(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)
ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நாருடை யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. Look, friend, fear of scandal will, only thin out passion. And if I should just give up my love to end this dirty talk, I will be left only with my shame. My virgin self of which he partook is now like a branch half broken by an elephant, bent, not yet fallen to the ground, still attached to the mother tree by the fiber of its bark.
கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.
அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.