ஆணழகன் சாம்ராஜ்

ஆதவன் கிருஷ்ணா

சாம்ராஜ் மரணித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. டைலர் குணா, அர்னால்ட் சேகர், கரீம் பாரூன் முதலியவர்கள் கொண்ட நண்பர் வட்டம் – ஒரு குளம் என்றால் அதில் பெரிய பாறைக்கல்லொன்று விழுந்தால் ஏற்படும் அதிர்வலைகளைப் போல் அவனது தாக்கத்தால் அணைத்துக் கொள்ளப்பட்டவர்களாய் அவனது நட்பு வட்டம் விரியும்.

பல்வேறுபட்ட தொழில்களில் இருப்பவர்களுக்கும் சாம்ராஜே காட்சிப்பொருள். ஏனென்றால் அவனது உடற்கட்டு அதிசயிக்கக்கூடியது. அவனது அசைவுகளைக் கண்டு பொறாமைப்பட்டவர்களை எண்ண முடியாது. அந்த ஜிம்மினுடைய தலைவரே வயிறெரியுமளவுக்கு அவன் உடல் பாகங்கள் இறுகி ஒரு உறுதியான ஆண்மகனின் தோற்றம் பெற்றிருக்கும்.

மூன்றாவது ஆண்டின் துவக்க நாளான இன்று நண்பர்கள் அனைவரும் நினைவஞ்சலி சுவரொட்டியை எடுத்து அனைத்து இடங்களிலும் ஒட்ட ஆரம்பித்தனர். சாம்ராஜ் இருந்த வரை அவனை முன்மாதிரியாக வைத்து தங்களது உடல் வலுவை அதிகரித்துக்கொள்ள அவனிடம் அறிவுரை பெற்றுக்கொண்டவர்கள் நிறைய பேர்.

“அண்ணே .. போராம்ஸ் கெட்டியாக என்ன பண்ணலாம்? நீதான் சொல்லுவியே.. சோடா பாட்டில உடைக்கிற அளவுக்கு பைசெப்ஸ் வீங்கணும்னு.. ஒண்ணும் வேலையாகல.. என்ன பண்ணலாம் சொல்லு”

“அஞ்சு மாசமா அடிக்கிறேன், விங்க்ஸே வெளில வரலணா. இன்னும் ரெண்டு கல்லு ஏத்தலாமா இல்ல டச் வச்சு பண்றது கரெக்டா இருக்குமா?”

“இத்தனைக்கும் எட்டு கிலோ தம்புல்ஸ்தான்.. பைசெப்ஸ் பார்ம் ஆகவே மாட்டேங்குது ?? ப்ச்… எலி, சுண்டெலி எல்லாம் நமக்கு வராது போல இருக்கு”

ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் அமைப்புக்குத் தகுந்தாற்போல் ஆலோசனை சொல்வான். கிட்டத்தட்ட ஜிம்மின் மாஸ்டர் இல்லாதபோது அவனே ஆக்டிங் மாஸ்டர். அனைவரும் அவனை எடுத்துக்கொள்ளும் விதமும் அப்படியே. பெரும்பாலும் அவர்களிருக்கும் மேன்மேக்கர் ஜிம்மின் மாஸ்டரைக்கூட அணுகமாட்டார்கள். இத்தனையும் ரியல் மாஸ்டருக்குத் தெரியும். இருந்தாலும் ஜிம் மாஸ்டர் சந்துருவும் சாம்ராஜும் நண்பர்களே.

சுவரொட்டியின் வலது முனையில் ரோனி கோல்மேன் சிரித்தபடி வலக்கையை மடக்கி முட்டியை தரையிலும் பின்னங்கையை மடக்கி முட்டியை வானத்திலும் காண்பிக்கும் சிறிய புகைப்படமும் அதை அடுத்ததாக

பீமன் நண்பர்கள் குழு
மான்சிங் பேட்டை,
குடமுருட்டி.

என்றும், அதற்கு சற்று மேலே

“உலகத்தின் ஆணழகன் ‘சாம்ராஜ்’ – மேலுலகத்திலும்!!!”

