விமரிசனம்

இடைவெளிகளின் வெளிச்சம் – பீட்டர் பொங்கல் குறிப்பு

பீட்டர் பொங்கல்

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்ற இத்தாலிய பொதுவழக்கை மறுத்து, மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை, என்று பொருள்பட போர்ஹெஸ் கூறியது பிரசித்தம். இரண்டில் எது மேன்மையானது, எது துல்லியமானது, எது சரியானது என்ற கேள்விகள் பலவற்றை புறக்கணித்து, வாசிப்பின் பொருள் கூடுவது குறித்த வியப்புணர்வில் வந்து நிற்கிறார் போர்ஹெஸ். இந்த வியப்புணர்வு இல்லையென்றால் மொழிபெயர்ப்பதற்கான உந்துவிசை கணிசமாய் குறைந்து விடும். முதற்படைப்பு செய்வதைவிட மொழியாக்கம் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது, அதிக பிழைபட்டு பெரும்பாலும் அதிருப்தியில் முடிகிறது. மொழியாக்கத்தைத் தொடரும்போது, ஒவ்வொரு திருத்தத்துடனும் முதற்படைப்பு குறித்த  புரிதல் விரிவடைவதும் அதன் மாண்பு கூடுவதும் மொழிபெயர்ப்பாளனின் தனியனுபவங்கள், இன்னுமொன்றைப் பின்னொரு நாள் முயற்சிப்பதற்கான அந்தரங்க வசீகரங்கள். முதற்படைப்பில் வந்து விழும் சொற்கள் மொழியாக்கத்தில் பொருள் பொதிந்தவையாக, தவிர்க்க இயலாத முக்கியத்துவம் கொண்டவையாக மாறுவது அந்த ரசவாதத்தின் ஆதி மயக்கம்.

இவ்வாரம் நம்பி கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ள கவிதைகளையும்கூட இங்கு எடுத்துக் கொள்ளலாம் https://padhaakai.com/2018/02/10/3-translations/.  மூன்றும் இந்திய- ஆங்கில கவிதைகள், எழுதியவர்கள் சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா,  மற்றும் தீபங்கர் கிவானி.

இதில் சி. பி. சுரேந்திரன் கவிதை ஒப்பீட்டளவில் எளியது, ஆனால் அதன் மொழியாக்கத் தேர்வுகள் சுவாரசியமானவை. கவிதையின் தலைப்பு, “A Friend in Need”. நேரடி மொழியாக்கம் எதையும்விட  அதன் இடியமட்டிக் தன்மை கருத்தில் கொள்ளப்பட்டு, “இடுக்கண் களைவதாம் நட்பு” என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

‘He sits in a chair/ Whose fourth leg/ Is his,’ என்பது ‘நாற்காலியில் அமர்கிறான்/ அதன் நான்காம் கால்/ அவனுக்குரியது,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஒரு தேர்வு இருக்கிறது. He sits in a chair, என்பது ‘அவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்’ என்றும் தமிழாக்கப்படலாம். இந்த முதல் வரி புதிரானதுதான் என்றாலும், ‘நாற்காலியில் அமர்ந்திருக்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு செயல் நிறைவு பெற்று விடுகிறது. ஆனால், ‘நாற்காலியில் அமர்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு இடைவெளி இருக்கிறது- நான்காம் கால் யாருடையது? இதையே இந்தக் கவிதையும் பேசுகிறது.

அடுத்து, ‘… He loves/ This chair,’ என்பது, ‘… இந்த நாற்காலி/ அவனுக்கு பிரியமானது,’ என்ற மொழியாக்கத்தில் பெரிய தேர்வுகள் இல்லை. அவன் இந்த நாற்காலியை நேசிக்கிறான், காதலிக்கிறான், விரும்புகிறான் என்றெல்லாம் சொல்லலாம் என்றாலும் பிரியமானது என்பதில் உள்ள உள்ள முத்திரைத்தன்மை மற்றவற்றில் இல்லை.

‘They used/ To make love in it,’ என்பது ‘அதில்/ அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அளவு பேச்சு வழக்கு தமிழில் இல்லை, ஒரு குறையே. ஆனால் make love என்பதைவிட புணர்தல் இந்தக் கவிதையின் பொருள் சூழமைவில்கூட மேலும் அர்த்தமுள்ளது- நாற்காலியின் நான்காம் கால் அவனுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளதை இங்கு கவனிக்கலாம். அவன் நாற்காலியில் புணர்கிறான் என்பது மட்டுமல்ல, நாற்காலியும் ஆகிறான். இந்தப் பொருள் ஆங்கிலத்தில் வருவதற்கு முன்பே தமிழாக்கத்தில் வந்து விடுகிறது.

அடுத்து, ‘That was when the chair/ Had four plus two plus two,/ Eight legs,’ என்பது ‘அப்போது நாற்காலிக்கு/ நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,/ எட்டு கால்கள்,’ என்று தமிழாகிறது. ‘That was when’ என்பது ‘இன்னது நடந்த காலம்’ என்பதைச் சொல்லத் துவங்குகிறது, ஆனால் தமிழில், ‘அப்போது,’ என்று துவக்கத்திலேயே முடிந்து விடுகிறது- அப்போது நாற்காலிக்கு நான்கு கால்கள் இருந்தன, அந்த நான்கு கால்களின் மீது இரண்டு கால்கள் இருந்தன, அந்த இரண்டு கால்களின் மீது இன்னும் இரண்டு கால்கள்- ஆக மொத்தம் அந்த நாற்காலியில் எட்டு கால்கள், அவ்வளவுதான். அந்த எட்டு கால்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்ற எண்ணத்தை ஆங்கிலத்தில் ‘that was when’ என்பது ஒரு நிகழ்வாய் உணர்த்துகிறது, தமிழில் அப்படியெல்லாம் இல்லை. அதனால்தான் அடுத்து ‘Days with legs,’ என்று தொடரும்போது நம்மால் பிணைந்த கால்களுக்கு அப்பால் வேறொன்றையும் கற்பனை செய்ய முடிகிறது- தமிழில் ‘காலுள்ள நாட்கள்’, நாட்களுக்கு கால்கள் முளைத்தது போன்ற கற்பனைக்குக்கூட காரணமாகிறது. தவறில்லை, காலம் வேகமாய்ப் போனது என்று வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்திலோ, ‘Days with legs’ என்பது மூன்று வகைகளில் பொருட்படுகிறது: முன் சொன்ன வரிகளைப் பார்க்கும்போது, நாட்கள் கூடலில் பிணைந்திருக்கின்றன; கூடலில் இருந்த காரணத்தால் நாட்கள் வேகமாய்ச் சென்றன; நீண்ட நாட்கள் தொடர்ந்திருக்க வேண்டிய இந்தக் கதையில் அடுத்து கால்கள் வெளியேறுகின்றன, கால்களை இழந்த நாற்காலி முடமாகிறது- திரும்பிப் பார்க்கும்போது, காலுள்ள நாட்களில் இப்போது நகைமுரண் தொனிக்கிறது.

