத்துடன் மட்டுமே தோன்றுபவை. உற்றுநோக்கிக்கொண்டிருப்பவை. மெல்லிய சிறகதிர்வுடன் காற்றின்மேல் நழுவி வானில் உயரப் பறப்பவை.

ஒரு அடிக்குத் தோண்டிவிட்டேன். இப்போது என்னால் அப்பறவையை விரல்களால் தொடமுடிகிறது. அதை மெல்லத் தூக்கி, நான் கொண்டு வந்த பெட்டியில் பத்திரமாக வைக்கிறேன். பின் ஏதோ தோன்ற என் கையுறை ஒன்றைக் கழற்றி அதனை அதில் சுற்றுகிறேன். செத்தப் பறவைக்குக் குளிரடிக்காது. இருந்தாலும்.

பெட்டியை மூடி மண்ணில் வைக்கிறேன். மெல்லத் தட்டி முதல் கைப்பிடி மண்ணை அதன்மீது தங்கத்தூசைப்போல் பொழிகிறேன். முன்புணர்ந்த ஒரு பறவையின் இமையா விழிப்பார்வை என் முதுகுத்தண்டில் மீண்டும் உணர்கிறேன். அம்மாவின் கரம் என் உச்சந்தலையில். நீள்மூச்சு விடுகிறேன். தலையைச் செருக்குடன் உயர்த்தி முதுகை நேர்படுத்திக்கொள்கிறேன். சிவந்த கண்மணி உற்றுநோக்குகிறது. அது கண்ணிமைக்கத் தொடங்குகிறது. இப்போது வேகமாக. நான் குழியை மூடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் அபாயச்சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது.