மொழியாக்கம்

ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்

வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers)

(இவ்வாண்டு மேன் புக்கர் பரிசு பெற்ற ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களை மொழிபெயர்த்தவர் ஓட்டிலி மூல்ஸட். இவரை பாரிஸ் ரிவ்யூ தளத்துக்காக பேட்டி கண்டவர் வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers))

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை மொழிபெயர்த்த அனுபவத்தைக் கூறுங்கள். நீங்கள் எப்படி அவரது மொழிபெயர்ப்பாளர் ஆனீர்கள்? அவருடன் எப்படி வேலை செய்கிறீர்கள்?

நான் அவரைச் சந்திப்பதற்கு முன், செயோபோ தேர் பிலோவிலிருந்து “சம்திங் இஸ் பர்னிங் அவுட்சைட்” என்ற சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அது http://www.hlo.hu என்ற ஹங்கேரிய மொழி இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு இருபதாண்டுகள் பிற்பட்ட கிழக்கு ஐரோப்பிய சிறுகதைகள் என்ற ஒரு மொழிபெயர்ப்புத் தொடரில் பதிப்பிக்க ஜூன் 2009ல் கார்டியன் தளம் அதைத் தேர்ந்தெடுத்தது. அப்போது சிறிது நேரம் க்ராஸ்னஹோர்க்காயைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். செயோபோவை மொழிபெயர்க்க நான் முயற்சி செய்யத் தயாராக இருப்பதைச் சொன்னேன். முதலில் க்ராஸ்னஹோர்க்காய்க்கு அதில் சிறிது தயக்கம் இருந்தது, அந்தப் படைப்பு அசாதாரண அளவில் சிக்கலானது என்பதால் அவரது தயக்கம் புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான். ஆனால் நான் அனிமல் இன்சைடை மொழிபெயர்த்தேன், அது மிக நல்ல வரவேற்பு பெற்றது, ஓரளவு சீக்கிரமாகவே இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. அடுத்த ஆண்டு இளவேனிற் பருவத்தில் நான் செயோபோவிலிருந்து ஓர் அத்தியாயத்தை நியூ டைரக்சன்ஸ் பதிப்பகத்துக்கு முன்மாதிரியாக அனுப்பி வைத்தேன்.

க்ராஸ்னஹோர்க்காயும் நானும் மின் அஞ்சல்வழி நிறைய பேசிக்கொள்கிறோம். எனக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், அவர் மிகவும் உற்சாகமாக பதிலளிக்கிறார். பெரும்பாலும் ஹங்கேரிய மொழியில்தான் பேசிக் கொள்கிறோம். சில சமயம் அவர் நேரடியாகச் சில குறிப்புகள் அளிப்பதுண்டு. உதாரணமாக, செயோபோவில் உள்ள அந்நிய மொழிச் சொற்களை சாய்வெழுத்துகளில் எழுதக்கூடாது என்று சொன்னார், அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிரதியில் இயல்பாகவே ஒன்றியிருப்பது போல் சேரும்போதும் அவை மேலும் குழப்புவதாய் இருக்கின்றன. எனக்கு அது ஒரு தீவிரமான செய்கையாகத் தெரிந்தது.

ஒரு மொழியாக ஹங்கேரிய மொழியின் பலங்களும் தனித்தன்மைகளும் என்ன, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அதன் சவால்கள் என்ன?

ஒரு மொழியாக ஹங்கேரியன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. நான் அதன் ஒலியை நேசிக்கிறேன், அதன் இலக்கணம் எப்படி வேலை செய்கிறது என்பதை நேசிக்கிறேன். அதன் மொழிக் களஞ்சியத்தை நேசிக்கிறேன், பல்வேறு மொழிகளின் திகைக்க வைக்கும் கலவையாக அங்கு குவிந்திருக்கும் சொற்தொகையை நேசிக்கிறேன், அதைக் கொண்டு எழுத்தாளர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை நேசிக்கிறேன். ஹங்கேரிய மொழி உயிரொலி இயைபு கொண்ட ஒட்டுநிலை மொழி- அதன் பின்னொட்டுகள் முடிவற்றவை, கூட்டுச் சொற்களுக்கான சாத்தியம் ஏராளமானவை, அதன் சொல்வரிசை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது- எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்த வகையில் வாக்கிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நம்ப முடியாத அளவுக்கு ஹங்கேரிய மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை உண்டு என்பதை அவசியம் சொல்லியாக வேண்டும்- அது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. அது விரிந்து கொண்டே செல்லக்கூடியது, ஆஹா, இப்போது எந்த நொடியும் அறுபட்டுவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்குமளவு அது விரியக்கூடியது. அல்லது, வெகு சில எளிய சொற்களில் அதைச் சுருக்கி விடலாம்- அதிலுள்ள மிக முக்கியமான பகுதிகள் அனைத்தையும் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடவும் முடியும்.

ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும் அத்தனை நெகிழ்வுத்தன்மை கொண்டதல்ல. ஒருவேளை இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் ஆங்கிலம் அப்படியிருக்கலாம்- அங்கு அது இந்தியின் போக்குகளுக்கு ஏற்ப ஓரளவு கட்டுப்பட வேண்டியிருக்கிறது- ஹங்கேரிய மொழி இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்குச் சரியான ஆங்கிலமாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த மொழி நன்றாகத் தெரியுமோ அதில்தான் நான் வேலை செய்தாக வேண்டும்.

தகவல்களால் நெருக்கமாகத் தொகுக்கப்பட்ட வாக்கியங்களைத் தவிர்க்கப் போராடியாக வேண்டும், என்றாலும் கூட கொஞ்சம் தீவிரமான இழப்புகளை எதிர்கொள்ள வேண்டும் எனும்போது நீங்கள் ஆங்கில மொழியின் எல்லைகளை மீறத்தான் வேண்டும். ஆங்கில மொழியின் எழுவாய்- பயனிலை- செயப்படுபொருள் என்ற வரிசை இறுக்கமானது, செயல்வினை காட்டிகள் எல்லாமும் அதனதன் இடத்தில் இருந்தாக வேண்டும்.

காகிதத்தின் சிந்திய மசித் துளிகள் போல் ஹங்கேரிய மொழி இருக்க முடியும். சில வாக்கியங்கள்- க்ராஸ்னஹோர்க்காய் விஷயத்தில் சில உட்கூறுகள்- இரண்டு அல்லது மூன்று சொற்கள் மட்டுமே கொண்டவையாக இருக்கும். இதில் சொல்லப்படாமல் விட்டுப்போவது பற்றியெல்லாம் யோசிப்பது எனக்கு சுவையாக இருக்கிறது, வழிக்கு வர முரண்டு பிடிக்கும் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் அதைச் சொல்ல வேண்டியிருப்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது- ஆங்கில மொழியில் சாத்தியமற்ற ஏதோ ஒன்றைச் செய்யவைக்க முயற்சிப்பதில் ஓர் ஆர்வம் இருக்கிறது.

ஆங்கில மொழி இன்று வணிகத்திலும் வர்த்தகத்திலும் உலகளாவிய மொழியாக இருக்கிறது, எனவே அது மேலாதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னாலும் சில வகைகளில் அது மிகவும் ஏழைப்பட்ட மொழியாகவே இருக்கிறது. பிற மொழிகளிலிருந்து இது போல் ரத்தம் செலுத்தப்படுவது ஆங்கில மொழிக்கு அவசியமாக இருக்கிறது.

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை ஆங்கில மொழியில் வாசிக்கும்போது எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன, மொழியின் தொனி என்ற அளவில் சொல்லுங்கள்.

ஹங்கேரிய வாசகர்கள்- நான் சொல்வது தீவிர இலக்கியம் படிக்கும் ஹங்கேரிய வாசகர்கள்- மிகக் கடினமான வகையில் சிக்கலான அமைப்பு கொண்ட இந்த வாக்கியங்கள் சிலவற்றை பிறரைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்கின்றனர், இங்கு நான் வாக்கியத்தின் நீளத்தைப் பற்றியே பேசவில்லை. எந்த அளவுக்கு சிக்கலான வாக்கிய அமைப்பை ஆங்கிலத்துக்கு கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு அதைக் காப்பாற்றியிருக்கிறேன்- மூல நூலிலேயே புத்தகத்தின் சில பகுதிகள், வாசகனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றன, அதை எல்லாம் அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.

ஹங்கேரிய மொழியில் ஆங்காங்கே சிதறிய சில சிறு பத்திகள் இருக்கின்றன, அவை வாசிக்க கவிதை போலிருக்கின்றன, அவற்றில் சிலவற்றின் ஒலியைக் காப்பாற்ற முடியவில்லை. நினைவுக்கு வரும் சொற்றொடர் இது, “rízs és víz, rízs és víz”- “அரிசியும் நீரும் அரிசியும் நீரும்” – மிகுந்த வறுமையில் இருக்கும்போது வீட்டில் இருந்த ஒரே உணவு இதுதான் என்று மாஸ்டர் இனோயி கசுயூகி சொல்கிறார். இந்தச் சொற்றொடரில் வரும் ஐ என்ற நெடில் இறுதியில் வரும் குழிந்துரசொலிகளோடு (Sibilant) இணையும்போது, மறக்க முடியாத ஓர் ஒலித்தாக்கத்தை ஏற்படுத்துகிறது- அது ஆங்கிலத்தில் வராது என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இதைச் சொல்வதில் க்ராஸ்னஹோர்க்காய்க்கே உரிய தனித்துவம் கொண்ட வரண்ட நகைச்சுவையை மீளுருவாக்கம் செய்ய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

குறுகிய வாக்கியங்களைக் காட்டிலும் நீண்ட வாக்கியங்கள் கடினமாக இருக்கின்றனவா?

அந்த நீண்ட வாக்கியம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்த விஷயம் இது. நீண்ட வாக்கியங்கள் சிலவற்றில் ஓர் ஒழுங்கு வரிசை இருக்கக்கூடும்- ஒவ்வொரு தகவலாக ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரே ஓட்டமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், அந்த ஆபத்து இருக்கிறது. மூல நூலில் முற்றுப்புள்ளி இல்லாத இடத்தில் நான் முற்றுப்புள்ளி வைக்கவே மாட்டேன்- ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இந்த வாக்கியங்கள் நதி போலிருக்கின்றன, மூல பிரதியில் இல்லாத இடத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்போது அது ஆற்றில் அணை கட்டுவது போன்றது.

