புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு அளித்திருக்கும். அடக்குமுறை, அகதி வாழ்வு, துரத்தும் மரண பயம், வன்கொடுமைகள், நிச்சயமின்மை, உற்றார் உறவினர்களின் இழப்பு என அகம் கூசி கூர்கொள்ளும் கதைகளையும் நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும் வளர்ந்திருப்பார்கள். இந்நிகழ்வுகள் அவர்களின் தேர்வல்ல, அவர்கள் மீது வரலாறு திணித்து அனுப்பியது. மானுட அகத்தின் இருண்ட மூலைகளை கண்டிருப்பார்கள், அதில் அரிதாக தென்படும் ஒளிக்கிரணங்களுக்காக காத்திருப்பார்கள். மனிதர்களை நசிவடையச் செய்யும் இவை படைப்பு மனத்திற்கு தூண்டுதலாகவும் அமையலாம். இத்தகைய இறுக்கமான சூழலை, போரின் துவக்கங்களை வரலாறாக அறிந்த  தொண்ணூறுகளில் பிறந்தவர், எப்படி எதிர் கொள்கிறார்? இந்தக் கிளர்ச்சியுடன் இயைந்து, பிரிந்து என எப்படி பயணிக்கிறார்? அவர்களின் அடையாள சிக்கல் எத்தகையது? போன்ற கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ பத்து கதைகளை உள்ளடக்கியது. இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியை அனோஜன் அடைந்திருக்கிறார் என்பது கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இது அவருடைய இரண்டாம் தொகுப்பு என்பதும்கூட காரணமாக இருக்கலாம். அனோஜனின் மொழியும் அவரின் மிகப்பெரிய பலம். தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது.  இறுக்கமான, செறிவான மொழியில் பழகித் தேர்ந்த லாகவத்துடன் பிசிறுகள் ஏதுமின்றி இலக்கை நோக்கிப் பாயும் தோட்டாவைப் போல் சீறிச் செல்கின்றன இவருடைய கதைகள். இந்த தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும். இது அவருடைய மிக முக்கியமான பலம், எனினும் இதுவேகூட நாளடைவில் பலவீனமாக ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய களங்களில், புதிய சிக்கல்களை எழுதும் கதைகள் வரும்போது வேறு வகையான கதைசொல்லல் அவசியமாகலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை காமம், காமப் பிறழ்வுகள் ஒரு சரடாக துளைத்து செல்கின்றன என கூறலாம். காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மச்சுழல் என்று ஒரு வட்டத்தை அண்மைய கால எழுத்தாளர்கள் பலரிடமும் கவனிக்கிறேன். விதிவிலக்காக ‘பலி’, ‘400 ரியால்’ மற்றும் ‘மனநிழல்’ ஆகிய கதைகள் அரசியல் மற்றும் சமூக மதிப்பீடுகளின் தளத்தில் காமத்தின் சாயை இன்றி நிகழ்கின்றன. பிறழ் காமத்தை, அதன் உறவுச் சுரண்டலை பேசும் கதைகள் என ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’, ‘வெளிதல்’ மற்றும் ‘உறுப்பு’ ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம். ‘வாசனை’ மற்றும் ‘இணைகோடு’ காமத்தைப் பின்புலமாக கொண்டு உறவுகளின் நுட்பத்தை சொல்கின்றன.

பொதுவாக ஈழப் புனைகதைகள் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு, இனப் படுகொலை ஆவணம், புலம் பெயர் வாழ்வின் அவலம் எனச் சில பாதைகளில் பயணிக்கும். அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் கதிரொளி குடிக்கும் கார்மேகமாக போர் அனோஜனின் கதைப்பரப்பின் மீது கவியும்போது அது மேலும் பிரம்மாண்டமாகிறது. ஒட்டுமொத்த கதைப்பரப்பின் நிறத்தையும் மாற்றுகிறது. போர் ஒரு பின்னணி இசை போல கதைகளில் தொடர்ந்து ஒலிக்கிறது. அனோஜன் போரைத் தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதுகிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் எங்கும் அது நாடகீயமாக சொல்லப்படவில்லை. இது அனோஜனின் தனித்துவம் என்றே எண்ணுகிறேன். ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும்  ரணசிங்கே, ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்கிறான் செழியன், ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்கு செய்கிறார். ‘வாசனை’ கதையில் சுட்டுக் கொல்லப்படும் தந்தை, சட்டவிரோதமாக வளைகுடா நாட்டில் சிக்கி ஊர் திரும்ப வழிவகையின்றி தவிக்கும் ‘400 ரியாலின்’ கதைசொல்லி, போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நண்பனின் சடலத்தை காணாமல் தவிர்க்கும் ‘மனநிழல்’, எனப் போர் ஆரவாரமின்றி அன்றாட நிகழ்வைப் போல் கடந்து செல்கிறது.