இதோ ஒரு சிறுகதை போல் கவிதை முடிவுக்கு வருகிறது – ‘There has been a lot of walking out/ Since then.’ அதற்கப்புறம் நிறைய வெளியேற்றங்கள். walk out என்பதற்கும் walk out on என்பதற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. walk out with என்றால் உடன் நடப்பதாக பொருள் வரும், ஆனால், walk out on with என்று சொல்ல முடியாது – walk out on என்றால் ஒருவருக்கு எதிராக, அல்லது ஒருவரை நிராகரித்து, வெளியேறுவதும் பிரிவதும் மட்டுமே. இந்தக் கவிதையில் ‘days with legs,’ என்பதைத் தொடர்ந்து, ‘There has been a lot of walking out/ Since then,’ என்று வரும்போது, நிறைய நடந்தார்கள், வீட்டில் மட்டுமல்ல, வெளியேயும் சுற்றி வந்தார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமக்கு walk out என்றால் வெளிநடப்புதான், இல்லையா? பிரிவின் சாயல் தொனிக்கிறது, எனவே, ‘நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,/ அந்த நாட்களுக்குப் பின்,’ என்ற தேர்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கும் கவிதையின் மையம் ஆங்கிலத்தை விட தமிழில் சீக்கிரமே வந்து விடுகிறது.

ஆம், ‘இப்போது நாற்காலிக்கு ஒரு கால் குறைவு,’- /Now the chair’s/ Short of a leg,’ எனவே அவன் தன் காலை அதற்கு இரவல் அளிக்கிறான்- ‘And he’s lending his’- எட்டு கால்கள் இருந்த இடத்தில் இப்போது மூன்றுதான் இருக்கின்றன என்ற குறையைப் போக்க தன் கால்களில் ஒன்றை பரிதாபகரமாக ‘இரவல்’ தருகிறான், இல்லை, முட்டுக் கொடுக்கிறான்.

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்பது சரியா, ‘மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை,’ என்பது சரியா? மொழியாக்கத்தின் விளைவுகள் விசுவாசம், துரோகம் என்று சொல்லக்கூடிய சார்பு நிலையில் ஒப்பிட்டுக் கணக்கு பார்க்கக்கூடியவை அல்ல என்று நினைக்கிறேன். எழுதி முடிக்கப்பட்ட படைப்பை யாரும் திருத்தி வாசிப்பதில்லை, அப்படியொரு முயற்சி அபத்தமான ஒன்றாய் இருக்கும்- ஆனால், மொழிபெயர்ப்பு அதற்கொரு வாய்ப்பு அளிக்கிறது. மொழியாக்கத்தின் பயன் முதல்நூல், மொழியாக்கம் என்ற இரண்டின் இடைவெளியில் உருவாகக்கூடிய பொருட்படுதல்களால்- அவை பொருத்தம் கருதி ஏற்கப்படுகின்றனவோ இல்லையோ அல்லது கடத்தப்பட்ட பொருள் போல் சொற்களின் மறைவில் ரகசியமாய் உட்போதிந்திருக்கிறதோ, எப்படியானாலும்-  நாம், மொழிபெயர்ப்பாளனும் வாசகனும், அந்த அனுபவத்தில் அடையக்கூடிய செறிவுதான். இது உரைநடையிலும் உண்டு என்றாலும் கவிதைக்கு கூடுதலாய்ப் பொருந்துகிறது, பிரிந்து ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒன்றுகூடி ஒருபொருட்படுவதால்.

புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு அளித்திருக்கும். அடக்குமுறை, அகதி வாழ்வு, துரத்தும் மரண பயம், வன்கொடுமைகள், நிச்சயமின்மை, உற்றார் உறவினர்களின் இழப்பு என அகம் கூசி கூர்கொள்ளும் கதைகளையும் நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும் வளர்ந்திருப்பார்கள். இந்நிகழ்வுகள் அவர்களின் தேர்வல்ல, அவர்கள் மீது வரலாறு திணித்து அனுப்பியது. மானுட அகத்தின் இருண்ட மூலைகளை கண்டிருப்பார்கள், அதில் அரிதாக தென்படும் ஒளிக்கிரணங்களுக்காக காத்திருப்பார்கள். மனிதர்களை நசிவடையச் செய்யும் இவை படைப்பு மனத்திற்கு தூண்டுதலாகவும் அமையலாம். இத்தகைய இறுக்கமான சூழலை, போரின் துவக்கங்களை வரலாறாக அறிந்த  தொண்ணூறுகளில் பிறந்தவர், எப்படி எதிர் கொள்கிறார்? இந்தக் கிளர்ச்சியுடன் இயைந்து, பிரிந்து என எப்படி பயணிக்கிறார்? அவர்களின் அடையாள சிக்கல் எத்தகையது? போன்ற கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ பத்து கதைகளை உள்ளடக்கியது. இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியை அனோஜன் அடைந்திருக்கிறார் என்பது கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இது அவருடைய இரண்டாம் தொகுப்பு என்பதும்கூட காரணமாக இருக்கலாம். அனோஜனின் மொழியும் அவரின் மிகப்பெரிய பலம். தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது.  இறுக்கமான, செறிவான மொழியில் பழகித் தேர்ந்த லாகவத்துடன் பிசிறுகள் ஏதுமின்றி இலக்கை நோக்கிப் பாயும் தோட்டாவைப் போல் சீறிச் செல்கின்றன இவருடைய கதைகள். இந்த தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும். இது அவருடைய மிக முக்கியமான பலம், எனினும் இதுவேகூட நாளடைவில் பலவீனமாக ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய களங்களில், புதிய சிக்கல்களை எழுதும் கதைகள் வரும்போது வேறு வகையான கதைசொல்லல் அவசியமாகலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை காமம், காமப் பிறழ்வுகள் ஒரு சரடாக துளைத்து செல்கின்றன என கூறலாம். காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மச்சுழல் என்று ஒரு வட்டத்தை அண்மைய கால எழுத்தாளர்கள் பலரிடமும் கவனிக்கிறேன். விதிவிலக்காக ‘பலி’, ‘400 ரியால்’ மற்றும் ‘மனநிழல்’ ஆகிய கதைகள் அரசியல் மற்றும் சமூக மதிப்பீடுகளின் தளத்தில் காமத்தின் சாயை இன்றி நிகழ்கின்றன. பிறழ் காமத்தை, அதன் உறவுச் சுரண்டலை பேசும் கதைகள் என ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’, ‘வெளிதல்’ மற்றும் ‘உறுப்பு’ ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம். ‘வாசனை’ மற்றும் ‘இணைகோடு’ காமத்தைப் பின்புலமாக கொண்டு உறவுகளின் நுட்பத்தை சொல்கின்றன.

