அதிகாரத்தின் ஆயுதங்கள் – வேல ராமமூர்த்தியின் சிறுகதையை முன்வைத்து

-ஸ்ரீதர் நாராயணன்-

நான் படித்த பள்ளியில் சீருடையாக காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும்தான் இருந்தது. ஏனோ அந்த காக்கி கால்சட்டையை அணியவே பிடித்தம் இருக்காது. அக்கம்பக்கத்து பள்ளிகளில் அடர்நீலம், பழுப்பு வண்ணம் கொண்ட சீருடைகள் எல்லாம் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஏன்தான் இப்படி ஒரு நிறத்தை சீருடையாக தேர்ந்தெடுத்தார்களோ என்று பெரும் கோபம் கோபமாக வரும். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தேசிய மாணவப்படையில் சேர்ந்த போது அந்த எண்ணம் அப்படியே தலைகீழாகிப் போனது. இருள்பிரியாத அதிகாலை வேளையில் தெருநாய்களை எல்லாம் எழுப்பும் வண்ணம் க்ரீச்சிடும் பூட்ஸ்களோடு, கஞ்சிப் போட்ட விறைப்பு காக்கி உடுப்பில் பரேடுக்கு மிடுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

காக்கி சீருடை என்றால் வெறும் துணி மட்டும்தானா? இடையில் அணியும் பட்டை பெல்ட், லாடம் வைத்து அடித்த பூட்ஸ், இலச்சினை பதித்த தொப்பி என்று அது ஒரு பரிவார ஊர்வலம். அந்த சீருடை தளவாடங்களுக்கு என்று மதுரையில் தனியே ‘போலீஸ் கேப் மார்க்’ என்றொரு கடை உண்டு. ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி ஒருவர் அந்தக் கடையை நடத்திக்கொண்டிருந்தார். ‘லத்திக்கம்புன்னா சும்மா பார்வைக்குதான் சார். உங்க இன்ஸ்பெக்டர் அதை வச்சு என்ன செய்யறார்னு தெரியல… வாரத்துக்கு ஒரு கம்பு மாத்தனும்னு வர்றீங்க… அடிக்கிறதுக்கு நல்ல உருட்டுக்கம்பா வச்சுக்க வேண்டிதானே’ என்று, முறிந்த லத்திக் கம்பை மாற்றவந்த போலிஸ் கான்ஸ்டபிளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை ஒருமுறைக் கேட்க நேர்ந்தது. என்சிசி சீருடை தொப்பிக்கு புதுக் குஞ்சலம் வாங்க சென்ற நானும் நண்பனும் ஆர்வம் தாங்காமல், அந்த போலிஸ்காரர் தலைமறைந்ததும், கடைக்காரரிடம் கேட்டோம் ‘அவ்வளவு பலவீனமான கம்பா அது? என்னவோ சினிமாவில் அதை வைத்து சிலம்பம் எல்லாம் ஆடுவது போலக் காட்டுகிறார்களே’

‘போலிஸுக்கு முதல் ஆயுதமே அதிகாரம்தான் தம்பி. ஆயுதமெல்லாம் அப்புறம்தான்’ என்றார்.

அது உண்மைதான். நான் சந்தித்த பல போலிஸ்காரர்களிடம் பார்வையிலேயே அந்த அதிகாரம் மிளிர்வதைப் பார்த்திருக்கிறேன். மவுண்ட்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவனை மறித்து, லேன் மாறிப் போகிறாய் என்று குற்றஞ்சாட்டிவிட்டு சில்லறையாக இரண்டு ரூபாய்களை (அவ்வளவுதான் இருந்தது என்பதை பர்ஸை வாங்கி பரிசோதித்துக் கொண்டபின்னர்) பிடுங்கிக்கொண்டு அனுப்பிய கான்ஸ்டபிளிலிருந்து, கல்லூரி என்சிசி கம்பனி டே (company day) கொண்டாட்டத்திற்கு முக்கிய விருந்தினராக வந்த உதவிக் கமிஷனர்வரை அந்த அதிகார மிடுக்கை குறைவில்லாமல் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

எனது சித்தப்பா போலிஸ் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். போலிஸ் என்றால் சீருடை போலிஸாக இல்லாமல், டிஐஜி அலுவலகத்து கேம்ப் செகரெட்டரியாக இருந்தவர். அவரை சந்திக்கப் போன இடத்தில் முற்றிலும் புதிய போலிஸ் முகங்களை பார்த்திருக்கிறேன். மைக்கில் வரும் அறிவிப்புகளை குறிப்பு எடுப்பவர், அலுவலக தோட்டங்களை பராமரிக்கும் ஆர்டர்லி, போலிஸ் ஜீப் ஓட்டுநர், செகரெட்டரியாக இருந்த என் சித்தப்பா முதற்கொண்டு எல்லோரும் சீருடை அணியாத போலிஸ்காரர்கள்தான். ஆனாலும் அந்த துறையின் சாகச, அதிகார குணங்களை வெளிப்படுத்தும் தோரணையோடு வலம் வருபவர்கள்.

