அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்)

oOo

மூன்று காகங்கள் ஒன்றாய்ப் பறந்த
தடத்தைப் பார்க்கப் பார்க்க
அளப்பரிய செல்வத்தைச் சிதறிச் செல்லும்
செல்வந்தனின் ரதத்தைப் போல ஜொலித்தது.

காதலற்ற கணவனது அணைப்பின் ஆக்கிரமிப்பு
உந்தித் வெளித்தள்ளும் பிஞ்சுப்பாதத்தின் சுவட்டில் சூடு
நாய்க்குடையின் கீழ் காத்திருக்கும் குஞ்சு
மரணம் ஏந்திய விளக்கின் நிச்சலனம்.

இவை மட்டுமல்ல –

காகங்களைத் துரத்திச் செல்லும் மேகங்கள்
கரைந்தொழுகும் அன்பெனும் மழை.

இவையும்கூட –

அளவான விபரீதங்கள்
பேரியக்கத்தின் திறவுகோள்கள்.

(ரா. கிரிதரன்)

oOo

கொலைவாளைக் கைமடிப்புக்குள் மறைத்தபடி
நசுக்கித் தேய்க்கும் கனத்த கால்களுடன்
இரத்தவாடைக்குப் பழக்கப்பட்ட சுறாக்களாய்
இடையறாத போர்ப்பயிற்சியுடன்
கைகுலுக்க வருகிறார்கள்

கண்ணியமான கனவான்கள்

ஏதோ ஒரு திறப்பில்
உபரிநிறையான மென்மையை
அன்பெனும் மழையாய் பொழிந்து தள்ளினால்
கவசங்கள் கரைந்துபோய்
இயல்பான நாங்களாய் வெளிப்படுவோம்

என்ற நம்பிக்கையுடன் நானும்
கைகுலுக்குகிறேன்.

(ஸ்ரீதர் நாராயணன்)

oOo

இன்னாருக்கு இதுவென்று இலக்கமிடப்பட்டு,
பட்டறையில் பழுத்துக் கொண்டிருந்த இரும்புகளில் ஒன்றை,
அன்பெனும் மழையில் அதிர்ந்ததிர்ந்து அடங்கும்போதுதான் அறிந்தான்,
இதயத்திலிருந்து உருவியெடுத்து வீசியெறிய முடியாமல்
தவறான முனையைத் தொட்டுப் பற்றிக் கொண்டதென்ன.

(அபிநந்தன்)

oOo

எங்கும் வெள்ளை
வெளீரென்ற வெள்ளை
கோடை பூதம் சிரித்தது.
நாய்குட்டி போல
நிழல்கள் ஓடி
மறைந்தன காலடியில்.
வற்றலாய் காய்ந்துபோனது மூளை.
தண்ணீர் திருடனென
ஓடி ஒளிந்தது பூதம்.

மீண்டும் ஒரே சிரிப்பு.
இருட்டின் மறைவிலிருந்து
என்ன சிரிப்பு?
திரும்ப இங்கு வரவேண்டாம்
என கதவடைக்கப் போனேன்.
காற்றும் பகட்டுமாக
கதவுகளை உடைத்துக்கொண்டு
வெளீர் வெளீரென்ற சிரிப்புகளுடன்
கூரை அதிரும்படி
கொட்டித் தீர்த்தது
அன்பெனும் மழை.

(அனுகிரஹா)

image credit :  “Pioggia e riflessi” dipinto di Giuseppe Faraone, ioarte.org

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.