பொதுவாக ஈழப் புனைகதைகள் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு, இனப் படுகொலை ஆவணம், புலம் பெயர் வாழ்வின் அவலம் எனச் சில பாதைகளில் பயணிக்கும். அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் கதிரொளி குடிக்கும் கார்மேகமாக போர் அனோஜனின் கதைப்பரப்பின் மீது கவியும்போது அது மேலும் பிரம்மாண்டமாகிறது. ஒட்டுமொத்த கதைப்பரப்பின் நிறத்தையும் மாற்றுகிறது. போர் ஒரு பின்னணி இசை போல கதைகளில் தொடர்ந்து ஒலிக்கிறது. அனோஜன் போரைத் தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதுகிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் எங்கும் அது நாடகீயமாக சொல்லப்படவில்லை. இது அனோஜனின் தனித்துவம் என்றே எண்ணுகிறேன். ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும்  ரணசிங்கே, ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்கிறான் செழியன், ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்கு செய்கிறார். ‘வாசனை’ கதையில் சுட்டுக் கொல்லப்படும் தந்தை, சட்டவிரோதமாக வளைகுடா நாட்டில் சிக்கி ஊர் திரும்ப வழிவகையின்றி தவிக்கும் ‘400 ரியாலின்’ கதைசொல்லி, போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நண்பனின் சடலத்தை காணாமல் தவிர்க்கும் ‘மனநிழல்’, எனப் போர் ஆரவாரமின்றி அன்றாட நிகழ்வைப் போல் கடந்து செல்கிறது.

தந்தை, காதலன், கணவன் என தானறிந்த ஆண்களைப் பற்றிய கதை ‘வாசனை’. பெண் பிள்ளை அறியும் முதல் ஆண் தந்தை. தந்தையின் ‘ஆண் தன்மையான கருணை நிரம்பி வழியும்’ வாசனையை அவள் தேடிச் சலிக்கிறாள். அப்பா தன் காதலியை அம்மாவிற்கு தெரியாமல் சந்தித்து இருப்பாரா எனும் கேள்வி அவள் ஜெயந்தனை சந்திக்கச் செல்வதோடு பிணைகிறது. அப்பாவின் காதலியை அவர் சந்தித்த கதையை அம்மா அறிகிறாள். ஆனால் ஜெயந்தனைச் சந்தித்த கதையை ஹரி ஒருபோதும் அறியப் போவதில்லை. ஜெயந்தன் வீட்டில் யாருமில்லை என அழைத்துவிட்டு கதவை திறந்தபோது, மனைவியை உள்ளே கண்டபோதுதான் சிறுமை செய்யப்பட்ட உணர்வை அடைகிறாள். தன் தந்தையின் சிவப்பு புடவை அணிந்த காதலி திருமணத்திற்குப் பின் இயல்பாக பேசியிருக்கிறாள். கதை இறுதியில் கதைசொல்லியும் தன்னை சிவப்பு புடவை அணிந்த பெண்ணாக உணர்ந்து அகத்தடையை மீறி செல்கிறாள். உறவு நிலைகளை நுட்பமாக சித்தரிக்கிறார் அனோஜன். இந்த கதையின் உணர்வு நிலையின் நேரெதிர் வடிவம் என ‘கிடாய்’ கதையை சொல்லலாம். அப்பாவின் வாசனையை அறிந்து, வெறுத்து, பழிதீர்க்கிறாள். தீரா வஞ்சத்தால் தன்னை மாய்த்துக் கொண்ட அன்னைக்காக தந்தை மீது வஞ்சம் வளர்த்து கொள்கிறாள் தேவி. படிப்படியாக தந்தை எனும் இடத்திலிருந்து அவனை இறக்கி மிருகமாக்கி அந்தக் கிடாயை பலியிட்டு அமைதி கொள்கிறாள். பலியாட்டை ஈர்க்க தேவி கொடுக்கும் கீரைக்கட்டுதான் விமலரூபன். காமாட்சி- தேவி – தேவியின் அம்மா மற்றும் ராசையா உறவு மிகவும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது (ஓரிடத்தில் மட்டும் ராசையாவின் பெயர் பரமேஸ்வரன் எனப் பிழையாக வருகிறது. ). வாசனையில் உன்னதப்படுத்தப்பட்ட தந்தை அன்பு இங்கே தலைகீழாகிறது. கென் லியுவின் ஒரு கதையை அண்மையில் வாசித்தேன். ‘சிமுலகிரம்’ (simulcrum) எனும் கருவியைக் கொண்டு கற்பனையாக தனக்குத் தோதான பெண்களின் பிம்பங்களை முப்பரிமாணங்களில் உருவாக்கி நிர்வாணமாக உறவாடும் தந்தையை மகள் கண்டுவிடுகிறாள். இறுதிவரை அவள் அதை மன்னிக்கவே இல்லை. கதை இறுதியில் மரித்துப் போன அவள் அன்னை மகளுக்காக ஒரு கடிதம் எழுதிவிட்டுச் செல்கிறாள். அதில் தந்தை உண்மையில் உன் மீது பிரியம் கொண்டிருக்கிறார். அவரை மன்னித்துவிடு என்று கோருவார். அன்னையின் வஞ்சம்தான் தேவியில் உருக் கொள்கிறது. ஒருவேளை அந்த அன்னை உயிரோடு இருந்தால் சகித்து மன்னித்து வாழ்ந்திருப்பாளா என்று கேட்டுக்கொண்டேன்.

இவ்விரு கதைகளும் ஒரு திரியின் இரு  முனைகள். அன்பின்மை, அல்லது அன்பிற்கான ஏக்கம் எப்படி திரிந்து போகிறது என்று வாசித்துக் கொள்ளலாம். இதே வரிசையில் ‘பச்சை நரம்பு’ கதையையும் வைக்கலாம். நான்கு வயதில் காய்ச்சலில் மரித்த தனது அன்னையின் ஒற்றை நினைவாக கழுத்திலிருந்து மாருக்கு இறங்கும் பச்சை நரம்பைத்தான் செல்வமக்கா, தீபா என இருவரிடமும் கதைசொல்லி தேடுகிறான். அம்மாவை மனைவிகளில், காதலிகளில் தேடுவதும், தந்தையை கணவன்களில், காதலர்களில் தேடுவதும் உளவியல் மனக்கூறாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளன. இக்கதைகள் வழியாக இவை கண்டடையப்படுகின்றனவா அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றைக் கொண்டு அதன் மீது கதைகள் கட்டி எழுப்பப்பட்டனவா? இருவகையில் எது நிகழ்ந்தாலும் அது இழிவு அல்ல. ஆனால் ‘ஆச்சரிய அம்சத்தில்’ வேறுபாடு உண்டு.

