மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்து 10ஆ: தொடரும் போர்ப்பயிற்சி

இப்போது திடீரென்று பல வீடுகளின் மாடியிலிருந்துவண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!’ என்ற கூச்சல் எழுந்தது. புறா விரும்பிகள் பலர் அவனுடைய பெயரைக் கூவிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னால் கொஞ்சம் கூடப் பிழையில்லாமல் காண முடிந்தது. தலைவர்களுள் தலைவனாய் என்னுடைய புறா ஒரு பெரிய கூட்டத்தின் முன்னின்று, அவர்களுடைய பயணத்தை வழிநடத்தியது. எத்தனை பெருமிதமான தருணம் அது! அவன் அவர்களை இந்த அடிவானத்திலிருந்து அந்த அடிவானம் நோக்கி வழிநடத்தினான். ஒவ்வொரு முறையும் புறாக்கள் சீரான இடைவெளையில் சில அடிகள் மேலே உயர்ந்தன. காலை எட்டு மணியளவில் வானத்தின் எந்த மூலையிலும் ஒரு புறாவைக்கூட காணமுடியவில்லை. இப்போது எங்கள் கொடிகளை சுருட்டிவைத்துவிட்டு, பாடங்களைப் படிக்க கீழே சென்றுவிட்டோம். மதியம் நாங்கள் மீண்டும் மாடிக்குச் சென்றபோது, புறாக்கூட்டம் மொத்தமாக இறங்குவதை அனைவராலும் பார்க்க முடிந்தது. வண்ணக்கழுத்துதான் இன்னமும் வழிநடத்திக் கொண்டிருந்தான். மறுபடியும்வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!” என்ற சத்தம் உயர்ந்தது. புறாக்களுக்கு தலைவனாக நான்கு மணிநேரத்திற்கு மேல் நிலைத்திருந்ததால், அவன் பரிசை வென்றான். மேலே சென்றது போலவே கீழே இறங்கிக் கொண்டிருந்தான் அவன்- இப்போது தலைவன்!

பறப்பதன் அபாயகரமாக நிகழ்வு இப்போது வந்தது. அந்தப் பெரிய  கூட்டத்தின் தளபதி கலைந்துச் செல்ல ஆணையிட்டான். பெரிய கூட்டத்திலிருந்து ஒவ்வொரு கூட்டமாகப்  பிரிந்து, தங்கள் வீடு நோக்கிச் சென்றன. ஆனால், மிக வேகமாகச் செல்லவில்லை. அவர்கள் வீடு நோக்கிச் செல்லும்போது, அவர்களுக்கு மேலே வானத்தில் யாராவது காவல் காக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களின் புறாக்கள் கீழிறங்க, அவர்களைப் பின்னிருந்து காவல்காக்க, வண்ணக்கழுத்து என்னுடைய சிறிய புறாக்கூட்டத்தை ஒரு குடையாய் வியூகம் அமைத்து நிறுத்தினான். இதுதான் தலைமைக்குக் கொடுக்கும் விலை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தியாகம்.

ஆனால், இப்போது கோரமான முடிவொன்று துவங்கியது. இந்தியாவில் குளிர்காலங்களில், பெரும்பருந்து இனத்தில் ஒன்றான ராஜாளி தெற்குப் பக்கம் வரும். அவை இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணாது. கழுகையும் பருந்தையும் போல, ராஜாளியும் தான் தன் நகங்களால் கொன்றதை மட்டுமே உண்ணும். அவை மோசமானவை, கபடம் நிறைந்தவை. கழுகுகளில் கொஞ்சம் தாழ்வானவை என்று நினைக்கிறேன். அவற்றின் இறக்கைகள் ஓரத்தில் கிழிந்திருக்காது என்றாலும், அவை பருந்தைப் போல இருக்கும். ஜோடியாக பருந்துக் கூட்டத்திற்கு கொஞ்சம் மேலே பறக்கும். இதனால், இவற்றின் இரையின் பார்வையிலிருந்து தப்பித்துவிடும். ராஜாளிகள் தங்கள் இரையைப் பார்க்க முடியும். ஆனால், இரைகளால் அவற்றை பார்க்க முடியாது.

வண்ணக்கழுத்து தலைமைக்கான போட்டியில் வென்ற சற்று நேரத்தில், பருந்துக் கூட்டத்திற்கு மேலே ஒரு ராஜாளி ஜோடி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நொடியிலேயே, விரல்களை என் வாயில் வைத்து கிறீச்சென்று சீட்டியடித்தேன். வண்ணக்கழுத்து என்னுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டான். தான் மையத்தில் நின்று கொண்டு, மற்றவர்களின் இடத்தை மாற்றியமைத்தான். இப்போது அந்தக் கூட்டம் ஒரு பிறையைப் போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்தது. ஜகோரேவையும் ஹிராவையும் பிறையின் இரண்டு முனைகளை பார்த்துக் கொள்ளப் பணித்தான். மொத்த கூட்டமும் ஒரு பெரிய பறவையைப் போல ஒன்றாகப் பறந்தன. வேக வேகமாக கீழே இறங்கத் துவங்கின. அவை எதற்காக வானத்தில் ஏறினவோ அந்த வேலை இப்போது  முடிந்திருந்தது. அவர்களோடு காலையில் விளையாடிக் கொண்டிருந்த புறாக்கூட்டங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டன.

