அசோகமித்திரன்

அசோகமித்திரனின், ‘மணல்’

 அஜய் ஆர்

ashokamitran

‘ஒரு காதல் கதை’ என்ற சிறுகதையில் ‘அம்மாக்களின் மனசு தான் எவ்வளவு ஆழம்’ என்று சங்கரன் யோசிக்கிறான். கணவனை இளம் வயதில் இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ள அசோகமித்திரன் புனைவுலகின் – வாசகன் அடிக்கடி சந்திக்கும் – அம்மாக்கள் அப்படித்தான் இருக்க முடியும். பல இடர்களுக்கிடையிலும் குடும்பம் குலையாமல் இருப்பதற்கான அச்சாணி அவர்களே.

‘மாறுதல்’ குறுநாவலில் கணவனின் மறைவுக்குப் பின், வேறு துணை இல்லாமல், மூத்த மகள் வீட்டில் வசிக்க வரும் ‘அம்மா’ , பள்ளி செல்லும் தனது இரண்டாவது பெண்ணால் மூத்த மகள் குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும் எனத் தோன்றியவுடனேயே, மீண்டும் தன் வீட்டிற்கே செல்லும் முடிவை எந்தத் தயக்கமும் இல்லாமல் எடுப்பது ஓர் உதாரணம். இந்த வழமையான சூழலை மாற்றி, மனைவி/அம்மா காலமானால், ஒரு குடும்பம் அதை எதிர்கொள்ள முடியாமல் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதைகிறது என்பதை ‘மணல்’ குறுநாவலில் காண்கிறோம்.

பி.யு.ஸி படித்துக்கொண்டிருக்கும், மருத்துவராகும் கனவில் இருக்கும் சரோஜினி கல்லூரியில் இருந்து திரும்பி வருவதில் இருந்து குறுநாவல் ஆரம்பித்து, வீட்டிற்கு வந்திருக்கும், அவளுடைய திருமணமான மூத்த சகோதரி, அவளுடன் இரண்டு முறை ‘வெறுமனே தானே வந்திருக்கே’ என்று – வேறெதையோ கேட்க எண்ணி – கேட்கும் சரோஜினியின் அண்ணன் மணி, அவனிடம் திரைப்படத்திற்கு அழைத்துப் போகுமாறு வனஜா கெஞ்சுவது என அன்றாடக் குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் விரிகிறது. அதே நேரம், மணி வனஜாவிடம் கேட்கும் கேள்விக்கு பின்னால் பொதிந்திருக்கும் உண்மையான – அவன் கேட்க விரும்பும் – கேள்வியும், திரைப்படத்திற்கு செல்ல வேண்டுமென்ற வனஜாவின் விழைவு அவள் கணவன் வீட்டின் நிலை குறித்து சுட்டுவதும் என அவற்றிற்கும் இன்னொரு அர்த்தம் தருகின்றன. பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் தான் எப்போதும் முற்றிலும் சுதந்திரமாக உணர்கிறார்களோ?

மணிக்காக பெண் பார்த்து விட்டு சென்ற வீட்டிலிருந்து அப்பெண்ணின் தாயார் வருகிறார். “நாங்க பத்து பவுனுக்கு மட்டுந்தானே நகை போடறோம்னு மனசிலே வைச்சுக்காதேங்கோ … பொண்ணு வேலைக்கு போறவ.. எல்லாமாச் சேந்து நூத்தி தொண்ணூறு வரது … அப்படியே எங்க கையிலே கொண்டு வந்து கொடுத்திட்டு அதிலேந்துதான் அப்புறம் அவள் செலவுக்கு வாங்கிப்பாள் ” என்று அவள் பேசிக்கொண்டே இருப்பதும் , சரோஜினியின் அம்மா பிடி கொடுக்காமல் பேசுவதும், வெறும் சித்தரிப்பு அல்ல. முடிந்த வரை தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், கெஞ்சாமல் அதே நேரம் அவர்கள் முடிவை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு தாயின் இயலாமையின் வெளிப்பாடு இந்த உரையாடல். எந்த பதிலும் கிடைக்காமல் அந்த அம்மாள் சென்று விட, மணி தன் அம்மாவிடம் இந்தப் பெண்ணிற்கு என்ன குறைச்சல் எனக் கேட்க “.. எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு இந்தாத்துக்கு சரிபட்டு வருவாள்னு தோணலை. அப்புறம் உன் இஷ்டம்” என்று கறாராக சொல்கிறார். உண்மையில் அவருக்கு அந்தப் பெண் குறித்து எதிர்மறையான அபிப்ராயம் உள்ளதா, இல்லை தன் மகன் அப்பெண் குறித்து சாதகமாக பேசுகிறான் என்பதால் இப்படி சொல்கிறாரா என்பது யோசிக்கத்தக்கது. இப்படி பதில் ஏதும் சொல்லாமல் பல பெண்களைப் பார்த்து விட்டு, ‘இன்னும் மனசுக்கு பிடிச்சது வந்தால் பாக்கறது’ என்று சொல்வதின் பின்னணியில் – ஆண் பிள்ளையைப் பெற்றவள் என்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பான – ஹோதா தெரிகிறது என்றால், ‘உங்க மனசுக்கு எதைப் பிடிக்கும், ஏன் இந்த பெண்ணுக்கு என்னவாம்’ என்று மணி சொல்லும் பதிலில், பெற்றோரை மீற முடியாத மணியின் இயலாமையும், அதை வேறு வகையில் கோபமாக வெளிக் கொணரும் குணமும் புலப்படுகிறது.