அனோஜன் புதுயுக கதைசொல்லிக்கான பிரத்தியேக சிக்கல்களை தொட்டுக் காட்டியிருக்கும் கதைகள் என ‘400 ரியால்’ மற்றும் ‘மன நிழல்’ கதைகளைச் சொல்வேன். இக்காலகட்டத்தில் வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகளின் ஆவணமாக இவை நிற்கின்றன. எக்காலத்திலும் இவ்வகை மனிதர்கள் வாழவே செய்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் இலக்கிய ரீதியாக அப்பட்டமாக பதிவாவது என்ற முறையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. ‘400 ரியால்’ நம் அற மதிப்பீடுகளைக் கவிழ்க்கிறது, மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது. 400 ரியாலுக்காக அவன் ஏங்குவதும், கையறு நிலையில் தவிப்பதும் கதையில் பதட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் எதிர்பாராமல் அவனுக்கு கிடைக்கும் உதவிக்கு அவன் ஆற்றும் எதிர்வினை மனிதர்களின் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் காட்டுகிறது. ‘மன நிழல்’ நெருங்கிய சகாவின் சவ அடக்கத்திற்கு, அம்மாவின் கட்டளையை சாக்காக சொல்லிக்கொண்டாலும், அவன் உள்ளுரையும் அச்சத்தின் காரணமாக, செல்வதை தவிர்க்கிறான். நெருங்கிய நண்பர்களைக்கூட அச்சத்திற்கும் அதிகாரத்திற்கும் பயந்து கைவிட்ட தருணங்கள் மனதில் நிழலாடின. இக்கதைகள் பொறுப்பேற்கத் துணிவின்றி, தப்பித்தலையே தன்னறமாக கொண்ட சந்தர்ப்பவாத வாழ்வைச் சுட்டுவதாக உணர்கிறேன்.

உறவு, உறவின் சுரண்டலைப் பேசும் கதைகள் என ‘இச்சை’ மற்றும் ‘உறுப்பு’ கதைகளைச் சொல்லலாம். ‘இச்சை’ கதையில் ஏழு வயது சிறுவன் அண்டை வீட்டுப் பெண்ணால் தனது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறான். தனது சிறு வயது நினைவுகளை நண்பனிடம் பகிரும்போது வரும் உரையாடல் முக்கியமானது

“யார் அந்தப் பெட்ட? உன்னை நல்லா துஷ்பிரயோகம் செய்திருக்கிறாள்’ என்றான்.

“துஷ்பிரயோகமா?.ஹ்ம்ம்… நான் அதை அப்படி நினைக்கவில்லை”’ என்றேன்.

”அப்ப இது என்னவாம்? இதுவே ஒரு பெண்பிள்ளைக்கு ஆண் ஒருவர் செய்திருந்தா என்ன நிலைமை?”

பாரபட்சமாக அணுகப்படும் ஆண்களின் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களப் பதிவு செய்யும் களமாகவும் தனது கதைகளைப் பயன்படுத்துகிறார். கிடாய்’ விமலரூபன், ‘பச்சை நரம்பு’ கதைசொல்லி, ‘உறுப்பு’ கதை நாயகன் என இவை நீள்கின்றன. ‘உறுப்பு’ இத்துயரத்தின் மிக தீர்க்கமாக பதிவாகிறது. தோளில் துவக்குடன் நிற்கும் சிங்கள சிப்பாய் தமிழ் மாணவனுடன் வல்லுறவு கொள்கிறான். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத இறுகிய மவுனத்தைக் குடும்பம் கடைபிடிக்கிறது. மனரீதியான தொந்திரவுக்கு உள்ளாகிறான். கல்லூரியிலும் ‘பகிடிவதை’ (raggingகிற்கு என்ன அழகான தமிழ்ச் சொல்) அவனை துன்புறுத்துகிறது. அவனது ஆண்மை குறித்தான ஐயங்கள் எழுகின்றன. ஒரு சிறிய முத்தம் வழியாக அதை மீட்கமுடியும் எனப் புரிந்து கொள்கிறான். இங்கும் அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ‘இச்சை’ பாலியல் சுரண்டலின் நுட்பமான மறு பக்கத்தைச் சொல்கிறது. அஜந்தா அவன் மீது மெய்யாகவே பிரியத்துடன் இருக்கிறாள். பதின்ம வயதில் சிறு பிறழ்வாக அவளுடைய இச்சை வெளிப்படுகிறது. ஆபத்தற்ற (அப்படி சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை! எல்லா பாலியல் சுரண்டல்களுமே ஆபத்தானவை. மனதை பாதிக்கக்கூடும். இக்கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என வேண்டுமானால் சொல்லலாம். இது தற்செயல், மற்றும் மனபோக்கு சார்ந்தது) பாலியல் விளையாட்டுக்களை விளையாடிக் கொள்கிறாள். இயல்பாக அதிலிருந்து வளர்ந்து வெளியேறிச் சென்று விடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளின் உரசல் ஏதுமில்லாமல் இயல்பான வாஞ்சையுடன் அவளால் பழக முடிகிறது. இறுதியில் அஜந்தாவின் குழந்தையின் கண்கள் அவனுக்கு நினைவுக்கு வருவது மிக முக்கியமான தருணம். இந்த பாலியல் சுரண்டல் சுழலில் இருந்து அவன் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் தருணம். ‘உறுப்பு’, ‘இச்சை’ கதைகள் ஏறத்தாழ ஒரே கேள்வியை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டுள்ளன என்று எண்ணுகிறேன்.