அந்த அலுவலகத்தின் தோட்டப் பராமரிப்பாளர் ஒருமுறை கவலையோடு ‘நாளைக்கு இன்ஸ்பெக்‌ஷன் வருவாகளா… அப்ப யூனிஃபார்ம்ல இருக்கனுமா’ என்றுக் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது இன்னும் வியப்பாக இருந்தது. சீருடை அணியத் தேவையில்ல்லாதபோதும் அவர்கள் எல்லோருக்கும் வருடத்திற்கு இரண்டு செட் சீருடைகள் அளிக்கப்படும் என்றும், ஆய்வு சமயத்தில் எல்லோரும் கட்டாயமாக சீருடையில் இருக்கவேண்டும் என்பது நடைமுறை எனப் புரிந்தது. ஆர்டர்லி செல்வத்துக்கு என்ன சிக்கல் என்றால், சீருடை அணியத் தேவையில்லாததால், அரசாங்கம் அளித்த சீருடைக்கான துணியை வெளியே விற்றுவிட்டாராம். இப்பொழுது இன்ஸ்பெக்‌ஷனுக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.

வேல. இராமமூர்த்தியின் ‘இருளப்ப சாமியும் 21 கிடாயும்’ சிறுகதையை வாசித்தபோது எனக்கு, போலிஸ் கேப்மார்க் கடைக்காரரும், டிஐஜி அலுவலகத்து ஆர்டர்லியும்தான் நினைவுக்கு வந்தார்கள். ஒரு பதவியின் அதிகாரம் ஆடைகளிலும் ஆயுதங்களிலும் மட்டும் பொதிந்திருப்பதில்லை. காலத்தின் சுவடுகளிலும் இருக்கிறது. அது விட்டுச் சென்ற தழும்புகளிலும், அந்த தழும்புகள் நினைவுபடுத்தும் போராட்டங்களிலும் இருக்கிறது.

கதை தொடக்கத்தில் களவைத் தொழிலாகக் கொண்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விவரணைகள் வருகின்றன. கல்தூண்களும், ஒட்டுக்கொட்டகைகளுமாக முளைக்கொட்டுத்திண்ணை, நிறைகுளத்தம்மன் கோவில் ஆலமரம், ஊர்க்கிணறு என்று மான்டேஜ் ஷாட்களில் சொல்லப்படுகிறது. இடக்கையை தலைக்கு அண்டை கொடுத்து படுத்திருக்கும் இருளாண்டித் தேவரின் தொடையில் இருந்த சூட்டுத்தழும்பிலிருந்து களவுக்கதை தொடங்குகிறது. பெருநாழிக்கு மேற்கே கவுல்பட்டி எனும் கிராமத்திற்கு இருளாண்டித்தேவர் தலைமையில் கள்வர்கள் குழு ஆடுதிருடப்போன கதையை விவரிக்கிறார் கதாசிரியர். ஒவ்வொரு வர்ணனையும் உதறிப்போட்ட வாக்கியம் போல அநாவசியச் சொற்கள் எதுவும் இல்லாமல் கண்முன்னே காட்சியை கொண்டு நிறுத்துகிறது. நடுநிசியில் வைரவன் கோவில் பொட்டலில் கூடுகிறார்கள். ஆந்தை சகுனம் வழியே வைரவன் உத்தரவு வாங்கிக் கொண்டு ஆடு களவாடப் புறப்படுகிறார்கள். கவுல்பட்டி ஊரில், ஊரணிக்கு வடக்கே ஆட்டுகிடை போடப்பட்டிருக்கிறது. ஆளுக்கொரு கெடாவை குறிவைத்து தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.