சரோஜினியின் அம்மாவின் எதிர்பாராத மரணம், குடும்பத்தின் சமநிலையை குலைத்து விடுகிறது. ‘அக்கறையின்மை’ (indifference) இந்தக் குடும்பத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகிறது. ‘அம்மா’ இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தவற்றை தொடர்ந்து செய்ய பெரியவர்கள் யாருக்கும் அக்கறையில்லை, அல்லது அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அம்மா இறந்தவுடன் காரியத்தின் போதே, மாலதியின் அக்கா இருவரும் நகை பற்றி பேசுகிறார்கள். பவானி அழுகுரலில் சொன்னாள் ‘வளைகாப்புக்கு கட்டாயம் ஒரு ஜோடி கரும்பு வளை பண்ணிப் போடறேன்னு அம்மா சொல்லிண்டிருந்தாள்’ ‘கரும்புக் கணு வளையா’ என்று வனஜா கேட்டாள். பவானி ஒரு விநாடி அசையாமல் இருந்தாள். பிறகு ‘ஆம்மாம், கரும்புக் கணு வளை’ என்றாள். அவள் அழவில்லை. ‘ஒரு விநாடி அசையாமல்’ இருந்து பிறகு அவள் பதில் சொல்வது, வாசகனுக்கு உணர்த்துவது என்னவாக இருக்கக்கூடும்? இவர்கள் யாரும் சுயநலமானவர் என கதையில் சுட்டப்படுவதில்லை, இயல்பான தன்னலம் பேணுபவர்களாகவே அவர்கள் வார்க்கப்பட்டிருக்கிறார்கள். அம்மா இறந்து காரியம் முடிந்தவுடனேயே வனஜா கிளம்பி விடுவது கணவன் மீதுள்ள அதீத பாசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அப்பு தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விடுகிறான். பெரிய நாடகீயத் தருணங்கள் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் மிக இயல்பான நடக்கின்றன.

சரோஜினியின் தந்தையோ, அன்றாட செயல்களில் கூட ஈடுபட முடியாதபடி முற்றிலும் செயலிழந்து விடுகிறார். சவரம் செய்யாத முகத்துடன் வலம் வரும் அவர், அனைத்திற்கும் சரோஜினியை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார். மணியின் திருமண பேச்சுக்கள் அனேகமாக நின்று விடுகின்றன. அவனும் எல்லாவற்றிற்கும் சரோஜினியை எதிர்பார்ப்பவனாக மாறி விடுகிறான். துக்கத்தினால் உண்டான செயலின்மை என்று இதைக் குறிப்பிட முடியும். அதே நேரம், சரோஜினியின் தோழி ரேணுகா ‘நீ வீட்டோடேயே இருந்திண்டு வேளா வேளைக்குச் சமைச்சுப் போட்டிண்டிருக்கயே’ ‘என மணியைப் பற்றி சொல்வதிலும் உண்மை உள்ளது. சரோஜினி போன்ற அனைத்தையும் ஏற்றுச் செய்பவளை உபயோகித்துக்கொள்ளும் தன்னலம் என்றும் இதைக் கூறலாம். ‘உங்க சின்ன அண்ணாவாவது எவளையோ கல்யாணம் பண்ணிண்டு எங்கேயோ இருக்கான். உன் பெரிய அண்ணாவுக்கு அதுக்குக்கூடத் தைரியம் இல்லை’ என்றும் மணி குறித்து ரேணுகா குறிப்பிடுகிறாள். கதையில் இரு முறை மட்டுமே வரும் ரேணுகா பேசும் இந்த ஒரு வரியை வைத்தே – எதிர்பார்ப்பும் மெல்லிய ஏமாற்றமும் தந்த, முளையிலேயே கருகிய – அதுவரை வாசகன் அறிந்திராத ஒரு உட்கதையை வாசகனுக்கு அ.மி சொல்லி விடுகிறார். மணி குறித்து முன்பே தெரிந்து வைத்திருக்கும் வாசகனுக்கு, ரேணுகாவின் ஏமாற்றம் ஆச்சரியம் அளிப்பதில்லை.

அனைவரை விடவும் மிக அதிகமாக பாதிக்கப்படுவது சரோஜினி தான். அவள் கனவுகள் அனைத்தும் கலைந்து போகின்றன. நல்ல மதிப்பெண் கிடைத்தும், அவள் படிப்பை நிறுத்த வேண்டியதாகிறது. குடும்பத்தில் அவள் அம்மாவின் இடத்திற்கு வருகிறாள் அல்லது அதை நோக்கி தள்ளப்படுகிறாள். இப்போது குடும்ப நிர்வாகம் முழுதும் அவளுடையது தான். தினசரி வேலைகளோடு, பிரசவத்திற்கு வரும் இரண்டாவது சகோதரியையும் அவள் தான் கவனித்துக் கொள்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பின் எதிரே வரும் ரேணுகாவை சந்திப்பதை சரோஜினி தவிர்க்க எண்ணுவதும், பிறகு அவளுடன் பேசுகையில் “செகண்ட் க்ரூப் எடுத்துக்கிறவா எல்லாருமே டாக்டராகப் போறோம்னுதான் முதல்லே நினைச்சுண்டிருப்பா” என்று சொல்வதில் தெரியும் நிராசையும், அப்படி எதுவும் இல்லை என தன்னையே ஏமாற்றிக்கொள்ள முயலும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் வாசகனை உடையச் செய்கிறது. இந்தச் சிறியப் பெண் மேல், அவள் வயதிற்கு மீறிய பாரத்தைச் சுமத்துவதைக் குறித்தோ , இவ்வளவு திடீர் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படக்கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தோ யாரும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. ரேணுகா மணி குறித்து சொல்வது சரோஜினியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும். இப்போது சமநிலை கொண்டவளாக சரோஜினி தோன்றினாலும், அவள் தன்னையறியாமலேயே பூசிக்கொண்டிருக்கும் ‘முதிர்ந்த பெண்’ என்ற அரிதாரம் எளிதில் கரையக் கூடும் என்ற அச்சம் வாசகனுள் ஏற்படுகிறது.

