krasznahorkoi

ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்

வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers)

(இவ்வாண்டு மேன் புக்கர் பரிசு பெற்ற ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களை மொழிபெயர்த்தவர் ஓட்டிலி மூல்ஸட். இவரை பாரிஸ் ரிவ்யூ தளத்துக்காக பேட்டி கண்டவர் வாலரி ஸ்டைவர்ஸ் (Valerie Stivers))

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை மொழிபெயர்த்த அனுபவத்தைக் கூறுங்கள். நீங்கள் எப்படி அவரது மொழிபெயர்ப்பாளர் ஆனீர்கள்? அவருடன் எப்படி வேலை செய்கிறீர்கள்?

நான் அவரைச் சந்திப்பதற்கு முன், செயோபோ தேர் பிலோவிலிருந்து “சம்திங் இஸ் பர்னிங் அவுட்சைட்” என்ற சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அது http://www.hlo.hu என்ற ஹங்கேரிய மொழி இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு இருபதாண்டுகள் பிற்பட்ட கிழக்கு ஐரோப்பிய சிறுகதைகள் என்ற ஒரு மொழிபெயர்ப்புத் தொடரில் பதிப்பிக்க ஜூன் 2009ல் கார்டியன் தளம் அதைத் தேர்ந்தெடுத்தது. அப்போது சிறிது நேரம் க்ராஸ்னஹோர்க்காயைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். செயோபோவை மொழிபெயர்க்க நான் முயற்சி செய்யத் தயாராக இருப்பதைச் சொன்னேன். முதலில் க்ராஸ்னஹோர்க்காய்க்கு அதில் சிறிது தயக்கம் இருந்தது, அந்தப் படைப்பு அசாதாரண அளவில் சிக்கலானது என்பதால் அவரது தயக்கம் புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான். ஆனால் நான் அனிமல் இன்சைடை மொழிபெயர்த்தேன், அது மிக நல்ல வரவேற்பு பெற்றது, ஓரளவு சீக்கிரமாகவே இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. அடுத்த ஆண்டு இளவேனிற் பருவத்தில் நான் செயோபோவிலிருந்து ஓர் அத்தியாயத்தை நியூ டைரக்சன்ஸ் பதிப்பகத்துக்கு முன்மாதிரியாக அனுப்பி வைத்தேன்.

க்ராஸ்னஹோர்க்காயும் நானும் மின் அஞ்சல்வழி நிறைய பேசிக்கொள்கிறோம். எனக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், அவர் மிகவும் உற்சாகமாக பதிலளிக்கிறார். பெரும்பாலும் ஹங்கேரிய மொழியில்தான் பேசிக் கொள்கிறோம். சில சமயம் அவர் நேரடியாகச் சில குறிப்புகள் அளிப்பதுண்டு. உதாரணமாக, செயோபோவில் உள்ள அந்நிய மொழிச் சொற்களை சாய்வெழுத்துகளில் எழுதக்கூடாது என்று சொன்னார், அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பிரதியில் இயல்பாகவே ஒன்றியிருப்பது போல் சேரும்போதும் அவை மேலும் குழப்புவதாய் இருக்கின்றன. எனக்கு அது ஒரு தீவிரமான செய்கையாகத் தெரிந்தது.

ஒரு மொழியாக ஹங்கேரிய மொழியின் பலங்களும் தனித்தன்மைகளும் என்ன, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அதன் சவால்கள் என்ன?

