விமரிசனம்

இரு திருமணங்கள்

 அஜய் ஆர்

‘சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்’ சசிகலாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது (‘கல்யாணம் முடிந்தவுடன்’) . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே இருப்பது, பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள் அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது எரிச்சலாக இருக்கின்றது. ஆனால் சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள். சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது. அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள் இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன. மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் ‘சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா’ . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது. அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது.

சசியின் தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது, ‘..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்’, என்று சொல்ல, அத்தை ‘என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..’ என்று சொல்கிறார். அன்றாட இ யல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல ‘என்னடி இது’ என்று எழுதி இருக்கக்கூடியதை ‘என்னடீது’ என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் – என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது – நுண்சித்திரமும் தெரிகிறது. சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து ‘கூப்பிடறதே நன்னாயில்லையே’ என்கிறாள். அவ்வளவுதான். அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும் பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள். இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம் ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா? இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள், பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால், புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்- என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம்.

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, ‘போட்டோ’ கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். (“சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை” – இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?.

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க, மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், “…தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்” என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும்?. ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா? அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது. புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை உருவாகி விடுவதை உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக் கூட எதிர்கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம். ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று உருவாகும் சங்கட நிலையை, எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடைய நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் – நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப் போல் – ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக் குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.

oOo

ஒளிப்பட உதவி – திண்ணை

 

சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

அஜய் ஆர்

generalinhislabyrinth

‘The General In His Labyrinth’ நாவலில் நாம் சந்திக்கும் சிமோன் பொலிவர் (Simon Bolivar), ஒரு கண்டத்தையே ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட அதிநாயகர் அல்ல. ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா என்ற கனவு தன்னுடைய கண் முன்னே கலைவதை தடுக்க முடியாத, தென்னமெரிக்க கண்டத்தின் சர்வாதிகாரியாக இருக்க விழைந்தவர் என அவர் எதிரிகளால் தூற்றப்படுகிற, அச்சந்தேகம் மக்களிடமும் பரவி, தான் விடுவித்த நாடுகள் பெரும்பாலானவற்றில் சந்தேகத்தோடு பார்க்கப்படுகிற, இத்தனை இக்கட்டிலும் மக்கள்/தன் முன்னாள் தோழர்கள் தன்னைக் கை விடமாட்டார்கள் என்ற மாயையை இழக்க விரும்பாத, மனதளவிலும் உடலளவிலும் உடைந்து போன ஒருவரையே பார்க்கிறோம். அவருக்கு இருந்த இறுதி நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் கலைய, ஐரோப்பாவிற்குச் செல்ல முடிவு செய்கிறார்.

அதீதமாக வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதற்காக பணத்தை வாரி இறைத்தவர் என்று அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு புறமிருக்க, தன் பயணத்திற்கு நல்ல குதிரையைக்கூட ஏற்பாடு செய்ய முடியாமல், கோவேறுக் கழுதை ஒன்றே கிடைக்கிறது. அவருடைய தரப்பில் உள்ள ஒருவர் முக்கியஸ்தர், நாட்டைக் காப்பாற்ற இறுதி தியாகத்தைச் செய்யுமாறு வேண்ட, “I no longer have a country to sacrifice for” – ஒரு கண்டத்தையே மீட்டவன், ஒரு காணி நிலத்தைக் கூட தனக்கென்று/தன்னுடையதென்று கூற முடியாத – அவல நிலையை சுட்டும் பதிலோடு – தன்னுடைய இறுதிப் பயணம் என்று அப்போது அறிந்திராமல் – பயணத்தை பொலிவர் தொடங்குகிறார்.

மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கான உந்து சக்தியை இழந்த ஒருவரை இப்பயணத்தின்போது நாம் பார்க்கிறோம். அவர் நாடு கடத்திய எதிரிகள் தாயகம் திரும்புகிறார்கள், புதிய நாடுகள் அவற்றின் தலைவர்கள் என ஒன்றிணைந்த தென்னமெரிக்க தேசம் என்ற கனவு அவர் கண் முன்பே கலைந்து, அவர் விரும்பாத உருக்கொள்கிறது. சீட்டாட்டத்தில் ஏற்படும் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவருக்கு இப்போது இல்லை. அவர் செல்லுமிடங்களில், மக்கள் அவர் மீது சேறு வீசுகிறார்கள், அவருக்கு எதிரான கோஷங்கள் சுவர்களில் எழுதப்படுகின்றன. இனி எதுவும் செய்ய முடியாது என்ற செயலின்மையும், மீண்டும் முதலிலிருந்து புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற அடங்கா விழைவுமாக ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட உணர்வுகள் மாறி மாறி குடி கொள்ளும் மனதோடு நகரும் அவரின் இறுதி நாட்கள், தனிமையான ஒரு மாலை வேளையில்

“…  of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began to listen to the radiant voices of the slaves singing the six o’ clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again”

என்று உள எழுச்சியையும் துயரையும் ஒரே சேர அளிப்பதோடு முடிகிறது.

மரணத்தின் வலு குறித்து “Death is the greatest leveler” போன்ற சொற்றொடர்கள் எப்போதும் உபயோகத்தில் இருந்துள்ளன.

“THE glories of our blood and state
Are shadows, not substantial things;
…..
Death lays his icy hand on kings:
…..
And in the dust be equal made
With the poor crooked scythe and spade. “

என்று ஜேம்ஸ் ஷெர்லியின் (James Shirley) ‘Death the Leveller’ கவிதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், தன் புகழ்/ அடைந்த வெற்றிகள் அனைத்தும் எந்த பொருளும் இல்லாதவையாக மாறி, யாருமற்றவராக மரணிக்கிறார் பொலிவர்.

stoner

ஜான் வில்லியம்ஸ் (John Williams ) எழுதிய ஸ்டோனர் (‘Stoner’) நாவலின் மைய பாத்திரம், இலக்கிய உலகில் நிறைய இடங்களில் உதிர்க்கப்படும் ‘எளியவர்கள்/ சாதாரணர்கள்’ என்ற பதத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்டோனரின் மரணத்தைப் பற்றிய “Stoner’s colleagues, who held him in particular esteem when he was alive, speak of him rarely now; to the older ones, his name is reminder of the end that awaits them all, and to the younger ones it is merely a sound that evokes no sense of the past…” குறிப்போடு நாவல் ஆரம்பிப்பதிலிருந்தே உணர முடிகிறது. ஆம், இது ஒரு ‘சாதாரணனின்’ வாழ்வையும் மரணத்தையும் பற்றிய நாவல்.

மாபெரும் சாதனைகள் செய்த – நிஜத்தில் வாழ்ந்த – ஓர் ஆளுமையின் (உண்மைகள் கலந்த) புனைவுச் சித்திரமும், முற்றிலும் புனைவுப் பாத்திரமான – பொலிவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் நேர் மாறான வாழ்வை வாழ்ந்த, வாழும் போதும் சரி, மரணத்திலும் சரி எந்த பெரிய சலனத்தையும் உருவாக்காத – ஸ்டோனரின் ஆளுமைச் (அல்லது ஆளுமையின்மையின்) சித்திரமும் எந்தத் தொடர்பும் இல்லாதவை போல் முதற்பார்வையில் தோன்றுவதால், இவற்றை ஒரே கட்டுரையில் அணுக வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். ஆனால் ஸ்டோனரை மீள்பார்வை செய்வது, அவரது வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு கோணத்தை தருவது மட்டுமின்றி, இறப்பு எப்படி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை சமன் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், இவர்களைப் போல் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது என்ற இன்னொரு கோணத்தையும் உணர்த்துகிறது.