இவை வேகமாக இறங்குவதைக் கண்டு ஒரு ராஜாளி, இமாலய விளிம்பிலிருந்து விழும் பாறை போல அவர்கள் முன்னால் விழுந்ததுஎன் பறவைகள் இருக்கும் நிலைக்கு வந்தவுடன் தன்னுடைய இறக்கையை விரித்து அவர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டது. இதுவொன்றும் புதிதல்ல. ஒவ்வொரு ராஜாளியும் புறாக் கூட்டத்தைப் பயமுறுத்த இதையே செய்து வந்திருக்கிறது. அதில் பதினொன்றுக்கு பத்து முறை வெற்றியும் பெற்றுவிடும் என்பதை மறுக்க முடியாது. அவை புறாக்களின் முன்னால் வரும் போது, புறாக்கள் தங்கள் உறுதி இழந்து, பீதியில் ஓர் ஒழுங்கில்லாமல் எல்லாத் திசைகளிலும் பறக்கும். இப்போதும், அந்த ராஜாளி அதைத்தான் எதிர்பார்த்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்திரமான நம் வண்ணக்கழுத்து, கொஞ்சம் கூட அசராமல், இறகுகளை அடித்துக் கொண்டு, மொத்த கூட்டத்தையும் எதிரிக்கு ஐந்தடிக்குக் கீழே பறக்கச் செய்தது. எதிரி ஒருபோதும் ஒற்றுமையாக இருக்கும் கூட்டத்தை தாக்காது என்பதை அறிந்தே அவன் இப்படிச் செய்தான். ஆனால் அவன் சில நூறு அடிகள் பறந்திருக்க, இரண்டாவது ராஜாளி, பெண் ராஜாளியாக இருக்கலாம், புறாக்களின் முன்னால் விழுந்து தன் கணவனைப் போலவே இறக்கையை விரித்தது. ஆனால், வண்ணக்கழுத்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. மொத்த கூட்டத்தையும் அந்த ராஜாளியை நோக்கி நேராகச் செலுத்தியது. இதை நினைத்துப்  பார்க்கவும் முடியாது. எந்தப் புறாவும் இதுவரை இது போலச் செய்யத் துணிந்ததில்லை. பெண் ராஜாளி, பறந்து ஓடிவிட்டது. அது கொஞ்சம் திரும்பியிருக்கும், உடனே வண்ணக்கழுத்தும் மற்ற புறாக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு வேகமாக கீழே இறங்கின. எங்கள் கூரைக்கு மேலே அறநூறு அடிக்குக்குப் பக்கத்தில் அவை வந்துவிட்டன. ஆனால் விதி. ராஜாளி வடிவில் ஒரு ஒரு வெடிகுண்டைப் போல மீண்டும் விழுந்தது. இந்த முறை பிறை வடிவத்திற்கு நடுமத்தியில் விழுந்து, தன் இறக்கைகளையும் அலகையும் தீப்பொறிகள் போல விரித்தது. கூடவே அலறலும் கிறீச்சிடுதலும். இது தாக்கத்தை ஏற்படுத்தியது. உறுதியான ஒரே கூட்டமாக இருந்த புறாக்கள் இப்போது இரண்டு பாகமாகப் பிரிந்துவிட்டன. ஒரு பாதி வண்ணக்கழுத்தைப் பின் தொடர்ந்ததுஇன்னொரு பாதி பயத்தால் பீடிக்கப்பட்டு எங்கெங்கோ பறந்தது. ஒரு நல்ல தலைவன் ஆபத்துக் காலத்தில் என்ன செய்வானோ, அதை வண்ணக்கழுத்து செய்தான். பயத்தால் சிதறிய கூட்டத்தைப் பின் தொடர்ந்து, அதை முந்திச் சென்று, மீண்டும் இரண்டு பாதியையும் ஒரு பெரிய கூட்டமாக இணைத்துக்கொண்டான்.

இப்போது பெண் ராஜாளியின் முறை. இரண்டு பாதியும் இணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் பெண் ராஜாளி வண்ணக்கழுத்திற்கும் மற்ற புறாக்களுக்கும் நடுவே விழுந்தது. கிட்டத்தட்ட அவன் வால் மேலேயே விழுந்து, அவனையும் மற்ற புறாக்களையும் பிரித்துவிட்டது. தங்களுடைய வழிகாட்டியை இழந்த புறாக்கள், எதையும் கணக்கில் கொள்ளாமல் பாதுகாப்பைத் தேடிப் பறந்தன. எந்தப் பக்கத்திலிருந்தும் தாக்கக் கூடிய வகையில் வண்ணக்கழுத்து தனித்துவிடப்பட்டான். இப்போதும் அசராமல், கீழே இறங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கூட்டத்தை நோக்கிச் செல்ல முயன்றான். ஒரு டஜன் அடிகள் கீழே இறங்கியிருப்பான், ராஜாளி அவன் முன்னால் பறந்து வந்தது. இப்போது எதிரி கிட்டத்தில் வர, அவனுடைய தைரியம் அதிகமானது. ஒரு கரணம் போட்டான். அவனது அதிர்ஷ்டம், நல்ல காரியம் செய்தான். இல்லையென்றால், அவனுக்குப் பின்னால் நகங்களை நீட்டிக் கொண்டு வந்த பெண் ராஜாளி அவனை அங்கேயே அப்பொழுதே பிடித்திருக்கும்.

இது நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் என்னுடைய மற்ற புறாக்கள் வேகமாக பறந்து கிட்டத்தட்ட என் வீட்டை அடைந்துவிட்டன. கனிந்த பழங்கள் மரத்திலிருந்து விழுவதைப் போல வேக வேகமாக அவை கூரையில் விழுந்தன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் கோழையல்ல. மாறாக முழுக்க முழுக்க வீரத்தின் உருவம் அது. அவன்தான் கருமுத்து ஜகோரே. மொத்தக் கூட்டமும் எங்கள் கூரையில் இறங்கிவிட, ஜகோரே மட்டும் கரணம் போட்டு உயரே பறந்தான். அவனுடைய நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது.. அவன் வண்ணக்கழுத்துக்கு துணையாக இருக்கப் பறக்கிறான். அவன் மீண்டும் கரணம் போட, ராஜாளி தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. வண்ணக்கழுத்தைத் துரத்துவதை விட்டுவிட்டு, ஜகோரேவை நோக்கிப் பறந்தது. உங்களுக்குத் தான் வண்ணக்கழுத்தைப் பற்றித் தெரியுமே, அவன் ஜகோரேவைக் காப்பாற்ற கீழே இறங்கினான். மின்னலைப் போலே வேகமாக வட்டமடித்துக் கொண்டும் வளைந்து கொண்டும் இறங்கினான். அவன் பின்னால் வந்த பெண் ராஜாளிக்கு மூச்சுவாங்கியது. வண்ணக்கழுத்து போட்ட அத்தனை வளைவுகளையும் அதனால் போட முடியவில்லை. எண்ணிக்கையில் கிட்டக்கூட வரமுடியவில்லை. ஆனால் அனுபவசாலியான ஆண் ராஜாளி குறிவைப்பதற்காக மேலே மேலே ஏறியது. இதனால் ஜகோரேவுக்கு ஆபத்து வந்தது. ஒரே ஒரு தவறான முடிவு போதும், ராஜாளி, ஜகோரேவைப் பிடிக்க. பாவம் இந்தப் பறவைகள்; எதைச் செய்திருக்கக் கூடாதோ, ஜகோரே அதைச் செய்தான். ஆண் ராஜாளிக்கு கீழே, நேர்க் கோட்டில் பறந்தான். ராஜாளியோ தன் இறக்கையை முடுக்கிக் கொண்டு, மெளனத்தின் இடியைப் போல விழுந்தது. எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ’சத்தத்தின் நிழல்கூடக் கேட்கவில்லை. கீழே, கீழே, கீழே மரணத்தின் உருவமாக அது விழுந்தது. அப்போதுதான் மிகக் கொடுமையான அந்த விஷயம் நடந்தது. எப்படி என்றே தெரியவில்லை, ஆனால் ஜகோராவைக் காப்பாற்றவும் எதிரியை சலிப்படையச் செய்யவும் வண்ணக்கழுத்து, ஜகோரேவுக்கும் ராஜாளிக்கும் நடுவே நுழைந்தான். தாக்குதலை நிறுத்துவதற்கு பதில், ராஜாளி தன் நகங்களை முடுக்கிக் கொண்டு, நடுவே நுழைந்தவனைப் பிடித்துவிட்டது. இறுக்கிப் பிடிக்கவில்லை தான், ஆனால் காற்றெங்கும் இறகுகள் பொழிந்தன.

