மொழியாக்கம்

அம்மாவுக்காக – மஹ்மூத் தார்விஷ்

(ஆங்கில மொழியாக்கம் – ஏ. இசட். ஃபோர்மேன்)

என் அம்மாவின் ரொட்டிக்கு ஏங்குகிறேன்,
அம்மாவின் காப்பிக்கு;
அம்மாவின் தடவிச் செல்லும் ஸ்பரிசத்துக்கு..
ஒவ்வொரு நாளும்,
என்னுள் குழந்தைமை வளர்கிறது.
வாழ்வை அவ்வளவு நேசிக்கிறேன்-
ஏனெனில், நான் இறந்தால்
அம்மாவின் கண்ணீர் என்னை வெட்கச் செய்யும்..

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் இமைகளில் போர்த்துக் கொள். உன் கையால்
என் எலும்புகள் மீது புற்களை வீசு;
புனித மண்போல்
களங்கமற்ற உன் காலடித்தடங்களால் பெயரிடப்பட்டவன்.
ஒரு கற்றை மயிரால் என்னைக் கட்டிக் கொள்,
உன் ஆடையின்பின் ஒரு நூலில் பிணைத்துக் கொள்.
நானும் தெய்வம் தொட முடியும்
என் ஆன்மா தெய்வம் தொட முடியும்
உன் இதயத்தின் சுவாசத்தை நான் தொட முடிந்தால்.

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் அடுப்பில் சமைக்க என்னை எரியாக்கு,
கூரையில் துணியுலர்த்தும் கொடியாய் உன் கைகளில் விரித்துக் கொள்.
உன் தினசரி பிரார்த்தனைகளின்றி
என்னால் நிற்கவும் முடியாது..

எனக்கு வயதாகிவிட்டது..
என் குழந்தைமையின் நட்சத்திரங்களைக் கொடு,
வீடு நோக்கிய பாதையில் நான் செல்ல வேண்டும்.
வீடு திரும்பும் பறவைகளோடு
என்னை அழைக்கும் உன் கூட்டுக்கு.

நன்றி – http://poemsintranslation.blogspot.in/2009/12/mahmoud-darwish-to-my-mother-from.html

ஆவி சொன்ன கதை – சேத் சைமன்ஸ்

(Matchbook என்ற தளத்தில் Seth Simons எழுதிய குறுங்கதை)

நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. அதற்குதான் வருகிறேன் என்று பல பேர் நினைக்கிறார்கள், ஆனால் அப்படியல்ல. இங்கு தரைப்பலகைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீ கவனித்தாயா தெரியவில்லை. நிலவறையில் பல ஆண்டுகளாக பூஞ்சை படிந்து கொண்டிருக்கிறது.. அது நச்சாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. என்னால் இப்போதெல்லாம் வண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை. நிழல்கள் மட்டும்தான். வெளிச்சம், அல்லது இருள். எனவே, நிலவறைக்குப் போகாதே. சத்தியமாகச் சொல்கிறேன், நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. நீ மேலே கூரையை இன்சுலேட் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அங்கு கடைசியாக கை வைத்தபோது ஆஸ்பெஸ்டாஸ் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் எனக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் அதிகம் தெரிந்து கொண்டிருந்ததும் கிடையாது. உனக்கு நினைவிருக்கிறதா- இல்லை, உனக்கு நினைவிருக்காது, இல்லையா? எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் என்னை விட்டுப் போய்விட்டாள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஒரு நாய் இருந்தது, ஜாக்சன். தெருவுக்கு ஓடிப் போனது, பிறகு திரும்பவும் ஒடி வந்துவிட்டது. அவன்தான் அதிர்ஷ்டக்காரன். இங்கே எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்கள். வேறு பல பேரின் புகைப்படங்களை மாட்டி வைத்தார்கள், சட்டம் போட்ட படங்கள். நீயும் அப்படிச் செய்யலாம், உனக்கு விருப்பமிருந்தால். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். என்னால் தடுக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தச் சுவர்களை நான்தான் எழுப்பினேன், தெரியுமா? அவள் ஒரு சின்னப்பெண் போலிருந்தாள், அப்போது, வெயிற்கால உடையில் இருந்தாள், தலைமுடியில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டிருந்தாள். அதன் வண்ணங்களை நினைவு வைத்திருக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. சிவப்பாக இருக்கலாம், அல்லது நீலமாக இருக்கலாம். அவளது பற்கள் வெண்மையாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஓடை வரை அவள் பின்னால் போனேன். அவள் தன் காலணிகளைக் கழட்டினாள். தண்ணீருக்குள் இறங்கினாள். கற்களின்மேல் குதிகால் உயர்த்தி கால் பதித்து நடந்தாள். கூர்மையான கல் ஒன்று அவள் காலின் கட்டை விரலைத் தைத்தது. சிறு கப்பல்கள் கடலில் செல்வது போல் எங்களைச் சுற்றி பருத்தி பறந்தது. புகைபோல் தண்ணீரில் ரத்தம். இப்போது என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். சுவர்களுக்கு இடையே எலிகள் இருக்கின்றன. உடைந்த செஙகற்கள். காட்டில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பைன் மரச் சருகுகளுக்குக் கீழ் கொடரியின் உடைந்த கைப்பிடியொன்று கிடக்கிறது. வானொளிச் சாளரத்தில் சிலந்தி வலைகள். பார், ஓடிக் கொண்டிருக்கும் காட்டெருமைக் கூட்டத்தினிடையே என் பேரப்பிள்ளைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அழைக்கிறார்கள். நான் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறேன். குழந்தைகள், இப்போது. நாம் எல்லாரும். சுவர்க்காகிதங்களில் நிழல்கள். பழைய தாமிரக் குழாய்கள். வண்டுக்கூடுகள். எலும்புகள். நான். அவள். எல்லாரும். மந்தையாய் மிதித்துச் செல்லும் காட்டெருமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமவெளிகளில் இடிமுழக்கம். இது எப்போதும் நடக்காத ஒன்று. எப்போதும் நடக்கும் ஒன்று”.