ஸ்டோனரின் வாழ்க்கை குறித்து நாவலின் போக்கில் தெரிந்து கொள்கிறோம். வேளாண் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் சேரும் ஸ்டோனர், ஆங்கில இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பேராசியர் ஆகிறான். காதலில் விழுந்து விட்டோம் என்று எண்ணி, – துரித கதியில் திருமணம் செய்து, பெரிதும் துன்பத்தையே தரும், மகளே தந்தையிடம் இருந்து விலகிச் செல்லும் – இல்வாழ்க்கையில் இணைந்து கொள்கிறான். கல்லூரியில் செல்வாக்கு மிக்க இன்னொரு பேராசிரியருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு அவ்வாசிரியர் மனதில் ஸ்டோனர் பால் பெரும் பகையை உருவாக்க, ஆசிரியப் பணியிலும் பலச் சங்கடங்களை அவன் சந்திக்க நேர்கிறது.

ஸ்டோனர் மட்டுமே நல்லவன், மற்ற அனைவரும் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்களே என்ற விமர்சனம் வாசகன் மனதில் எழலாம் (எழுந்து கொண்டும் இருக்கின்றது). ஸ்டோனரின் கோணத்திலேயே முழு நாவலும் நகர்வதால் அப்படிப்பட்ட உணர்வு நாவலில் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றாலும், சற்று கூர்ந்து கவனித்தால் வில்லியம்ஸ் யாரையும் கொடியவர்களாக சித்தரிக்காமல், மனப் பொருத்தம் இல்லாத இருவர் தொடர்பில் வரும்போது ஏற்படும் மனக்கோணல் எத்தகைய வஞ்சத்தை உருவாக்கும் என்பதை மட்டுமே சொல்ல வருகிறார் என்பது புரியும். மற்றவர்கள் கோணத்தில் எழுதப்படும்போது (அல்லது வாசகனே அப்படி யோசிக்கும்போது) ஸ்டோனர் தரப்பில் உள்ள சில பிரச்சனைகள் – மனைவியின் மனநிலைக்கு நேர்மாறாக, பெரிய லட்சியங்கள் இன்றி அவர் இருப்பதே இல்வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண், பிடிவாதத்தோடு ஒரு நிலையில் இருந்து, ஆனால் ஒரு கட்டத்தில் ஆயாசத்தோடு அதை விட்டுவிடுவது, எதையும் இறுதி வரைக்கும் கொண்டு செல்ல இயலாத மனநிலை – இருக்கக்கூடும் என்று தெரிய வரலாம். ஸ்டோனரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அவர் மனதிற்கு மிக மிக அணுக்கமாக இருக்கும் அந்த உறவையும் அவர் முறித்துக் கொள்ள வேண்டியதாகிறது. மத்திய வயது ஆணின் நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, அவருக்கு ஏற்படும் இல்லறத்தைத் தாண்டிய காதல் என்ற வழமையான ஒன்றுதான் என்றாலும் அக்காதல் உருவாவதை மட்டுமின்றி, அது முறிவதையும் கண்ணியத்தோடு விவரிக்கிறார். அக்கண்ணியம் அவ்வுறவு குறித்த காத்திரமான/ தூய்மையான பிம்பத்தை உருவாக்கி, – இலக்கியத்தில் இத்தகைய உறவுகள் குறித்த பரிச்சயம் இருந்தாலும் – வாசகனை அகம் நெகிழச் செய்கிறது.

இதெல்லாம் நடந்தது/ இவற்றை ஸ்டோனர் அடைந்தார் என்பதாக இல்லாமல், இவையெல்லாம் நடக்கவில்லை/ இவற்றையெல்லாம் அவர் இழந்தார் என்பதாக மட்டுமே ஸ்டோனரின் வாழ்கை விரிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவர் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியைச் செய்வதிலும் இடறி விழுந்து, அவர் விருப்பத்திற்கு மாறாக பணி மூப்பிற்கு தள்ளப்படுகிறார்.
இதிலும் அவர் தோல்வியையே சந்திக்கிறார். நோயால் பீடிக்கப்படும் அவர், அந்திமக் கணங்களில், தான் மிகவும் விரும்பிய இலக்கியத்தின் (புத்தகங்களின்) அருகாமையில், அவற்றைப் பார்த்துக்கொண்டே, ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது அவர் உயிர் பிரிகிறது.

மிக எளிய அறையில், இன்னொருவரின் மஞ்சத்தில் படுத்தபடி, அதிக பொருட்கள் இல்லாத அணிமேஜையை, கலங்கிய முகக்கண்ணாடியைப் பார்த்தப்படி மரணிக்கும் பொலிவரைவிட தான் விரும்பிய சூழலில் மரணிக்கும் – நிராசையின் நிழலிலேயே வாழ்நாளை கழித்த – ஸ்டோனரின் அந்திமக் கணங்கள் சற்றே ஆசுவாசமளிப்பவையாக இருந்திருக்கக் கூடும் என்பது ஒரு நகை முரண் தான்.

மரணத்தைப் பற்றிய ஷெர்லியின் கவிதை

“Only the actions of the just
Smell sweet and blossom in their dust. “

என்று முடிகிறது. பொலிவரின் செயல்கள் குறித்து அவை நியாயமா இல்லையா என்று வாதிட முடியும் என்றாலும், அவற்றின் செயற்கரியத் தன்மையை, அவர் ஒரு வரலாற்று நாயகர் என்பதை யாரும் மறுக்கவியலாது. அவருடைய அந்திமக் கணங்கள் நிராகரிப்பின் வலியில், தனிமையின் பிடியில் கழிந்திருக்கலாம். ஆனால் “… the final brilliance of life that would never, through all eternity be repeated again” என்று அந்நாவல் முடியும்போது அனைத்தையும் சரி செய்து ,அவர் புகழ் (அவர் செயல்கள் குறித்த விமர்சனங்களோடு) என்றும் நீடித்திருக்கும் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது.

ஆனால் ஸ்டோனரின் நிலை? அந்திம நேரத்தில் “What did you expect” என்று தன் வாழ்க்கை குறித்து அவர் மீண்டும் மீண்டும் தன்னையே கேட்டுக்கொள்வது வாசகனை மனமுடையச் செய்கிறது. யாரும் பார்க்காமலே மொட்டவிழ்ந்து, யாரும் முகராமலே மணம் வீசி, யாருக்கும் இழப்பதற்கு இல்லாமல் உதிரும் பூ போன்ற வாழ்க்கையை மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறாரா, எந்த அர்த்தமும் அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாவலின் மீள் பார்வை செய்தால், முதலில் வாசகன் உணரக்கூடிய வாழ்க்கை சார்ந்த ஆயாசத்தையும்/ அவநம்பிக்கையையும் தாண்டி உண்மையில் எழுச்சிமிக்க வாழ்க்கை அனுபவத்தையே, அத்தகைய ஒரு வாழ்வையே ஸ்டோனர் வாழ்ந்திருக்கிறார் என்று வாசகன் உணர முடியும்.

ஸ்டோனர் வாழ்வில் இரு சம்பவங்கள் இது குறித்த சிலத் தெளிவுகளைத் தரக்கூடும். வேளாண்மை படிக்க வந்துள்ள ஸ்டோனரை, நீ ஆசிரியராகப் போகிறாய் என்று அவருடைய ஆசிரியர் சொல்கிறார். அதுவரை அப்படி எண்ணிக்கூட பார்த்திராத ஸ்டோனர் புரியாமல் ஆசிரியரை நோக்க “It’s love, Mr.Stoner,’ Sloane said cheerfully. ‘You are in love. It’s as simple as that.‘”, என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்வு. தன் காதலை முறித்துக் கொள்வதைப் பற்றி ஸ்டோனர் பேசும் போது, நாம் மற்றவர்களுக்கு பயந்தோ, இதனால் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களைத் தவிர்க்கவோ இதைச் செய்யப்போவதில்லை என்று சொல்லி “It is simply the destruction of ourselves, of what we do” என்பதால் காதலைத் துறக்கிறோம் என்று முடிக்கிறார்.