ஒரு மொழியாக ஹங்கேரியன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. நான் அதன் ஒலியை நேசிக்கிறேன், அதன் இலக்கணம் எப்படி வேலை செய்கிறது என்பதை நேசிக்கிறேன். அதன் மொழிக் களஞ்சியத்தை நேசிக்கிறேன், பல்வேறு மொழிகளின் திகைக்க வைக்கும் கலவையாக அங்கு குவிந்திருக்கும் சொற்தொகையை நேசிக்கிறேன், அதைக் கொண்டு எழுத்தாளர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை நேசிக்கிறேன். ஹங்கேரிய மொழி உயிரொலி இயைபு கொண்ட ஒட்டுநிலை மொழி- அதன் பின்னொட்டுகள் முடிவற்றவை, கூட்டுச் சொற்களுக்கான சாத்தியம் ஏராளமானவை, அதன் சொல்வரிசை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது- எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்த வகையில் வாக்கிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நம்ப முடியாத அளவுக்கு ஹங்கேரிய மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை உண்டு என்பதை அவசியம் சொல்லியாக வேண்டும்- அது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. அது விரிந்து கொண்டே செல்லக்கூடியது, ஆஹா, இப்போது எந்த நொடியும் அறுபட்டுவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்குமளவு அது விரியக்கூடியது. அல்லது, வெகு சில எளிய சொற்களில் அதைச் சுருக்கி விடலாம்- அதிலுள்ள மிக முக்கியமான பகுதிகள் அனைத்தையும் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடவும் முடியும்.

ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும் அத்தனை நெகிழ்வுத்தன்மை கொண்டதல்ல. ஒருவேளை இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் ஆங்கிலம் அப்படியிருக்கலாம்- அங்கு அது இந்தியின் போக்குகளுக்கு ஏற்ப ஓரளவு கட்டுப்பட வேண்டியிருக்கிறது- ஹங்கேரிய மொழி இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்குச் சரியான ஆங்கிலமாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த மொழி நன்றாகத் தெரியுமோ அதில்தான் நான் வேலை செய்தாக வேண்டும்.

தகவல்களால் நெருக்கமாகத் தொகுக்கப்பட்ட வாக்கியங்களைத் தவிர்க்கப் போராடியாக வேண்டும், என்றாலும் கூட கொஞ்சம் தீவிரமான இழப்புகளை எதிர்கொள்ள வேண்டும் எனும்போது நீங்கள் ஆங்கில மொழியின் எல்லைகளை மீறத்தான் வேண்டும். ஆங்கில மொழியின் எழுவாய்- பயனிலை- செயப்படுபொருள் என்ற வரிசை இறுக்கமானது, செயல்வினை காட்டிகள் எல்லாமும் அதனதன் இடத்தில் இருந்தாக வேண்டும்.

காகிதத்தின் சிந்திய மசித் துளிகள் போல் ஹங்கேரிய மொழி இருக்க முடியும். சில வாக்கியங்கள்- க்ராஸ்னஹோர்க்காய் விஷயத்தில் சில உட்கூறுகள்- இரண்டு அல்லது மூன்று சொற்கள் மட்டுமே கொண்டவையாக இருக்கும். இதில் சொல்லப்படாமல் விட்டுப்போவது பற்றியெல்லாம் யோசிப்பது எனக்கு சுவையாக இருக்கிறது, வழிக்கு வர முரண்டு பிடிக்கும் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் அதைச் சொல்ல வேண்டியிருப்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது- ஆங்கில மொழியில் சாத்தியமற்ற ஏதோ ஒன்றைச் செய்யவைக்க முயற்சிப்பதில் ஓர் ஆர்வம் இருக்கிறது.

ஆங்கில மொழி இன்று வணிகத்திலும் வர்த்தகத்திலும் உலகளாவிய மொழியாக இருக்கிறது, எனவே அது மேலாதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னாலும் சில வகைகளில் அது மிகவும் ஏழைப்பட்ட மொழியாகவே இருக்கிறது. பிற மொழிகளிலிருந்து இது போல் ரத்தம் செலுத்தப்படுவது ஆங்கில மொழிக்கு அவசியமாக இருக்கிறது.

க்ராஸ்னஹோர்க்காய் எழுத்தை ஆங்கில மொழியில் வாசிக்கும்போது எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன, மொழியின் தொனி என்ற அளவில் சொல்லுங்கள்.

