e e cummings

காமம் – இரு தமிழாக்கக் கவிதைகள்

நம்பி கிருஷ்ணன்

புல்லட்டுமா என்றான்

புல்லட்டுமா என்றான்
(கத்துவேன் என்றாள்
ஒரே ஒரு முறை என்றான்)
ஜாலி தான் என்றாள்

(தொடட்டுமா என்றான்
எவ்வளவு என்றாள்
நிறையவே என்றான் )
குடியா முழுகிவிடும் என்றாள்.

(போதருக என்றான்
தொலை தூரம் வேண்டாம் என்றாள்
எது தொலைவென்றான்
நீ இருக்குமிடம் என்றாள் )

தங்கி விடவா என்றான்
( எவ்வழி என்றாள்
இதோ இப்படி என்றான்
நீ முத்தமிட்டால் என்றாள்

முன்னேறவா என்றான்
இது தான் காதலா என்றாள் )
நீ சம்மதித்தால் என்றான்
(கொல்லாதே என்றாள்

ஆனால் இது தான் வாழ்க்கை என்றான்
ஆனாலும் உன் மனைவி என்றாள்
இதோ இப்போதே என்றான்)
ஆ அம்மா என்றாள்
(அமர்க்களம் என்றான்
நிறுத்தாதே என்றாள்
மாட்டவே மாட்டேன் என்றான்)
மெதுவாக என்றாள்

(வந்ந்து… விடவா? என்றான்
உம்…ம்ம் என்றாள்)
இன்பத்தின் உச்சமடி நீ என்றான்
(எனக்கு சொந்தமடா நீ என்றாள் )

(may i feel said he, e e cummings)

oOo
புணர்ச்சி

கழட்டினாள்!
வெறும் ஆடைகளை மட்டும் அவள் களையவில்லை.
முலை, புட்டம்,
பொன்னாய் மினுக்கும் தொடைகளை

அல்ல

மெல்லிய நுரையீரல், குடலின் ஊதாக்கூடு,
எலும்பின் ஒளிரும் தந்தம்,
வாஞ்சையுடன் துடிக்கும் இதயத்தையே

காட்டும்படியாக

உள்ளிருப்பதை வெளியே கொணரும்
சிக்கலானச் செயலை அவள் நிகழ்த்த
நான் அவளைக்
கைகளில் அள்ளினேன்

என்னையே திடீரென்று அவள் குடிகொண்டதைப் போலொரு
மெல்லதிர்ச்சி!

மௌனம்.
வெளியே ஜன்னலில்
மழையின் தாழ்ந்த வியப்பொலிகள்.

கவலையுடன் வரைபடமின்றி பயணித்தேன்
சதையின் நகரத்தில்:
அவளது நடைபாதைகளின் நீல நிழல்களில்
தொலைந்து இடறினேன்.
கனவின் அமைதி
ஊசலாட்டம்
நீரில், துடுப்பின் சிதறடிப்பு!

திடீரென, சற்றும் எதிர்பாராமலே
வெய்யில் நிரம்பிய சதுக்கத்தில்
நான் வந்தடைகையில்,
என் கரங்களில்,
மெல்லிய கரைதல்களுடன்,
பறவைத் திரளாக
அவள் சிதறினாள்.

நிர்பந்தங்களே இல்லாமல்
ஓருடல் அளிக்கப்படுகையில்:
கனிவான இரக்கம்,
ஆனாலும் பொறுமையின்மையும்கூட.
கொஞ்சம் அலட்சியத்துடன் கலந்து.
இதையெல்லாம்விட,
பெயரிடவே முடியாத ஏதோவொன்று:
ஒருவிதமான சோகம்.

பின்கழுத்தில் விரல்களால்
விரைவாக மும்முறை தட்டிவிட்டு
அவள் எழுந்து உட்காரும் வரையில்
நாங்கள் கிடந்தோம்:
நசுநசுத்து, குளிருடன்,
கரையில் தனித்த மீன்களைப் போல்.

(After John Banville, The Newton Letter)