எதிரியின் பிடியின் வண்ணக்கழுத்தின் உடல் துடிப்பதைப் பார்க்க முடிந்தது. பழுக்கக் காய்ச்சிய ஒரு இரும்புக் கம்பி என்னில் நுழைந்தது போல் நான் என் பறவைக்காக வலியால் துடித்து  அலறினேன். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. வட்ட வட்டமாக, உயரே உயரே அந்த ராஜாளி வண்ணக்கழுத்தை தூக்கிச் சென்றது. கூடவே, தன் நகங்களால் இன்னும் இறுகப் பிடிக்க முயன்றது. இங்கே நான் வெட்கப்பட வேண்டிய ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வண்ணக்கழுத்தைக் காக்க மிகத் தீவிரமாக இருந்த நான், பெண் ராஜாளி விழுந்து ஜகோரேவைப் பிடித்துவிட்டதைக் கவனிக்கவில்லை. வண்ணக்கழுத்து பிடிபட்ட உடனேயே இது ரொம்ப வேகமாக நடந்திருக்க வேண்டும். இப்போது காற்று முழுக்க ஜகோரேவின் இறகுகள். எதிரி அவனை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த்து. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள அசையக் கூட இல்லை. ஆனால், வண்ணக்கழுத்து அப்படியில்லை. அவன் ஆண் ராஜாளியின் பிடியில் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தான். தன் துணை இரையை மேலும் இறுக்கமாக பிடிக்க உதவி செய்யப் போவதைப் போல, பெண் ராஜாளி தன் துணைக்கு வெகு அருகில் பறந்தது. அப்போது பார்த்து ஜகோரேவும் விடுபடப் போராடினான். அது பெண் ராஜாளியை ஆடச் செய்ததால், அதன் இறகு துணையின் இறகு மீது மோதியது. ஆண் ராஜாளி தன் சமநிலையை இழந்தது. அது காற்றில் கிட்டத்தட்டக் கவிழ்ந்துவிட, மீண்டும் ஒரு இறகு மழையோடு வண்ணக்கழுத்து அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் கீழே விழுந்தான். அடுத்த முப்பது நொடிகளில் மூச்சிறைத்துக் கொண்டு ரத்தம் வடிய ஒரு பறவை எங்கள் கூரையில் கிடந்தது.

அவனுடைய காயத்தின் தீவிரத்தை அறிய அவனைத் தூக்கினேன். அவனுடைய இரண்டு பக்கங்களும் கிழிந்திருந்தது. ஆனால், அத்தனை மோசமாக இல்லை. உடனடியாக அவனை புறா மருத்துவரிடம் கொண்டு போனேன். அவர் அவனுடைய காயங்களுக்கு கட்டு போட்டார். இதற்கு ஒரு அரைமணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி, வண்ணக்கழுத்தை அவன் கூண்டில் விட்டுவிட்டுப் பார்த்தால், ஜகோரேவை எங்கும் காணோம். அவனுடைய கூண்டும் காலியாக இருந்து. நான் கூரைக்குப் போன போது, ஜகோரேவின் துணைப் பெடை விளிம்பில் உட்கார்ந்து கொண்டு, அவனைத் தேடி ஒவ்வொரு திசையையும் அளந்து கொண்டிருந்தது. அன்று மட்டுமல்ல,. அடுத்த இரண்டு மூன்று நாட்களும் அப்படியே தன் துணையத் தேடிக் கொண்டிருந்தது. தன் துணை ஒரு தைரியமான வீரனுக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறது என்பதை அறிந்து அது ஆறுதல் அடைந்ததா என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து பகுதி 10அ: தொடரும் போர்ப் பயிற்சி

மாயக்கூத்தன்

நாள் மாறி நாள் வர புதிதாய்ச் சேர்ந்த புறாக்கள் மெதுவாக வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவாக பறக்கக் கற்றுக் கொண்டன. ஒரு மாதம் முடியும் போது அவை வீட்டிலிருந்து ஐம்பது மைல்களுக்கும் மேல் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்டன. தங்களுடையை முந்தைய முதலாளியிடமே திரும்பப் பறந்து போய்விட்ட இரண்டைத் தவிர மீதி அனைத்தும் வண்ணக்கழுத்தின் தலைமையில் என்னிடம் திரும்பிவிட்டன.

யாரும் மறுக்க முடியாத தலைமை என்பது அத்தனை எளிதாக தீர்மானித்துவிடக் கூடியதல்ல. உண்மையில், வண்ணக்கழுத்துக்கும் இரண்டு புதிய பெடைகளான ஹிரா மற்றும் ஜகோரேவுக்கும் இடையே தீவிரமான யுத்தம் நடந்தே இதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதில் ஜகோரே சுத்தமான கருப்பு டம்ப்ளர். அதன் சிறகுகள் கருஞ்சிறுத்தையின் தோலைப் போல் மின்னும். ஜகோரே மென்மையானது, கடுமையானது அல்ல. ஆனாலும், வண்ணக்கழுத்தை மொத்த கூட்டத்தின் தலைவனென்று ஏற்றுக்கொண்டு பணிய மறுத்தது. தூதுப் புறாக்கள் எத்தனை சண்டைக்காரர்கள் என்றும் எவ்வளவு பெரிதாகத் தங்களை காட்டிக் கொள்பவை என்றும் உங்களுக்குத் தெரியும். எங்களுடைய கூரைக்கு மேல் அத்தனை ஆண் தூதுப் புறாக்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள அனைத்தும் தங்கள் ஆளுகைக்குட்பட்டது என்று நினைத்துக் கொண்டு கம்பீர நடை போட்டுக் கொண்டு கத்திக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும். வண்ணக்கழுத்து தன்னை மாவீரன் நெப்போலியன் என்று நினைத்துக் கொண்டிருந்தது என்றால், சூரியனின் மையப்பகுதியைப் போன்ற வெண்மையான ஹிரா, தன்னை மாவீரன் அலெக்ஸாண்டர் என்று நினைத்துக் கொண்டிருந்தது. தூதுப் புறா இல்லை என்றாலும் கருப்பு வைரமான ஜகோரே தன்னை ஜூலியஸ் சீசரும் மார்ஷல் ஃபோவும் உருக்கிச் செய்யப்பட்டதாக அறியவைத்துக் கொண்டிருந்தது. இந்த மூன்றைத் தவிர வேறு சில கர்வம் பிடித்த ஆண் புறாக்களும் இருந்தன. ஆனால், அவை இந்த மூன்று புறாக்களில் ஏதோ ஒன்றால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் யார் தலைவன் என்ற கேள்விக்கு சண்டை தேவை.