அவ்வச்சத்தை உண்மையாக்குவது போல் போட்டோ கடைக்காரன் ஒருவன், தன்னைச்
சந்திக்க பூங்காவிற்கு வருமாறு சரோஜினியிடம் சொல்கிறான். தன் முகத்தில் இன்னும் சிறிது உற்சாகம் இருந்திருந்தால் கூட அவன் அப்படி செய்திருக்க மாட்டன் என்று தான் சரோஜினிக்கு முதலில் தோன்றுகிறது. அவளுடைய களைத்துப் போன, சோர்வான தோற்றமே அவனுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறாள். குடும்பமே கதி என்று ஆன பிறகு, அவளுக்கு தன்னை கவனித்துக் கொள்ள எங்கே நேரம். வீட்டிற்கு திரும்பும் சரோஜினி வழக்கம் போல் அன்றாட வேலைகளைச் செய்கிறாள். ஆனால் எந்தக் காரணமும் இன்றி வீடு முழுவதையும் அவள் துப்புரவு செய்வது தன் எண்ணங்கள் அலைபாய்வதை தடுக்கவா என்றே அவள் செய்கைகளை வாசகன் கவனித்துக் கொண்டிருக்கிறான். கண்ணாடியில் காணும் முகத்தை ‘குழந்தை முகம்’ என இனி யாரும் சொல்ல முடியாது என அவள் நினைப்பது ஏன் என யூகிக்க முயல்கிறான். சரோஜினியிடம் தென்படும் அமைதிக்கு நேர்மாறாக, வாசகன் பதட்டத்தில் இருக்கிறான். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பும் அவள், தான் அவசரப்படவில்லை என்று சொல்லி கொண்டே நடந்து செல்ல பூங்காவை நெருங்கி விட்டதை உணர்கிறாள். கதை முடிகிறது.

சரோஜினி எந்த யோசனையும் இல்லாமல் தான் அங்கு வந்தடைந்தாளா அல்லது திட்டமிட்டேவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு சிறு பெண்ணிற்கு வயதுக்கு மீறிய பாரம் அழுத்தும்/ அழுத்தப்படும்போது ஏற்படக்கூடிய ஒரு கொதி நிலை (breaking point) அல்லது தன்னழிப்பு மனநிலை (self destructive streak) என்றெல்லாம் அவள் செயலைக் குறித்து பேசலாம். இந்த நொய்மையான தருணத்தை சரோஜினி எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்து விடுவாளா, அல்லது இது அவளது வாழ்வை திசை மாற்றி விடுமா என்று பதைக்கலாம். ஆனால் இவற்றினூடே, அவள் தாய் மட்டும் இருந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது என்ற எண்ணமும் மனதில் ஓடியபடியே இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தாலும் சரோஜினி மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கக்கூடும். ஆனால் சரோஜினியின் உளச் சிக்கலை கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டு, அதை திசை திருப்ப வேறேதேனும் வழியைக் கண்டு பிடித்திருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.