ஸ்டோனர் அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கோணத்தை பார்க்க இயலாதவராக, மனத்திடம் இல்லாதவராக இருந்திருக்கலாம். ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு நிகழ்வுகள் வாசகனுக்குச் சுட்டுவது என்ன? அவருடைய முதற் பெருங்காதலான இலக்கியத்தை/ கற்பித்தலை அவர் எப்போதும் கைவிடவில்லை. “I want to thank you all for letting me teach” என்றே தன் மேல் திணிக்கப்பட்ட பணி நிறைவு விழாவின் போது சொல்கிறார். காதலைத் துறக்கும்போது “… what we do” என்று அவர் குறிப்பிடுவது, தங்களைக் குறித்து அவர்களே கட்டமைத்துள்ள பிம்பத்தை மட்டுமின்றி, இலக்கியத்தை /கற்பித்தலையும் சுட்டுகிறது என்று உணரலாம். அதற்கேற்ப, தான் வகுத்துக் கொண்ட விழுமியங்களையும் (அவை மற்றவர்களின் கோணத்தில் தவறானவையாக – தன் காதலை முறிக்க அவர் சொல்லும் காரணத்தைப் போல- தேவையற்றவையாக இருக்கலாம்), ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் (இறுதி வரை தன் மனைவியிடம் இருந்து அவர் பிரிவதில்லை, தன்னை ஒதுக்கிய மகள் இக்கட்டில் சிக்கும் போது அவள் தரப்பையே எடுக்க விழைகிறார்- கைவிடாமல், அவற்றுக்கு நியாயம் செய்யவே எப்போதும் முயல்கிறார். எதையும் வென்றிலன் எனும் போதும் அவரும் பொலிவரைப் போல் ஒரு நாயகரே.

விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து

 வெ. கணேஷ்

சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமானபோது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.

இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன் பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.

பஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார்.

பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே முன்னும் பின்னுமாக பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில்.

வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன் சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை.

தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல முதுகைத் திருப்பிக் கொண்டு எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.

பஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும்? சிறுவனுக்கு என்ன ஆயிற்று? ரத்தக் காயம் பட்டிருக்குமா? ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா? ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா? அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும்? யார் அந்த ஆள்? அந்த சிறுவன் என்ன பண்ணினான்? அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா?

வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன் காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில் காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும் போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.

காட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள் தோன்றியவாறு இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.

oOo

ஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை. நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது. “முழுமையான புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ?

வாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது. மிக்கேல் தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும் பாங்கில் அவனுக்கிருக்கும் மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான். ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு இளம் வாலிபனைப் படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில் அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான். இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.

மேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன? அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா? ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா? “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை?

பெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில் தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.

“புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய் இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.

காட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா? அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில் குழம்பிப் போன மன நிலையா? மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம் மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ? மிக்கேல் புகைப்படத்தினுள் பிரவேசிக்கிறான்.

அரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால் தான் வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ? அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார்? மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.

பார்க்கும் விழைவு மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத் துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான்? அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன? அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது? புறாக்கள் பறந்த வண்ணம், மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

பனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப் பிரிவதைப் போன்று காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம்? மிக்கேலின் மாறும் மனநிலையா? மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா? உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார்? புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா? அல்லது பெரிதாக்கப்பட்ட புகைப்படமா?

பலவித, இணை யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள் உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில் சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம் மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்!) மிக்கேல் நிறுவிவிடுகிறான். ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல, “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.

oOo

ஒளிப்பட உதவி – http://www.siegelproductions.ca/bookaddicts/fiction.htm

அகமும் புறமும் உயிர் கொள்ளும் துர்க்கனவுகள் – பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew’

அஜய் ஆர்

starsofthenewcurfew

பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew‘ தொகுப்பில் ”Worlds that flourish‘ கதையின் கதைசொல்லியிடம் அவர் அண்டை வீட்டுக்காரர், “விழி இழந்தவன் போல் நடந்து கொள்கிறாயே” என்று கேட்கிறார். கதைசொல்லி விழி இழந்தவர் அல்ல என்றாலும் எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதைச் சுட்டும் விதமாக அவ்வாறு கேட்கிறார். ஒரு கட்டத்தில் தன்னைச் சுற்றி நடப்பதை அவர் கூர்ந்து நோக்க ஆரம்பிக்கும்போது, தான் இதுவரை கவனிக்காத, கொடுங்கனவாய் தோற்றமளிக்கும் வாழ்விலிருந்து தப்பிக்க எண்ணி நகரை விட்டு நீங்கி ஆன்மாக்களின் (spirits) உறைவிடமாக உள்ள ஓர் உலகினுள் பிரவேசிக்க நேர்கிறது. அந்த உலகும் பீதியளிப்பதாக இருக்கவே, கதைசொல்லி அதிலிருந்தும் மீட்சி தேட வேண்டியதாகிறது..

பணத்திற்காக அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், 5-6 இராணுவ வீரர்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உடலுறவை வெறுத்து வேறு சில இராணுவ வீரர்கள் தன்னை நெருங்குவதைக் கண்டு மணிக்கட்டை அறுத்துக் கொள்ளும் பெண், நாட்டை ஆள்பவரின் பிறந்த நாள் கேளிக்கைகளை காணச் சென்று இறுதியில் வானூர்திகள் தூவிச் செல்லும் துண்டுப் பிராசார காகிதங்களை பசியோடு தங்கள் வெறுமை சூழ்ந்த மனைகளுக்கு எடுத்துச் செல்பவர்கள் என கொடுங்கனவாக உருவெடுக்கும் புற/அக உலகங்களின் பிறழ்ச்சியை முதல் முறையாக காண நேர்ந்த பின், ஒன்றிலிருந்து தப்ப இன்னொன்றில் சிக்கி, எவ்வுலகிலும் ஆசுவாசம் அடையமுடியாத இக்கட்டில் உள்ள மனிதர்களை இந்தக் கதைத் தொகுப்பில் பார்க்கிறோம்.

வெளிப்படையாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் ‘Laos’ நகர்/ அதன் புறநகர்/ கிராமப்புற பகுதிகளே இந்தக் கதைகளின் களன் என்று புரிந்து கொள்ளலாம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை மேற்குலகு தகமவைத்துக் கொள்ள/ உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படும், அவர்களை வாசக இலக்காகக் கொண்ட எழுத்து என்று தேசிய கோணத்தில் இத்தொகுதியை ஒருவர் விமர்சிக்கலாம். அப்படிச் செய்வதெனில் ‘The Wizard of the Crow‘ முதல் ‘தர்பாரி ராகம்‘ வரையிலான நாவல்களையும் இதே கோணத்திலிருந்தே எளிதில் புறந்தள்ள முடியும். தொகுப்பின் களத்தில் வாழ்ந்தவர் ஒருவரே, அவரும் கூட தன் அனுபவங்களுக்கேற்ப மட்டுமே இந்தக் களத்தை பற்றி கூற முடியும் என்ற நிலையில் அத்தகைய விமர்சனத்தை இத்தொகுதி குறித்து அவசர கதியில் முன்வைக்க முகாந்திரம் இல்லை.