ஒருநாள் ஹிரா தன் சிறகுகளைக் கோதிக் கொண்டே, திருமதி ஜகோரே முன்னிலையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தது. திருமதி ஜகோரே, சுத்தக் கருப்பு. ரத்தக்கல் போல சிவப்பான கண்கள். இது கொஞ்ச நேரம் கூட தொடர்ந்திருக்காது, எங்கிருந்தோ ஜகோரே பாய்ந்து வந்து ஹிராவின் மேல் விழுந்தது. ஹிராவும், பயங்கர கோபத்தில் ஒரு பேயைப் போல சண்டையிட்டது. மூக்கும் மூக்கும், காலும் காலும், இறக்கையும் இறக்கையும் மோதிக் கொண்டன. இரண்டு ஆண்களும், ஒன்றை ஒன்று புடைத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து மற்ற எல்லா புறாக்களும் பறந்து ஓடின. வண்ணக்கழுத்து அவர்களுக்கு மேலே, ஒரு டென்னிஸ் நடுவரைப் போல் சாந்தமாய் உட்கார்ந்திருந்தது. அரை டஜன் முறை மாறி மாறி தாக்கிக்கொண்டபின் , ஹிரா வென்றது. பெருமையின் எல்லைக்கே சென்ற அது, தன் நெஞ்சை விரித்துக் கொண்டு திருமதி ஜகோரேவிடம் போய் “மேடம், உன் வீட்டுக்காரன் ஒரு கோழை. நான் எவ்வளவு நன்றாய் இருக்கிறேன் பார். பக், பக்கூம், கும்கும்” என்று சொல்வது போல நின்றது. திருமதி ஜாகோரே, ஹிராவின் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு, தன் கணவனோடு இணைய இறக்கையை அடித்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டது. ஹிரா, அசிங்கப்பட்டு வாடிப் போய்விட்டது. பிறகு திடீர்க் கொந்தளிப்பில், கடுங்கோபத்துடன் வண்ணக்கழுத்தின் மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத வண்ணக்கழுத்து கடுமையான முதல் தாக்குதலில் கிட்டத்தட்ட தோற்றுவிட்டது. வண்ணக்கழுத்துக்கு மயக்கம் வரும் அளவிற்கு ஹிரா கொத்தவும் இறக்கைகளால் அடிக்கவும் செய்தது. அதனால் வண்ணக்கழுத்து தப்பி ஓடியது. கூடவே இந்தப் பைத்தியமும் துரத்திக்கொண்டு ஓடியது. பம்பரங்கள் போல இரண்டும் வட்டமிட்டு ஓடின. எது துரத்துகிறது எது துரத்தப்படுகிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை போன வேகத்தில் ஓட்டத்தை நிறுத்தி ஒன்றை ஒன்று கொத்தி அடித்துக் கொண்டிருந்ததை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. இறக்கை இறக்கையை அடிக்கும் ஓசை அச்சுறுத்தும் இரைச்சலாக காற்றை நிறப்பியது. இப்போது எல்லாத் திசைகளிலும் சிறகுகள் பறக்கத் துவங்கின.

திடீரென்று, மூக்கோடு மூக்கு வைத்துக் கொண்டு, நகத்தோடு நகம் கோர்த்துக் கொண்டு இரண்டும் குஸ்தி போட்டுக் கொண்டு தரையில் உருண்டன. இரண்டும் கடுங்கோபத்தின் ஒற்றை உருவமாய் உருமாறின. அந்த வழியில் எந்த முடிவையும் அடைய முடியாது என்பதை உணர்ந்து வண்ணக்கழுத்து தன் எதிரியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு காற்றில் உயரே பறந்தது. ஹிராவும், தன் இறக்கையை வேகமாக அடித்துக்கொண்டு அதைத் தொடர்ந்தது. தரைக்கு மூன்று அடிக்கு மேலே, வண்ணக்கழுத்து தன் நகங்களை கழுகின் நகங்களைப் போல ஹிராவின் மூச்சுக் குழாயைச் சுற்றிப் போட்டு, மேலும் மேலும் இறுக்கிப் பிடித்தது. அதே நேரத்தில், தொடர்ந்து பயங்கரமாக தன் இறக்கையைக் கொண்டு அடித்தது. முட்கதையை போன்ற அந்த இறக்கைகள், எதிரியின் உடம்பிலிருந்து பனியைப் போன்ற சிறகுகளைப் பொழியச் செய்தது. இப்போது, பொழியும் சிறகு மழையில் மறைந்து இரண்டும் தரையில் உருண்டு, பித்தேறிய பாம்புகள் போல தீவிரமாக ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டன. கடைசியில் ஹிரா விட்டுவிட்டது. கிழிந்த வெள்ளை மலர் போல வாடி தரையில் வீழ்ந்தது. அதன் ஒரு கால் வேறு பிசகிவிட்டது. வண்ணக்கழுத்திற்கோ, கழுத்திலும் தொண்டையிலும் சுத்தமாக சிறகுகள் எதுவுமே இல்லை. ஆனால், ஏதோ ஒரு வழியில் சண்டை முடிந்ததில் அவனுக்குச் சந்தோஷம். ஹிரா மட்டும் தன் பாதி சக்தியை ஜகோரேயுடனான சண்டையில் செலவிட்டிருக்காவிட்டால், தன்னால் ஜெயித்திருக்க முடியாது என்று வண்ணக்கழுத்துக்கு நன்றாகவே தெரியும். எப்படியிருந்தாலும், நல்ல வகையில் முடிவதெல்லாம் நன்மைக்கே. ஹிராவின் காலுக்கு நான் கட்டு போட்டுவிட்டு, மேலும் அவசியமானதைச் செய்தேன். அடுத்த முப்பது நிமிடங்களில், புறாக்கள் அனைத்தும் அந்நாளின் கடைசி உணவை உண்டு கொண்டிருந்தன. சமீபத்தில் என்ன நடந்தது என்பதை அவை முழுமையாக மறந்துவிட்டது போலிருந்தன. அவற்றின் ரத்தத்தில் எந்த வித பிணக்கோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. அவையெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவற்றில் சிறிய புறாக்களில் கூட நல்ல விதமான வளர்ப்பு இருந்தது. ஹிரா, தன்னுடைய தோல்வியை பண்பான மனிதனைப் போல் ஏற்றுக் கொண்டது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இப்போது ஜனவரி மாதம் பிறந்துவிட்டிருந்த்து. குளிர்ந்த வானிலையும், தெளிவான வானமும் இருக்க புறாக்களுக்கான பரிசுப் போட்டி துவங்கியது. ஒவ்வொரு மனிதனுடைய பறவைக் கூட்டமும் மூன்று வகைகளில் சோதிக்கப்பட்டன. அவை, குழு ஒற்றுமை, தொலைதூரம் பறத்தல் மற்றும் ஆபத்துக்கிடையில் பறத்தல். முதல் வகைமையில் நாங்கள் முதற்பரிசு வாங்கிவிட்டோம். அதன் பிறகு நடந்த ஒரு சோகமான சம்பவத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் எங்களால் பங்கெடுக்க முடியவில்லை. அது என்ன என்பதை அதற்குரிய இடத்தில் நீங்கள் அறிவீர்கள்.