இத்தொகுப்பின் சிறந்த கதை என ‘பலி’ கதையையே சொல்வேன். பாதிக்கப்பட்டவன், பாதிப்புக்கு உள்ளாக்குபவன் எனும் இருமையிலிருந்து கிழித்து வெளியேறி மனிதர்களாக காணும் தருணத்திலேயே கலைஞன் எழுகிறான். குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலின் இறுதி பகுதியில் தன் காதலிக்கு இருளின் சிறிய விளக்கு வெளிச்சத்தில் கடிதம் எழுதும் சிங்கள ராணுவ வீரன் மீது குண்டு வீசாமல் செல்வான். பரிசாக மரணத்தைப் பெறுவான். அது ஓர் உன்னத தருணம். ‘பலி’ அத்தகைய குற்ற உணர்விற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது. படிப்படியாக மனிதன் தன்னை முழுவதுமாக இழக்கும் முறையை பதிவாக்குகிறது. இக்கதை ஆழ்ந்த மனச் சோர்வு அளித்தது. இக்கதை புலி எதிர்ப்பு, புலி விமர்சனமாக சுருக்கி கொள்ளாமல், தான் வாழும் சமூகத்தின் மீதான சுய விமர்சனமாக, போரின் வரைமுறையின்மையை பேசும் கதையாக மதிப்பிடப் பட வேண்டும். ‘400 ரியால்’ ‘ மனநிழல்’ கதைகளோடு இதையும் அந்த வரிசையில் வைக்கலாம். ‘இணைகோடுகள்’ இத்தொகுப்பில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. சிங்கள சிப்பாயை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ்ப் பெண். ராணுவத்தை விட்டு நீங்கியதற்காக சிறையில் இருக்கும் சிங்கள சிப்பாய் என்பது மிக நல்ல களம். ஆனால் கதை அவளுடைய இணை வாழ்வை கதைசொல்லி ஊகிப்பதோடு முடிந்து விடுகிறது.

இத்தொகுப்பின் பலவீனமான கதை என ‘வெளிதல்’ கதையை சொல்வேன். பாலியல் தொழிலாளி உலகை வழமையான முறையில் சித்தரித்து இருக்கிறார். அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படும் மற்றுமொரு கதை. ‘பச்சை நரம்பும்’ கூட பெரிதாக எனக்கு உவக்கவில்லை.

பாலியல் சித்தரிப்புகளை எழுதும்போது அவை எதற்காக எழுதப்படுகின்றன என்றொரு கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டும். வாசகரின் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டவா? காட்சிகளைப் பதிய வைக்கவா? அல்லது திசை திருப்பவா? அல்லது அங்கிருந்து கதையை மானுட அகத்தின் மீதான விசாரணையாக கொண்டு செல்லவா?. அனோஜன் கதைகளில் மானுட அக விசாரணை நோக்கிய தாவல் நிச்சயம் நிகழ்கிறது. காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மம் எனும் சுழல் பல எழுத்தாளர்களின் இயங்கு தளமாக திகழ்கிறது. அனோஜன் காம – அகங்கார – வன்மை சுழலில் வன்மத்துடன் நின்றுவிடாமல் அன்பை நோக்கி நகர்கிறார் என்பது ஆசுவாசம் அளிக்கிறது. இந்தச் சுழலில் வெகு அரிதாகவே புதிய மற்றும் அசலான கண்டடைதல்கள் நிகழ முடியும். அகம் குவித்து எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் இதில் ஏதோ ஒரு நுண்மையை துலங்கச் செய்து இருக்கிறார்கள். இப்படியான கதைகளில் உள்ள ஆபத்து என்பது வாசகர் ‘ஆம். ஆமோதிக்கிறேன். பிறகு அல்லது வேறு?’ எனக் கேட்டு விடுவான்.(ஒரு வகையில் இந்த கேள்வியை எல்லா கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் தான்) இத்தளங்களில் கதைகளுக்கான வெளி குறைவு என்பதால் வரும் சவால் இது. பாலியல் சித்தரிப்புகள் சில தருணங்களில் கதையை மீறி அல்லது கதையின் மையக் கேள்வியை மீறி வாசகர் மனதில் நின்றுவிடுகிறது.  அது பேசுபொருளை பின்னுக்குத் தள்ளி, கிளர்ச்சிக்குள் மனதைப் புதைத்து விடும். ‘இச்சை’, ‘பச்சை நரம்பு’ போன்ற கதைகளில் இச்சிக்கல் வெளிப்படுகிறது.

அனோஜன் பெண்களின் அகத்தை நுண்மையாகச் சித்தரிக்கிறார். பெண் பாத்திரத்தைக் கொண்டு ‘தன்மையில்’ வெற்றிகரமாக கதை எழுதிவிட அவரால் முடிகிறது. இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே பால்ய, இளம்பருவ காலத்து கதைகள்தான். அது இக்கதைகளுக்கு ஒரு இளமையை அளிக்கிறது. தன் அனுபவங்களிலிருந்து இக்கதைகளை உருவாக்குகிறார் எனும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது. அனோஜனுக்கு இருக்கும் சவாலென்பது தனக்கு வசதியான, வாகான தளங்களிலிருந்து புதிய தளங்களில் கதை சொல்வதில் உள்ளது. ஒரு தொகுப்பில் சரி பாதிக்கு மேல் நல்ல கதைகள் இடம்பெறுவதே பெரும் சவால்தான். அதை எளிதாக அனோஜன் கடக்கிறார். அவரிடம் உள்ள மொழி, அனுபவங்கள், சிந்தனைகள் அவரை தமிழின் முக்கிய எழுத்தாளராக வருங்காலங்களில் அடையாளம் காட்டும் என்றே நம்புகிறேன். அதற்கான எல்லா சாத்தியங்களையும் ‘பச்சை நரம்பு’  தன்னுள் புதைத்து கொண்டுள்ளது.

 

 

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)

அன்றாடங்களின் ஆன்ம தரிசனம் – வண்ணதாசனின் ‘ஞாபகம்’ சிறுகதையை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஏதேனும் ஒரு ஞாபகம், இயந்திரகதியாகிப் போன அன்றாடங்களுக்கிடையில் மறைந்திருக்கும் பசுமையைத் துலக்கி நம் கண்கள் முன் கொண்டுவந்து பரவசப்படுத்தத்தான் செய்கிறது. பழகிப்போன தினசரி அனுபவங்களிலிருந்து நம்மை விலக்கி, சாதாரணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பரவசத்தைக் கண்டுகொள்ளும் வேறு கண்களை நமக்களித்துச் செல்கிறது.