ஜனநாயக நடைமுறையற்ற அதிகார துஷ்பிரயோகத்தை, அதன்கீழ் மக்கள் நசுக்கப்படுவதை முகத்திலறையும் விதமாக நேரடியாகவோ அல்லது பகடியில் பொதிந்து வைத்தோ இந்தக் கதைகள் பேசுவதில்லை. “Everything shimmered like mirages in an omnipotent heat” என்று ஒக்ரி விவரிப்பதற்கேற்ப, எங்கும்/ எப்போதும் நிறைந்திருக்கும் வெப்பம், அவ்வெப்பத்தினூடாக அன்றாட வாழ்வை கடத்த முயலும் மக்கள் திரள், அத்திரளின் மூச்சடைக்க வைக்கும் வியர்வை வீச்சம், இவையனைத்தையும் மட்டுப்படுத்த முயன்று அதில் பரிதாபமாக தோற்கும் மின்விசிறிகள் என்ற மெய்ம்மையுடன் புற உலகு உருவாக்கும் நெருக்கடி இட்டுச் செல்லும் சுய அழிப்பு பாதையின் – பாத்திரங்களின் அகக் கொந்தளிப்புக்கான குறியீடாக உள்ள – கானல் நீராக தோற்றமளிக்கும், மீன் மழை பொழிதல், நீர் பெருக்கெடுத்துச் செல்லும் சாக்கடைகளில் மிதந்து வரும் குழந்தைகளின் உடல்கள், மூன்று தலை மனிதர்கள், என்ற இணை உலகை முயங்கச் செய்கிறார். இத்தகைய மிக விரிவான காட்சிப் படிமங்களை ஒக்ரி உருவாக்குவது அவர் எழுத்தின் வெற்றி என்றாலும், அவற்றுள் அவர் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் கடந்து சென்று, அவனைச் சலனப்படுத்தும் காட்சி பிம்பங்களாக மட்டுமே இக்கதைகள் தங்கிவிட வாய்ப்புள்ளது.

Stars of the New Curfew‘ கதையில் இதை விரிவாக பார்க்கலாம். இதன் கதைசொல்லி, முறையாக பரிசோதனை செய்யப்படாமல் சந்தைப்படுத்தப்படும் மருந்துகளின் விற்பனையாளராக உள்ளார். இம்மருந்துகளால் பல மோசமான பக்க விளைவுகள் உருவாகின்றன (குடல் புழுக்களை அழிக்க அளிக்கப்படும் மருந்து குடலையே வெளியேற்றும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக உள்ளது). கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி மருந்து விற்கும் பேருந்துகளில் உள்ள கூட்ட நெரிசல், விற்பனை செய்ய அவர் செய்யும் கோமாளி சேஷ்டைகள், அவர் முதலாளியின் விசித்திர நடவடிக்கைகள் (விற்பனைக்குச் செல்லும் முன் அனைத்து விற்பனையாளர்களுக்கும் வலுக்கட்டாயமாக அவர்கள் விற்பனை செய்யும் மருந்தையே புகட்டுவது) என அவல நகைச்சுவையோடு நகரும் கதை, கதைசொல்லி தான் விற்பனை செய்யும் மருந்துகளால் பலர் பாதிக்கப்படுவது குறித்த கனவுகளால் (முதலாளி இவர் உடலின் பாகங்களை ஏலம் விடுகிறார்) உறங்க முடியாத அளவிற்கு அல்லலுறுவது என வேறு தடத்திற்கு மாறுகிறது. பிறகு ஒரு நிகழ்வின் பாதிப்பிலிருந்து தப்பிக்க தான் பிறந்து வளர்ந்த நகருக்குச் செல்லும் அவர், தன் பால்ய கால நண்பர்களை சந்திக்கிறார். இரு பெரும்புள்ளிகளின் போட்டிக்களமாக உள்ள அவர் நகரில், மாந்த்ரீகம், அதைச் சார்ந்த சடங்குகளின் பின்னணியில் இன்னொரு யுத்தமாக ஒரு விழா நடக்கிறது. அதில் அவர் காணும் காட்சிகள் அவரைத் துரத்த திரும்பி வந்து மீண்டும் அதே மருந்து விற்பனை வேலையில் சேர்கிறார்.

யதார்த்தமும், அதிகற்பனையும் மாறி மாறி வரும் இந்தக் கதையில் முதல் பதிவாக அதன் காட்சிப் பிம்பங்களே நிற்கின்றன. ஆனால் வேறு வேலை கிடைக்காததால்தான் இதில் சேர்ந்ததாகச் சொல்லும் கதைசொல்லி, “Everybody seemed to need a cure for something” என்றுரைக்கும்போது, அவரது இயலாமையை மட்டுமல்ல, சிகிச்சை மனிதர்களின் உடலுக்கும்/ உள்ளத்திற்கும் மட்டுமல்ல, அந்நாட்டிற்கே தேவை என்பதாக புரிந்து கொள்ளலாம்.

மீண்டும் வேலைக்குச் சேர்ந்தப் பின் அவரைத் துரத்திய துர்க்கனவுகள் நீங்குகின்றன. ஆனால் “I had begun to see our lives as a bit of a nightmare. I think I prefer my former condition,” என்று கதை முடியும்போது, தூக்கத்தைத் தொலைத்து, பயங்கர காட்சிகள் தோன்றும் கனவிலி வாழ்வைவிட அன்றாட வாழ்வு அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது என ஒருவர் சொல்லும்போது, அவ்வாழ்வை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்ள?

கனவிலி வாழ்வை மேம்பட்டது என இவர்கள் எண்ணினாலும், இவ்வுலகை கைவிடவும் இவர்கள் விரும்புவது இல்லை. அதனால் தான் வாழ்விற்கும்/ இறப்பிற்கும் இடையிலேயான காலகட்டத்தை ஆன்மாக்களின் உலகில் கழிக்கும் ”’Worlds that flourish‘ மற்றும் ‘What the Tapster saw‘ கதைகளின் கதைசொல்லிகள் மீண்டும் நம் உலகிற்கே திரும்புகிறார்கள். வாழ்வின் விழைவே இவர்களை தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்ப்பாடுகளைத் தாண்டிச் செல்ல உந்துகிறது. போலி மருந்து விற்பனை, ரத்த தானம், ஜேப்படி செய்வது என தார்மீக ரீதியில் இவர்கள் செய்வது சரி அல்ல என்று சொல்வதை விட, உண் அல்லது உண்ணப்படு என்ற விதியமைந்துள்ள உலகில் அவர்களின் தேர்வை இயல்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

நனவிலிக்கும் கனவிலிக்கும் இடையிலேயான நடனம் ‘When the lights return‘ என்ற கதையில் உச்சத்தை அடைகிறது. ஏட்டே (Edde) என்னும் இசைக் கலைஞன் தான் பிணக்கு கொண்டு கடிந்து கொண்ட, சில வாரங்களாக சென்று பார்க்காத தன் காதலியைப் பார்க்க நகரமெங்கும் மின்வெட்டு நேர்ந்துள்ள ஒரு பின்மாலை/ முன்னிரவு நேரத்தில் செல்கிறான். வாகனங்கள் கொஞ்சம் கூட நகர முடியாத போக்குவரத்து நெரிசலால், வீடுகளிலும்/ கடைகளும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகள்/ விளக்குகளின் ஒளியில் எங்கும் சூழ்ந்துள்ள புகை/ தூசியினூடே அவள் வீட்டிற்கு நடந்தே செல்கிறான். பெரும்பாலும் இருள் சூழ்ந்துள்ள அந்நேரத்தில் அவன் தன்னைச் சுற்றியுள்ளவற்றை பார்க்க ஆரம்பிக்கிறான் என்பது ஒரு நகைமுரண். குப்பைக்கூளத்தில் எறியப்பட்டிருக்கும் – திடீரென எழுந்து புரட்சி செய்யச் சொல்லும் – பிணம், பதாகை ஏந்திய தீர்க்கதரிசினி என அவன் காணும் காட்சிகள் அவன் மனத்தைக் குலைக்கின்றன. அதை கவனித்துக் கொண்டே இருப்பதில் இராணுவ வீரன் ஒருவனுடன் அவனுக்குப் பிணக்கு ஏற்படுகிறது. பின் அவன் எப்படியோ காதலி வீட்டை அடைய, கதை துன்ப முடிவு அடைகிறது. “It was as if a nameless instrument, whose terrible music is fashioned out of the extremes of human chaos, were being strained to cracking point,” என்று அவன் எண்ணுவது அவன் நடந்து செல்லும் வழியில் காணும் ஒழுங்கின்மையை மட்டுமல்ல, இத்தொகுப்பின் அடிநாதமாக உள்ள அந்நாட்டின் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ள பெரும் சீர்குலைவின் பிரதிபலிப்பாகும்.

