திருஷ்டி
பிறரைக் காட்டிலும் தொலைதூரம்
தன்னால் பார்க்க முடிகிறது என்று
இளமையில் இறுமாப்பு கொண்டிருந்தான்
திரண்டு வரும் மேகங்களும்,
உருமும் இடியும்,
பார்வை பறிக்கக்கூடிய மின்னலும்
சுழன்று வரும் புயல் காற்றும்
பிறருக்கு முன்பே
காண்கிறான்
இவை தன் புகல்கள் அனைத்தும்
அழிக்கப்போவதை
உணர்கிறான்
பொங்கி வரும் அலையைத் தடுக்க
முடியாதவனாக
நிற்கும் பொழுதுதான்
அறிகிறான்
தூரதிருஷ்டி ஒரு வரமல்ல
oOo
சுயம்
கண்ணன் விரைந்தோடி வந்தான்,
வரவேற்றான்,
பிள்ளைகுட்டி எப்படி ஏதென்று
குசலம் விசாரித்தான்.
விளையாட்டு நாட்களை
நினைவு கூர்ந்தான்.
போதும் போதுமென்ன நில்லாது
உணவளித்தான்.
சுதாமா முடிந்து வைத்திருந்த
பிடி அவலும் அவிழ்த்து உண்டான்
கால் வலிக்க தன் வீட்டை
நெருங்கும்பொழுது கண்டான் சுதாமா:
அதே இடிந்த வீடு
ஒட்டுப்போட்ட புடவை போர்த்திய
மனைவி
கூச்சலிட்டுக்கொண்டு கிழிந்த ஆடைகளுடன்
ஓடும் குழந்தைகள்
நாளைக்கு சந்திக்கவேண்டிய
போராட்டங்கள் நினைத்துக்கொண்டு
மெளனமாய் கண்ணனுக்கு
நன்றி கூறினான் சுதாமா.