எழுத்தாளர்கள் புனைவில் செய்யும் தேர்வுகளின் பின்னணியும் வாசிப்பின் பாதைகளும்

அ. மி. தன் சிறுகதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில், ‘மணல்’ குறுநாவலை பூங்காவில் வைத்து எழுதியதாகவும் , கதையின் இப்போதைய முடிவின் இடத்திற்கு வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்ததால் அத்துடன் கதையை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது குறித்து ‘அறிவுக்கு பொருந்தாததாகத் தோன்றுகிறதே’ என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘எனக்கு இயற்கையின் யாப்பமைதி மீது நம்பிக்கை உண்டு. ….. நம் வாழ்க்கையில் ஏதாவதொரு நேரத்தில் நாம் புற உலகுடன் மிக உயர்ந்த, நுண்ணிய வகையில் ஒன்றுபட்டுவிடக்கூடும். அப்படி ஒன்றித்துப் போன காலத்தில் தான் ‘மணல்’ குறுநாவல் மழையால் மிக நேர்த்தியாக முடிவு பெற்றது என்று நான் நினைக்கிறேன்.’ என்று பதிலளிக்கிறார். எழுத்து தன்னிச்சையாக அடையும் ‘யாப்பமைதி’ பற்றிய இந்த பதிலை, வாசகர்கள் புனைவை, அது விட்டுச் செல்லும்/ செல்வதாக அவர்கள் நினைக்கும் இடைவெளிகளை புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சியோடும் இணைத்துப் பார்க்கலாம். ஒரு படைப்பைப் பற்றிய அதை எழுதியவரின் கோணத்தைத் தவிரவும் பல மாறுபட்ட -எழுத்தாளரே சென்றிடாத திசையில் பயணிக்கக் கூடிய – வாசிப்பு இருப்பது இயல்பே. ஆனால் ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் பின்னணி/பாத்திரங்களின் தேர்வுகள் குறித்து முழுதும் விளக்கி விட்டால், வாசிப்பில் வாசகனின் பங்கு என்ன? அதன் பின்பும் வாசகன் தன்னுடைய அழகியல் (aesthetic sensibility) சார்ந்து உருவாக்கும் கற்பனையின் ராஜபாட்டையில் பயணிக்க இயலுமா, அல்லது அவன் அவ்வெழுத்தாளர் வகுக்க நினைத்த பாதையில் செல்லவே உந்தப்படுவானா. தன் படைப்பைப் குறித்து ஒரு அளவுக்கு மேல் அதன் எழுத்தாளரை விளக்கச் சொல்லக் கூடாது என்பதன் காரணம் இது தானோ. ‘மணலின்’ முடிவு அமைந்த விதம் குறித்து நமக்குத் தெரிந்தப் பின், சரோஜினி தெரிந்தே பூங்காவை நோக்கிச் சென்றாளா, அல்லது தன்னிச்சையாக சென்றாளா, அடுத்த என்ன நிகழும் போன்ற கேள்விகளின் இடம் என்ன?

பின்குறிப்பு:
சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும்‘ கட்டுரையில் உள்ள, எழுத்தாளரின் நோக்கத்தை மீறும் வாசக மனப் பயணத்திற்கான இன்னொரு உதாரணம்.

…இங்கு எழுத்தாளரின் நோக்கம் (authorial intention) பற்றியும், அதை வாசகர் மீறிச் செல்லலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குச் சரியான பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நோக்கம் என்ன என்பதை ஒருவர் பிசிறில்லாமல் அறுதியிட்டுக் கூறுவது சாத்தியமா? இங்கு ஒரு பக்கவாட்டுப்பயணம். ‘It Happened in Boston?’ நாவலின் பின்னுரையில் அதன் ஆசிரியர் ரஸ்ஸல் க்ரீனன் (Russell H. Greenan) ஒரு வாசக எதிர்வினை குறித்துச் சொல்வதைப் பார்ப்போம்.

“One woman complimented me on how cleverly I worked the title into the narrative. She had the process backward, however. When I submitted the manuscript I called it Alfred Omega. My editor, Lee Wright, who strove mightily to promote the novel, felt the word “Boston” should be part of the title and suggested borrowing the sentence “Who would believe such things could happen in Boston?” from the text. But Bennet Cerf considered that too long, so we settled on It Happened in Boston?….”

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

ஒளிப்பட உதவி – நவீன விருட்சம்

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள்

 அஜய் ஆர்

 

ami

பிரபல வீணைக் கலைஞர் ‘ராமச்சந்திரன்’ பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா (‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’) கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு “எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதை, பக்தி எல்லாம் வேண்டாம்? குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது” என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா. இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை இந்திரா கூர்ந்து பார்க்க , தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தை, அதை புரிந்து கொள்ளாவிட்டாலும், நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது. தன் ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை, “அழுத மூஞ்சி சிரிக்குமாம், கழுதைப் பாலைக் குடிக்குமாம்” என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பது, திருவிழாவுக்கு போவது போல் கும்பலாக கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வது, அங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொல்வது, சற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது.

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன். சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம். முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர், வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய் என்றவுடன் ‘இருபது ரூபாயா’ என்று ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லி, பச்சை மிளகாய் வாங்க பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்ற, தொடர்ந்து அவர் உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பது, மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது. நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளே, தாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள்.

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும் கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில், இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார் அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திரா, அம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலா, அல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமா, எதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். (‘இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை’). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயல, அவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும், இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன், வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள், பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன், அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின் புனைவில் அதிகம் காண முடியாத, யதார்த்தத்தைக் கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்ப, அவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.

வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும். இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும், அதைத் தொடரும் பகற்கனவும் அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல் அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்ல, இந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது. அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை சுட்டும் சம்பவங்களை வைத்து, அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்த, அதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.

வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சங்கரன் குறித்த நினைவுகள் இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில் அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில், இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன.
வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்து? அவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு ‘சங்கரன்’ என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். ‘அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்’ என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் – யாருடனும் பகிர முடியாத – அந்தரங்க சோகம் தெரிகிறது.

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு அளிக்கும் ‘எல்லாம் தெரிந்த கதைசொல்லி’ என்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான்.