‘In the Shadow of War’ கதையில் ஒமொவோ (Omovo) என்ற சிறுவன் தன் கிராமத்தில் ஒரு பெண் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள காட்டிற்குள் செல்வதைக் கவனிக்கிறான். புரட்சியாளர்களுக்கு உதவி செய்பவரான அப்பெண்ணை ஒரு நாள் அவன் தொடர்ந்து செல்ல, அவள் இராணுவ வீரர்களால் கொல்லப்படுவதைப் பார்த்து பயந்து ஓடும் போது தடுமாறி விழுந்து மயங்கி விடுகிறான். மீண்டும் சுய நினைவு வந்து அலறும்போது அவன் வீட்டில் இருக்கிறான். அவன் அறைக்கு வரும் தந்தையுடன் அந்த இராணுவ வீரர்களைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல முயல, அவன் தந்தை இவர்கள் தான் உன்னைக் காப்பாற்றினார்கள் என்று சொல்கிறார். ஒமொவோ தான் கண்டதைச் சொல்ல ஆரம்பிக்க, அவ்வீரர்களை நோக்கி மன்னிப்புக் கோரும் சிரிப்பை உதிர்த்தவாறு அவனை படுக்கை அறைக்கு தூக்கிச் செல்கிறார் அவன் தந்தை. கதை இங்கு முடிகிறது. மகனைக் காக்க வேண்டும் என்ற அத்தந்தையின் நோக்கம் நமக்குப் புரிகிறது. அவன் கண்டது ஒரு கனவு என்றோ அவன் கண்டதை தவறாகப் புரிந்து கொண்டான் என்றோ அவனை அவர் சமாதானப்படுத்தக்கூடும். ஆனால் அதனால் சாதகமான விளைவு ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவே. ஒமொவோவின் அக/புற விழிகள் திறக்கப்பட்டு விட்டன. அவற்றின் பார்வையில் செழித்து வளரப்போகும் உலகங்களுக்கான (‘Worlds that flourish‘) அடித்தளம் அவன் அகத்தில் போடப்பட்டு விட்டது. இன்னும் சில காலத்திற்குள், இத்தொகுப்பின் மற்றப் பாத்திரங்களைப் போல, அப் புற/அக உலகங்கள் உருவாக்கும் நெருக்கடிகளை அவனும் தன் வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டிருப்பான்.

பெரும்பாலும் குறுங்கவிதைகள், பேயோன்- ஒரு பார்வை

பீட்டர் பொங்கல்

கவிதை எழுதுவதை ‘thought crime’ ஆக குற்றவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லி, கவி பாடுவதை ஒரு குற்றச் செயலாகப் பேசுகிறது “பெரும்பாலும் குறுங்கவிதைகள்” தொகுப்பின் முன்னுரை. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஏறத்தாழ எல்லாரும் கவிதை எழுதுவதாக இதில் குறிப்பிடப்பட்டிருப்பதால், பேயோன் ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குற்றவாளிமயமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், “கவிதை ஓர் ஆயுதமாகக் கருதப்படாதிருக்க, சட்டபூர்வமான நடவடிக்கையாக மிஞ்சியிருக்க அதன் நிவாரண குணமே காரணம்,” என்றும் அவர் கூறிவிடுவதால் அதை ஆக்கப்பூர்வமான ஒரு சமூக பணியாகவே அவர் நம்புவதாகத் தெரிகிறது. “இதனால்தான் எல்லோரும் கவிதை எழுத வேண்டும்,” என்று அழைப்பும் விடுக்கிறார் அவர். இது தவிர, தானும் கவிதை எழுதுவதாகவும், இனியும் எழுதப் போவதாகவும் ஒப்புக் கொண்டிருப்பதால் கவிஞர்கள் விஷயத்தில் பிளாட்டோனிய கண்டனத்தைவிட, மனசாட்சி இன்னும் முளைவிடாத சிறுபிள்ளைச் சேட்டைகளை அதன் விபரீத பின்விளைவுகளைப் பொருட்படுத்தாது அங்கீகரிக்கும் சலுகை மனப்பான்மைதான் அவரிடம் வெளிப்படுகிறது. (இதே முன்னுரையில், லோகியா ஸார் பற்றி அவர் அளித்திருக்கும் பெருவிரல் சித்திரம் சுவாரசியமானது).

இனி கவிதைகள்.

குவியல்‘ அன்னியப்படுதலைப் பேசும் கவிதை. மனிதன் சமூக அங்கமாக இருக்கும்போதே அதில் தனியனாகவும் இருந்துகொண்டிருக்கும்போது அவனது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள ஏதோ ஒரு விபத்தின் காரணமாக அவன் அன்னியப்படுத்தப்பட்டு தன்னைத் தனியனாக உணர்வதை நினைவுபடுத்தும் கவிதை. இந்தக் கவிதை நம் எல்லோரிடமும் பேசுகிறது. இதனோடு ஒப்பு நோக்கப்பட வேண்டிய  கவிதை, “தனியன்“. துக்கத்தில் கண்கள் கலங்குகின்றன, கோபத்தில் நாசி விடைக்கிறது, பீதியில் வயிறு கலங்குகிறது (சிலருக்கு விரைகள் சுருங்குகின்றன என்கிறார்கள்)- இதயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்படி என் உணர்வுகளில் பங்கேற்கும் பல அங்கங்கள் என்னுள் இருந்தாலும் நானொரு தனியன்தானே, என்ற கேள்விக்கும், இவை எல்லாம் என்னை ஏன் ஒரு கூட்டுத்தொகையாய் உருவகப்படுத்தாமல் தனியனாய் கட்டமைக்கின்றன, என்ற கேள்விக்கும் இக்கவிதை இடம் தருகிறது. இவை இரண்டும் சிந்தனைக் கவிதைகள்.

சுகம்‘ என்ற கவிதை தம்பதியரிடையே நிகழும் சம்பாஷணைகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் வழக்கை நினைவுபடுத்தினாலும், அது அப்படியில்லை. வன்முறையின் வெறுமையை என்று சொல்ல முடியாவிட்டாலும், வலிமையான எதிர்வினைகளின் பிரயோசனமின்மையைப் பேசுகிறது. முள்ளம்பன்றிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு, நம் முட்கள் நம்மையும் குத்துகின்றன என்பதுதான்.