என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலும் உடற்பயிற்சி செய்பவர்கள் முரட்டுகுணம் மிக்கவர்களாக, அடிதடி சண்டைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பர். ஆனால் சாம்ராஜ் அவர்களுக்கு நேர் எதிரானவன். அவனுக்கு வன்முறை, பிரச்சினை என்பதே பிடிக்காது. மென்மையான குணம் கொண்டவன். அவனை நம்பி அவனது நண்பர்கள் ‘ஏரியா பிரச்சினை’ என்ற சமாச்சாரத்தில் இறங்குவதைக் கண்டிப்பதுண்டு. ஆனால், உடற்பயிற்சியைத் தவறாக செய்தால் மட்டும் சிறிது கோபித்துக்கொள்வான். மற்றபடி அடிப்பது குத்துவது என்பதே சாம்ராஜூக்குப் பிடிக்காது. சண்டை தேடி வந்தால்கூட அதில் ஈடுபடாத ஒரு விதிவிலக்கான மனநிலை கொண்ட உடற்பயிற்சிக்காரன்.

சந்துருவுக்கு சாம்ராஜைப் பிடிக்குமென்றால் முதல் காரணம் அவன் தனது உடற்பயிற்சிக்கூடத்திற்கு பெருமை சேர்த்துத் தந்ததுதான். இத்தனைக்கும் தனது உடலை மெருகேற்றிக்கொண்டதே தாழ்ந்த கூரையிட்ட அவனது வீட்டு மேல்மாடியில் அவன் உழைத்த நாட்கள் என்று சொல்லலாம். அவன் பயிற்சி செய்யும் முறையே மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. எந்தவொரு நவீன கருவியையும் தொடமாட்டான். வெறும் கர்லாக்கட்டை மட்டுமே அவன் பயிற்சிக்கருவி. அதைத் தவிர்த்துப் பார்த்தால் இயற்கையான செயல்முறையான தண்டால், பைடெக்ஸ், ஸ்கிப்பிங், செங்கல்லை தம்புள்ஸாக உபயோகித்து கைக்கு பலம் கொடுப்பது இது போன்ற மிக எளிய பயிற்சிகளும் சில தியான யோகா பயிற்சிகளும் அவனை சிறந்த உடற்கட்டு மிக்க ஆண்மகனாக மற்றவர் முன் காட்டியது. சந்துருவின் ஜிம்மில் அவன் சேர்ந்ததே அவனது நண்பர்களின் வற்புறுத்தலில்தான் என்று சொல்லலாம். சேர்ந்த நான்காவது மாதத்தில் மாநில அளவிலான சிறந்த ஆண்மகனுக்கான போட்டி ஆரம்பமானது.

“டோர்னமென்ட் வருது.. வேற யாரு நம்ம ஜிம்மிலேர்ந்து” என்று சந்துரு குழப்பமில்லாமல் தேர்வு செய்ய முடிந்தது.

“மச்சி, எவ்ளோதான் ப்ராக்டிஸ் பண்ணாலும் சாம் அண்ணன தாண்டனும்னா இன்னும் பல வருஷம் ஆகும்போல இருக்கே… ஹ்ம்ம்..” என்று அங்கு உடற்பயிற்சியில் ஈடுபடும் இளவட்டங்கள் தம்மைத்தாமே சலித்துக்கொண்டதுண்டு.

போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட அதே “வெகு எளிமையை” நடுவர்களுக்கும் கொடுத்துவிட்டான்.

அவன் வாங்கிய மாநில அளவிலான ஆண்மகன் பட்டத்தை சந்துரு பல நாட்கள் பேசி சிலாகித்ததுண்டு.

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி சுவர்த்தாளில் இடம்பெற்ற அவனது நண்பர்களின் பெயர்கள் பட்டியலில் அடங்காது. ஒரு நடிகனுக்கு செய்வதுபோல், அவனது நண்பர்கள் செய்திருந்தனர். இதுதவிர சிங்கம் கர்ஜிக்கும் பின்னணியில் சாம்ராஜின் புகைப்படம் பொறித்த 20*10 அளவிலான வினைல் பேனர் பொது இடத்திலமைந்த பரந்த தின்ணையை நிரப்பியது.

அனைவருக்கும் தனது வித்தையை முழுமையாக கைமாற்றிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் சாம்ராஜ் உறுதியாக இருப்பது அவனது போலியான அதட்டல்களினால் உறுதிபெறும். அவ்வாறு பலர் அவனிடம் வசவு வாங்கிக்கொண்டே செய்ததுண்டு. அது ஊமை அதிகாரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை அறிந்து கொள்ளாதவர்களில் ஒருவன் சரவணன். அவனுக்கும் சாம்ராஜின் நினைவஞ்சலி சுவரொட்டிக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

“எண்டா தம்பி!! என்ன ஸ்குவாட் அடிக்கிற?? உக்காரும்போது மூச்சு விடு. திரும்ப எந்திருக்கும்போது இழுத்து மூச்சபிடி. இதான் மொற, மொத தடவ அடிக்குறப்போ, ராடு வச்சு மட்டும் அடி. புதுசா பண்றனா, பண்ணாதே, உடம்பு வலி பின்னி எடுக்கும். கொஞ்ச நாள் போகட்டும், பண்ண ஆரம்பி. செஸ்ட், சோல்டரு, ஆர்ம்ஸ் எல்லாம் முடியட்டும்.”