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் – இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு – தான் இணைய வேண்டும்.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

ஒளிப்பட உதவி – இட்லிவடை

அசோகமித்திரனின் ‘மாலதி’ – ஒரு குறிப்பு

 அஜய் ஆர்

ami

தான் பணிபுரியும் மருத்துவ மையத்தில் ஒரு மணி நேரத்திற்குள், அன்று அங்கு வந்துபோனவர்களைப் பற்றிய அட்டவணை பதிவு செய்தல், மாதா மாதம் வர வேண்டிய பணம் பற்றிய கணக்கு எழுதுதல், சிறப்பு மருத்துவர் ஒருவரை மையத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்தல், மையத்திலிருந்து நோய் குணமாகிச் செல்பவர்களுக்கான ரசீது தயார் செய்தல், பழுதடைந்திருக்கும் குழாயை சரி செய்வது போன்ற தொடர் வேலைகளை முடிக்கும் மாலதி, அசோகமித்திரனின் புனைவு வெளியில் வாசகன் அடிக்கடி சந்திக்கும், இருபதுகளின் மத்தியில்/ இறுதியில் இருக்கும், வேலைக்குச் செல்லும் கீழ் மத்திய வர்க்கப் பெண்களின் மிக முக்கியமான பிரதிநிதி.

மருத்துவமனையின் ஒரு காலை நேரக் காட்சிகளோடு ஆரம்பிக்கும் ‘மாலதி’ நெடுங்கதை/ குறுநாவல், வெறும் புறச்சூழலை உருவாக்கி மட்டுமல்ல. அதன் உடல் /மன அயர்ச்சியை மாலதியோடு வாசகனும் உணரச் செய்வதால்தான், வேலை அனைத்தையும் முடித்து விட்டு கண்ணாடியில் எத்தேச்சையாக ஒரு கணம் தன் முகத்தைப் பார்த்து, பெண்கள் எப்போதுமே கண்ணாடியின் முன்பு தான் நின்றிருக்கிறார்கள் என்று எழுதப்படும் துணுக்குகள் பற்றி “… எவ்வளவு பெண்களுக்கு கண்ணாடியை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பே கிடையாது என்று இவர்களுக்குத் தெரியுமா… வீட்டில் கூட ஒரு ஓட்டைக் கண்ணாடிதான். அதில் தெரியும் பிம்பம் எல்லாமே அரைகுறை தான்” என்று அவள் எண்ணும்போது, அதில் உள்ள உண்மையை நாம் உணர முடிகிறது.

மருத்துவனை நிகழ்வுகளோடு மாலதிக்கும் அவள் தாய்க்கும் இடையே உள்ள உறவுச் சிக்கல் இன்னொரு இழை. அவள் இல்லாவிட்டால் மருத்துவமனையின் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பித்து விடும் என்ற அளவிற்கு அத்தனை வேலைகளையும் செய்யும் மாலதியிடம் அது எதுவும் தெரியாத, தெரிந்து கொள்ளும் அக்கறைகூட இல்லாத அவள் தாய் “நீ பண்ணற பெரிய உத்தியோகத்துக்கு சிநேகிதி கல்யாணத்துக்குக் கூட போகக் கூடாது? அப்படி என்ன பெரிசா அந்த டாக்டர் கொட்டிக் கொடுத்துடறார்” என்று அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார். தன் கணவன் வேலை செய்த இடத்திற்கு மாலதி வேலைக்குச் செல்லவில்லை என்ற கோபம் அவருக்கு. தந்தை அங்கு அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளதால், அவர்கள் முன்னால் நிற்பதற்குக்கூட கூசுகிறது என்பது மாலதியின் தரப்பு.

அசோகமித்திரனின் புனைவுகளில் நாம் சந்திக்கும் கணவனை இழந்த, ஆனால் மன உறுதியை இழக்காத அம்மாக்களில் ஒருவர் மாலதியின் தாய். கல்யாணத்திற்கு மாலதி செல்லவில்லையென்றால் ‘வயிற்றெரிச்சல்’ காரணமாக வரவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கூறி, மகளை அழ வைக்கும் அளவிற்கு உளவியல் நுட்பமும், கடுமையும் நிறைந்தவர் போல் முதல் தோற்றத்தில் தெரிகிறார். ஆனால் அவருடைய கோணத்தில், மற்றவர்கள் மனதில் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஒரு வேலையை விடுவது முட்டாள்தனமான ஒன்றாக இருக்கக்கூடும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் எதை எதையோ எண்ணி நல்ல (அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய) வேலைக்குச் செல்லாமல், தன் எதிர்காலத்தை மகள் வீணடிக்கிறாளே என்ற ஆதங்கம் கூட இத்தகைய கடுஞ்சொற்களாக வெளிவரலாம்.

மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் மணமானவர், அவருக்கு சுஜனா என்ற பெண்ணுடன் தொடர்பிருக்கிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டாக்டரை வற்புறுத்துவது மாலதிக்குத் தெரியும். இந்த விஷயம் டாக்டரின் மனைவிக்கும் தெரிந்து, டாக்டர் மிகப் பெரிய நெருக்கடியில் விழப்போகிறார் என்று மாலதி நினைக்கிறாள். அதற்கேற்றார் போல், டாக்டர் மருத்துவமனையில் இல்லாதபோது அவர் மனைவியும், சுஜனாவும் சந்தித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்க, அந்த இடத்தில் மிகவும் அசௌகரியமான சூழல் உருவாகிறது. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத மாலதி அவமானப்படுத்தப்பட, அவள் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறாள். (தந்தையின் பணியிடத்திற்கு அவள் செல்ல விரும்பாததற்கான காரணத்தின் உளவியலை புரிந்து கொண்டால், அவளின் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்). அதே நேரம் அவள் யதார்த்தத்தையும் ஒரு புறம் உணர்ந்தேயிருக்கிறாள் என்பதால் கிளம்பும்போது, தான் திரும்பவும் வேலைக்கு வர வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் சொல்லியனுப்புமாறு கூறுகிறாள்.

நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்கும் தெருக்களும், அதன் வீடுகளும், கடைகளும், அந்த மொத்தச் சூழலும் பிறிதொரு நேரத்தில் பார்க்கப்படும்போது நாம் அதுவரை அவற்றை கண்டிராதது போல் வேறொரு தோற்றம் கொள்ளக்கூடியவை. மாலதி தன் வேலையின் இயல்பால் தினமும் நகரம் உயிர் கொள்ளும் முன்பே மருத்துவனைக்குச் சென்று மாலைதான் திரும்புகிறாள். இன்று வேலையை விட்டுவிட்டதால், நீண்ட நாட்கள் கழித்து 9-10 வாக்கில் தெருக்களில் செல்லும் அவள், புதிதானவை போல் அனைத்தையும் கவனிக்கிறாள். இக்கட்டான சூழலிலும் மாலதி உணரும் இந்தக் காட்சி பேதத்தின் நுட்பம் ஒருபுறமிருக்க, அனைவரும் அந்த நாளை எதிர்கொள்ள தயாராகிச் சென்றுகொண்டிருக்க, அயர்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் மாலதிக்கோ அந்த நாள் முடிந்தே விட்ட மாதிரிதான் என்பதில் முரணும் உள்ளது.

வீட்டிற்கு திரும்பும் போது, தான் எந்த பெண்ணிற்கும் எதிரியாகக் கூடாது என்று மாலதி நினைக்கும் அதே நேரம், தன் உறுதி திடமானதா என்பதை ஒரு சிறு பரிசோதனைக்குக்கூட உட்படுத்த முடியாது என்று உணரும் போது வருந்துகிறாள். கதை இங்கு முடிகிறது. பெண்களின் துயரை கனிவுடன் பேசுவது என்ற அளவிலேயே சிறந்த கதையாக இருந்திருக்கக் கூடியதை இன்னொரு கோணத்தில் பார்க்க கதையில் உள்ள ஒரு நிகழ்வு உதவுகிறது.

டாக்டரின் மனைவிக்கும் சுஜனாவுக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, சுஜானா அவளை அடித்து விடுகிறாள். டாக்டர் மனைவி ஸ்தம்பித்து வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன் தோளைத் தொட வரும் மாலதியை நோக்கி “.. நீ வேலை பண்ண வந்திருக்கையா, வசியம் பண்ண வந்திருக்கயா..” என்று கோபப்படுகிறாள். 18வது அட்சக்கோடு நாவலில் ஒரு நிகழ்வு. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தின் போது, சந்திரசேகரனின் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், வகுப்புக்களுக்குச் செல்லும் அவனைப் போன்றவர்களிடம், வளையல் தந்து கேலி செய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விடும் அவன் அவர்களை தொலைவில் இருந்து கவனிக்கும்போது, காரில் வருபவர்களிடமோ, சிரித்துப் பேசிக்கொண்டு வருபவர்களிடமோ அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது.

முதல் பார்வையில் இரு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றையே சுட்டுகின்றன. சந்திரசேகரனின் கல்லூரி பெண்களுக்கு காரில் வருபவர்களை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், டாக்டரின் மனைவிக்கு சுஜனாவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடிவதில்லை. இரண்டு நிகழ்வுகளிலும் தாங்கள் எதிர்கொள்ள முடியாதவர்களை தவிர்ப்பவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள் என அவர்கள் வரையறுக்கும் எளியவர்கள் மேல் எந்த தயக்கமும் இல்லாமல் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். நாளை டாக்டர் சுஜனாவையும், மனைவியையும் சமாதானப் படுத்தக் கூடும். அவர் மாலதியை வேலைக்கு வருமாறு அழைத்து அவளும் யதார்த்த நிலையை எண்ணி மீண்டும் செல்லக்கூடும். ஆனால் எந்த காரணமோ, குற்றவுணர்வோ இல்லாமல் தன் மீது எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்படக்கூடிய இழிவுக்கு அவள் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.

எளியவர்கள் அன்றாடம் சந்திக்கும் இழிவுகளை பரிவுடன் சுட்டும் இந்த நிகழ்வு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாரைப் பற்றியதாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொட்டு, அதனுடன் உரையாடுவதால் அசோகமித்திரனின் புனைவு வெளியில் இந்தக் கதை முக்கியமான மைல்கல்லாகிறது.