ஆனால் அப்படிப்பட்ட வாக்கியங்கள் ஒப்பீட்டளவில் சுலபமானவை. க்ராஸ்னஹோர்க்காய் ஹங்கேரிய மொழி இலக்கணத்தின் அசாதாரண நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே சில சமயம் சிக்கலான வாக்கியங்களை அமைக்கிறார்- துணைநிலைத் தொடர்களுக்கு இடையேயுள்ள உறவுகளை ஒரு வரைபடமாக வரைந்தால், அது அச்சுப்பிரதியில் சிலந்தி வலைபோல் இருக்கும். தொடர்ந்து இணை அமைப்புகள் கொண்ட சொற்களாலான நீண்ட வாக்கியங்கள்- ஆங்கிலம் ஓரளவு இயல்பாக அதை ஏற்றுக் கொள்கிறது.

சில மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளவாறே மொழிபெயர்ப்பதாகச் சொல்கின்றனர், வேறு சிலர் இயல்பான வாசிப்புக்கு உதவும் வகையில் கூடுதல் சுதந்திரம் எடுத்துக் கொள்வதாகச் சொல்கின்றனர். இதில் உங்கள் நிலை என்ன?

சில சமயம் இந்த முரண்நிலை சற்றே செயற்கையானது என்று நினைத்திருக்கிறேன். ஏனென்றால், நீ மொழிபெயர்ப்பதன் அந்நியத்தன்மையை வேறொரு மொழிக்குக் கடத்திச் செல்ல பல வழிகள் இருக்கின்றன. மூல மொழியின் தனித்தன்மை எதுவோ அதை கொண்டு செல்ல நான் என்னாலான அளவு முயற்சி செய்கிறேன்- அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை, அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது சாத்தியமேயில்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். அசாத்தியமான ஒன்றை என் மொழிபெயர்ப்பு சாதிக்க வேண்டும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட, பொருத்தமற்ற இரு உலகங்களின் எல்லைகளில் புழங்கப்படுவதாகவும் இருக்க வேண்டும், அந்த இரு உலகங்களுக்கு இடையே என் மொழிபெயர்ப்பு ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும். நான் மூல மொழியில் எத்தகைய அதிர்ச்சியை உணர்ந்தேனோ, ஆங்கில வடிவில் வாசிக்கும் வாசகனும் அதை உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுலபமாக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கமல்ல, பிரதியை மிகவும் உள்ளூருக்கு உரியதாகச் செய்துவிடக் கூடாது. ஹங்கேரிய மொழியில் அற்புதமான கவித்துவம் உள்ளது. சிலபோது அது அளவற்ற மென்மை கொண்டுள்ளது, சிலபோது அது முரட்டுக் கவிதையாய் இருக்கிறது.

ஒரு முறை, வெகுநாட்களுக்கு முன், நான் மிகவும் தீவிரமான ஹங்கேரிய மொழி செமினார் ஒன்றில் பங்கேற்றேன். ஹங்கேரிய இலக்கணத்தில் உள்ள வழக்கத்துக்கு மாறான கூறுகள், “இவர்களை யார் உள்ளே விட்டார்கள்?” என்பது போன்ற எதிர்வினைகளைச் சந்தித்தன. “இந்த மொழியின் தேவைதான் என்ன?” என்ற வழமையான கேள்விகளோடு பங்கேற்பாளர்கள் பிறர் தம்மை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது பயிற்றுனர் சற்றும் தாமதிக்காமல் சொன்ன பதில், “குருதி, வியர்வை, கண்ணீர்”.

க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில வாசகர்களின் குருதியும் வியர்வையும் கண்ணீரும் எனக்கு வேண்டாம், ஆனால் ஹங்கேரியன் போன்ற ஒரு முற்றிலும் மாறுபட்ட மொழியின் முழு அந்நியத்தன்மை நமக்கு அசௌகரியமாக இருக்கிறது, அந்த அசௌகரியத்தை மொழிபெயர்ப்பு காப்பாற்றித் தருமா?- அசௌகரியமானது, வித்தியசமானது, முடிவில் நமக்கு மேன்மையளிப்பதும் உயிரூட்டுவதுமாக மொழிபெயர்ப்பு இருக்க முடியுமா? க்ராஸ்னஹோர்க்காய் போன்ற ஓர் எழுத்தாளர் பற்றி பேசும்போது, தன வாசகர்களை அசௌகரியப்படுத்தி தடுமாறச் செய்வதை நேரடி நோக்கமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் பற்றிதான் பேசுகிறோம். “பிரதியின் கிறுகிறுப்பு”- இதில் நிச்சயம் வெளிப்படையான, வாசக கிளுகிளுப்பின் உச்சம் இருக்கிறது.

எப்போதாவது மாலைப் பொழுதில் உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு, “அப்பாடா, இன்று ஒரு வாக்கியம் முடித்தேன்,” என்று நினைத்தது உண்டா?

“ஆம், சில சமயம், “இன்று ஒரு வாக்கியத்தைத் துவங்கினேன்,” என்றோ, “இன்று ஒரு வாக்கியத்தை முடித்தேன்” என்றோ, அல்லது, “இன்று ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்தேன்” என்றும்கூட இருப்பதுண்டு”

அந்த முதல் ஆறுபக்க வாக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஓரிடத்தில், க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில மொழி வாசகர்கள் படிப்பதை நிறுத்தி, என்னைப்போல், இதை மொழிபெயர்த்தது யார் என்று நினைப்பதுண்டு என்று தோன்றுகிறது. அப்புறம் உங்கள் பெயர் இவ்வளவு அழகாக, மர்மம் நிறைந்ததாக இருக்கிறது, ஓட்டிலி மூல்ஸட்..

மூல்ஸட் என்ற பெயர் என் மத்திய ஐரோப்பிய வேர்களோடு தொடர்பு கொண்டது- என் பாட்டி ஹங்கேரிய தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் மூல்ஸட், லூயிஸா மூல்ஸட். ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…

நான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டதால் ஹங்கேரிய மொழி பயின்றேன். என் பின்னணியல் ஹங்கேரியர்கள் இருக்கிறார்கள் என்பதுகூட எனக்கு பெரியவளாகும்வரை தெரியாது. இந்த பூமியில் என் மூதாதையர்களாய் இருந்தவர்களைப் பற்றி ஏதோவொன்று அறிந்து கொள்ள இது ஒரு வழி என்று நினைத்தேன். அறிவார்ந்த ஆர்வத்தால் மட்டும்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளத் துவங்கினேன், ஆனால் அதன் பின் அது ஒரு போதையாகி விட்டது.

க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களில் நான்கு மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் வருந்துகிறார்கள். உங்கள் வாழ்க்கைப்பணியைக் கண்டுகொண்டு விட்டதாக நினைக்கிறீர்களா? மொழிபெயர்க்கப்படாத நாவல்கள் உங்களைத் துன்புறுத்துகின்றனவா?

இப்போது பேசிக்கொண்டிருக்கும்போதுகூட இரண்டு மொழிபெயர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன. டெஸ்ட்ரக்சன் அன்ட் சாரோ பினீத் த ஹெவன்ஸ் என்பது ஒன்று, அதை இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சீனாவில் க்ராஸ்னஹோர்க்காய் மேற்கொண்ட விரிவான பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகள் அது. முதன்முதலில் 2002ல் பதிக்கப்பட்டபோது இருந்ததைவிட இப்போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இன்று இருக்கிறது. மற்றொன்று, த வர்ல்ட் கோஸ் ஆன், என்ற அற்புதமான சிறுகதை தொகுப்பு. 2013ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெற்ற ஜார்ஜ் ஜைர்டஸ், அவர் பரிசு பெற்றதும் க்ராஸ்னஹோர்க்காய் நூலுக்காகதான், ப்ரம் த நார்த் பை ஹில், ப்ரம் த சவுத் பை லேக், ப்ரம் த வெஸ்ட் பை ரோட், ப்ரம் த ஈஸ்ட் பை ரிவர் ஆகிய நான்கு புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்- வரும் சில ஆண்டுகளில் இந்த நான்கேனும் வாசிக்க கிடைக்கவிருக்கின்றன.

புதிய செய்திகள் அல்லது திட்டங்கள் எதுவும் சொல்வதற்கு உண்டா?

சைலார்ட் பார்பேலியின் த டிஸ்பொசஸ்ட் மொழியாக்கம் செய்யப் போகிறேன்- அறுபதுகளின் பிற்பகுதியில் வடகிழக்கு ஹங்கேரியில் ஏழ்மைப்பட்ட கிராமத்தில் தான் வளர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் அவர். தன் சமகால தலைமுறையின் மிகவும் திறமை வாய்ந்த கவிஞர் அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். என் நெருங்கிய நண்பர் அவர், நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்த மனிதர். அவரது மரணம் நினைத்தே பார்க்க முடியாத இழப்பு, ஹங்கேரிய இலக்கியத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அவரது எழுத்துக்கு புதிய ஆங்கில வாசகர்களை அறிமுகப்படுத்த முடியும் என்றால், எனக்கு அதுவே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்- இப்படிப்பட்ட சூழ்நலையில் ஒருவர் எவ்வளவு சந்தோஷப்பட முடியுமோ அவ்வளவு சந்தோஷப்பட முடியும்.

“மொழிபெயர்த்தல்- இதயத்தைப் பிளக்கும் அனுபவம்” – இசிடோரா ஏஞ்சல் 

(Publishing Perspectives என்ற தளத்தில் Izidora Angel எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)
 
நான் இப்போது நியூ யார்ககிலுள்ள ராசஸ்டரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஜெனேசி ஆற்றை நோக்கியுள்ள சூட் ஒன்றில் தங்கியிருக்கிறேன்- பொன்னும் பழுப்பும் கலந்த இந்த ஆறு மனதுக்கு உகந்ததாய் இருக்கிறது. என் ஜன்னலிலிருந்து யுனிவர்சிடி ஆப் ராசஸ்டரின் அழகிய கேம்பஸ் தெரிகிறது- ஆலய மணி ஓசை ஒவ்வொரு முறை ஒலிக்கும்போது அதன் பசுமை கூடுகிறது; நான் என்னிடமிருந்த அத்தனை மோல்ஸ்கைன் நோட்டுப் புத்தகங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கிறேன், எவ்வளவு தேவைப்படும் என்று சொல்ல முடியாது. எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கணிசமான அளவில் அடுக்கி வைத்திருக்கிறேன், படைப்பூக்கம் பெறும் நோக்கத்தில்: எம்எஃப்கே ஃபிஷர், வர்ஜினியா ஜஹாரிவா, ஜோன் ரிவர்ஸ், கிம் கார்டன் (இங்கே, ராசஸ்டரில்தான் இவர் பிறந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிகிறேன்). மூன்று வாரங்களாக இங்கு நான் எழுதிக் கொண்டும், வாசித்துக் கொண்டும், மொழிபெயர்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
 
எலிசபெத் கொஸ்தோவா பவுண்டேஷன் மற்றும் ஒப்பன் லெட்டர்ஸ் புக்ஸ் தயவில் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான ரெசிடென்சி ப்ரோகிராமில் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னை கவனித்துக் கொள்பவர்கள், எதற்கும் அசராத சாட் போஸ்ட்- இவர்தான் ஓப்பன் லெட்டர்ஸ் பதிப்பகம் நடத்துகிறார்-, மற்றும் லாத்விய மொழிபெயர்ப்பாளரும் பதிப்பகத்தின் எடிட்டோரியல் டைரக்டருமாகிய கைஜா ஸ்ட்ராமானிஸ், இனிமையானவர் இவர். 
 
நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலின் பெயர், த சேம் நைட் அவெய்ட்ஸ் அஸ் ஆல்: டயரி ஆஃப் நாவல், இதை எழுதியவர் ஹ்ரிஸ்தோ கராஸ்தோயனோவ். தனித்தன்மை கொண்ட இந்த எழுத்தாளர், இப்போதுதான் இன்னுமொரு முக்கியமான பல்கேரிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். 
 
நான் பல நாட்களாக இந்த அறைக்குள் பூட்டிக் கொண்டு இருக்கிறேன். கண்மூடித் திறக்கும் நேரத்தில் இன்னுமொரு மணி நேரம் ஆகிவிட்டிருக்கிறது. எழுதும்போது, காலம் காணாமல் போகிறது. வகுப்புகளுக்குச் செல்கிறேன், மொழிபெயர்ப்பில் உள்ள நூல்கள் பற்றி அங்கு விவாதிக்கும் இளம் இலக்கிய ஆர்வலர்களை நேசிக்கிறேன், எனக்குப் பொருத்தமான விஷயம் இது. எழுதுகிறேன். “பட்டப்படிப்பு முடித்ததும் கோடையில் எதுவும் செய்யப் போவதில்லை, என் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளப் போகிறேன்,” என்றெல்லாம் பேசுகிறேன். அதற்கு அதைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளும், என்று சிரிக்கிறேன். அவர்களூம் வாசிக்கிறார்கள், எப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள், நான் எழுதியதில் ஒரு பகுதியை விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள், எனது அகந்தை சிறிது அடிவாங்கிச் சற்றே சிறுக்கிறது. மீளச்செயல் வகைகள்.
 
மக்களோடும் மொழியோடும் தனித்துவமிக்க உறவு
 
பல்கேரியாவில் கராஸ்தோயனோவ் காத்திருக்கிறார், என் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தந்தாகி விட்டதா என்று உறுதி செய்து கொள்கிறார். எழுத்தாளருக்கும் அவரது மொழிபெயர்ப்பாளருக்கும் உள்ள உறவு அந்தரங்கமானது, தனித்தன்மை கொண்டது. ஒரு வகையில் அவர்கள் இணையாசிரியர்கள், மொழிபெயர்க்கப்பட முடியாத இடைவெளிகளில் பாலமிடுபவர்கள்- பண்பாட்டு இடைவெளிகள், கடந்தகாலம், எதிர்காலம். மிக நன்றாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பும் ஒரு பொருள் விளக்கம். அதன் நுண்மைகள் மிகப் பரந்தவை, துல்லியமான மொழிபெயர்ப்பு என்பது துவக்கத்திலேயே சாத்தியமற்றுப் போகிறது. 
 
கராஸ்தோயனோவின் புத்தகம் லெனின் மரணத்தையொட்டிய பெருங்காட்சியைக் குறிப்பிடுகிறது. லெனினை அவர் “போல்ஷவிக்குகளின் வோழ்த்” என்று அழைக்கிறார். வோழ்த் என்ற சொல்லின் பொருள்- குடித்தலைவர், ஆன்மீக மீட்பர், குரு. இதில் கல்ட் என்பதன் உணர்த்துதல் இருக்கிறது. கம்யூனிசம் அவ்வாறாகவே இருந்திருக்கிறது, (இப்போதும் இருக்கிறது). ஆனால் என் அகராதிகள் எல்லாம் எளிமையாக, “தலைவர்”, அல்லது, “குடித்தலைவர்” என்று மட்டுமே குறிப்பிடுகின்றன.
 
மொழிபெயர்த்தல் ஏன் இந்த அளவுக்கு இதயத்தைப் பிளப்பதாய் இருக்கிறது?
 
முதல் விஷயம், பல்கேரிய மொழி பழமையானது, சற்றே குழப்பமானது, சிக்கலானது. அங்கு வினைச்சொல்லை இணைத்து காலத்தை உணர்த்தலாம்- நடந்ததாய்ச் சொல்லப்படும் நிகழ்வு, ஆனால் இன்னும் முற்றுப் பெறவில்லை, கடந்த காலத்துக்குரிய வினை, அதைச் சொல்பவர் இன்னும் முற்றுப்பெறாத நிகழ்வைப் பார்த்திருக்கவில்லை. இத்தனை பொருளும் ஒற்றை இடைச்சொல்லால் உணர்த்தப்படுகிறது. நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல் பல்கேரியாவின் மிகவும் இருண்ட, குழப்பங்கள் நிறைந்த 1920களுக்குரிய காலகட்டத்தைப் புனைவு வடிவில் விவரிக்கிறது. இதன் பிரதான பாத்திரங்கள், எழுதித் தீராத கவிதைகளுக்குரிய கவிஞர் ஜியோ மிலாவ் மற்றும் மிகவும் தீவிரமாகத் தேடப்படும் அரசின்மைவாதி ஜியார்ஜி ஷைதானோவ் இருவரும் உண்மையில் வாழ்ந்தவர்கள். மிகவும் கவனமான ஆய்வுகளைப் பயன்படுத்தி கராஸ்தோயனோவ் தன் பாத்திரங்களை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் (பின்னர் கொலை செய்கிறார்). ஆனால், அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க அவர் அங்கிருந்திருக்க வாய்ப்பில்லை- எனவேதான் இந்த நூல் முழுவதும் நடந்ததாய்ச் சொல்லப்படும் ஒன்றைப் பாராதவன் அது இவ்வாறே நடந்தது என்று உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான நுண்விவரம்- ஆனால் ஆங்கிலத்தில் உண்மையாய் இப்படிதான் நடந்தது என்ற மெய்ம்மை உணர்வுடன் நான் இதை மொழிபெயர்த்தாக வேண்டும். இது எல்லாம் இவ்வாறே நடந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அல்லது?
 
பல்கேரிய வாக்கியங்களின் அமைப்பை உடைத்து ஆங்கிலத்திலும் அதே அளவுக்கு வலுவான உணர்வுகள் கொண்ட ஆங்கில வாக்கியங்களாய் மாற்றுவது நாற்பது புஷ்அப்புகள் செய்வதற்குச் சமம். வலிமிகுந்த அனுபவம், ஆனால் மேன்மையாய் உணரச் செய்கிறது. ஒரு நாள், நாம் இன்னும் நன்றாகச் செய்கிறோம். ஆனால் சில சமயம் நாம் அழுகிறோம், திட்டுகிறோம்- வித்துக்கிணையான, இரக்கமற்ற நபகோவ்வின் “மொழிபெயர்ப்புக் கலை” என்ற கட்டுரை ஆவியாய் நம்மைப் பீடிக்கிறது:
 
“நரகத்தை நோக்கிய அடுத்த அடி மொழிபெயர்ப்பாளனால் எடுத்து வைக்கப்படுகிறது- புரிந்து கொள்ளும் அக்கறையில்லாமலோ அரைகுறையாய் பாவித்துக் கொண்ட வாசகர்களுக்கு புரியவைக்க முடியாதது போலிருப்பதாலோ அவன் வேண்டுமென்றே சில வார்த்தைகளையோ பகுதிகளையோ மொழிபெயர்க்காமல் கடந்து செல்லும்போது; அவனது அகராதியின் வெற்றுப் பார்வையை மனசாட்சியின் உறுத்தல்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்கிறான்; பாண்டித்தியத்தை ஆசாரத்துக்கு உட்படுத்துகிறான்; எழுத்தாளனைவிட தனக்கு அதிகம் தெரிந்திருப்பதாய் நினைப்பதால் அவனைவிடக் குறைவாகத் தெரிந்தால் போதும் என்ற நிலைக்கு ஆயத்தமாய் இருக்கிறான்”.
 
பொருள் காப்பதற்காகப் போராடினால் மட்டும் போதாது, நாம் அதன் ஓசை நயத்துக்கும் நியாயமாய் நடந்து கொள்ள வேண்டும், என்கிறார் நபகோவ். பல்கேரிய மொழியில் ஒற்றை அசைகள் கொண்ட உணர்வு வெளிப்பாட்டுக் கும்பல் ஒன்று இருக்கிறது, அவற்றை ஒன்றாய்க் கோர்க்கும்போது, மகத்தான ஆற்றல் கொண்டு வேகமெடுக்கும் மொழிபெயர்க்கவே முடியாத உணர்ச்சி நிலைச் சொற்றொடர்கள் உருவாகின்றன- “அ, கக் லி புக் நெ!” என்தில் சற்றே விரோதமான, தீச்சாயல் உண்டு- அது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பயன்பாட்டால் உருவானது- “அது சரி!” என்று மொழிபெயர்ப்பது அதற்கு நியாயம் செய்யும் என்று நினைத்தே பார்க்க முடியாது.
 
ரஷ்யர்கள் தங்கள் அரசகுலத்தவர்களுக்கு பிரெஞ்சு சொற்றொடர்கள் தருகின்றனர், மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை சாய்வெழுத்துகளில் எழுதி முடித்துக் கொள்கின்றனர். வாசகர் ஓரளவுக்கு பிரெஞ்சு பேசத் தெரிந்தவர் என்று எத்ர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல்கேரிய மொழியில் பிரெஞ்சு சொற்களைவிட துருக்கியச் சொற்கள்தான் அதிகமிருக்கின்றன. இது அரசகுல ரத்தம் ஓடுகிறது என்று கண்காட்டுவதைவிட, ஆட்டோமான் பேரரசுக்கு ஐநூறு ஆண்டுகாலம் அடிமைகளாக இருந்து ஆன்மீக வதைபட்டதை நோக்கி தலைகுனிவதாகவே இருக்கிறது. போடுர்சென், என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அது “துருக்கியனாதல்” என்றோ முகமதின் பெயரால் கிறித்தவத்தைக் கைவிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ பொருள்படும். ஓர் உவமையாக, அது மீண்டும் கண்டெடுக்கப்பட முடியாத வகைளில் ஒருவன் தொலைந்து போதலைக் குறிக்கும். இதை எப்படி மொழிபெயர்க்க முடியும்?
 