ஸ்குவாட் என்பது இருபக்கமும் எடைத்தட்டு பூட்டப்பட்ட உலோகக்கம்பியை இரண்டு கைகளின் உதவியுடன் தோளில் ஏந்தி பிடிப்புக்காக ஒரு பட்டையை இடுப்பிலணிந்து அமர்ந்து எழ வேண்டும். இப்பயிற்சியின் மூலம் இரண்டு கால்களின் தொடைப்பகுதிகள் இறுகி ஒரு அமைப்பைப் பெறும். இதை கட்டிங்ஸ் என்று சொல்வார்கள். இப்பயிற்சியை முழுமையாக சரவணனால் செய்ய முடியவில்லை.

அதிக நாட்கள் பழகியவர், இப்போதே அறிமுகமானவர் போன்றவற்றைப் பற்றி எல்லாம் சாம்ராஜுக்கு அக்கறை கிடையாது. அவனைவிட சிறியவர்களாக இருந்தால் உரிமை கொண்டு உடற்பயிற்சி நுணுக்கங்களைச் சொல்ல அதிகாரம் செய்வதை தவறென்று நினைக்கமாட்டான். ஆனால், சரவணன் புதிய ஆள். அவனைவிட 7 அல்லது 8 வயது குறைவாக இருக்கலாம். இருந்தாலும், சாம்ராஜ் சற்று அதட்டலாக சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டானோ என்னவோ, அவன் முகம் மாறியிருந்தது.

பிடிவாதமாக செய்துகொண்டிருந்தான். தொடர்ந்து சாம்ராஜைப் பார்த்துக்கொண்டே செய்தான்.

“முடியலனா விட்ரு சரவணா.. சாம் அண்ணன் சொல்றமாரி நீ செய்ய இன்னும் கொஞ்ச நாள் ஆகும்” என்று அவனது சக நண்பன் பீட்டர் கூறினான். இதற்குப் பிறகு அவன் சாம்ராஜிடம் பேசியதே இல்லை. சிறிது நாட்கள் கழித்து அவன் ஜிம்முக்கு வருவதையே நிறுத்திவிட்டான்.

பலவர்ண சுவரொட்டியின் மேலே இருபுறமும் சில்வர்ஸ்டர் ஸ்டாலனும் அர்னால்டும் சிறிதாகவும் நடுவில் இருபுறமும் பெண்களிருவர் பூ தூவ இரு கலர் குத்து விளக்குகள் எரிய சாம்ராஜின் புகைப்படம் ஒரு நீள்வட்டத்தினுள் அச்சாகியிருந்தது.

சாம்ராஜுக்கு ஆணழகன் பட்டம் கிடைத்தது முதல் அனைவரும் அவனை தங்களது ஆதர்ச நாயகனாக நினைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கொண்டாடுவதை அவன் விரும்பாவிட்டாலும் மறுக்கவில்லை. சந்துருகூட தன்னடக்கத்துடன் மட்டுமே சாம்ராஜிடம் பேசுவான். பொதுவாகவே, ஜிம்மைப் பற்றியவரை உலக அளவில் பேசப்படும் ரோனி கோல்மேனை அனைவரும் ரசிக்கும்போது சாம்ராஜ் மட்டும் சிலவர்ஸ்டர் ஸ்டாலனையும், அர்னால்டையும் விரும்புவான். இவர்கள் கொண்டாடும் ரோனி கோல்மேனை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது. “சும்மா, கட்டு ஊளைச்சத பயடா அவென். ரொம்ப நாள் தாங்காது பாரு!.. என்று கோல்மேனைப் பற்றின தனது வரையறையை சொல்வான். இருந்தாலும் சாம்ராஜின் மேல் தனிப்பட்டதொரு பிரியம் அங்குள்ள அனைவருக்கும் உண்டு.