ஹங்கேரிய வாசகர்கள்- நான் சொல்வது தீவிர இலக்கியம் படிக்கும் ஹங்கேரிய வாசகர்கள்- மிகக் கடினமான வகையில் சிக்கலான அமைப்பு கொண்ட இந்த வாக்கியங்கள் சிலவற்றை பிறரைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்கின்றனர், இங்கு நான் வாக்கியத்தின் நீளத்தைப் பற்றியே பேசவில்லை. எந்த அளவுக்கு சிக்கலான வாக்கிய அமைப்பை ஆங்கிலத்துக்கு கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு அதைக் காப்பாற்றியிருக்கிறேன்- மூல நூலிலேயே புத்தகத்தின் சில பகுதிகள், வாசகனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றன, அதை எல்லாம் அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.

ஹங்கேரிய மொழியில் ஆங்காங்கே சிதறிய சில சிறு பத்திகள் இருக்கின்றன, அவை வாசிக்க கவிதை போலிருக்கின்றன, அவற்றில் சிலவற்றின் ஒலியைக் காப்பாற்ற முடியவில்லை. நினைவுக்கு வரும் சொற்றொடர் இது, “rízs és víz, rízs és víz”- “அரிசியும் நீரும் அரிசியும் நீரும்” – மிகுந்த வறுமையில் இருக்கும்போது வீட்டில் இருந்த ஒரே உணவு இதுதான் என்று மாஸ்டர் இனோயி கசுயூகி சொல்கிறார். இந்தச் சொற்றொடரில் வரும் ஐ என்ற நெடில் இறுதியில் வரும் குழிந்துரசொலிகளோடு (Sibilant) இணையும்போது, மறக்க முடியாத ஓர் ஒலித்தாக்கத்தை ஏற்படுத்துகிறது- அது ஆங்கிலத்தில் வராது என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இதைச் சொல்வதில் க்ராஸ்னஹோர்க்காய்க்கே உரிய தனித்துவம் கொண்ட வரண்ட நகைச்சுவையை மீளுருவாக்கம் செய்ய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

குறுகிய வாக்கியங்களைக் காட்டிலும் நீண்ட வாக்கியங்கள் கடினமாக இருக்கின்றனவா?

அந்த நீண்ட வாக்கியம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்த விஷயம் இது. நீண்ட வாக்கியங்கள் சிலவற்றில் ஓர் ஒழுங்கு வரிசை இருக்கக்கூடும்- ஒவ்வொரு தகவலாக ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரே ஓட்டமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், அந்த ஆபத்து இருக்கிறது. மூல நூலில் முற்றுப்புள்ளி இல்லாத இடத்தில் நான் முற்றுப்புள்ளி வைக்கவே மாட்டேன்- ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இந்த வாக்கியங்கள் நதி போலிருக்கின்றன, மூல பிரதியில் இல்லாத இடத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்போது அது ஆற்றில் அணை கட்டுவது போன்றது.

ஆனால் அப்படிப்பட்ட வாக்கியங்கள் ஒப்பீட்டளவில் சுலபமானவை. க்ராஸ்னஹோர்க்காய் ஹங்கேரிய மொழி இலக்கணத்தின் அசாதாரண நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே சில சமயம் சிக்கலான வாக்கியங்களை அமைக்கிறார்- துணைநிலைத் தொடர்களுக்கு இடையேயுள்ள உறவுகளை ஒரு வரைபடமாக வரைந்தால், அது அச்சுப்பிரதியில் சிலந்தி வலைபோல் இருக்கும். தொடர்ந்து இணை அமைப்புகள் கொண்ட சொற்களாலான நீண்ட வாக்கியங்கள்- ஆங்கிலம் ஓரளவு இயல்பாக அதை ஏற்றுக் கொள்கிறது.

சில மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளவாறே மொழிபெயர்ப்பதாகச் சொல்கின்றனர், வேறு சிலர் இயல்பான வாசிப்புக்கு உதவும் வகையில் கூடுதல் சுதந்திரம் எடுத்துக் கொள்வதாகச் சொல்கின்றனர். இதில் உங்கள் நிலை என்ன?