குழு ஒற்றுமைப் போட்டி இப்படித்தான் இருக்கும். வெவ்வேறு புறாக் கூட்டங்கள் அவரவர் வீடுகளிலிருந்து மேலெழும்பிப் பறக்கும். தங்கள் எஜமானர்களின் சீட்டிகள் மற்றும் அவர்களை உணர்த்தும் வேறு சப்தங்கள் கேட்காத தூரத்திற்குச் சென்றவுடன், தனித்தனியான குழுக்கள் ஒன்றிணையும். பிறகு அவை அனைத்தும் எதற்கு தகுதியுண்டு என்று நினைக்கின்றனவோ அந்த புறாவின் தலைமையில் பறக்க ஒப்புக்கொள்ளும். புறாக்களின் புத்தியும் உள்ளுணர்வும் மேலோங்கியிருக்கும் ஆகாயத்தில் இவையனைத்தும் நடக்கும். எந்தப் பறவை முன்னால் பறக்கிறதோ, எது வழிநடத்த அனுமதிக்கப்படுகிறதோ அது தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தின் இயல்பையும் காரணத்தையும் உணராமலேயே வழிநடத்தும்.

வெப்பம் நாற்பத்தைந்து ஃபேரன்ஹீட்டுக்கு இறங்கிவிட்டது. இந்தியாவின் எங்கள் பகுதியில் அதுவொரு நல்ல குளிர்ந்த காலை. உண்மையில், அது அந்த வருடத்திலேயே குளிர்ச்சியான நாள். மேலே வானம், வழக்கமாய் குளிர்காலத்தில் இருப்பதுபோல மேகங்களற்று, வடிவமில்லா நீலமாணிக்கக் கல் போல இருந்தது. வெளிர்சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் இருந்த நகர வீடுகள், விடியலின் பலவண்ணப் பள்ளத்திலிருந்து எழும் ராட்சதர் படை போல இருந்தன. தொலைவில், அடிவானம் பழுப்பு மற்றும் ஊதா நிறங்கள் கொண்டு எரிந்தது. தேன் நிறத்திலும் ஊதா நிறத்திலும் உடையணிந்த ஆண்களும் பெண்களும் தங்கள் காலைப் பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, வீட்டு மாடிகளில் கைகளை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நகரத்தின் சப்தங்களும் வாசனைகளும் இரவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டன. பருந்துகளும் காகங்களும் தங்கள் குரல்களால் காற்றை நிறப்பின. அந்தச் சத்தத்திலும் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் பாடலைக் கேட்க முடிந்தது. போட்டி தொடங்கியதற்காக சமிக்ஞை சீட்டி அடிக்கப்பட்ட அந்த நொடியில், ஒவ்வொரு புறா வளர்ப்பாளரும் தன் வீட்டின் கூரையிலிருந்து வெள்ளைக் கொடியை அசைத்தார்கள். உடனடியாக எங்கிருந்தோ எண்ணற்ற புறாக் கூட்டங்கள் வானத்தில் உயர்ந்தன. கூட்டம் கூட்டமாக, வண்ண வண்ணமாக, அவற்றின் படபடக்கும் இறக்கைகள் அவற்றை நகரத்திற்கு மேலே கொண்டு சென்றன. காகங்களும், சிவப்பும் பளுப்புமான பருந்துகளும், பத்தாயிரக் கணக்கான டம்பளர்களும் தூதுப் புறாக்களும் இடியைப் போல வான்புகும் முன்பே, ஓடி மறைந்துவிட்டன. சீக்கிரமே, காற்றாடி போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு கூட்டமும், பெரிய காற்றுச் சுழியில் சிக்கிக் கொண்ட பல மேகங்கள் போல வானத்தில் வட்டமடித்தன. ஒவ்வொரு நொடியும் அவை மேலே ஏறிக் கொண்டே இருந்தாலும், வெகு நேரம் ஒவ்வொரு புறா உரிமையாளரும் தன் கூட்டத்தை மற்றவருடையதில் இருந்து தனித்து அறிய முடிந்தது. கடைசியில் தனித்தனி கூட்டங்கள் ஒன்றாகக் கலந்து இறக்கைகளால் ஆன கெட்டியான சுவர் போலப் பறந்தபோதும், அவை பறந்த விதத்தைக் கொண்டே, என்னால் வண்ணக்கழுத்து, ஹிரா, ஜகோரே மற்றும் இன்னும் அரை டஜன் புறக்களை அடையாளம் காண முடிந்தது. ஒவ்வொரு பறவைக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, அவை பறக்கும்போது அதைக் காண முடிந்தது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு குறிப்பிட்ட புறாவின் கவனத்தைப் பெற, உரத்த சீட்டியை பிரத்யேக நிறுத்தங்களோடு அடிப்பார். சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தால், அந்த பறவையின் கவனத்தை ஈர்க்கும்.

கடைசியில் மொத்த கூட்டமும் எந்தவொரு புறா விரும்பியும் முரசு கொட்டினால் கூடக் கேட்காத உயரத்தை அடைந்துவிட்டன. இப்போது அவை வட்டமிடுவதை நிறுத்திவிட்டு ஒருபக்கமாக நகரத் துவங்கின. தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்டது. அவை வானத்தின் ஒரு திசையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர, உரிமையாளர்கள் நாங்கள், புறாக்ககள் தங்களை வழிநடத்த அனுமதிக்கும் புறாவின் குணாதிசயங்களை கவனிக்க மேலே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு சமயம் என்னுடைய ஜகோரே வழிநடத்தும் போல் இருந்தது. ஆனால், அது கூட்டத்தின் முன்பகுதியை அடைந்த சில நேரங்களிலேயே, எல்லாப் புறாக்களும் வலப்பக்கம் திரும்பிவிட்டன. அது பின்தொடர்ந்து பறப்பவர்களிடையே குழப்பத்தைக் கொண்டுவந்தது. குதிரைப் பந்தயக் குதிரைகள் போல வகைவகையாய் பெயர் தெரியாத புறாக்களும் முன்னால் வந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அவை ஒவ்வொன்றும் மீதி கூட்டத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இப்படி அடிக்கடி நடக்க, போட்டியில் ஆர்வத்தை இழக்கத் துவங்கிவிட்டோம். ஏதோவொரு அறியப்படாத புறா, அதிகம் பலராலும் விரும்பப்பட்ட தலைமைக்கான பரிசை தட்டிச் செல்லும் என்று தோன்றியது.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து பகுதி 9: போர்ப் பயிற்சி

நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.

போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு  கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார். (more…)

வண்ணக்கழுத்து 8 ஆ: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8ஆ: பயணம் தொடர்கிறது

“விரைவிலேயே என் கண்கள் செயலற்றுப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கருப்புத் துணிகள் போல இருளின் மேல் இருள், கண்களில் கவிந்தது. என் இனத்தின் கடவுளர்களிடம் பிரார்த்தித்துவிட்டு தூங்க முயன்றேன். ஆனால் இந்த ஆந்தைகளின் அலறலில் யார் தான் தூங்க முடியும்? அந்த இரவெல்லாம் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. ஏதாவது ஒரு பறவை வலியில் கதறும் சத்தமில்லாமல் ஒரு மணி நேரம் கூடக் கழியவில்லை. வெற்றிக் களிப்பில் ஆந்தைகளும் அலறின. அவ்வப்போது ஒரு ஸ்டார்லிங்கோ புல்புல்லோ மரண ஓலமிட்டபடி ஆந்தையின் கோரப் பிடியில் சாகும். என் கண்கள் மூடியிருந்தாலும், நடந்து கொண்டிருந்த படுகொலைகளை என் காது அறிந்திருந்தது..

ஒரு காகம் கிறீச்சிட்டது. பிறகு மற்றொன்று, பிறகு இன்னொன்று. ஏறக்குறைய ஒரு கூட்டமே பீதியில் மேலே பறந்து மரங்களில் மோதிக் கொண்டன. ஆந்தைகளின் கூர்மையான கொடூரமான அலகுகளாலும் நகங்களாலும் கிழிக்கப்பட்டு கொல்லப்படுவதை விட இப்படிச் சாவது மேல். இந்தக் குழப்பங்களுக்கு இடையே, காற்றில் வீசல்களின் வாசனையை நுகர்ந்தேன். மரணம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டதை அறிந்தேன். அது என்னை பதற்றம் கொள்ள வைத்தது.

என் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு பழுப்பு வெள்ளை ஒளி எல்லாவற்றின் மீதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. என்முன், ஆறடி தொலைவில் ஒரு வீசல் நின்று கொண்டிருந்தது. அப்படிச் செய்வதில் ஆந்தைகள் என்னைக் கொல்லும் வாய்ப்பு அதிகம் என்றாலும் நான் மேலே பறந்தேன். நினைத்தது போலவே, ஒரு ஆந்தை அலறிக் கொண்டும் கிறீச்சிட்டுக் கொண்டும் வந்தது. மேலும் இரண்டு ஆந்தைகள் தொடர்ந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தத்தைக் கேட்டேன். சத்தத்தை வைத்தே நாங்கள் தண்ணீருக்கு மேலே பறக்கிறோம் என்பதை அறிந்தேன். எங்கள் இறக்கைகளின் சிறிய உதறல் கூட எதிரொலித்தது. எந்த ஒரு நேரத்திலும் ஆறடி தூரத்திறகு மேல் எனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதால் என்னால் எந்தத் திசையிலும் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அதனால், ஆற்றின் காற்றை உறிந்து ஆற்றுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளுக்கு அப்பால் கொண்டு செல்லும் ஒரு காற்றுச் சுழலுக்காக நான் மெல்லச் சிறக்கடித்துக் காத்திருந்தேன். ஐயோ அந்த ஆந்தைகள் நெருங்கிவிட்டன. ஆனால் நான் குட்டிக்கரணம் போட்டு வளைவாகப் பறந்தேன். ஆந்தைகளும் என்னைத் துரத்துவதை விடவில்லை. நான் இன்னும் மேலே ஏறினேன்.

இப்போது நிலவொளி, தண்ணீரைப் போல என் இறக்கைகளிலிருந்து சொட்டியது. என்னால் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அது என்னுடைய தைரியத்தையும் மீட்டுக் கொடுத்தது. ஆனால் என் எதிரிகள் விட்டபாடில்லை. அவர்களும் மேலே வந்தார்கள். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் அவர்களின் கண்களின் விழுந்து, அவற்றைக் குருடாக்கின. ஆனால், பார்வையை முழுதாகப் பறிக்கவில்லை..

திடீரென்று அவற்றில் இரண்டு ஆந்தைகள் என் மீது பாய்ந்தன. நான் மேலே பறந்தேன். ஆகா!! ஆந்தைகள் என்னைத் தவறவிட்டு, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அவற்றின் நகங்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டன. காற்றில் இறக்கைகளை அடித்துக் கொண்டும், பேய்களைப் போல அலறிக் கொண்டு, நதிக்கரையிலிருந்த புற்களின் மேல் விழுந்தன.

“இப்போது நான் கவனமாகப் பார்த்தேன். நான் நிலவை நோக்கிப் பறந்து வரவில்லை, விடியலை நோக்கி வந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே, பீதி நிறைந்த என் கண்கள் இதைக் கண்டிருக்கவில்லை. இப்போது இங்கு ங ஆந்தைகள் இல்லை. வளரும் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க அவை மறைவிடங்களைத் தேடத் துவங்கியிருந்தன. நான் பாதுகாப்பாக உணர்ந்த போதிலும், மிகப் பெரிய மரங்களின் நிழல்களிலிருந்து விலகியே இருந்தேன். இப்போதும் அங்கு ஒரு ஆந்தை மறைந்திருக்கக் கூடும். நான் மரத்தில் மேலிருக்கும் ஒல்லியான கிளையில் அமர்ந்தேன். அது சூரியனின் முதற்கிரணங்கள் பட்டு ஆடும் தங்கக் குடை போல உருமாறியிருந்தது. மெதுவாக அந்த ஒளி இன்னும் கீழே படர்ந்து, கீழிருந்த வெள்ளை ஓடை வீசலின் கண்களைப் போல் பல வண்ணங்களில் மின்னியது.

“அப்போது நதிக்கரையில் பயங்கரமான ஒரு காட்சியைக் கண்டேன். நிலக்கரியை விட கருமையான இரண்டு காகங்கள், நாணல்களில் சிக்கிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் ஆந்தையை தங்கள் அலகுகளால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. சூரிய ஒளியில், ஆந்தையால் தன் கண்களைத் திறக்க முடியவில்லை. அந்த இரவுப் படுகொலையில் காக்காய்களுக்கு பாதிப்பு அதிகம் தான். இப்போது ஆந்தைகளை அவற்றின் தவறுகளுக்கு பழிவாங்குவது காக்காய்களின் முறை. ஆனால், சிக்கிக் கொண்ட ஆந்தையை இரண்டும் கொல்வதை காணச் சகிக்கவில்லை. அதனால், அந்தக் கொலைகாரர்களிடமிருந்து விலகி, என் உழவாரக் குருவி நண்பர்களைத் தேடிப் பறந்தேன். என்னுடைய சில அனுபவங்களை அவர்களிடம் சொன்னேன். அந்தப் பெற்றோர், வேதனையில் எழும்பிய பயங்கர ஓலங்களை தாங்களும் கேட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சத்தம் அவர்களை தூங்கவிடவில்லை. ஆண் உழவாரக் குருவி வெளியில் எல்லா ஆபத்தும் நீங்கி விட்டதா என்று கேட்டார். பத்திரமாக இருப்பதாகவே நினைத்தேன். நாங்கள் வெளியில் வந்த போது, அந்த பாவப்பட்ட ஆந்தை புற்களிடையே இறந்து கிடந்தது.