இது தவிர பல்கேரிய மொழியில் ஆயிரக்கணக்கான அடியாழ நிறப்பிரிகையாய் எச்சங்கள் உள்ளன- இவற்றுக்கு இணையான ஒற்றைச்சொல் ஆங்கிலத்தில் கிடையாது (இதயத்தைப் பிளக்கும் இன்னும் பல காரணங்கள்), இவை உயிரற்றவற்றுக்கு ஆண் பெண் என்ற பாலினம் அளிக்கின்றன. பல்கேரிய மொழியில் மரணம் ஒரு பெண் (இதிலென்ன ஆச்சர்யம்), ஆனால் ஆங்கிலத்தில், ஆம், பால் அடையாளமற்றது. ஆனால் கராஸ்தோயனோவ் முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் குண்டுவீச்சின் துகள் தாக்கி கவிஞனின் வலக்கண் சிதைக்கப்பட்டு அவனது மண்டையோட்டின் ஒரு பகுதி இழக்கப்படுவதைத் தொடர்ந்து மரணம், “அவனைத் தன் இறுக்கிய அணைப்பில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் வைத்திருந்தாள்” என்று எழுதும்போது, மரணத்தைப் பெண்ணாக்க வேண்டும்.
 
மொழிபெயர்க்க எவ்வளவு நேரமாகும், என்று என்னிடம் பலர் கேட்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள், என்று பதில் சொல்ல விரும்புகிறேன், அதிலும் குறிப்பாக கராஸ்தோயனோவின் முத்திரை வாக்கியங்கள்- ஒன்பது வரிகளுக்கு நீண்டு செல்லும் அவை ஒவ்வொன்றும் மொழிபெயர்க்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம், எடுத்துக் கொள்கின்றன். ஆனால் எனக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இல்லை. கராஸ்தோயனோவ் குரலுக்குள் என் குரலைக் காண மூன்று வார கால அவகாசம்தான் இருக்கிறது.
 
ஐஸ்லாந்தின் புகழ்பெற்றவர்களைச் சந்தித்தல்… 
 
காற்று வாங்கலாம் என்று என் அறையை விட்டு வெளியேறும்போது அசாதாரணமான அனுபவங்கள் எனக்கு அருளப்படுகின்றன. கடந்த சில நாட்களின் இரு மாலைப் பொழுதுகள் எழுத்தாளரும் கொரில்லா அரசியல்வாதியும் ஸ்டாண்ட் அப் காமிக்கும் நடிகருமான ஜோன் நாருடன் இனிமையாய்க் கழிந்தன. மூன்று பகுதிகளாக வெளிவரவிருக்கும் அவரது அருமையான தன்வரலாற்றின் முதல் புத்தகம், த இந்தியன், விற்பனை தொடர்பாக புக் டூர் செய்து கொண்டிருந்தவர் ராசஸ்டரில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதை ஐஸ்லாந்திக் மொழியிலிருந்து லிட்டன் ஸ்மித் ஆங்கில மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
இப்போதுதான் டெக்சாஸில் ரெசிடென்சி முடித்து வருகிறார் நார், அந்த மாநிலத்தின் தவறவிடமுடியாத உருவத்தை தன் புஜத்தில் கருப்பு மையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் அவர். நாங்கள் ஒன்பது பேர்- எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மனிதர்கள்- டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். வைன் குடிக்கிறோம், கூஸ்கூஸுடன் ப்ரேய்ஸ்ட் பீஃபும் சிக்கன் டிக்கா மசாலாவும் பரோஸ்சிடோ உறையிட்ட ஆர்டிசோக் இதயங்களும் கொண்ட விருந்துத் தட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். 
 
நான் கேள்விப்பட்ட அளவில் மிகுந்த வெற்றிபெற்ற கொரில்லாத் தாக்குதலாக அமைந்த ஜோனின் அனுபவங்கள் குறித்து விசாரிக்கிறேன். 2008ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட நிதிநிலைச் சிக்கலைத் தொடர்ந்து அவர் பகடியாய் ஒரு கட்சி துவங்கினார், கேலியாய் பிரச்சாரம் செய்தார், ஐஸ்லாந்தின் தலைநகரும் மிகப்பெரும் நகருமான ரெய்க்ஜாவிக் நகர மேயராக வெற்றியும் பெற்றார்- அவரே சொல்வது போல், “நான் உட்பட அனைவருக்கும் அது ஒரு அதிர்ச்சியாய் இருந்தது”. அவர் அந்நகரை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியிருக்கவும் கூடும். இப்போது ஒரு பேச்சிருக்கிறது- வற்புறுத்தல் என்றும் சொல்லலாம்- அவர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்கின்றனர். அவர் போட்டியிடக் கூடும், அல்லது, அது வேண்டாம் என்றும் சொல்லலாம். ஆனால் பல நூல்கள் எழுதியுள்ள இவர், அவற்றில் சில நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, குழந்தைப் பருவத்தில் அறிவு வளர்ச்சி குன்றியவராய், தன் பெயரைக்கூட எழுத முடியாத அளவுக்கு கடும் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தார் என்பதைப் பார்க்கவேண்டும், அவரே என்னிடம் இதைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.     
 
போதாமைகள்? எல்லாம் உன் மனதில்தான்.
 
ஆக, நபகோவ் எவ்வாறு மொழிபெயர்த்தார்? அவரும் சொல்வதாயில்லை. “இரவின் கடுமையான பொழுது அதை எதிர்கொள்வதில் கழிந்தது. ஒருவழியாய் அதை மொழிபெயர்த்தேன்; ஆனால் இங்கு என் மொழிபெயர்ப்பை அளித்தால், ஒரு சில குற்றம் குறையற்ற விதிகளைக் கடைபிடித்தால் போதும், பூரணத்துவம் அடையப்படக்கூடும் என்பதை வாசகர் சந்தேகிக்க அது இடம் கொடுத்துவிடும்”
 
புஷ்கினின் ஒற்றை வரியைப் பற்றி மட்டுமே அவர் பேசியிருக்கிறார். 

பட்டாம்பூச்சி

காஸ்மிக் தூசி

butterfly

அதற்குப் பின்னால்
எந்தக் கதையுமில்லை
வினாடியைப்போல இரட்டித்து
மூடித்திறக்கிறது
தன்னுடலையே கீலாக்கி

அதற்கு
எதிர்காலமில்லை
இறந்த காலத்துடன்
இணைப்பு ஏதுமில்லை
இஃதொரு
நிகழ்காலச் சிலேடை

கொடிய மலைகளை
தன் சிறகுகளுக்குள்
கொண்டுள்ள

சிறிய
மஞ்சள் நிற
வண்ணத்துப் பூச்சி

ஒரு துளியளவு
மஞ்சள்
திறக்கும் முன் மூடி
மூடும் முன் திறக்…

எங்கே அது?

ஓவியம் – நந்து

௦௦௦

அருண் கொலாட்கரின் The Butterfly  என்ற கவிதை தமிழாக்கம்

காப்பி எடிட்டிங்: “குறை கண்டுபிடிக்க எனக்கு காசு கொடுத்தார்கள்” – அரைப்புள்ளி அரசி ஒருவரின் அனுபவங்கள்

(Mary Norris எழுதிய “Between You & Me – Confessions of a Comma Queen” என்ற நூலின் ஒருசில பகுதிகள் The Guardian தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியே இந்த மொழிபெயர்ப்பு)
 
…அதன்பின் என்னை காப்பிடெஸ்கில் வேலை செய்ய அனுமதித்தார்கள். என் உரைநடை வாசிப்பை அது மாற்றிற்று- குறை கண்டுபிடிக்க எனக்கு காசு கொடுத்தார்கள். வாசிப்பின் சுவைக்காகப் படிப்பது என்பது வெகு காலம் எனக்குச் சாத்தியப்படாமல் போயிற்று. என் கண்ணில் படுவதை எல்லாம் அனிச்சையாக காப்பி-எடிட் செய்தேன். ஆனால், காப்பிடெஸ்க் பழகிப்போய் இறுக்கம் தளர்ந்ததும் சில சமயம் என்னால் என் வேலையை அனுபவித்துச் செய்ய முடிந்தது. சில எழுத்தாளர்களின் உரைநடை மிக உயர்ந்த நிலையில் மேம்படுத்தப்பட்டு என் கைக்கு வந்தது, அதை எல்லாம் படிக்க எனக்கு காசு கொடுக்கிறார்கள் என்பதை நம்புவதே கடினமாக இருந்தது: ஜான் அப்டைக், பாலின் கேல், மார்க் சிங்கர், இயன் பிரேசர்! ஒருவகையில் இவையே கடினமானவையாக இருந்தன, இவற்றின் உரைநடையின் மயக்கத்தில் விழிப்புணர்வோடு வாசிக்கத் தவறுவதுண்டு. காப்பி எடிட்டரின் அலுவல் அறைக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். குற்றம் குறையற்ற ஒரு பிரதியில் கை வைக்கும் வாய்ப்புகளுக்குத் தயாராய் இருப்பது கடினமான விஷயம், ஆனால் எதையாவது தவற விட்டுவிட்டால் அதைக் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.
 
நான் பேஜ் ஓகேயர் ஆகி இருபது ஆண்டுகள் ஆகின்றன- இந்தப் பதவி நியூ யார்க்கரில் மட்டும்தான் உண்டு. இந்தப் பொறுப்பில் இருப்பவர் மெய்ப்பு பார்க்கப்பட்ட ஆக்கங்கள் குறித்து கேள்விகள் கேட்டு அவற்றை மேம்படுத்த வேண்டும்- எடிட்டர், எழுத்தாளர், தகவல் பிழை திருத்துனர், இரண்டாம் நிலை மெய்ப்பு பார்ப்பவர் என்று அச்சுக்குப் போகும்வரை ஒவ்வொருவரிடம் பேசி முடிவு செய்ய வேண்டும். ஒரு எடிட்டர் எங்களை உரைநடைத் தெய்வங்கள் என்று அழைத்தார்; அரைப்புள்ளிகளின் அரசி என்று விவரிப்பதும் சரியாக இருக்கும்.
 