சில சமயம் இந்த முரண்நிலை சற்றே செயற்கையானது என்று நினைத்திருக்கிறேன். ஏனென்றால், நீ மொழிபெயர்ப்பதன் அந்நியத்தன்மையை வேறொரு மொழிக்குக் கடத்திச் செல்ல பல வழிகள் இருக்கின்றன. மூல மொழியின் தனித்தன்மை எதுவோ அதை கொண்டு செல்ல நான் என்னாலான அளவு முயற்சி செய்கிறேன்- அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை, அது ஏன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது சாத்தியமேயில்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். அசாத்தியமான ஒன்றை என் மொழிபெயர்ப்பு சாதிக்க வேண்டும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட, பொருத்தமற்ற இரு உலகங்களின் எல்லைகளில் புழங்கப்படுவதாகவும் இருக்க வேண்டும், அந்த இரு உலகங்களுக்கு இடையே என் மொழிபெயர்ப்பு ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும். நான் மூல மொழியில் எத்தகைய அதிர்ச்சியை உணர்ந்தேனோ, ஆங்கில வடிவில் வாசிக்கும் வாசகனும் அதை உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுலபமாக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கமல்ல, பிரதியை மிகவும் உள்ளூருக்கு உரியதாகச் செய்துவிடக் கூடாது. ஹங்கேரிய மொழியில் அற்புதமான கவித்துவம் உள்ளது. சிலபோது அது அளவற்ற மென்மை கொண்டுள்ளது, சிலபோது அது முரட்டுக் கவிதையாய் இருக்கிறது.

ஒரு முறை, வெகுநாட்களுக்கு முன், நான் மிகவும் தீவிரமான ஹங்கேரிய மொழி செமினார் ஒன்றில் பங்கேற்றேன். ஹங்கேரிய இலக்கணத்தில் உள்ள வழக்கத்துக்கு மாறான கூறுகள், “இவர்களை யார் உள்ளே விட்டார்கள்?” என்பது போன்ற எதிர்வினைகளைச் சந்தித்தன. “இந்த மொழியின் தேவைதான் என்ன?” என்ற வழமையான கேள்விகளோடு பங்கேற்பாளர்கள் பிறர் தம்மை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது பயிற்றுனர் சற்றும் தாமதிக்காமல் சொன்ன பதில், “குருதி, வியர்வை, கண்ணீர்”.

க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில வாசகர்களின் குருதியும் வியர்வையும் கண்ணீரும் எனக்கு வேண்டாம், ஆனால் ஹங்கேரியன் போன்ற ஒரு முற்றிலும் மாறுபட்ட மொழியின் முழு அந்நியத்தன்மை நமக்கு அசௌகரியமாக இருக்கிறது, அந்த அசௌகரியத்தை மொழிபெயர்ப்பு காப்பாற்றித் தருமா?- அசௌகரியமானது, வித்தியசமானது, முடிவில் நமக்கு மேன்மையளிப்பதும் உயிரூட்டுவதுமாக மொழிபெயர்ப்பு இருக்க முடியுமா? க்ராஸ்னஹோர்க்காய் போன்ற ஓர் எழுத்தாளர் பற்றி பேசும்போது, தன வாசகர்களை அசௌகரியப்படுத்தி தடுமாறச் செய்வதை நேரடி நோக்கமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் பற்றிதான் பேசுகிறோம். “பிரதியின் கிறுகிறுப்பு”- இதில் நிச்சயம் வெளிப்படையான, வாசக கிளுகிளுப்பின் உச்சம் இருக்கிறது.

எப்போதாவது மாலைப் பொழுதில் உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு, “அப்பாடா, இன்று ஒரு வாக்கியம் முடித்தேன்,” என்று நினைத்தது உண்டா?

“ஆம், சில சமயம், “இன்று ஒரு வாக்கியத்தைத் துவங்கினேன்,” என்றோ, “இன்று ஒரு வாக்கியத்தை முடித்தேன்” என்றோ, அல்லது, “இன்று ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்தேன்” என்றும்கூட இருப்பதுண்டு”

அந்த முதல் ஆறுபக்க வாக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஓரிடத்தில், க்ராஸ்னஹோர்க்காயின் ஆங்கில மொழி வாசகர்கள் படிப்பதை நிறுத்தி, என்னைப்போல், இதை மொழிபெயர்த்தது யார் என்று நினைப்பதுண்டு என்று தோன்றுகிறது. அப்புறம் உங்கள் பெயர் இவ்வளவு அழகாக, மர்மம் நிறைந்ததாக இருக்கிறது, ஓட்டிலி மூல்ஸட்..

