கவியின்கண் – 4 ‘வெம்திறல் கடுவளி’

– எஸ். சுரேஷ்-

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
மலையுடை யருஞ்சுர மென்பநம்
முலையிடை முனிநர் சென்ற வாறே.

ஔவையார், குறுந்தொகை 39

வழக்கம் போல இப்பாடலின் எளிய ஆங்கில வடிவம் –

The hot wind
blowing strong and hard
rattles the dried fruits
of the ‘vaagai’ tree
in this hilly place
where the forests
are difficult to cross

such is the path
of my man
who went away
refusing to lie down
on my breasts

ஔவை பாடல் வரிசையில் இவ்வாரம் பிரிவாற்றாமை.

தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற காதலனை எண்ணி ஏங்கும் தலைவியைச் சென்ற வாரம் பார்த்தோம். இதுவும் அது போல்தான் – ஆனால் இங்கு தலைவன் இன்னும் பிரிந்து செல்லவில்லை, அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறது. தலைவியின் முலையிடை முனிந்து அவன் தேடிச் செல்வது புகழ் அல்லது செல்வமாக இருக்கலாம். முதல் வாசிப்பில் நம் எண்ணங்கள் இவ்வாறுதான் செல்லும். பிரிவுக்குப் பல காரணங்கள்: நவீன காலத்தில் பெற்றோர் மாற்றல் பெற்றுப் பிரிகின்றனர், பிள்ளைகள் மேற்கல்வி தொடரப் பிரிகின்றனர்.

வேறொரு தளத்தில் இந்தப் பாடல் பொருளும் புகழும் தேடிப் பிரிய வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. தன் காதலியைப் பிரிந்து செல்லும் அளவுக்கு தீவிரம் கொண்ட தேவை. புதிதாய் திருமணமானவன் என்றால் அவனுக்கு இதைவிடப் பெரிய இழப்பு இருக்காது. சூழ்நிலை அல்லது இலட்சியம்தான் இத்தகைய தியாகங்களைத் தவிர்க்க முடியாததாகச் செய்திருக்க முடியும். பல சங்கப் பாடல்கள் இந்தச் சிக்கலைப் பதிவு செய்கின்றன – ஒரு பக்கம் பெண் நிற்கிறாள், மறு பக்கம் வேற்றிடம் சென்று செல்வம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆண். பிரிவின் துயர் ஆற்றாது பாடுகிறாள் பெண்.

ஆனால் இந்தப் பாடல், பிரிவை ஒரு உணர்வு நிலையாக மட்டும் பார்க்கவில்லை – அது பாலுறவில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நமக்கு உணர்த்துகிறது. தலைவியின் மனநிலையை இறுதி அடி சொல்லிவிடுகிறது: என் நெஞ்சில் தலை வைத்து உறங்குதலை வெறுத்தான் என்று சொல்வதில்லை ஔவை – என் முலைகள் என்று சொல்கிறாள். இந்தப் பாடலின் மிக முக்கியமான படிமம் இது. அவளது காமம் தணிக்க அவன் அருகிலில்லை. இதயத்தின் தனிமை மட்டுமல்ல, உடலின் தனிமையையும் இந்தப் படிமம் உணர்த்துகிறது. அவள் அணைத்துக் கொள்ளத் தோளில்லை, அவள் முலைகளில் உறங்க ஆளில்லை – இந்த இன்மையில் முலைகளும் கனக்கின்றன. தலைவன் திரும்பி அவளை அணையும்போதுதான் அவள் உடலின் சுமை குறையும்.