நான் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்கிறேன். வெளியே, இரு பொன்பாடிப் பறவைகள் ஃபீடரின் உள்ளிருக்கும் இறைச்சியைக் கொத்துகின்றன. வேனிற்காலத்து மஞ்சள் ஆடையை ஒன்று ஏற்கனவே இழந்து விட்டது. மற்றொன்று இன்னும் இழந்து கொண்டிருக்கிறது, அதன் சிறகுகளில் திட்டுத்திட்டாகப் பளீரிடும் வண்ணங்கள், அதன் வயிற்றில். கிளென் தன் தோட்டத்தில் இலைகள் கூட்டிக் கொண்டிருக்கிறான். கருவாலி மரங்கள் வளைந்திருப்பதைப் பார்க்கும்போது காற்றடிப்பது தெரிகிறது, தாழ, ஆனால் நிதானமாக வீசும் காற்று. கிட்டத்தட்ட உன் காதில் விழாமலே உன்னைக் கடந்துச் செல்லும் காற்று.

நன்றி – Matchbox

கோவில் எலி- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர் )

  காஸ்மிக் தூசி

rat

திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில்
சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு
பொங்கி வழியும் கருநிறக் குருதி போல
இறங்கி வருகிறது கோவில் எலி.

பைரவரின் தடத்தோளில் நின்றபின்
சற்றே புனிதச்சதை அசைவதுபோல்
வேகமாய் பார்க்கிறது சுற்றிலும்

மார்த்தாண்ட பைரவரின் கண்களின் ஆவேசம்
முகத்தில் சந்தனக்கவசத்தின் போர்க்கோலம்
கண்டு திரும்புவதற்குள் மறைந்து

கற்கூரையில் தொங்கும் சங்கிலியில்
வளைந்து இறங்குகிறது கோவில் எலி
தீபஒளி மினுக்கும் உலோக கண்ணிகளில்
பிரகாசிக்கும் கண்களைச் சிமிட்டியபடி

வளைவில் சறுக்கி இறங்கியபின்
காண்டாமணியின் விளிம்பில் நின்று
கம்பீரமாய் பார்க்கிறது

கருங்கல் லிங்கத்தின் தலையில்
வாழைப்பழம் நசுக்கும்
இளம் புதுமணப்பெண்ணின்
தண்டனிட்ட கைகளில்
கண்ணாடி வளைகளின்
பச்சைநிற பளபளப்பை

நரைத்த ஒருவார தாடிக்குள்
பூசாரியின் முகத்தில்
கீறும் புன்னகையைக் கண்ட
கோவில் எலி

கருவறையின் மூலையில்
முரசின் பின்னால்
சென்று மறைந்ததுதான் தாமதம்
உடனே முழங்கிற்று
கோவில்மணி.
****

*அருண் கொலாட்கர் எழுதிய The Temple Rat என்ற கவிதையின் தமிழாக்கம்

சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்

 ஜாக் ஸ்டாப் – 

வீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றிஅது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..

ஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது. (more…)

குளிர்காலப் பனி இரவில்.- நிமா யூஷிஜ்

.- நிமா யூஷிஜ் – 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

அனைத்தைக் காட்டிலும் பிரகாசிக்கும் என் விளக்கொளியில்

நிலவின் உறைபனி விளக்கு சோபையிழக்கிறது

 

அனைத்தும் உறைந்த ஓர் இரவுப் பொழுதில்

என் அண்டை வீட்டுக்காரனுக்கு நான் விளக்கேந்தி நிற்கின்றேன்

 

பைன் மரங்களிடையே காற்று சூறையாடியபோது

ஊமை மலைகளில் அவன் தொலைந்து போனான்.

 

குறுகிய பாதையை விட்டு விலகிப் போனான்,

எனினும் என் உதடுகளில் அவன் சொல்லிச் சென்ற

கதையை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்:

 

விளக்கேற்றுவது யார்? தகிப்பில்ல் வாடுவது யார்?

தன் இதயத்தில் என் கதையைப் பொதித்திருப்பது யார்?”

 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

நன்றி MPT Magazine