“அன்று காலை நாங்கள் ஓடையில் வாத்துகளைப் பார்க்கவில்லை என்பது விசித்திரம் தான். அவை அதிகாலையிலேயே தெற்கு நோக்கிப் பறந்திருக்கலாம். நாங்களும் அவ்வாறே செய்ய முடிவெடுத்தோம். எங்கள் வழியோடு போகும் மற்ற பறவைகளோடு சகவாசம் வேண்டாம் நாங்கள் முடிவு செய்தோம். இடம் பெயரும் காலத்தில், எங்கெங்கெல்லாம் புறாக்கள், க்ரொஸ், மற்ற பறவைகள் போகின்றனவோ அவற்றின் எதிரிகளான ஆந்தைகள், பருந்துகள் மற்றும் கழுகுகளும் அவற்றின் பின்னால் போகும். ஆபத்தைத் தவிர்க்கவும், நாங்கள் முன்பு பார்த்த அதிர்ச்சி தரும் காட்சிகளைத் தவிர்க்கவும் நாங்கள் கிழக்கு நோக்கிப் பறந்தோம். ஒரு நாள் முழுக்க கிழக்கு நோக்கிப் பறந்த பிறகு, சிக்கிமில் ஒரு கிராமத்தில் ஓய்வெடுத்தோம். அடுத்த நாள், பகற்பொழுது பாதி காலம் தெற்கு நோக்கிப் பறந்துவிட்டு பிறகு கிழக்கு நோக்கிப் பறந்தோம். இது மாதிரி சுற்றிப் சுற்றிப் போக அதிக நேரம் எடுத்தது. ஆனால் அது எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியது.

ஒருமுறை ஒரு புயற்காற்று எங்களைத் தடுமாறச் செய்து ஏரிக்கரையில் தள்ளியது. அங்கு நான் ஒரு அற்புதமான காட்சியைக் கண்டேன். நான் மரத்தின் உச்சியில் இருந்தேன். கீழே வளர்க்கப்பட்ட வாத்துகள் நிறைய நீரில் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் வாயில் ஒரு மீனை வைத்திருந்தது. ஆனால், எதுவும் தன் இரையை விழுங்கவில்லை. வாத்துகள் மீன்களை உண்ணாமல் தங்களை இப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு போதும் நான் பார்த்ததில்லை. எனவே உழவாரக் குருவிகளையும் இதைக் காண அழைத்தேன். அவை மரங்களின் கிளைகளில் ஒட்டிக் கொண்டு வாத்துகளைப் பார்த்தன. அவைகளால், தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இந்த வாத்துகளுக்கு என்ன ஆயிற்று? சீக்கிரமே ஒரு படகு கண்ணில் தட்டுப்பட்டது. இரண்டு மனிதர்கள் அதைச் செலுத்திக் கொண்டு வந்தார்கள். தட்டையான மூஞ்சியோடு மஞ்சள் நிற சருமத்துடன் இருந்த. அவர்களைக் கண்டவுடன், வாத்துகள் தங்களால் முடிந்த வரை வேக வேகமாக படகு நோக்கி விரைந்தன. படகை அடைந்தவுடன், அதன் மீது ஏறி தாங்கள் பிடித்த மீன்களை அதிலிருந்த பெரிய மீன் கூடையில் போட்டன. பிறகு ஏறியில் குதித்து இன்னும் சில மீன்களைப் பிடிக்கப் போயின.

உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு இரண்டு மணிநேரங்கள் தொடர்ந்தது. அந்த திபெத்திய பர்மிய மீனவர்கள் வலையே வீசவில்லை. அவர்கள் ஒரு நூலை கிட்டத்தட்ட மென்னியை அடைக்கும் அளவிற்கு, வாத்துகளின் கழுத்தைச் சுற்றிக் கட்டி, மீன்பிடிக்க ஏரிக்கு அழைத்து வந்திருந்தார்கள். வாத்துகள் எதைப் பிடித்தாலும் அதைத் தன் எஜமானர்களிடம் கொண்டு வந்து கொடுத்தன. அவர்களின் மீன் கூடை நிரம்பியதும்தான் வாத்துகளின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்றை அழித்து விட்டார்கள். வாத்துகள் மீண்டும் ஏரியில் பாய்ந்து, வயிறு முட்ட மீன்களைச் சாப்பிட்டன..

“இப்போது சிறிது நேரம் ஏரிகளை விட்டு வெகு தூரம் விலகி, விளைநிலங்களைத் தேடிப் பறந்தோம். அங்கு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கு மேலே பறந்த பூச்சிகளை உழவாரக் குருவிகள் தின்றன. நானும் மித மிஞ்சிய அளவுக்கு தானியங்களைத் தின்றேன். தானியங்களை மட்டும் தான் பூச்சிகளை அல்ல. ஒரு நெல் வயலின் வேலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, யாரோ எதையோ அடிப்பதைக் கேட்டேன். ஒரு செர்ரி கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுக்க, ஒரு சாஃபின்ச் தன் அலகால் உடைக்கும் சத்தம் போலிருந்தது அத்தனை சக்தி. ஒரு பாக்குவெட்டியைப் போன்ற பலம் அந்தச் சின்னப் பறவையின் அலகுக்கு இருப்பது ஆச்சரியமில்லையா? ஆனால், நான் சத்தம் வரும் இடத்தை நெருங்கி கீழே பார்க்கையில், அங்கே வேறொரு பறவையைப் பார்த்தேன். அது ஒரு ஹிமாலய த்ரஷ். அது செர்ரி கொட்டையை உடைத்துக் கொண்டிருக்கவில்லை. மெதுவாக நகரும் ஒரு நத்தையைத் அலகால் குத்திக் கொண்டிருந்த்து. டிக், டாக், டிக், டாக்…. டாக்! அந்த நத்தை அசையாமல் நிற்கும் வரை கொத்திக் கொண்டேயிருந்தது. அந்த த்ரஷ் தலையை உயர்த்தி சுற்றிலும் நோட்டமிட்டுவிட்டு, தத்தித் தத்தி நடந்து, நுனிகால்களில் நின்று, சிறகுகளை விரித்து, விரைவாக குறிபார்த்துவிட்டு டாக் டாக் டாக் என்று மேலும் மூன்று தடவை குத்தியது. ஓடு பிளந்து ருசியான நத்தை வெளிப்பட்டது. தன் அலகால் அதை தூக்கியது. அலகில் கொஞ்சம் ரத்தம் கசிந்தது. அது தன் வாயை கொஞ்சம் அகலமாகத் திறந்து, அதன் ஓரங்களில் புண்படுத்திக் கொண்டுவிட்டது. நத்தையை சரியாக பிடியில் இருத்திக் கொண்டு, இரவு உணவுக்காக தன் துணை காத்துக் கொண்டிருக்கும் மரத்திற்குள் பறந்து மறைந்தது.