தந்தை, காதலன், கணவன் என தானறிந்த ஆண்களைப் பற்றிய கதை ‘வாசனை’. பெண் பிள்ளை அறியும் முதல் ஆண் தந்தை. தந்தையின் ‘ஆண் தன்மையான கருணை நிரம்பி வழியும்’ வாசனையை அவள் தேடிச் சலிக்கிறாள். அப்பா தன் காதலியை அம்மாவிற்கு தெரியாமல் சந்தித்து இருப்பாரா எனும் கேள்வி அவள் ஜெயந்தனை சந்திக்கச் செல்வதோடு பிணைகிறது. அப்பாவின் காதலியை அவர் சந்தித்த கதையை அம்மா அறிகிறாள். ஆனால் ஜெயந்தனைச் சந்தித்த கதையை ஹரி ஒருபோதும் அறியப் போவதில்லை. ஜெயந்தன் வீட்டில் யாருமில்லை என அழைத்துவிட்டு கதவை திறந்தபோது, மனைவியை உள்ளே கண்டபோதுதான் சிறுமை செய்யப்பட்ட உணர்வை அடைகிறாள். தன் தந்தையின் சிவப்பு புடவை அணிந்த காதலி திருமணத்திற்குப் பின் இயல்பாக பேசியிருக்கிறாள். கதை இறுதியில் கதைசொல்லியும் தன்னை சிவப்பு புடவை அணிந்த பெண்ணாக உணர்ந்து அகத்தடையை மீறி செல்கிறாள். உறவு நிலைகளை நுட்பமாக சித்தரிக்கிறார் அனோஜன். இந்த கதையின் உணர்வு நிலையின் நேரெதிர் வடிவம் என ‘கிடாய்’ கதையை சொல்லலாம். அப்பாவின் வாசனையை அறிந்து, வெறுத்து, பழிதீர்க்கிறாள். தீரா வஞ்சத்தால் தன்னை மாய்த்துக் கொண்ட அன்னைக்காக தந்தை மீது வஞ்சம் வளர்த்து கொள்கிறாள் தேவி. படிப்படியாக தந்தை எனும் இடத்திலிருந்து அவனை இறக்கி மிருகமாக்கி அந்தக் கிடாயை பலியிட்டு அமைதி கொள்கிறாள். பலியாட்டை ஈர்க்க தேவி கொடுக்கும் கீரைக்கட்டுதான் விமலரூபன். காமாட்சி- தேவி – தேவியின் அம்மா மற்றும் ராசையா உறவு மிகவும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது (ஓரிடத்தில் மட்டும் ராசையாவின் பெயர் பரமேஸ்வரன் எனப் பிழையாக வருகிறது. ). வாசனையில் உன்னதப்படுத்தப்பட்ட தந்தை அன்பு இங்கே தலைகீழாகிறது. கென் லியுவின் ஒரு கதையை அண்மையில் வாசித்தேன். ‘சிமுலகிரம்’ (simulcrum) எனும் கருவியைக் கொண்டு கற்பனையாக தனக்குத் தோதான பெண்களின் பிம்பங்களை முப்பரிமாணங்களில் உருவாக்கி நிர்வாணமாக உறவாடும் தந்தையை மகள் கண்டுவிடுகிறாள். இறுதிவரை அவள் அதை மன்னிக்கவே இல்லை. கதை இறுதியில் மரித்துப் போன அவள் அன்னை மகளுக்காக ஒரு கடிதம் எழுதிவிட்டுச் செல்கிறாள். அதில் தந்தை உண்மையில் உன் மீது பிரியம் கொண்டிருக்கிறார். அவரை மன்னித்துவிடு என்று கோருவார். அன்னையின் வஞ்சம்தான் தேவியில் உருக் கொள்கிறது. ஒருவேளை அந்த அன்னை உயிரோடு இருந்தால் சகித்து மன்னித்து வாழ்ந்திருப்பாளா என்று கேட்டுக்கொண்டேன்.

