The New York Quarterly என்ற கவிதை காலாண்டிதழ், மற்றும் New York Quarterly Books என்ற அச்சு நூல்களின் பதிப்பாசிரியர் ரேமண்ட் ஹாமண்ட். இவர் பலரால் மதிக்கப்படும் கவிஞரும்கூட. Poetic Amusement என்ற விவாதநூல் எழுதியவர். இவரோடு அனிஸ் ஷிவானி நிகழ்த்திய ஒரு மின்னஞ்சல் நேர்முகத்தின் சிறு பகுதி இங்கு தமிழாக்கப்படுகிறது. நேர்முகத்தின் முழு ஆங்கில வடிவை இங்கு வாசிக்கலாம் .
பழகிய பாதைகளில் பயணிக்கும், மரபார்ந்த அச்சிதழ்களில் துவங்கி, avant garde இணைய இதழ்கள் வரை எண்ணற்ற இலக்கிய இதழ்கள் இருக்கின்றன. The New York Quarterlyயின் தனித்தன்மை என்ன? வேறெங்கும் கிடைக்காத எது உங்கள் இதழின் கவிதை வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடும்? ரோலிங் ஸ்டோன் ஒரு முறை அமெரிக்காவின் சிறந்த கவிதை பத்திரிக்கை என்று The New York Quarterlyயை அழைத்தது. அவர்களுக்கு இப்போதும் கவிதையில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், இன்றும் உங்களைச் சிறந்த பத்திரிக்கையாகக் கருதுவார்களா?
சிறந்த பத்திரிக்கை என்று எங்களைச் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். விசாலமான பார்வை கொண்ட இதழ் என்றோ, பரந்துபட்ட படைப்புகளுக்கு இடமளிக்கும் இதழ் என்றோ, அதிக அளவில் சாதாரண வாசகர்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை என்றோ சொன்னால் நன்றாக இருக்கும். ‘சிறந்தது’ என்று சொல்லும்போது உயர்ந்தது என்ற பொருள் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தனி நபர் ரசனை சார்ந்த முடிவு என்பது நம் எல்லாருக்கும் தெரியும் – அல்லது நமக்கு அது தெரிந்திருக்க வேண்டும். இதைச் சொன்னாலும், அவர்கள் அன்று அவ்வாறு அழைத்த நாள் முதல் இன்றும், உயர் அடுக்கில் உள்ள இலக்கிய இதழ்களுக்கு இணையான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
NYQ பற்றி முதன்முதலில் கேள்விப்படுவதற்கு முன், நான் எழுதிய எதுவும் பிரசுரமாகவில்லை, நான் வில்லியம் பாக்கார்டைச் சந்தித்திருக்கவில்லை. எனக்கு எந்த திசையில் செல்வது என்ன என்று எதுவும் புரியாமலிருந்தது. என் கையில் கிடைத்த பத்திரிக்கைகள் அத்தனையும் ஒரே மாதிரி இருந்தன, கவிதைகள் தட்டையாக, சுவையற்று இருந்தன. NYQவை முதலில் எடுத்துப் பார்த்தபோது அதை முன் அட்டை முதல் பின் அட்டை வரை வாசித்தேன் – அது என்னுள் இணக்கமான அதிர்வலைகளை எழுப்பியது. எனக்கு அதுதான் சிறந்த இதழ் என்பது தெளிவாகத் தெரிந்தது.
NYQவின் பதிப்பாசிரியர் ஆனபின் நான் இரு குறிக்கோள்களை நோக்கிச் செல்கிறேன் : விசாலமான பார்வை, நேரடித்தன்மை.
