மொழியாக்கம்

இருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow

நகுல்வசன்

புழக்கடையில் பனி:

1

இரவெல்லாம் பனி .
நினைவின் எச்சமாக ஆங்காங்கே,
கிளைகளில் இலைகள்
இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
வசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,
குளிர்காலம் எழுப்புகிறது
தன் கண்ணாடி சாம்ராஜ்யத்தை.
அதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்
பளிங்கு பிரதிபலிக்கிறது
வயோதிகத்தின் வாடிய வதனத்தை.

2

வெளி ஒளிர்கிறது.
இலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,
பௌதிக விதிகளை நினைவுகூர்ந்து,
நேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது
பனி.
ஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட
அப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,
இப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,
பனி.
ஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து
தங்கையும் நானும் ஐஸ்க்ரீமாக
அலுப்பில்லாமல் அனுபவித்தது
காலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.
தேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,
ஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்
அப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.

ooOoo (more…)

தீவிர இலக்கியம் ஓர் ஆன்மிக அனுபவம் -கேன் ஷூவே

(Can Xue எழுதிய “The Fair-haired Princess” and Serious Literature என்ற கட்டுரையை Karen Gernant, Chen Zeping ஆகிய இருவரும் Words Without Borders என்ற தளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் இது)

அப்பாவின் புத்தக அலமாரிகளில் பெருமளவு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புத்தகங்கள் நிறைந்திருக்கும். அடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கவாட்டு அட்டைகளில் பொறிக்கப்பட்டிருந்த சில தலைப்புகள் நினைவிருக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்த சில தலைப்புகளை மறந்து விட்டேன். தினமும் அப்பாவின் புத்தக அலமாரியைச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். அப்போது ஒருநாள் திடீரென்று லைப்ரரியிலிருந்து சில ஃபேரி டேல்களை அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார் (அவர் அப்போது நூலக வேலைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்- “உழைப்பு வழி மறுகல்வி” என்று இது அழைக்கப்பட்டது). என் அக்கா படிப்பதற்காக அவர் இந்தப் புத்தகங்களை எடுத்து வந்தார். அவள் அப்போது ப்ரைமரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள், நிறைய சொற்களை அறிந்திருந்தாள். அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான், “பொற்சிகை இளவரசி” (ராபுன்ஸல்). அப்பா புத்தகத்தின் பெயரை ஒரு முறைதான் சொன்னார், ஆனால் எனக்கு அது மறக்க முடியாததாகிவிட்டது. புத்தகத்தின் அட்டையை ஒரு இளவரசியின் படம் அலங்கரித்தது, அவளது பொன்னிற தலைமுடி, கணுக்கால்வரை நீண்டிருந்தது. நான் அந்தப் படத்தை விரிந்த கண்களுடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு அழகிய மஞ்சள் வண்ண முடி யாருக்கு இருக்க முடியும்? அந்தப் பொன்னிற முடியின் ஒரு கற்றையாவது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! (more…)

வீடு திரும்பும் வழிகள் – அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, ஒரு மதிப்பீடு

(அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ராவின் Ways of Going Home என்ற நாவல் குறித்து கார்டியன் நாளிதழில் மினா ஹாலந்த் எழுதிய மதிப்பீடு)

பினோஷே ஆட்சி குறித்து இசபெல் ஆலண்டே எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து உலக அளவில் புகழ்பெற்ற சிலேவிய எழுத்து ஒப்பீட்டளவில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. ஒரு தேசமாகப் பார்க்கும்போது சிலேவியர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதை இது பிரதிபலிக்கிறதா? லத்தின் அமெரிக்கர்கள் இப்படிதான் எழுதுவார்கள் என்ற நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தகால வன்முறையின் பின்விளைவாய் சிலேவியர்கள் அமைதியான வார்ப்பாகவே இருக்கின்றனர். 1990ல் அவர் பதவி விலகிய பின்னரும், அந்த முன்னாள் சர்வாதிகாரி பற்றி பல்லாண்டுகளாய் தனி உரையாடல்களில் மட்டுமே பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதே போல், சிலே வரலாற்றின் இந்த காலகட்டம் குறித்த நாவல்களும் அதிக அளவில் வெளிவரவில்லை. சிலேவின் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரும்வரை இந்த நிலைதான் இருந்திருக்கிறது. அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர். (more…)

வீடு திரும்பும் வழிகள்

(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)

ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.

மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.

அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.

“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள். (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 2

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே – இப்படி முடிந்திருந்தது.

(நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.

உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை, மாறாய் சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாகவே இருந்தது, வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.)

இனி- (more…)