களவு நிகழ்த்துவதைப் பற்றிய குறிப்புகளும், நிலவியல் அமைப்பும் துல்லியமாக சொல்லப்படுகிறது. ‘குளிருக்கு குன்னிப் படுத்துறங்கும் கிழவி’ போன்று ஊர் உறங்கிகிடக்கிறது. ஆனால் வைரவர் உத்தரவு அன்று வேறுமாதிரி ஆகிவிடுகிறது. கிடாய்க்காரனும், காவல் நாயும் முழித்துக் கொண்டு கூவி ஊரையே கிளப்பிவிடுகிறார்கள். களவுக்கூட்டத்திற்கு முனையளவு இடம் கூட கொடுத்துவிடக்கூடாது என்று கவுல்பட்டி மொத்தமும் ஆக்ரோஷத்தோடு விரட்டுகிறார்கள்.

ஓடுகின்ற கூட்டத்தில் பின்தங்கிவிட்ட முத்துத்தேவரை மட்டும் கோம்பைஎட்டிப் பிடித்துவிட உக்கிரமான போராட்டம் நிகழ்கிறது. வெறும் கையிலேயே நாயின் வாயைப் பிளந்து கொன்று தப்பிக்கிறார். எழுதுகோலை இரத்தத்தில் தோய்த்து எழுதியது போன்ற விவரணை.

நாயிடமிருந்து தப்பித்தாலும் களவுத்தொழிலின் தடம் போதுமானதாக இருக்கிறது போலிசுக்கு. களவைத் தொழிலாக வைத்திருக்கும் ஊர்களை சுற்றிவளைத்து ஆட்களைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். குற்றவிசாரணை, துப்புதுலக்குதல், சாட்சியங்கள் சேகரிப்பு எதுவும் அப்போதைய தேவையில்லை. அகப்பட்ட அத்தனை பேருக்கும் பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் வாய்த்த இடங்களில் சூடு போட்டுவிடுகிறது போலிஸ்.

நிலவியல் விவரிப்புகளோடு, சாதி பின்னணியையும் உள்ளது உள்ளபடிக்கே சொல்லிவிடுவது சான்றுறுதியை அதிகப்படுத்துகிறது. இத்தோடு முடியும் நனவோடை, நிகழ்காலத்தில் முளைக்கொடுத் திண்ணையில் வெட்டுப்புலி ஆட்டம், சீட்டாட்டம், தாயக்கட்டை என்று பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் களவுக்கூட்டத்திடம் கதை வந்து சேர்கிறது. வேறொரு களவிற்காக கன்னம் வைக்கப் போன இடத்தில் மாண்டு போன ஊர்ப்பெரியவரின் மகன் சேது இப்போது போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக பயிற்சி முடித்து பழனிபக்கம் போஸ்டிங் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறானாம்.

எந்தவித உணர்ச்சி சேர்க்கைகளும் இல்லாமல் ஒரே திருப்பில் களவுக்காரரின் மகன் போலிஸ் ஆகிவிட்டதை சொல்லிவிடுகிறார். ஊர் மூத்த குடும்பத்து அம்மாள் தன் பையன் போலீஸில் சேர்ந்தால் இருளப்ப சாமிக்கு கெடா வெட்டுவதாக நேர்ச்சை வைத்திருந்தாராம், அதைக் கேட்டதும் அத்தனை கள்வர்களும் வீட்டுக்கொரு சொந்த ஆடு (திருட்டு கெடா அல்ல) கொண்டு வந்து 21 கெடாக்களை இருளப்ப சாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டத் தயாராகிறார்கள்.

ஒரு தலைமுறையே மாறிப்போனாலும் இருளப்பசாமியின் நேர்த்திக்கடன் மட்டும் மாறுவதில்லை. ஊர்க்காரர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, சேது முழு போலிஸ் சீருடையில் அவர்கள் முன் வர, அதுவரை அவன் விநயத்தோடும் வாஞ்சையோடும் பேசிக்கொண்டிருந்த மாமன்களும் சித்தப்பன்களும் பதறியடித்துக் கொண்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு திண்ணையை விட்டு கீழிறங்கி நிற்கிறார்கள் என கதை முடிகிறது.

காலம் தன் போக்கை மாற்றிக்கொண்டாலும், அவர்களால் அது ஏற்படுத்திய தழும்புகளை கடந்து செல்ல முடிவதில்லை.

-ஸ்ரீதர் நாராயணன்-

இத்துடன் இணைத்து வாசிக்க – அதிகாரத்தின் மானுட முகங்கள் – பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்