முதலில் என் பத்திரிகை, மற்ற எந்த இதழ்களை விடவும் வேறுபட்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முதல் தடவை NYQவை எடுத்துப் படிக்கும்போது நான் கவனித்த முதல் விஷயம் இதுதான் – ஒரு பக்கத்தில் லாங்குவேஜ் கவிதை இருக்கும், அடுத்த பக்கம் விஷுவல் கவிதை இருக்கும், அதற்குப்பின் லிரிக்கலாக ஒரு கவிதை இருக்கும். நடையிலும் உள்ளடக்கத்திலும் ஒரு பன்முகத்தன்மை இருந்தது.
அதற்கடுத்தபடியாக, கவிதைகள் ரொம்ப சாதாரணமாக இருக்கும். என்னால் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொரு முறை அதன் இதழ்களைப் படிக்கும்போதும் இன்னொரு அர்த்தம் கிடைத்தது. புதிர் போலவோ, குழூஉக்குறியிலோ எதுவும் இல்லை. கவிதை படிக்கும்போது நான் ஒரு முட்டாள் என்ற உணர்வு வரவில்லை – ஆனால் அதன் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லி என்னை யாசித்தன.
இதழின் ஆசிரியக் குரலில் அந்த பரந்துபட்ட பார்வையையும் நேரடித்தன்மையையும் தக்கவைத்துக் கொள்ளவே நான் முயற்சிக்கிறேன். லூனா பார்க்கில் எழுதிய ஒரு கட்டுரையில் கிரேக் வைஸ், 1973ல் வந்த பழைய இதழ்களுக்கும் இந்த இதழுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்று பார்த்து தான் வியந்ததாக எழுதியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை ஒரு அரிய பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். ரோலிங் ஸ்டோன் வகை ரசனையில் நங்கள் இன்னும் உச்ச அடுக்கில்தான் இருப்போம் என்று என்னை இது நம்பச் செய்கிறது.
நீங்கள் கவிஞர்களுடனான பேட்டிகளுக்கு வெகுவாக முக்கியத்துவம் அளிப்பது என்னைக் கவர்கிறது. வழமையான மேற்பூச்சு பாவனைகளைக் கடந்து செல்லும் நேர்முகங்கள் அவை. கவி உத்தியினுள் ஆழச் செல்கின்றன. ஒவ்வொரு கவிதைச் சஞ்சிகையும் கணிசமான அளவில் விமரிசனங்களும் நேர்முகங்களும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதுதான் அந்த இதழில் பதிப்பிக்கப்படும் கவிதைக்குத் தேவையான சூழமைவின் ஆழம் (contextual depth) அளிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்கச் சரி. ஒவ்வொரு நேர்முகத்திலும் அந்த ஆழத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். உத்தியை கவனப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்கிறோம், ஆனால் அது முழுமையான உண்மையல்ல. ஆம், ஓரளவுக்கு உத்தியில் கவனம் செலுத்துகிறோம் – “நீங்கள் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டுதான் கவிதை எழுதுகிறீர்களாமே, உண்மையா?” என்பது போன்ற கேள்விகளும் கேட்கத்தான் செய்கிறோம். ஆனால் எங்கள் நேர்முகங்களின் நோக்கம் அதைவிட நுண்மையானது, தன்னிலும் தன் சொல்லிலும் கவித்துவம் கொண்ட ஒன்றைத் தேடிச் செல்வது.
செய்நேர்த்தி என்றுண்டு, அது போலவே படைப்பூக்க இயக்கம் என்றும் உண்டு. படைப்பூக்க இயக்கத்துக்கு உள்ளாடைகளோடும் தட்டச்சோடும் ஒரு சம்பந்தமும் கிடையாது. படைப்பூக்க இயக்கம் அகவயப்பட்டது, உள்ளுணர்வு சார்ந்தது. எங்கள் நேர்முகங்களில் அதன் புதிரை விடுவிக்க விரும்புகிறோம். அந்தக் கவிஞன் ஏன் இப்படி இருக்கிறான், ஏன் இப்படி எழுதுகிறான்? அவனது உள்ளுணர்வும் இயல்பூக்கமும் எத்தகைய தன்மை கொண்டவை? அவர்களுள் இயங்கும் படைப்பூக்கச் செயல்பாட்டைத் தேடிக் கண்டடைவதை நோக்கிச் செல்கிறோம்.
