எஸ். சுரேஷ்

குங்-பூ கற்றுக்கொள்ள சீனா சென்றபொழுது

எஸ். சுரேஷ்

என் குருவிடம் சில பாண்டாக்கள் குங்-பூ கற்றுக்கொள்வதைப் பார்த்தேன்
அவை என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயிற்சியை நிறுத்திவிட்டு
கைகளைக் கீழிறக்கி தலை குனிந்து என்னை வணங்கும்
நானும் பதிலுக்கு தலை குனிந்து வணங்கிவிட்டு பயிற்சி செய்வேன்

ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் நான் என் இருப்பிடத்துக்கு வந்துவிடுவேன்
பாண்டாக்கள் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்

ஒளிப்பட உதவி- taringa.net

ஐஸ் க்ரீம்

எஸ். சுரேஷ்

“எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” என்று குட்டி கங்காரு கேட்க, தாய் கங்காரு அதை மடியில் வைத்துக் கொண்டு ஒரு எம்பு எம்பி வானத்தில் இருந்த மேகத்தைப் பிய்த்து தன் குட்டியிடம் கொடுத்தது

வெண்மேகத் துண்டத்தை கோன் ஐஸ் போல் சப்பிச் சாப்பிட்ட குட்டி, “இந்த வெள்ளை ஐஸவிட கருப்பு ஐஸ்தான் இன்னும் டேஸ்டா இருக்கும்,” என்றது

“அதுக்கு இப்போ சீசன் இல்ல. குடுத்தத சாப்பிடு” என்ற தாயைப் பார்த்து, “இதுவும் நல்லாதான் இருக்கு” என்று சொன்னது குட்டி கங்காரு.

ஒளிப்பட உதவி- Taylor James

பிளான் பி

எஸ். சுரேஷ்

பாடிக்கொண்டிருந்த கழுதை முன் ‘சபாஷ் சபாஷ்’ என்று தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தது குள்ளநரி.

கழுதையை ‘குஷிப்படுத்தி’ சிங்கத்திடம் அழைத்துச் சென்றால், சிங்கம் விட்டு வைத்த மீதி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசை நரிக்கு.

ரசித்துக்கொண்டிருந்த நரியைக் கண்ட காட்டு மிருகங்கள் கழுதை முன் உட்கார்ந்து பாட்டை ‘ஹும்’ கொட்டி ரசிக்க ஆரம்பித்தன.

இதைக் கண்ட நரி எல்லோரிடமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

கிடைத்த பணத்தில் தனக்கொரு மட்டன் பிரியாணியும் கழுதைக்கு ஒரு கட்டு புல்லும் ஆர்டர் செய்தது.

ஒளிப்பட உதவி – mummy-donkey, Deviant Art

நித்ய கன்னி – ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எஸ் சுரேஷ் குறிப்பு

(கருத்து சுதந்திரம் அனைத்து திசைகளிலிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்யகன்னி நாவலை தான் எழுத நேர்ந்தது குறித்து எம் வி வெங்கட்ராம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்-

“பெறற்கரிய பேறு பெற்றாள் மாதவி என்னும் பெண்.

“மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் பேறுதான் அது. அதன் பயனாக மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று, பெற்ற இடத்திலேயே அவைகளை விடுத்து- கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் அவள். அவளுக்கு சுயம்வரம் வைக்க விழைந்த தந்தையின் விருப்பத்தை மறுத்து நித்யகன்னி காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பினாள் என்று பாரதம் கூறுகிறது.

“நான் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்; மனித இனத்துக்குப் பெரும் பேறாக இருக்க வேண்டிய அணுசக்தி அசுரசக்தியாக உலகை வதைக்கும் கொடுமையைக் கண்டவன்! வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி, கானகத்துக்குத் தவம் இயற்றப் போகும் அளவு விரக்தி கொண்டதைக் கண்டு அவள்பால் பரிவு கொண்டேன். இந்தப் பரிவைச் சுற்றித்தான் கதையை வளர்த்தேன்”

(more…)

முடிஞ்சா நான் போயிருக்க மாட்டேனா?

எஸ். சுரேஷ்

“பசங்க பசி பசின்னு பொலம்பறாங்க
எனக்கோ உடம்பு முடியல
இன்னிக்கி நீங்க வெளியில போயி எதாவது
கொண்டு வாங்க”

“ஹ்ம்ம்”

“முடிஞ்சா நான் போயிருக்க மாட்டேனா?
முடியாததால கேக்கறேன்.
இன்னிக்கி ஒரு நாள் போகக்கூடாதா?”

“ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்”

“சரி சரி, நானே போறேன். என் தலையெழுத்து”

பெண் சிங்கம் வேண்டா வெறுப்பாக வேட்டைக்கு கிளம்பியதைப்
பார்த்துக்கொண்டே ஆண் சிங்கம் படுத்திருந்தது.