அவ்வாறான ஞாபகங்கள், தானாக தோன்றாதபோதும், வலிந்து நானே அத்தருணங்களை உருவாக்கிக் கொண்டு அது தரும் பரவசங்களை அனுபவிப்பதுண்டு. பாலகுமாரனின் “தாயுமானவன்”-ல் பரமுவின் பகல் பொழுதுகள்; சமீபத்தில் ஜெயமோகனின் ‘இல்லக் கணவன்’ கட்டுரையில் வரும் பகல் பொழுது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும்போது, ஒவ்வொரு விடுமுறை முடிந்து மதுரையிலிருந்து விடுதி திரும்ப விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் இறங்கும்போதெல்லாம், அவ்வைகறையில் பேருந்து நிலையத்தின் சூழல் பரவசம் தரும். இதற்காகவே விடுமுறை இல்லாத கல்லூரி நாட்களிலும், விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி சைக்கிளில் பின்கேட்டில் வெளியில் வந்து பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், அர்ச்சனா தியேட்டர் வழியாக காந்திபுரம் வந்துவிடுவது. பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் டீ குடித்துக்கொண்டே, வந்து சேரும் தொலைதூரப் பேருந்துகளிலிருந்து வந்திறங்கும் பயணிகளையும், பேருந்து வரிசைகளையும், விளக்கொளியில் கடைகளையும், அச்சூழலையும் பார்த்துக்கொண்டிருப்பது ஓர் இனிய அனுபவம்; பகலில் பார்ப்பதற்கும், வைகறையில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! ஒருமுறை நண்பர் பாலா, சென்னை வந்த ஜெயமோகனை அழைத்துச் செல்ல விடிகாலை நாலு மணிக்கு எக்மோர் ஸ்டேஷன் வந்தபோது கண்ட, வைகறையின் எக்மோர் ஸ்டேஷன் அழகை பின்னர் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இதேபோல் நள்ளிரவில் கேஜியில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் விடுதி திரும்பும்போது, மரக்கடை மேம்பாலத்தில் சோடியம் விளக்கொளியில் ஆளரவமற்ற, வெற்றுத் தார்ச்சாலையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, லாலி ரோட்டில் வந்து தர்சனா பேக்கரியில் டீ சாப்பிட்டு வந்த நாட்கள் அநேகம். பகல் பொழுதுகளின் பரபரப்புகள், விரைவுகள், ஒலிகளில்லாத தார்ச்சாலைகளின் அமைதிதான் எத்தனை வசீகரிக்கிறது.

வேலை செய்யும் நிறுவனங்களிலும், பண்ணை வேலை என்பதால், ஞாயிறும் வேலை இருக்கும். கூடிய மட்டில் ஞாயிறு வேலை செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வார நாளில் விடுமுறை எடுத்துக்கொள்வது. ஞாயிறு வேலை செய்யுமிடம் வேறு முகம் காட்டும். அது அற்புதமான முகம். அதேபோல்தான் வாரநாட்களில் ஒரு விடுமுறை தினம் வீட்டில்.

***

வண்ணதாசனின் “ஞாபகம்” சிறுகதை பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ, எங்கேயோ படித்தது; சரியாய் ஞாபகமில்லை; ஆனால் அந்தக் கதையும், வண்ணதாசனும் மனதில் பதிந்து போனார்கள். வண்ணதாசனுக்கு 2016-ல் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது “ஞாபகம்” பல வருடங்களுக்குப் பின் நினைவடுக்கிலிருந்து மேலெழுந்து வந்தது. சாகித்ய அகாடமி விருதும் தொடர, மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. விஷ்ணுபுரம் விருது கிடைத்ததிலிருந்தே, வண்ணதாசனின் மொத்த சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தேன். நண்பர் சக்தி இம்முறை இந்தியாவிலிருந்து வரும்போது, முழுத் தொகுப்பு கிடைக்கவில்லையென்றும், கிடைத்த இரண்டு சிறு தொகுப்புகள் கொண்டுவந்த்தாகவும் சொன்னார். அதிலொன்று “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. ஆம், “ஞாபகம்” அதிலிருந்த சிறுகதைகள் பதினொன்றுக்குள் ஒன்று.

அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு செல்லும்போது டிபன்பாக்ஸை எடுக்க மறந்து, அதை எடுத்துச் செல்ல மறுபடி பஸ் பிடித்து அலுவலகம் வருகிறாள். அந்த முன்னிரவு நேரம் காட்டும் அலுவலகம், ஆட்களில்லாத, பரபரப்பில்லாத, இரைச்சல்களில்லாத, வெறும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய அந்த அறை அவள் மனதை நெகிழ்த்துகிறது. வேலை நேரம் தாண்டி, வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்தில் தனது அறையில் வேலை செய்துகொண்டிருக்கும் கிளார்க்கைப் பார்த்து அவளுக்குப் பாவமாய் இருக்கிறது (“இவளுக்கு அந்த விரல்களின்மீது இரக்கமாக இருந்தது”). ”அவர் அப்படித்தாம்மா; வழக்கம்போல ஓவர் டைம் பாக்குறார். நேரங்காலம் தெரியாம வீட்ட மறந்து இங்கேயே உட்கார்ந்துருவார்,” சொல்லிவிட்டு வாட்ச்மேன் சிரிக்கிறான். அவளுக்கு சிரிப்பு வரவில்லை; ’தனக்கு டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல், அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்’ என்றுமட்டும் உடனடியாகத் தோன்றுகிறது.

***

ஒருமுறை வார இதழ் ஒன்றில் வெளியான டைரக்டர் மகேந்திரன் பேட்டியில், “உங்கள் சினிமாக்களின்/ படைப்புகளின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு, “அன்புதான்… அன்பைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை…” என்று பதில் சொல்லியிருந்தார். வண்ணதாசன் கதைகளும், மனதின் அப்பாகத்தை தூண்டி நெகிழ்த்திவிட்டுத்தான் செல்கின்றன. அன்றாடங்களைக்கூட நின்று நிதானித்து இதுவரை கவனிக்காத ஒன்றை கவனிக்கச் செய்து மனதின் உட்பயணத்திற்கு உதவி செய்கின்றன. எல்லோரையும், எல்லாவற்றையும் அன்பெனும் போர்வையால் போர்த்துகின்றன.

2007-ம் வருடம், நான் புனே அருகில் “சம்பாலி” எனும் மலர்ப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மார்ச் மாதத்தின் அமைதியான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மலர்ப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலையாட்கள் பணிக்கு வருவார்கள். அலுவலர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ட்யூட்டி. உச்சி நண்பகல் 12 மணி தாண்டியிருந்தது. அலுவலகத்தின் இரண்டு மாடிகள் முழுதும் மிகுந்த அமைதியாயிருந்தது. கீழ்த்தளத்தின் இடதுகோடியில் இருந்த கேண்டீனில் மட்டும் மதிய உணவு சமைக்கும் இரு பெண்களின் சிறு பேச்சுக் குரல்கள். முதல் மாடியின் வெளிக்கதவு தாண்டி, நான் திறந்தவெளி பால்கனிக்கு வந்தேன். முன்கோடையின் சுட்டெரிக்கும் வெயில். பண்ணையின் வேலிக்கு அப்பால் பக்கத்து கிராம பெரியவர் மாடு மேயவிட்டிருந்தார். அலுவலகத்திலிருந்து ஸ்டோருக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் இருந்த நெட்டிலிங்க மரங்கள் இலைகள் அசையாமல் உயர்ந்து நின்றிருந்தன. ஸ்டோருக்கருகிலிருந்த ஜெனரேட்டர் ரூமிலிருந்து ஜெனரேட்டர் ஓடும் சத்தம் தாளம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்சாரியில் தூரத்தில் குன்றின்மேல் பச்சைப் போர்வைக்கு நடுவில் வினோபா கிராமத்தின் வீடுகள் சிறியதாய் தெரிந்தன. அப்போதுதான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ ஆரம்பித்தது. கண்களில் நீர் நிரம்பி காட்சிகள் மசமசப்பாயின. சுற்றிலும் எல்லாமே, ஏதோ ஊமைப்படத்தின் காட்சிகள் போல துல்லிய அமைதியில் நிகழ்ந்தன. பின்னால், கேண்டீனில் வேலை செய்யும் மீனாள் கெய்க்வாட்டின் “சார், லன்ச் ரெடியாயிருச்சு” என்ற குரல்தான் தரையிறக்கியது. உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது.