000
Poetic Amusement என்ற நூலில், அடிப்படை முதலீட்டின்மையை ஓரளவுக்குக் காரணம் சுட்டி நாம் சமகால அமெரிக்க கவிதைகளில் உணர்ச்சிவேகம் இல்லாதிருப்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். இதன் பொருள் என்ன? வேறிடத்தில், நேர்மையின் தேவையைப் பற்றி பேசுகிறீர்கள். இலக்கிய பொறுப்பு என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன?
இந்தக் கவிதைகள் கூர்மையற்று, தெளிவற்று, சராசரித்தன்மை கொண்டிருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? “வேகமின்மை” என்பதன் வரையறை இது. உணர்ச்சிவேகம், முதலீடு, நேர்மை – இவையனைத்தும் கச்சிதமாக ஒன்றுடனொன்று பொருந்துபவை. இந்தப் பொருத்தம் தியானதேவதையால் சித்திப்பது (muse). கவிஞனின் அகப் படைப்பூக்கச் செயல்பாட்டையே நான் தியானதேவதை என்று அழைக்கிறேன், உள்ளுணர்வு என்று பில் இதைச் சொல்வதுண்டு. இது வேறு, இதன் புற வடிவான உத்தி வேறு. ஒரு மொழியின் சொற்களைக் காகிதத்தில் எழுதும் உத்தி கவிதையின் புற வெளிப்பாடு மட்டுமே.
எங்கள் பரிசீலனைக்கு உணர்ச்சி வேகம் மிகுந்த கவிதைகள் வருவது மிக அபூர்வ அனுபவம். அப்போதும் அது இதழில் இடம் பெறும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது – அது செய்நேர்த்தியற்று இருக்கலாம். எழுதுவதற்கு எதுவோ இருக்கிறது என்று எழுதுபவர்கள்தான் இப்படிப்பட்ட வேகம் கொண்ட கவிதைகளை எழுதுகிறார்கள், ஆனால் அதை வெற்றிகரமாகச் சாதிப்பதற்குத் தேவையான பயிற்சியோ அனுபவமோ இவர்களுக்கு இல்லாதிருக்கலாம்.
துரதிருஷ்டவசமாக, கவிதை எழுதுவது எப்படி என்ற உத்தியை மட்டும்தான் நீங்கள் கற்றுத் தருகிறீர்கள் எனும்போது, தியானதேவதையுடன் கவிதையின் வேகமும் வெளியேறிவிடுகிறது. வேலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும், அல்லது வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் முதலீடு என்பதைத் தவிர வேறு ஒரு உந்துதலும் இல்லாமல் கவிஞர்கள் கவிதை எழுதும்போது அவர்களின் அகம் கவிதையில் தன்னை இருத்திக் கொள்வதில்லை.
பணி விண்ணப்பப் படிவம் நிரப்புவது போல் கவிதை எழுதும்போது கவிஞன் தன் முழு இருப்பையும் கவிதையில் இருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு தவறிப் போகிறது. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருக்கும்போது என்னிடம் நேர்மை இருக்க முடியாது. கவிதையில் நேர்மை முக்கியம். ஆனால், நேர்மையாக இருப்பது என்பது அக வெளிப்பாடு – சமகால முன்னுதாரணச் சட்டகத்தில் (paradigm) கவிஞர்கள் தங்களைக் கவிதைக்கு ஒப்புக்கொடுப்பதற்கான ஊக்குவிப்பு எதுவும் இல்லை, கவிதைக்கு தங்கள் நேரத்தைக்கூட அவர்கள் கொடுப்பதற்கில்லை.
தமிழாக்கம் : எஸ். சுந்தரமூர்த்தி