பொதுவாக பேயோன் எழுத்து வெறும் வார்த்தை விளையாட்டு என்பதாக ஒரு விமரிசனம் உண்டு. இதை ஏற்றுக் கொண்டாலும், இதில் பொருள் விளங்கும் நாட்டமும் இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறேன். சொற்கள் ஏதோவொரு பொருளில் குறிகள் என்று சொன்னால், அதன் குழப்பங்கள் சொற்களின் இயல்பு, பொருளின் இயல்பு என்று போய் நம் அனுபவத்தின் இயல்பையே கட்டம் கட்டுகின்றன என்பதை எப்படி என்று ஆய்வதில் பேயோனுக்கு அசாதாரண ஆர்வம் உண்டு. ‘பேசும் பலகை‘ அப்படிப்பட்ட கவிதை. இந்தக் கவிதையைப் படிக்கும் எவரும் “பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற பலகையை, பேயோன் போல் முத்தம் கொடுக்க முன்வராவிட்டாலும், கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட முடியாது. நம் நகர்ப்புற வாழ்வில் எத்தனை அவசரம் இருந்தாலும் ஒரு கணம் நிதானித்து நாம் இனி பூக்களைப் பார்த்துதான் ஆக வேண்டும். இது பூக்களுக்காகப் பேசும் கவிதை.

பேயோனின் வார்த்தை விளையாட்டில் பொருள் விளங்கும் நாட்டமும், அதாவது குறி- குறிக்கப்படுவது- குறியியக்கம் குறித்த ஆர்வமும், இருக்கிறது என்று முன்னொரு பத்தியில் எழுதியிருந்தேன். “நீர்” என்ற கவிதையில் அதைப் பார்க்கலாம். நீர் என்ன, பிரதிபலிப்பு என்ன, என்று நம்மைக் கேட்டுக் கொள்ளச் செய்யும் இந்தக் கவிதை, மொழியால் கட்டமைக்கப்படும் வாழ்வனுபவத்தை இலக்கண மோபியஸ் ஸ்ட்ரிப்புக்குள் போட்டுப் பார்க்கிறது. சொற்களின் பொருளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதானால், பேயோனின் எழுத்தில் பெரும்பான்மையானவை அவரது ஆன்டாலஜிக்கல் மற்றும் எபிஸ்டமாலஜிக்கல் அக்கறைகளை வெளிப்படுத்துகின்றன என்று சொல்லலாம். தத்துவ நாட்டம் கொண்டவர்களுக்கான கவிதை இது.

உதிர்தல்‘ என்ற கவிதையும் அதைத் தொடரும் சில கவிதைகளும் ஜென் போல் ஒலிக்கின்றன- அதாவது, புரிந்து கொள்ள முயற்சி எதுவும் செய்ய வேண்டாம், கற்பனை செய்யக்கூட முயற்சிக்க வேண்டாம், படித்த கையோடு அப்படியே உட்கார்ந்திருந்தால் போதும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளும் கவிதை. ஆன்மீக வறட்சியை உணரும் கணங்களில் தாராளமாய் இந்தக் கவிதையில் கால் நனைக்கலாம். இதன் அவல அழகியலையே. “வேர்” என்ற கவிதையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு கவிதைகளும் அழகுக் கண் கொண்டு மரணத்துக்கு பழிப்பு காட்டுகின்றன என்று சொல்லலாம்.

பொதுவாகவே துயரை மட்டுமல்ல, அசௌகரிய உணர்வுகளையும் சிரிப்பால் கடப்பது பேயோனுக்குக் கை வந்த கலை. “விரைதல்” என்ற கவிதை நம் கண் முன் எழுப்பும் சித்திரம் உரக்கச் சிரிக்க வைப்பது. ஆனால் இதை மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் அவர் எழுதியிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் நம் மனதில் மூலையில் எழுகிறது. “தரையில் பாவாத கால்கள்” என்று கைகளைச் சொல்வது அசாத்திய கற்பனை. கால்களால் நடந்த முதல் குரங்கு இப்படிதான் விரைந்திருக்க வேண்டும். இந்தக் கவிதையைப் பார்க்கும்போது விரைதல் மட்டுமல்ல, பறத்தலும் நம் உணர்வாகிறது. இது போன்ற கவிதைகள்தான் பேயோனின் ஜீனியசுக்கு கட்டியம் கூறுகின்றன.

மழை பெய்து குட்டை குட்டையாய் தண்ணீர் தேங்கியிருக்கும் சாலையில் இரவுப் பொழுதின் குளிரில் ஒரே ஒரு தெரு நாய் ஓடுகிறது – “நிலையாப் பிராண்டல்களை மழைக்குட்டைகளில் பதித்து” (மழைக்குட்டை). நிலையாப் பிறாண்டல்கள், எலும்பும் தோலுமாய் ஒரே ஒரு தெரு நாய், அனாமத்து ஒளிகள், புழுதியாய்ப் படரும் குளிர்க்காற்று, அரைகுறை நிலவு- நகரப்புரச் சூழலில் இப்படியொரு இருண்மை நிறைந்த காத்திக் காட்சியை, ஊதினால் பறந்து விடுவது போன்ற எடையற்ற சொற்களில் எழுத பேயோனைத் தவிர யாரால் முடியும்? இந்த ஊரில் வெட்டிப் போட்டாலும் கேட்க ஆளிருக்காது என்பது உறுதி.

இன்றைக்குக் காலையில்‘ என்ற கவிதை கணப்பொழுது கவிஞர்களின் உதவியில்லாமலேயே நிரந்தரமாகி விடுவதைப் பேசுகிறது. வழக்கமாக, “இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட நன்றாக இருந்த மனிதர்…” என்று யாராவது பேச வந்தால், “அச்சச்சோ ஐயோ பாவம், எப்ப எடுக்கறாங்க?” என்று கேட்கத் தயாராகி விடுகிறோம். ஆனால் பேயோன் அத்தகைய வம்புப் பேச்சுகளுக்குத் தீனி போடத் தயாராக இல்லை. இந்தக் கவிதையில் அவர் ஒரு ஜென் பாய்ச்சலில் நம் மனதை உறையச் செய்கிறார். அப்போது நன்றாக இருந்தவர் இப்போதும் நன்றாகத்தானே இருக்க வேண்டும்? அப்போதும் இப்போதாவதில் உள்ளது சூக்குமம். இதுவும் ஆன்மீக அன்பர்களுக்கான கவிதை.

Busonகு” என்ற கவிதையும் தலைப்பு மற்றும் புதிர்த்தன்மை காரணமாக இவ்வகைப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஆனால், இதே ஜென் பாவனையில் “போதும்” என்ற கவிதையைப் பேசலாம். தன்னை ஒரு ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் மகத்தானவற்றை நோக்கி பொடிநடையாய்ப் போய்க் கொண்டிருக்கையில் (“தினமும் கொஞ்சம் செஞ்சா 24*7*365 கணக்கு போட்டுப் பாருங்க, எவ்வளவோ சாதிக்கலாம் ஸார்!”) துறவு மனப்பான்மையை நினைவூட்டுகிறது இந்தக் கவிதை. அருவி, “ராட்சத நீர்த்துளி மூட்டம்” காட்டுகிறது என்ற கவித்துவம் பேயோன் கவிதைகளில் காணக் கிடைக்காத ஒன்று. அதனாலேயே இந்தக் கவிதை அவர் எழுதியவற்றில் அபூர்வமானதும்கூட.