என் பணியில் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று, என் முழு ஆளுமைக்கும் இங்கு வேலை இருக்கிறது: இலக்கணம், நிறுத்தற்குறிகள், மொழிப் பயன்பாடு, அன்னிய மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியங்கள் பற்றிய அறிவு மட்டுமல்ல, உன் பயண அனுபவம், தோட்ட வேலை அனுபவம், கடற்பயண அனுபவம், இசையறிவு, குழாய்களைச் சரி செய்யத் தெரிந்திருத்தல், கத்தோலிக்க சமய ஞானம், மிட்வெஸ்ட்டர்னிஸம், மொஸாரல்லா, ஏ ட்ரெயின், நியூ ஜெர்சி என்று உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதற்கெல்லாம் இங்கு வேலை இருக்கிறது. பதிலுக்கு, இந்தப் பணி உன் அனுபவங்களை மேலும் செறிவாக்குகிறது. உரைநடைத் தெய்வங்களில் அடுக்குவரிசையில், நான் மிகவும் கீழே இருப்பவள். ஆனால் இந்த விஷயத்தில் எனக்குக் கிட்டியுள்ள மேதைமையை நான் பிறருக்குக் கைமாற்றிக் கொடுக்க விரும்புகிறேன். என் புத்தகத்தின் பெயரைப் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் “between you and me” என்று அச்சமின்றிச் சொல்லக் கற்றுக் கொள்வீர்கள் என்பதுதான் என் மனதுக்கினிய விருப்பம் (“I” அல்ல)
 
நாம் ஏன் எழுத்துப்பிழை பற்றி கவலைப்பட வேண்டும், அதுவும் இப்போது, நமக்கு அதைச் செய்து கொடுக்க இயந்திரங்கள் இருக்கும்போது? இந்நேரம் ரோபோட்கள் உலகை ஆளும் என்று இருபதாம் நூற்றாண்டில் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம், ஒருவகையில் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் ஓர் இனம் என்ற வகையில் ரோபோட்கள் நம்மை ஏமாற்றிவிட்டன. எஃக்காலும் பிளாஸ்டிக்காலும் செய்யப்பட்டு, சர்க்யூட்களும் பளிச்சிடும் விளக்குகளும் டாங்கி ட்ரெடுகளுமாய் இயங்கும் அடியாட்களை ஏவிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நாம் ரோபோட்டிக் புற உறுப்புகள் அணிந்து கொண்டிருக்கிறோம். நாம் அடுத்து என்ன பாடல் கேட்க வேண்டும் என்று நம் ஐபாட்கள் உத்தரவிடுகின்றன, நாம் எந்தப் பக்கம் போக வேண்டும் என்று நம் காரில் உள்ள கருவிகள் சொல்கின்றன, நம் வாக்கியங்களை நமக்கு பதில் ஸ்மார்ட்போன்கள் நிறைவு செய்கின்றன.  
 
நாமே நமக்கான ரோபோட்கள் ஆகிவிட்டோம்.
 
ஸ்பெல் செக் இருக்கும்போது எதற்கு காப்பி எடிட்டர்கள் இன்னமும் இருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். ஆட்டோகரெக்ட் இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் சொல்ல வேண்டியதை ஒரு இயந்திரம் ஏன் சொல்ல வேண்டும்? நான் ஒருவருக்கு “நல்லிரவு” என்று ஜெர்மன் மொழியில் டெக்ஸ்ட் செய்கிறேன், ஆனால் “Gute Nacht” என்பதற்கு பதிலாக “Cute Nachos” என்று போகிறது. வேலை செய்யும்போது, ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு ஆக்கத்தையும் ஸ்பெல் செக் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க முயற்சி செய்கிறேன். அது எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்து விடுகிறது. ஆனால் ஸ்பெல் செக்கர் ஏன் காப்பி எடிட்டரின் வேலையைச் செய்ய முடியாது என்றால், அது ஒரு சொல் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
 
ஆங்கில மொழியெங்கும் பிழையாய் எழுதக் காத்திருக்கும் சொற்கள் நிறைந்திருக்கின்றன, நம் மேல் பாய்வதற்குத் தயாராய்க் காத்திருக்கும் இலக்கணர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றனர். இத்தாலியன், ஸ்பானிஷ், நவீன கிரேக்கம் போல் நம் மொழி ஒலிப்புமுறை சார்ந்ததன்று- குறிப்பிட்ட சில எழுத்துகளும் எழுத்துகளின் வரிசையும் எப்போதும் ஒரே மாதிரியான ஒலியெழுப்பும் என்று அம்மொழிகளில் நம்பலாம். ஆங்கிலத்தில் பல எழுத்துகள் மௌனமாய் இருக்கின்றன. வரைமுறையற்ற துவக்கங்கள் காரணமாக இந்த மொழியின் சிக்கல்களை அவிழ்ப்பது மிகக் கொடுமையான கஷ்டமாக இருக்கிறது.
 
ந்யூ யார்க்கரில் என் திறமையைக் காட்ட முதல் வாய்ப்பு அளித்தது ஓர் எழுத்துப் பிழைதான். பதிப்பாசிரிய நூலகத்தில் எனக்கு இருப்பு கொள்ளாது என்று ஹெலன் ஸ்டார்க் கணித்தது சரியாகத்தான் இருந்தது. வாரத்தின் சில காலைப் பொழுதுகளின் பத்தொன்பதாம் மாடிக்கு வந்து ஃபவுண்டரி ப்ரூஃப்களை வாசித்து உதவ அவர் எனக்கு அனுமதியளித்தார். அங்கே டேவ் ஜாக்ஸன்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மெய்ப்பு பார்ப்பவர்கள் பலரும் அவருடன் பணியாற்றித்தான் வேலை செய்யத் துவங்கியிருந்தனர். அவர் உயரமாக, ஒல்லியாக இருந்தார், அவரது முகம் அடிக்கடி சிவந்து போகும்- அவரது பற்கள் ஒரு கொடூரமான கிரில்லாக அவருக்குப் பயன்படக்கூடியவை. கொஞ்சம் அதிர்ஷ்டம்கெட்ட நோயல் கவார்ட் போலிருந்தார். 
 
எதுவொன்றும் அச்சுக்குப் போவதற்கு முன் இறுதியாக வாசிக்கப்படும் இடம்தான் பவுண்டரி ப்ரூப்ரீடிங். ஓவியத்திரை சாய்த்து வைக்கும் ஏணி போலிருந்த ஒரு போர்டின் முன் டேவ் என்னை இருத்தினார்- முந்தைய நாள் திருத்தப்பட்ட மாற்றங்கள் குறிக்கப்பட்டிருந்த ரீடர்ஸ் ப்ரூப் ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி என்று எனக்கு அவர் கற்றுத் தந்தார்- புதிய வரைவு வடிவத்துடன் அதை ஒவ்வொரு வரியாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அச்சிடுபவர் புதிய பிழை எதையும் புகுத்தியிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். மாற்றங்கள் எதுவும் இல்லை, காப்பி சரியாக இருக்கிறது என்றால் எந்த வரிகளும் விட்டுப் போகவில்லை என்பதை மட்டும் உறுதி செய்துகொண்டால் போதும். அதைப் படித்துப் பார்க்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. உண்மையில், யாரும் உன் கருத்துக்காகக் காத்திருக்கவில்லை. அது மிகவும் இயந்திரத்தன்மை கொண்ட ஒரு வேலை- முதல் ப்ரூபை நீளவாக்கில் மடிக்க வேண்டும், அதை புதிய ப்ரூப்புக்கு நேராக வைத்துப் பார்க்க வேண்டும், பத்திவாக்கில் பென்சிலை கீழே இறக்கிக் கொண்டே வர வேண்டும்- ஒவ்வொரு வரியின் முதல் சில எழுத்துகளை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் அதைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்ததால் நான் எப்போதும் முழு வரியையும் படிப்பது வழக்கம். 
 
“idiosyncrasyயில் உள்ள எழுத்துப் பிழையையும் நீ கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கிறது,” என்று டேவ் பாராட்டும் விதமாகச் சொன்னார்- அதிர்ஷ்டசாலிகள் சிலருக்கு மட்டுமே அந்தச் சொல்லின் இறுதியில் சி என்ற எழுத்தல்ல, எஸ் என்ற எழுத்து வரும் என்று தெரிந்திருக்கும் என்பது அவரது பாராட்டின் உள்ளர்த்தம். ஒரு முறை அவர் வி எஸ் பிரிட்செட் marvellous writer (ந்யூ யார்க்கரின் இரட்டை எல்களை அந்தச் சொல்லில் பயன்படுத்துபவர்), ஆனால் மிக மோசமான எழுத்துப்பிழைகளைச் செய்பவர் அவர் என்று சொன்னார். ப்ரிட்செட்  “skeptical”  என்ற சொல்லில் பிரிட்டிஷ் மரபுப்படி சி பயன்படுத்தி “sceptical” என்று எழுதியிருந்தார். இது போன்ற விஷயங்களைப் பேசும்போது டேவ் பார்ப்பதற்கு அத்தனை கோபமாக இருப்பார்.
 
கிருஸ்துமஸ் ஷாப்பிங் பத்திகள் ஒன்றில்தான் நான் பவுண்டரி ப்ரூப்ரீடராக எனக்குப் பெருமை சேர்க்கக்கூடிய முதல் பெரும்பிழையைக் கண்டுபிடித்தேன். அதை எழுதியவர் ப்ளூமிங்டேல்ஸின் பேஸ்மெண்ட்டில் இருந்தார், அன்றாட உணவுப் பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார் அவர், அப்போது சில சர்க்கரைப் பைகளுக்குப் பின்னர், தன் பட்டியலில் “flowers” என்று  சேர்த்திருந்தார். நான் உள்ளிருக்கும் we என்ற இரு எழுத்துகளைக் கட்டம் கட்டி அதைப் பத்தியின் விளிம்புக்குக் கொண்டு வந்து, u என்ற எழுத்தைப் பரிந்துரைத்து, அதனருகில் கேள்விக்குறி இட்டேன்- எனக்குக் கற்றுத்தரப்பட்டிருந்தவாறே அதை செய்தேன். உன் அறியாமையை அம்பலப்படுத்தும் ஏதோவொரு விஷயத்தைக் கேள்வியாய்க் கேட்பது அடிமுட்டாள்தனம் (நான் அதையும் செய்தேன்), ஆனால் கேள்விக்குறியைத் தவிர்ப்பது என்பது இப்பணியில் ஒரு தற்கொலை போன்றது, எழுத்தாளர் எழுத நினைக்காத மாற்றத்தைச் செய்ததற்கு நாம் பொறுப்பாக நேரிடும். 
 
