மொழியாக்கம்

வரைபடம் அல்லது சதுரங்க கட்டம்

காஸ்மிக் தூசி

* Checkerboard Tombstone *

வரைபடம் (அல்லது) சதுரங்க கட்டம்

சதுரங்க கட்டங்கள் –
எவரோ கிழவர்கள்
வரைந்திருக்க வேண்டும்
நேற்று

சுண்ணக்கட்டியால்
இருபதடி நீளமுள்ள
ஆமையின் முதுகில்

தேய்ந்து அழிந்து
மங்கலாகிக்கொண்டிருக்கும்
ஓடி விளையாடும்
குழந்தைகளின்
வெறுங்கால்களின்
கீழே

 

அருண் கொலாட்கரின் The Pattern என்ற கவிதை தமிழாக்கம்

வெங்காயமே! வாழ்க நீ எம்மான்! – பாப்லோ நெருடா

வெ நடராஜன்

வெங்காயமே
ஒளிரும் குடுவையே,
உன் அழகு
ஒவ்வொரு இதழாக உருவானது,
பளிங்குச் செதில்கள் உன்னை விரித்தன
இருண்ட பூமியின் பாதுகாப்பில்
பனியைக் கொண்டு வளர்ந்தது உன் தொப்பை.
பூமிக்கு அடியில்
அந்த அதிசயம்
நிகழ்ந்தது
உன்னுடைய விகாரமான
பச்சைத் தண்டு வெளித்தெரிந்த போதும்,
உன்னுடைய இலைகள் வாள்போலப்
தோட்டத்தில்
பிறந்த போதும்,
பூமி அவளுடைய சக்தியைக் குவித்து
ஒளி ஊடுருவும் உன் நிர்வாணத்தை வெளிக்காட்டினாள்
மேலும், அந்தத்தொலைதூரக் கடல்
அஃபோர்டைட்டின் முலைகளை உயர்த்தி
மக்நோலியாவுக்கு ஈடு செய்தது போல,
வெங்காயமே
இந்த பூமியும்
உன்னை வளர்த்தது,
ஒரு கோள் போன்று தெளிவாகவும்
நட்சத்திரக் கூட்டம் போல்
ஒளிர்வதற்கு
விதிக்கப்பட்டவனாகவும்,
தண்ணீரின் ரோஜாவாகவும்
ஏழைகளின்
மேஜைக்கு
மேலிருக்கவும்.

உச்சத்தில் திளைக்கும்
இலுப்புச் சட்டியில்
பெருந்தன்மையுடன்
உன் புத்துணர்ச்சியை
விடுவிக்கிறாய்
வெட்டிப் போட்ட படிகம்
எண்ணெயின் தகிக்கும் சூட்டில்
சுருள் பொன் இறகு போல உருமாறுகிறது

 

மேலும், சாலட் விரும்பப்படுவதற்கு
உன்னுடைய செல்வாக்கு எத்தனை
வளமாக இருந்தது என்பதைச் சொல்வேன்,
ஒரு தக்காளியின் அரைக்கோளத்தில்
வெட்டிய ஒளியை நாங்கள் கொண்டாட
ஆலங்கட்டியைப் போன்ற வடிவத்தைத் தந்து
வானமும் உனக்கு சகாயம் செய்வதாகத் தெரிகிறது.
அதுவும் சாதாரணர்களின்
கைகள் எட்டும் தூரத்தில்
எண்ணெய் தெளிக்கப்பட்டு,
உப்பு
கொஞ்சமாக தூவப்பட்டு,
கடினமான உழைப்போடு வரும் உழைப்பாளியின் அந்நாளைய
பசியைக் கொல்கிறாய்.

ஏழையின் நாயகனே,
மென்மையான காகிதத்தில்
சுற்றப்பட்டு வந்த
ஞானமாதாவே, நீ பூமியிலிருந்து எழுகிறாய்
முடிவில்லாமல், பூரணமாய், தூய்மையாய்
ஒரு நட்சத்திர விதையைப் போலே.
அடுக்குளைக் கத்தி
உனை வெட்டும் போது, பொங்குகிறது
சோகமேயில்லாத
ஒரே கண்ணீர்.

எங்களைப் புண்படுத்தாமல் அழவைக்கிறாய் நீ.
இருக்கும் எல்லாவற்றையும் நான் போற்றியிருக்கிறேன்
ஆனால் என்னைப்பொறுத்தவரை, வெங்காயமே நீ
பளபளக்கும் இறகுகளைக் கொண்ட
ஒரு பறவையைக் காட்டிலும் அழகு,
மேலுலக உருண்டையே, பிளாட்டினக்  குடுவையே
அசையாமல் ஆடும்
வெண் அனிமொனே

இந்த பூமியின் மணமே உந்தன்
படிக நேர்த்தியில் தான் இருக்கிறது.

சிறுகதைகளின் முடிவு- டி. சி. பாய்ல்

(அட்லாண்டிக் இதழில் ஜோ பாஸ்லர் தொகுத்த கட்டுரையின் ஒரு பகுதி)

ரே கார்வர் 1970களில் அயோவா நகரிலிருந்த காலத்திலேயே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அங்கு நான் ஐந்தரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், முதலில் ரைட்டர்ஸ் வர்க்சாப்பில் எம்எப்ஏ படித்தேன், அதன்பின் அங்கு பிஎச்டி செய்து முடித்தேன். அப்போது அவர், வுட் யூ ப்ளீஸ் பி கொயட், ப்ளீஸ்? என்ற அவரது முதல் நூலை மட்டும்தான் பதிப்பித்திருந்தார். அதற்கு முன் எங்களைத் தவிர வேறு யாரும் அவரைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை- அவர் எழுதிய கதைகள் எவ்வளவு மகத்தானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், சிறுபத்திரிக்கைகளில் அவர் எழுதிய ஒவ்வொரு கதையையும் தேடிப் படித்தோம். (more…)

எப்போதும் – பாப்லோ நெருடா

எனக்கு முன் நடந்தவற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை

உன் தோள்களில்
ஒருவனைத் தூக்கி வா,
உன் தலைமுடியில் நூறு பேரைக் கொண்டு வா,
உன் முலைகளுக்கும் பாதங்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்களைக் கொண்டு வா
மூழ்கியவர்களைக் கொண்டு சென்று
கொந்தளிக்கும் கடலில் சேரக் கலக்கும்
நதியைப் போல வா,
காலமெல்லாம் நுரைத்திருக்க, காலத்தோடிருக்க!.

அத்தனை பேரையும் கொண்டு வா
நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு;
நாம் எப்போதும் தனியாக இருப்போம்,
நாம் எப்போதும் நானும் நீயுமாக இருப்போம்
புவியில் தனியாய்
நம் வாழ்வைத் துவக்கலாம் வா!

(பாப்லோ நெருடாவின் Always என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.)

வண்ணக்கழுத்து பகுதி 9: போர்ப் பயிற்சி

நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.

போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு  கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார். (more…)