கவியின்கண் – 2 “கொள்வன் கொல்லோ?”

அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஔவையார்  பாடியதாக இது-

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?

(புறநானூறு – 232)

ஏ. கே. ராமானுஜனின் ஆங்கில வடிவம் –

Let day, let night, come no more
Let all my days come to nothing
We have put peacock feathers
on his headstone
and poured bark-wine
in little bowls for him:
will he accept them,
who didnt accept a whole country
of mountain peaks?

முதல் பார்வையில், இந்தக் கவிதையை ஒரு இரங்கற்பாவாய் வாசிக்கலாம். ஔவை மனம் குலைந்திருக்கிறாள் – நெடுமான் அஞ்சி இறந்து விட்டான் என்ற கோபத்தில் இருக்கிறாள். அவளது நேசத்துக்குரிய அரசன் அஞ்சி இனி இல்லை, சடங்குகளால் என்ன பயன் என்று குமுறுகிறாள். பாடலின் நேரடிப் பொருள் இது, இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சற்றே ஆழச் செல்வோம். சங்கச் சித்திரங்களில் ஜெயமோகன், காலத்தின் மூத்த சகோதரன் என்று மரணத்தைச் சொல்கிறார். மறதி அதன் இளைய சகோதரன். இருவரில் இளையவன்தான் ஆற்றல் மிகுந்தவன் என்கிறார் ஜெயமோகன். மறதி, மரணத்தின் உடன்பிறந்தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இப்பாடலை வாசிக்கும்போது இக்கேள்வி கேட்க முடிகிறது: ஔவையின் குமுறல் மறதிக்கு எதிராகவா?

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!

என்கிறாள் ஔவை. நாட்களை நிறுத்து என்று காலத்தை இக்கணத்தில் உறையச் சொல்கிறாள். இதைக் கோபம் என்று சொல்லலாம். தன் அன்புக்குரியவன் சென்றபின் இனி இவ்வுலகில் எனக்கு எதுவுமில்லை, எல்லாம் முடிந்து போகட்டும். இத்தகைய துயரில் ஒரு செவ்வியல்தன்மை இருக்கிறது. வாழ்வின் அர்த்தமின்மை, சாக்காடு ஏன் குறிப்பிட்ட ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வியின் விடையின்மை, இவனில்லா உலகை ஏற்க இயலாமை – இவை இச்சினத்தின் இயல்புகள்.

இழப்பின் துயரை வெளிப்படுத்தும் இதே பாடலை வேறொரு தளத்தில் காணும்போதுதான் ஔவை மறதியைச் சினக்கிறாளா என்ற கேள்வி எழுகிறது. அஞ்சியின் மரணத்தைக் கண்ட அவளது அகக்கண்கள் அவனது நினைவும் இனி மறக்கப்படும் என்பதைக் காண்கின்றனவா? மெல்ல, ஆனால் உறுதியாக, இம்மன்னனின் வெற்றிகள் அனைத்தும் மறக்கப்படும், அவனது நினைவும் மறைந்தே போகும். இந்த எண்ணம்தானா ஔவையைக் கோபப்படுத்துகிறது? காலதேவன் மாபெரும் பசி கொண்டவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள் – உண்டு அடங்காப் பசி, எலும்புத் துண்டு எதையும் வாழ்வின் தடமாய் விட்டுச் செல்லாப் பெரும்பசி அது. இந்தப் பசிக்கு இரையாகாமல் பிழைத்தவர் எவர்? மரணத்தையொட்டிய சடங்குகள் அனைத்தும் காலத்தின் நில்லாப் பயணப் பாதையில் நினைவைக் கைப்பற்றிக் கொள்ளும் மானுட யத்தனங்கள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். காலம் உறைந்தாலன்றி அஞ்சியின் நினைவழிப்பை நிறுத்த முடியாது.

மனிதர்கள் தம் உள்ளத்தின் ஆழத்தில் இறவாமை வேண்டுபவர்கள். Godard, “Breathless’ என்ற படத்தில் “நான் இறவாதிருந்து மரணிக்க விரும்புகிறேன்” என்று சொல்வார். குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பம் வம்சவிருத்திக்காக என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், நம் குழந்தைகள் ஒரு சிறிய அளவில் நம் இறவாமையை உறுதி செய்கிறார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நம் குழந்தைகளின் இதயத்தில் வாழ்ந்து அவர்களுடைய குழந்தைகளில் தொடர்வோம் என்ற அடியாழ விருப்பம் நமக்கு இருக்கலாம்.

நம்மில் பலர் நினைவுகளை விட்டுச் செல்ல வாழ்கிறோம். இதனால்தான் நாம் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறோம், ஆளுக்குத் தகுந்த மாதிரி வேறு வேறு வகையில் நடந்து கொள்கிறோம். நினைவே இறவாமையாதலால் பிறர் உள்ளத்தில் நம் நினைவை விட்டுச் செல்லும் தேவை நமக்குண்டு என்ற உண்மையைப் புறக்கணிப்பதற்கில்லை. காலத்துக்கெதிராய் ஒரு பரிதாப யுத்தம்.