மூல்ஸட் என்ற பெயர் என் மத்திய ஐரோப்பிய வேர்களோடு தொடர்பு கொண்டது- என் பாட்டி ஹங்கேரிய தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் மூல்ஸட், லூயிஸா மூல்ஸட். ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…

நான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டதால் ஹங்கேரிய மொழி பயின்றேன். என் பின்னணியல் ஹங்கேரியர்கள் இருக்கிறார்கள் என்பதுகூட எனக்கு பெரியவளாகும்வரை தெரியாது. இந்த பூமியில் என் மூதாதையர்களாய் இருந்தவர்களைப் பற்றி ஏதோவொன்று அறிந்து கொள்ள இது ஒரு வழி என்று நினைத்தேன். அறிவார்ந்த ஆர்வத்தால் மட்டும்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளத் துவங்கினேன், ஆனால் அதன் பின் அது ஒரு போதையாகி விட்டது.

க்ராஸ்னஹோர்க்காய் நாவல்களில் நான்கு மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் வருந்துகிறார்கள். உங்கள் வாழ்க்கைப்பணியைக் கண்டுகொண்டு விட்டதாக நினைக்கிறீர்களா? மொழிபெயர்க்கப்படாத நாவல்கள் உங்களைத் துன்புறுத்துகின்றனவா?

இப்போது பேசிக்கொண்டிருக்கும்போதுகூட இரண்டு மொழிபெயர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன. டெஸ்ட்ரக்சன் அன்ட் சாரோ பினீத் த ஹெவன்ஸ் என்பது ஒன்று, அதை இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சீனாவில் க்ராஸ்னஹோர்க்காய் மேற்கொண்ட விரிவான பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகள் அது. முதன்முதலில் 2002ல் பதிக்கப்பட்டபோது இருந்ததைவிட இப்போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இன்று இருக்கிறது. மற்றொன்று, த வர்ல்ட் கோஸ் ஆன், என்ற அற்புதமான சிறுகதை தொகுப்பு. 2013ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெற்ற ஜார்ஜ் ஜைர்டஸ், அவர் பரிசு பெற்றதும் க்ராஸ்னஹோர்க்காய் நூலுக்காகதான், ப்ரம் த நார்த் பை ஹில், ப்ரம் த சவுத் பை லேக், ப்ரம் த வெஸ்ட் பை ரோட், ப்ரம் த ஈஸ்ட் பை ரிவர் ஆகிய நான்கு புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்- வரும் சில ஆண்டுகளில் இந்த நான்கேனும் வாசிக்க கிடைக்கவிருக்கின்றன.

புதிய செய்திகள் அல்லது திட்டங்கள் எதுவும் சொல்வதற்கு உண்டா?

சைலார்ட் பார்பேலியின் த டிஸ்பொசஸ்ட் மொழியாக்கம் செய்யப் போகிறேன்- அறுபதுகளின் பிற்பகுதியில் வடகிழக்கு ஹங்கேரியில் ஏழ்மைப்பட்ட கிராமத்தில் தான் வளர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் அவர். தன் சமகால தலைமுறையின் மிகவும் திறமை வாய்ந்த கவிஞர் அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். என் நெருங்கிய நண்பர் அவர், நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்த மனிதர். அவரது மரணம் நினைத்தே பார்க்க முடியாத இழப்பு, ஹங்கேரிய இலக்கியத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அவரது எழுத்துக்கு புதிய ஆங்கில வாசகர்களை அறிமுகப்படுத்த முடியும் என்றால், எனக்கு அதுவே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்- இப்படிப்பட்ட சூழ்நலையில் ஒருவர் எவ்வளவு சந்தோஷப்பட முடியுமோ அவ்வளவு சந்தோஷப்பட முடியும்.