இவ்விரு கதைகளும் ஒரு திரியின் இரு  முனைகள். அன்பின்மை, அல்லது அன்பிற்கான ஏக்கம் எப்படி திரிந்து போகிறது என்று வாசித்துக் கொள்ளலாம். இதே வரிசையில் ‘பச்சை நரம்பு’ கதையையும் வைக்கலாம். நான்கு வயதில் காய்ச்சலில் மரித்த தனது அன்னையின் ஒற்றை நினைவாக கழுத்திலிருந்து மாருக்கு இறங்கும் பச்சை நரம்பைத்தான் செல்வமக்கா, தீபா என இருவரிடமும் கதைசொல்லி தேடுகிறான். அம்மாவை மனைவிகளில், காதலிகளில் தேடுவதும், தந்தையை கணவன்களில், காதலர்களில் தேடுவதும் உளவியல் மனக்கூறாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளன. இக்கதைகள் வழியாக இவை கண்டடையப்படுகின்றனவா அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றைக் கொண்டு அதன் மீது கதைகள் கட்டி எழுப்பப்பட்டனவா? இருவகையில் எது நிகழ்ந்தாலும் அது இழிவு அல்ல. ஆனால் ‘ஆச்சரிய அம்சத்தில்’ வேறுபாடு உண்டு.

அனோஜன் புதுயுக கதைசொல்லிக்கான பிரத்தியேக சிக்கல்களை தொட்டுக் காட்டியிருக்கும் கதைகள் என ‘400 ரியால்’ மற்றும் ‘மன நிழல்’ கதைகளைச் சொல்வேன். இக்காலகட்டத்தில் வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகளின் ஆவணமாக இவை நிற்கின்றன. எக்காலத்திலும் இவ்வகை மனிதர்கள் வாழவே செய்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் இலக்கிய ரீதியாக அப்பட்டமாக பதிவாவது என்ற முறையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. ‘400 ரியால்’ நம் அற மதிப்பீடுகளைக் கவிழ்க்கிறது, மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது. 400 ரியாலுக்காக அவன் ஏங்குவதும், கையறு நிலையில் தவிப்பதும் கதையில் பதட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் எதிர்பாராமல் அவனுக்கு கிடைக்கும் உதவிக்கு அவன் ஆற்றும் எதிர்வினை மனிதர்களின் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் காட்டுகிறது. ‘மன நிழல்’ நெருங்கிய சகாவின் சவ அடக்கத்திற்கு, அம்மாவின் கட்டளையை சாக்காக சொல்லிக்கொண்டாலும், அவன் உள்ளுரையும் அச்சத்தின் காரணமாக, செல்வதை தவிர்க்கிறான். நெருங்கிய நண்பர்களைக்கூட அச்சத்திற்கும் அதிகாரத்திற்கும் பயந்து கைவிட்ட தருணங்கள் மனதில் நிழலாடின. இக்கதைகள் பொறுப்பேற்கத் துணிவின்றி, தப்பித்தலையே தன்னறமாக கொண்ட சந்தர்ப்பவாத வாழ்வைச் சுட்டுவதாக உணர்கிறேன்.

உறவு, உறவின் சுரண்டலைப் பேசும் கதைகள் என ‘இச்சை’ மற்றும் ‘உறுப்பு’ கதைகளைச் சொல்லலாம். ‘இச்சை’ கதையில் ஏழு வயது சிறுவன் அண்டை வீட்டுப் பெண்ணால் தனது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறான். தனது சிறு வயது நினைவுகளை நண்பனிடம் பகிரும்போது வரும் உரையாடல் முக்கியமானது

“யார் அந்தப் பெட்ட? உன்னை நல்லா துஷ்பிரயோகம் செய்திருக்கிறாள்’ என்றான்.

“துஷ்பிரயோகமா?.ஹ்ம்ம்… நான் அதை அப்படி நினைக்கவில்லை”’ என்றேன்.

”அப்ப இது என்னவாம்? இதுவே ஒரு பெண்பிள்ளைக்கு ஆண் ஒருவர் செய்திருந்தா என்ன நிலைமை?”