பேயோன் அழகனுபவம் பேசும் கவிதைகளும் எழுதுகிறார் (“கூடத்துக் குருவிகளே“). பேயோன் பகடி செய்பவர் என்ற பிம்பத்தோடு இந்தக் கவிதையை வாசிப்பவர்களைத் தவிர பிறர், இது மனம் மேற்கொள்ளும் பாவனைகளை ரசிக்கிறது என்பதைக் கண்டு கொள்வார்கள். பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானியக் கவிஞர்களுக்காகப் பேசும் கவிதை. நாம் அந்த ஃபிரேமுக்குள் போய்தான் இதை ரசிக்க முடியும். இந்த வகையில்தான் “ஒப்பீடு” என்ற கவிதையும் சேர்கிறது. “கோடை நிலவை எதனுடன் ஒப்பிட?” என்ற கேள்வி தெளிவாகவே ஜப்பானிய ஹைக்கூகளை எதிரொலிக்கிறது. என்றாலும், “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்ற எதிர்க்கேள்வி நிலவொளியின் உன்மத்தங்களை மிகத் தெளிவாகவே நினைவூட்டுகிறது. “விளையாட்டு” என்ற அழகிய கவிதையோ ஒரு கன்றுக்குட்டி குதூகலமாய் இங்குமங்கும் ஓடுவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டும்போதே “சாலையின் பரபரப்பு லட்சியமில்லை” என்று துணுக்குறச் செய்கிறது. துணுக்குறச் செய்தல் மீயதார்த்த உத்திகளில் ஒன்று எனில், அதன் மிகைகளைத் தவிர்ப்பதில் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார் பேயோன். “நிலப்பரப்பு” என்ற கவிதையெல்லாம் சான்சே இல்லை (“ஆட்டோ எவ்வளவு கேட்பான்?“). பேயோன் மட்டும் பிரஞ்சுக்காரராக இருந்திருந்தால் நாலு புத்தக அளவு விமரிசனக் கட்டுரைகள் கிடைத்திருக்கும்.

காதல் கவிதைகளின் பிரகடனப்படுத்தப்படாத எதிரி பேயோன் என்பதால் காதல் கவிதைகளில் அவர் பிரமாதமாக அதிர வைக்கிறார். ‘மலர்ப்பாதை‘ இதற்கு நல்ல உதாரணம். நியாயமாகப் பார்த்தால் காதலியைப் பார்த்துப் பாடப்பட்டிருக்க வேண்டிய கவிதை, கடைசி வரியில் பிணத்தைப் பார்த்துப் பாடியதாக மாறி விடுகிறது. இப்போதும்கூட ஒன்றும் கெட்டு விடவில்லை, காதலர்கள் கடைசி வரியை மட்டும் எடிட் செய்து தங்கள் நல்நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யலாம். “கடத்தல்” என்ற கவிதையும் காதலர்களுக்காக எழுதப்பட்டது, பாடை வரும் வரிகளை நீக்கிப் பயன்படுத்துவது நல்லது (“இந்தப் பாடையைப் போல்/ என்னைச் சுமந்து செல்லேன்“). காதலையும் மரணத்தையும் பேயோன் ஒருசேர தொடர்புறுத்துவது ஃபிராய்டியர்களின் கவனத்துக்குரியது, எனவே அவர்களுக்கும் பேயோன் கவிதைகளைப் பரிந்துரைக்கிறேன்.

பேயோனின் அழகனுபவ கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பெரும்பாலும் நினைவுபடுத்துகின்றன. எனவே, இது ஜென் கவிதை மாதிரி, இது அழகனுபவ கவிதை மாதிரி என்று வகைப்படுத்துவது ஒரு வசதிக்குத்தான். அழகு என்றாலே நிலவுதானே, அதனால்தான், “விடாமல் பெய்த இரவு மழையால் நிலவைப் பார்த்து நாளாயிற்று,” என்று வருந்துகிறார் பேயோன் (“கணக்கு“). அப்புறம், “இருந்தாலும் நஷ்டமில்லை,” என்று உடனே விஷயத்தை முடிவுக்கும் கொண்டு வந்து விடுகிறார். சாதாரண விஷயம் மாதிரிதான் இருக்கிறது. டூரிஸ்டு கைடுகளில் டிக் அடித்துக் கொண்டே பார்க்க வேண்டிய இடம் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்லும் கூட்டங்களைப் பற்றி கதைகளில் படித்திருப்போம், நிலவை ரசிப்பது அப்படியெல்லாம் கணக்கு பண்ணக்கூடிய சம்பிரதாய அனுபவமல்லவே. இந்தக் கவிதை, நிலவைப் பார்க்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்று மட்டும் சொல்லவில்லை, என்ன எழவுக்கு இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்கிறாய், என்றும் கேட்கிறது.

ஜென் மனநிலைகளைப் பேசுவதால் பேயோனை ஒரு ஜென் கவிஞர் என்று நம்பிவிட முடியாது. பேயோனும் நம்மைப் போல்தான் என்பதை “எத்தனை” என்ற கவிதையில் காணலாம். எவ்வளவு சீக்கிரம் லோகக்ஷேமம் குறித்த கவலைகள் லோகாயத படுகுழியில் வீழ்ந்துபடுகின்றன என்பதைச் சித்தரிக்கும் கவிதை இது. பொதுவாக, பேயோன் அறச்சாயங்கள் பூசிக் கொள்வதில்லை, அப்படியே விளையாட்டாய் பூசிக் கொண்டாலும் அவை உடனடியாகக் கரைந்து விடுகின்றன என்பது ஆறுதல். ஹவுசிங் லோன் போட்டு வீடு வாங்கியவர்கள் இந்தக் கவிதையைப் படிக்கலாம்.

ஒரு ரோஜா ஒரு ரோஜா ஒரு ரோஜா” (A rose is a rose is a rose) என்று ஜெர்ட்ரூட் ஸ்டீன் கூறியது உலகப் பிரசித்தம். ரோஜா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணை ரோஜா என்று அழைக்கும்போது ரோஜாவை ரோஜா என்று அழைக்கிறோம். அதனால் ரோஜா ஒரு ரோஜா. ரோஜா ஒரு ரோஜா என்று சொல்லும்போது ரோஜாவைப் பேசுகிறோம், எனவே ரோஜா ஒரு ரோஜா என்பதும் ரோஜாதான், என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைப் படைக்கும்போது அது படைப்பாகிறது. அதற்கடுத்த நிலையில், ஒரு படைப்பைப் படைப்பு என்று சுட்டும்போது, அந்தச் சுட்டுதலே ஒரு படைப்பாகிறது. மேற்கண்ட வாக்கியத்தை ஸ்டீன் எழுதியதே “Composition as Explanation” கட்டுரையில்தான் என்பதால் இதை எல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலையாக தயவு செய்து நினைக்க வேண்டாம். ஸ்டீனுக்கான எதிர்வினையை பேயோன் எவ்வளவு அழகாக நிகழ்த்துகிறார் பாருங்கள்-

ரோஜாக்கள்

ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ

என்று எழுதுகிறார் அவர். வார்த்தை விளையாட்டு மாதிரிதான் தெரிகிறது, ஆனால் சொற்கள் பொருள் கொள்ளும் திறனைச் சோதித்துப் பார்க்கிறார். ஸ்டீன் எழுதுவதோடெல்லாம் ஒப்பிடுவதா என்றால் பேயோனை அந்த ரேஞ்சில்தான் பேச வேண்டும். அதற்கு முன்னால் அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும், தமிழர்களும் பேயோனையும் ஸ்டீன்களையும் இன்னும் கவனமாக வாசிக்க வேண்டும்.