”சிக்கிமின் விளைநிலங்களோடே தொடர்ந்த எங்கள் பயணத்தில் நிகழ்வுகள் ஒன்றும் இருக்கவில்லை. நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மதிப்புள்ளதென்றால், அது காட்டில் மனிதர்கள் மயில்களைப் பிடித்தது தான். இந்தப் பறவைகள் உண்ணும் பாம்புகளும் மற்ற உயிரினங்களும் வடக்கே குளிர்கால உறைவிடங்களுக்குப் போய்விடுவதால், இவை உணவைத் தேடி வெப்பமான தெற்கு சதுப்பு நிலங்களுக்கு வருகின்றன.

“மயில்களும் புலிகளும் ஒன்றையொன்று ரசிப்பவை. மயில்களுக்கு புலிகளின் தோலைப் பார்க்கப் பிடிக்கும். புலிகளுக்கு மயில்களின் தோகையைப் பிடிக்கும். சில சமயம் குட்டையில், புலி ஒன்று கிளையில் மேலிருக்கும் மயிலின் தோகையை நின்று பார்த்துக் கொண்டிருக்கும். மயிலும் தன் கழுத்தை வளைத்து புலியின் வரிவரியான தோலின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும். இப்போது காலாகாலத்திற்கும் ஆக்கிரமிப்பாளனான மனிதன் காட்சிக்குள் வருகிறான்.

ஒரு நாள், மனிதன் ஒருவன் புலியின் தோல் மாதிரியே வரையப்பட்ட ஒரு துணியைக் கொண்டு வந்தான். எந்தப் பறவையும் அது நிஜமான புலியில்லை என்று பார்த்தமாத்திரத்தில் சொல்ல முடியாது. பிறகு, அருகிலிருந்த மரத்தின் கிளையில் ஒரு சுருக்கை தயார் செய்துவிட்டு அவன் மறைந்துவிட்டான். அந்த துணியின் வாசனையை வைத்தே அது புலி இல்லை என்று நான் சொல்லிவிடுவேன். ஆனால், மயில்களின் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அவற்றின் கண்களே அவற்றை ஏமாற்றிவிட்டன. சில மணிநேரத்தில் ஒரு ஜோடி மயில்கள் அங்கு வந்து, மர உச்சியிலிருந்து புலி போலிருந்த துணியை பார்த்தன. இன்னும் கீழே கீழே இறங்கின. புலி தூங்குகிறது என்ற நம்பி ஏமாந்து போயின. அதே நினைப்பில் அவை அருகில் வந்து பொறியின் பக்கத்திலிருந்த ஒரு கிளையில் நின்றன. பொறியின் மீது அடி வைக்க அதிக நேரம் ஆகவில்லை. ஆனால், இரண்டுமே ஒரே பொறியில் எப்படிச் சிக்கிக் கொண்டன என்பது எனக்கு விளங்கவில்லை. பிடிபட்ட உடனேயே அவை சோகத்தில் கத்தின. பிறகு பொறி வைத்தவன் வந்து, இன்னொரு தந்திரம் செய்தான். இரண்டு பெரிய கருப்பு நிற கான்வாஸ் முகமூடிகளை அவற்றின் தலையில் போர்த்தி மயில்களின் கழுத்தில் முடிச்சு போட்டு, அந்தப் பாவப்பட்ட பறவைகளின் கண்களை மூடிவிட்டான். கண்கள் இருண்டவுடன் எந்தப் பறவையும் அதிக எதிர்ப்பு காண்பிப்பதில்லை. அவன் அவை நடக்க முடியாதபடிக்கு கால்களையும் கட்டிவிட்டான். பிறகு அவனுடைய மூங்கில் கம்பில், அவற்றை முனைக்கு ஒன்றாக கட்டினான். மெதுவாக அதன் நடுப்பகுதியில் பிடித்து தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு நடக்கத் துவங்கினான். வானவில்லினால் ஆன அருவி போல, மயில்களின் தோகைகள் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் தொங்கிக் கொண்டிருந்தன.

“என்னுடைய பயணம் இங்கே முடிகிறது. அடுத்த நாள் உழவாரக் குருவிகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். அவர்கள் தெற்கு நோக்கிப் போனார்கள். நான், புத்திசாலியான சோகமான பறவையாக வீடு திரும்பி மகிழ்ந்தேன். இப்போது ஒன்றைச் சொல். ஏன் பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு மத்தியில் இத்தனை கொலையும் துன்புறத்தலும் நடக்கின்றன? மனிதர்கள் நீங்கள் இப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லையே. அப்படித்தானே? ஆனால் பறவைகளும் மிருகங்களும் காயப்படுத்திக் கொள்கின்றனவே. இது எல்லாம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்துகிறது” என்றது வண்ணக்கழுத்து.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து 7: வண்ணக்கழுத்தின் கதை

பகுதி 7: வண்ணக்கழுத்தின் கதை

முந்தைய பகுதியில், எந்த வழியாக சென்று வண்ணக்கழுத்து மீட்கப்பட்டதோ, அந்த இடங்களையும் சம்பவங்களையும் பற்றி மிகக் குறைவாகவே சொல்லியிருந்தேன். நாங்கள் தேடிய பத்து நாட்களில், முதல் நாளிலேயே கோண்ட் வண்ணக்கழுத்தின் பாதையை கச்சிதமாக கண்டுபிடித்துவிட்டார். ஆனால், அதைப் பற்றி தெளிவாகவும் கோர்வையாகவும் தெரிந்து கொள்ள வண்ணக்கழுத்தே தன் சாகசப் பயணத்தை விவரித்தால் நன்றாக இருக்கும். கனவின் இலக்கணத்தையும் கற்பனையின் அகராதியையும் வைத்துக் கொண்டால், அவனைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமில்லை.

நகரத்திற்குத் திரும்புவதற்காக, அக்டோபர் மாத மதியத்தில் டார்ஜிலிங்கிலிருந்து ரயில் ஏறிய போது வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் உட்கார்ந்து கொண்டு, தான் காணாமல் போன கதையை, டெண்டாமிலிருந்து சிங்காலியாவிற்கு போய் திரும்ப வந்த கதையைச் சொல்லத் துவங்கினான்:. (more…)