தாமோதரனைத் தவிர சாம்ராஜைப் பிடிக்காதாவர்கள் கிடையாது என்று சொல்லலாம். சரவணனின் அண்ணன் தாமோதரன்.

சாம்ராஜின் நினைவுதின சுவர்பிரசுரம் ஒவ்வொரு ஆண்டும் சாணிபூசலுக்கோ அல்லது கிழிக்கப்படுவதற்கோ உள்ளாவதால் அவனது நண்பர்கள் வன்முறையில் இறங்குவது பழக்கமாகிவிட்டது. அதைவிட இரவு நேரங்களில் காவல் காப்பதற்கும் தவறமாட்டார்கள். பெரும்பாலும் பிரசுரம் சுவரில் பதிவான ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் கிழிபடும்.

பல நாட்கள் உபாதைகள், வெளியுலகத் தகராறுகள் ஏதுமின்றி வாழ்ந்த, அமைதியை மட்டுமே தன் வாழ்நாளில் விரும்பிய சாம்ராஜ் சரவணன் வருகையை நிறுத்திய சில நாட்களில்தான் குடமுருட்டி பாலத்தின் அருகில் பிணமாய்க் கிடந்தான். கட்டுடல் அங்கங்கே கீறப்பட்டு பிளந்திருந்தது. சாதாரணமாக 22 இன்சுகளைக்கொண்ட அவனது கையின் சுற்றுவட்டம் குதைக்கப்பட்டு இரத்தப்படலம் தெரிந்தது. ஆங்காங்கே தடித்துப்போன சதைவிரிசல்களும் அடையாளமில்லாத வகையில் தரிசாக்கப்பட்ட அவனது அகன்ற மார்பும் சிதைந்து போயிருந்தது. முழுமையாக அவனது உருவம் ஒரு அரூப நிலையை அடைந்து அவ்வடலேறு அலங்கோலமாய்க் கிடந்தான்.

அன்று குடமுருட்டிப்பாலமே நிறைந்து காணப்பட்டது.

ஆனால், சாம்ராஜின் கொலைக்குப் பின்னால் இருப்பது துல்லியமாக யார் என்று தெரியவில்லை. ஒருவேளை சரவணனாக அடுத்த பார்வையில் தாமோதரனாக, ஏன் சந்துருவாகக்கூட இருக்கலாம் என்று உறவுகளின் அமைப்பைப் பொருத்து யூகங்கள் மாறுபட்டுக்கொண்டே வந்தன. இவ்வாறு மான்சிங் பங்களா மக்களின் புதிராக சாம்ராஜின் கொலையும் அதன் வழக்கும் மாறியதே அன்றி வேறெதுவும் புதிய மாற்றமோ பயனோ ஏற்படவில்லை.

இதற்கிடையில் தாமோதரன் குழுவுக்கும் சாம்ராஜ் சார்பாக டைலர் குணாவின் குழுவுக்கும் பல தனிப்பட்ட மோதல்கள் நடந்தாலும் அது பிரயோஜனமின்மையை மட்டுமே கொடுத்தது.

நண்பர்களின் கைகளிலிருந்த சுவரொட்டி தீர்ந்தவுடன் ஒவ்வொருவராக முறை மாற்றி காவல் காக்க ஆரம்பித்தார்கள். சாம்ராஜ் சுவரொட்டியில் மெலிதாக உதட்டை வளைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.

மொத்தமான 32 வருட வாழ்நாட்களில் அவன் புகை பிடித்ததில்லை. ஒயின்ஸ் கடையை நெருங்கியதில்லை. ஜிம்மில் இருக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயம் செய்தும்கூட சினிமாவுக்கோ, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்கோ சென்றதில்லை. உடற்பயிற்சியும், வைரம் பட்டை தீட்டும் வேலையும், தம்பியின் குழந்தைகளுமாக இருந்தது அவனது சிறு உலகம்.

இன்று அது பஸ்பமாகி நீர்த்துப்போனதும், அவன் வெற்றிடம் ஆளுமைக்கான பொருக்கோடு நிரப்பப்பட்டதும் ஒரு சேர நடந்திருப்பது என்னவோ உண்மைதான்.

இப்போது இரண்டு வாரங்களில் ஒரு விரிசல்கூட விழுந்திராத சாம்ராஜின் நினைவுதின சுவரொட்டியைப் பசித்த ஆடொன்று கடித்து இழுக்கவாரம்பித்தது. சுவரொட்டியில் எந்தவொரு கைகளும் விழுந்ததற்கான அடையாளங்கள் இல்லாமலிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.