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கே நிலைமை இப்படி என்றால், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று பொது வாழ்வில் பெரும்கூட்டத்தால் நேசிக்கப்படுபவர்களுக்கு நினைவழிப்பு என்பது எவ்வளவு பெரிய தகிப்பாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். தாம் மறைந்தபின்னும் நிலைக்கக்கூடிய சாதனைகளையும் நினைவுச் சின்னங்களையும் விட்டுச் சென்று, திறனழிந்த பின்னும் தம் புகழ் வாழும் என்று உறுதி செய்து கொள்கின்றனர். போர் தொடுப்பது என்ற ஒரு திடீர் தீர்மானமாக இது இருக்கலாம், மிகப்பெரும் விருதுகள் பெறும் ஆவலாக இருக்கலாம், எண்ணிக்கை அடிப்படையிலான சாதனைகளாக இருக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ, நாம் இறவாமையைத் தேடுகிறோம்.

“… சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
… நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?”

என்று ஔவை கேட்பதில் வேறொரு சுவையான கேள்வி தொக்கி நிற்கிறது. நம் நினைவுகளில் வாழ்பவன் யார்? இறந்தவனா, அல்லது அவனது பிம்பமா? Gateway to India என்ற பிபிஸி தொடரில் ஒரு அருங்காட்சியகத்தின் க்யூரேட்டர் ஒருவர் சொன்னார், “நாம் கேட்கும் கேள்விகள் நம் வரலாற்றைத் தீர்மானிக்கின்றன”. ஆம், இறந்த காலம் நிகழ்காலத்தைச் சார்ந்திருக்கிறது. சமகால யதார்த்தங்களுக்கு இசைவாய் நெகிழ்ந்து உருவம் கொள்கின்றன நம் நினைவுகள். மெய் நிகழ்வுகளும் மனிதர்களும் குறியீட்டு மதிப்பு பெறுகின்றனர். குறியீடுகளின் பொருள் நம் தேவைக்கேற்ப மாறும்போது அவற்றுடன் தொடர்பு கொண்ட நினைவுகளும் மாறுகின்றன.

ராமாயண கதாகாலட்சேபம் ஒன்றில் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாக இதைச் சொன்னார் ஒரு பாகவதர் – நாமெல்லாம் காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், மண் தரையில் தூங்க வேண்டியிருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் காரணமான நம் அப்பா, அவர் சந்தோஷமாக மெத்தையில் தூங்கிக்கொண்டிருப்பார் என்று லட்சுமணனிடம் சொல்கிறானாம் ராமன். இதை நான் என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, “அது எப்படி அப்படி இருக்கும்? ராமர் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார்” என்று அதை மறுத்தார்.

ராமர் நமக்கு என்னவாக இருக்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர, வால்மீகியின் ராமர் யாராக இருந்தார் என்பது முக்கியமாய் இல்லை. நாம் கும்பிடும் கடவுளர்கள் தொடங்கி இன்றைய அரசியல் தலைவர்கள் வரை இதுதான் உண்மை. கற்களில் சிலையாய்ச் செதுக்கப்பட்ட தெய்வங்களும் மன்னர்களும் வேண்டுமானால் அசையாதிருக்கலாம், அவர்களின் குணங்கள் மாறத்தான் செய்கின்றன.

சமூக மாற்றங்கள், அவை எழுப்பும் கேள்விகள் நம் நினைவின் இயல்பை மாற்றுகின்றன. நம் கடந்த காலப் பேராளுமைகளும் நினைவுச் சின்னங்களுமே இதற்கு ஒரு காட்டு. காந்தி, அம்பெத்கர், நேரு முதலானவர்கள் தம் சமகாலத்தில் எவ்வாறு மதிக்கப்பட்டனர் என்பதையும் இன்று அவர்களுக்கு நாம் ஏன் மதிப்பளிக்கிறோம் என்பதையும் ஒப்பிட்டால், சுதந்திரத்துக்கு முன்னிருந்த சமூகம் இன்று எத்தகைய மாற்றமடைந்திருக்கிறது என்பதை உணரலாம். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று மறைவதையும், அவற்றின் மாறும் கோணங்களில் இந்த ஆளுமைகள் ஹீரோக்களாகப் போற்றப்பட்டு, வில்லன்களாகத் தூற்றப்படுவதையும் நாம் உணர முடியும். இன்றைய நிலை இவர்களுக்கு புகழ்ச்சியும் இகழ்ச்சியும் பெற்றுத் தருவது ஏனென்றால், கடந்த காலம் நம் மேல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம் சமகால நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன.

தன் பாடலின் முடிவில், காலத்தில் நிகழும் பார்வை மாற்றத்தைதான் ஔவை சினக்கிறாளா? தனக்கு அளிக்கப்பட்ட நாடுகளை ஏற்க மறுத்து நிராகரித்த மன்னன் நடுகல் இட்டு சிறுகள் உகுப்பதை ஏற்றுக் கொள்வான் என்று எப்படி இவர்களால் எண்ண முடிகிறது? அஞ்சியின் நினைவு அதன் இயல்பை மாற்றிக் கொண்டதா? ஞான மார்க்கத்தை வலியுறுத்திய ரமண மகரிஷி இன்று எந்த முரணுணர்வும் இல்லாத அவர் பக்தர்களால் பஜனைப் பாடல்கள் பாடித் துதிக்கப்படுகிறார்!

காலத்தின் போக்கில் அஞ்சியின் நினைவுகள் அழிந்து போகின்றன, அஞ்சி மறக்கப்படுகிறான். எனினும் அவனுக்கு என்றும் இணக்கமாய் இருந்திருக்க முடியாத நினைவுச் சின்னமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான் அவன் என்று சினக்கிறாள் ஔவை.

அவள் பாடலில் வாழ்கிறான் அஞ்சி.

– எஸ். சுரேஷ்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.