ஆனால் பேயோனிடமும் குறைகள் இருப்பதை இதே மூச்சில் சொல்லி விடுகிறேன்- “அதுதானோ?” என்ற கவிதை எபிஸ்டமிக் நாட்டம் கொண்டவர்களை சந்தோஷப்படுத்தலாம். மற்றபடி இது பேயோனின் மறக்கப்படக்கூடிய கவிதைகளில் ஒன்று என்று நினைக்கிறேன் (காலம் வளர்கிறது, உருவம் சிதைகிறது என்ற வாசிப்புக்கு “வளர்சிதை மாற்றம்” என்ற பயன்பாடு இடம் கொடுக்கிறது. ஆனால் கவிதைக்கு புத்திசாலித்தனம் போதுமா, அதைவிட முக்கியமாக, தேவைதானா?). பேயோனின் எபிஸ்டமிக் நாட்டத்துக்கு இது என்றால், ‘போக்குவரத்து‘ அவரது ஆன்டாலஜிக் தேடலின் பிரதிநிதியாகிறது. “சுற்றி என்னென்னவோ நடக்கிறது மூச்சு மட்டும் அது பாட்டுக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறது” என்பதுதான் கவிதை. இந்த விஷயத்தில் என்னதான் நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக இருந்தாலும், “எதிர்காலம் கேள்விக்குறி” என்ற கவிதையும் ஆன்டாலஜிக்தான் (“என் வீடெங்கே?/ நேற்றும் இன்றும் பார்த்த நாங்கள்/ நாளைக்கும் இருப்போமா?“)

பேயோனிடம் நமக்குப் பிடிக்காத முகம் ஒன்று இருக்கிறது – அவ்வப்போது வெளிப்படும் இந்த முகம் மனிதர்களைக் காணச் சகியாமல் முகம் திருப்பிக் கொள்கிறது. ஆங்கிலத்தில் மிசாந்திரோப்புகள் என்று இவர்களைச் சொல்வார்கள். பேயோனும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்க முடியும் என்பதை, “இவ்வுலகு” என்ற கவிதை நினைவூட்டுகிறது, பேயோன் விஷயத்தில் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.. இதே மிசாந்திரோப்பிக் கவிதை வரிசையில்தான் அடுத்து வரும் “அதிகாலைகள்” என்ற கவிதையையும் தொகுக்க வேண்டும்- “அதிகாலைகள் அழகாய் இருக்கக் காரணம் மனிதர்கள் அதிகம் கண்ணில் படாமை” என்ற நேரடி அறிவிப்பு இது. நண்பர் ஒருவர் எதைக் காட்டினாலும், “இது எப்படி கவிதையாகிறது?”, என்று கேட்பது நினைவுக்கு வருகிறது. இதே செய்தி, “விஷயம்” என்ற கவிதையில் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு தேர்ந்த அங்கதத்தை நாம் பார்க்கிறோம் (“பாவம், சாருக்கு விஷயமே தெரியாது“) புத்தாண்டு வாழ்த்துகளுக்கு எதிரான “வாழ்த்து” என்ற கவிதை அப்பட்டமான, வெட்கமேயில்லாத மிசாந்திரோப்பி.

பேயோனின் மிசாந்திரோப்பிக் இம்பல்சுகளுக்கான அரங்காக அவரது சமூக நலக் கவிதைகள் இருக்கின்றன. தெருவின் ஒரு கோடியில் இருக்கும் பேயோனுக்கு மறு கோடியில் நிற்பவன் மீது என்ன புகார் இருந்து விட முடியும்? இருந்தாலும், “தெருக்கோடிக்காரனின் பீடிப்புகை இக்கோடியில் சூழ்கிறது என்னை” என்று குற்றம் சாட்டுகிறார் அவர் (“போல“). சக மனிதன் புகைத்து மறு சுழற்சிக்கு விடும் சிகரெட் பீடிப்புகை இரண்டாம் நிலை புற்று நோய்க்கு வித்திடும் அபாயம் உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், “ஒளியாண்டுகளுக்கு முன்பு மரித்த/ நட்சத்திரங்களின் வெளிச்சம் போல” என்று பாரனாய்ட் லெவலில் இது குறித்து கவலைப்படுகிறார் அவர். “முழம் பத்து ரூபாய் கிடைப்பதோ இத்தனூண்டு” என்று தன் காதலி அல்லது மனைவியின் கூந்தலில் மல்லிகை மலர்களைச் சூட்ட முடியவில்லையே என்று அதன் (கூந்தலின்) அளவு குறித்து கவலைப்படுகிறார் (“முழம்“). இதில் மிக நுட்பமாக தன் காதலி/ மனைவியை விமரிசித்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவரை மிசொஜினிஸ்டிக் என்றும்கூட அடையாளப்படுத்தலாம் (கல்லெறிபவர்களுக்கு வசதியாக). ஆனாலும் பேயோன் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. “மழை இரவு” அதன் அழகிய வர்ணனைகள் மற்றும் இறுதி துணுக்குறல் (“குடிபோதையின் பெருங்குரலில்/ பாலும் பழமும் பாடுகிறான்/ ஒரு லூசுக்கூ“) என்று எங்கும் மிசாந்திரோப்பி விரவியிருந்தாலும் நம்மில் ஒரு வன்மையான எதிரொலியை எழுப்பி தன்னை ஓர் உயர்ந்த கவிதையாக நிறுவிக் கொள்கிறது.

இனி உதிரிக் கவிதைகள்.

இவை தவிர உதிரியாக இரு கவிதைகளில் ஆளில்லாக் கிழவன் வருகிறான். ஒன்றில் “இரவின் வாராவதி மேல்” காத்திருக்கிறான் (‘நினைவாக’), இன்னொன்றில், “வரப்பிடை ஒற்றையடிப் பாதையில்” நடந்து சென்று கொண்டிருக்கிறான் (“கடைசி ஒளி“). இரண்டு கவிதைகளும் எனக்குப் புரியவில்லை, சமகால இலக்கிய கவிதையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இது குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது.. “விபத்துகள்” என்ற தொகுப்பிலேயே நீண்ட கவிதையும் எழுதி பார்த்த கவிதை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சிலருக்கு அதில் ஒரு தனி வசீகரம் இருக்கலாம். கவிதையாகக் குறை சொல்ல முடியாது, ஆனால் பேயோன் கவிதையாக முத்திரை குத்த முடியுமா என்பது தெரியவில்லை. “தேநீர் எறும்பு” மற்றுமொரு உதிரிக் கவிதை. இது எறும்பு விழுந்த தேநீரில் கைபடாமல் எறும்பு நீக்கி அருந்தும் சாகசத்தை விவரிக்கிறது (“கண்ணாடிச் சுவரில்/ சமைந்து நிற்கிறது எறும்பு“- சப்பாடாகியிருக்க வேண்டும் போல). “கனல் தாரகை மதியத்திலே” எழுதிப் பார்த்த கவிதையாய் இருந்திருக்க வேண்டும் (“ஜன்னலடியான் என் மீதுன் பார்வை படுமோடி?”) அது போலவே “ஈக்களைப் பற்றி ஒரு/இரு கவிதை(கள்)” மற்றுமொரு சோதனை முயற்சி, இன்னும் தொடர்ந்திருக்கலாம், என்ன ஒன்று, தலைப்பைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருந்திருக்கும்.

பேயோன் கவிதைகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு ஒரே மூச்சில் வாசிப்பதில் தோன்றும் உணர்வை ஒற்றை வரியில் தொகுத்துச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்- பேயோனின் எழுத்தில் பொறி தெறிக்க உரசிக் கொள்ளும் மொழி, நம் நகைப்புக்குரிய நிழலிருப்பை, சொற்களும் கருத்துவாக்கங்களும் போர்த்து மறைக்கும் அதன் இருண்ட வார்ப்புருக்களிலிருந்து கெல்லி கணப்பொழுது சுடரொளியில் வெளிச்சமிட்டு,  மௌனியின் புகழ்பெற்ற “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற கேள்வியை, “எவற்றின் நடமாடும் பகடிகள் நாம்?” என்று மாற்றிவிடுகிறது.

பெரும்பாலும் குறுங்கவிதைகள்- பேயோன்
மின்னூல், freetamilebooks.com 
விலையில்லாப் பதிப்பு