பாடலின் துவக்கச் சொற்கள், “வெந்திறற் கடுவளி” என்று தலைவியின் மனநிலையை மிக நுட்பமாகக் கவிதையுள் நிகழ்த்தி விடுகின்றன. வெம் திரல் கடும் வளி : வெம்மையான, வலிமை மிகுந்த, கடுங்காற்று இப்போது வேறு பொருள் உணர்த்துகிறது. புறப்பார்வையில் எது சாதாரண பிரிவாக இருக்கிறதோ, அதுவே “வெந்திறற் கடுவளி” என்று உள்வாங்கப்படும்போது தனிமையின் தாபத்தை வெளிப்படுத்துகிறது. அதன் துயர் தணிக்கத் தலைவன் இல்லாமல் அவள் வாகை மரத்தின் முற்றல் காயாய் உலர்ந்து போகிறாள் – அவை பெருங்காற்றில் ஓசையுடன் ஒலிப்பதுபோல் அவளுடல் தாபத்தால் அதிர்கிறது. உள்ளும் புறமும் ஒன்றாகிய கவித்துவம் சங்கப்பாடல் அமைப்பின் தனித்தன்மை. அதிலும் குறிப்பாக அகப்பாடல்களில் சொற்களைப் பொருளும், காட்சியை உணர்வும் கூடுதல் இயல்பு.

பெண்மன விழைவைப் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கவிஞர்களும் உணர்ந்திருக்கிறார்கள். Velchuri- Shulman தொகுத்த ‘A Poem at the Right Moment’ என்ற நூலில், போஜ மன்னன் காலத்தில் நடந்ததாக ஒரு குறிப்பு வருகிறது. போஜன் தன் தலைநகரில் மாறுவேடத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு காகம் கரைகிறது. அதைக் கேட்டு அங்கிருக்கும் ஒரு பெண் மயங்கி விழுகிறாள். அவள் மயக்கம் தெளிந்ததும், அவளது கணவன் என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், பதிவிரதைகளால் இப்படிப்பட்ட கடூரமான ஓசைகளைத் தாள முடியாது என்று பதில் சொல்கிறாள்.

போஜ மன்னனுக்கு இதைக் கேட்டு சந்தேகம் வந்துவிடுகிறது. அன்றிரவு அவள் வீட்டுக்கு அருகில் மறைந்து நிற்கிறான். இரவு வெகு நேரம் ஆனதும், அனைவரும் உறங்கியபின் அந்தப் பெண் மெல்ல வெளியே வருகிறாள். அவள் ஒரு கூடை நிறைய மாமிசம் வைத்திருக்கிறாள், அதை நர்மதையாற்றை நோக்கிக் கொண்டு செல்கிறாள். போஜன் அவளைத் தொடர்ந்து செல்கிறான்.

ஆற்றங்கரை சென்றதும் அவள் மாமிசத் துண்டங்களை ஆற்றில் விட்டெறிகிறாள். முதலைகள் அவற்றை உண்ண வருகின்றன. இவ்வாறாக முதலைகளுக்கு போக்கு காட்டிவிட்டு, அவள் ஆற்றில் இறங்கி அக்கரை செல்கிறாள். அங்கே அவளது வருகைக்காகக் காத்திருக்கும் காதலனைக் கூடுகிறாள்.

அடுத்த நாள் அவையில் போஜராஜன், “காலையில் காகத்தைக் கண்டு அஞ்சுகிறாள்” என்று காளிதாசனைப் பார்த்துக்கூறி, அந்த அடியை நிறைவு செய்யச் சொல்கிறான். என்ன நடந்திருக்கும் என்று ஊகித்த காளிதாசன், ‘இரவில் நர்மதையை நீந்திக் கடக்கிறாள்” என்று முடிக்கிறான்- ராத்ரே தாரதி நர்மதௌ. பெண்மனம் மென்மையாக இருக்கலாம், ஆனால் அதன் உணர்ச்சிகள் வலிமையானவை.