பொது கற்பனையில் காப்பி எடிட்டருக்கு ஒரு சூனியக்காரி போன்ற பிம்பம் இருக்கிறது எனபதை நான் எப்போதும் மறந்து விடுகிறேன், யாராவது என்னைப் பார்த்து பயப்படும்போது எனக்கு அது ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. சில காலம் முன்னர், நியூ யார்க்கர் அலுவலகத்தின் பணியாளர்களை அறிமுகப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு புதிய இளம் பதிப்பாசிரிய உதவியாளர், என் கதவடியில் அறிமுகம் செய்யப்படக் காத்து நின்றார். நான் ஒரு காப்பி எடிட்டர் என்பதைக் கேட்டதும் அவர் குதித்து ஒரு அடி பின்வாங்கினார், நான் ஏதோ செக்கச் சிவந்த ஹைஃபன் கொண்டு அவளைக் குத்திவிடப் போகிறேன் என்பது போலவோ, ஒரு பவுண்ட் காற்புள்ளிகளை அவள் வாயில் திணித்து விடுவேன் என்பது போலவோ அரண்டு விட்டாள். ரிலாக்ஸ், என்று சொல்ல விரும்பினேன்.
 
எழுத்தின் போக்கை மடைமாற்ற விரும்புவதாவும், ஏவுகணையின் பாதையை திசைதிருப்ப விரும்புவதாகவும், உரைநடையை எங்கள் விருப்பத்துக்குத் திருத்த விரும்புவதாகவும் எங்களைக் குறித்து சில சமயம் பேசப்படுவதுண்டு. ஒரே மாதிரி எழுத வேண்டும் என்று இறுக்கமாக வலியுறுத்துபவர், பிறர் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் சந்தோஷப்படும் அற்பன், அச்சுத்துறையின் துவக்க நிலையில் இருக்கும் கடைக்கோடி ஊழியர், தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்படுபவள், அல்லது, மிக மோசமாகச் சொல்வதானால், எழுத்தாளன் ஆக முயன்று தோற்றுப் போய் ஐ’க்கு புள்ளி வைத்து டி’க்கு கோடு போட்டு பிற எழுத்தாளர்களின் வெற்றிக்கு உதவ  வேண்டியிருப்பதன் கசப்பு மிகுந்தவள் என்றெல்லாம் எங்களைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. நான் இது அத்தனையுமாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
 
ஆனால் நல்ல எழுத்தாளர்கள் தாம் செய்வது எதையும் காரணத்தோடுதான் செய்கின்றனர், சற்றே கோட்டித்தனமான பயன்பாட்டைச் சரி செய்வது, ஒரு காற்புள்ளியை நீக்குவது, எழுத்தாளர் தெரிந்தே புரிந்து கொள்வதற்குக் கடினமான வகையில் எழுதிதை ஆணித்தரமாக நிறுவும் வகையில் கூர் தீட்டுவது- இதையெல்லாம் உன் வேலையாக எடுத்துக் கொண்டு ஒரு படைப்பில் கை வைக்கும்போது நீ செய்வது அவர்களுக்கு உதவியல்ல. உண்மையாகவே சிறந்த எழுத்தாளர்கள் பதிப்பாசிரிய உரையாடலை விரும்புகிறார்கள் என்பது என் அனுபவம். நீ அங்கே போகும்போது உன் சட்டைக் காலரில் ஒட்டிக் கொண்டிருக்கும் லேபிள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்- ஒருவேளை, நீ வேண்டுமென்றே உன் சட்டையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை,.
 
பிலிப் ராத் எழுதிய “ஐ மேரிட் எ கம்யூனிஸ்ட்”டின் முதல் சில அத்தியாயங்கள் நியூ யார்க்கரில் பதிப்பிக்கப்பட்டபோது, நான்தான் அதற்கு மெய்ப்பு பார்த்தபின் ஒகே சொல்லும் இடத்தில் இருந்தேன். அவர் அனுப்பியதைப் படித்துப் பார்த்தேன், ஒரு பிழை இல்லை. எனக்குத் தெரிந்த அளவுக்கு என் ஆற்றல்கள் அனைத்தையும் பிரயோகித்து கவனமாக வாசித்தேன்: எப்படிப்பட்ட பதிப்பகமாக இருந்தாலும் அங்குள்ள மெய்ப்பு பார்க்கும் துறையினர் எதையேனும் சில சமயம் தவற விடுவதுண்டு, நாங்கள் சில சமயம் சில பிழைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுவது போலத்தான். குழந்தைகளுக்கான சரித்திர பாட புத்தகத்தில் இருந்து கையாளப்பட்ட மேற்கோள் ஒன்றில் ஒரு சிறு முரண் இருந்தது. அந்த இடத்தில் ஒரு குறிப்புக் கோடிட்டு மெய்ப்புப் பிரதியை புனைவுகளுக்கான எடிட்டராக இருந்த பில் பூபோர்டிடம் கொடுத்தேன். பிறகு சிறிது நேரத்தில் பில்லின் உதவியாளர் மாடிப்படிகளில் வேகமாகத் தாவி வந்து என் மெய்ப்பின் முதல் பக்கத்தின் கலர் ஜெராக்ஸ் ஒன்றை என்னிடம் கொடுத்தார்- அதில் நீல வண்ணத்தில், “மேரி நோரிஸ் குறித்து ராத் சொன்னது: “யார் இந்தப் பெண்? இவள் என் வீட்டுக்கு வந்து என்னோடு இருப்பாளா?”” என்று பூபோர்ட் எழுதியிருந்தார்.
 
ஒரு முறை நான் ராத்துடன் போனில் பேசவும் செய்தேன். சால் பெல்லோ பற்றிய ஒரு கட்டுரையை முடித்துக் கொடுப்பது சம்பந்தமான உரையாடல் அது. அப்புறம் அவரை நியூ யார்க்கர் ஹாலிடே பார்ட்டி ஒன்றில் பார்த்தேன். என் மெய்ப்புப் பிரதியில் அவர் விடுத்த அழைப்புக்குப்பின் எப்போதும் அவரிடம் மனதை பறிகொடுத்தவளாகவே இருக்கிறேன். அவருக்குத் தேவைப்பட்டது என்னவோ வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண்தான் என்று நினைக்கிறேன், வீட்டு விவகாரங்களைச் சரியாக கவனித்து கணக்கு வைத்துக் கொள்ள ஒருத்தர் வேண்டும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அவர் இதை எப்போதாவது படிக்க நேருமெனில், நான் இப்போதும் ரெடியாக இருக்கிறேன் என்ற விஷயத்தை அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஒளிப்பட உதவி – npr

மெய்ம்மைப்பசியும் ஆயத்த நாவல்களும்

நியூ ரிபப்ளிக் என்ற தளத்தில் ஷாஜ் மேத்யூ (Shaj Mathew) எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

பின்நவீனத்துவம் என்பது இப்போது அர்த்தமற்ற பதமாகிவிட்டது- மிகை பயன்பாட்டால் அதன் முனை மழுங்கிவிட்டது. பல்வயதினரும் பல்தேசத்தினருமான புதிய ஒரு எழுத்தாளர் கூட்டத்தையும் இப்படி அழைக்கிறோம், ஆனால் அவர்களைப் பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பது பொருத்தமாய் தெரியவில்லை: பென் லெர்னர், சோபி காலே, டேஜூ கோல், டாம் மக்கார்த்தி, அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, சிரி ஹூஸ்ட்வெட், மைக்கேல் ஹூல்லபெக், ஷீலா ஹெட்டி, டபிள்யூ ஜி செபால்ட், ஒரான் பாமுக். இவர்கள் தவிர அறுபது வயதானவரும் பார்சிலோனாவாழ் எழுத்தாளருக்கான என்ரிக் விலா-மதாஸ்– இருபது நாவல்கள் எழுதிவிட்ட இவரே இந்தக் கூட்டத்தினரில் மிகவும் அதிகம் எழுதுபவரும் மிகவும் குறைவாக அறியப்பட்டவருமாக இருக்கிறார்.

பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக இவர்களை ரியாலிட்டி ஹங்கர் தலைமுறையினர் என்று அழைப்பது சரியாக இருக்கும். சமகால எழுத்து குறித்து டேவிட் ஷீல்ஸ்ட் 2008ஆம் ஆண்டு எழுதிய புத்திசாலித்தனமான, தீர்க்கதரிசனத்தன்மை கொண்ட பிரகடனத்தின் பெயர் இது. ஷீல்ட்ஸ் பார்வையில், வழமையான முறையில் பிளாட், கதை என்று செல்லும் கதைசொல்லல் பாணி இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டது. மெய்ம்மை புனைவுத்தன்மை கொண்டது, புனைவே மெய்ம்மை. இந்த மெய்ம்மை நமக்கு எவ்வாறு அனுபவமாகிறது என்பதை மேலும் துல்லியமாக அறிய, நாம் கலை குறித்து என்ன நினைக்கிறோமோ அதே பார்வையுடன் நாவல்களையும் அணுக வேண்டும். “பல வாசகர்களுக்கும் விமரிசகர்களுக்கும் நாவல் என்பது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கதைதான்,” என்று எழுதுகிறார் ஷீல்ட்ஸ். “ஆனால் ஒரு கலைப்படைப்பு என்பது, இந்த உலகைப் போல், உயிர்ப்புள்ள வடிவம். மெய்ம்மை அதன் வடிவில்தான் இருக்கிறது”. எனவே இப்போது வடிவம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது என்றால்- உள்ளடக்கத்தைவிட வடிவம்தான் முக்கியம் என்றால்- சமகால கலைப்படைப்புகள் உருப்பெறும் வடிவம் எது? கொலாஜ். இதுவே மெய்ம்மைப் பசியின் வடிவமாகவும் இருக்கிறது. கலைப்படைப்புகள் எதிர்காலத்தில் எவ்வகை வடிவங்களில் உருவாகும் என்பதைச் சொல்வதோடு அல்லாமல், அதற்கான வரைபடமாகவும் ஷீல்ட்ஸின் மெயம்மைப்பசி என்ற நூல் செயல்படுகிறது; அதை பாஸ்டீச் என்று சொல்லலாம், அது திட்டமிட்டு “திருடப்பட்ட” நன்மொழித் தொடர், ஆனால் மேற்கோள் குறிகளின்றி புத்தக வடிவில் அளிக்கப்பட்டுள்ளது (சட்டபூர்வமான காரணங்களுக்காக மேற்கோள்களின் மூலம் பின்னுள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஷீல்ட்ஸ் அந்தப் பகுதிகளை புத்தகத்திலிருந்து வெட்டி வீசச் சொல்லி ஊக்குவிக்கிறார்).