“எங்கெங்கு காணிணும் சக்தியடா…” என்ற வரி மட்டும் உள்ளுக்குள் அன்று முழுதும் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா

நரோபா

சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது.

எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எந்த முக்கியமான உலக இலக்கிய ஆக்கத்தையும் நமக்கு வேண்டிய வடிவில் செலவின்றி தரவிறக்கம் செய்துவிட முடியும். சுரேஷ் பிரதீப் வெண்முரசு பற்றி கூர்மையாக எழுதும் ஓர் வாசகராகத்தான்  அறிமுகம். பின்னர் சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அவருடைய சில சிறுகதைகளை வலைதளத்திலும் பதாகையிலும் வாசித்திருக்கிறேன். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய நாவல் பற்றிய அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெயமோகன் எழுதிய விரிவான மதிப்புரை மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. நாளுக்கு இரண்டு மணிநேரம் என இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். கவனம் சிதையாமல் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. சுரேஷ் பிரதீப்பிற்கு சொல்வதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதற்குரிய மொழியும் அமைந்திருக்கிறது. நாவல் வடிவம் அவருடைய எழுத்து பாணிக்கு உகந்ததாகவும் திகழ்கிறது.

‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஒரு காலகட்டத்தின் அரசியல் – சமூக மாற்றத்தின் கதை என மூன்று தளங்களில் வாசிப்பை அளிக்கிறது.

‘ஒளிர் நிழலில்’ குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டிய அம்சம் என்பது நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அருணா, மீனா, கோமதி, வசுமதி, அம்சவல்லி என எல்லா பாத்திரங்களும் வெவ்வேறு அடர்த்திகளில் மிளிர்கின்றன. ஆனால் நாவலின் ஆண் பாத்திரங்களில் இந்த வேறுபாடு தெளியவில்லை. ஆண்கள் அனைவருமே கூரிய தன்னுணர்வு கொண்டவர்களாக, சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள வர்ண அடர்வுகள் நுண்மையாக மாறுகின்றன. சுரேஷ் – குணா, ரகு – சக்தி, செல்வராஜ் குரல்கள் ஒன்று போலவே ஒலிக்கின்றன. மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்று போலவே தென்படுகின்றனர். மனதில் தங்க மறுக்கிறார்கள். சந்திரசேகர் போன்ற பாத்திரங்கள் இந்த வார்ப்பிலிருந்து விதிவிலக்காக இருக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க பாத்திர வார்ப்பு என்பது சக்தியும் குணாவும் என கூறலாம். அவர்களிருவரும் ஒரே ஆளுமையின் இரண்டு துருவ இயல்புகளின் பிரதிநிதிகள். சக்தி வெளிப்பார்வையில் வெளிமுக (extrovert) ஆளுமை போல வடிவமைக்கபட்டுள்ளான். ஆனால் உள்ளே அவனுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எக்கணத்திலும் கனிவு கொள்ளாதவனாக இருக்கிறான். நேரெதிராக குணா உள்முக ஆளுமையாக வெளிப்படுகிறான். எவரிடமும் ஒட்டாது, எல்லாரையும் வெறுப்பது போல் தெரிந்தாலும் அன்பிற்காக ஏங்குகிறான். நாவலின் மைய விசை என்பது இவ்விரு இயல்புகள் கொள்ளும் ஊடாட்டமே. வெண்முரசு கையாளும் ஆடி பிம்பம் எனும் வடிவத்தை இப்பாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.

நாவலுக்குள் அடையாளபடுத்தப்படுவது போலவே சுரேஷ் பிரதீப்பிடம் தாஸ்தாவெஸ்கியின் தாக்கம் உள்ளது. கவிஞர் சபரிநாதன் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றி எழுதிய கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தரின் இரு முகங்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். சமகால விழுமியங்களின் மீது நம்பிக்கையற்ற எதிர்நாயகன் என அவனை வரையறை செய்கிறார். சமூகத்தின் பொருட்டின்மைக்கு எதிராக உருவானவன் என்கிறார். “பொருட்டின்மை என்பது முகமூடிதான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாதபோது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,” என எழுதுகிறார். ஒளிர் நிழலில் அப்பட்டமாக இது வெளிப்படுகிறது. “சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது” என்று நாவலின் துவக்கத்தில் வரும் ஒரு வரி மேற்சொன்ன உணர்வுக்கு நெருக்கமாக திகழ்கிறது.

சபரி அதே கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தர்களைப் பற்றிய அவதானிப்பை வைக்கிறார்- “நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணிதான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாக, தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.” ஒளிர் நிழலின் துவக்க பக்கங்களில் இருந்தே இத்தகைய போக்கு நிலைபெறுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான், ஆனால் அதன் நாடகீயத்தன்மை, பொருளின்மை காரணமாக தொடுகையைக்கூட தவிர்க்கிறான். யாரேனும் தன்னைத் தீண்ட வேண்டும் என தவிக்கிறான், ஆனால் தானே அதைச் செய்யக் கூடாது எனும் தன்னுணர்வு தடுக்கிறது. தனது மேன்மையும் நல்லியல்புகளும் புரியாத மனிதர்களுடன் வாழ்வதை எண்ணி சலிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். மறு எல்லைக்கு சென்று கழிவிரக்கம் கொள்கிறான். சக மனிதர்கள் மீதான வெறுப்பு என பிரகடனபடுத்திக் கொண்டாலும்கூட அது அன்பை நோக்கியே நீள்கிறது. நிழல்கள் இருளாமல் ஒளிர்கின்றன. சுரேஷ் பிரதீப் எனும் எழுத்தாளன் மாய்ந்து அவனுடைய நிழலாக அவன் வார்த்த பாத்திரம் குணா என்றென்றைக்குமாக புனைவுக்குள் வாழ்கிறான், ஆகவே ஒளிர்கிறான். தன்னை அழித்து கலையை வளர்க்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த இருத்தலியல்வாதத்தின் நீட்சியாகவே ‘ஒளிர் நிழலை” காண முடியும். இத்தனை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, மனிதனை ஒவ்வொரு நொடியிலும் வியப்பிலேயே அமிழ்த்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிய பின்னரும் பொருளின்மை நம் முகத்தில் அறைகின்றது, இக்கேள்விகள் மேலும் கூர்மை கொண்டு எழுகின்றன என்பதே புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது புலப்படும் மற்றுமொரு பொதுத்தன்மை.