போஜனும் காளிதாசனும் சேர்ந்து பாடிய கவிதை இவ்வாறு வரும்:

காலையில் காகத்தைக் கண்டு அஞ்சுகிறாள்
இரவு, முதலைகள் நிறைந்த
நர்மதையைக் கடக்கிறாள்
மர்மமானவர்கள் இந்த சுந்தரிமார்கள்

இதே புத்தகத்தில் Velchuri- Shulman வேறொரு தெலுங்கு கவிதையைச் சுட்டி, பால்விழைவு இயல்பானது என்பது கவிஞர்களால் ஏற்கப்பட்ட கருத்து என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கவிதையில், மணநாள் இரவன்று மனைவி சம்போகத்தில் தடைகளின்றித் திளைக்கிறாள். இதனால் அவளது கணவனுக்கு சந்தேகம் வருகிறது. அவனது முகத்தைக் கண்டு அவன் மனக்குறிப்பை அறியும் அவள், ஒரு ஓவியம் வரைந்து காட்டுகிறாள். அதில் சிங்கக்குட்டி ஒன்று யானையைக் கொல்லப் பாய்கிறது. சில விஷயங்கள் இயற்கையானவை, அவற்றை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்கிறாள் அவள்.

பெண்கள் தங்கள் காமத்தைப் பேசுவதை நம் சமூகம் அனுபதிப்பதில்லை. ஆனால், ஆண்கள் பெண்களின் காமத்தைத் தங்கள் கவிதைகளில் வர்ணிப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். க்ஷேத்ரய்யாவின் பதங்களை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

நம் காலத்தோடு ஒப்ப்பிட்டால், காமம் குறித்து ஒரு பெண் மிக இயல்பாகப் பாடல் இயற்றுவதை அனுமதித்த சங்ககாலம் உண்மையாகவே பொற்காலம்தான். அக்கால விழுமியங்கள் இன்றுள்ளவற்றைவிட சற்றே நெகிழ்ந்திருந்தன என்று தெரிகிறது. காமத்தைப் பேசுவதில் ஒரு இயல்புத்தன்மை உள்ளது, அதிலும் முக்கியமாக பெண்கள் தங்கள் கவிதைகளில் அதைச் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கோ எல்லாம் மாறிவிட்டிருக்கின்றன, பெண்கள் தங்கள் உடல் குறித்து பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு உருவாகிவிட்டது.

அண்மைக் காலங்களில் பெண் கவிஞர்கள் பலர் பாலுணர்வை வெளிப்படையாகப் பேசி சமூக கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் துவங்கியிருக்கின்றனர். இவற்றில் சில கவிதைகளைதான் நான் படித்திருக்கிறேன். வாசித்த அளவில் இந்தக் கவிதைகளில் காமத்தைவிட கோபம்தான் அதிக அளவில் வெளிப்படுகிறது. சங்கக் கவிதைகளின் இயல்பான கவிமொழி எங்கோ தொலைந்துவிட்டது போலிருக்கிறது. இதற்கு கவிஞர்களைக் குற்றம் சொல்வதற்கில்லை.

இந்தச் சிக்கலுக்கு நம் சமூகத்தில் அவ்வளவு சீக்கிரம் விடை காண முடியாது. நாம் மேற்கின் கனவுகளைச் சுமக்கும் அதே நேரம், நம் சமூக ஒழுக்கங்களை மாற்றிக் கொள்ளவும் விருப்பமின்றி இருக்கிறோம். இன்றுள்ள நவீன நகர்ப்புறப் பெண் தன்னைப் பார்த்து யாரும் பொறாமைப்படும் இடத்தில் இல்லை.

பின்குறிப்பு:

காளிதாசன் இயற்றியதாகச் சொல்லப்படும் பாடலைச் சற்று சுதந்திரம் எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்தால் இது போலவும் இருக்கலாம்:

பட்டப்பகல் வெளிச்சத்தில்
காகத்தைக் கண்டு அஞ்சுகிறாள்,
இரவின் காரிருளில்
முதலைகள் நிறைந்த நர்மதை
நதிதீரத்தை நீந்திக் கடக்கிறாள் –
அறிவதற்கில்லை, அழகிய
இந்தப் பெண்களின் இயல்பை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.