பாரபட்சமாக அணுகப்படும் ஆண்களின் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களப் பதிவு செய்யும் களமாகவும் தனது கதைகளைப் பயன்படுத்துகிறார். கிடாய்’ விமலரூபன், ‘பச்சை நரம்பு’ கதைசொல்லி, ‘உறுப்பு’ கதை நாயகன் என இவை நீள்கின்றன. ‘உறுப்பு’ இத்துயரத்தின் மிக தீர்க்கமாக பதிவாகிறது. தோளில் துவக்குடன் நிற்கும் சிங்கள சிப்பாய் தமிழ் மாணவனுடன் வல்லுறவு கொள்கிறான். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத இறுகிய மவுனத்தைக் குடும்பம் கடைபிடிக்கிறது. மனரீதியான தொந்திரவுக்கு உள்ளாகிறான். கல்லூரியிலும் ‘பகிடிவதை’ (raggingகிற்கு என்ன அழகான தமிழ்ச் சொல்) அவனை துன்புறுத்துகிறது. அவனது ஆண்மை குறித்தான ஐயங்கள் எழுகின்றன. ஒரு சிறிய முத்தம் வழியாக அதை மீட்கமுடியும் எனப் புரிந்து கொள்கிறான். இங்கும் அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ‘இச்சை’ பாலியல் சுரண்டலின் நுட்பமான மறு பக்கத்தைச் சொல்கிறது. அஜந்தா அவன் மீது மெய்யாகவே பிரியத்துடன் இருக்கிறாள். பதின்ம வயதில் சிறு பிறழ்வாக அவளுடைய இச்சை வெளிப்படுகிறது. ஆபத்தற்ற (அப்படி சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை! எல்லா பாலியல் சுரண்டல்களுமே ஆபத்தானவை. மனதை பாதிக்கக்கூடும். இக்கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என வேண்டுமானால் சொல்லலாம். இது தற்செயல், மற்றும் மனபோக்கு சார்ந்தது) பாலியல் விளையாட்டுக்களை விளையாடிக் கொள்கிறாள். இயல்பாக அதிலிருந்து வளர்ந்து வெளியேறிச் சென்று விடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளின் உரசல் ஏதுமில்லாமல் இயல்பான வாஞ்சையுடன் அவளால் பழக முடிகிறது. இறுதியில் அஜந்தாவின் குழந்தையின் கண்கள் அவனுக்கு நினைவுக்கு வருவது மிக முக்கியமான தருணம். இந்த பாலியல் சுரண்டல் சுழலில் இருந்து அவன் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் தருணம். ‘உறுப்பு’, ‘இச்சை’ கதைகள் ஏறத்தாழ ஒரே கேள்வியை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டுள்ளன என்று எண்ணுகிறேன்.

இத்தொகுப்பின் சிறந்த கதை என ‘பலி’ கதையையே சொல்வேன். பாதிக்கப்பட்டவன், பாதிப்புக்கு உள்ளாக்குபவன் எனும் இருமையிலிருந்து கிழித்து வெளியேறி மனிதர்களாக காணும் தருணத்திலேயே கலைஞன் எழுகிறான். குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலின் இறுதி பகுதியில் தன் காதலிக்கு இருளின் சிறிய விளக்கு வெளிச்சத்தில் கடிதம் எழுதும் சிங்கள ராணுவ வீரன் மீது குண்டு வீசாமல் செல்வான். பரிசாக மரணத்தைப் பெறுவான். அது ஓர் உன்னத தருணம். ‘பலி’ அத்தகைய குற்ற உணர்விற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது. படிப்படியாக மனிதன் தன்னை முழுவதுமாக இழக்கும் முறையை பதிவாக்குகிறது. இக்கதை ஆழ்ந்த மனச் சோர்வு அளித்தது. இக்கதை புலி எதிர்ப்பு, புலி விமர்சனமாக சுருக்கி கொள்ளாமல், தான் வாழும் சமூகத்தின் மீதான சுய விமர்சனமாக, போரின் வரைமுறையின்மையை பேசும் கதையாக மதிப்பிடப் பட வேண்டும். ‘400 ரியால்’ ‘ மனநிழல்’ கதைகளோடு இதையும் அந்த வரிசையில் வைக்கலாம். ‘இணைகோடுகள்’ இத்தொகுப்பில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. சிங்கள சிப்பாயை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ்ப் பெண். ராணுவத்தை விட்டு நீங்கியதற்காக சிறையில் இருக்கும் சிங்கள சிப்பாய் என்பது மிக நல்ல களம். ஆனால் கதை அவளுடைய இணை வாழ்வை கதைசொல்லி ஊகிப்பதோடு முடிந்து விடுகிறது.