நிழலாட்டத்தின் மெல்லிய அசைவு

சொல்வனத்தில் வந்த பட்டாம்பூச்சிகள்‘ கதையில் நாயகன் ஒரு கட்டத்தைக் கடப்பது நமக்குத் தெரியும்வரை நம் கண்களுக்கு அவன் மிகவும் சாதாரணமானவனாகதான் இருக்கிறான். இந்த எல்லைக் கோட்டைத் தாண்டியதும் மீள முடியாத அளவுக்கு அவனது செயலின் நிழல் அவன் மீது படிந்து விடுகிறது. அந்த இடத்துக்கு அவன் போகாமல் திரும்பியிருந்தால் நம்மைப் பொறுத்தவரை அவன் சாதாரணமாகதான் இருந்திருப்பான். யாரும் உள்ளுணர்வின் உந்துதல்களுக்காக தண்டிக்கப்படுவதில்லை. அவை செயல்களாக மாறும்போதுதான் நன்மை தீமை என்ற பேச்சு வருகிறது. Schizophrenia, Paranoia, Depression போன்ற மனநிலைகளில் தன் உள்ளுணர்வுகளுக்கு பலியாகாமல் அவற்றுக்கு எதிராக ஒருவன் வாழ்நாள் முழுக்க போராடிக் கொண்டே இருந்தால் அவன் நமக்கு ஒரு ஹீரோயிக் ஃபிகராகவே இருப்பான், இல்லையா? எனவே, ஒருவன் நல்லவனா கெட்டவனா என்ற அவனது இயல்பை நாம் இம்பல்ஸ்களைக் கொண்டல்ல, அவற்றின் விளைவுகளைக் கொண்டே தீர்மானிக்க முடியும்.

அசோகமித்திரன் கதையில் ஒரு கணநேரம் வந்து போகும் sociopathic impulse (மற்றவர்கள் சந்தோஷத்தில் பங்கேற்க முடியாமல் இருப்பது, அதில் ஒரு விலகல் ஏற்படுவது, அவர்களது வெற்றிக் களிப்பு அடங்க வேண்டும் என்று விரும்புவது) ஸ்கேலில் பார்த்தால் இந்த மூலையில் மிகக் குறைந்த அளவில் இருக்கும். ஆனால் இரண்டும் ஒரே தளத்தில்தான் இயங்குகின்றன. மிகத் தீவிரமான உந்துதல், மனம் மிகக் கொடூரமானதாக மாறுதல் என்று எதுவும் இல்லாமலேயே நம் இம்பல்ஸ்கள் ஒரு கொடுஞ்செயலாக மாறலாம் (ஒருவன் பூனை ஒன்றைக் கொல்ல முயலும் அசோகமித்திரன் கதை, ‘பூனை’ என்று நினைக்கிறேன், நினைவுக்கு வருகிறது, அதன் நாயகன் எந்த அளவுக்கு கெட்டவன், அவன் மனம் பூனை வேட்டைக்கு முன் எந்த அளவுக்கு கெட்டுப் போய், அவனை அவ்வளவு கொடூரமான கொலைக்குத் தயார் செய்திருந்தது? உயிர் பிழைத்திருந்தால் தன் செயல் அவனுக்கே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்திருக்கலாம்).

அண்மையில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இப்படி பார்த்தேன்-

In a way, plot is very simple: You have someone do something wrong. You don’t plan out a plot. You have somebody do something wrong, and that engenders other bad behavior. Behavior—especially bad behavior—is what forces character to emerge.

When “A Silver Dish” begins, it’s remarkably static: Woody, pierced by the sound of church bells all over Chicago, is mourning his father, a lifetime of old memories and impressions washing over him. But the story snaps into sudden focus when he recalls one of his father’s transgressions, a betrayal that’s haunted the younger man all his life. It’s that individual transgression—that memorable instance of bad behavior—that gets the story rolling.

I think of that moment as the story standing up. The moment when the black lines on the page suddenly become a story.

The Atlantic

பெரிய ஒரு பயங்கரம் எதுவுமே அமிக்கு தேவைப்படுவதில்லை.

The banality of evil என்று Hannah Arendt சொன்னது மிகப் பிரசித்தம். ஆனால் evil என்பது கொம்பும் வாலும் வைத்துக் கொண்டு சிவந்த கண்ணும் கோரைப் பற்களும் நீண்ட நகமுமாய், நம் போல் இல்லாமல் exoticஆக இருக்கும் விஷயமா? அந்த மாதிரியெல்லாம் ஒரு அரக்கத்தனத்தைச் சித்தரிப்பதில் ஒரு வசீகரம் இருக்கிறது. கொடுஞ்செயல்கள் ஆற்றல் வாய்ந்தவை (evil என்பதற்கு இணையான agency and embodiment கொடுக்கும் சொல் தமிழில் இல்லை போலிருக்கிறது), அது சக்தியுள்ள மனிதர்களால் நிகழ்த்தப்படுபவை என்பது ஒன்று – evil is powerful, and you need strength to take on evil என்பது இதன் உபமுடிபு. ஒன்றைத் தீயது என்று முத்திரை குத்தும் அந்த கணத்திலேயே அது தீமையாகி விடுகிறது. அதன்பின், அந்த ‘தீமையை’ தண்டிப்பது என்பது எளிய, இயல்பான நிகழ்வாகி விடுகிறது. அதில் புரிதலுக்கோ அன்பிற்கோ இடம் இல்லை. அது தவிர, தீயசக்திகள் அசாதாரணமானவை என்பதால் அவற்றை எதிர்கொள்ளவும் நாம் அசாதாரணச் செயல்களைச் செய்ய வேண்டியதாகிறது- தீயசக்திகளின் முன் நம் அன்றாட அனுபவ உண்மைகள் நிற்காது- extraordinary challenges demand extraordinary responses, extraordinary times demand extraordinary measures. இதில் ஒரு வசதி என்னவென்றால் தீயசக்திகளுக்கு எதிராக, அதே அளவு தீச்செயல் புரியக்கூடிய நற்சக்தி ஒன்றை நாம் முன்னிறுத்தும்போது, நம் கைகள் களங்கப்படுவதில்லை: நம் நன்நோக்கங்கள் நம்மைக் குற்றவுணர்ச்சியிலிருந்து பாதுகாக்கின்றன, நம் தேர்வின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல, நம் எதிரியே காரணமாகிறான். அவன் அவ்வளவு கெட்டவனாக இல்லாவிட்டால் நாம் எப்போதும் போல் நல்லது செய்து கொண்டுதான் இருப்போம், ஏன், இப்போதும் நாம் யாருக்கும் எந்த கெட்டதும் நினைப்பதில்லையே?