ஆனால் ரியாலிட்டி ஹங்கர் வெளிவந்த பின்னுள்ள ஆண்டுகளில் புனைவு வடிவம் வளர்ச்சி கண்டு, ஷீல்ட்ஸ் முன்வைத்த அளவைகளுக்குப் பிற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கூறிய நாவலாசிரியர்கள் அனைவருமே நாவலின் கதைசொல்லிகள் என்பது தெளிவு என்றாலும், அதன் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கர நிகழ்வின் நிழலுருவம் தென்படுவது வழக்கமாய் உள்ளது: சிலேயில் பினோஷே ஆட்சியைக் கைப்பற்றியதன் நிழலில் ஜாம்ப்ரா எழுதுகிறார், ஹோலோகாஸ்ட் நினைவுகளை செபால்ட் அகழ்ந்தெடுக்கிறார், மாட்ரிட் நகரில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்கதையை லெர்னர் ஆவணப்படுத்துகிறார். இவை அனைத்தையும் விட, இந்தப் புனைவு வகைமை சவ்வூடுத்தன்மை கொண்ட சுவர்களைக் கொண்டிருக்கிறது, பல வடிவங்களை ஒரு கொலாஜ் போல் பயன்படுத்துகிறது- ஜாம்ப்ராவின் வேஸ் ஆப் கோயிங் ஹோம், லெர்னரின் 10:04 ஆகிய இரண்டும் கவிதைகளாகின்றன, பிற நாவல்கள் இசையோடும் நாடகத்தோடும் உரையாடுகின்றன. இந்த நாவல்களில் பலவும் தம்முள் கட்டுரைக்குரிய மொழி அல்லது இலக்கிய விமரசனம் ஆகிய இரண்டில் ஒன்றைக் கொண்டுள்ளன. இதுவரை மொழிபெயர்க்கப்படாத ஜோர்ஜே காரியான், தி டெட் என்ற தன் நாவலில் ஓர் இலக்கிய விமரிசனத்தை புனைந்திருக்கிறார் (வகைமைகளை இப்படி மீறுவது இலக்கிய விமரிசகர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்யலாம்- தன் விமரிசனத்தைத் தானே எழுதிக் கொண்டுவிட்ட ஒரு புத்தகம் பற்றி புதிதாய் என்ன சொல்ல முடியும்?).

இன்னும் முக்கியமாக, இந்த நாவல்களில் இடையிடையே புகைப்படங்களும் ஓவியங்களும் இருக்கின்றன. முதல்நிலையில் இந்த இணைப்புகள் மெய்ம்மை குறித்த ஓர் அடிப்படைக் கேள்வி எழுப்புகின்றன: ஒரு புகைப்படம் ஏற்படுத்தக்கூடிய மெய்ம்மைத் தாக்கத்துடன் அல்லது ஓவியத்துக்கு உள்ள தொடுவுணர்வுடன் நாவல் போட்டியிட முடியுமா? இந்த விஷ்யத்தில் எழுத்தாளர்கள் டபிள்யூ ஜி செபால்டின் வழியொற்றி நடக்கின்றனர். அவர் பிரதிக்கு துணை போகவில்லை, அதன் படைப்பூக்க உந்துசக்தியாக காண்கலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். பாம்ப் இதழில் அலெக்சாண்டர் ஹெர்மன் நேர்முகமொன்றில் டேஜூ கோல் கூறுவது போல், செபால்டின் புகைப்படங்கள், “நம்மிடம் சவால் விடுகின்றன. “பார், இவை எல்லாம் ஆதாரங்கள்,” என்று அவர் சொல்வது போலிருக்கிறது. நாம் அதை நம்பியே விடுகிறோம்- பிரதியில் கூறப்பட்டுள்ளதற்கும் புகைப்படத்தின் சாட்சியத்துக்கும் இடையிலுள்ள சற்றே சிறிய விலகலை நாம் கவனிக்கும்வரை… அவரது போட்டோக்கள்… அவரது நூல்களின் அசாதாரண, நிலைகுலையும் உணர்வை ஏற்படுத்துகின்றன- இவை அனைத்தும் உண்மையாக இருந்தாக வேண்டும், என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது அத்தனையும் முழு உண்மையாக இருந்திருக்க முடியாது எனபது நமக்குத் தெரியும்”. சோஃபி காலேயின் நாவல் சூட் வெனிஷியன்/ ப்ளீஸ் பாலோ மீ- அவர் வெனிஸ் நகரில் ஓர் அன்னியரை அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்த புகைப்படங்களின் நாட்குறிப்பு- இது செபால்டை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது- பிரதானமாக புகைப்படங்களே கதையைக் கொண்டு செல்கின்றன, பிரதி, அவரது நாட்குறிப்பு, இடையூறாக வந்து செல்கிறது- ஏறத்தாழ ஒரு தலைப்பு போல்.

நாவலினுள் நிஜமான ஒரு கலையைப் புகுத்துவது போலவே, இந்த மெய்ப்புனைவுகளில் பலவும் அருங்காட்சியகங்கள் அல்லது சமகால கலைக் காட்சிக்கூடங்களில் நிகழும் காட்சிகள் சிலவற்றைச் சித்தரிக்கின்றன. லெர்னரின் லீவிங் தி அடோச்சா ஸ்டேஷன் நாவலின் துவக்க காட்சி ப்ராதோவில் நிகழ்கிறது. அங்குள்ள ஓவியங்களைவிட, மியூசியத்தைவிட்டு வெளியேற விரும்பாத வருகையாளரை வெளியேற்றுவதில் அதன் காவலர்கள் தயக்கம் காட்டுவதுதான் கதைசொல்லிக்கு நெகிழ்வூட்டுவதாக இருக்கிறது. ஹவ் ஷுட் எ பெர்ச்ன் பி என்ற நாவலில் ஷீலா ஹெட்டி மூன்று நாட்கள் ஆர்ட் பேஸலில் கழிக்கிறாள், த மேப் அண்ட் த டெர்ரிட்டரியில் மைக்கல் ஹூல்லபேக் சமகால கலையுலகைப் பகடி செய்கிறார். சிறி ஹூஸ்ட்வெட்டின் நாவல், வாட் ஐ லவ்ட், ஓர் ஓவியத்தைக் கண்டெடுப்பதில் துவங்குகிறது. அவர் சமீபத்தில் எழுதிய த ப்ளேஸிங் வர்ல்ட் கலையுலகில் பெண்களுக்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட மனச்சாய்வை உரித்துக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் த மியூசியம் ஆப் இன்னசன்ஸ் இஸ்தான்புல் நகரில் நிஜ மியூசியமாகவே உருவம் பெற்றது.

வேறு வழிகளிலும் கலையுலகம் இலக்கிய உலகினுள் புகுந்துள்ளது. லண்டன், நியூயார்க் முதலான பெருநகரங்கள் உட்பட பெரும்பாலான கலைச் சந்தைகளில் எழுத்தாளர்களின் உரைகளும் இடம் பெறுகின்றன. கணிசமான வரவேற்பு பெற்ற கலை விமரிசன நூலொன்றை எழுதியுள்ள ஹூஸ்ட்வெட் ப்ராதோவிலும் மெட்டிலும் உரையாற்றியிருக்கிறார். பாம்ப் இதழில் ஒரு நேர்முகத்தில் நாவலாசிரியர் டாம் மக்கார்த்தி, காண்கலை பயிலும் நண்பர் கூட்டத்தில் தனது இருபதாம் ஆண்டுகளில் தான் பழக நேர்ந்தது இலக்கியத்தின் சாத்தியங்கள் குறித்து மேலும் நுட்பமான புரிதலை அளித்தது என்று சொல்லியிருக்கிறார்- “இலக்கிய அன்பர்களைக் காட்டிலும் இவர்கள் இலக்கியத்துடன் மேலும் கூடுதலான அளவில் செயலாற்றல் மிகுந்த உறவு பூண்டவர்களாக இருக்கின்றனர்… பெக்கட் எழுப்பும் கேள்விகளை ப்ரூஸ் நவ்மன் எதிர்கொள்வது போல, அல்லது ஜாய்ஸ் உடன் கேஜ் உரையாடுவது போல் நவீனத்துவ இலக்கியத்தின் பங்களிப்பு முழுமையையும் இவர்களது படைப்புகள் மிகுந்த செயலூக்கத்துடன் எதிர்கொள்வதாகத் தெரிகிறது…. இலக்கியத்துடன் உரையாடவும், அதை உருமாற்றவும் அதற்கு விரிவு அளிப்பதற்கும் தகுந்த களம் ஒன்றை கலையுலகம் பெருமளவுக்கு அமைப்பதாக இருக்கின்றது”

காண்கலைகளை மையமாய்க் கொண்ட இத்தகைய இலக்கியச் செயல்பாடுகள் தன்னிகழ்வுத் தன்மையை இழந்து வருகின்றன, அதுவே நோக்கமனைத்தும் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இன்றைய அவான் கார்ட் எழுத்தாளர்கள் கான்செப்சுவல் கலைஞர்களாக இருக்க விரும்புகின்றனர், அவர்களது நாவல்கள் கான்செப்சுவல் கலையாக அறியப்பட விரும்புகின்றனர். இதுவே இலக்கியத்தின் டூஷாமிய தருணமாக இருக்கலாம். இது ஆயத்த நாவல்களின் உலகு, தங்கள் வரவு நல்வரவாகுக!

கழிப்பிடம் கலையாகுமா என்று மார்செல் டூஷாம் கேட்டது போலவே, இலக்கியம் என்னவாக இருக்க முடியும் என்றும் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்றும் ஆயத்த நாவல் கேட்கிறது. மெய்ம்மை என்பதை பருண்ம விபரத் தொகையைக் கொண்டும், அனைத்தும் எமக்குத் தெரியும் என்ற பாவனையில் பேசியும், பல பார்வைகளை வெளிப்படுத்தியும் மரபார்ந்த புனைவு வடிவிலும் நாமறிந்த வேறு பல வகைகளிலும் புரிந்து கொள்வதற்கு மாறாக, ஆயத்த நாவல் ஒரு கருத்துருவை முன்வைக்கிறது, அல்லது ஒரு கேள்வி எழுப்புகிறது. ஒரு கலைப்படைப்பின் பின்னுள்ள- தன் பின்னுள்ள- கருத்துரு என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியில்தான் அதற்கு ஆர்வம் இருக்கிறது, அதை எவ்வளவு வெற்றிகரமாக செய்து முடிக்கிறோம் என்பதிலல்ல. ஆயத்த நாவல் கான்செப்சுவல் கலையின் பிரதான வரத்தை (அல்லது சாபத்தை) அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: மரபார்ந்த கண்காண் கலை போலல்லாது, ஆயத்த கலையைப் புரிந்து கொண்டாக வேண்டிய தேவையில்லை. ஆனால் பார்க்கப் போனால், அதுவும் ஆயத்த நாவலைப் பிரித்துப் பார்ப்பது போல்தான் இருக்கிறது; நீ கலைப் படைப்பை வெறுமே பார்த்துக் கொண்டிருப்பவனல்ல, அதன் உருவாக்கத்தில் நீயும் செயலூக்கத்துடன் பங்கேற்கிறாய்.