இத்தொகுப்பின் பலவீனமான கதை என ‘வெளிதல்’ கதையை சொல்வேன். பாலியல் தொழிலாளி உலகை வழமையான முறையில் சித்தரித்து இருக்கிறார். அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படும் மற்றுமொரு கதை. ‘பச்சை நரம்பும்’ கூட பெரிதாக எனக்கு உவக்கவில்லை.

பாலியல் சித்தரிப்புகளை எழுதும்போது அவை எதற்காக எழுதப்படுகின்றன என்றொரு கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டும். வாசகரின் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டவா? காட்சிகளைப் பதிய வைக்கவா? அல்லது திசை திருப்பவா? அல்லது அங்கிருந்து கதையை மானுட அகத்தின் மீதான விசாரணையாக கொண்டு செல்லவா?. அனோஜன் கதைகளில் மானுட அக விசாரணை நோக்கிய தாவல் நிச்சயம் நிகழ்கிறது. காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மம் எனும் சுழல் பல எழுத்தாளர்களின் இயங்கு தளமாக திகழ்கிறது. அனோஜன் காம – அகங்கார – வன்மை சுழலில் வன்மத்துடன் நின்றுவிடாமல் அன்பை நோக்கி நகர்கிறார் என்பது ஆசுவாசம் அளிக்கிறது. இந்தச் சுழலில் வெகு அரிதாகவே புதிய மற்றும் அசலான கண்டடைதல்கள் நிகழ முடியும். அகம் குவித்து எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் இதில் ஏதோ ஒரு நுண்மையை துலங்கச் செய்து இருக்கிறார்கள். இப்படியான கதைகளில் உள்ள ஆபத்து என்பது வாசகர் ‘ஆம். ஆமோதிக்கிறேன். பிறகு அல்லது வேறு?’ எனக் கேட்டு விடுவான்.(ஒரு வகையில் இந்த கேள்வியை எல்லா கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் தான்) இத்தளங்களில் கதைகளுக்கான வெளி குறைவு என்பதால் வரும் சவால் இது. பாலியல் சித்தரிப்புகள் சில தருணங்களில் கதையை மீறி அல்லது கதையின் மையக் கேள்வியை மீறி வாசகர் மனதில் நின்றுவிடுகிறது.  அது பேசுபொருளை பின்னுக்குத் தள்ளி, கிளர்ச்சிக்குள் மனதைப் புதைத்து விடும். ‘இச்சை’, ‘பச்சை நரம்பு’ போன்ற கதைகளில் இச்சிக்கல் வெளிப்படுகிறது.

அனோஜன் பெண்களின் அகத்தை நுண்மையாகச் சித்தரிக்கிறார். பெண் பாத்திரத்தைக் கொண்டு ‘தன்மையில்’ வெற்றிகரமாக கதை எழுதிவிட அவரால் முடிகிறது. இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே பால்ய, இளம்பருவ காலத்து கதைகள்தான். அது இக்கதைகளுக்கு ஒரு இளமையை அளிக்கிறது. தன் அனுபவங்களிலிருந்து இக்கதைகளை உருவாக்குகிறார் எனும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது. அனோஜனுக்கு இருக்கும் சவாலென்பது தனக்கு வசதியான, வாகான தளங்களிலிருந்து புதிய தளங்களில் கதை சொல்வதில் உள்ளது. ஒரு தொகுப்பில் சரி பாதிக்கு மேல் நல்ல கதைகள் இடம்பெறுவதே பெரும் சவால்தான். அதை எளிதாக அனோஜன் கடக்கிறார். அவரிடம் உள்ள மொழி, அனுபவங்கள், சிந்தனைகள் அவரை தமிழின் முக்கிய எழுத்தாளராக வருங்காலங்களில் அடையாளம் காட்டும் என்றே நம்புகிறேன். அதற்கான எல்லா சாத்தியங்களையும் ‘பச்சை நரம்பு’  தன்னுள் புதைத்து கொண்டுள்ளது.

 

 

5 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.