The banality of evil என்று சொல்லும்போது தீச்செயலில் ஒரிஜினலாகவோ அசாதாரணமாகவோ அபூர்வமாகவோ ஒன்றுமில்லை, வீட்டுக்கு வீடு உள்ளதுதான் என்று சொல்கிறோம். அதைவிட, evil is banal, என்று Arendt சொன்னதன் முழுப் பொருள், banal, என்ற சொல்லின் வேர்ச்சொல்லைப் பார்க்கும்போது புலப்படுகிறது- banal என்ற சொல்லின் வரலாற்றில் ஆணையும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கின்றன, கீழ்ப்படிதல் சம்பிரதாயமாகிப் போய் வீட்டுக்கு வீடு உள்ள விஷயமாகிறது (இதில் இன்னொரு ஆச்சரியம், bha என்பதன் வேர் bha என்ற Indo European etymon– bha என்றால் பேசுதல். இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் இயல்பு வாழ்வாவது போல், இயல் என்பது இயற்றுதல், இயல்பு இரண்டுக்கும் வேராக இருக்கக்கூடும் என்பதுபோல் (அப்படி உண்டா இல்லையா என்று தெரியாது, சத்தம் அந்த மாதிரிதான் இருக்கிறது), ஆணை பொது விஷயமாகிறது- ban என்ற வேர்ச்சொல் banal என்றும் பொருள்படுகிறது.

எனவே banal என்பது சாதாரண விஷயம் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ, அதே அளவு Arendtன் பயன்பாட்டில் உள்ள விசேஷ பொருளில், ஆணைக்குக் கீழ்ப்படிவது என்பதும் உண்மை. Eichmann விஷயத்தில் the banality of evil என்று Arendt சொன்னது அவ்வளவு தப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது, தீச்செயல்களைச் செய்ய நாம் ஒரிஜினலாகவோ அசாதாரணமாகவோ எதையும் யோசிக்கவோ செய்யவோ வேண்டாம், ஒரு கருவி நிலையை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்தால் போதுமானது. அதற்கான ஆணைகள் வெளியிலிருந்து வரலாம், உள்ளிருந்து எழலாம்.

இதன் நிழலாட்டத்தின் மிக மெல்லிய அசைவை அசோகமித்திரன் பதிவு செய்கிறார் என்று நினைக்கிறேன், அவர் தீச்செயல் என்றோ குற்றம் என்றோ எதுவும் சொல்லாமல் அன்றாட அவஸ்தைகளில் ஒன்று போல் வந்து போவதாக சாதாரணமாக எழுதுகிறார். அது சாதாரணமானதாகவே இருக்கலாம். ஆனால் தீச்செயல்கள் செய்பவர்களிலும் சாதாரணமானவர்கள் இருக்கவே செய்கிறார்கள், செயலின் சாத்திய எண்ணம்- குறிப்பாக கதையில் வருபவனின் உள்ளத்தில் என்று சொல்லவில்லை, மானுட மனதில்- முளைவிடுவதை இந்தக் கதை அச்சுறுத்தாத அதன் அப்பாவித்தனத்துடன் பதிவு செய்கிறது.

அந்த ஒரு முகாந்திரம் இல்லாவிட்டால் இதை எடுத்து ஒரு கதையாய் எழுத என்ன ஒரு தேவை இருக்கக்கூடும்?

பீட்டர் பொங்கல்

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து – அஜய். ஆர்

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

PDF

ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில் அடுத்தடுத்து இருவரை ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் ‘ஹாட்ரிக்’ செய்யும் சாத்தியத்துடன் முதல் போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத ‘ஹாட்ரிக்கை’ அவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன் எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும். ‘நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்று’ என்று அந்த தினத்தைப் பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தே, கதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன், ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் – மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய – அகலப்படுத்தப்பட்டிருப்பது, கதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன. அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான்.

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான் அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப் நாம் புரிந்து கொண்டாலும், அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று) ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை.

வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும்போது தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த – பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – ‘எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’ என்று அவன் சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது – மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும், முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின் தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டு, அதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை செய்து கொள்ள வேண்டும்.

‘First impression is the best impression’ என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு – அவன் யாரென்று தெரியாமலேயே – மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின் உற்சாகமான – மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய – கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும், மன விலக்கத்தையும் ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது.

ஆனால் கதைசொல்லியை பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை. ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும் சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு, அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும், நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடு, கதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை செய்யவும் தூண்டுகிறது. ஏளனத்தை, அகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பை, உடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது காழ்ப்பு கொண்டு அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்

oOo

ஒளிப்பட உதவி – Vaidheeswaran Voices…