இங்கர்சால் எனும் பெயர் பிராமண குடும்பங்களில் ரொம்பவே அபூர்வம். பெயர் பொருத்தமில்லை என்றாலும் இவனும் கொஞ்சம் அபூர்வமானவன் தான். காலையில் அவன் மரண செய்தியை அறிந்ததிலிருந்து வழக்கத்திற்கு மாறாக மூன்று நான்கு தடவை வயிறு கலக்கி வெளியே போனது. அவனுக்கும் என் வயதிருக்கலாம், இல்லை இரண்டோ மூன்றோ அதிகமாகக்கூட இருக்கலாம். சவுண்டு மாமா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றியதாலோ இல்லை உச்ச ஸ்தாயியில் பேசுவாதாலோ அவருக்கு அந்த பெயரில்லை. சௌந்தரராஜன் எனும் இயற்பெயரின் சுருக்கம் தான், ஆனாலும் பொருத்தமான பெயர் சுருக்கம்.
மாமா தூரத்து உறவு, தீவிர நாத்திகர் ஆனால் கட்சிகளிலோ அமைப்புகளிலோ இருந்ததில்லை. தன்னை நாத்திகர் என பறைசாற்றிகொண்டதோ அதன் மகத்துவத்தை ஏற்க சொல்லி பிரசாரம் செய்ததோ கூட இல்லை. அவருடைய வடபழனி வீட்டில் பூஜை அறை கிடையாது. அவர் அமாவாசை தர்ப்பனமோ வருடாந்திர தெவசமோ செய்வதில்லை என்பதில் பொதுவாகவே குடும்பத்தில் எல்லோருக்கும் வருத்தம். பித்ரு சாபம், புத் நரகம் என்றெல்லாம் பலரும் அவரிடம் சொல்லும்போது அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு புன்முறுவலுடன் சென்றிடுவார். மாமா நல்ல வாசகரும் கூட. கோபராஜூ ரமாச்சந்திரராவ் எனும் கோராவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான். an atheist with gandhi எனும் நூலை உளவியலில் பட்டபடிப்பு முடித்ததற்காக எனக்கு பரிசளித்தார். இளமையில் மாமாவின் தந்தை இறந்தபோது அவருடைய அம்மாவிற்கு சில அமங்கல சடங்குகள் செய்யவேண்டும் என பெரியவர்கள் சொன்னதை கேட்டு கொதித்து நாத்திகர் ஆகி பூணூலை அறுத்து எறிந்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு மெட்ராசுக்கு வந்தார் என ஒருமுறை அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அதையே செய்திருக்க வேண்டும் ஆனால் அன்று எனக்கு போதிய வயசு இல்லை. (more…)