இலக்கியம் என்பது ஒரு கான்செப்சுவல் கலை என்பது எந்த அளவுக்கு சமகால அவான் கார்ட் இலக்கியத்தை ஊடுருவியுள்ளது என்பதற்கு ஸ்பானிய நாவலாசிரியர் என்ரிக் விலா-மதாஸ் எழுதி சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட இரு நூல்களே சான்று. இவர் கடைசியாக எழுதியுள்ள தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் என்ற நாவலில் எழுத்தாளரே சமகால கலைக்கூட காட்சிப்பொருளாகிறார். 2013ஆம ஆண்டு ஜெர்மனியில் கஸ்ஸல் நகரில் நடைபெற்ற டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷனில் இருப்பு எழுத்தாளராக ஒரு வாரம் தங்கிச் செல்லும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர் நிஜவாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களின் மிகையான புனைவுபடுத்தலே இந்நாவல். அக்கண்காட்சியின் க்யூரேட்டர்கள், நாவலாசிரியரிடம் அங்குள்ள ஒரு சிறிய சைனீஸ் ரெஸ்டாரண்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து அந்த வாரம் முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள். விலா-மதாஸ் இதை அபத்தம் என்று உணர்கிறார், நிஜவாழ்வில் செங்கிஸ்கான் ரெஸ்டாரண்டில் தானிருந்த காலத்தில் பெரும்பொழுதைத் தூங்கிக் கழிக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள ஜெர்மானிய மக்களும் சீன மக்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கற்பனை செய்கிறார், தன்னை அணுகும் ஒரே பைத்தியக்காரனைத் தவிர்த்து விடுகிறார். ரெஸ்டாரண்டில் அவரிருந்த பொழுது வீண் போனதுபோல் தெரிகிறது, ஆனால் டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷன் க்யூரேட்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் ஒரு நிகழ்த்துகலை கலைஞராகிறார்- “கலை என்னவோ கலைதான், அதை நீ என்னவாகப் புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்”, என்று ஒரு க்யூரேட்டர் அவரிடம் சொல்கிறார்.

எ பிரீஃப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் என்ற நாவலையும் விலா-மதாஸ் எழுதியிருக்கிறார். 1985ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நாவல் இவ்வாண்டு முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாவலுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த இரு நூல்களில் இதுவே மேம்படுத்தப்படாதது. திரிஸ்திராம் ஷாண்டியில் வரும் ஷாண்டிக்கள் போன்றவர்களின் ரகசிய இலக்கிய அமைப்பின் நடவடிக்கைகளை விவரிக்கும் விளையாட்டு நாவல் இது. இதன் பக்கங்களிலேயே மிகுந்த தன்னடக்கத்துடன், “இலக்கற்ற, குறிக்கோளற்ற, வீணாய்ப் போன பயணம்” என்று விவரிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் அவான் கார்ட் அட்டவணைப் புத்தகம் என்று சொல்லலாம்- டூஷாம், வால்டர் பெஞ்சமின், மான் ரே, ஜியார்ஜியா ஓ;கீஃப், என்று பலரைப் பேசுகிறது, சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் தெரிந்தவர்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பது போன்ற எரிச்சலூட்டுவதாகவும் உள்ள நடையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. இதில் ஒரு மாக்குமென்டரி ரெட்ரோஸ்பெக்டிவ் உணர்வு இருக்கிறது- மிகக் குறுகிய காலமே நீடித்த ரகசிய அமைப்பின் அழிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த அரைகுறை புலனாய்வு இது. இதன் அங்கத்தினர்கள் போர்டபிள் ஆர்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர், அதாவது ஆயத்தகலைகள், டூஷாமின் கைப்பெட்டியில் பெட்டி போன்ற வஸ்துகள்.

முப்பதாண்டு இடைவெளியில் பதிப்பிக்கப்பட்ட இந்த இரு நாவல்களையும் சேர்த்து வாசிக்கும்போது சமகால கலைக்கும் இலக்கியத்துக்கும் இடைப்பட்ட தொடர்பு குறித்து விலா-மதாஸின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. எ பிரீப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் நாவலோ, ரூஷாமிய சீடர்களின் உரையாடல்களை புறபொருள் கொண்டு எதிரொலிப்பதாக மட்டுமே இருக்கிறது. அதை ரசிக இலக்கியத்தின் ஹைப்ரோ வடிவம் என்றே கூறலாம். ஆனால் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில் மாபெரும் கலைஞர்கள் எவ்வாறு போர்டபிள் கலை படைத்தார்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவரே போர்டபிள் ஆர்ட்டின் அங்கமாகிறார். சீன ரெஸ்டாரெண்டில் எழுதிக் கொண்டோ அல்லது எழுதுவது போல் நடித்துக் கொண்டோ, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த அவர், டாகுமெண்டா 13ன் அதிகாரப்பூர்வ காட்சிப்பொருளாய் அமர்ந்திருந்தார்- அதன் இருத்தல் விதிமுறைகள் “கூட்டிசைக் கணங்களைக் கோரிற்று- உரத்தோ மௌனமாகவோ ஒருவருக்கொருவர் உறுதியளித்துக் கொள்ளுதல், எந்த கட்டாயமுமில்லாமல் குரல்கள் சந்தித்து இணையக்கூடும் என்ற சாத்தியம்”- இதன் கருத்துரு, அல்லது கேள்வி- எழுத்து என்ற ஏகாந்தக் கலையை பொது நிகழ்ச்சியாக மாற்றினால் என்னவாகும்? பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா?- இதை நிகழ்த்திக் காட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றி கிட்டுகிறது என்பதைவிட நிகழ்த்துதலின் கருத்துருவும் கேள்வியும்தான் முக்கியமாக இருக்கின்றன.

ஆனால் ஆயத்த நாவலின் ஒற்றை நோக்கமல்ல இது- நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு நாவலாசிரியர்கள் போல் வாழ்வதில்லை என்று நினைவுறுத்துகிறார் விலா-மதாஸ், எனவே அவர்களின் பாணியில் எழுத வேண்டிய தேவையில்லை. யதார்த்தவாதத்தின் அரைகுறை அறிவியல் நடைமுறைகளை இனியும் பின்பற்ற வேண்டியதில்லை: “யதார்த்தத்தை பிரதியெடுக்க வேண்டும், நகலெடுக்க வேண்டும், போலி செய்ய வேண்டும் என்பதே எழுத்தாளனின் கடமை என்று கருதும் யதார்த்தவாதியை நாம் வெறுக்கிறோம்- அதன் குழப்பமான வளர்ச்சியில், ராட்சத சிக்கல்களூடே, யதார்த்தத்தை பொறி வைத்துப் பிடித்து கதைக்க முடியும் என்பது போல் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்”, என்று எழுதுகிறார் விலா- மதாஸ் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில். “எந்த அளவுக்கு நுண்மையான தகவல்களை யதார்த்தமாகக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு உண்மையை நெருங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து நாம் திகைத்து நிற்கிறோம். உண்மையில் எத்தனை எத்தனை தகவல்களை நிறைக்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை நீ மெய்ம்மையை விட்டு விலகிச் செல்கிறாய்”

மாறாய், நம் யதார்த்தம், ஏதோ ஒரு வகையில் கான்செப்சுவல் ஆர்ட்டுக்கு இணையானது. மல்லார்மே மோனேவிடம் சொன்ன ஒரு வாக்கியத்தை விலா-மதாஸ் திரும்பத் திரும்பச் சொல்கிறார்: “ஓவியம் புனை, பொருளையல்ல, அதன் தாக்கத்தை”. வேறு சொற்களில் சொல்வதானால், கலையின் தாக்கம் கான்வாசைக் காட்டிலும் முக்க்யமானதாக இப்போது ஆகிவிட்டது. நாவலில் இந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் பேசப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த நாவலில் அவர் கலையின் தாக்கத்தை ஓவியமாய் புனைந்து கொண்டுதான் இருக்கிறார். ஒப்பனைகளற்ற செறிவான அகவாழ்வு வாசகனுக்கு முழுதாய் திறந்து கொடுக்கப்படுகிறது- டாகுமெண்டாவில் உள்ள கண்காட்சிப் பொருட்களைக் காண்கையில் தன் உள்ளத்தில் எழும் அச்சங்கள், எண்ணங்கள், அனுபவங்கள், அத்தனையயும் அவர் தோலுரித்துக் கொடுக்கிறார். உண்மையில், வாசகனும் இதில் பங்கேற்க வேண்டும் என்று விலா-மதாஸ் வற்புறுத்துகிறார். டாகுமெண்ட்டாவில் உள்ள கான்செப்சுவல் ஆர்ட் இன்ஸ்டல்லேஷன்கள் அவற்றின் பொருளுணர வாசகன் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைப் போலவே வாசகனும் செய்ய வேண்டும் என்கிறார் விலா-மதாஸ். “கலை என்னவோ கலைதான், அதை என்னவென்று புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்” என்கிறார் டாகுமெண்டாவின் க்யூரேட்டர். ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புரிதல்களைப் பொருதி வெவ்வேறு எண்ணத் தொடர்புகளையும் உணர்வுகளையும் கோட்பாடுகளையும் விளங்கிக் கொண்டு- புத்தாயிரக் கலைப்படைப்பின் பணி இதுவே.

சமகால இலக்கியத்தின் விளிம்பில்தான் ஆயத்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர். உலக அளவில் செபால்டும் பாமுக்கும்தான் புகழ் பெற்றிருக்கின்றனர். கோலே, லெர்னர் இருவரும் அங்கீகரிக்கப்படத் துவங்கியிருக்கின்றனர், அவர்கள் இனி எழுதப்போகும் நாவல்கள் இன்னும் ஆரவாரமாய் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் விலா-மதாஸ், ஜாம்ப்ரா இருவரும் தமது இன்னும் பல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவரக் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும்; சோபி காலே என்றென்றும் மிதமிஞ்சிய அவான் கார்டாகவே இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் யாருக்கு எவ்வளவு வணிக வெற்றி கிட்டினாலும், இந்த எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படத் துவங்கியிருப்பது கலை இன்று நமக்கு எத்தகைய அனுபவமாய் இருக்கிறது என்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களேனும் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இந்தத் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் இதுபோன்ற இன்னும் பல புத்தகங்களை எதிர்காலத்தில் தொடரந்து எழுதுவார்கள் என்றும் தோன்றுகிறது. இந்த ஆயத்த நாவலாசிரியர்கள் இதுபோன்ற இன்னும் பல ஆயத்த படைப்புகளைப் பிறர் எழுதி வெளிவரக் காரணமாகவும் அமையலாம்.

நன்றி- New Republic