தொண்ணூறுகளில் பிறந்த மற்றொரு எழுத்தாளரான விஷால் ராஜாவின் படைப்புலகுடன் சுரேஷ் பிரதீப்பின் உலகம் கொள்ளும் ஒப்புமைகள் மற்றும் வேறுபாடுகளை கவனிப்பது முக்கியம். ‘எனும் போது உனக்கு நன்றி’ எனும் விஷாலின் தொகுப்பை முன்வைத்து, “விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள்.” என்றெழுதி இருந்தேன். விஷாலிடமும் சுரேஷிடமும் வெளிப்படுவது இருத்தலியல் சிக்கலே. ஆனால் சுரேஷிடம் வெளிப்படும் கோபம் விஷால் கதைகளில் வெளிப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்பது சுரேஷ் பிரதீப்பின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஆளுமைப் பிளவாக இருக்கக்கூடும். தற்கால இலக்கியத்தின் இரு போக்குகளாக இவ்விரண்டையும் அடையாளப்படுத்த முடியும்.

நாவலில் சில காட்சிப் படிமங்கள் வெகுவாக ஈர்த்தன. பொட்டலில் முளைத்தெழுந்த  வளைந்த பனைகளை “பல நூறு பாம்பு மாத்திரைகள் ஒன்றாக வைத்து கொளுத்தியது போல தடித்து கறுத்த பனை மரங்கள்” என விவரிக்கிறார். மற்றொரு தருணத்தில் குணாவின் இயல்பை விவரிக்கும் போது “கானல் நீராலான பெருங்கடலில் நீந்துகிறான்” என்றெழுதுகிறார். ஆனால், சுந்தரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் “ஒத்த ஆளா பீமசேனன் மாதிரி குடும்பத்த தாங்குனான்” எனும் பயன்பாடு அவ்விடத்தில் எனக்கு அன்னியமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.

காத்தவராயன் ஊர்விட்டு கூட்டத்துடன் விலகி தனது சாமியைக் கண்டுகொள்ளும் இடம் சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. முழுவதும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும்கூட கடவுள், திருவிழாக்களுக்கு நாவலுக்குள் இடமில்லை. எப்படியாவது தான் இறந்துவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடும் நாவலின் துவக்க பகுதியில் “இங்கிருக்கும் எதுவுமே என்னை ஆற்றுப்படுத்த முடியாது என்ற முதல் எண்ணத்தில்தான் நீ உதித்திருக்க வேண்டும். நீ எனக்கு ஆணவங்களின் தொகுப்பு” என கடவுளைப் பற்றி சொல்கிறார். உன்மத்த நிலையில் சாக்த தாக்கம் கொண்ட கவிதைகள் உள்ளன.

தலித் இயக்கங்கள் சார்ந்து துணிந்து சில அரசியல் விமர்சனங்களை போகிற போக்கில் வைக்கிறார். நாமறிந்த இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுபடுத்துகிறது. கோமதியின் மரணம் சார்ந்து பள்ளருக்கும் தேவருக்கும் இடையிலான உரசல்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நூற்றி சொச்ச பக்க நாவலில் இத்தனைத் தளங்களை தொட்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் வருங்கால ஆக்கங்களின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மரியோ வர்கோஸ் லோசா அவருடைய ‘இளம் நாவலாசிரியனுக்கு எழுதும் கடிதம்’ எனும் நூலில் நாவலின் வடிவத்திற்கும் நாவலின் பேசுபொருளுக்கும் இடையிலான உறவு உயிர்ப்புடன் திகழ வேண்டும் என்கிறார். கருப்பொருள் வாழ்க்கை அளிப்பது, பல எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை மையமாக கொண்டு எழுதுகிறார்கள், ஆனால் அதன் வெளிப்பாட்டு முறை எழுத்தாளனின் திறன் சார்ந்தது என்கிறார். ஒளிர் நிழல் எனும் நாவலுக்குள் வராத பகுதிகளின் இருப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கையில், புனைவுக்குள் புனைவு எனும் வடிவுக்கு நியாயம் இருக்கிறதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாசகருக்கு வாசிப்பு சுவாரசியம் அளிக்கிறது, அவனுக்கொரு சவாலை அளிக்கிறது, சவாலான வடிவத்தை கையாள்வதில் துவக்க நாவலிலேயே தேர்ச்சி அடைந்திருக்கிறார் போன்றவை உண்மையே. எனினும் நாவலின் மையத்திற்கு எவ்விதத்திலாவது வலு சேர்க்கிறதா என்பது கேள்விக்குரியதே. மாறாக இந்நாவலை எப்படி வாசிக்க வேண்டும் எனும் சில வழிகாட்டல்கள் அப்பகுதிகளில் வெளிப்படுகின்றன. உளவியலாளர் கூற்று, எழுத்தாளர் ஜெயகுமார் உரை ஆகியவை அதையே செய்கின்றன.

நாவலின் வடிவை கோளம் என உருவகப்படுத்த தோன்றுகிறது. அணுக அணுக அதன் மேற்பரப்பில் இருக்கும் வடிவ வேறுபாடுகள், சமமின்மைகள் புலப்படும், விலகி நோக்கும் தோறும் அவை மறைந்து ஒற்றை வடிவமென முழுமை கொள்ளும். வடிவ ரீதியாக கட்டற்ற பெருக்கு, ஒழுங்கற்ற சிதறல்கள் என தோன்றினாலும் அவையூடாக ஒரு ஒழுங்கு ஊடுருவி செல்லும். ஒளிர் நிழலின் துவக்கத்தில் குடும்ப அமைப்பை பொருளியல் பின்னணியில் வகுத்து நோக்கும் கட்டுரை நாவலுக்குள் எப்படியோ பொருந்தி போகிறது. சில கழிவிரக்கப் பகுதிகள், சுய விமர்சனங்கள் துருத்திக்கொண்டு இருந்தாலும்கூட, ஒளிர் நிழல் நிச்சயம் ஒரு கதைக் கோளம்தான். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஒளிப்பட உதவி – சுரேஷ் எழுதுகிறான்

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து– நரோபா